ஞாயிறு, 1 அக்டோபர், 2023

இன்றைய சமூக நிலைமைகளைச் சீர்செய்வதற்கான புத்தகம் : மு.மகேந்திரபாபு


முனைவர் மகாராசன் எழுதிய 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' என்கிற நூல், இன்றைய கல்வி முறையையும், தற்போதைய பாடத்திட்டம் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கல்விக்கூடத்தினின்று எவ்வாறு அப்புறப்படுத்துகிறது என்பதையும், அதைத் தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகப் பேசுகிறது.

அளவில் சிறிய புத்தகம் என்றாலும் இன்றைய சமூக நிலையைச் சீர்செய்வதற்காக எழுதப்பட்ட புத்தகம் என்பதை நாம் இவரது எழுத்துகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும், கல்வியாளர்களிடமும், அரசிடமும் கையில் இருக்க வேண்டிய புத்தகம் இது.

இப்புத்தகத்தில் இரண்டே கட்டுரைகள். முதலாவது கட்டுரை ' மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் கல்விச் செயல்பாடுகள் - புதிய பாடத்திட்டம் உள்ளிட்ட கல்வி அகச்சூழல்'. 2022 - 23 ஆம் கல்வியாண்டு இறுதித் தேர்வினை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத வரவில்லை. அதற்கான சமூக & அகக் காரணிகள் என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

தற்போதைய நடைமுறையில் இருக்கும் நவீனக் கல்விப் பாடத்திட்ட அமைப்பானது மீத்திறன் மாணவர்களையும், சாராசரி மாணவர்களையும், மெல்லக் கற்கும் மாணவர்களையும் மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டதுதானா ? எனக் கேள்வி எழுப்புகிறார் கட்டுரை ஆசிரியர். 

பள்ளிக்கும் தேர்வுக்கும் வராமல்போன மாணவர்களில் பெரும்பாலோர் மெல்லக் கற்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என கட்டுரையாசிரியர் கூறுவது முற்றிலும் உண்மையே. இதைக்களைவதற்கு ஆரோக்கியமான ஆலோசனைகளையும் முன்வைக்கிறார்.

*மெல்லக் கற்கும் மாணவர்களையும் கல்வி சார்ந்த கற்றல் செயல்பாடுகளில் பங்கேற்கச் செய்தல்.

* பாடப்பொருண்மைகளின் அளவைக் குறைத்தல்.

* 11 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை இரத்து செய்தல்.

*வினாத்தாள் மதிப்பெண் பகுப்புமுறையை ( Blue Print ) நடைமுறையை மீண்டும் கொண்டுவருதல்.

* ஆசிரியர்களுக்கு முழுமையான பணிப்பாதுகாப்பு வழங்குதல்.

* ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல்.

இது போன்று பல ஆரோக்கியமான ஆலோசனைகள் நூல் முழுமையும் தந்துள்ளார் கட்டுரையாளர் மகாராசன். 

'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' என்ற இரண்டாவது கட்டுரை, மாணவர்களின் இன்றைய நிலையை விரிவாகப் பேசுகிறது. பிஞ்சு நெஞ்சிலே சாதிய நஞ்சுடன் இன்றைய மாணவர்கள் வலம் வருவதையும் , அவர்களால் பாதிக்கப்படும் சக மாணவர்களைப் பற்றியும் ஆய்வு நோக்கில் பல்வேறு கருத்துகளை முன் வைக்கிறார் கட்டுரையாசிரியர். 

சாதி தெரியாமல், மதம் தெரியாமல் பாடித்திரிந்த பறவைகளாக இருந்தது ஒரு காலத்தில் பள்ளிப்பருவம். ஆனால் இன்று பள்ளிப் பருவம் சிலருக்கு எவ்வாறு உள்ளது என்பதை சமீபத்தில் நிகழ்ந்த நாங்குநேரி துயரச் சம்பவத்தின் மூலம் சிந்திக்கத் தூண்டுகிறார். சாதிய அடையாளக் கயிறுகளுடன் வலம் வரும் மாணவர்களின் மனநிலையும், ஆசிரியர்கள் சிலரும், பெற்றோரும் மற்றும் புறச்சூழல்களும் எவ்வாறு உள்ளன என்பதை மிக நேர்த்தியாக, பாரபட்சமற்ற முறையில் தெளிவான கண்ணோட்டத்துடன் உண்மையை எடுத்துரைக்கிறார். வெறும் கற்பனைக் கட்டுரையாக இல்லாது களப்பணி செய்தவர்களின் அனுபவத்தையும், உண்மையையும் பதிவு செய்திருக்கிறார். மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைக்குப் பெற்றோர்கள் எவ்வாறு காரணம் என்பதையும் விளக்குகிறது இக்கட்டுரை. 

பெற்றோர், ஆசிரியர், மாணவர் என அனைவருக்குள்ளும் உள்ள தற்சார்பு சாதியக் கண்ணோட்டம் எவ்வளவு தீமையைத் தருகிறது என்பதை நாம் உணர முடிகிறது. கல்வியின் சிறப்புகளையும், எழுத்தாளர்கள் பூமணி, சோ.தர்மன் அவர்களின் அனுபவப் பகிர்வுகளையும் ஆவணப் படுத்தியுள்ளார்.

மிகக்குறுகிய காலத்தில் எழுதி வெளிவந்த நூலாயினும், பல்லாண்டுகளாகச் இச்சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய விசம் எவ்வாறு களையப்பட வேண்டும் என்பதை நாம் தெரியவும் தெளியவுமான அற்புதமான பொக்கிசமாக இந்நூல் அமைந்துள்ளது. இல்லங்களிலும் நம் உள்ளங்களிலும் இருக்க வேண்டிய நூல் இது.

கட்டுரையாளர்:
மு.மகேந்திர பாபு,
ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்,
பைந்தமிழ் வலையொளி.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக