புதன், 2 மார்ச், 2022

திராவிடம் எனும் சொல்லாடலும் அயோத்திதாசர் கருத்தாடலும் - மகாராசன்



தமிழ் மொழியைத் ‘திராவிடம்’ என்றும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்போரைத் ‘திராவிடர்’ என்றும் மாற்றுச் சொல்லால் குறிக்கும் வழக்கம் அயோத்திதாசர் காலத்திலும் இருந்திருக்கிறது. அதேபோல, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் நான்கையும் ‘திராவிடம்’ எனும் பொதுச்சொல்லால் அடையாளப்படுத்தியும், தமிழர் உள்ளிட்ட தெலுங்கர், கன்னடர், மலையாளிகளைக் குறிக்கும் பொதுச்சொல்லாகத் ‘திராவிடர்’ என  அடையாளப்படுத்தியதுமான போக்குகளும் அயோத்திதாசர் காலத்திலேயே அடையாள அரசியலாய்க் காலூன்றத் தொடங்கியிருக்கின்றன. 


அயோத்திதாசரும் திராவிடம் எனும் சொல்லாடலைக் கையாள்கிறார். ஆயினும், திராவிடம் எனும் சொல்லாடல் பற்றிய அயோத்திதாசரின் எடுத்துரைப்புகள், மற்றவர்களின் விவரிப்புகளைப்போல அல்லாமல், வேறு ஒரு கண்ணோட்டத்தையும் கருத்தாடலையும் முன்வைத்திருக்கிறது.

தமது பத்திரிகையில் திராவிடம் என்பது தமிழுக்குரிய பெயரென்று வரைந்து வருகின்றீர். மற்றும் சிலர், திராவிடம் என்பது திரமிடம் என்றும், நான்கு பாஷைகளை சேர்ந்த பொதுப் பெயர் என்றும் கூறுகின்றார்கள் எனும் கருத்தை அயோத்திதாசரிடம் முன்வைத்தபோது, ‘திராவிடம் என்னும் மொழியின் பொருள் என்ன? திராவிடம் என்னும் மொழி திரமிடம் என எவ்வாறு மருவியது? அதற்கு விதியும் பூர்வ அனுபவச் செய்யுளும் உண்டா? என உசாவி இருப்பீரேல், அவர்கள் கூறும் மொழி தங்களுக்குத் தெள்ளறத் தெளிந்துவிடும். அங்கனம் அவர்களைத் தாம் வினவாது, எம்மெய் வினவியுள்ளபடியால், அதன் அந்தரார்த்தத்தை உணர்ந்தவளவில் உணர்த்துவதாக’க் கூறும் கருத்துகள் கவனிக்கத்தக்கவை ஆகும்.

அதாவது, ‘தென் மொழியிலுள்ள அமுத எழுத்திற்குத் தமிழ் என்றும், நஞ்சு எழுத்தாம் விட எழுத்திற்குத் திராவிடம் என்றும் வகுத்துள்ள அனுபவத்தைக் கொண்டும், சிங்கள நாட்டாரும் தெலுங்கு நாட்டாரும் தமிழர்களைத் திராவிடர்கள் என்று கூறும் வாய்மொழியாலும், அடியில் குறித்துள்ள தாயுமானவர் பாடலின் உட்கருத்தாலும் தமிழ் பாஷைக்கே  திராவிடம் என்னும் மறுபெயர் உண்டு என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். 

     கல்லாத பேர்களே நல்லவர்கள்; 

          நல்லவர்கள் கற்றும் அறிவில்லாதவென் 

     கன்மத்தை என் சொல்வேன்? மதியை 

          என் சொல்வேன் கைவல்லிய;

     நல்லோருரைக்கிலோ கன்மமுக்கியமென்று 

          நாட்டுவேன், கன்மமொருவர்                             

     நாட்டினாலோ பழய ஞான முக்கியமென்று 

          நவிலுவேன் வடமொழியிலே 

     வல்லானொருத்தன் வரவும் திராவிடத்திலே 

          வந்ததா விவகரிப்பேன் 

     வல்ல தமிழறிஞர் வரின், அங்கனே 

          வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன்

எனும் பாடலால் திராவிடத்தையே தமிழ் என்றும், தமிழையே திராவிடம் என்றும் மடக்கிக் கூறியுள்ளதைக் காண்க’ என, தாயுமானவர் பாடலைச் சான்று காட்டுகிறார் அயோத்திதாசர். 

தமிழ் எழுத்துகளின் வகைப்பாட்டுப் பெயரைக்கொண்டும், தமிழ் அல்லாத பிற தேசத்தாரும் - தமிழர் அல்லாத பிறரும் தமிழைக் குறிப்பதற்குப் பயன்படுத்திய சொல்லைக்கொண்டும் ‘திராவிடம்’ எனும் சொல்லாடலைப் புழங்கும் அயோத்திதாசர், தமிழை மட்டுமே குறிப்பதற்குப் பயன்படுத்துகிறார். அதோடு, தமிழை மட்டுமே அது குறிப்பதாகவும் அவர் கருதுகிறார். 

மேலும், திராவிடம் எனும் சொல்லாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனும் நான்கு மொழிகளையும் ஒருங்கே குறிக்காது எனவும், மேற்குறித்த நான்கு மொழிகளையும் குறிப்பதற்கான பொதுப்பெயராகவும் ‘திராவிடம்’ என்பதைக் குறிக்கக்கூடாது என்பதாகவுமே அயோத்திதாசர் தமது கருத்தாடலை முன்வைத்திருக்கிறார். 

இதைக்குறித்து அயோத்திதாசர் கூறும்போது, ‘திராவிடம் என்றால் நான்கு பாஷைக்குரிய பொதுப்பெயர் என மாறுபடுத்தி விட்டார்கள். காரணம், அதன் அந்தரார்த்தம் அறியாமலேயாம். மகட பாஷையாம் பாலி பாஷையை மூலமாகக் கொண்டு புத்தபிரானால் சகட பாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழையும் அக்கை தங்கையர் போல் ஏற்படுத்தி, இந்திய தேயமெங்கும் பரவச்செய்து வந்ததினால், வட தேசம் எங்கணும் தமிழையே திராவிடம் என்றும், இலங்கா தீவம் எங்கணும் தமிழையே திராவிடம் என்றும் வழங்கி வருவது அனுபவக் காட்சியாய் இருக்க, நாலு பாஷைக்குமே திரமிடம், திரமிடம் என்னும் பெயர் உண்டு எனக் கூறுவார் ஆயின், பூர்வ பதிநெட்டுப் பாஷைக்கு எப்பெயர் கூறுவதோ? அறியேம். 

மகட பாஷையை ஆதாரமாகக் கொண்டு தோன்றியது ஒன்று சகடப் பாஷையும், ஒன்று திராவிட பாஷையுமேயாம். புத்த சங்கங்கள் தோறும் வட்டமிட்டிருந்தபடியால் சகட பாஷையென்றும், நஞ்சு எழுத்து அமைந்துள்ளபடியால் தீரா விட பாஷை - திராவிட பாஷை என்றும் வழங்கி வந்தார்கள். 

இதன்றி, செய்யுட்களில் அரம் வைத்துப் பாடி விட்டான்; நஞ்சு வைத்துப் பாடிவிட்டான் என்னும் மொழிகளுக்கியல் அட்சரங்களிலும் நஞ்செழுத்துகள் சிலதும், அமுத எழுத்துக்கள் சிலதும் உண்டு என்பதை நாளது வரையில் காணலாம். 

நஞ்சு எழுத்தின் செயலைக் கொண்டு திராவிடம் என்றும், அமுத எழுத்தின் செயலைக் கொண்டு தமிழ் என்றும் வழங்கி வந்தார்கள். இவ்விரு பெயருக்கும் காரணம் உண்டு. இதன் அந்தரார்த்தம் அறியா பராயர்கள் அதனையும் வீணே மாறுபடுத்தித் தமிழினது இனிதையும் திராவிடத்தினது வலிதையும் கெடுத்தே வைத்திருக்கின்றார்கள்’ என்கிறார்.

மேலும், ‘வடமொழி தென்மொழி என்னும் இரு வகுப்பில் தென்மொழியாம் திராவிடம், தமிழ் என்னும் இரு மொழிகளும் ஒரு பாஷைக்குரிய பெயர்களேயாம். அம்மொழிகள் தோன்றியவற்றிற்கு மூல காரணங்கள் யாதெனில், அவ்வட்சரங்களுள் நஞ்செழுத்தாம் விட அட்சரங்களும், அமுத எழுத்தாம் இனிய அட்சரங்கள் உள்ளது கண்டு, நஞ்சு எழுத்தால்  தீரா விடம் என்றும், அமுத எழுத்தால் தமிழ் என்றும் இரு பெயர்கள் உண்டாயிற்று. 

இஃது யாப்பிலக்கணம் கற்ற பெரியோர்களுக்கே நன்கு விளங்குமன்றி, ஏனையோர்க்கெவணும் விளங்காவாம். திராவிடம் என்னும் தமிழை எடுத்தாளும்போதே வாசக நடை மிகவின்றி செய்யுள் நடையே பெருகியபடியால், எடுக்கும் செய்யுள் இனிது முடியுமாறு மொழி முதலாய் அந்தெழுத்துள் அமுது பொருந்தி மங்கலமிசையும் உளவறிந்து தாங்களும் பாடியுள்ளதன்றி, ஏனையோரும் அப்பத்துப் பொருத்தங்களை இசைந்து பாடும் வழிகளையும் வரைந்துள்ளார்கள். அவைகளை அமைக்க வேண்டிய விதி: 

     மங்கலப் பொருத்தமே கங்கை மலரிலங்

     கார்புயல் பொன்மணி கடல் சொல் கரிபரி

     சீர் புகழ எழுத்தலர் திங்கடினகரன்

     தேர் வயல் அமுதம் திருவுலகாரண

     நீர் பிறவரும் முதனிலைச் சொல்லியல்பே 

என்னும் மொழிமுதற் கொண்டு அவற்றுள் பத்துப் பொருத்தங்கள் அமையப் பாடவேண்டும் என்பது விதி. 

     மங்கலம் சொல் எழுத்து எண்ணிய தானம் வரும் இருபால் 

     பொங்கிய உண்டி வருணம் பகுத்திடின் நாள் பொருத்தம் 

     தங்கிய நாள் கதி எண் கணம் என்று தமிழ் தெரிந்தோர் 

     இங்கிவை பத்து முதல் மொழியாம் என்று இயம்புவரே

இவ்வகைப் பாடுவதில் அமுதெழுத்து அமைத்துப் பாடவேண்டியதே சிறப்பு என்பது விதி. 


     மதித்த கா ச த ந ப மவ்வொடு வவ்வும் 

     உதித்தமைந்த நாற் குற்றியிருந்துதித்த அமுதென்று 

     ஆதிமொழிக்குந் தசாங்கத் தயலுக்குந் தீதிலவே என்றார் தெரிந்து

என்னும் தசாங்கத்துள், உண்டிப் பொருத்தமே அமுத எழுத்துக்களையும் நஞ்சு எழுத்துக்களையும் விளக்குகின்றபடியால், யாப்பிலக்கணம் கற்ற பெரியோருக்கே நஞ்சு எழுத்து என்னும் தீராவிட அட்சரங்களும், அமுத எழுத்து என்னும் தமிழ் அட்சரங்களும் கண்டு, அப்பாஷைக்குத் திராவிடம் என்றும், தமிழ் என்றும் வழங்கலாயினர். 

‘தீராவிடம்’ என்னும் மொழியே குறுக்கல் விகாரத்தால் திரா விடம் - திராவிடம் என வழங்கலாயிற்று. திராவிடம் என்பதே தமிழ் என்பதற்குச் சூத்திர ஆதாரங்கள் இருப்பதுடன், வட நாட்டோரும் சிங்கள தேசத்தோரும் தமிழைத் திராவிட பாஷை என்றும், தமிழ் பாஷைக்குரியோரை திராவிடர்கள் என்றும் வழங்கி வருவதை நாளது வரையில் காணலாம். 

இத்தேசப் பெயரையும் வேதாகமப் புராணங்களையும் கடவுளர்களையும் புறட்ட ஆரம்பித்துக் கொண்டவர்கள், திராவிடம் என்னும் பாஷையையும் புறட்டப் பார்க்கின்றார்கள். அப்புறட்டு தமிழினுக்கு உரியோர் முன் பிறழாவாம்’ என்கிறார் அயோத்திதாசர்.

தமிழை ‘முத்தமிழ்’ எனச் சுட்டும் மரபு இன்றளவிலும் வழக்கில் உள்ளது. முத்தமிழ் என்பதை இயல், இசை, நாடகம் என வகைப்படுத்திக் கூறும் நிலையில், முத்தமிழ் என்பதற்கு அயோத்திதாசர் தருகின்ற விளக்கமும் கவனிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது. ‘கொடுந்தமிழ், கருந்தமிழ், செந்தமிழ்’ என, மூன்று வகையான தமிழ் வகைப்பாட்டை வட்டார அடிப்படையிலும் - பேச்சு வழக்கு அடிப்படையிலும் வகைப்படுத்திக் காண்கிறார். 

இதைக்குறித்து அயோத்திதாசர் கூறுகையில், ‘வழங்கும் தமிழை முத்தமிழ் என்பது, மூவகையாகப் பேசும் தமிழ் என்றும் கூறப்படும். அவைகள் யாதென்னிலோ, மலையாள வாசிகள் வழங்கும் தமிழை கொடுந்தமிழ் என்றும், திருநெல்வேலி புரவாசிகள் வழங்கும் தமிழை கருந்தமிழ் என்றும், சென்னை முதலிய புரவாசிகள் வழங்கும் தமிழை செந்தமிழ் என்றும் கூறப்படும். 

அவைகள் வழங்கும் வகைகளோ: ‘நாயிண்ட மகனே’ என்பது கொடுந்தமிழ். ‘நாய் ஈன்ற மகனே’ என்பது கருந்தமிழ். ‘நாய் பெற்ற பிள்ளையே’ என்பது செந்தமிழ். கருந்தமிழில் வரைந்துள்ள புகார்க் காண்டம் முதலிய நூல்களில் வரைந்துள்ளவற்றைச் செந்தமிழ் வாணர் வாசிப்பதற்கே இயலாது இன்னும் திகைக்கின்றார்கள். 

இக்கொடுந்தமிழ், கருந்தமிழ், செந்தமிழினையே நமது முன்னோர்கள் நன்கு வரைந்திருக்கின்றார்கள். இப்பாஷையினது வரிவடிவாம் அட்சரங்களில் நஞ்செழுத்தென்றும் அமுத எழுத்தென்றும் இரு வகை உண்டு. அவற்றுள் அமுதெழுத்தைக் கொண்டு தமிழ் என்றும், நஞ்செழுத்தைக் கொண்டு தீராவிடம் என்றும் வழங்கி வந்தார்கள். தீராவிடம் என்னும் மொழியே குறுக்கல் விகாரப்பட்டு திராவிடம் என வழங்கலாயிற்று. 

கொடுந்தமிழ், கருந்தமிழ், செந்தமிழ் இம்மூன்றினுள்ளும் நஞ்செழுத்து உள்ளதால் முத்தமிழுக்கும் திராவிடம் என்னும் பொதுப் பெயர் வழங்கலாயிற்றே அன்றி வேறன்றாம்.  இவற்றை நூதன மத வித்வான்கள் எவரேனும் மறுப்பரேல், பூர்வ நூல் ஆதாரத்துடன் விளக்கக் கார்த்துள்ளோமாக’ என்கிறார். 

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலங்களில் தமிழகம் வந்திருந்து, திராவிட மொழிகள் என்பதாக ஆய்வுகளை முன்வைத்துக் கொண்டிருந்த மேற்கத்திய ஆய்வாளர்களைத்தான் ‘நூதன மத வித்வான்கள்’ என அயோத்திதாசர் குறிப்பிடுகிறார்.  தமிழைக் குறித்தும், தென்னிந்திய நிலப்பரப்பில் வழங்கும் மொழிகளைக் குறித்தும் ‘திராவிடம்’ எனும் சொல்லாடல்கள் வழியாகக் கட்டமைக்கப்பட்ட கருத்தாடல்களுக்கான மறுப்புரைகளாகத்தான் மேற்காணும் கருத்துகள் அமைந்திருக்கின்றன. 

அவ்வகையில், திராவிடம் எனும் சொல்லாடல், தமிழில் நஞ்சு எழுத்தாக வகைப்படுத்தியிருக்கும் பாகுபாட்டின் அடிப்படையில், ‘தீரா விடம் - திரா விடம் -திராவிடம்’ எனத் தமிழை மட்டுமே குறிக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனும் நான்கு மொழிகளையோ - நான்கு இனத்தாரையோ - நான்கு நிலப்பரப்பையோ ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் பொதுப்பெயராகத் திராவிடம் எனும் சொல்லாடல் குறிக்காது; அவ்வாறு குறிக்கவும் கூடாது. 

நஞ்சு எழுத்து எனும் வகைப்பாட்டினால் திராவிடம் என்பதைப்போல, அமுத எழுத்து எனும் வகைப்பாட்டினால் தமிழ் எனவும் வழங்கப்பெறுகின்றது. அவ்வகையில், ‘திராவிடம்’ என்பதும் ‘தமிழ்’ என்பதும் தமிழ் ஒன்றை மட்டுமே குறிக்கும் என்பதாகவே அயோத்திதாசரின் கருத்தாடல்கள் வலியுறுத்துகின்றன. 

அதனால்தான், தமிழ் மொழியையும் - தமிழர்களையுமே குறிப்பதற்குத் திராவிடம் என்பதையும், தமிழ் என்பதையும் ஒன்றாகவே பாவித்திருக்கிறார் அயோத்திதாசர். ஆதித் தமிழர்கள் - ஆதி திராவிடர்கள்; சாதி பேதமற்ற தமிழர்கள் - சாதி பேதமற்ற திராவிடர்கள்; பூர்வக்குடித் தமிழர்கள் - பூர்வக்குடித் திராவிடர்கள் என, தமிழர்களை மட்டுமே அடையாளப்படுத்துவதற்கு இரு சொல்லாடல்களையும் பயன்படுத்தியிருப்பது நோக்கத்தக்கது. திராவிட எனும் பெயரிலான சங்கப் பெயர், இதழ்ப்பெயர் போன்றவற்றைத் தமிழர் - தமிழ் என்பதை மட்டுமே குறிப்பதற்கு அயோத்திதாசர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது ஆகும். 

மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..

*

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

6 கருத்துகள்:

  1. நல்ல விளக்கம்
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  2. க. கோவிந்தராக3/3/22, 12:04 PM

    வணக்கம். திராவிடம் என்பதன் விளக்கம். மிக அருமை ஐயா. வாழ்த்துகள்������

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க. கோவிந்தராசு .3/3/22, 12:09 PM

      வணக்கம். திராவிடம் என்பதன் விளக்கம். மிக அருமை ஐயா. வாழ்த்துகள்

      நீக்கு
  3. பெயரில்லா5/5/24, 9:23 PM

    தோழர் தங்களை திராவிடர் அல்லது ஆதிதிராவிடர் என்னாது தேவேந்திரகுலவேளாளர் அல்லது மள்ளர் என அழைத்துக்கொள்வது ஏனோ?

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா5/5/24, 9:25 PM

    விடவெவெழத்து அல்லது நஞ்செழுத்தே திராவிடமெனில் தமிழையேதானே அமுதெழுத்து என்கிறார்

    பதிலளிநீக்கு