ஞாயிறு, 6 மார்ச், 2022

வேளாண் சமூகத்தின் மீது பின்னப்பட்டிருக்கும் மாயவலைகளை அறுத்தெறியும் நூல் : கல்பனா



மகாராசனின் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' நூல் குறித்த மதிப்புரை.

*

பண்பாடு என்பது பண்படுத்துதல் என்பதன் திரிபு. பண்படுத்துதல் என்பது பயனுடையதாய் மாற்றி அமைத்தல் என்று பொருள்படும். தமிழரின் பண்பாட்டு மரபுகளை தொல்காப்பியம் மற்றும் செவ்விலக்கியங்கள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். அதில் வேளாண் பண்பாடு குறிப்பிட இடத்தை வகிக்கிறது. தமிழர்களின் வாழ்க்கையில் முதல் பகுதியாக விளங்கியது வேளாண் தொழிலும் அதனைச் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளுமேயாகும் எனலாம்.  அத்தகைய தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும் விதமாக ஆசிரியர் ஏர் மகாராசன் அவர்கள் வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூலினைப் பண்படுத்தியுள்ளார்.


பண்டைய தமிழ் மக்கள் வேளாண் தொழிலை வாழ்வின் அங்கமாகச் செய்து வந்தனர் என்பதற்கு இலக்கியங்கள் நமக்குப் பலவகைகளில் சான்றளிக்கின்றன. அத்தகையச் சான்றுகளையெல்லாம் தரவுகளாகத் திரட்டி வேளாண் பண்பாட்டிற்கு எனத தனி அழகியலையும், வரையறைகளையும், அறிவுரைகளையும், அதிசயங்களையும், நுட்பங்களையும், வரலாறுகளையும், அனைவரும் அறியப்படவும் ஆராயப்படவும் வேண்டிய ஒன்றாகும் என்ற உயர்ந்த நோக்குடன் படைத்துள்ளார்.


எந்தவொரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாட்டு கூறுகளையும் இலக்கியங்களையும் போற்றிப் பின்பற்றி வருகிறதோ அதுவே உயிருள்ள சமுதாயமாக இனம் காணமுடியும். அவ்வகையில், பழந்தமிழரின் மரபுகளைப் பின்பற்றிச் செய்யப்படும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதும் உறுதுணையாக நிற்பதும் தமிழனாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது என்பதனை, "வேளாண்மைதான் ஒரு தேசிய இனத்திற்கும் நாட்டிற்குமான வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்திருக்கிறது"  எனத் தெளிவுப்படுத்திக் காட்டியுள்ளார் ஆசிரியர்.


சுழன்றும் ஏர்ப்பின்னது என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க, இப்பூவுலகிற்கு உணவளித்து வரும் வேளாண்மக்கள் தலைச்சிறந்தவர் ஆவர். அத்தகைய வேளாண் மக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா? அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா? அவர்களுக்கான குறைந்தபட்ச மனிதநேயமாவது காட்டப்படுகின்றனவா? என்பதே ஆசிரியரின் ஆதங்கமாக இருக்கிறது. 


வேளாண் சமுதாயத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் மாயவலைகளை அறுத்தெரிவதே ஆசிரியரின் தலையாய நோக்கமாக இருக்கிறது என்பதை இந்நூலை வாசிக்கும் நமக்கு புலனாகிறது.


சங்க இலக்கியத்தில் இடம்பெறும் குறிஞ்சி முல்லை நெய்தல் இனமக்களுக்கு இல்லாத பெருமை மருத நிலத்திற்கு இருந்தது. மருதநில மக்கள் மள்ளர் என்னும் பொதுப் பெயராலேயே அழைக்கப்பட்டனர் என்பதை நிகண்டுகளின் வாயிலாகவும், ஏர் மாடுகள் பூட்டி உழவில் ஈடுபடும் மள்ளர்களைப் பற்றி கம்பராமாயணத்தில் காட்சி படுத்தியதையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார். 


வேளாண் தொழில் விரிவடைந்தபோது பெருநிலக்கிழார்களும், குறுநிலக் கிழார்களுமாக மாற்றம் பெற்ற நிலையினையும், இதன் மூலம் வணிகர்களாகவும், பொதுவுடைமைத் தொழிலாகவும், தனியுடைமைத் தொழிலாகவும், உழுதுண்ணும் சமுதாயம் - உழுவித்துண்ணும் சமுதாயம் எனப் பிளவுற்றதையும் ஆசிரியர் சுட்டியுள்ளார்.


வேளாண் தொழிலுக்கு இன்றியமையாத கருவியாக இருப்பது உழவு மாடுகள் ஆகும். அத்தகைய மாடுகளின் பங்களிப்பினைப் பற்றி முக்கூடற்பள்ளு இலக்கியம் வாயிலாக மாடுகளின் வகைகள், உழைப்பின் பன்முகத் தன்மைகள், 'ஏறுதழுவல்' போன்ற தமிழினப் பண்பாட்டு அடையாளங்களை அறிமுகப்படுத்தியிருப்பது அனைவரும் அறியப்பட வேண்டிய ஒன்று.


'நிலத்தோடும் உழவுத்தொழிலோடும் வேளாண்மையோடும் நெல்லோடும் மாடுகளோடும் பின்னிப்  பிணைந்திருக்கின்ற பன்னெடுங்கால அறிவும், உழவும், உழைப்பும் உணர்வும் தான் வேளாண் பண்பாட்டு மரபுகளாக இன்னும் சமூக வழக்கில் இருந்து கொண்டிருப்பதையும் சுட்டிகாட்டியுள்ளார்.


வேளாண்மை சார்ந்து நிகழ்த்தப்படும் வளமைச் சடங்குகளுள் மழைவளச் சடங்குகள், உழவுச்சடங்குகள், விதைப்பு மற்றும் நடவுச் சடங்குகள், அறுவடைச் சடங்குகள் போன்றன நுண்ணிய பண்பாட்டின் வரலாற்று மரபினை

கொண்டுள்ளதையும், வேளாண்மையின் உயிர் நாடியாக விளங்குவதையும், உழவுத்தொழிலுக்கு அவை எவ்வாறு துணைபுரிகின்றன என்ற பதிவையும் ஆசிரியர்

நம் முன்வைக்கிறார்.


தமிழர்களின் பண்பாட்டு நடத்தைகள் பெரும்பாலும் வேளாண் உற்பத்தியின் சடங்கியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், தமிழரின் பண்பாட்டு நடத்தைகளின் காரண காரிய இயல்பைக் கொண்டிருப்பதையும் பண்பாட்டு அடையாளங்களாக ஆசிரியர் பதிவிட்டுள்ளார்.


எடுத்துக்காட்டாக சித்திரை முதல் நாள் கோடை உழவின் பொன்னேர் 

திருநாளாகவும், ஏர்ப்பூட்டுத் திருநாளாகவும், உழவுப்

பண்பாட்டு சடங்கை ஆரியத்தின் சாயல்படாமல் உழவுப் பண்பாடாக முன்னெடுத்து வந்துள்ளனர் வேளாண் மரபினர் என்பதை இங்கு எடுத்தியம்புகின்றார்.


வேளாண்மைக்குத் தேவையான

நீர்மேலாண்மை பற்றிய பயன்பாடுகளும்,வரலாறுகளும், ஏராளம் உத்திகளும், எடுத்துரைக்கப்பட்டிருப்பது நீரின் இன்றியமையாத அறிவைப்பற்றிய முழுமைத்தன்மையை நமக்கு விளங்கச்செய்கிறது என்பதை நம்மால் மறுக்க இயலாததாகும்.


வேளாண்மையைத் தொழிலாக மட்டுமல்லாமல், அதனை தமிழினப் பண்பாட்டின் அடையாளமாக ஆசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். 


மண்ணும் நீரும் எவ்வாறு உணவாகிறது? அவ்வுணவினைக் கொடுக்க வேளாண் மரபினர் எத்தகைய உழைப்பையும் தியாகத்தையும் செய்தனர் என்பதனை ஆசிரியர் இந்நூலின் மூலம் விளக்குகையில், ஒவ்வொருவருடைய வீட்டிலும் வணங்கப்பட வேண்டிய தெய்வங்களாக வேளாண் மக்களே இருப்பர் என்பது மிகையாகாது.


வேளாண் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் ஐயா. மகாராசன் அவர்களின் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூல் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்.

*

கட்டுரையாளர்:

திருமதி கல்பனா,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த் துறை,

பெரியார் பல்கலைக் கழகம்,

சேலம்.

1 கருத்து:

  1. நல்ல மதிப்புரைக்காக முனைவர் பட்ட ஆய்வாளருக்கு நன்றி, ஏனென்றால் சிறு குழந்தைகளுக்கு கூட புரியும் படி தெளிவான வரிகள்.
    (உ.ம்)
    பண்பாடு என்றால் என்ன? பண்படுத்துதல் என்றால் என்ன? போன்றவைகள் மேலும்
    ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாட்டு கூறுகளையும் இலக்கியங்களையும் போற்றிப் பாதுகாத்தல் தான் உயிருள்ள சமுதாயமாக இனம் வாழ முடியும் போன்ற இன்ன பிற .....

    பதிலளிநீக்கு