செவ்வாய், 8 மார்ச், 2022

தமிழ்த் தேசியர்களின் வரலாற்றுக் கருத்தாயுதம்: செம்பரிதி


தன் அடையாளத்தையும் வேர்களையும் அறிந்து கொள்ளும் வேட்கை உடையோருக்குக் கிடைத்த நல்வரவாக இருக்கிறது முனைவர் ஏர் மகாராசன் அவர்களின் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' நூல்

கடகடவென இழுத்துச் செல்லும் மொழி அடுக்குகளும், அவ்வாறு சென்று விடாமல் பக்கத்திற்குப் பக்கம் நிறுத்தி, சிந்திக்கச் செய்யும் தரவுகளாகப் படிப்பின்பத்தையும் அறிதலின்பத்தையும் தருகிறது இந்நூல்.


உழவு வாழ்வில் ஈடுபடாமல், அதை பார்வையால் மட்டும் பார்ப்பவர்கள், உழவு நிலத்தையும் வாழ்வையும் திரைகளிலும் - பயணங்களிலும் மட்டுமே பார்க்கும் உழவு நிலம் நீங்கிய நகர்புறங்களில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் தலைமுறையினர் அனைவருக்கும், உழவையும் அவர்தம் பண்பாட்டு வாழ்வையும் அறிந்து கொள்ளும் வகையில் மனத்திரையில் திரைக்காட்சிகளாக விரித்துக் கொண்டே செல்கிறது இந்நூல்.

எல்லா பக்கங்களுமே நினைவுக்காக அடிக்கோடிட்ட வரிகளால் நிரம்பி விட்ட அளவிற்கு, வியத்தகு செய்திகளின் அணிவகுப்பாக இந்நூல் இருக்கிறது.

அறியாத செய்திகள் மட்டுமன்றி, அறிந்த செய்திகளும் எப்படிப் பிழையாக அறியத் தரப்பட்டிருக்கின்றன என்ற விளக்கப்படுத்தலை விளங்கிக்கொள்ளும் போது வியப்போடு வேதனையும் பொங்குகிறது.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை ஆரியம் தன்வயப்படுத்திக் கொண்டதால், தமது பண்பாட்டு அடையாளங்களையே ஆரிய அடையாளம் எனத் தமிழர்கள் ஒதுக்கவும் ஒதுங்கவும் நேர்ந்த துயர வரலாற்றைப் பேசுகிறது இந்நூல்.

இந்திர வழிபாடென்பது, தமிழர்களால் வணங்கப்பட்ட மழை வழிபாடே. ஆரிய இந்திரன் வேறு; தமிழர் இந்திரன் வேறு என்றும், சோழர் கொடியில் பறக்கும் புலிச் சின்னமானது ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவம்தான் என்றும் தரவுகளோடு நிறுவுவதைப் படிக்கும் போது அதிர்ச்சியாகவும் அயர்ச்சியாகவும் இருக்கிறது.

தமிழர் மரபில் பன்னெடும் காலமாக இந்திர அடையாளம் இருந்து வந்திருக்கும் நிலையில், இந்திரன் அடையாளம் என்றாலே அது ஆரிய வைதீக மரபில் சுட்டப்படும் இந்திரனாகவே கருதும் பொதுப்போக்கைத் தகர்க்க அடுக்கடுக்கான இலக்கியச் சான்றுகளை முனைவர் அடுக்குகிறார்.

தமிழ் இந்திரன் வேறு; ஆரிய இந்திரன் வேறு என ஆய்வு முடிவுகளோடு நிறுவுகிறார்.

வேளாண் மரபில் இருக்கும் பண்பாட்டு வடிவங்களான சடங்குகள் - வழிபாடுகள், உழவு நிலத்தில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் வேளாண் பணிகள், யார் யாரெல்லாம் வேளாளர்?யாரெல்லாம் வெள்ளாளர்? வேளாளர் என்பது குலத்தின் அடிப்படையிலான பிறப்பைக் குறிக்கிறதா? என்பதையெல்லாம் விளக்கியும் விவரித்தும், தன் விருப்பமாக இல்லாமல், இலக்கிய வரலாற்றுத் தரவுகளோடு தமிழர் வேளாண் வரலாறாக இழுத்துச் செல்கிறது இந்நூல்.


வேளாண் குடிகளும், வேளாண்மை அல்லாத குடிகளும் விழாக்களில் பின்பற்றும் சடங்குகளில் இருக்கும் அசல் கூறுகளை அறியும் போது, பகுத்தறிவின் பெயரால் ஏற்பட்ட அறச்சிதைவும் பண்பாட்டு வீழ்ச்சியும் கனமாகக் கனக்கிறது.

இந்நூல் படைப்பதற்காகப் படித்த நூற்றுக்கணக்கான நூல் பட்டியலே, நூலாசிரியரின் உழைப்பையும் செம்மையையும் காட்டுகிறது.

இந்நூலை நேர்மையோடும் சமூக அறத்தோடும் பயணிக்கும் யாவருக்குமான நூல் என்கிறார் நூலாசிரியர். இது சரியானது.

அது மட்டுமல்ல, தமிழ்த் தேசியர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய வரலாற்றுக் கருத்தாயுதம் தான் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்'.

*

கட்டுரையாளர்:
தோழர் செம்பரிதி,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்,
ஓசூர்.

*

வேளாண் மரபின் 
தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு,
செந்தில் வரதவேல்
9080514506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக