ஞாயிறு, 22 அக்டோபர், 2017

இதுவே பிறந்த நாளாகட்டும்.


அஞ்சாவது படிச்சு முடிக்கிற வரைக்கும் எனது பிறந்த நாள் இதுவெனத் தெரியாது. உள்ளூர்ப் பள்ளிக்கூடத்துல அஞ்சாவதுக்கு மேலப் படிப்பு கெடயாதுங்குறதுனால, ஆறாவது மேக் கொண்டு படிக்கத் தோதாக ரெக்காடு சீட்டுங்கிறது தரப்போறதாச் சொல்லி வீட்லருந்து அப்பனையோ ஆத்தாவையோ கூட்டி வரச் சொன்னாரு பெரிய வாத்தியாரு.
வயக்காட்டுக்குக் கெளம்பிக்கிட்டுருந்த அம்மாகிட்ட போயி நெலவரத்தச் சொன்னப்போ, கஞ்சித் தூக்கு வாளியோடயே பள்ளிக்கூடத்துக்கு வந்தா அம்மா. பெரிய வாத்தியாரப் பாத்த ஒடனே வணக்கமுங்கய்யான்னு சொன்னதோடேயே ரெண்டு கையெடுத்தும் கும்பிட்டா.
ஒங்க பய்யன மேக் கொண்டு படிக்க வையுங்கம்மான்னு சொல்லிக் கொண்டே அம்மாவோட எடது கைப் பெருவிரலப் பாத்து இங்க கொண்டாங்கன்னு சொல்லி ரெண்டு எடத்துல ரேக வச்சு எடுத்தாரு. அந்தப் பொத்தகத்துலருந்து ஒரு பாகத்த கிழிச்சு எங் கையில கொடுத்து நல்லா படிக்கனுமுடா மகராசான்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, அம்மா கண்ணுல பொல பொலன்ன்னு கண்ணீரு வந்துருச்சு.
நாங்க தாய்யா கை நாட்டா இருந்து கருமாயப்படுறோம். எம் புள்ளயாவது படிச்சு ஆளாகனுமுங்கய்யா, நீங்க தான் இவன எங்கயாச்சும் சேத்து விடுனும்னு சொல்லி முடிச்சா. பக்கத்து ஊர்ப் பள்ளிக்கூடத்துக்குப் போயி இதக் குடுத்துச் சேருங்கன்னு சொல்லி அனுப்பி வச்சாரு.
வாடா தம்பின்னு கையப் புடிச்சி அழைச்சா அம்மா. ஒங்க அப்பங்கிட்ட போயி இந்த நெலவரத்த ஒழுங்கா சொல்லனுமுடா தம்பி, வீட்டுக்குப் போயி கஞ்சியக் குடுச்சுப்புட்டு வயக்காட்டுக்கு வந்துருப்பான்னு சொல்லிப்புட்டு குறுக்குப் பாத யில நடந்து போயிட்டா.
வீட்டுக்கு வந்ததுமே மஞ்சப்பய்யில கொண்டாந்தத எடுத்துப் பாத்தேன். பதிவுத் தாள்னு பெருசா அச்சாகி இருந்துச்சு. எம் பேரு அவ்ளோ அழகா எழுதி இருந்துச்சு. பிறந்த நாள்ங்கிறதுக்கு நேரா 26.05.1978 ன்னு எழுதி இருந்தது. வீட்டுச் சொவுத்துல தொங்கிக்கிட்டு இருந்த நாக் காட்டித் தாளுலயும் 26.05.88 என்று இருந்தது. அன்னிக்குத் தான் என்னோட பிறந்த நாள் இதுவென்றே தெரிந்தது. மனசுக்குள்ள அவ்ளோ உற்சாகம்.
நம்மளோட பொறந்த நாள் இன்னிக்குத் தான்டான்னு நெனச்சு மனசு அப்டி ஒரு குதி குதிச்சுக்கிட்டே இருந்துச்சு. அஞ்சு காசு பத்து காசுமா மண்ணு உண்டியலுல சேத்து வச்ச காச வெளக்க மாத்துக்குச்சிய வச்சு நோண்டி எடுத்ததுல கொஞ்ச காசு சேந்துச்சு. நேராப் பொட்டிக் கடயில போயி ரெண்டு கை நெறயா ஆரஞ்சு மிட்டாய்கள வாங்கிக்கிட்டு நடயக் கட்டுனேன்.
கோட்டப் புஞ்சப் பாதயில நடந்து போயிக்கிட்டே ஒவ்வொரு மிட்டாயா வாயில போட்டு சப்பிக்கிட்டே போனதுல முக்கா மிட்டாய்களும் தீர்ந்து போச்சு. வயக்காட்டுத் தலவு வந்ததுக்கப்புறந்தான் அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் கொடுக்கனும்னு தோணுச்சு. போறப்பவே, கடலச் செடிக்குத் தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருந்தாரு அப்பா.
வாய்க்கால்ல தண்ணி வரத்துக் கொறஞ்சு போனதப் பாத்தவரு, அங்கிட்டு வா மட எதுவும் ஒடஞ்சிருந்தா அடச்சுப்புட்டு வாடான்னு சொன்னாரு அப்பா. ரெண்டாவது பாத்தியில வாமட ஒடஞ்சி தான் இருந்துச்சு. கையில மிட்டாயி இருந்ததுனால, காலால மண்ணள்ளி அடச்சுக்கிட்டே இருந்தேன். வாய்க்காத் தண்ணி பொருமி வந்ததால கால் மண்ணு கரைஞ்சுக்கிட்டே இருந்துச்சு.
இதப் பாத்த அப்பனுக்குக் கடுப்பு வந்து, கையில மண்ணெடுத்து அடடா பேப்பயலேன்னு கத்துனாரு. கொண்டாந்த மிட்டாய வாயில போடவும் மனசில்ல, வரப்புல வைக்கோவும் மனசில்ல.
வாய்க்காத் தண்ணியிலேயே தளக் பொளக்னு ஓடிப்போயி அப்பாக்கிட்ட நாளஞ்சு ஆரஞ்சு மிட்டாய நீட்டி, அப்பா இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள்பானு சொன்னேன். எதாவது நமக்கு வாழ்த்துச் சொல்வாருனு பாத்தா, ஒடஞ்ச வா மடய அடைக்கிறத விட்டுப் புட்டு வந்ததுமில்லாமப் பொறந்த நாளு பொடலங்கா நாளுன்னு சொல்லிக்கிட்டு ஓடியார. ஒன்னயலாம் ஒதைக்கனும்டான்னு சொல்லி மம்பட்டியத் தூக்குனாரு. பயந்து போயி வாய்க்கா தண்ணிக்குள்ளேயே விழுந்துட்டேன். அப்பாவும் பதறியடிச்சுத் தூக்கி விட்டு சேறெல்லாத்தையும் அலசி விட்டாரு.
உள்ளங்கையில இருந்த மிட்டாயி பூராம் நனஞ்சே போச்சு. முட்டி முட்டி அழுகையா வந்துச்சு. அழுதே விட்டேன். கண்ணீரத் தொடச்சு விட்டு அப்பா கேட்டாரு, வைகாசி மாசத்துல போயி இன்னிக்குப் பொறந்த நாள்னு யாருப்பா சொன்னதுன்னு. பள்ளிக் கோடத்து ரெக்காடு சீட்டுல இருக்குன்னு சொன்னேன். இன்னிக்கி இல்லப்பா ஒன்னோட பிறந்த நாள்னு சொல்லி ஒட வாமடய அடைக்கப் போயிட்டாரு. நானும் மனசுக்குள்ள அழுதுக்கிட்டே கெணத்துக் குடிசைக்குப் போனேன்.
பழுத்து விழுந்திருந்த தென்னங்கீத்தைக் கிழித்துக் கொண்டிருந்தாள் அம்மா. மொகம் கொறாவிப் போயிருந்த என்னைப் பாத்து அவளும் கலங்கிப் போனாள். நான் என்னிக்கிமா பொறந்தேன்னு கேட்டேன்.
காத்திக மாசம் வெளக்குப் போட்ட அன்னிக்கி வெள்ளிக் கெழம பொறந்தே. அன்னிக்குச் சரியான மழ. நம்ம வீட்டுப் பசு மாடு ரெண்டு கன்னு ஈனுச்சு தம்பின்னு பெரும பொங்கப் பேசுனா. அது என்னிக்கினு தெரியுமான்னு கேக்கவும், அதாந்தம்பி திருக்கார்த்திகையன்னிக்கினு திரும்பவும் சொன்னா.
என்னோட பொறந்த நாள எழுதியே வக்கிலியா? இன்னிக்கி பொறந்ததா ரெக்காடு சீட்டுல இருக்குன்னு சொன்னப்ப, இந்த மாசத்துல நீ பொறக்கலாப்பான்னு பட்டுனு சொல்லிப்புட்டா. எனக்கு அழுகை அழுகையா வந்தது. வாயில் தின்றிருந்த மிட்டாய்கள் கசப்பது போலவே இருந்தது.
பிறந்த நாள் இதுவென்று தெரிந்த அந்த நாளே இது பிறந்த நாள் அல்ல என்று தெரிந்த நாளும் அது தான். ஒரு நாளுக்காக நான் அதிகமாய் அழுததும் காயம் பட்டதும் அது தான்.
பிறந்த நாள் என்று எழுதியிருக்கிற அந்த நாளின் மீது எந்தப் பற்றுதலும் பிடிப்பும் ஈர்ப்பும் ஒட்டுதலும் இல்லாமல் போயிற்று. என்றாலும் என் பிற்காலத்திய ஆவணப் பதிவுகள் அனைத்திலும் இன்றைய நாளே பிறந்த நாளாகப் பதியப்பட்டிருக்கிறது. பிறந்த நாள் இதுவல்ல என்றான பிறகு இந்த நாளை மனதார ஏற்றுக் கொள்ளாமலே தான் இதுவரையிலும் இருந்தேன். அன்றிலிருந்து இன்று வரையிலுமே எனது பிறந்த நாள் இதுவென்று நான் கருதியதுமில்லை, கொண்டாடியதும் இல்லை. நண்பர்கள், உறவுகள், மனைவி, பிள்ளைகள் என எவருக்குமே இந்நாள் பிறந்த நாள் என்று தெரியாது. நானும் இதுவரை சொல்லியதில்லை.
வாழுகிற வாழ்க்கையைப் பொருளுடையதாக ஆக்குகிற ஒவ்வொரு நாளும் கூட நமக்குப் பிறந்த நாள் தான் என்றேதான் இதுவரையில் நினைத்திருந்தேன். இனிமேலும் அப்படித்தான். எனினும், தாய் கொடையளித்த நாள் எதுவென்றே தெரியாமல் போயிற்று.
ஆனாலும், பிறந்த நாள் இதுவென்று பதிந்திருக்கும் இந்நாளில் முகநூல், புலனம், குறுஞ்செய்தி, செல்பேசி அழைப்புகள் வாயிலாகப் பிறந்த நாள் வாழ்த்தையும் அன்பையும் பகிர்ந்திருக்கும் தோழமை உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என உள்மனம் சொல்கிறது. ஆகையால், இன்றிலிருந்து இந்த நாளையே பிறந்த நாளாக மனதார ஏற்றுக் கொள்கிறேன்.
இந்த நாளில் எனக்கு வாழ்த்தையும் அன்பையும் பகிர்ந்திருக்கும் அனைவருக்குமே எனது அன்பும் நன்றியுமே கைமாறு.
இந்த நாளை, பொருளுடையதாக்கும் வகையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு எனது உடலைக் கொடையளிக்கும் வகையில் உறுதி மொழிப் படிவம் வாங்கி வந்திருக்கிறேன்.
உங்களது வாழ்த்தோடு இந்த நாளைப் பொருளுடைய நாளாக ஆக்கி இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக