செவ்வாய், 8 மார்ச், 2022

இன்னும் எம்முடனே இருக்கிறீர்கள் அப்பா : மகாராசன்

 


நிலம்தான் தற்சார்பான வாழ்வையும், தன்மான மதிப்பையும் தரக்கூடியது என்பதை அப்பாவிடமிருந்தே உள்வாங்கியிருக்கிறேன். 

வாழ்வின் இறுதிவரையிலும் தன்மான உணர்வையும் தற்சார்பான வாழ்வையும் இழந்துவிடாமல் பார்த்துக்கொண்டவர். ஆனாலும், நிலத்தில் கிடந்து தவிக்கும் வாழ்க்கைக்குள் நான் வந்துவிடக் கூடாது என்று மிகமிகக் கவனமாக இருந்தார் அப்பா.

படிச்சு ஆளாகுறதப் பாரு தம்பி. இந்தப் பொழப்பு ஒனக்கு வேணாந் தம்பி. எங்க காலத்துல எல்லாருமா சேந்து ஒழச்சோம். எங்க ஒழப்புக்கு

 நாலுகாசு மிச்சமா சேந்துச்சு. இப்பெல்லாம் சம்சாரி வேல பாக்குறதுக்கு ஆள் கெடைக்க மாட்டேங்குது. வெத, மருந்து, உரம், வேலக்கூலினு எக்குத் தப்பா எகிறிப்போச்சு. மிச்சப்படுத்துறதுக்கு ஒன்னுமில்ல. படிப்புல கோட்ட விடாம ஒழுங்கா படிச்சு ஆளாகுறதப் பாரு. எங்க காலத்துல நாங்களா ஒழச்சோம்; யாரு தயவும் இல்லாம மதிப்பு மருவாதியா வாழ்ந்தோம். இப்ப நெலம மாறிப்போச்சு. வெள்ளாமத் தொழிலப் பாக்கனும்னா மத்தவங்கள எதிர்பாக்க வேண்டி இருக்கு. சம்சாரிக மேல இருக்குற மதிப்பும் மருவாதியும் கொறஞ்சு போச்சு. மதிப்பும் மருவாதியவும் தொலச்சுப்புட்டு நெலத்துல கெடந்து எதுக்குச் சாகணும். மதிப்பும் மருவாதியும் எங்க இருக்குதோ அங்க போ. அங்க போயி நீ யாருன்றதக் காட்டு. அதுக்கு நீ நல்லா படிச்சாகணும் தம்பி. எதுவரைக்கும் படிக்க முடியுமோ அதுவரைக்கும் படி. கடேசிப் படிப்புனு எதுவரைக்கும் இருக்குதோ அதுவரைக்கும் படி என, படிப்பைப் பற்றியே எப்போதும் போதித்துக்கொண்டே இருப்பார் அப்பா. அப்பாவுடைய ஆசைப்படி படிப்பதிலேதான் குறியாய் இருந்தேன். படிப்பதும் கூட மிகப் பிடித்துப்போயிற்று. 

ஒவ்வொரு முறையும் படிப்புச் செலவுக்காகக் காசு தரும்போதெல்லாம், இது வெறும் காசில்ல தம்பி. நெலத்துல வெளைஞ்ச என்னோடதும் ஒங்க ஆத்தாவோடதும் ஒழப்பு; வெயர்வ; ரத்தம்னு நெனச்சிக்கோ. பாத்துச் செலவழி. இது பூராம் எங்க சம்பாத்தியம். நீ என்னைக்கு நாலு காசு சம்பாரிக்கிறயோ, அன்னிக்கி ஓம்பாட்டுக்குச் செலவழிச்சுக்கோ. ஓங்காசு எங்களுக்கு வேணாம் என்று மட்டும் சொல்லிவிட்டு, கேட்டதைவிடக் கொஞ்சம் கூடுதலாகவே காசு கொடுப்பார். இளவட்டப் பய கையில காசு பணத்த கூடக்கொறையா கொடுத்தா கெட்டுப்போக மாட்டானா என்று கோபப்படுவார் அம்மா. தோழர்கள்னு சில ஆளுகளோட சேர்ந்து பழகுறான். அவங்க நல்லவங்களாத் தெரியுறாங்க. அதனால நம்ம புள்ள கெட்டுப்போக மாட்டான் எனும் பெரும் நம்பிக்கையை வைத்திருந்தார்.

படிச்சு வேலைக்குப் போயி, முதல் மாத ஊதியத்தை அம்மா அப்பாவிடம் கொடுத்த போது, அப்பா அதை வாங்க மறுத்துவிட்டார். இது நீ ஒழச்சது. எனக்கு வேணாம்பா. ஒங்க ஆத்தாகிட்டயே கொடுத்துக்கோ வாங்கிக்கோன்னு சொல்லிவிட்டார். அம்மாவும் அதை வாங்கி கண்ணில் ஒற்றி வைத்துவிட்டுத் திருப்பித் தந்துவிட்டார். 

என்னுடைய எந்த முடிவிலும் அப்பா தலையிட்டதே இல்லை. நான் எடுக்கும் எந்த முடிவையும் அவர் ஒத்துக்கொண்டேதான் இருந்தார். இந்தப் பொண்ணத்தான் கட்டிக்கலாம்னு இருக்கேன் எனச் சொன்னபோது, அம்மா மட்டும் அழுது புலம்புனாங்க. அப்பா மட்டும்தான் மறுப்பு ஏதும் சொல்லாமல், அம்மாவையே ஒத்துக்கொள்ள வைத்தார்.

அப்பாவும் அம்மாவும் எதிர்பாத்த மாதிரியே அவங்களப் புரிஞ்சுக்கிட்ட மருமக அமைஞ்சது அவங்களுக்கு ஆகப் பெரும் நிம்மதி. 

ஒருநாள் திடுதிப்பென்று அம்மாவுக்கு முடியாமல் போனது. வெளியூரிலிருந்து நான் வருகிறவரைக்கும் உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்து, நான் வந்ததும் என் கையைப் பிடித்துக்கொண்டே கண்ணீரைப் பொலபொலவென்று வடித்தார். அருகிலிருந்த அப்பாவைக் காட்டி, பாத்துக்கோ என்று சொல்வதுபோல சைகை காட்டினார். பாத்துக்கிறேன். அழாதம்மான்னு சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் கை விரலைப் பிடித்தபடி உயிர் நின்றுபோனது.

அம்மாவின் இழப்பிலிருந்து நானும் அப்பாவும் மீண்டு வருவது எப்படி என்று தெரியவில்லை. பணி நிமித்தமாய் வெளியூரில் இருந்த நான், அப்பாவைப் பார்த்துக்கொள்வது எப்படி என்பதுதான் பெரும் கவலையாக இருந்தது. தம்முடைய மிச்ச வாழ்வ ஒத்தையா இருந்து எப்படிக் கடத்திக் காலம் தள்ளுவது என்பதுதான் அப்பாவைக் குடைந்து கொண்டிருந்த பெருங்கவலை. 

என் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தவர் அப்பா. அவரது மீத வாழ்க்கையில நாம தான் உடனிருக்க வேண்டும் என்று கருதி, கிட்டத்தட்ட அய்ந்தாண்டுகள் அப்பா கூடவே இருந்து, நாங்களா சமைச்சு, அவருக்கான நல்லது கெட்டது எல்லாத்தையும் பாத்துக்கிட்டேன்.

நாஞ் செத்துப்போன பெறகுதான், நீ சீப்பட்டுச் சாகப்போற என, வாழ்வின் இறுதிக் காலங்களில் அப்பாவிடம் அம்மா கோபத்தில் சொல்லிக்கொள்வதைப் பலமுறை கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் சொல்லிக்கொள்வது 'எம் மகென் பாத்துக்குவான்' என்பதுதான். அந்தளவுக்கு முழுதார எம்மை நம்பினார்.

அப்பாவுக்கு கிட்டத்தட்ட எண்பது வயதுக்கும் மேலிருக்கும். வயது ஆக ஆக குழந்தையாய் மாறிவிடுவதை அப்பாவிடம் பலமுறை கண்டிருக்கிறேன். இதை இரண்டாவது குழந்தைப் பருவம் என்பார்கள்.

ஒரு நாள் மாலையில், நான் வீடு வருவதற்குத் தாமதமாயிற்று. இரவில் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறது. ஊருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் ஒரு கிலோமீட்டர் தொலைவிருக்கும். அந்தக் கும்மிருட்டில் மெழுகுவர்த்தியைப் பொருத்திக்கொண்டு சூடான மெழுகு நீர் கையில் ஒழுக ஒழுக கையில் ஏந்தியபடியே என்னை அழைத்துப்போக வந்திருக்கிறார். மகராசன் வந்துறுவான்னு மத்தவங்க சொன்னப்பகூட அத அவர் கேட்கல. பேருந்தவிட்டு எறங்குனதும் அப்பா நிக்குறதப் பாத்துட்டேன். என்னப்பா இங்க நிக்குறன்னு கேட்டேன். ஒரே இருட்டா இருந்துச்சு. அதான் ஒன்னய கூட்டிப்போக வந்தேன்னு மெழுகுவத்திய கையில வச்சுக்கிட்டு பேசினாரு. எனக்குக் கடுமையான கோபம். நான் இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்கேன்னு நெனப்பா. ஏம்பா இப்படில்லாம் அசிங்கப்படுத்துறன்னு கோபப்பட்டேன். 

ஆமப்பா. நீ எனக்குப் பிள்ளதாம்பா. சின்னப் பிள்ளதாம்பான்னு சொன்னப்போ, அப்பா குழந்தையாகி நின்றதை அப்போதும் உணர்ந்தேன்.

அம்மாவைத்தான் கூட இருந்து கவனிக்க முடியவில்லை; அப்பாவைக் கூட இருந்து கவனித்துக்கொண்டது அவருக்குப் பெரும் ஆறுதலாய் இருந்தது. 

என்னைக்கு விழுகிறனோ, அத்தோட உசுர விட்றனும் தம்பின்னு சொல்லுவார். நான் விழுந்து ஆசுபத்திரி அது இதுன்னு நீயும் குடும்பமும் அலைஞ்சி திரிஞ்சி அல்லாடக்கூடாது. எல்லாத்தையும் பாத்துட்டேன். இனி வாழ்க்கைய முடிச்சுக்க வேண்டியதான் என்பார். 

ஒருநாள் விழுந்து விட்டார். அன்றிலிருந்து எதுவுமே சாப்பிட மறுத்து விட்டார். பச்சத் தண்ணீர்கூட அருந்தவில்லை. கண்கள் திறந்திருக்கின்றன. கிட்டத்தட்ட எட்டு நாட்கள். கண்களைத் திறந்தபடியே படுத்திருந்தார். வடக்கிருத்தல் பாணியில் தம் உயிரை மெல்லமெல்ல நிறுத்திக்கொண்டு விட்டார். அப்பா உயிருடன் இல்லை. ஆனாலும், எனது அத்தனைச் செயல்பாடுகளிலும் அப்பாதான் நிறைந்திருக்கிறார். 

எனது குடும்பம், பணி, எழுத்து, ஆய்வு, சமூகப் பணி, நடத்தை, சமூக உறவுகள் என எதிலும் வெளிப்படுகிற எனது புலப்பாடுகள் யாவும் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டவை; பெற்றுக்கொண்டவை.

எதிலும் ஒரு செய்நேர்த்தியும் ஒழுங்கும் இருக்க வேண்டிய பண்பு அப்பாவிடமிருந்தே வந்துசேர்திருக்கிறது.

எந்தவொரு வேலயச் செஞ்சாலும் அதுல கெட்டிக்காரப் பயலா வரணும்டா தம்பி என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார் அப்பா.

சால்பிடித்து உழும்போதும், அரி வரப்பு - அப்பு வரப்பு வெட்டும்போதும், தொளி புரட்டும்போதும், பரம்படிக்கும்போதும், விதை நெல் பாவும் போதும், நாற்று முடிக் குப்பங்களைக் கட்டும்போதும், உரம்போடும்போதும், கதிர் அறுப்புக்கட்டு கட்டும்போதும், கை கதிர் வாங்கி நெற்கதிர் அடிக்கும்போதும், நெல்பொலி தூற்றும் போதும், நெல்மூட்டைகளைத் தைக்கும்போதும், பாத்தி கட்டும்போதும், ஆடு மாடுகளைப் பராமரிக்கும்போதும், இப்படி வெள்ளாமை சார்ந்த அனைத்துச் செயல்பாடுகளிலும் அப்பா வெளிப்படுத்துகிற அத்தனையும் செய்நேர்த்தியோடு தனித்துவமாக இருக்கும்; அவ்வளவு அழகாகவும் இருக்கும்.

சிறு வயதுக் காலங்களில், வயக்காட்டில் அப்பா உழும்போதெல்லாம் உழவுச் சாலுக்குப் பின்னாலே ததக்குப் பொதக்கென போய்க்கொண்டே இருப்பேன். அந்த மேழியைப் பிடித்து ஒரு சாலடித்து வரவேண்டும் என்ற ஆசை இருக்கும் அப்போது.

மூனு நாலு சால் சுத்தி வந்ததுக்கப்புறமா, மேழி மேல கைய வைக்கச் சொல்லி அழுத்திப் பிடித்துக் கொண்டு கூடவே வருவார் அப்பா.

காலம் பூரா இப்படியே ஏரப் பிடிச்சி உழுதுக்கிட்டுத் திரியனும்னு நெனைக்காத தம்பி. நிலமே கதினு வம்படியா கெடக்கிறது எங்க காலத்தோட போகட்டும். மழ தண்ணி இல்ல; நாம வெள்ளாம செஞ்சத வரவு செலவு பாத்து விக்க முடியல; நம்மகிட்ட அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டுப் போயி விக்கிறவன் காசு பணம்னு சம்பாதிக்கிறான். நாமதான் ஒழச்சு ஒழச்சு ஒன்னுமில்லாமக் கெடக்கொம். ஊருக்குச் சோறு போடுறம்னு நாமதான் பெருமையா நெனைக்கிறோம். ஒரு பயலும் நம்மள மதிக்கவும் மாட்டான். உழுகனும்னு ஆச இருந்தா, போயி படிச்சி ஆளாகி, நாலு பேரு படிக்கிற மாதிரி நீயும் எதாவது எழுது. ஒன்னோட எழுத்த இந்த ஒலகம் படிக்கிற மாதிரி எழுது. அதுவும் உழவுதான் தம்பி என்று அப்பா சொல்லிக்கொண்டே வந்த அந்தச் சொற்கள்தான் என் சொல்லேர் எழுத்துகளுக்கான முன்னத்தி ஏர்.

வில்லேர் உழவு மரபின் மேழி பிடித்த கைகளால், சொல்லேர் உழவு மரபில் பயணிக்கிறேன். நிலம் சார்ந்த பண்பாட்டு மரபுகளையும் அடையாளங்களையும் சொல்லேர் எழுத்துழவாய் உழுது போகும் என் ஆய்வுகள், நிலம் பற்றியும் நிலத்தில் தவித்த-தவிக்கும் மக்களைப் பற்றியும் கிளரிக்கொண்டேதான் இருக்கும்.

நிலத்தில் உழுத அப்பாவின் வாழ்வைப் போல, எழுத்தில் நான் உழுதுகொண்டுதான் இருக்கிறேன்.


இன்னும் 

எம்முடனே இருக்கிறீர்கள் அப்பா.

ஏர் மகாராசன் 

08.03.2022

*

நன்றி:

ஓவியம் Raju

2 கருத்துகள்:

  1. Lovely real life of now days Agariyans.

    பதிலளிநீக்கு
  2. கண்ணீர் முட்டி நிற்கிறது - கண்களில். இறைவன் என்று மழையை நிறுத்தினானோ... சம்சாரிகளின் வாழ்வு அதனோடு முடிந்தது. பொருட்களை தயாரிப்பவனெல்லாம் விலை வைக்க - உயிர் காக்கும் உணவிற்கு மட்டும் இடைத் தரகனும் அரசும் நிர்ணயிப்பதென்ன நியாயம்?

    பதிலளிநீக்கு