வெள்ளி, 11 மார்ச், 2022

ஏறு தழுவுதல் - பண்பாட்டு வரலாறு பேசும் தனித்துவமான நூல் : செ. தமிழ்நேயன்


மகாராசன் எழுதிய 'ஏறு தழுவுதல்:  வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்' நூல் பற்றிய மதிப்புரை.

: செ. தமிழ்நேயன்.

*

நூலின் தலைப்பே வாசகனை ஈர்க்கும் வகையில் உள்ளது. பண்டையத் தமிழரின் வாழ்வியல் முறையில் விலங்குகளின் பங்களிப்பு எவ்வாறு இருந்திருகின்றன என்பதை இலக்கியச் சான்றுகளோடு நிறுவுகிறார். 

உயிர்நேயத்தைக் காப்பதில் பண்டையத் தமிழ் முன்னோர்கள் சிறந்து விளங்கினர் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு பக்கங்களையும் வாசிக்கும் போது பண்டைய நிகழ்வுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்தும் வகையில் நூலாசிரியரின் மொழியாளுமை புலப்படுகின்றது.

ஏறு தழுவுதல் என்பது ஒரு விளையாட்டு நிகழ்வு என்ற வகையில்தான் பொதுவாக எல்லோராலும் கருதப்படுகிறது. விளையாட்டு என்பதைக் கடந்து, அதனுள் மறைந்திருக்கும் பண்பாட்டு விழுமியங்கள் புதைந்திருப்பதைப் பட்டியலிட்டிருக்கிறது இந்நூல்.

பண்டையத் தமிழர், விலங்குகளை எவ்வாறு பழக்கினர்; பழகினர் என்பதை மிக விரிவாகவே விவரித்திருக்கிறார் ஆசிரியர். மாடு என்பது செல்வத்தின் குறியீடாகத் தான் கருதப்பட்டது. பண்டமாற்று வணிக நடைமுறையில் மாடுகளின் மீதான ஈர்ப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போனது.

மாந்தரின் மொழி மற்றும் நாகரிகத் தேடலில் மாடுகள் வழித்துணையாகப் பயணித்து இருக்கின்றன. உணவு உற்பத்தியிலும், உடல் உழைப்பிலும் மாடுகள் மாந்தருக்குத் தோழனாகத் தோள் கொடுத்திருக்கின்றன.

மாடுகளின் பண்புக்கூறுகள், உடல் மொழிகள் பற்றி இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில், மாடுகளின் உலகத்தை மாந்தருக்கு நுழைமுகம் செய்துள்ளார் மகாராசன்.

திணை வாழ்வியல் கோட்பாட்டில் மாடுகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. பண்டையத் தமிழர்கள் வாழ்வியல் நெறிகளை அகம், புறம் வகைப்படுத்தி இருந்தனர். புறம் என்பது பெரும்பாலும் போர்த்திறம், விளையாட்டு, பண்டிகைகள் பற்றிய குறிப்புகள் உள்ளடக்கியதாகும். அவற்றில் மாடுகளின் பங்களிப்பு இருப்பதையும் இந்நூல் வழியாக நிறுவுகிறார்.

தமிழர் பண்பாட்டுப் பண்டிகையான பொங்கல் திருநாள் சிறப்புகளில் ஒன்றான மாடுகளுக்கு நன்றி கூறல் நிகழ்வின் வெளிப்பாடு தான் மாட்டுப்பொங்கல்.

தமிழர் மரபில் ஒவ்வொரு உயிரின் நிலைக்கும் பெயரிடும் வழக்கம் உள்ளது. ஆணின் பருவப் பெயர்களில் ஒன்றான காளை என்பது வலிமையைக் குறிக்கும் நோக்கில் உள்ளது. திணை வழி வாழ்நிலையில் பாலைத் திணை மக்கட்பெயர்களில் ஒன்றான காளை என்பதும் வலிமையைக் குறிக்கிறது. இரண்டு குறியீடுகளும் மாடுகளுக்கும் மாந்தருக்கமான தொடர்பைத் தான் வெளிப்படுத்துகிறது.

மாடுகளுக்கும் மாந்தருக்கமான தொடர்பு பற்றிய குறிப்புகளைப் பள்ளு இலக்கியத்தின் வழியே மெய்ப்பிக்கிறார். பள்ளு இலக்கியங்களில் வேளாண்மை பற்றிய குறிப்புகளோடு எருதுகளின் வகைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏறு தழுவல் நிகழ்வு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் இன்றும் நடைபெறுகிறது. அந்நாட்டின் தேசிய அடையாளங்களில் மாடு ஒன்றாகும். தமிழர் வாழ்வியலிலும் பண்பாட்டு நடத்தைகளிலும் மாடுகள் மிக முக்கியமான இடத்தை வகித்திருக்கின்றன. மாடு தொடர்பான தமிழர் பண்பாட்டு வடிவங்களில் ஏறு தழுவலும் ஒன்றாகும். ஆனால், அந்தப் பண்பாட்டு நடத்தைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஏறு தழுவல் தடை என்பது ஒரு பண்பாட்டு ஒடுக்குமுறையாகும். அந்த ஒடுக்கு முறைக்கு எதிராகத் தமிழக இளைஞர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். போராட்டம் காரணமாக ஏறு தழுவுதல் தடை நீக்கப்பட்டது. 

ஏறு தழுவுதல் பண்பாட்டு மரபைத் தமிழர்கள் மீட்டெடுத்திருந்தாலும், ஏறு தழுவல் பற்றிய பண்பாட்டு எடுத்துரைப்புகள் தனித்துவமாக இதுவரையிலும் வெளிவரவில்லை. மகாராசனின் ஏறு தழுவல் நூல்தான், ஏறு தழுவுதல் பற்றிய பண்பாட்டு வரலாற்று நோக்கில் எடுத்துரைக்கின்றது. ஏறு தழுவல் பற்றிய பண்பாட்டு வரலாற்றுச் சித்திரத்தை மிக அழகாகவும் நுணுக்கமாகவும் இந்நூல் விவரித்திருக்கிறது. நூலாசிரியருக்கும் அடவி பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.

*

ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்,
மகாராசன்,
முதல் பதிப்பு: 2017,
வெளியீடு: அடவி - ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
விலை: உரூ 60/-
தொடர்புக்கு: 
தில்லை முரளி 
99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக