அயோத்திதாசரின் சிந்தனைகளை முற்றாக மறுதலிக்கும் போக்கானது அன்று முதல் இன்றுவரை நிலவி வருவதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அண்மைக் காலமாக.. அயோத்திதாசரின் சிந்தனைகள் இன்றைய சமூக, பொருளாதார இயங்கியலுக்குப் பயன் அளிக்காது என்று உரக்கக் கூவுகின்றனர். சில தோழர்கள் / நண்பர்கள் அயோத்திதாசர் வெற்று ஆணி என்கின்றனர். இது வெறுப்பு; அயோத்திதாசரை ஏற்றுக்கொள்ள மறுத்தல்; ஒவ்வாமை. இருக்கட்டும்; இது அவர்களது புரிதல். வரவேற்போம்.
நமக்கோ ... ஒரு சமூகத்தைப் புரிந்து கொள்ள அகநிலைக் கருத்தியல்களான மொழி - பண்பாட்டு நடவடிக்கைகள்- வழிபாட்டு மரபுகள்- அதனூடாக உருவாகியுள்ள வழக்காறுகள் என அனைத்தையும் குறித்த இவர்கள் புரிதல் என்ன ? என்று கேட்கத் தோன்றுகிறது...
அயோத்திதாசர் பன்முகத் தளத்தில் வாசிக்கப்பட வேண்டியவர் என்பதற்குச் சிறந்த சான்றாக, ஆய்வாளர் ஏர் மகாராசன் 'அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்' என்னும் நூலை எழுதியுள்ளார்.
தாசரை மாற்றுக் கோணத்தில் அணுகிப் பார்க்கும் பெரும் முயற்சி. இங்கு கால்கொண்டுள்ள மொழி - தமிழ் - திராவிடம் - திராவிடக் கருத்தியல் குறித்த பார்வையில் அயோத்திதாசரின் பார்வை என்னவாக இருக்கிறது என்று ஆராய்ந்துள்ளார்.
ஏர் மகாராசனுக்கென்று ஓர் அரசியல் இருக்கிறது. அது தமிழ் மொழி - தமிழர் நிலம் - தமிழர் ஆட்சி. இந்த வகையான மொழிவழிப்பட்ட சிந்தனை வெளிக்குள் அயோத்திதாசரின் செயல்பாடுகள் என்ன ? அவரது யோசனைகள் என்ன என்று ஆராய்கிறார்.
அயோத்திதாசர் எப்படி மொழியைப் பார்க்கிறார் என்று விரிவாக ஆராயும் அவர்.. இன்றைய திராவிட கருத்தியலுக்கும் / அரசியலுக்கும் முன்னோடி மட்டும் அல்ல; மாற்றுச் சிந்தனையாக்கம் கொண்டவர் என்று விளக்குகிறார்.
"திராவிட இயக்கங்களும், திராவிட அரசியல் வாதிகளும், திராவிடக் கருத்தியல் செயல்பாட்டாளர்களும் அயோத்திதாசரை முன்னெடுக்காமல் போனதற்கும், முன்னெடுக்காமல் இருப்பதற்குமான வலுவான அரசியல் காரணம் ஒன்று மட்டுமே இருக்க வேண்டும். அது, அயோத்திதாசரின் 'தமிழர்' அடையாள அரசியலே ஆகும்.
தமிழ் அடையாள அரசியலை உள்ளீடாகக் கொண்ட தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளும் அயோத்திதாசரைப் பேசுபொருளாக முன்னெடுக்காமைக்கான பின்புலமும்கூட, அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியலே காரணமாகும்.
திராவிட அரசியலிலிருந்தும் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்தும் வேறுபட்டதான தன்மைகளைக் கொண்டிருப்பதே அயோத்திதாசர் முன்வைத்த தமிழர் அடையாள அரசியல் ஆகும் " (ப.19)
தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ஏர் மகாராசன். அவரது 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலை அடுத்து, இந்நூலை எழுதியுள்ளார்.
வாழ்த்துகள் ஆய்வாளர் ஏர் மகாராசனுக்கு...
நண்பர்கள் வாசிக்க இந்நூலைப் பரிந்துரைக்கிறேன்.
*
கட்டுரையாளர்:
முனைவர் பா.ச.அரிபாபு,
உதவிப் பேராசிரியர்,
அமெரிக்கன் கல்லூரி,
மதுரை.
ஏர் மகாராசனுக்கென்று ஒரு அரசியல் இருக்கு, ஆம் உண்மை தான்
பதிலளிநீக்குமகிழ்வான அரசியல். மகத்தான சிந்தனைகள். வாழ்த்துகள்������
பதிலளிநீக்கு