ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் - நூல் மதிப்புரை.
*
வரலாறு என்பது பெரும்பாலும் அரசுகள் மற்றும் அதிகாரம் சார்ந்து எழுதப்படும் சூழலில், எளிய மக்களின் நிலம், தொழில், வாழ்நிலை, பண்பாடு பற்றித் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் மகாராசன், தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான ஏறு தழுவுதல் மற்றும் அதைச் சார்ந்து இயங்கிய மக்களின் பண்பாட்டுப் பங்களிப்பைத் தனக்குரிய வகையில் பண்பாட்டு வரலாற்று ஆவணமாகப் படைத்துள்ளார்.
ஏறு தழுவுதல் என்பது மாடு பிடி விளையாட்டு என்று தான் பொதுவாக எல்லோராலும் கருதப்படுகிறது. ஆனால், அதற்குள் மறைந்திருக்கும் உயிர், உணவு, நிலம், அரசு, வணிகம், பண்பாடு போன்ற கருப்பொருளை மிக ஆழமாக விவரிக்கிறது இந்நூல்.
தேடல், தேவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவையாகும். தேடல் என்பது தேவையின் காரணமாக ஏற்பட்ட ஒன்று. பசி தேவையின் பொருட்டு அலையோடியாகவும், நிலைக்குடியாகவும் துவக்க காலச் சமூக நிலையாக இருந்துள்ளது என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார். உணவுத்தேவையின் போட்டி காரணமாக பல்வேறு குழுக்கள் கிளைத்தன என்பதையும் நிறுவுகிறார்.
வேட்டைச் சமூகநிலையில் வேட்டையாடப்பட்ட விலங்குகள் போக, பிடிக்கப்பட்ட சில விலங்குகளைத் தம்முடைய தேவைக்காகப் பழக்கப்படுத்தினர். அப்படிப் பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்று தான் மாடு என்கிறார்.
வேட்டைச் சமூக நிலையில் இருந்த சமூகம், இரும்புப் பயன்பாட்டிற்குப் பிறகு உணவு உற்பத்தித் தொழிலான உழவை மேற்கொள்ள எருதுகளைப் பயன்படுத்தினர் என்றும், முல்லையில் உழவுத் தொழில் துவங்கப்பட்டாலும், மருத நிலத்தில் தான் செழுமையும் ஒழுங்கு வடிவமும் பெற்றது என்பதை விரிவாக விளக்குகிறார் மகாராசன்.
ஒழுங்கு வடிவம் பெற்ற வேளாண்மை காரணமாக, உற்பத்திச் சமூகமான உழவுச்சமூகத்திடம் இருந்து பல கிளைச் சமூக அமைப்புகள் தோன்றியுள்ளன என்பதையும், அரசு உருவாக்கம் பெற்றதன் பின்புலத்தையும் பதிவு செய்துள்ளார்.
ஏறு தழுவுதல் என்ற பண்பாட்டு அடையாளம் நிலத்தோடு தொடர்புடைய ஒன்றாகும். மாடுகள் செல்வத்தின் குறியீடாகக் கருதப்பட்டது என்பதையும், உணவு, உற்பத்தி, உழைப்பு இவற்றை மாந்தர்களிடம் பகிர்ந்து கொண்டு தோழானாக இருந்திருக்கின்றன என்பதையும், மாடுகள் மீதான ஈர்ப்பு படையெடுப்புச் சூழலுக்கு நகர்த்திச் சென்றதையும் விவரிக்கிறது இந்நூல். புறத்திணைகளில் முதல் இரு திணைகளான வெட்சி, கரந்தை என்பது மாடுகளைக் கவர்ந்து செல்வதும் மீட்பதும் பற்றித் தான் கூறுகிறது என்பதையும் நினைவுப்படுத்துகிறார் நூலாசிரியர். மேலும், நிலம் சார்ந்த இயங்கு முறையில் தோற்றம் பெற்ற அரசுகளினால் நிலவுடைமைக் கிழாரியம், உற்பத்தி செய்வோர் என்ற வகையில் பல பிரிவுகள் உருவாகியதையும் விவரித்துள்ளார்.
அதோடு, நிலங்களின் மீதான அரசியல் போர்களினால் உழவுப்பெருங்குடிகள் எவ்வாறு வீழ்த்தப்பட்டனர் என்பதையும், குடியேற்றங்களின் பின்னணி அரசியல் பற்றி பார்வையும், வேளாண் மக்களின் ஒடுக்குமுறை பற்றியும் பேசுகின்றார் மகாராசன்.
அரசதிகாரத்தினால் நிலங்களின் பொதுவியல் வடிவமைப்பு சிதைக்கப்பட்ட பின்னணியில், நிறுவன சமயங்களின் பங்களிப்பு உள்ளது என்பதையும் விளக்குகிறார். நிறுவன சமயங்களினால் நிலம் எவ்வாறு சுரண்டலுக்கு உள்ளாகிப் போனது? சமயத் தலைமைகளினால் வேளாண் மக்களின் மேல் நிகழ்த்தப்பட்ட வலிகளுடன், சமய நிறுவனங்களின் இருப்பிடங்கள் (கோவில்) வளர்ச்சிக்காக வேளாண் மக்கள் கடும் உழைப்பை எவ்வாறு செலவழித்தனர்? என்பதையும் பதிவு செய்கிறது நூல்.
உணவு உற்பத்தியின் ஆணி வேரான வேளாண் நிலங்கள் எவ்வாறு அழித்தொழிக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் பட்டியலிடுகிறார் மகாராசன்.
நிலங்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக வேளாண் மக்களின் போராட்டங்கள் தோல்வியைத் தழுவியதன் பின்புலத்தையும் ஆவணப்படுத்தியுள்ளார் .
நிலம் சார்ந்த மக்களின் போராட்டங்கள் எல்லாம் வன்முறை நிகழ்வுகளாகத்தான் கருதப்படுகிறது என்ற முரண்பாடுகளையும் பதிவு செய்துள்ள இந்நூல், நில உரிமை மறுக்கப்பட்டு, சொந்த நிலங்களில் கூலிகளாக, அடிமைகளாக விற்கப்பட்ட நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார். மேலும், பண்பாட்டு அடையாள ஒடுக்குமுறையுடன், பொருளியல் ஒடுக்குமுறைக்கும் தள்ளப்பட்ட அவலங்களையும் பதிவு செய்துள்ளார்.
நிலங்களின் மீதான வரிகளில் வேறுபாடுகள், சமூகப் பாகுபாடுகள் போன்றவற்றில் நிறுவன சமயத்தலைவர்களின் பங்களிப்பு உள்ளது என்பதையும் ஆவணப்படுத்துகிறது இந்நூல்.
தன்சார்புப் பொருளியல் வாழ்நிலை ஏன் தேவை என்பதையும் விவரிக்கிறார். உலக மையமாக்கினால் ஏற்படும் விளைவுகளையும் பற்றியும் இந்நூல் வழியே பேசுகிறார் மகாராசன்.
அவ்வகையில், ஏறு தழுவுதல் என்ற சொல்லின் பின்னணியில் உள்ள பண்பாட்டு அடையாளங்களை விரிவாகவும் விறுவிறுப்பாகவும் ஆவணப்படுத்தியுள்ளது இந்நூல்.
*
மகாராசன்,
முதல் பதிப்பு 2017,
அடவி வெளியீடு,
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.
அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.
*
கட்டுரையாளர்:
செ.தமிழ்நேயன்,
மருந்தாளுநர், சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக