வெள்ளி, 11 மார்ச், 2022

நீர் மேலாண்மைப் பண்பாட்டு ஆவணம் : செ.தமிழ்நேயன்


ஆறுகளைப் பாதுகாக்க ஆற்றுத் திருவிழா கொண்டாடுங்கள் என்று,  இந்தியத் தலைமை அமைச்சர்  அண்மையில் பதிவு செய்திருந்தார்.

எனினும், ஆற்றுத் திருவிழா தமிழகத்தில் ஆடிப்பெருக்கு என்ற பெயரில் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்பட்டு வருவதையும், ஆடிப்பெருக்குத் திருவிழா நீர் மேலாண்மைப் பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்டிருக்கக்கூடிய ஒன்றாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பல தரப்பினரும் கவனிக்கத் தவறியுள்ளனர்.

நீர் மேலாண்மையில் தமிழ் மரபினர் சிறந்து விளங்கினர். அதன் குறியீடாகத் தான் ஆற்றங்கரையில்  நாட்டார் வழிபாட்டுச் சின்னங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

நீரின் பயன்பாட்டை அலகீடு செய்வதற்காகப் பண்டைய நீர் மேலாண்மை மரபினர் நீர்த் தடங்களுக்குப் பெயரிடும் முறையைச் செயல்படுத்தினர்.ஆறு, ஏரி, கண்மாய், கரணை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளம், குட்டை என்று பலவாறாக வகைப்படுத்தி இருந்தனர்.

இன்றைய தமிழகத்தில் பல்வேறு இடங்களின் பெயர்களில் பின்னெட்டடாக ஏரி, கரணை, தாங்கல், குளம், ஏந்தல் போன்ற சொற்கள் காணப்படுவதன் பின்னணியில் நீர் மேலாண்மையின் குறியீடுகள் மறைந்துள்ளன. ஆயினும், அத்தகைய இடங்களின் பெயர்களில் மட்டுமே அத்தகையக் குறியீட்டுச் சொற்கள் உள்ளன. நீீர் மேலாண்மைச் சமூகத்தின் பங்கேற்புகள் அறுத்தெறியப்பட்டிருக்கின்றன. நீர் மேலாண்மைச் சமூகம் பல்வேறு வகையில் ஒடுக்கப்பட்டதால், அந்த இடங்களில் இருந்த நீரின் இருப்பும் நீர் மேலாண்மையும் ஒடுங்கி உள்ளன. சில இடங்களில் நீரிடங்களும் நீர் மேலாண்மையும் ஒழிக்கப்பட்டும் உள்ளன. 

நீர் மேலாண்மை என்பது காலத்தின் தேவை என்பதை ஒவ்வொரு இயற்கைச் சீற்றங்களும் நினைவுபடுத்தித்தான் செல்கின்றன.

ஆனால், ஆட்சியாளர்கள்  நீர் மேலாண்மை பற்றிய தெளிவு இல்லாமல், தற்செயல் நடவடிக்கை என்ற பெயரில் தடுப்பு முயற்சிகள் தான் செய்கின்றனர். சிக்கலின் வேர்களைத் தேடமால் விழுதுகளைத் தேடுவதால் தான் நீர் மேலாண்மை பற்றி யாரும் பேசுவதில்லை. நீர் மேலாண்மையைப் பேசுபவர்கள் நீர் மேலாண்மையில் ஈடுபட்ட மரபினரை அடையாளம் செய்வதில்லை; அங்கீகரிப்பதுமில்லை.

திருவிழாவின் நாயகன் இல்லாமல் திருவிழா கொண்டாட முடியாது. அதேபோல நீர் மேலாண்மை மரபை அடையாளம் காணாமல் ஆறுகளைப் பாதுகாக்கவும் முடியாது என்பதை உணரும் வேளை இது.

நீரைத் தேக்குவது மட்டுமே நீர் மேலாண்மை என்று கருதப்படுகிறது. நீர்த் தடங்களைச் சரியாக வடிவமைத்து நீர் சூழற்சியை நிலை நிறுத்துவது தான் நீர் மேலாண்மை.

நீர் மேலாண்மை மரபை அடையாளம் காண வேண்டும். நீர் மேலாண்மைச் சமூகம்  மீண்டும் நீர் மேலாண்மையில் ஈடுபட்டாலே நீர் வளம் காக்கப்படும். 

இந்நிலையில், நீர் மேலாண்மை மரபினரின்  அடையாளங்களையும், நீர் மேலாண்மைத் தொழில் மரபுகளையும், நீர் மேலாண்மைப் பண்பாட்டையும், நீர் மேலாண்மைச் சமூகம் வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் நீர் மேலாண்மையும் வீழ்த்தப்பட்டிருப்பதையும், நீர் மேலாண்மையின் வீழ்ச்சியில் வேளாண் தொழிலும் வீழ்த்தப்பட்டு வருவதையும் மிக விரிவாகவும் ஆழமாகவும் அக்கறையோடு ஆவணப்படுத்தி விவரித்திருக்கிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல்.  இந்நூலின் இரண்டாவது இயல் நீர் அறுவடைப் பண்பாடு என்பதாகும். நீர் மேலாண்மையைத்தான் நீர் அறுவடைப் பண்பாடு என்கிறார் மகாராசன்.

நீர் மேலாண்மை குறித்துப் பேசுவதற்கு முன்பாக, நீர் மேலாண்மைப் பண்பாட்டுப் பின்புலத்தைத் தெரிந்துகொள்வது மிகமிக அடிப்படையானது ஆகும். நீர் மேலாண்மைப் பண்பாட்டை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல், ஒருவகையில் நீர்ப் பண்பாட்டு ஆவணமாகவும் திகழ்கிறது எனலாம்.

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை.
விலை: உரூ 250/-
கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
90805 14506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக