புதன், 11 அக்டோபர், 2023

சம காலத்தில் வெளிவந்துள்ள மிக முக்கியமான நூல் : கண்மணி ராசா


தமிழ்நாட்டில் சமூக அக்கறையுள்ள அனைவரையும் உலுக்கிய சம்பவம், நாங்குநேரியில் நடந்த பட்டியலினச் சமூக‌‌ மாணவனின் மீது மாற்று சாதி சக மாணவர்களே நடத்திய வன்கொலைத் தாக்குதல்.

இதற்கு முன் இங்கு சாதீய மோதல்களே இல்லையா என்றால், உண்டு. ஆனால், சிறார்கள் வரை சாதீய வெறி ஊடுருவும் இந்தக் காலம் கொடுங்காலம்.

தம் பால்யத்தின் எந்தக் கணத்தில் இவர்கள் சாதிய வெறியராக மாறுகிறார்கள்....? இதற்கெல்லாம் யார்/எது காரணம்...? நம் பள்ளிகளால்/ஆசிரியர்களால் இவர்களை ஏன் மாற்றமுடிவதில்லை....?

நாங்குநேரிச் சம்பவம் உட்பட பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் அனைத்துத் தாக்குதல்களின் பின்புறமும் உயர்த்திக்கொண்ட அல்லது அவ்வாறு நினைத்துக் கொண்ட சாதியினரின் சாதீய மனோபாவம் மட்டுமல்ல, பொருளாதார நலன்களும் அடங்கியுள்ளதை ஏன் நாம் பேசுவதில்லை...?

படிப்பு என்பது தேவையில்லை. தொழிலைக் கற்றுக் கொள்க. பொறியியல் கல்வியெல்லாம் பயனற்றது. எல்லாரும் டாக்டராகத்தான் ஆகனுமா...?கிராமத்தில் ஆடு மாடுகளோடு இயற்கை சூழ வாழ்ந்து லாபம் கொழிக்கச் சம்பாதிக்கலாம்... என்றெல்லாம் விதவிதமான கேள்விகள் நம்மை நோக்கி, நம் குழந்தைகளை நோக்கி எழுவதன் அரசியல் என்ன...?

எனக்கு....அவனுக்கு... இவனுக்கு.... உனக்கு என எல்லோருக்கும் ஒரே மாதிரியான தேர்வுகள் என்பது எப்படிச் சரியாக இருக்கும்...?

தேர்வு என்பது மாணவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லவா....? கழித்துக் கட்டி விரட்டி அடிக்கவா...?

தேர்வில் தோல்வி எனப் பள்ளியிலிருந்து ஒதுக்கப்படும் மாணவன், மது/போதை இவற்றோடு சுயசாதிக் கும்பல் போதையும் சேர்ந்து கொள்ள சமூக உதிரியாகப் போவான்...என்பதை நாம் எப்போது கவனிப்போம்...?

சாதீய வெறி மாணவர்/ஆசிரியர்/பேராசிரியர்/தாளாளர்/அதிகாரிகள்...எனக் கல்வித் துறையின் சகல திக்கும் ஊடுருவியுள்ளதை உணர்கிறோமா...?

இத்தகைய கேள்விகளை முன் வைத்து மிக விரிவாக அலசியுள்ளது ஆசிரியர் ஏர் மகாராசன் அவர்கள் எழுதி, ஆதி பதிப்பகம் வெளியிட்டுள்ள "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" கட்டுரை நூல். சமகாலத்தில், தேவையான நேரத்தில் வந்துள்ள மிக முக்கியமான ஆய்வு நூல்.

கட்டுரையாளர்:
கவிஞர் கண்மணி ராசா,
எழுத்தாளர்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
இராசபாளையம்.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக