வெள்ளி, 4 மார்ச், 2022

யார் தமிழர்? - அயோத்திதாசரின் அடையாள அரசியல் : மகாராசன்

திராவிடர் - திராவிடம் போன்ற அரசியல் சொல்லாடல்களை அயோத்திதாசர் தமது அறிவுச் செயல்பாடுகளில் முன்வைத்திருந்தாலும், திராவிட இயக்கத்தினர் முன்னெடுத்திருக்கும் அடையாள அரசியலில் இருந்து முற்றிலும் வேறான அடையாள அரசியலையே கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. அயோத்திதாசரின் அத்தகைய அடையாள அரசியல் குறித்து டி.தருமராஜ் எடுத்துரைக்கும் பகுதிகள் முக்கியமானவை. 


‘திராவிடர்’ என்ற சொற்பிரயோகம் அயோத்திதாசரின் காலத்தில் இருந்ததா என்று பலரும் ஆச்சரியப்படலாம். ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1881இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியின் போது ‘ஆதித்தமிழன்’ என்ற சொல்லை எந்தப் பொருளில் பயன்படுத்தினாரோ அதே பொருளிலேயே ‘திராவிடன்’ என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார். 

‘திராவிட மகாஜன சபை’ என்பது சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டோருக்கான சபையாகவே தோற்றம் பெற்றது. இந்நாட்டில் பூர்வீகக் குடிகளாகவும், மண்ணின் மைந்தர்களாகவும், ஆதித் தமிழர்களாகவும் விளங்கிய பழங்குடிகளும், தாழ்த்தப்பட்ட மக்களுமே ‘திராவிடன்’ என்ற சொல்லால் அடையாளப்படுத்தப்பட்டனர். பின்னாட்களில், தமிழன் என்பதற்கும் திராவிடன் என்பதற்கும் பல்வேறு திரித்தல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன என்றாலும், அத்தகையத் திரிபடைந்த அர்த்தங்களே இன்றைக்கும் வழக்கில் உள்ளன என்றாலும், அயோத்திதாசர் அவற்றை முற்றிலும் மாறான பொருளிலேயே பயன்படுத்தினார் என்பது முக்கியம்... 

1880களில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் புதிய தளமொன்றில் அவர் இயங்கத் தலைப்பட்டதை நமக்குச் சுட்டுகின்றன. வர்ணாசிரம அடக்குமுறையையும், சாதியக் காழ்ப்புணர்வையும் மறுக்கும் வழிமுறையென அத்வைதக் கோட்பாடுகளை முன்மொழிந்த அவர் அதனிலிருந்து முற்றிலும்  மாறுபட்டு, தம்மையும் தமது சமூகத்தையும் ‘இந்துக்கள் அல்ல’ என்று அறிவித்ததுடன் ‘ஆதித்தமிழர்’ என்ற மொழி அடையாளமே பிரதான அடையாளம் என்று அறைகூவியது தலைகீழான மாற்றம் என்றுகூடச் சொல்லமுடியும்.

‘ஆதித்தமிழர்’ என்ற அடையாளத்தை எந்தவொரு அரசியல் லாபத்துக்காகவும் அவர் முன்மொழியவில்லை. அதே நேரம், அதிர்ச்சியை உண்டாக்குவது மட்டுமே அவரது நோக்கமாகவும் இருக்கவில்லை. ‘ஆதித்தமிழர்’ என்ற அடையாளம் அவருக்குள் ஆழமாகவே செயல்பட்டு வந்தது. இதனாலேயே இந்த நாட்டின் பழங்குடியின மக்களும், தாழ்த்தப்பட்டவர்களும் தமிழ் பேசும் மக்களின் மூதாதையர்கள் என்ற சிந்தனையை அவர் தொடர்ந்து வளர்த்து வந்தார். அக்கோட்பாட்டை வலுப்படுத்தும் பல்வேறு சான்றுகளையும் அவர் தேடத் தொடங்கினார்.

தொல்தமிழர் அல்லது தமிழ் மூதாதையர் அல்லது ஆதித் தமிழர் என்ற சிந்தனையின் அடுத்த நிலையாக, 1886இல் அயோத்திதாசர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை இரண்டு செய்திகளை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. 

ஒன்று, பழங்குடியின மக்களும் தாழ்த்தப்பட்டவர்களுமான ஆதித் தமிழர்களே இந்நாட்டின் முதல் குடிமக்கள், அதாவது பூர்வக்குடிகள் அல்லது மண்ணின் மைந்தர்கள்; இரண்டு, இம்மண்ணின் மைந்தர்களான அவர்கள் இந்துக்கள் அல்லர்’ என டி.தருமராஜ் விவரித்த மேற்குறித்த பகுதிகள், அயோத்திதாசரின் அடையாள அரசியலைத் தெளிவுபடுத்தி விடுகின்றன. 

அயோத்திதாசர் காலத்தில் நிலவிய பிராமண மேலாதிக்கத்தை எதிர்த்துப் பிராமணர் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த பிராமணர் அல்லாதார் இயக்கமானது, பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தும், அதிகாரத்தில் பங்கு கோருவதாகவும் மட்டுமே இருந்ததே தவிர, பிராமணர் அல்லாதவர்களால்  பிராமணர் அல்லாதவர்களிடம் கடைபிடிக்கப்பட்டு வந்த  சாதி ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவது குறித்தோ, சாதி ரீதியாக வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் மீது செலுத்தப்பட்ட பிராமணர் அல்லாதவர்களின் மேலாதிக்கத்தைக் களைவது குறித்தோ வேறெதுவும் வலியுறுத்தவில்லை. 

ஆகையால்தான், ‘பிராமணர் அல்லாதார் இயக்கம்’ என்பது பிராமணியத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்கம் என்கிற வகையில் அதிலிருந்து விலகியே நின்றிருக்கிறார் அயோத்திதாசர். 

பிராமணர் அல்லாதார் இயக்கம் குறித்த அயோத்திதாசரது நிலைப்பாடு பின்வருமாறு:

‘பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதி என்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக் கூட்டத்தோர்களையே சேர்ந்தவர்கள் ஆகும். 

சைவம், வைணவம், வேதாந்தம் என்னும் சமயங்களையும், அப் பிராமணர் என்போர்களே ஏற்படுத்தி, அச்சமயத்தை எவரெவர் தழுவி நிற்கின்றனரோ அவர்களும் பிராமணச் சார்புடையவர்களே ஆவர். 

இத்தகையச் செயலுள் சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் தழுவிக்கொண்டே (நன் பிராமன்ஸ்) என்று சங்கம் கூடி இருக்கின்றனரா அன்றேல், சாதி ஆசாரங்களையும் சமய ஆச்சாரங்களையும் ஒழித்து (நன் பிராமன்ஸ்) Non - Brahmin என்ற சங்கம் கூடி இருக்கின்றனரா விளங்கவில்லை. 

அங்கனம் சாதி ஆசாரங்களையும் சமய ஆச்சாரங்களையும் ஒழித்துள்ள கூட்டமாய் இருக்குமாயின் அவர்களுடன் சேர்ந்து உழைப்பதற்கு அனந்தம் பேர் காத்திருக்கின்றார்கள். 

பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக்கொண்டு நன் பிராமன்ஸ் எனக்கூறுவது வீணேயாகும்’ என்கிறார் அயோத்திதாசர். 

அதாவது, சாதி சமய ஏற்றத்தாழ்வுகளை ஏதோ ஒருவகையில் கடைபிடித்துக்கொண்டு, இன்னொரு சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிராகத் திரள்வதென்பது உண்மையான பிராமணிய எதிர்ப்பு அல்ல; அது பிராமணியச் சார்பு நிலையே. 

பிராமணர் அல்லாதவர்கள் அனைவரும் சாதி பேதமற்று அணிதிரள்வதே உண்மையான பிராமணிய எதிர்ப்பு என்பதுதான் அயோத்திதாசர் முன்வைத்திருந்த அரசியல் நிலைப்பாடாகும்.

தமிழ்ச் சூழலில் பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக உருவாகி வந்த பிராமணர் அல்லாதார் இயக்கமானது, தமிழர்களின் அரசியல் சமூக நலனைக் குவிமயப்படுத்துவதற்குப் பதிலாக, தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் உள்ளடக்கிய மக்களின் அரசியல் சமூக நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே திராவிடர் - திராவிடம் எனும் அடையாள அரசியலாகத் திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.  

சேலம் செவ்வாப்பேட்டையில் பெரியார் பேசியதாகக் குடியரசு (29.01.1944) இதழில்  பதிவாகியிருக்கும் செய்தி, திராவிடம் என்பதை வலியுறுத்தியதின் தேவையைத் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அது வருமாறு: 

‘திராவிடச் சமுதாயம் என்று நம்மைக் கூறிக்கொள்ளவே கஷ்டமாயிருக்கும்போது ‘தமிழர்’ என்று எல்லாரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும். இங்கே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாதுரை தமிழர்.

இனி, எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனெனச் சொல்லிக் கொள்ள ஒப்புக் கொள்கிறேன். ஆனால், எல்லாக் கன்னடியரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தெலுங்கர்களும் அப்படியே. 

திராவிடச் சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும். எனவே, இத்தகைய கேவல நிலையொழிய, ஜஸ்ட்டிஸ் கட்சி திராவிடக் கட்சியாக மாற வேண்டும். சேலத்தில் நடைபெற இருக்கும் மாகாண மாநாட்டில் இதையே முதல் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டும்’ என்பதாகத்தான் திராவிட இயக்கத்தின் திராவிடம் - திராவிடர் என்பதான அடையாள அரசியல் மடைமாற்றங்கள் நடந்தேறியுள்ளன.

திராவிட இயக்கம் முன்னெடுத்திருந்த திராவிட அரசியலானது, ‘தமிழர்’ எனும் அடையாளம் நீக்கம் செய்யப்பட்ட ஒன்றாகவும், தமிழர் அல்லாதவர்களை உள்ளடக்கியதாகவும் இருந்திருக்கிறது. ஆனால், அதற்கும் முந்திய காலத்திலேயே திராவிடம் - திராவிடர் எனும் சொல்லாடல் கொண்டே அடையாள அரசியலை முன்னெடுத்திருந்த அயோத்திதாசர், தமிழர் எனும் அடையாளத்தையே முன்வைத்திருக்கிறார். 

‘சாதி பேதமற்ற திராவிடர்களே இத்தேசத்தின் பூர்வக்குடிகள் ஆகும். இவர்கள் பெரும்பாலும் தமிழ் பாஷா விருத்தியைக் கோரி நின்றவர்கள் ஆதலின் தென்னாட்டுள் தமிழர் என்றும், வடநாட்டார் திராவிடர் என்றும், திராவிட பெளத்தாள் என்றும் வழங்கி வந்ததுமன்றி, இலங்கா தீவத்திலுள்ளோர் சாஸ்திரங்களிலும் சரித்திரங்களிலும் இப் பூர்வக்குடிகளைத் திராவிட பெளத்தர்கள் என்று வரைந்திருப்பதுமன்றி வழங்கிக் கொண்டும் வருகின்றார்கள்’ என அயோத்திதாசர் தரும் திராவிட அடையாளம் என்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களை - அதிலும் குறிப்பாகச் சாதிபேதமற்ற தமிழர்களையே அடையாளப்படுத்தியிருப்பது முக்கியமான ஒன்றாகும்.

பூர்வத் தமிழர் - பூர்வக் குடிகள் -  சுதேசியர்கள் என்போரின் அடையாளங்கள் பற்றிய அடையாள அரசியல், அயோத்திதாசரின் கருத்தாடல்கள் பலவற்றிலும் வெளிப்பட்டிருக்கிறது. 

‘சுதேசிகள் என்பது தேசத்திற்கு சுதந்திரம் உள்ளவர்கள், தேசப் பூர்வக்குடிகள், தேசத்திலேயே பிறந்து வளர்ந்து அதன் பலனை அனுபவித்து வந்தவர்கள், இவர்களையே சுய தேச வாசர்கள் என்றும் கூறப்படும். மற்ற காலத்திற்குக் காலம் இவ்விடம் வந்து குடியேறியவர்கள் பரதேசிகளே. அதாவது, அவர்கள் அந்நிய தேச வாசிகளே ஆவர். 

குடியேறி நெடுங்காலம் ஆகிவிட்டபடியால் அவர்களையும் சுதேசிகள் என்று அழைக்கலாம் என்றாலோ, அவர்களுக்குப் பின் காலத்திற்குக் காலம் இவ்விடம் வந்து குடியேறி நூறு வருடத்திற்கு மேலாகக் காலங்கழிப்பவர்களையும் சுதேசிகள் என்றே கூறத் தகும். அங்கனம் அவர்களை நீக்கி ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இருப்பவர்களாகிய எங்களை மட்டிலும் சுதேசிகள் என்று எண்ண வேண்டும், மற்றவர்களைச் சுதேசிகள் என்று அழைக்கலாகாது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை. ஆதலின், இத்தேசப் பூர்வக் குடிகளும், இத்தேசத்தைச் சீர்பெறச்செய்து அதன் பலனை அனுபவித்து வந்தவர்களும் யாரோ அவர்களையே பூர்வக் குடிகள் என்றும், சுய தேசவாசிகள் என்றும் சுதேசிகள் என்றும் கூறத் தகும். 

அவர்கள் யாரென்னில், தமிழ் பாஷையில் பிறந்து - தமிழ் பாஷையில் வளர்ந்து - தமிழ் பாஷைக்கு உரியோர்களாக விளங்கும் பூர்வத் திராவிடக் குடிகளே ஆகும். 

மற்றுமிருந்த ஆந்திர, கன்னட, மராஷ்டகரும் பூர்வக்குடிகளேயாயினும், திராவிடர்களைப் போல் தேச விருத்தியை நாடியவர்களும், பல தேசங்களுக்கும் சென்று பொருளைச் சம்பாதித்து சுய தேசத்தைச் சீர்பெறச் செய்தவர்களும், பூர்வ சரித்திரங்களையும் ஞான நீதிகளையும் பல்லோருக்கு உணர்த்தி, சுய பாஷையில் எழுதி வைத்துள்ளவர்களும், சாதிபேதம் என்னும் கொடிய செயலைப் பூர்வத்தில் இல்லாமல் எவ்வகையாக வாழ்ந்து வந்தனரோ; நாளது வரையில் வாழ்ந்தும் வருகின்றனரோ அவர்களே யதார்த்த சுதேசிகளும் பூர்வக்குடிகளுமாவர். 

திராவிடராம் தமிழ் பாஷைக்குரியவர்களுக்குள் சாதிபேதமென்னும் நூதனக் கட்டுப்பாட்டில் அமைந்திருப்போர்களைப் பூர்வக் குடிகள் என்றாயினும், சுதேசிகள் என்றாயினும் அழைப்பதற்கோ ஏது கிடையாது. எவ்வகையில் என்பரேல், அன்னிய தேசத்திலிருந்து இத்தேசத்தில் வந்து குடியேறிய நூதன சாதிகளையும், நூதன மதங்களையும் உண்டு செய்து கொண்டு சீவிப்போர்களுடன் உடைந்தையாகச் சேர்ந்துகொண்டு தேசத்தைப் பாழ்படுத்த ஆரம்பித்து விட்ட படியினாலேயாம். 

இத்தேசத் திராவிடர்கள் அன்னிய தேசத்தோர் சாதிக் கட்டுக்குள் அடங்கினபடியால் ஒற்றுமெய்க் கேடும், அவர்கள் மதத்தைச் சார்ந்து விட்டபடியால் அவர்களால் ஏற்படுத்தியுள்ள சாமிகள் கொடுப்பார் என்னும் சோம்பலால் முயற்சி என்பதற்று வித்தியா விருத்தியையும், விவசாய விருத்தி, வியாபார விருத்திகள் யாவையும் பாழ்படுத்தி தேசத்தையும் சீர்கெடுத்து விட்டார்கள். இன்னும் சீர் கெடுத்தே வருகின்றார்கள். தேசத்தையும் தேச மக்களையும் எப்போது சீர்கெடுக்க ஆரம்பித்துக் கொண்டார்களோ அச்செயல் கொண்டு அவர்களையும் சுதேசிகள் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை. 

இத்தேசத்தின் பூர்வ சாதி பேதமற்ற நிலையைக் கருதி மக்களை மக்களாகப் பாவித்து வித்தியா விருத்தியையும், விவசாய விருத்தியையும், வியாபார விருத்தியையும் சிந்தையில் ஊன்றி, சோம்பலின்றி உழைத்து, தேசத்தைச் சீர்செய்ய முயல்பவர்கள் யாரோ, அவர்களே சுதேசிகள் என்றும் சுய தேசத்தவர்கள் என்றும் பூர்வக் குடிகள் என்றும் கூறத் தகும். 

மற்றைய சாதிபேதச் செயலால் ஒற்றுமெயைக் கெடுப்போரும், சமய பேதச் செயலால் சோம்பலைப் பெருக்கித் தேசத்தைக் கெடுப்போரும் சுதேசிகள் ஆக மாட்டார்கள். அவர்கள் தங்கள் சுய நலத்தையே கருதும் அன்னிய தேசத்தோர்களே ஆவர். அவர்களுக்குச் சுதேசிகள் என்னும் பெயர் பொருந்தவே பொருந்தாவாம்’ என, அயோத்திதாசர் விவரிக்கும் பகுதிகள் யாவும், தமிழர் அடையாள அரசியலையே உள்ளீடாகவும் வெளிப்படையாகவும் கொண்டிருக்கின்றன. 

தமிழைத் தாய்மொழியாகக்கொண்டு காலங்காலமாக இந்த மண்ணிலேயே உழன்று வாழ்ந்துவரும் மண்ணின் மைந்தர்களே இந்நிலத்தின் பூர்வத் தமிழ்க் குடிகள். வெகுகாலத்திற்கு முன்பாகவே வந்து குடியேறிய பிறமொழி பேசுவோர் இந்நிலத்தில் வாழ்பவர் ஆயினும், அவரெல்லாம் பூர்வத் தமிழ்க்குடிகள் அல்லர். தமிழரைப் போலவே தெலுங்கரும் கன்னடரும் மலையாளியும் மராட்டியர் உள்ளிட்ட யாவரும் அவரவர் நிலத்தின் பூர்வீகக் குடிகளே ஆவர். 

பூர்வீகத் தமிழர் - பூர்வீகத் தமிழ்க் குடிகள் என்றாலும், சாதி மத பேதமற்றவர்களாக இருப்பவர்களே உண்மையான பூர்வத் தமிழ்க் குடிகள் என்கிறார் அயோத்திதாசர். பிறமொழி பேசுவோரையும், வந்து குடியேறிய பிற தேசத்தவர்களையும் தமிழராக அடையாளப்படுத்தி  ஏற்றுக்கொள்ள மறுக்கும் அயோத்திதாசர், சாதி மத பேதத்தைக் கடைபிடிக்கும் பூர்வத் தமிழ்க் குடிகளையும் தமிழராக அடையாளப்படுத்திட முடியாது; கூடாது என்பதில் தெளிவாய் இருந்திருக்கிறார்.

அயோத்திதாசரைப் பொறுத்தளவில், பிராமணர் அல்லாதவர் - திராவிடர் - தமிழர் என்போர் யாரெனில், சாதி மத பேதமற்ற தமிழர்களையே குறித்திருக்கிறது.

ஆங்கிலேய வல்லாதிக்க ஆட்சி நிலவிக்கொண்டிருந்த காலகட்டத்தில், இந்நாட்டின் ஆட்சியை இந்நாட்டவரிடம் ஒப்படைக்கும் தருவாயில், அதன் பொறுப்பைப் பிராமணர் அல்லாதவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பிராமணர் அல்லாதவர் - திராவிட இயக்கங்கள்  கோரிக்கை வைத்தன. பிராமணர்களிடமிருந்த ஆட்சி அதிகாரமானது, பிராமணர் அல்லாத - தமிழர் அல்லாதவர்களுக்குக் கைமாற்றுவதில்தான்  அவ்வியக்கங்கள் முனைப்புடன் செயலாற்றி இருக்கின்றன. 

அதேவேளை, இந்நாட்டின் ஆட்சி அதிகாரப் பொறுப்பைப் பிராமணர் அல்லாதவர் எனும் வகையில் தமிழர் அல்லாதவர்களிடம் வழங்கிடக் கூடாது எனத் திடமாய் எதிர்த்திருக்கிறார் அயோத்திதாசர். 

‘பிரிட்டிஷ் துரைத்தனத்தார் தங்கள் ஆளுகையைச் சுதேசிகளின் மீது கிருபை பாவித்து சுய ராட்சியத்தை அளிப்பது ஆயினும், இத்தேசப் பூர்வக் குடிகள் யார்? யதார்த்த சுதேசிகள் யார்? எனக் கண்டு தெளிந்து, அவர்களைச் சீர்திருத்தி, அவர்கள்பால் அளிப்பதே கிருபையாகும். அங்கனம் இராது, நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னானாள் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் என்று கருதி, அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையை ஒப்படைத்துவிடுவார்களாயின் யதார்த்த சுதேசிகள் யாவரும் பாழடைந்து போவதுடன், சுதேசமும் கெட்டு சீரழிந்து போமென்பது சத்தியம்’ எனக் குறிப்பிடுகிறார் அயோத்திதாசர். 

வந்து குடியேறிய பிராமணர்களிடமோ அல்லது வந்து குடியேறிய தமிழர் அல்லாத பிற இனத்தாரிடமோ ஆட்சி அதிகாரம் போய்ச் சேர்ந்தால், பூர்வக்குடித் தமிழர்களின் அடையாளமும் இருப்பும் வாழ்வும் பாழ்பட்டுப்போகும் என அயோத்திதாசர் அன்றைய காலகட்டத்திலேயே தீர்க்கமாய் உணர்ந்து எதிர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..

*

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

1 கருத்து:

  1. சாதி,மத, பேதமற்ற தமிழர் நல்ல தெளிவான சொல்லாடல்
    வாழ்த்துக்கள் அய்யா

    பதிலளிநீக்கு