செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

தமிழர் சமூக அரசியலைப் பேசுபொருளாக்கும் அறிவாயுதம் : செ.தமிழ்நேயன்


தமிழர் அறிவு மரபின் தொடர்ச்சியாகப் பல்வேறு தளங்களில் பங்காற்றிய பண்டிதர் அயோத்திதாசர் பேச்சும் எழுத்துமான சிந்தனைப்பாடுகள் மிகமிக முக்கியமானவை. ஆயினும், பிற்காலத்தில் உருத்திரண்ட திராவிட அரசியலால் அவை மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் விட்டன. 

தமிழ் மொழி பற்றிய அயோத்திதாசரின் பார்வைகள் மாறுபட்ட புதிய கண்ணோட்டத்தில் உள்ளன. வட்டாரப் பகுதிகளைக் கொண்டும் - அப்பகுதிகளில் வழங்கிய மொழி வழக்குகளைக் கொண்டும் தமிழை முத்தமிழாக வகைப்படுத்திப் (கொடுந்தமிழ், கருந்தமிழ், செந்தமிழ் என்ற வகையில்) பகுப்பாய்வு செய்திருப்பதும், சூத்திரன் என்ற சொல்லின் மெய்ப்பொருளைத் தெளிவாக வரையறுத்து அடையாளப்படுத்துவதும் கவனிக்கத்தக்கவை. 

தமிழர் என்போர் சாதி பேதமற்றவர்கள் என்பதையும், சைவம், வைணவ சமய அடையாளங்கள் தமிழாக இருப்பினும், அந்த அடையாளங்களைப் பேசியவர்கள் எவ்வாறு தமிழரை ஒடுக்கினர் என்பதையும் வரலாற்றுப் பார்வையோடு விவரிக்கிறார் அயோத்திதாசர். 

பெளத்த சமய வெறுப்புதான், பிராமணர்களிடமும் பிராமணர் அல்லாத சாதிய மேட்டிமைக் கூட்டத்தினரிடமும் சாதியக் கட்டுகளையும் வன்மங்களையும் அவிழ்த்து விட்டிருக்கிறது என்பதை அயோத்திதாசர் விவரிக்கும் வரலாற்றியல் தரவுகள் கவனிக்க வேண்டியவையாகும். 

அயோத்திதாசர் பார்வையில் திராவிடர் என்பவர் தமிழர்தான்; சாதிய வேறுபாடு அற்றவர்தான் தமிழர்; மண்ணின் மக்கள்தான் தமிழர் என்பதை அறிய முடிகிறது. 

அயோத்திதாசரின் தமிழ் எழுத்துகள் குறித்த ஆய்வுகள் மாறுபட்ட பார்வை கொண்டிருப்பவை. அதேபோல, அமுத எழுத்து, விட எழுத்து, சுதேசி, பரதேசி பற்றிய விளக்கம், பிராமணர் பற்றிய விளக்கங்கள் யாவும், தற்கால மேட்டிமைக் கருத்தியல் கட்டமைப்புகளையெல்லாம் சுக்கு நூறாக உடைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. 

வைதீக மரபிற்கும் தமிழ் மரபிற்கும் இடையே உள்ள முரண்களை மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் பண்டிதர். அந்தணர் என்போர் யார்? பிராமணர் யார்? வேடதாரிப் பிராமணர் யார்? என விளக்கும் பகுதிகள் புதிய பார்வையைத் தந்திருக்கின்றன. 

அதுமட்டுமல்லாமல், தமிழர்கள் ஒருபோதும் இந்துக்களாக இருந்திருக்கவில்லை; தமிழர்கள் இந்துக்களே இல்லை; தமிழர்களுக்கு இந்துக்கள் எனும் அடையாளமே தேவையில்லை; இந்து எனும் அடையாளமே தமிழர்களுக்குப் பொருத்தமற்றது என மிகத்தெளிவாகத் தமது வாதங்களை முன்வைத்திருக்கும் அயோத்திதாசர், தமிழர்கள் இந்து என்ற அடையாளத்திற்குள் நிற்பவர்கள் அல்ல; தமிழ் மட்டுமே அவர்களின் அடையாளம் என்று நிறுவுகிறார். 

திராவிடம் - திராவிடர் எனும் அடையாளத்தை முன்வைத்து அரை நூற்றாண்டுக்கும் மேலாக அடையாள மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கும் சூழலில், தமிழர் அடையாள விழிப்புணர்வு பெறுவதற்குப் பண்டிதரின் சிந்தனைகளை மீட்டுருவாக்கம் செய்திடவேண்டிய தேவை எழுந்திருக்கிறது. அயோத்திதாசர் பார்வையில் திராவிடர் என்று குறிக்கும் அடையாள அரசியல் முற்றிலும் வேறு வகைக் கண்ணோட்டத்தில் கையாளப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. 

திராவிடம்தான் ஆரிய எதிர்ப்பின் அடையாளம் என முன்வைக்கப்பட்டிருக்கும் சூழலில், தமிழர் மரபின் பல்வேறு கூறுகள் ஆரிய எதிர்ப்பையே கொண்டிருக்கின்றன என்பதையும் அயோத்திதாசர் பல்வேறு வகையில் எடுத்துக்காட்டுகிறார். ஆரிய எதிர்ப்பில் பண்டிதர் பேசிய பிராமணிய எதிர்ப்பு வேறாகவும், திராவிடம் பேசுவோர் முன்னெடுத்த பிராமணிய எதிர்ப்பு வேறாகவும் இருக்கிறது. சாதியப் பாகுபாடுகள் வளர்ந்ததில் பிராமணர் அல்லாதோர் பங்களிப்பும் பல்வேறு வகையில் இருந்துள்ளதையும் பண்டிதர் ஆவணப்படுத்தியுள்ளார். அவ்வகையில், ஆரிய எதிர்ப்பின் மெய்யான சிந்தனை மரபின் தொடர்ச்சியாக அயோத்திதாசர் திகழ்ந்திருக்கிறார். 

அயோத்திதாசர் சிந்தனைகள், தூங்கிக்கொண்டிருக்கும் தமிழர்களைத் தட்டி எழுப்பும் துடியாகக் கையிலெடுத்திருக்க வேண்டும். ஆனால், அவரது சிந்தனைகளைப் பரண்மேல் வைத்துப் புழங்காத பழம்பொருளாக மாற்றி வைத்திருக்கிறது ஒரு நூற்றாண்டுகாலத் தமிழ்ச் சமூகம். 

இந்நிலையில், தமிழ்ச் சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர் ஏர் மகாராசன் அவர்கள் எழுதியிருக்கும் ‘அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்: அறிவுச் செயல்பாட்டு மரபும் நீட்சியும்’ எனும் இந்நூலானது, தமிழர் அரசியலைப் பேசுபொருளாக்கும் அறிவாயுதமாய் அயோத்திதாசரை முன்வைத்திருக்கிறது. 

அயோத்திதாசரைப் பேசுபொருளாக - அயோத்திதாசரின் சிந்தனைகளைப் பேசுபொருளாக முன்னெடுப்பதின் வழியாகத் தமிழர் அரசியல் உரையாடல்கள் வளம் பெறுவதற்கு வாய்ப்புகள் பலவுண்டு. அவ்வகையில், ஏர் மகாராசன் அவர்களது இந்நூல், தமிழர் அரசியல் உரையாடலுக்குப் பெருந்துணைபுரியும் என்றே நம்புகிறேன்.

தமிழர் அறிவு மரபின் நீட்சியாகத் திகழ்ந்திருக்கும் அயோத்திதாசர், ஒரு நூற்றாண்டுக்கும் முன்பாகவே முன்னெடுத்திருந்த தமிழர் அடையாள அரசியல் பற்றிய உரையாடல்கள், இன்றைய காலத் தமிழ்ச் சமூக அரசியல் தேவைகளுக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டியவை; மீளாய்வு செய்யப்பட வேண்டியவை; விவாதிக்க வேண்டியவை ஆகும். இத்தகைய அறிவுச் செயல்பாட்டுக்கு மகாராசனின் இந்நூல் பெருந்துணை புரியும் என்பதில் ஐயமில்லை. 

தமிழர் சமூக அரசியல் உரையாடலை முன்னெடுத்திருக்கும் ‘அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்: அறிவுச் செயல்பாட்டு மரபும் நீட்சியும்’ நூலானது, இலக்கை நோக்கி வெற்றிபெற வாழ்த்துகள். 

அன்புடன்
செ.தமிழ்நேயன்
ஆய்வுச் செயன்மையர்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
*

மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலின் வாழ்த்துரையில் இருந்து..

*

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக