சனி, 7 அக்டோபர், 2023

திரைமீளா் என்ற தமிழ்ச்சொல்லின் திரிந்த கொச்சை வடிவமே திராவிடா் என்பதாகும் : ஆய்வறிஞர் ஒரிசா பாலசுப்பிரமணியம்.




நமது நாட்டிற்கு இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது?

நாம் இந்தியா என்ற பெயரை நமது நாட்டிற்குச் சொல்கிறோம். இந்தப் பெயர் எப்படி வந்தது? எங்கோ இருந்து கிரேக்க இன வெள்ளை நிற மக்கள் நமது மக்களின் கறுப்பு நிறத்தைப் பார்த்து அதைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான ‘இண்டி’ என்ற வார்த்தையால் நம்மை அழைத்தனர். அதனால்தான், கறுப்பு நிற மக்கள் வாழும் பகுதியான இந்தப் பகுதி ‘இண்டியா’ என்று குறிக்கப்பட்டது. பிறகுதான் ‘இண்டஸ் வேலி’ என்று சொல்லப்படும் சிந்துப் பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டே இந்தச் சொல் வந்தது என்று கூற ஆரம்பித்தார்கள். 

 உண்மையில், 1922இல்தான் இண்டஸ் வேலி கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்னமே கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்னமே ‘இண்டிகா’ என்ற சொல் கறுப்பு நிற மக்களைக் குறிக்கும் சொல் இருந்து வந்துள்ளது. கிரேக்கர்கள் அலெக்ஸாண்டருக்கு முன் கடல்வழியாகத்தான் இந்தியாவை வந்தடைந்தார்கள். 

அலெக்ஸாண்டருக்குப் பின்தான் நிலவழிப் பயணம் மேற்கொண்டார்கள். அதன் பிறகுதான் ‘பட்டு வழிப்பாதை’ மூலம் வந்தார்கள். அதனால்தான் சொல்கிறேன், அயோனியர், யவனர் என்று அழைக்கப்பட்ட மக்களாகிய கிரேக்க வெள்ளை நிற மக்கள், இந்தியாவின் கடற்கரையை வந்தடைந்தபோது அங்கு இருந்த கறுப்பு நிற மக்களைப் பார்த்துச் சொன்ன சொல்லில் இருந்துதான் ‘இந்தியா’ என்ற சொல் வந்தது.

சரி, ஏன் அவர்கள் அங்கிருந்து நடு நிலக் கடலாகிய மத்தியத் தரைக் கடலில் இருந்து இங்கு வந்தார்கள்? 

ஏனென்றால், ஏற்கனவே அவர்களோடு நமக்குத் தொடர்பு உண்டு. அங்கு நம் ஆளுமையும் இருந்திருக்கிறது. கி.மு பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னமே ‘பாண்டியா’ என்ற மன்னன் ‘க்ரீட்’ என்ற தீவை ஆண்டிருக்கிறான் என்பதும், அங்கு பேசப்பட்ட மொழி திரமிளை என்பதும், அவன் வம்சம் ‘மீனோவன்’ என்றும் பதிவாகி இருக்கிறது. 

நீங்க பார்த்திங்கன்னா க்ரீக், ரோம், எரித்ரியன் பகுதிகள் மற்றும் சிரியன் பகுதிகளில் தமிழ் வணிகர்களின் ஆளுமை இருந்தது தெளிவாகப் பதிவாகி இருக்கிறது. கடல்வழி வணிகத்தில் இவர்கள்தான் முன்னோடிகள். இவர்கள்தான் பட்டுவழிப் பாதையையும், நிலவழிப் பாதையையும் ஒருங்கிணைத்தார்கள். உலகில் மனிதர்கள் கடலை ஒட்டி வாழ்ந்த இடங்களில் எல்லாம் தமிழர்களுடைய பங்களிப்பு இருக்கிறது.

தமிழர்கள் இயற்கையை அணுகிய முறை? 

பொதுவாகச் சொல்லுவாங்க, முதல் புரிதல் வந்து எப்பிடி வந்ததுனா, மனிதனுக்கு விலங்குகளைப் பற்றிய புரிதல் வந்த பிறகுதான் விலங்குகள் மூலமாகத் தாவரங்களையும், இயற்கையையும், தட்பவெப்ப நிலையையும் அவன் அறிஞ்சுக்கிட்டான் என்று பொதுவான ஒரு கோட்பாடு சொல்லுவாங்க. அந்தக் கோட்பாடு மட்டுமல்லாமல் பல கோட்பாடுகளும் நடந்த இந்த இடம், கடலை வெளியாகக் கொண்ட இந்த நிலம். நீங்க வரைபடத்தைப் பார்க்கிறப்ப இந்த நிலம், குறிப்பா தென்னாட்டுப் பகுதியில் இருக்கிற நிலம் முழுக்க முழுக்கக் கடல் சூழ்ந்த நிலம். நடுவுல வந்து மிக அழகாக மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரும், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரும் சூழ்ந்து பேரழகாக இருக்கிற நிலம்.   

இந்த மலைத் தொடர்களுக்கும் கடலுக்கும் இடையில் வாழ்ந்த மக்கள், அவர்களின் புரிதல், அவர்கள் பெரும்பொழுது, சிறுபொழுதை எப்படிப் பார்த்தாங்க? ஒரு நாளை எப்படி ஆறு பகுதிகளாகப் பிரிச்சாங்க? வருடத்தை எப்படி ஆறு பகுதிகளாகப் பிரிச்சாங்க? அதே நேரத்தில் சூரியனுடைய வட செலவு, தென் செலவு எப்படிப் பார்த்தாங்க? பருவ மாற்றத்தை எப்படிப் புரிஞ்சுக்கிட்டாங்க? அதன் மூலம் வலசைப் பயணம் எப்படிப் போனாங்க? அந்த வலசைப் பயணத்திற்குக் காரணமான நிலத்திலுள்ள யானைகள், காளை மாடுகள், அதே மாதிரி வானத்தில் வலசை போகும் கொக்கு, அன்னம் போன்ற பறவைகளையும், கடலில் உள்ள ஆமைகளின் போக்கையும் எப்படிப் புரிஞ்சுக்கிட்டாங்க? இப்படி பல கோணங்கள் இருக்குது.

குறிப்பாக, நான் சென்ற இடங்களிலெல்லாம் கிடைத்த தமிழ் தொடர்பான தரவுகள், அதனுடைய மேலாண்மை, இந்த மக்களின் திறன் என்னை மேலும் உள்ளார்ந்து போக வைத்தது. நீங்க சொல்லும் தமிழ் என்கிற சொல், அந்த மொழியைக் கொண்டு போனவங்க யார்னு பார்த்தா ‘திரை மீளர்கள்’ என்று சொல்லக்கூடிய கடலோடிகள். கடலோடிகள் என்ற வார்த்தையைவிட உலக நாடுகள் முழுக்க ஒரு பெயர் நல்லா பதிவாயிருக்கிறது.  

‘திரை மீளர்’, ‘திரமிளா’, ‘திரமிரா’ இப்படி நிறையச் சொற்கள் சொல்லலாம். உதாரணமா, இப்ப கிரிட் தீவில் ‘திரமிளை’ என்ற மொழி வழக்கில் இருந்திருக்கு. இலங்கையில் ‘திரமிரா’ என்ற சொல் பதிவாகி இருக்குது. ஒரிசாவில் ‘திரமிளா’ என்ற மன்னன் ஆட்சி நடத்தினதாகக் குறிப்பு இருக்குது. 

இந்த மாதிரி, இந்தச் சொல் - இந்தச் சொல்லுக்கு அடிப்படையான காரணம் இந்த நிலத்தில் பேசப்பட்ட மொழி. இதைக் கொண்டுசென்ற ‘திரை மேல் சென்று மீண்டவர்கள்’ என்று ஆராயும் நிலை ஏற்பட்டது. பொதுவாக, ஆரம்ப காலத்தில் மனிதன் கடல் கடந்து போகப் பயப்பட்டான். காரணம், அதன் பிரமாண்டம். அந்தக் கடல் என்ன தன்மையானது? அதில் என்னென்ன இருக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அப்படி மனிதர்கள் இருந்த சூழ்நிலையில்கூட, அந்தக் கடலில் மேல் நிறையப் பேர் போய் இருக்காங்க. போனவங்க இறந்தும் போய் இருக்காங்க. கடலைத் தாண்டி வேறு நிலம் சென்று அங்கே வாழ்க்கையைக் கழித்தும் இருக்காங்க. 

இந்த மாதிரியான நிலையில், இங்கிருந்து அந்தக் கடலின் மேல் சென்று மீண்டும் வந்த திரைமீளர்கள் எந்த மாதிரியான பாதிப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கணும்!

உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 22,000 தமிழ்ப் பெயர்கள் வழக்கில் இப்பவும் இருக்கு. இதுதான் இந்த மக்களின் திறன். இவர்கள் வெறுமனே கடலோடிகள், மீன் பிடிக்கிறவர்களாக மட்டும் இல்லாமல் ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’, ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்ற வாக்கியங்களுக்கேற்ப வாழ்ந்து இருக்காங்க. 

இவர்கள் சென்ற இடத்தில் எல்லாம் பிரிவினை பார்க்காமல் அந்த இடத்து மக்களோடு கலந்து, அந்த மக்களுக்குத் தங்கள் திறன்களைச் சொல்லிக் கொடுத்து இருக்காங்க! இவர்களைப் பற்றிய தேடலில் மிக மிக அவசியமாக நான் கருதுவது, இந்த மக்கள் யார்? இவர்களின் தனித்தன்மை என்ன? அது எப்படி உலகம் முழுவதும் இப்பவும் பயன்படுகிறது? இவர்களின் திணைக் கோட்பாடு என்ன? என்பதுதான். உங்களுக்கு ஐவகைத் திணைகள் என்று சொன்னாக்கூட புரியாது. ஆனா, திருக்குறளில் ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும்’ என்று வள்ளுவர் எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கார் பாருங்க! இதில் ‘மணிநீர்’ என்பது கடலைக் குறிக்கும். பெரும்பாலும் என்ன பண்றோம்னா, தமிழ் மொழியை இலக்கண இலக்கிய உயர்வைக் கூறி, அதைத் தெய்வ மொழி என்று சொல்லி விட்டுறோம். 

ஆனா, என்னைப் பொறுத்தவரை தமிழ் என்பது வாழ்வியல் மொழியாகப் பார்க்கிறேன். உலகம் முழுக்க கிட்டத்தட்ட 120 மொழிகளில் தமிழோட ஆளுமை இருக்கு! இந்தோ - அரபிய மொழிகளில்கூட தமிழோட தாக்கம் இருக்கு. 14 பிற மொழிகளின் கலப்பு தமிழில் இருக்குது! எப்படி 14 மொழிகள் இங்கு வந்தது? இங்க யார் யார் நம்மை ஆட்சி புரிய வந்தாங்களோ, அவங்களோட மொழி தமிழோடு கலந்தது. இந்தி, உருது, பாரசிகம், சமஸ்கிருதம், ஸ்பானிஷ், போர்ச்சுகீசு, பிரெஞ்ச், ஜெர்மன் என்று எல்லா மொழிகளும் கலந்து இருக்கு. அதனால், இப்போ இந்த மக்கள் பேசக்கூடிய மொழிவழக்கை வைத்துத் தமிழை எடைபோடக் கூடாது. 

தமிழுக்கு மிகப் பெரிய தன்மை இருக்குது. யோசிச்சுப் பாருங்க, ஒரு மொழியில் எப்படி 14 மொழிகள் கலக்க முடியும்? உலகம் முழுக்க தமிழின் தாக்கம் இருந்து, தமிழர்களின் இந்த மண்ணின் பெருமை அறிந்து வெவ்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் இங்கே வந்து இருக்கலாம் இல்லியா! அது மட்டும் இல்ல! தமிழ்நாட்டின் தொன்மையை இப்போ குறித்துள்ளபடி குறிப்பிட்டு, ஒரு எல்லைக்குள் கூற முடியாது.

 நாம் வாழும் இந்தப் பகுதி பற்றிக் கூற வேண்டுமென்றால், 1802இல்தான் கிழக்கிந்தியக் கம்பெனி இந்த நிலத்தை ‘மதராஸ் மாகாணம்’ என்று பெயரிடுறாங்க! அப்போ இதன் எல்லை கிழக்கில் கர்நாடகாவிலிருந்து ஒரிசா வரை பரந்து இருக்குது. அதன் பிறகு 1956 நவம்பரில் ‘சென்னை மாநிலம்’ என்று மாறுது. பரப்பும் சுருங்குது. அது பிறகு 1969இல் மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு உயிரிழப்புகள் நடந்த பிறகு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாறுது. சரி, ஏன் தமிழ்நாடுன்னு பெயர் மாத்தினாங்க? தமிழ் மக்கள் வாழும் இடம் தமிழ்நாடு என்று இலக்கியங்களில் பதிவாகி இருக்குது. அந்த அடிப்படையில்தான் பெயர் மாற்றம் ஆனது. 

சரி, இந்த மக்களின் பின்புலம் என்ன? இவங்க எப்படி உலகை வென்றாங்க? நடந்தே சென்றார்களா? 

இல்லியே! கடல் வழியாப் போனாங்க. உலகம் முழுக்க இவர்களின் பதிவுகள் இருக்குதே! அது ஏன் இப்போ தெரியவில்லை! அதற்கான முக்கியக் காரணம் நமக்கு நமக்கான புவியியல் புரிதல் இல்லை. நமக்கு நம் நில அமைப்பைப் பற்றித் தெளிவான அறிதல் இல்லை. 

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய நில அமைப்பைப் பற்றிப் பேசும்போது கடல் எங்கு இருந்தது? உள்ளே இருந்ததா? வெளியே இருந்ததா? நிலப் பகுதி எங்க இருந்துது? அதை ஆராய்ந்து இருக்கோமா? 

நாம பூம்புகார் கடலில் மூழ்கியது பற்றிப் பேசுறோம். மாமல்லபுரத்தின் ஒரு பகுதி கடலில் மூழ்கியது பற்றிப் பேசுறோம். திருச்செந்தூரின் ஒரு பக்கம் கடலில் மூழ்கியது பற்றிப் பேசுறோம். அதே சமயத்தில, கன்னியாகுமரி கடலில் நிலப் பகுதி கடலில் மூழ்கியிருக்கிறது பற்றிப் பல வகையாகப் பேசுறோம்.

குறிப்பா, கன்னியாகுமரியிலிருந்து மடகாஸ்கர் பகுதி வரை கடலில் மூழ்கியிருக்கும் பகுதியை ‘லெமூரியா கண்டம்’ என்றும், தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் ‘குமரிக் கண்டம்’ என்றும் சொல்றோம். அதையே ‘கடல் கொண்ட தென்னாடு’ என்றும் சொல்றோம். 

இவ்வளவு ஆளுமை நிரம்பிய இந்த இடத்தின் சிறப்பு என்ன? உலக மக்களே பயணம் செய்யப் பயந்த கடலில் பயணம் செய்து, கிழக்கையும் மேற்கையும் இணைத்த இந்த மக்களின் திறன் என்ன? கடலோடிகளின் திறன் என்ன? இவங்க கடல் வழியா என்னென்ன கொண்டு போனாங்க? என்னென்ன கொண்டு வந்தாங்க? இவங்க எப்படி உலக மக்களுக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்தாங்க என்பதுதான் நமது தேடல். 

சென்னையின் பழைய பெயர் திரையர் நாடு. இளந்திரையன் என்ற அரசனே இங்கு மன்னனாக இருந்துள்ளார். திரையர்கள் கடலில் சென்று மீண்டு வந்தால் அவர்களைத் ‘திரைமீளர்கள்’ என்று சொல்வார்கள். இந்தச் சொல் உலகிலேயே தமிழர்களுக்கு மட்டும்தான் உள்ளது. 

‘திரைமீளர்’ என்ற சொல்லை உச்சரிக்கத் தெரியாத பிற இனத்தவா்களால் திரமில, திரவிட, திராவிடா் என்ற சொல்லாகத் திரிந்து போனது. இவ்வாறு, திராவிடா் என்பது இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல என்பதும், இயல்பான பொருளை உணா்த்தும் நேரடியான சொல் அல்ல என்பதும் தெளிவாகிறது.

எனவே, கடலுக்குச் சென்று மீண்டவா்களைக் குறிக்கும் 'திரைமீளா்' என்ற தமிழ்ச் சொல்லின் திரிந்த கொச்சை வடிவமே ‘திராவிடா்’ என்பதாகும்.

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-
*
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக