ஞாயிறு, 22 அக்டோபர், 2017

செம்புலம்.


மெய்யும் பொய்யுமாய்ப்
பேசிச் சிரித்து,
பூவிதழ் வாசத்தை
நாசிகள் குடித்து,
எச்சில் சொற்களை
நாவுகள் எழுதி,
மெய்கள் நெய்த நரம்புகள்
இசைத்துக் கிடந்ததில்
செவ்வரி வரைந்தன
கண்கள்.

கண்மாய்த் தலவில் மறுகும்
செவல்காட்டு ஓடைத் தண்ணீராய்
அய்ம்புலமும் செம்புலமாகி
ஊடல் முறித்த பொழுதுகளில்
சிலிர்த்துச் சிரித்தது
வாழ்க்கை.

பெயல்நீர் சுவைத்துப்
பசப்பை ஈன்றது
செவல் காடு.

குறுக்குச் சால் அரசியலும் தமிழ்த் தேசிய அரசியலும்.


அனிதாவைத் தமிழச்சியாக நெஞ்சில் பதித்துக் கொண்டு தான் மாணவர்கள் போராடுகிறார்கள். 
அனிதாவின் கனவைத் தமிழ்த் தேசிய இனத்தின் கனவாகத்தான் பார்க்கிறார்கள்.
உயர்த்திக் கொண்ட சாதிப் பிள்ளைகளும், ஒடுக்கப்பட்ட சாதிகளின் பிள்ளைகளும் தமிழ்ப் பிள்ளைகளாய்க் கைகள் கோர்த்திருக்கும் களமாய்த் தமிழ் நிலம் மாறிக் கொண்டிருக்கிறது.
கூடங்குளம், தமுக்கம், மெரினா, நெடுவாசல், கதிராமங்கலம் என்று பரந்து விரிகிறது தமிழ்த் தேசிய அரசியல் உணர்வு.
இப்படி, சாதியைக் கடந்து தமிழர் என்ற பேருணர்ச்சி உருவாகும் போது தான் தலித்திய அடையாள அரசியல் பேசுவோர் தமிழ்த் தேசிய வெறுப்பு அரசியலை உமிழ்ந்து குறுக்குச் சால் ஓட்டுவார்கள்.
அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களை உள்வாங்கி சுயவிமர்சனம் செய்து கொள்வது தமிழ்த் தேசியத்தின் முன் நிபந்தனை தான். இந்த விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் தமிழ்த் தேசியம் நகர முடியாது தான். ஆனால், தமிழ்த் தேசியத்தின் மீதான வெறுப்பும் காழ்ப்பும் மட்டுமே விமர்சனங்களாக ஆகிவிடுமா?
சாதியம் தமிழ்த் தேசியத்தின் தீர்க்க வேண்டிய பிரச்சினை தான். இது ஒரு தரப்பினரால் மட்டும் தீர்க்கும் அல்லது தீர்ந்து போகும் பிரச்சினையும் அல்ல. இரு தரப்பினரும் தீர்க்கும் பிரச்சினைகள் தமிழ்த் தேசியத்தில் உண்டு. இந்நிலையில், இரு தரப்பும் அய்க்கியப்பட்டுக் கொள்ளவிடாமல் அந்நியப்படுத்தும் போக்குகள் சாதியவாதிகளிடம் இருப்பதைப் போலவே, தலித்திய அடையாள அரசியல் பேசுவோரிடமும் இப்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்குப் பேர்தான் குறுக்குச் சால் அரசியல் என்பது.
இது போன்ற குறுக்குச்சால் வாதங்கள் இருக்கும் வரை தமிழ்த் தேசியம் எட்டாக்கனி தான்.
ஆயினும்,
உயர் சாதித் திமிரை ஒழித்துக்கட்டுவதும் உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவதும் நடந்தே தீரும்.
இது நடக்கக் கூடாது என சாதியவாதிகள் நினைப்பதுபோலத்தான், தலித்தியம் பேசுவோரும் நினைக்கின்றனர்.
ஆயினும்,
தமிழ்த் தேசியத்தை இவர்களது கைகளால் மறைத்து விட முடியாது. அது, வெறும் கற்பனையானதும் கிடையாது.

ஈசப்பால்.


தட்டான்கள் தாழப் பறந்து
தப்பாமல் மழை பெய்து
நிலமெல்லாம் குளிர்ந்து கிடக்கும்
வெயில் பொழுதுகளின்
புழுதிக் காட்டில்
குறுக்கும் நெடுக்குமாய்ப் பறந்தன
கரிச்சான் குருவிகள்.

ஈச ஈசானே
ஈசக் கரையானே
ஙொப்பனும் ஙோத்தாளும்
தண்ணிக் கரையீல
செத்துக் கெடக்காக..
சில்லானக் கூட்டிக்கிட்டு
சிலுக்கு சிலுக்குனு ஓடியாவென்ற
உதடுகள் குவித்த
ஊதலிசை கேட்டு
மொது மொதுவெனப்
புற்றுவாயில் பூத்தன
ஈசல்கள்.

மண்ணின் அருவிபோல்
முன்டியடித்துப் பூத்து
சட்டென மேலே பறந்து
இறக்கை உதிரக்
கீழே விழுந்து
அம்மணமாய் ஊர்ந்து திரிந்தன.
ஈசல் வயிற்றுப்
பால் கவுச்சியில்
கசிந்து கிடந்தது
நிலத்தாளின் முலைப்பால்.

தவிப்பு.


முன்னத்தி ஏராய்
சால் பிடித்த
அப்பாவின் உழவுகள்,
நிலத்தில் வரைந்த
கோட்டோவியங்கள்.

வியர்வை கோதிய
தளர் மண்ணில்
ஈரம் பருகிய விதைப்புகள்,
அம்மா வரைந்த
வெள் முளைக் கோலங்கள்.

உழைப்புச் சொற்களால்
நிலத்தை எழுதிப் போன
அப்பனும் ஆத்தாளும்
நெடும்பனைக்
காடு நினைத்தே
தவித்துக் கிடப்பார்கள்
மண்ணுக்குள்.

மனுசியின் ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்

இளம் எழுத்தாளராய்ப் பயணிக்கத் தொடங்கிய காலத்திலேயே விருது பெற்றிருக்கும் மனுசியைப் பாராட்டிப் பேசும் வாய்ப்பை மனுசியின் ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் நூலே தந்திருக்கிறது.

காதலை, காமத்தை, நட்பை, ஆண் துணை இன்மைமையை, நண்பர் பிரிவை, நண்பர் மரணத்தை, நட்பின் ஊடலை என பெண் ஆண் உறவுகளின் உணர்வோட்டத்தைக் கவிதைகளில் புலப்படுத்தியிருக்கும் மனுசியின் கவிதை மொழியானது தமிழின் பெண் மொழி மரபைக் கட்டமைத்த வெள்ளி வீதியார், அவ்வை, புனிதவதியார், நாச்சியார், உத்திர நல்லூர் நங்கை, ஆவுடையக்காள் போன்றோரின் கவிதை மரபைப் பின்பற்றி நவீனப் பெண் மொழியாய் வடிவம் பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மனுசியின் மிகப் பெரும் பலமாய் அமைந்திருப்பது மிக இலகுவானதும் எளிமையானதுமான நேர்த்தியானதுமான மொழிப் புலப்பாடு தான். அதே போல, கவிதைப் பாடுபொருளுக்குத் தேர்ந்து கொண்ட களங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை. பெண்ணின் தன்னிலைப் பாடுகளை மட்டுமே கவிதையாக்காமல், சமூகத்தின் இதரப் பாடுகளையும் கவிதையின் பாடுபொருளாகக் கட்டமைத்திருப்பது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியது.

காவிமய எதிர்ப்பு, உணவுப் பண்பாட்டு உரிமை ஆதரவு, ஈழ விடுதலை ஆதரவு, மரண தண்டனை எதிர்ப்பு, சாதிய ஆணவப் படுகொலை எதிர்ப்பு, இயற்கை வளச் சுரண்டல் எதிர்ப்பு, சாதிய மற்றும் பெண் ஒடுக்குமுறை எதிர்ப்பு எனப் பல வகை எதிர் மரபுக் கதையாடல்களையும் மாற்று மரபுக் கதையாடல்களையும் முன்வைத்திருப்பது மனுசியைப் பெண் கவிஞராக மட்டுமல்ல, சமூகப் பொறுப்புணர்வு மிக்க கவிஞராகவும் அடையாளப்படுத்தி இருக்கிறது.

உயிர்த்தறுப்புகள்


நிலமே கதியென்று
உழைத்துக் கிடந்தவர்களின்
கையளவுக் காணிகளை
அதிகாரக் களவாணிகள்
களவாடிய பின்பும்,
குத்தகை வாரத்துக்கும்
கொத்துக்கும் கூலிக்குமாய்
உழைத்து மாய்ந்திடத்
தஞ்சமடைந்த ஆவிகளின்
தொப்பூள்க் கொடிகள் யாவும்
அந்த நிலத்தையே தான்
சுற்றிக் கிடந்தன.

கருதறுப்பு
களம் மாறிப் போனாலும்,
கழுத்தறுப்பு இழவுகள்
பல சுமந்தாலும்,
நிலத்தறுப்பு பொறுக்காது
மாங்கு மாங்கென்று
உழைத்த மேழியரின்
உயிர்த்தறுத்துக் கொன்ற
அதிகாரப் பயங்கரவாதம்,
கீழ்வெண்மணித் தீயாக
எரிந்து கொண்டிருக்கிறது;
தாமிரபரணி ஆறாக
ஓடிக் கொண்டிருக்கிறது
இன்னும்.
*
ஏர் மகாராசன்

காலடித் தடம்.


ஒத்தையடிப் பாதையில்
முன்னத்திலும் பின்னத்திலுமாய்
நிழல் கோதிப் பயணித்த
கால் தடங்களில்
புற்கள் முளைக்கத்
தயங்கிக் கிடக்கின்றன
மண் அப்பிய
பாதங்களை நினைத்து.

அகலப் பரப்பியிருக்கும்
நெடும் பாதைகளில்
தனித்தலையும் பயணிகள்
தேடும் பாதையைத்
தொலைத்துத் தவிக்கிறார்கள்.

காலம்
மனிதத் தடங்களை
அழித்துக் கொண்டே வந்தாலும்,
தொட்டில்களுக்குள் உதைத்துக் கொண்டு
கதைகள் பேசுகின்றன
இளம் பாதங்கள்.

நிலப் படுகொலை.


குடிக்கத் தண்ணீரும்
வடிக்கச் சோறும்
ஈன்று புறம் தரும்
நிலத்தாளின் நெஞ்சாங்குழியில்
துளைகள் பல போட்டு
உயிரை உறிஞ்சிச் சாகடிக்கும்
கொத்துக் குழிகள்
நிலப் படுகொலையின்
படு களங்கள்.

நிலம் காக்க
இங்குமோர் இனம்
அழுது கொண்டிருக்கிறது
இப்போது.

உப்பளக் காணி.


கூடுகள் கட்டிக் கொள்ள
ஈந்த கிளைகளின் நிழலைச்
சேதாரப்படுத்திப் போயின
வன் பருந்துகள்.
இறுகிய வன்றெக்கை முகத்திலிருந்து
தெறித்த பார்வைக் கங்குகள்
மனக் கூட்டின் ஆவியைச்
சுட்டுப் போட்டது.

இறக்கை முளைக்காத
இளங் குஞ்சுகள்
பிய்ந்த கூட்டுக்குள்
ஒடுங்கிக் கிடக்கின்றன.

கொத்தப்பட்ட காயத்தைச்
சொல்லிச் சொல்லி
மடி நனைக்க
தேக்கி வைத்த
அழுகை ஈரம்,
வெறுங் காற்றில்
உலர்ந்து போனது
உப்பளக் காணியில்
உழுது போட்ட தொளி போல.

வாழ்க்கைப் பாடு.


மாடுகள் இழுத்து
சக்கரங்கள் உருளும்
கட்டை வண்டிகளின் பின்னே கால்கள் உராயப்
பாரம் தொங்கிப் பயணிக்கையில்
வாழ்வின் பாரம்
இறங்கிக் கொண்டது.

கோடையில் வற்றிய கண்மாய்க் களிமண் பிசைந்து
காளைகள் வனைந்து
குண்டு மணிகளால்
கண்கள் ஒட்டுகையில்
உயிர் பெற்ற காளைகள் தழுவிக் கொண்டன.

கருவேல முள்ளில்
பனையோலை துளைத்து
ஓடிச் சுழற்றி
கன்னங்களை வருடும் காற்று
மூச்சில் நுழைந்து
வெக்கை தணித்தது.

ஈக்கிகள் சொறுகப்
பனைகள் ஏறி
குழை நொங்குக் கண்களை நோண்டித் தின்று,
நொங்கு வண்டியை
கவ்வையில் உருட்டியதில்
பாதைகள் தெரிந்தன நிறைய.

ஈச்ச மர இலைகள் கிள்ளி
உள்ளங் கைகளில்
சுருட்டி ஊதிய பீப்பிகள்
இசை கற்றுத் தந்து போயின.

அலைந்து திரிந்த வெய்யிலில்
நிழல் அள்ளிப் பருகியபோது
இனித்துக் கிடந்தது
வாழ்க்கை.

மண்ணோடு மண்ணாய்
புழுதி படிந்த காலமே
வாழ்வெனத் தெரிகிறது இப்போது.

அதுவே வாழ்க்கை

இதுவே பிறந்த நாளாகட்டும்.


அஞ்சாவது படிச்சு முடிக்கிற வரைக்கும் எனது பிறந்த நாள் இதுவெனத் தெரியாது. உள்ளூர்ப் பள்ளிக்கூடத்துல அஞ்சாவதுக்கு மேலப் படிப்பு கெடயாதுங்குறதுனால, ஆறாவது மேக் கொண்டு படிக்கத் தோதாக ரெக்காடு சீட்டுங்கிறது தரப்போறதாச் சொல்லி வீட்லருந்து அப்பனையோ ஆத்தாவையோ கூட்டி வரச் சொன்னாரு பெரிய வாத்தியாரு.
வயக்காட்டுக்குக் கெளம்பிக்கிட்டுருந்த அம்மாகிட்ட போயி நெலவரத்தச் சொன்னப்போ, கஞ்சித் தூக்கு வாளியோடயே பள்ளிக்கூடத்துக்கு வந்தா அம்மா. பெரிய வாத்தியாரப் பாத்த ஒடனே வணக்கமுங்கய்யான்னு சொன்னதோடேயே ரெண்டு கையெடுத்தும் கும்பிட்டா.
ஒங்க பய்யன மேக் கொண்டு படிக்க வையுங்கம்மான்னு சொல்லிக் கொண்டே அம்மாவோட எடது கைப் பெருவிரலப் பாத்து இங்க கொண்டாங்கன்னு சொல்லி ரெண்டு எடத்துல ரேக வச்சு எடுத்தாரு. அந்தப் பொத்தகத்துலருந்து ஒரு பாகத்த கிழிச்சு எங் கையில கொடுத்து நல்லா படிக்கனுமுடா மகராசான்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, அம்மா கண்ணுல பொல பொலன்ன்னு கண்ணீரு வந்துருச்சு.
நாங்க தாய்யா கை நாட்டா இருந்து கருமாயப்படுறோம். எம் புள்ளயாவது படிச்சு ஆளாகனுமுங்கய்யா, நீங்க தான் இவன எங்கயாச்சும் சேத்து விடுனும்னு சொல்லி முடிச்சா. பக்கத்து ஊர்ப் பள்ளிக்கூடத்துக்குப் போயி இதக் குடுத்துச் சேருங்கன்னு சொல்லி அனுப்பி வச்சாரு.
வாடா தம்பின்னு கையப் புடிச்சி அழைச்சா அம்மா. ஒங்க அப்பங்கிட்ட போயி இந்த நெலவரத்த ஒழுங்கா சொல்லனுமுடா தம்பி, வீட்டுக்குப் போயி கஞ்சியக் குடுச்சுப்புட்டு வயக்காட்டுக்கு வந்துருப்பான்னு சொல்லிப்புட்டு குறுக்குப் பாத யில நடந்து போயிட்டா.
வீட்டுக்கு வந்ததுமே மஞ்சப்பய்யில கொண்டாந்தத எடுத்துப் பாத்தேன். பதிவுத் தாள்னு பெருசா அச்சாகி இருந்துச்சு. எம் பேரு அவ்ளோ அழகா எழுதி இருந்துச்சு. பிறந்த நாள்ங்கிறதுக்கு நேரா 26.05.1978 ன்னு எழுதி இருந்தது. வீட்டுச் சொவுத்துல தொங்கிக்கிட்டு இருந்த நாக் காட்டித் தாளுலயும் 26.05.88 என்று இருந்தது. அன்னிக்குத் தான் என்னோட பிறந்த நாள் இதுவென்றே தெரிந்தது. மனசுக்குள்ள அவ்ளோ உற்சாகம்.
நம்மளோட பொறந்த நாள் இன்னிக்குத் தான்டான்னு நெனச்சு மனசு அப்டி ஒரு குதி குதிச்சுக்கிட்டே இருந்துச்சு. அஞ்சு காசு பத்து காசுமா மண்ணு உண்டியலுல சேத்து வச்ச காச வெளக்க மாத்துக்குச்சிய வச்சு நோண்டி எடுத்ததுல கொஞ்ச காசு சேந்துச்சு. நேராப் பொட்டிக் கடயில போயி ரெண்டு கை நெறயா ஆரஞ்சு மிட்டாய்கள வாங்கிக்கிட்டு நடயக் கட்டுனேன்.
கோட்டப் புஞ்சப் பாதயில நடந்து போயிக்கிட்டே ஒவ்வொரு மிட்டாயா வாயில போட்டு சப்பிக்கிட்டே போனதுல முக்கா மிட்டாய்களும் தீர்ந்து போச்சு. வயக்காட்டுத் தலவு வந்ததுக்கப்புறந்தான் அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் கொடுக்கனும்னு தோணுச்சு. போறப்பவே, கடலச் செடிக்குத் தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருந்தாரு அப்பா.
வாய்க்கால்ல தண்ணி வரத்துக் கொறஞ்சு போனதப் பாத்தவரு, அங்கிட்டு வா மட எதுவும் ஒடஞ்சிருந்தா அடச்சுப்புட்டு வாடான்னு சொன்னாரு அப்பா. ரெண்டாவது பாத்தியில வாமட ஒடஞ்சி தான் இருந்துச்சு. கையில மிட்டாயி இருந்ததுனால, காலால மண்ணள்ளி அடச்சுக்கிட்டே இருந்தேன். வாய்க்காத் தண்ணி பொருமி வந்ததால கால் மண்ணு கரைஞ்சுக்கிட்டே இருந்துச்சு.
இதப் பாத்த அப்பனுக்குக் கடுப்பு வந்து, கையில மண்ணெடுத்து அடடா பேப்பயலேன்னு கத்துனாரு. கொண்டாந்த மிட்டாய வாயில போடவும் மனசில்ல, வரப்புல வைக்கோவும் மனசில்ல.
வாய்க்காத் தண்ணியிலேயே தளக் பொளக்னு ஓடிப்போயி அப்பாக்கிட்ட நாளஞ்சு ஆரஞ்சு மிட்டாய நீட்டி, அப்பா இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள்பானு சொன்னேன். எதாவது நமக்கு வாழ்த்துச் சொல்வாருனு பாத்தா, ஒடஞ்ச வா மடய அடைக்கிறத விட்டுப் புட்டு வந்ததுமில்லாமப் பொறந்த நாளு பொடலங்கா நாளுன்னு சொல்லிக்கிட்டு ஓடியார. ஒன்னயலாம் ஒதைக்கனும்டான்னு சொல்லி மம்பட்டியத் தூக்குனாரு. பயந்து போயி வாய்க்கா தண்ணிக்குள்ளேயே விழுந்துட்டேன். அப்பாவும் பதறியடிச்சுத் தூக்கி விட்டு சேறெல்லாத்தையும் அலசி விட்டாரு.
உள்ளங்கையில இருந்த மிட்டாயி பூராம் நனஞ்சே போச்சு. முட்டி முட்டி அழுகையா வந்துச்சு. அழுதே விட்டேன். கண்ணீரத் தொடச்சு விட்டு அப்பா கேட்டாரு, வைகாசி மாசத்துல போயி இன்னிக்குப் பொறந்த நாள்னு யாருப்பா சொன்னதுன்னு. பள்ளிக் கோடத்து ரெக்காடு சீட்டுல இருக்குன்னு சொன்னேன். இன்னிக்கி இல்லப்பா ஒன்னோட பிறந்த நாள்னு சொல்லி ஒட வாமடய அடைக்கப் போயிட்டாரு. நானும் மனசுக்குள்ள அழுதுக்கிட்டே கெணத்துக் குடிசைக்குப் போனேன்.
பழுத்து விழுந்திருந்த தென்னங்கீத்தைக் கிழித்துக் கொண்டிருந்தாள் அம்மா. மொகம் கொறாவிப் போயிருந்த என்னைப் பாத்து அவளும் கலங்கிப் போனாள். நான் என்னிக்கிமா பொறந்தேன்னு கேட்டேன்.
காத்திக மாசம் வெளக்குப் போட்ட அன்னிக்கி வெள்ளிக் கெழம பொறந்தே. அன்னிக்குச் சரியான மழ. நம்ம வீட்டுப் பசு மாடு ரெண்டு கன்னு ஈனுச்சு தம்பின்னு பெரும பொங்கப் பேசுனா. அது என்னிக்கினு தெரியுமான்னு கேக்கவும், அதாந்தம்பி திருக்கார்த்திகையன்னிக்கினு திரும்பவும் சொன்னா.
என்னோட பொறந்த நாள எழுதியே வக்கிலியா? இன்னிக்கி பொறந்ததா ரெக்காடு சீட்டுல இருக்குன்னு சொன்னப்ப, இந்த மாசத்துல நீ பொறக்கலாப்பான்னு பட்டுனு சொல்லிப்புட்டா. எனக்கு அழுகை அழுகையா வந்தது. வாயில் தின்றிருந்த மிட்டாய்கள் கசப்பது போலவே இருந்தது.
பிறந்த நாள் இதுவென்று தெரிந்த அந்த நாளே இது பிறந்த நாள் அல்ல என்று தெரிந்த நாளும் அது தான். ஒரு நாளுக்காக நான் அதிகமாய் அழுததும் காயம் பட்டதும் அது தான்.
பிறந்த நாள் என்று எழுதியிருக்கிற அந்த நாளின் மீது எந்தப் பற்றுதலும் பிடிப்பும் ஈர்ப்பும் ஒட்டுதலும் இல்லாமல் போயிற்று. என்றாலும் என் பிற்காலத்திய ஆவணப் பதிவுகள் அனைத்திலும் இன்றைய நாளே பிறந்த நாளாகப் பதியப்பட்டிருக்கிறது. பிறந்த நாள் இதுவல்ல என்றான பிறகு இந்த நாளை மனதார ஏற்றுக் கொள்ளாமலே தான் இதுவரையிலும் இருந்தேன். அன்றிலிருந்து இன்று வரையிலுமே எனது பிறந்த நாள் இதுவென்று நான் கருதியதுமில்லை, கொண்டாடியதும் இல்லை. நண்பர்கள், உறவுகள், மனைவி, பிள்ளைகள் என எவருக்குமே இந்நாள் பிறந்த நாள் என்று தெரியாது. நானும் இதுவரை சொல்லியதில்லை.
வாழுகிற வாழ்க்கையைப் பொருளுடையதாக ஆக்குகிற ஒவ்வொரு நாளும் கூட நமக்குப் பிறந்த நாள் தான் என்றேதான் இதுவரையில் நினைத்திருந்தேன். இனிமேலும் அப்படித்தான். எனினும், தாய் கொடையளித்த நாள் எதுவென்றே தெரியாமல் போயிற்று.
ஆனாலும், பிறந்த நாள் இதுவென்று பதிந்திருக்கும் இந்நாளில் முகநூல், புலனம், குறுஞ்செய்தி, செல்பேசி அழைப்புகள் வாயிலாகப் பிறந்த நாள் வாழ்த்தையும் அன்பையும் பகிர்ந்திருக்கும் தோழமை உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என உள்மனம் சொல்கிறது. ஆகையால், இன்றிலிருந்து இந்த நாளையே பிறந்த நாளாக மனதார ஏற்றுக் கொள்கிறேன்.
இந்த நாளில் எனக்கு வாழ்த்தையும் அன்பையும் பகிர்ந்திருக்கும் அனைவருக்குமே எனது அன்பும் நன்றியுமே கைமாறு.
இந்த நாளை, பொருளுடையதாக்கும் வகையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு எனது உடலைக் கொடையளிக்கும் வகையில் உறுதி மொழிப் படிவம் வாங்கி வந்திருக்கிறேன்.
உங்களது வாழ்த்தோடு இந்த நாளைப் பொருளுடைய நாளாக ஆக்கி இருக்கிறேன்.

செவ்வாய், 10 அக்டோபர், 2017

ஒரு பண்பாட்டு எழுச்சிக்குள் பன்மைப் பண்பாடுகளின் எழுச்சி.





நான் பிறந்து வளர்ந்ததும் கல்வி பயின்றதும் மதுரையைச் சுற்றியது என்றாலும் கூட, பணி நிமித்தமாகத் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியும் இடம் பெயர்ந்தும் குடும்பச் சூழலைத் தகவமைத்துக் கொண்டேதான் வந்திருக்கிறேன். அதனால்தான் புதிய புதிய நிலச் சூழலையும் வாழ்வியலையும் மனிதர்களையும் பண்பாடுகளையும் உள்வாங்கிக் கற்றுக் கொள்ளவும் பகிரவுமான வாய்ப்புகள் நிறையக் கிடைத்திருக்கின்றன. பெரும்பாலும் சிற்றூர்ப்புறங்களைச் சார்ந்தே எனது வெளியை நெருக்கப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த முனைப்புதான் பண்பாட்டுப் பன்மை வெளிகளை இன்னும் நெருக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

தமிழ் நிலம் பன்மைப்பட்ட சூழல் வெளிகளைக் கொண்டிருக்கிறது. இந்தப் பன்மை வெளிதான் பல்வேறுபட்ட மனிதக்குழுக்களை, இனக்குழுக்களை, சாதிகளைத் தகவமைத்துத் தகவமைத்து இனம் என்கிற வளர்ச்சிக்கட்டம் உருவாகக் களத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.  தமிழர் என்கிற தேசிய இனத்தின் அடையாளம் என்பது பன்மை அடையாளங்களின் கூட்டுத் தொகுப்பு தான். இந்தப் பன்மை அடையாளங்களின் கூட்டுறவும் உயிர்ப்பும்தான் தேசிய அடையாளத்திற்கு வலுவையும் வாழ்வையும் அளித்துக் கொண்டிருக்கின்றன. 

இன்றைக்கு நாம் அடையாளப்படுத்துகிற தேசிய இனத்தின் அடையாளங்கள் பன்மை வெளியின் ஏதாவதோர் அடையாளங்கள்தான். அதிலும் குறிப்பாக, ஒன்றின் அடையாளத்தை மற்றவையும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தால் மட்டுமே அது தேசிய இனத்தின் அடையாளமாய் ஏற்பிசைவு பெற்றிருக்க முடியும். அந்த வகையில், பன்மை வெளியில் செழித்து வளர்ந்து வந்த – வளர்ந்து வருகிற தேசிய இனத்தின் பண்பாட்டு அடையாளங்கள் நிறைய உண்டு. அவற்றுள், ஏறு தழுவல் என்கிற மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாடும் உள்ளடங்கும்.

பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் எனும் கலித்தொகைச் சொல்லாடல் உயிர்ப்பாய் எழுச்சி பெற்றதைத் தனித்த ஒரு பண்பாட்டின் எழுச்சியாக மட்டுமே பார்க்க முடியாது. தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிற  பன்மைப் பண்பாடுகளின் கூட்டு எழுச்சியாகவும் பார்க்கப்பட வேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற திணை மரபுகளும் நிலச் சூழலும் பொழுதுகளும் கருப்பொருட்களும் உரிப்பொருட்களுமேகூட பன்மையின் கூட்டுத் தொகுப்பாகத்தான் தமிழ் மரபில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

விலங்கினங்களில் மாடுகள் மட்டும்தான் மனிதர்களோடு நெருக்கமாய் உறவாடும் குணவியல்புகளைப் பெற்றிருக்கின்றன. அதனால்தான், அவை குறிஞ்சி முல்லை மருதம் பாலை என்கிற நால் நிலத்து மனிதர்களின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் பண்பாட்டுப் புலப்பாடுகளோடும் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. (இதைக் குறித்த விரிவான தரவுகள் நான் எழுதியிருக்கும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் என்கிற நூலில் உள்ளன.) அதனால்தான், மாடு தழுவல் குறித்த நிகழ்த்துப் பண்பாட்டிற்கான மீட்பெழுச்சி தமிழ் நிலம் முழுமையிலும் மட்டுமல்லாமல் தமிழர் வாழ்கிற அயலக மண்ணிலும்கூட எழுந்து முடிந்திருக்கிறது.

மாடு தழுவல் பண்பாட்டைத் தடை செய்வதில் உலக வல்லாதிக்கப் பொருளியல் நிறுவனங்கள் குறியாய் இருந்தன. இந்திய அதிகார நிறுவனங்களும் இதற்குத் துணை நின்றன. மாடு தழுவல் பண்பாட்டைத் தடை செய்வதற்குப் பின்னால் அவற்றுக்குத் திட்டவட்டமான பொருளியல் சுரண்டலும் பண்பாட்டு மேலாதிக்க நோக்கமும் இருந்தன. அதே வேளையில், ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகக் குரல் கொடுப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் தலித்தியவாதிகள், பெரியாரியவாதிகள், மார்க்சியவாதிகள், நவீனத்துவ மற்றும் பின்னை நவீனத்துவ ஆய்வாளர்கள், பெண்ணியவாதிகள் எனப் பல தரப்பட்ட வகையினரும் இயக்கங்களுமேகூட மாடு தழுவல் பண்பாடு தடை செய்யப்பட்டதை ஆதரிக்கவே செய்தனர். 

ஒரு பண்பாடு முற்போக்கானதாகவோ பிற்போக்கானதாகவோ இருந்தாலும்கூட, உலக வல்லாதிக்க நிறுவனங்களும் பார்ப்பனிய சக்திகள் உள்ளிட்ட இந்திய அதிகார நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து தடை செய்திருந்த ஒரு பண்பாட்டு அடையாளத்தை, அதிகாரத்தையும் பார்ப்பனியத்தையும் உலக வல்லாதிக்கத்தையும் எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தரப்பினரும்கூட ஆதரித்து வந்தனர். கூடவே, மாடு தழுவல் பண்பாட்டைக் கொச்சைப்படுத்தியும் இழிவுபடுத்தியும் வந்தனர். அந்தத் தரப்பெல்லாம் அவமானப்படும்படியாகவும், அவர்களது நினைப்பும் கருத்தெல்லாம் தவறானது என்பதையும் முகத்தில் ஓங்கி அறைந்து சொல்லிக் காட்டியது மாடு தழுவல் பண்பாட்டு மீட்டெழுச்சிப் போராட்டம். தமிழ்நாடெங்கிலும் நடைபெற்று முடிந்த இப் போராட்ட எழுச்சி குறித்துப் பல்வேறுபட்ட தரவுகளும் உரையாடல்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போராட்டக் களமும் பன்முகப்பட்ட படிப்பினைகளைத் தந்துள்ளன. 

தமிழ் வளர்த்த மதுரை எனச் சொல்வதெல்லாம் வெற்றுச் சொற்களல்ல என்பதை அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருக்கிறது இப்போதைய மதுரையும். தமிழ் என்பது வெறும் மொழியை  மட்டும் குறிப்பதல்ல. இனத்தையும் நிலத்தையும் வாழ்வையும் பண்பாட்டையும் உற்பத்தியையும் குறிக்கிற குறியீட்டுச் சொல்லாய் விரிந்தளவில் பொருள் கொள்ளும்படியான புரிதலை வளர்த்தெடுப்பதன் தேவையை மதுரை மண் அடையாளப்படுத்தியிருக்கிறது எனச் சொல்வதில் தவறேதுமில்லை. மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு காலங்களில் நடைபெற்று வந்திருந்தாலும்கூட, அந் நிகழ்த்து வெளியை இக்காலம் வரையிலும் தக்கவைத்துக் கொண்டிருந்தது மதுரை மண்தான்.

சிற்றூர்ப்புறங்களில் நேர்த்திக் கடனாகவும் வழிபாட்டு வளமைச் சடங்காகவும் அந்தந்த ஊர்களில் நிகழ்த்தப்பட்டு வந்த மாடு தழுவல் நிகழ்த்துச் சடங்குகளும், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடத்தப்பட்டு வந்த மாடு தழுவல் நிகழ்த்துப் பெருவிழாக் கொண்டாட்டங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் போயின. 

இந்திய ஒன்றிய அதிகார மய்யங்களையும், அரசமைப்பின் அரசியல்வாதிகளையும், அவர்களது வாக்குறுதிகளையும் கடந்த இரண்டு ஆண்டுகளாய் வெறுமனே நம்பி ஏமாந்தது போல் இந்த ஆண்டும் அப்படிப் போய்விடக் கூடாது என்பதில் மதுரை மட்டுமல்ல, தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள சமூக அக்கறை மிக்க மாணவர்களும் இளைஞர்களும் மிகக் கவனமாய் இருந்தனர். இதைக் குறித்த விழிப்புணர்வைச் சமூக ஊடகங்கள் வாயிலாக மிகத் தீவிரமாகப் பரப்புரைகள் செய்யப்பட்டன. 

மாடு தழுவுதல் நிகழ்வு இந்தாண்டு நடக்கிறதோ இல்லையோ அல்லது நடத்திவிட முடியுமோ முடியாதோ என்றெல்லாம் உறுதியிட்டுச் சொல்ல முடியாத மனநிலைதான் எம்மைப் போன்றவர்களுக்கு இருந்தது. ஆனாலும், மாடு தழுவல் பண்பாட்டின் வரலாற்றை, அதன் தேவையை எடுத்துரைத்ததோடு, மாடு தழுவல் பண்பாட்டுத் தடைக்குப் பின்னாலிருக்கும் அதிகாரப் பண்பாட்டு மேலாதிக்கத்தை எதிர்ப்பதான பதிவுகளையும் வெளியிட்டுக் கொண்டு, மாடு தழுவல் பண்பாடு மீதான அவதூறுகளுக்கெல்லாம் மறுப்பும் பதிலும் சொல்லிக் கொண்டு, மாடு தழுவல் பண்பாட்டுக் கோரிக்கைக்கான போராட்டக் களத்திலும் பங்கெடுத்து வந்த போதெல்லாம் இப்பண்பாட்டு நிகழ்வை மீட்டெடுத்து விட முடியும் என்கிற நம்பிக்கை முழுமை பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும், எமக்கான சமூகக் கடமையாகவே இதைச் செய்து கொண்டிருந்தோம். 

நான், இரபீக் ராசா, பெரியசாமி ராசா, சிறீதர் நெடுஞ்செழியன், அன்பரசு, சுனில், குமரன், அன்பே செல்வா, கல்லணை இளங்கோ, இளஞ்சென்னியன், வினோத் மலைச்சாமி, அன்பு தவமணி உள்ளிட்ட இன்னும் பல தரப்பினரும் மாடு தழுவல் பண்பாட்டுக்கான ஆதரவுப் பரப்புரையைத் தத்தமது வேலை முறைகளோடு செய்து வந்தோம். மாடு தழுவல் பண்பாட்டுக்கான ஆதரவுப் பரப்புரைகளைச் செய்து கொண்டிருந்த எம்மைப் போன்றோரைச் சாதியவாதிகள், சமூக ஊடகக் கொள்ளையர்கள், பண்பாட்டுப் பயில்வான்கள், வட்டாரத் திமிராளிகள், இனவாதிகள், இன வெறியர்கள், காட்டுமிராண்டிகள் என்றெல்லாம் பகடி செய்தார்கள். ஆனாலும், மதுரை மண் மாடு தழுவல் பண்பாட்டுக்கு ஆதரவான உணர்வலைகளையே பெரும்பான்மையாய்க் கொண்டிருந்தது. இருந்தாலும், அப் பண்பாட்டை  நிகழ்த்திட முடியுமா என்பதில் அய்யம் பெரும்பாலோருக்கும் இருந்து கொண்டேதான் இருந்தது.

வறட்சியும் பஞ்சமும் வந்து போன காலங்களிலும்கூட வறப் பொங்கல் (வறட்சிப் பொங்கல்) எனும் பேரிலான பண்பாட்டு உயிர்ப்பைச் சாகவிடாமல் காத்து வருகிறவர்கள் சிற்றூர்ப்புறத்துச் சாமானியர்கள்தான். இந்த ஆண்டும் மழை பொய்த்துப் போனது. பாவிய நாற்றாங்கால்களும் நடவு வயல்களும் காய்ந்து போயின. நிலத்தை நம்பிக் கிடந்த சம்சாரி வாழ்க்கை நொடிந்து போனது. மனமும் நிலமும் காய்ந்து கிடக்கையில் பொங்கலும் வந்து சேர்ந்தது. ஆனாலும், கண்ணீரும் கம்பலையுமாக வறப் பொங்கல் வைத்து மனதையும் பண்பாட்டையும் தேற்றிக் கொண்டனர். பஞ்சம் வரினும் வஞ்சம் சூழினும் பண்பாட்டை இழந்திடக்கூடாது என்கிற உள்ளுணர்வு எப்போதும் போலவே இப்போதும் கசிந்துகொண்டேதான் இருந்தது.  
  
இந்தப் பஞ்சமும் வறுமையும், சூழல் மாற்றத்தாலும் அயலார் வஞ்சகத்தாலும் அதிகாரச் சுரண்டல் முறைகளின் சீரழிப்புகளாலும் வந்ததுதான் என்றாலும்,  மழை வள நேர்த்திக்கடனாய்ப் பொங்கலை ஒட்டி நிகழ்த்தப்பட்டு வந்த மாடு தழுவல் நிகழ்த்துச் சடங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தப்படாமல் போனதால்தான் இந்தப் பஞ்சமும் வறுமையும் வரக் காரணம் எனச் சிற்றூர்ப்புறத்துச் சாமானியர்கள் கருதத் தொடங்கியிருந்தனர். இப்படியான உரையாடல்கள் சாமானியர்களின் நம்பிக்கையாகவே இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. ஆழ்மனதின் இதுபோன்ற நம்பிக்கை பொய்த்துப் போகிறபோது  மண்ணை வாரித் தூத்தும் சாமானியரின் கோபமாய் மாறி விடுகிறது. இந்த நம்பிக்கைதான் மாடு தழுவல் பண்பாட்டுத் தடைக்கு எதிரான பெருங்கோபமாக மாறிக் கிடந்தது.

மதுரையில் மாடு தழுவல் பெருநிகழ்வு பொங்கலன்று முதலில்  அவனியாபுரத்தில்தான் தொடங்கும். அடுத்தநாள்       மாட்டுப் பொங்கலன்று   பாலமேடு, அதற்கடுத்த நாளே அலங்காநல்லூர். மதுரையைச் சுற்றியுள்ள பல ஊர்களிலும், அண்டை மாவட்டங்களிலும் அடுத்தடுத்து மாடு தழுவல் நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு. பொதுவாக, மாட்டுப் பொங்கலன்றுதான் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாடு தழுவலை ஒரு சடங்காகவே நிகழ்த்தப்படுவது உண்டு. இந்த ஆண்டும் இப்பண்பாட்டுத் தடைக்கு எதிராக ஒரு காளையையாவது அவிழ்த்துவிட வேண்டும் என்கிற கங்கணம் பெரும் பகுதி மக்களிடம் இருந்தது.

2017 சனவரி 14 பொங்கல் நாளில் மதுரை அவனியாபுரத்தில் மாடு தழுவல் பண்பாட்டுத் தடைக்கு எதிராகப் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்களும் இளைஞர்களும் திரளத் தொடங்கினர். இவர்களோடு வெகுவான பொதுமக்களும் அணிதிரண்டனர். சாதிய மோதல்களும், பழிக்குப் பழிக் கொலைகளும் அடிக்கடி நிகழ்ந்த அதே அவனியாபுரம் மண்ணில், தமிழர் பண்பாட்டு உரிமை மீட்புக்காய் அணி திரண்டு வருவார்கள் என யாருமே நினைத்திருக்கவில்லை. அதேவேளையில், பண்பாட்டு மீட்புக்கான களப் போராட்டத் தொடக்கப் புள்ளியாக அவனியாபுரமே இருந்தது. பண்பாட்டு மீட்புக்கான அந்தப் போராட்டத்தின் குரல் இந்திய ஒன்றியத்தின் நடுவண் மற்றும்  மாநில அரசுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிரான குரலாகவும் அது இருந்தது. இந்த எதிர்ப்புக் குரலை எதிர்பார்க்காத அதிகாரத்தின் ஏவல்துறையினர் அடக்கி ஒடுக்க முனைகின்றனர். 

ஒரு கட்டத்தில், போராட்டத் தரப்பினருக்கும் ஏவல் தரப்பினருக்கும் மோதல் முற்றுகிறது. தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைக்க முற்படுகிறது. ஆனாலும், அடக்கு முறைக்கு எதிராகவும் தடைக்கு எதிராகவும் குரல் கொடுத்துப் போராடியவர்கள் மீது கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. தோழர்கள் இரபீக் ராசா, கணேசன், தமிழ்தாசன், இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்படுகின்றனர். இந்தப் போராட்ட உணர்வுத் தீ வெகு வேகமாகவே படரத் தொடங்கியது. 

அடுத்தநாள் சனவரி 15 மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டில் பெருந்திரளே கூடி இருந்தது. எப்படியாவது மாடுகளை அவிழ்த்துவிட வேண்டும் என்பதில் அனைவரும் குறியாய் இருந்தனர். அதே வேளையில், வாடிவாசல் வழியாய் எந்த மாடும் அவிழ்க்க முடியாத வகையில் அரசு எந்திரங்களால் தடுக்கப்பட்டன. அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் வாடிவாசல் வழியாய் மாடுகள் அவிழ்க்க முடியாமல் இருப்பது பண்பாட்டு அடக்குமுறை என்பதை மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் உணரத் தொடங்கினர். இது ஒருபுறம் இருக்க, மாடு தழுவல் பண்பாட்டுத் தடைக்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் மதுரையைச் சுற்றியுள்ள பல சிற்றூர்ப்புறங்களில் எருதுக்கட்டு, ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, மாடு பிடித்தல், மாடு விடுதல், மாடு அணைதல், சல்லிக்கட்டு போன்ற பல பெயர்களில் மாடு தழுவல் நிகழ்வுகள் அந்தந்தப் பகுதி மக்களால் தன்னெழுச்சியாக நிகழ்த்திக் காட்டப்பட்டன.

மறுநாள் சனவரி 16 அலங்காநல்லூர். மதுரையைச் சுற்றியிலிருந்து மட்டுமல்ல, தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்களும் இளைஞர்களும் சாரை சாரையாய் வந்து குவியத் தொடங்கினர். இங்கும் இவர்கள் கேட்டது வாடிவாசல் வழியாக அய்ந்து மாடுகளையாவது அவிழ்த்துவிட வேண்டும் என்பதுதான். இந்தியாவின் மற்ற பகுதிகளில் சட்டத்தை நிலைநாட்டுவதைக் குறித்தெல்லாம் கவலைப்படுகிறதோ இல்லையோ, இது போன்ற பண்பாட்டுத் தடைகளைச் சட்டப்படியாக நிலைநாட்டுவதில் குறியாய் இருந்தன அரசு எந்திரங்கள் அனைத்தும்.

மாலைப் பொழுது ஆனதும் கலைந்து போவார்கள் என்று பலரும் நினைத்திருக்க, கொட்டும் பனியிலும் அலங்கை மண்ணின் வெட்ட வெளியில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், கூடவே அப்பகுதிப் பொதுமக்கள் என முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் இரவு முழுக்க அதே இடத்தில் குழுமியிருந்தனர். வாடிவாசல் திறக்காமல் வீடு வாசல் போக மாட்டோம் என்ற முழக்கம் உறுதிபட ஒலிக்கத் தொடங்கியது இங்குதான். 

பசியிலும் பனியிலும் கிடந்தாலும், பண்பாட்டு மீட்டெடுப்புக்கான உணர்வுத் தீ அனையாமல் கண் விழித்துக் கிடந்த அந்த உணர்வுக் கோலங்கள்தான் தமிழர்களிடத்தில் எழுச்சிக் கோலத்தை உருவாக்கிய விதைகள். சனவரி 17 விடியற்காலையில் அரசு எந்திரம் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்த முனைகிறது. கைது செய்யப்பட்டோர் அனைவரையும் வாடிப்பட்டியில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கிறது அரசு எந்திரம். இதுதான் பண்பாட்டு மீட்புக்கான எழுச்சிப் போராட்டமாக உருமாறத் தொடங்குவதற்கான உணர்வலைகளைத் தட்டி எழுப்பிய களம். இங்கு களத்தில் நின்று போராடியவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், கைது செய்தோரை விடுவிக்கவுமான குரல் அதேநாள் காலையில் மெரினாவிலும் ஒலிக்கத் தொடங்கியது. மெரினாவில் கூடிய தமிழர் எழுச்சி தமிழ் நாடெங்கும் பற்றிப் படர்ந்து உலகம் முழுமைக்கும் பரவியது.

அறப்போராட்டம் என்பதைச் சொல்லாக மட்டுமே கேட்டிருந்த தமிழ்ச் சமூகம், அச்சொல்லை உண்மையாகவே உயிர்ப்புடன் உலகுக்கே நிகழ்த்திக் காட்டியது இப்போதுதான். அறத்தாலும் மறத்தாலும் போராடி ஒன்றைப் பெற்று விட முடியும் என்பதற்குச் சான்றாய், தானே எடுத்துக் காட்டாய் உருமாற்றி நடத்திக் காட்டியது தமிழ்ச் சமூகம். தமிழ் நாடெங்கிலும் தமிழர்களின் அனைத்துத் தரப்பினராலும் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்தப் போராட்டம் பல்வேறு வகையான படிப்பினைகளைக் கற்றுத் தந்திருக்கிறது.
பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி என வேறு வேறு பகுதிகளிலும் ஊர்களிலும் நடைபெற்ற போராட்டங்களில் பங்கெடுத்து வந்திருந்தாலும், மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவே உள்ளுணர்வு துடித்தது. போராட்ட எழுச்சி மிகத் தீவிரம் பெற்றிருந்த ஒரு நாளில் சனவரி 21 சனிக்கிழமை விடிகாலையில் மதுரைக்குப் பயணமாகக் கிளம்பினேன். பணி நிமித்தமாய் இப்போது குடியிருக்கும் செயமங்கலம் ஊரானது ஆண்டிபட்டிக்கும் பெரியகுளத்திற்கும் இடைக்காட்டில் இருக்கிறது. இந்த ஊரும், இதன் அருகாமையில் இருக்கும் வடுகபட்டி, மேல்மங்கலம் போன்ற ஊர்களும் சாதிய மோதல்கள் அடிக்கடி அதிகளவில் நடைபெறும் ஊர்கள். இந்த ஊர்களிலுமேகூட மாடு தழுவல் பண்பாட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் அந்தந்தப் பகுதி மக்களால் நடத்தப்பட்டு வந்தன. அதனால், இந்த வழித்தடத்தில்  பேருந்துகள் எதுவும் வருவதாகத் தெரியவில்லை. அந்த வழியாகத் துள்ளுந்தில் வந்தவரைக் கைகாட்டி மறித்து அவர் பின்னால் ஏறிக் கொண்டு ஆண்டிபட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். 

பாதித் தொலைவு போன பிறகுதான் மதுரைக்கும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை என்பதைச் சொன்னார். ஆண்டிபட்டியிலிருந்தும் மதுரை செல்வதற்கான எந்தப் பேருந்தையும் காணவில்லை. இந்த வழித்தடத்திலும் பேருந்து போகவில்லை என்பதைக் கடைக்காரர் சொன்னார். ஏனென்று கேட்ட போதுதான், தேனியிலிருந்து மதுரை வரைக்குமான வழித்தடங்களில் இருக்கும் எல்லா ஊர்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு குட்டி யானை வண்டி வருவது தெரிந்தது. கை காட்டியவுடன் நின்றது. உசிலம்பட்டி வரைக்கும் போவதாகக் கூறி ஏற்றிக் கொண்டார் ஓட்டுநர். மதுரைப் போராட்டக் களத்திற்குச் செல்வதாகக் கூறியவுடன், வண்டி மாடு வச்சிருந்தாலாவது செத்த நிம்மதியா இருந்துருக்கலாம்ணே. இந்த வண்டிய வச்சுக்கிட்டு கருமாயப் படுறோம்ணே எனத் தமது வாழ்க்கைப் பாடுகளைச் சொல்லிக் கொண்டே வந்தார். 

உசிலம்பட்டியில் இறங்குகையில் இருபது ரூபாயை எடுத்து நீட்டினேன். நம்ம மாட்டுக்குத் தானணே போராடுறீங்க, சூதானமாப் பாத்துப் போயி வாங்கண்ணே எனக் கூறி வாங்க மறுத்துவிட்டார். அங்கும் எந்தப் பேருந்துப் போக்குவரத்தும் இல்லை. அங்கிருந்து செக்கானூரனி வரை செல்லக் கூடிய ஒரு பங்குத் தானியில் நானும் ஒருவனாகத் தொத்திக் கொண்டு சென்று, அங்கிருந்து பெரியார் பேருந்து நிலையம் என மதுரை வந்தடைந்த பின்புதான் தவிப்பெல்லாம் குறைந்து ஓரளவு நிம்மதி. 

ஆண்டிபட்டியிலிருந்து மதுரை வரைக்குமான வழித்தடங்களில் இருந்த ஊர்களின் முகப்பில் மக்கள் தங்களது உணர்வைக் காட்டும் வகையில் குழுமி இருந்ததைப் பார்க்க முடிந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி நேரலைகளைக் கவனித்துக் கொண்டே மாடு தழுவல் பண்பாட்டுக்கான ஆதரவு உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். தொடர் வண்டி நிலையப் பாலத்தைக் கடக்கையில் பாலத்தின் அடியில் இளைஞர் கூட்டத்தினர் தெற்கிலிருந்து வந்த ஒரு தொடர்வண்டியை மறித்துப் படுத்துக் கிடந்தனர்.  துணிப் பதாகைகளால் கூடாரம் அமைத்து அதற்குள்ளிருந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

பெரியார் பேருந்து நிலைய நுழைவாயில் முகப்புச் சாலையில் திரண்டிருந்த  பெருங்கூட்டம் பீட்டாவுக்கு எதிராகவும் மாடு தழுவல் பண்பாட்டுக்கு ஆதரவாகவும் முழங்கிக் கொண்டிருந்தது. நட்ட நடு வெயிலில் தார்ச்சாலையில் நெகிழிப் பதாகைகளை விரித்துக் கடுஞ்சூட்டிலும் உட்கார்ந்து முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். அங்கிருந்து தமுக்கம் திடலுக்குக் கிளம்பிப் போகையில், சிம்மக்கல்லையும் கோரிப்பாளையத்தையும் இணைக்கிற வைகை ஆற்றுப்பாலத்தின் மேலிருந்து மக்கள் கூட்டம் எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சித்திரைத் திருவிழா எனும் தண்ணீர்ப் பீய்ச்சுத் திருவிழாவிற்கு வந்து செல்லும் கூட்டம் போல மக்கள் கூட்டம் நிரம்பத் தெரிந்தது. அப்பாலத்திலிருந்து பார்த்தால் தத்தனேரித் தொடர்வண்டிப் பாலத்தில் மறிக்கப்பட்ட தொடர்வண்டி நின்று கொண்டிருந்தது. ஓடிய தொடர்வண்டியைத் தண்டவாளப் பாலத்தில் நிறுத்தி மறியல் செய்து பல நாட்களாக நகர விடாமல் செய்த பண்பாட்டுப் போராட்டத்தின் திமிலை வியப்பாய்ப் பார்த்த வண்ணம் இருந்தனர்.பாலத்தைக் கடந்து கோரிப்பாளையம் முத்துராமலிங்கம் சிலையருகே வந்தபோது சித்திரைத் திருவிழாவை மிஞ்சிய கூட்டம் ஆர்ப்பரித்து முழங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.

பண்பாட்டு மீட்டெடுப்புக்கான மாணவர் இளைஞர்களின் போராட்டம் பொது மக்களின் போராட்டமாக மாறத் தொடங்கி இருந்ததைக் கண்கூடாகக் காண முடிந்தது. அய்ம்பதாண்டுக்கு முன்பு நடந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு எழுச்சி இப்போது நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டதில் எந்த மிகை உணர்ச்சியும் இல்லை என்பதை நேரில் காணும்போதே உணர முடிந்தது. 1967 மொழிக்காக, 2017 இனத்திற்காக என்கிற முழக்கம் சாலையின் ஓரங்களில் பெரிதளவில் எழுதப்பட்டுக் கிடந்தது. இதில் எவருடைய காலடித் தடங்களும் பட்டிருக்கவில்லை.   இதில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள், நகரத்தினர், சாமானியர் எனப் பல வகைப்பட்ட பன்மை வெளிகள் சார்ந்த மனிதர்களும் தமிழர் என்பதாகவே ஒன்று கூடிப் போராடிக் கொண்டிருப்பது கண் முன் தெரிந்தது. சாதிய அதிகாரப் பண்பாட்டின் குறியீட்டு வெளியாய்ப் புனைவாக்கப்பட்ட மதுரையின் அவ் வெளி முழுமையும் தமிழரின் பண்பாட்டு மீட்புக்கான போராட்ட வெளியாய் உயிர்ப்படைந்து கிடந்தது. 

கோரிப்பாளையத்திலிருந்து புதூர் செல்லும் சாலையிலிருக்கும் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலை வரைக்கும், காந்தி அருங்காட்சியம் வரைக்கும் எனத் தமுக்கம் திடலைச் சுற்றியுள்ள மதுரையின் மய்ய வெளிகள் யாவும் தமிழர் பண்பாட்டு உரிமை மீட்புக்கான போராட்ட வெளியாகவே மாறிக் கிடந்தது. இப்பெருந்திரள் எழுச்சிப் போராட்டக் களத்தில் மாடு தழுவல் பண்பாட்டுக்கு மட்டுமான ஆதரவையும் குரலையும் மட்டும் பார்க்கவில்லை. தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் தொடர்பான  அனைத்துப் பிரச்சினைப்பாடுகளைக் குறித்துமாகப் பேசும் களமாகவும் மாறிப் போயிருந்தது. 

தமிழ் மொழி உரிமை, முல்லைப் பெரியாறு, காவிரி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, புதிய கல்விக் கொள்கை, உழவுக்குடிகளின் தற்கொலைச் சாவுகள், மீத்தேன் – நியூட்ரினோ திட்ட அபாயங்கள், தனியார் மயம், உலகமயம், பீட்டா போன்ற தொண்டு நிறுவனங்களின் தலையீடுகள், நடுவண் மற்றும் மாநில அரசுகளின் அக்கறையின்மை, தேர்தல் கட்சிகள், இந்துத்துவம், ஏகாதிபத்தியம், தமிழ்த்தேசியம், இயற்கை வேளாண்மை என இன்னும் எத்தனையோ பிரச்சினைப்பாடுகளைக் குறித்தும், அவற்றிலிருந்து மீண்டெழுவதைக் குறித்தும், மீட்டெடுக்க வேண்டியதைக் குறித்தும் மிகத் தீவிரமாகப் பேசப்பட்ட வெளியாகவே மதுரையின் போராட்டக் களம் அமைந்திருந்தது. அங்கு முழங்கியவையும் கைகளில் தூக்கிப் பிடித்த முழக்க அட்டைகளும் அதையே உணர்த்தின. சாதி கடந்து, சமயம் கடந்து, பாலினம் கடந்து, வர்க்கம் கடந்து, வட்டாரம் கடந்து திரண்டிருந்த அப் பெருங்கூட்ட எழுச்சியானது தமிழ் இனத்தின் எழுச்சியாகவே திகழ்ந்தது. 

தமிழ்க் கலை, இலக்கண, இலக்கிய மரபுகளாகட்டும், தமிழ் நிலத்தின் இயற்கை, வளங்கள், சூழல், தொழில் மரபுகளாகட்டும், தமிழ் மக்களின் வாழ்வியல், நாகரிகம், பண்பாடு போன்ற மரபுகளாகட்டும் அவை யாவுமே பன்மையின் கூட்டு மரபாகவே திகழ்கின்றன. இவை போலவே, மாடு தழுவல் மீட்புக்கான இந்தப் போராட்டமும் பல்வேறு வகையிலான கலை மற்றும் பண்பாட்டுப் பன்மைகளைத் தோள் சேர்த்து அரவணைக்கும் வெளியை வழங்கி இருக்கிறது. ஒரு பண்பாட்டு நிகழ்த்து வெளி மற்ற பண்பாட்டு நிகழ்த்தல்களுக்கும் இடமளிப்பதாக இருக்கும் போதே அது அனைவருக்குமான பண்பாட்டு வெளியாய் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்புண்டு. மாடு தழுவல் பண்பாடு மற்ற பண்பாட்டையும் நிகழ்த்துவதற்கான களத்தைக் கொண்டிருந்தது என்பதற்கு அதற்கான போராட்டக் களமே சான்று.

மாடு தழுவல் பண்பாட்டு மீட்புக்கான இந்தப் போராட்டத்தைத் தம்மை வருத்திக் கொண்டு யாரும் முன்னெடுக்கவில்லை. ஒரு பண்பாடு நிகழ்வது என்பதே மனிதர்களை உந்தி எழச் செய்வதற்குத்தான். மாடு தழுவலுக்கான இந்தப் போராட்டத்தை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவதற்கான மற்ற பண்பாட்டு நிகழ்த்தல்கள் களத்தில் அரங்கேறின. திடீரென ஓர் அவசர ஊர்தி வருகிறது. அதிலிருந்து இரண்டு மூன்று பாடைகள் பெயர் எழுதி இறக்கப்படுகின்றன. ஓவென்று மாறி மாறி ஒப்பாரி வைக்கப்படுகிறது. நீர் மாலை எடுக்கிறார்கள். சங்கு ஊதப்படுகிறது. பறைகொட்டப்படுகிறது. 

அதிகாரம் சார்ந்த அத்தனை பேரின் படங்களும் அட்டையில் ஒட்டப்பட்டு அவர்களுக்கு எதிரான முழக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. சாலையின் ஒரு சில இடங்களில் சுண்ணம்புத் துகள்களால் மாடுகளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. ஒரு பக்கம் காரசாரமாக அரசியல் பேசுகின்றது ஒரு கூட்டம். இன்னொரு பக்கம் பெண்கள் கூட்டம். அந்தப் பகுதிக்குள்ளிருந்தும் பெண்கள் ஒருவர் ஒருவராக எழுந்து பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் கல்லூரி மாணவிகள் அரசியல் பேசிக் கொண்டிருந்தார்கள். இளைஞர்களும் மாணவர்களும் நெரிசலை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே உணவுப் பொட்டலங்கள், தண்ணீர்க் குடுவைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த மக்கள் வெள்ளத்தில் பசி யாருக்குமே இருந்திடாத அளவுக்கு உணவு வந்து கொண்டே இருந்தது. குப்பைகளையும் கழிவுகளையும் மாணவர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தங்களைத் தாங்களே பல வகைகளில் ஒழுங்குபடுத்திக் கொண்ட பண்பாட்டுத் தகவமைப்பு செம்மையாய் உருக்கொண்டிருந்தது. 

உடம்பில் காளை உருவங்களை வரைந்து கொண்டு இளைஞர்கள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள். பறையாட்டம் ஒரு பக்கம், தவில் ஒரு பக்கம், சென்டை மேளம் ஒரு பக்கம். மாடாட்டமும் மயிலாட்டமும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டே இருந்தன. சிலம்பமும் களரியும் பல இளைஞர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். குறவன் குறத்தி ஆட்டமும், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் எனப் பல வகை ஆட்டங்களும் நிகழ்ந்தேறிக் கொண்டிருந்தன. பெண்கள் கூட்டத்திலிருந்து கோலாட்டமும் கும்மியும் கொட்டி ஆடுவது நிகழ்ந்தது. 

சாலையின் ஓரத்தில் பல இளைஞர்கள் பச்சை குத்திக் கொண்டிருந்தனர்.  இன்னும் வேறு சில இடங்களில் ஆட்டுக்கிடாய்ச் சண்டைகளும், சேவல் சண்டைகளும் நடந்து கொண்டிருந்தன. இன்னும் நிறைய நிறையப் பண்பாட்டுப் புலப்பாடுகள் இந்தப் போராட்டக் களத்தில் வெளிப்பட்டன.

ஒரு பண்பாடு மற்ற இதரப் பண்பாடுகளையும் அனுமதிக்கிற சனநாயகப் பண்பு எதற்கிருக்கிறதோ அதுதான் அவ்வினத்தின் தேசியப் பண்பாடாய்த் தகவமையும் அடையாளத்தைப் பெற முடியும் என்பதற்கு இதுதான் சான்று. ஒரு பண்பாடு தமக்காய்ப் போராடுகிற போது, மற்றதின் வாழ்தலுக்கான போராட்டத்தையும் அனுமதிக்க வேண்டும். மாடு தழுவல் பண்பாட்டுப் போராட்ட வெளியானது மற்ற பண்பாட்டுப் பன்மையை நிகழ்த்துவதற்கான வெளியை நெகிழ்ந்து தந்ததையே கேளிக்கை வெளியாகக் கட்டமைக்க முயன்றனர் அறிவு சீவிகள்.

இந்திய மற்றும் உலக வல்லாதிக்க ஒற்றைப் பண்பாட்டு அதிகாரத்தை மாடு தழுவல் பண்பாடு மட்டுமல்ல, தமிழ் நிலத்தின் அத்தனை வகைப்பட்ட பன்மைப் பண்பாடுகளும் நிகழ்த்தி நிகழ்த்தியே தம் எதிர்ப்பைக் காட்டின. 

ஒன்றைத் தடை செய்யவோ ஒடுக்கவோ அழிக்கவோ முனையும்போது, அதன் தோழமைப் பண்பாடுகளும் எதிர்த்துக் களம் காணும் என்பதற்கு  இக்களமே சான்று. அவ்வகையில்,ஒற்றைப் பண்பாட்டுக்கு எதிரான பன்மைப் பண்பாட்டு வெளியின் போர்க்கள நிகழ்த்து வெளியாகவே மதுரை மண்ணின் போராட்டக் களம் வடிவமைந்திருந்தது. இரவானதும் ஊருக்குத் திரும்பப் புறப்படுகையில், சாலையின் ஓரத்தில் ஒரு பெரியவரும் பாட்டியும் தாங்கள் கொண்டு வந்திருந்த தூக்கு வாளியிலிருந்து புளியோதரைச் சோற்றை வாடிய முகங்கள் பார்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர். நானும் வாங்கிச் சாப்பிட்டேன். எதுக்குங்கய்யா வயசான காலத்துல இப்படி எனக் கேட்டேன். மனசு கேக்கல தம்பி, இதுவும் ஒரு நேர்த்திக் கடந்தான் என்றார். பண்பாடு இன்னும் உயிர் வாழும் தான். மாவோ சொன்னது போல் நூறு பூக்கள் பூத்தன. பன்மைப் பண்பாட்டு வெளிகள் எழுச்சி பெற்றன என்றே சொல்லலாம்.

மகாராசன், மக்கள்தமிழ் ஆய்வரண்
மதுரை.










சனி, 7 அக்டோபர், 2017

மகாராசன் : தமிழில் ஆடைகள்

மகாராசன் : தமிழில் ஆடைகள்

தமிழில் ஆடைகள்

தமிழால் இணைவோம் என்னும் எண்ணத்தை வணிக முழக்கமாய்க் கொண்டு ஆடைகளின் வழியாகவும் தமிழ் பரப்பும் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர் சமூக அக்கறை மிக்க சில இளைஞர்கள். இலவம் எனும் பேரில் இணையத்தளத்தின் வாயிலாக தமிழ் ஆடைகளை வணிகப்படுத்தி வருகின்றனர். சென்னை நகரில் தமக்கான வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொண்டே, பகுதி நேரமாக இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கும் இவர்களின் தமிழ்ப்பணி போற்றுதலுக்கு உரியது.

நானும் இலவம் நண்பர் வினோத் அவர்களிடம் தொடர்பு கொண்டு சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை , யாதும் ஊரே யாவரும் கேளிர் , தமிழ் விதைப்போம் , பல வேடிக்கை மனிதரைப் போல வீழ்வேன் என்று நினைத்தாயோ போன்ற வரிகள் அச்சிடப்பட்ட ஆடைகளைக் கேட்டிருந்தேன். இலவத்திடமிருந்து நேற்று கிடைத்தது.

அனுப்பி வைத்த முறையும் , உள்ளே பிரித்துப் பார்க்கும் போது அவை தனித்தனிச் சுருக்குப் பைக்குள் வைக்கப்பட்டிருந்த விதமும், ஒவ்வொரு சுருக்குப் பையிலும் திருக்குறள் அச்சிடப்பட்டிருந்ததும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. கூடவே சிகப்புத் தண்டுக் கீரை விதைகள் ஒரு கை நிறையும் அளவுக்கு இணைத்து அனுப்பப்பட்டு இருந்தது. கிடைக்கப்பெற்ற ஆடைகளும் நேர்த்தியாக இருந்தது.

ஆடைகள் கிடைத்த பிறகு இலவம் வினோத் அவர்களிடம் கிடைக்கப்பெற்றதையும் அனுப்பி வைக்கப்பட்டதற்கு நன்றி சொல்லியும் பேசியபோது, இதை விட்டு விடாமல் செய்யுங்கள், உங்களது தமிழ்ப்பணி கண்டிப்பாக நினைக்கப்படும் என்று சொன்னபோது, உங்களது இந்த வார்த்தைகளே எங்களது ஆத்மாவ சந்தோசப்படுத்துதுங்க. வயிறு நிறைய சாப்பிட்ட ஒரு திருப்தி இருக்கு. நிச்சயம் இத விடாம செய்வோமுங்க என்று பதில் அளித்த அந்தச் சொற்களில் நிறைய நம்பிக்கை தென்பட்டது.

தமிழ் வாழும் இவர்களைப் போன்றவர்களால்.
வாழ்த்துக்கள்.

தமிழ் ஆடைகள் உங்கள் வீடு தேடி வர கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இலவம் வினோத்
8681994411