புது வெளிச்சமும் இருட்டடிப்பும் ஒருசேர : ஏர் மகாராசனின் நூலை முன்வைத்து…
"தமிழ்நாட்டில் எந்தப் புலனாய்வு ஊடகமும் காட்சி ஊடகங்களும்கூடச் செய்திராத ஆய்வை நண்பர் மகாராசன் வெகு குறுகிய காலக்கட்டத்தில் செய்ததோடு, சாதிய அணுகுமுறைகள், செயல்பாடுகள், வன்முறைகள் தமிழகக் கல்விச் சூழலில் எவ்வெவ்வாறெல்லாம் உள்ளன என்பதை விலாவாரியாக விளக்குகிறார். அவர் சொல்லும் செய்திகள் விவரிக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி தரத் தக்கனவாக உள்ளன.
இந்த நூல் கல்விப்புலத்தில் பரவலான வாசிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் ஒரு பரந்துபட்ட விவாதங்கள் அரங்கேற்றப்பட வேண்டும். ஆரோக்கியமான கல்விச்சூழலுக்கான முன்னெடுப்பாகத் தான் இந்த நூலைப் பார்க்க முடிகிறது." - சாவித்திரி கண்ணன்.
'வையம் ' மாதிகை, 'அறம் ' இணையத்தில் வெளியான கட்டுரைகள். நாங்குநேரி படுகொலை எத்தனை கொடூரம்; கல்வி நிலையங்களில் ஊடே தலையெடுத்துள்ள சாதி வன்மம், அது புரையோடித் தலைவிரித்தாடும் அலங்கோலங்கள்; பிள்ளைகளைக் கண்டிக்காத பெற்றோர்களின் பொறுப்பற்ற விட்டேற்றித்தனம், தண்டிக்க இயலாத ஆசிரியர்களின் ஆற்றாமை என பல பக்கங்களையும் வாசிக்கையில் மனம் பதறத்தான் செய்கின்றது.
பூணூலின் வாலான வண்ண வண்ணக் கைக்கயிறுகள், வலைப்பின்னலாகத் தொடரும் வன்கொடுமைகள், ஆசிரியர்களுக்கூடாகவும், பாடத்திட்டத்திலும் ஊடுருவும் நஞ்சூட்டல், அதைத் தடுக்க முறையான சட்ட யாப்பின்மை என, மெய்யாலுமே கல்வி நிறுவன அகச்சூழல் புறச்சூழல் யாவும் இந்நூலின் பேசுபொருளாகி உள்ளன. எனவே இந்நூல் பரவலாகச் சென்றடைய வேண்டிய நூலேயாகும்.
உயர்சாதி என்னாது உயர்த்தப்பட்ட சாதி எனவே கையாள வேண்டும் என்பது சரிதான். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட எனுமாப் போலவே.
பட்டியல் மாற்றக் கோரிக்கையைத் தமது தன்மான வேட்கையாக, தம் மீதான நவீன வடிவில் சுமத்தப்படும் சமூக இழிவாகப் பார்ப்பதாகக் குறிப்பிடுகின்றார். இது ஒரு பகுதி உண்மையே. காட்டாக இத்தகு குரல்கள் தேவேந்திரகுல வேளாளர் என்னும் மள்ளர்கள்; சௌராஷ்ட்ரர்கள் போலும் சாதியின மக்கள் மத்தியில் எழக்கூடியனவாக உள்ளன. இவ்விரு சாதியினர் இடையேயிருந்து தம் பணிவாய்ப்புகளால் மேம்பட்டோர் ஊடேயிருந்துதான் இவ்வாறு குரல் ஒலிக்கக் கேட்கின்றோம்.
சௌராஷ்ட்ர இன மக்களில் பட்டுப்புடைவை வணிகர்களான பெரும் பணக்காரர்களும் உண்டு. ஏழை எளிய நெசவாளிகளே மேலதிகமானோர். அவர்களூடே இருதார மணவாழ்க்கை சகஜமே. மூவர் இணைந்த குடும்பமாய் இல்லத்திலே தறியோடும் நெசவு வாழ்க்கைக் குடும்பப் பொருளாதார நிர்ப்பந்தமாக அம்மக்களிடையே காணக்கிடக்கின்றது.
மதுரையில் காங்கிரஸ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இத்தகு சௌராஷ்ட்ர பணக்காரப் பிரமுகர் ஏற்பாட்டில் அவர்கள் இவ்வாறு குரலெழுப்பி ஊர்வலம் வந்தனர். என் கேள்வி இதுதான். இது எவ்வாறு சௌராஷ்ட்டிர இனத்தாரின் ஒட்டுமொத்தக் குரலாக ஆதல் கூடும் என்பதே.
ஆண்ட பரம்பரை வாரிசுகளாகப் புதிய தொன்மங்களைப் படைத்து, அதனையே தம் வரலாறென முன்வைக்கலாகின்றனர். எனவே இது ஒருவகையில் 'சங்கதமயமாதற் (மேனிலையாக்கப்) போக்கே எனலாம். நிலைகுடிகள் தவிர்த்த அலைகுடி வாணர் இடையே இத்தகு மனோபாவங்கள் காணக்கிடையா.
இந்நூலின் சில மௌனங்கள் குறித்தும் இதே மூச்சில் பேசியாக வேண்டியுள்ளது. கல்வி நிலையங்களிடையே பேராசிரியர்கள் மத்தியிலும் நிலவும் சாதியாதிக்க மனோபாவங்கள் குறித்த சோ.தர்மன் கருத்துக்களை இந்நூலில் எடுத்தாளும் நூலாசிரியர், மோடி தாடியில் பெரியாரைக் காணவல்ல அவரின் சங்கிச்சாய்வு அரசியல் குறித்துச் சாதிப்பது மௌனமே.
"மோடி அரசின் செயல்பாடுகளைச் சிலாகிக்கும் சோ.தருமன், மாலன் நாராயணன் போன்ற எழுத்தாளர்கள் இன்றைக்கு மாநில, மைய அரசின் வணிக நோக்கினால், ஊழலினால் உயர்கல்வித்துறை எவ்வளவு சீரழிந்திருக்கிறது என்பதை முதலில் எழுத வேண்டும். தமிழக அரசும் இதில் விதி விலக்கு அல்ல."
அண்ணல் அம்பேத்கரை சாதித்தலைவராக முன்னிறுத்தும் போக்கை நூலாசிரியர் கடிந்துரைத்து, அதற்கப்பாலாக ஒட்டுமொத்த சமூக விடுதலைக்குப் பாடாற்றும் தலைவராக இனங்காணக்கூடிய நூலாசிரியரே! அவ்வாறே பிற்படுத்தப்பட்ட இடைநிலைச் சாதியினர்க்கான தலைவராகப் பெரியாரைத் திரித்துரைக்கும் போக்கைக் குறித்தும் ஏன் பேசவில்லை?
இத்தகு மௌனம் யாவும் நூலாசிரியரின் திராவிட இயக்க ஒவ்வாமை வெளிப்பாடுகளே எனலாம்.
இத்தொடர்பில், நேர்மையான ஊதியம் வேண்டாப் பணியை மேற்கொண்ட நீதியரசர் சந்துருவிடம் இத்தொடர்பிலான விசாரணைக் கமிசன் நியமனம் அரசால் நியமிக்கப்பட்டுள்ளதும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்பதற்கு நம்பகமானதே.
வெ.மு.பொதியவெற்பன்,
ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர்.
*
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு:
ஆதி பதிப்பகம்
99948 80005.
அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக