தமிழ் - தமிழர் மரபுகளை மீள்பார்வைக்கு உள்ளாக்கி, தமிழர் அடையாளத்தை மறுவரையறை செய்ய, குறுகிய மொழி, இன நோக்கங்களுக்கு அப்பால் விரிந்த ஆய்வு மனப்பான்மையோடு தமிழ்மொழியின் தோற்றத்தையும், பிராமணர்/பிராமணரல்லாதோர் அரசியலின் சூழ்ச்சியையும், பூர்வீகத் தமிழர்களின் வீழ்ச்சியையும், திராவிடக் கருத்தியலின் போதாமைகளையும் பேசுபொருளாக முன்வைத்து, மகாராசனால் எழுதப்பட்டுள்ளதே 'அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்' எனும் இந்நூலாகும்.
ஒரு ஒடுக்கப்படுகிற வர்க்கம், ஒடுக்குகிற வர்க்கத்திற்கு எதிராகத் தன்னை அணிதிரட்டிக் கொள்ளும்போது அடையாள அரசியலே விடுதலை அரசியலாகவும் பரிணமிக்கிறது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் 19ம்நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டங்களிலும் தோன்றிய அடையாள அரசியல்கள் மிக முக்கியமானவையாகும்.
அவற்றில் ஒன்று, பார்ப்பனர் /பார்ப்பனரல்லாதோர் அரசியல். மற்றொன்று, அயோத்திதாசர் முன்னெடுத்த 'தமிழர் அடையாள அரசியல்'!
இந்த இரு அடையாள அரசியலுக்கு அப்பால் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளால் முன்னெடுக்கப்பட்ட "தமிழ்ச் சைவம்" எனும் அடையாள அரசியலும் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது.
தமிழ் - தமிழர் என்ற அடையாளங்களை மறைமலையடிகள் சைவத்துடன் இணைத்தார். 'சைவமே தமிழர்களின் சமயம்' என்பது அவரது கருத்து.
தமிழர்களை சைவ சமயத்துக்குள் அடக்கும் பொருட்டு "தமிழர் மதம் சைவம்" என்ற கருத்து முன்னெடுக்கப்பட்டு, தூயதமிழ் மொழியாக்கம் என சமஸ்கிருத நீக்கத்தின் பொருட்டு தனித்தமிழ் இயக்கத்தைக் கட்டமைத்தார்.
ஆரிய எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, வேதாந்த எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு என்பவற்றை நவீன சைவ இயக்கம் முன்வைத்து, கருத்தொற்றுமையின் அடிப்படையில் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டது, பின் முரண்பட்டது.
மறைமலையடிகள் தலைமையில் இயங்கிய 'சைவ மறுமலர்ச்சி இயக்கம்தான்' பக்தி இயக்க காலத்துக்குப் பிறகு மீண்டும் மேடைக்குத் தமிழைக் கொண்டுவந்தது.
பின்பு திராவிட அரசியல் அதை கைப்பற்றிக்கொண்டு, தமிழை வெறும் அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டது. என்னதான், தமிழ்மொழி / தமிழ் சைவம் என முதன்மைபடுத்திப் பேசினாலும், சாதித் தீண்டாமைக்குக் குரல் எழுப்பினாலும், இவர்களில் பெரும்பாலானோர் மேட்டிமைச் சாதியினரே ஆவர்.
மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கமும் பிராமணர் அல்லாதோரில் மேட்டிமைச் சாதியினரை முதன்மைபடுத்தும் அமைப்பாகவே தொடர்ந்து செயல்பட்டது. மேலும், 'வேளாளரே (சைவ வேளாளர்) திராவிடர்' என்ற கருத்தையும் முன்வைத்தார் அடிகளார்.
பிராமணியத்திற்கு எதிராக தமிழ்ச் சைவம் முன்னெடுக்கப்பட்டபோது, அது பிராமணியத்தை எதிர்க்கிறதே ஒழிய, சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசவில்லை என்று கூறி அதை நிராகரித்தார் அயோத்திதாசர்.
அதேசமயம், அயோத்திதாசர் பெளத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். அதை ஒரு மதமாகப் பார்க்காமல் தமிழர்களின் பண்டை மரபுகளில் ஒன்றெனக் கருதித் "தமிழ் பெளத்தம்!"என்ற பெயரில் அழைத்தார்.
'தமிழ்க்கெழு கூடல்' என்று தமிழோடு இணைத்து 'மதுரையை' 'தமிழ் வையை' என்று தமிழை ஆற்றோடு, நதியோடு இணைத்தும், நகரத்தோடு இணைத்தும் தமிழ் இலக்கியங்கள் பேசுவதுபோல, அயோத்திதாசர் 'பெளத்தம்' என்கிற சமயத்தையும் தமிழோடு இணைத்து 'தமிழ்பெளத்தம்' என்றே அழைத்தர்.
தென்மொழியிலுள்ள 'அமுத எழுத்திற்கு தமிழ்' என்றும், 'நஞ்சு எழுத்தாம் விட எழுத்திற்குத் திராவிடம்' என்றும் பெயர் என்கிற அயோத்திதாசர், திராவிடம் எனும் சொல்லாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனும் நான்கு மொழிகளையும் ஒருங்கே குறிக்காது எனவும், மேற்குறித்த நான்கு மொழிகளையும் குறிப்பதற்கான பொதுப்பெயராகவும் 'திராவிடம்'என்பதைக் குறிக்கக்கூடாது என்பதாகவுமே அயோத்திதாசர் கருதியாகக் கூறுகிறார் மகாராசன்.
அயோத்திதாசரைப் பொருத்தவரை 'திராவிடன் என்றால் ஆதித்தமிழன்!' ஆதித்தமிழன் எனும் மொழி அடையாளமே அயோத்திதாசர் முன்னெடுத்த பிரதான அடையாளமாகும். அயோத்திதாசர், திராவிடம் என்றால் அது தமிழ்தான்; தமிழ் மட்டுமே. அது நான்கு பாஷைக்கும் பொதுவானது என்பது திரிபாகும் என்கிறார்.
அயோத்திதாசர் மொழியில் கூறுவது என்றால், நூதன மத வித்வானான கால்டுவெல்லின் கருத்தியல் வாரிசுகளான/பெரியாரின்/திராவிட அரசியலின் 'திராவிடம்' என்பதே திரிபாகும்!
நான்கு மொழிபேசும் மக்களை திராவிடன் என்றும் நான்கு (தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாளம்) மொழிகளையும் 'திராவிடம்' எனும் பொதுச்சொல்லால் குறிப்பதே பெரியாரிய-திராவிட அடையாள அரசியலாகும்.
இதை, அயோத்திதாசர் வழிவந்தவரான கா.அப்பாதுரையோ, 'வடதேசம் எங்கணும் தமிழையே திராவிடம் என்றும், 'இலங்கா தீவம்' எங்கணும் தமிழையே திராவிடம் என்றும் வழங்கி வந்தனர். மேலும் நான்கு மொழிக்கே, திரவிடம், திரமிடம் என்ற பெயர் உண்டு என்று கூறுவார்களாயின்?! பூர்வ 18 மொழிக்கும் என்ன பெயர் கூறுவார்களோ?!என்று எள்ளி நகையாடுகிறார்.
அயோத்திதாசரைப் பொருத்தவரை அவருக்கு ஆதிக்கம்தான் முதன்மையான எதிரி! அத்தகைய ஆதிக்கம் யாருடையது?எனும் கேள்வி எழும்போது அவர் பார்ப்பனர் /பார்ப்பனரல்லாதோர் உள்ளிட்ட சாதி இந்துக்களையும் ஒரு சேரவே கைகாட்டுகிறார்.
சாதிபேதம் நிறைந்த இவர்களது அடையாளத்தைக் கட்டுடைக்க 'சாதிபேதமற்ற தமிழ்பெளத்தம்' எனும் விடுதலைக்கருத்தியலைக் கட்டமைத்துச் செயல்படுகிறார்.
பார்ப்பனர் மட்டுமல்ல, பார்ப்பனரல்லாதோரில் சாதி பேதமுற்றவர்கள் யாவரும் பிராமணக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களே!அதனால்தான், பிராமணரல்லாதார் இயக்கம் என்பது பிராமணியத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்கமே எனும் வகையில் அதிலிருந்து விலகியே நிற்கிறார் அயோத்திதாசப் பண்டிதர். மேலும், சாதி ஆதாரங்களையும், சமய ஆச்சாரங்களையும் தழுவிக்கொண்டே (Non Brahmins) பிராமணரல்லாதோர் என்பது ஏமாற்றுவேலை என்கிறார்.
பிராமணர்கள் மேல்சாதி, கீழ்சாதி எனும் வரம்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் 'பிராமணக்கூட்டத்தைச் சார்ந்தவர்களே' என்றார் அயோத்திதாசர். ஆக, பிராமணரல்லாதோர் இயக்கமும் பிராமணியத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்கமே என்பதே அவருடைய பார்வையாக இருந்தது.
மேலும், சைவம் / வைணவம் / வேதாந்தம் என்னும் சமயங்களையும் அப்பிராமணர்களே ஏற்படுத்தி, அச்சமயங்களை எவரெவர் தழுவி நின்றார்களோ, நிற்கிறார்களோ?!அவர்களும் பிராமணச் சார்புடையவர்களே என்கிறார் அவர்.
சாதிபேதமுள்ளவர் யாராயினும், தமிழர்களேயாயினும் அவர்களையும் "திராவிட பிராமணாள்தான்"என்றுதான் விளித்தார் பண்டிதர். அதற்கு மாற்றாக, பழங்குடியினரை, ஒடுக்கப்பட்ட தமிழர்களை /சாதிபேதமற்றோரை "தமிழ் பெளத்தர்கள்" என்றே அடையாளப்படுத்தினார். தமிழ் புத்திஸ்டான திராவிட பெளத்தர்களையே 'சாதிபேதமற்ற தமிழர்' என்றார். மேலும் அவர்களையே பூர்வீகக் குடிகள் என்கிறார்.
சாதிபேதமற்ற பூர்வத் தமிழர்களை 'திராவிட பெளத்தர்' என்றும், 'சாதிபேதமுள்ள தமிழர்களை' 'திராவிட பிராமணாள்' என்றுமே அவர் வரையறை செய்கிறார்.
பார்ப்பனிய சடங்குகளுக்கு எதிரானவர்கள் என்ற வகையில் இந்த ஒடுக்கப்பட்ட பூர்வகுடி மக்களைத்தான் கால்டுவெல்லும் பார்ப்பனரல்லாதோர் எனக் குறிப்பிடுகிறார் மதமாற்ற நோக்கில். அயோத்திதாசரும் அதையேதான் கூறுகிறார் சாதிபேதமற்ற ஆதித்தமிழர்களின் விடுதலைக்காக!
திராவிடன் என்பது தமிழையும் குறிப்பதாகக் கால்டுவெல் குறிப்பிடுகிறார். 'திராவிடர்'எனும் சொல்லாடல் தமிழரை மட்டுமே குறிப்பதாக கூறுகிறார் அயோத்திதாசர்!
அயோத்திதாசரின் இக்கருத்தை வழியொற்றியே, தமிழினத்தை /தமிழின மொழிகளை தமிழின நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைக்கத்- 'தமிழ்'என்ற சொல்லின் போதாமையை உணர்ந்து, " தேயாத பழம் பெருந்தமிழ்"எனும் பொருளுடைய திராவிடம் என்ற சொல்லை வழங்கியுள்ளனர் என்கிறார். அயோத்திதாசரின் வழிவந்தவரான கா.அப்பாதுரையார்.
த்ரமிள(ம்)-த்ரவிட(ம்) த்ரவிட(ம்)-(த்ராவிடம்) எனும் முறையில் தமிழம் எனும் சொல்லே 'திராவிடம்' என்று திரிந்தது என்கிறார் தேவநேயப் பாவாணர்.
தமிழைத் தனியாகவும், அதன் கிளைமொழிகளான தெலுங்கு/கன்னடம்/மலையாளம்/உட்பட்ட மொழிகளை 'திராவிட மொழிகள்' என்றும் குறிக்கவேண்டும் என்று கூறும் பாவாணர், தமிழை தனியாகவும் /திராவிடம் தனியாகவும் இவ்விரண்டையும் சேர்த்து தென்மொழிகள் எனக் குறிக்கவேண்டும் என்றும் கூறுகிறார்.
தமிழ்/தமிழர்/தமிழம் என்பதைச் சரியாக ஒலிக்கத் தெரியாமல் அயல் இனத்தவரான ஆரியர் த்ரமிள, திரவிட, திராவிட என்று அழைத்தனர் என்கிறார் மொழியியல் அறிஞரான தேவநேயப் பாவாணர் .
ஆனால், 1856 ல் திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை (A Comparative Grammar of the Dravidian (or)South Indian Family of Language) என்ற நூலை வெளியிட்ட கால்டுவெல்லோ, "மொழிக்குடும்பத்தின் பெயரே திராவிடம்" என்கிறார்.
ஒரே இயல்புடைய வேர்ச்சொல்லையும், ஒரே மூலத்திலிருந்து பிறந்தவை, ஒரே இனத்தை சேர்ந்தவை. எனவே இவ்வின மொழிகளை திராவிடம் என ஒரு பொதுப்பெயர் இட்டு அழைத்துள்ளேன் என்கிறார் கால்டுவெல்.
திராவிட மொழிகளில் தமிழ் மட்டுமே சமஸ்கிருதத் துணையின்றித் தனித்து இயங்ககூடியது என்ற உண்மையை ஒத்துக்கொண்ட கால்டுவெல், அதேசமயம் தமிழை, திராவிட மொழிகளுள் ஒன்றாகச் சுருக்குகிறார். தமிழ்/தெலுங்கு /மலையாளம்/கன்னடம் இந்நான்கு மொழிகளும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்கிறார்.
வரலாற்றுண்மைக்குப் புறம்பாக, தமிழை வெறும் மொழியடையாளமாக மட்டுமே சுருக்கிவிட்டு, திராவிடத்தை ஒரு இன அடையாளமாகக் கட்டமைப்பது ஆங்கிலேயர்களின் மதமாற்றம் மற்றும் பிரித்தாளுதல் போன்ற சுயநல நோக்கத்துக்காகவே இருந்தாலும், அதையேதான் பிராமணரல்லாதோர் இயக்கமான ஜஸ்டிஸ்(Justice party) எனும் நீதிக்கட்சியும்/அதன் வழிவந்த திராவிட இயக்கங்களும் தொடர்ந்து செய்தன.
அதேசமயம், தமிழ்பெளத்தம் எனும் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டே 1898 ல் சென்னையில் சாக்கிய பெளத்த சங்கத்தையும்,1907 ம் ஆண்டில் "ஒரு பைசா தமிழன்" இதழையும் அயோத்திதாசர் தொடங்கியிருந்தார்.
அயோத்திதாசர் நடத்திய இதழின் பெயர் "தமிழன்!" ஆனால், 1916ம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி எனும் நீதிக்கட்சி தமிழ்/தெலுங்கு /ஆங்கிலம் மூன்று மொழிகளில் தனித்தனியே மூன்று நாளிதழ்களைத் தொடங்கி நடத்தின.
அவற்றின் பெயராக! "தமிழ் நாளிதழுக்குத் திராவிடன்" என்றும், தெலுங்கு நாளிதழுக்கு "ஆந்திர பிரகாசிகா" என்று தெலுங்கு இனத்தின் பெயரிலும், ஆங்கில நாளிதழின் பெயராக ஜஸ்டிஸ்(Justice) என்பதுமாக அமைந்தது. தமிழ்நாட்டுப் பகுதியில் வெளிவந்த தமிழ் ஏடு மட்டும் தமிழ்/தமிழன் எனும் பெயர்களை மறைக்கும் விதமாக 'திராவிடன்' என்ற பெயரைப் பெற்றன.
ஆந்திரரிடையே ஆந்திர மகாசபையும்,கேரளரிடையே 'கேரள சமாஜமும்' இருந்ததைப்போல? தமிழரிடையே இனவழியில் அமைப்பில்லை?! இருந்த ஒரே ஒரு அமைப்பான ஆதிதிராவிட மகாஜன சபையையும், அதன் வழிவந்த பெளத்த சங்கங்களையும், அயோத்திதாசரின் மறைவிற்குப்பிறகு உள்வாங்கிச் செரித்துக்கொண்ட திராவிட இயக்கம், தமிழரல்லாதோர் நலனையே முதன்மையாகக்கொண்டு, தமிழர் நலனை இரண்டாம் பட்சமாகவும் கருதி செயல்படத் தொடங்கியது மட்டுமின்றி, புதிதாக மேலெழுந்துவந்த "தமிழர் அடையாள அரசியலை" இருட்டடிப்பு செய்தது! உள்வாங்கிச் செரித்துக்கொண்டது.
கேரளரிடையே கேரள சமாஜமும்/ஆந்திரரின் ஆந்திர மகாசபையும் தெலுங்கர்/மலையாளிகளின் இனவுணர்வு அரசியலுக்கான களமாக அமைந்தது. ஆனால், ஜஸ்டிஸ் கட்சி மற்றும் திராவிட இயக்கங்களின் வரவால் தமிழர் நிலைதான் மிகவும் பரிதாபகரமானதாக மாறியது.
எழுந்து வந்த தமிழர் அடையாள அரசியலை மடைமாற்றி, நீர்த்துப்போகச்செய்த திராவிட இயக்கங்கள் அவ்வியக்கங்களை தன்வயப்படுத்திக் கொண்டன.
அதனால்தான் தமிழர் எனும் இனஉணர்வு மறையவும், ஆந்திர, கேரள, கன்னட இனத்தார் தமிழகத்திலே வேலைவாய்ப்பிலும், அரசியல் உள்ளிட்ட பிறதுறைகளிலும் ஆதிக்கம் செலுத்தவும் காரணாமாய் அமைந்தது. அதற்கு முழுக்காரணமாக இருந்தது இந்த பிராமணர் அல்லாதோர் இயக்கமும், அவற்றின் வழிவந்த திராவிட இயக்கங்களுமே என்பதே எவராலும் மறுக்கமுடியாத உண்மை வரலாறாகும்.
"தமிழர் என்றால் பார்ப்பான்" உள்ளே வந்துவிடுவான். 'திராவிடன்' என்றால் உள்ளே வரமாட்டான். அப்படியே வந்தாலும் அவர்களுடைய ஆச்சாரங்களையும், அனுஷ்டானங்களையும் விட்டுவிட்டு வந்தால் சேர்த்துக்கொள்வது பற்றி யோசிக்கலாம் என்கிறார் பெரியார். மேலும், தமிழர் என்றால் நான் சேர்க்கநினைத்த அத்தனைபேரையும் சேர்க்கவும், விலக்க நினைக்கும் கூட்டத்தை விலக்கவும் வசதியுண்டா ?என்கிறார் பெரியார்.
ஆக, திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த திராவிட அரசியலானது, "தமிழர் எனும் அடையாள நீக்கம்!" செய்யப்பட்டதாகவும்,"தமிழர் அல்லாதவர்களை"(தெலுங்கர்/கன்னடர்/மலையாளி) உள்ளடக்கியதாகவுமே இருந்திருக்கிறது; இருந்துகொண்டிருக்கிறது.
ஆனால், அதற்கு முந்தைய காலத்திலேயே திராவிடம்-திராவிடர் என்ற சொல்லாடல் கொண்டே அடையாள அரசியலை முன்னெடுத்த அயோத்திதாசர் 'தமிழர் 'எனும் அடையாளத்தையே முன்வைக்கிறார்.
அயோத்திதாசர் முன்னெடுக்கும் திராவிட அடையாளம் என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களை, குறிப்பாக சாதிபேதமற்ற தமிழர்களையே குறிப்பதாயிருக்கிறது.
பிறமொழி பேசுவோரையும், வந்துகுடியேறிய பிற தேசத்தவர்களையும் தமிழராக அடையாளப்படுத்தி ஏற்றுக்கொள்ள மறுக்கும் அயோத்திதாசர், சாதிபேதத்தை கடைபிடிக்கும் பூர்வ தமிழ்க்குடிகளையும் தமிழராக அடையாளப்படுத்த முடியாது; கூடாது என்பதில் தெளிவாய் இருந்திருக்கிறார்.
இதையே, வந்துகுடியேறிய பிராமணர்களிடமோ அல்லது வந்துகுடியேறிய தமிழரல்லாத பிறஇனத்தவரிடமோ?!ஆட்சி அதிகாரம் போய்ச்சேர்ந்தால் பூர்வக்குடித் தமிழர்களின் அடையாளமும் இருப்பும், வாழ்வும் பாழ்பட்டுப்போகும் என்பதில் தெளிவாய் இருந்து எதிர்த்திருக்கிறார் என்கிறார் மகாராசன்.
அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் என்பது, திராவிட இனம்/திராவிடத் தமிழர் / '1956'க்கு முன்வந்தோரெல்லாம் தமிழராய் ஏற்கிறோம்/தமிழ்மொழி பேசுபவரெல்லாம் தமிழரே! என்று திராவிடன்/தமிழ்/தமிழர் என முன்வைக்கப்படுகிற எல்லாவகை அரசியலிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாகும்.
அவரைப்பொருத்தவரை, திராவிடமே தமிழ்! தமிழே திராவிடம்! ஆதித்தமிழர் என்பதும்/தமிழ் பெளத்தம் !என்பதுமே தமிழர்களை விடுதலைப்படுத்தும் கருத்தியலாகும். சாதிபேதமற்ற திராவிடர்களே(தமிழர்)! ஆதித்தமிழர்கள் அவர்களே இந்த மண்ணின் பூர்வகுடிகள். சாதிபேதமுள்ளோர் யாவரும் (தமிழராக இருப்பினும்) பிராமணக் கூட்டத்தைச் சேர்ந்தோரே!பிராமணரல்லாதார் இயக்கமும் பிராமணியத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்கமே!
தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட ஆதித்தமிழர்களே இந்தமண்ணின் மைந்தர்கள்! அவர்களே பூர்வ பெளத்தர்கள் !
சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும்/திராவிட பாஷையாம் தமிழினையும் வரிவடிவில் போதித்தவர் புத்தரே! "நஞ்செழுத்து திராவிடம்! அமுத எழுத்து தமிழ்!"
அதாவது,தென்மொழியிலுள்ள அமுத எழுத்திற்குத் தமிழ் என்றும், நஞ்சு எழுத்தாம் விட எழுத்திற்குத் திராவிடம் என்றும் பெயர் என்றார் அயோத்திதாசர்.
அயோத்திதாசர் முன்வைத்த இத்தகைய கருத்தியல் அடிப்படைகள்தான் திராவிட இயக்கங்களுக்கும், அயோத்திதாசரின் கருத்தியலுக்கும் இடைவெளியை அதிகப்படுத்தியது என்கிறார் மகாராசன்.
1919ல் வழங்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்,1935 ல் அரசியல் சட்டத்தின் மூலம் நாடு விடுதலை பெறுமுன்பே உயர் உத்தியோகங்களை இந்தியமயமாக்கின. அவை பிராமண மயமாகிவிடாமல் தடுக்கவே நீதிக்கட்சி என்று கூறி தொடங்கியவர்கள், தமிழரல்லாதோரின் வேட்டைக்காடாக மாற்றிக்கொண்டார்கள்.
நீதிக் கட்சி (Justice Party, ஜஸ்டிஸ் கட்சி) என்று அறியப்பட்ட "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்" (South Indian Liberal Federation, சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேசன்) பிராமணரல்லாதோர் கட்சியாக தோன்றினாலும், உண்மையில் அது 'பிராமணரல்லாத சாதி இந்துக்களின் கட்சி'யாகத்தான் செயல்பட்டது.
இதைத்தான் அயோத்திதாசர், சாதி ஆதாரங்களையும்,சமய ஆச்சாரங்களையும் வைத்துக்கொண்டு நான் பிராமின்ஸ்(No Brahmins) என்பது வீணாகும் என்றார்.
நூதன மதவித்வானான கால்டுவெல்போப்பின் கருத்தியல் வாரிசுகளான பிராமணரல்லாதோர் இயக்கம்(Justice party)/திராவிட இயக்கம் மற்றும் திராவிட கழகங்களால், 'திராவிடன்' என்பது தென்னிந்தியர்! அவர்களிலும் "பிராமணரல்லாதோருக்கான பொதுப்பெயர்" என்றே கூறப்பட்டது. உண்மையில், தமிழ்நாட்டில் தமிழரல்லாத பிறமொழியினரின் ஆதிக்க அரசியலுக்கே இக்கருத்தியல் பயன்பட்டது.
பல நூற்றாண்டு காலம் தங்களின் அடையாளத்தைத் தொலைத்த மக்களின் அடையாள மீட்டெடுப்புக்கு அம்பேத்கருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் அயோத்திதாசர் பண்டிதர் ஆவார்.
உண்மையில், ஆரிய பார்ப்பனீய வைதீக தீய வேதமதத்தின் அனைத்துப் பொய் பரப்புரைகளையும் புரட்டுகளையும் கட்டுடைத்து, தென்னிந்தியாவில் முதன்முதலில் பகுத்தறிவையும் சமதர்மம், சமூக நீதிக் கோட்பாட்டையும் நிறுவியவர். திராவிட சித்தாந்தக் கருத்தியலின் முன்னோடி !அயோத்திதாசரே!!
என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாதுரையாருமே ஆவார்கள் என்று பெரியாரே அயோத்திதாசரது பங்களிப்பைப் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். (பெரியார் 68 வது பிறந்தநாள் விழா பேச்சு பெங்களூர்). பெரியாரே!அயோத்திதாசரை எனது முன்னோடி எனச் சொன்னபிறகும், அயோதிதாசரை திராவிட இயக்கங்கள் இன்றுவரை, தொடர்ந்து புறகணிப்பது ஏன்?!
அப்படிப்பட்டவரை முன்மாதிரியாகவும், முன்னோடியாகவும் பேசுபொருளாக்கி இருக்கவேண்டிய, திராவிட இயக்கம், அவ்வாறு செய்யாமல் மறைத்ததன் பின்புலத்தில் உள்ள நுண்ணரசியல் என்ன?!என்பதைப் பற்றியெல்லாம் பேசுகிறது இந்நூல்.
திராவிடம் என்ற சொல்லுக்கும்/அரசியலுக்கும் ஒட்டுமொத்த அடையாளம் பெரியார்தான், Non-Brahmins politics, சமூகநீதி, பகுத்தறிவு என்பதே பெரியாரின் கண்டுபிடிப்புகள்தான் போன்ற திராவிட இயக்கங்களின்/திராவிட கழகங்களின் கற்பிதங்களையெல்லாம் கட்டுடைத்துப்போடுகிறது.
சாதி எதிர்ப்பு/பிராமணிய வைதீக எதிர்ப்பு/ஆரிய எதிர்ப்பு என்பதான ஓர் எதிர்மரபு தமிழரின் அறிவு மரபில் அறிவுச்செயல்பாடுகளாகத் தொடர்ந்து வெளிப்பட்டே வந்திருக்கிறது என்பதற்கு ஏர்.மகாராசனின் எழுத்தில் வெளிவந்துள்ள "அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்" எனும் இந்நூல் மற்றுமொரு சான்றாகும் என்றால் அது மிகையல்ல..
கட்டுரையாளர் :
கவிஞர்.மா.ஜெயச்சந்திரன்,
எழுத்தாளர் - சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.
மாவட்ட பொறுப்பாளர்.
நாம் தமிழர் கட்சி,
ஈரோடு.