திங்கள், 29 நவம்பர், 2021

தவிர்க்க முடியாத தமிழர் வரலாற்றுப் புத்தகம் : முத்து மல்லல்


இலக்கியமாக இருக்கட்டும் அல்லது இலக்கியம் சார்ந்த திறனாய்வாக இருக்கட்டும், அவைகள் எல்லாமே   பிராமணியச் சாதியக் கட்டமைப்பில்தான்  இந்தியச் சமுதாயம் இயங்குகிறது என்பதை  எதிர்ப்பதாகக் கூறப்படும் திராவிட மற்றும் தலித்தியம் சார்ந்த இலக்கியப் படைப்புகளே புரட்சிகரமான இலக்கியம் அல்லது இலக்கியத் திறனாய்வு என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.  

அதையே ஒரு  குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றித் திறனாய்வு செய்து நூலை வெளியிட்டால், ஒரு சாதிக்கான இலக்கியமாகக் கருதப்பட்டு, அந்தத் திறனாய்வையே ஏதோ ஒரு வகையில் ஒடுக்குதல் அல்லது ஒதுக்குதல் வேலையைக் கன கச்சிதமாகச் செய்கின்றன இந்தப் போலி புரட்சிகளான திராவிடம், தலித்தியம், இடதுசாரி அணிகள். இது இலக்கியத் துறையில் மட்டுமல்ல, அரசியல், சமூகம், பண்பாடு, கலாச்சார விடயங்களிலும்கூட தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை  ஒடுக்கியும் ஒதுக்கியும் சிதைக்கும் திட்டத்தை மிக நுடபமான வேலைகளைச் செய்து வருகின்றன திராவிடம், தலித்தியம், கம்யூனிச முகாம்கள். 

தமிழரின் சமுதாய அமைப்பே நிலத்தின் அடிப்படையிலும், தொழில் சார்ந்த அடிப்படையிலும்தான் உருவாக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.  அதாவது, நிலம் மற்றும் தொழில் சார்ந்த தமிழரின் ஒவ்வொரு  இனக்குழுக்களின் இலக்கியங்களின் கூட்டமைப்பாகத்தான் சங்க இலக்கியங்கள் உள்ளன. இப்படிப்பட்ட இனக்குழு சார்ந்த இலக்கியங்களே உண்மையான புரட்சிகரமான இலக்கியங்களே ஆகும்.

ஆனால், இன்றும் அப்படிப்பட்ட ஒவ்வொரு இனக்குழுவும் சாதிகளாக உருமாறி இருக்கின்றன என்பதைப் போலியான புரட்சிக் கோட்பாட்டாளர்கள் விளங்கிக் கொள்ளவில்லை.   

அந்த வகையில், வேளாண் மரபினரான தேவேந்திரகுல வேளாளரின் வரலாறு, தமிழரின் தவிர்க்க முடியாத ஒரு வரலாறாகவே இருக்கின்றது. இன்னும் தெளிவாகக்  கூற வேண்டும் என்றால், உழவர் குடியான தேவேந்திரகுல வேளாளரின் வரலாறே தமிழர் வரலாறு என்றுதான் இலக்கிய, தொல் பொருள்கள், பாண்பாடு, கலாச்சாரம்  வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய பெருமை மிக்க வரலாற்று இலக்கியங்களைத் திராவிடக் கருத்தியல் சிந்தனையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட இலக்கியப் படைப்புகள், இலக்கியத் திறனாய்வு தற்போது படைக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், திராவிடம் மற்றும் தலித்தியக் கருத்தாக்கங்களை  உதறித்தள்ளி, ஒரு சமூகத்தின் வரலாறு அல்லது இலக்கியம்தான் தமிழரின் கூட்டுக் கலவையாக நிமிர்ந்து, தமிழர்களின் தனித்துவமும் அறிவும் புகழ் மிக்கதாய் ஒளிர்கிறது. 

அந்த வகையில் சிற்சில படைப்புகளே வெளிவருகின்றன. அந்தச் சிற்சில ப் படைப்புகளில் ஏர் மகாராசன் எழுதிய "வேளாண் மரபின் தமிழ் அடையாளம்" என்ற புத்தகம்,  துவக்கத்தில்  மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் மனித இனம் வேட்டையாடிச் சமூகமாக இருந்து, வேளாண் சமூகம் எப்படி உருவெடுத்தது என்பதையும், அந்த வேளாண் உற்பத்தி உபரியாக வேளாண் தொழிலை ஒட்டிய துணைத் தொழில்களாகப் பிரிந்து, அது மனித வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்பதையும், மேலும், நாடு, நகரம் உருவாக்கப்பட்டதையும், அரசு உருவாகி வந்ததையும் படம் பிடித்துத் தன்னுடைய எழுத்தில் காண்பித்துள்ளார். 

இப்படி நாடு, நகரம், அரசு இவை யாவுமே ஒரு சமூகத்தின்  கூறுகளாகக் காணப்படுகின்றன. குடும்பர்,  மள்ளர், பள்ளர் மற்றும் தேவேந்திரகுல வேளாளரின்  உழைப்பாலும் ஆற்றலாலும்  நற்பண்புகளாலும் கட்டமைக்கப்பட்டதைத் தெளிவாக ஆசிரியர் விளக்குகிறார். 

அதே போன்று, மருத நில உழவர் குடியானவர்களின் பல பெயர்ச் சொற்களுக்குப் பல ஆதரங்களின் மூலம் நிறுவியுள்ளார். இந்த உழவர்குடி பெருமக்களின் ஒவ்வொரு  பண்பாட்டுக் கூறுகளும் அறிவுப்பூர்வமான, பொதுநலன் மிக்கவும் உடையவை என்பதையும் ஆணித்தரமாக விளக்கியுள்ளார். 

வேளாண் தொழில் என்பது, அரசின் அச்சாணியாக இருந்த  குடும்பர்களின் ஊர்க்  குடும்பு முறை என்பதும் ஆதராங்களோடு நிரூபித்ததோடு, நிலத்தையும் நீரையும் எவ்வாறு மேலாண்மை செய்து நிர்வாக அமைப்பைக் கட்டமைத்தனர் என்பதையும் கல்வெட்டு மற்றும் வழக்காற்றுக் கதைகளின் மூலம் விளங்கக் கூறியுள்ளார். 

வேளாண் உற்பத்தியான நெல் நாகரிகம் உலகின்  பல நாடுகளிலும், பண்டைய நாகரீகங்களுக்கும்   அச்சாணியாக இருந்ததை எச்சங்களாகக் காண்பித்துள்ளார். பொதுவாக, இங்கு இருக்கின்ற  கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் உழவர் குடி மக்களின் சமூகக் கட்டமைப்பிலிருந்து  உருவானதுதான் என்பதை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காண்பிக்கிறார். 

ஆனால், உழவர் குடியான குடும்பர்கள் எப்படி எந்த நுற்றாண்டில் வீழ்ச்சியைச் சந்தித்தனர் என்பதை ஆரியக் கோட்பாட்டை முன் வைத்தாலும், உண்மையிலேயே  வடுகரின் படையெடுப்பால்தான் வீழ்ந்தனர் என்பதை ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பதும், ஏற்கனவே, தோல்வியான தமிழ்த் தேசியக் கருத்தியலோடு உடன்பட்டுள்ளார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

இதைத் தவிர்த்து, இப்புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு தமிழரின் பண்பாட்டுக் கூறுகள் எச்சமூகத்தின் கட்டமைப்பில் உருவானது என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 

தமிழர் வரலாற்றைப் படிக்க விரும்பும் எவரும் இப்புத்தகத்தைத் தவிர்த்துத் தமிழர் வரலாற்றை விளங்கிக் கொள்ள முடியாது எனலாம். 

*

கட்டுரையாளர்:
முத்து மல்லல்,
சமூகச் செயல்பாட்டாளர்.

கவிதாசரண் என்னும் எழுத்துப் பயணி : மகாராசன்







கவிதாசரண் என்னும் எழுத்துப் பயணி, தமது பயணத்தை முடித்துக்கொண்டார்.  

*

துயர்மிகு வாழ்விலும், கவிதாசரண் என்னும் இதழை ஓர் எழுத்தியக்கமாகவே முன்னெடுத்து நடத்தி வந்தவர் அய்யா கவிதாசரண்.

நான் நடத்திக்கொண்டிருந்த ஏர் இதழ்களைப் பார்த்தபிறகு, கவிதாசரண் இதழுக்குக் கட்டுரைகளை எழுதுங்கள் என்று உரிமையோடும் அன்போடும் கேட்பார். அதன்படி எனது கட்டுரைகள் சிலவற்றையும் கவிதாசரண் இதழில் வெளியிட்டிருக்கிறார். 

பேராசிரியர்கள் அரச முருகுபாண்டியன், அரங்க மல்லிகா ஆகியோர் மூலமாக நேரிடையாகப் பழகும் வாய்ப்பும் சூழல்களும் அமைந்திருந்தன. 

பெண்மொழி குறித்த எனது ஆய்வுநூலை முழுவதுமாகப் படித்துவிட்டு, பல நாட்களில் பல மணிநேரங்கள் தொலைபேசியிலேயே பேசிடுவார். அந்தப் புத்தகம் அவ்வளவு பிடித்துப் போயிருந்தது. அந்த நூலுக்கு மிக விரிவான அணிந்துரையும் எழுதி அனுப்பியிருந்தார்.

என் எழுத்துலகை உள்ளன்போடு நேசித்து ஊக்கப்படுத்திய மிகச் சிலருள், அய்யா கவிதாசரணும் மிக முக்கியமாக இருந்திருக்கிறார்.

சென்னையில் இருந்த தமது வீட்டை விற்றுவிட்டு, தென்பகுதிக்கு வந்து மீதி வாழ்வைக் கழிக்க வேண்டும் என்றே பெருவிருப்பம் கொண்டிருந்தார். அன்னாரது துணைவியார் நோய்வாய்ப்பட்டு இருந்த காலங்களில் அடிக்கடி எம்மோடு பேசுவார்; எம்மையும் அடிக்கடிப் பேசச் சொல்வார். நின்றுபோயிருந்த கவிதாசரண் இதழை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்றும், கவிதாசரண் பதிப்பகம் தொடங்கி பல்வேறு நூல்களைப் பதிப்பித்துக் கொண்டுவர வேண்டும் எனத் திட்டங்கள் பல குறித்தும் நிறையப் பேசியிருக்கிறோம்.

திருமதி கவிதாசரண் அம்மையார் அவர்களது மறைவும் இழப்பும்தான் அய்யா கவிதாசரண் அவர்களை மிக அதிகளவு பாதித்திருக்கிறது. ஏற்கெனவே, தமது மகனை இழந்து தவித்த உணர்வும், பிறகு துணைவியாரை இழந்து தவித்த உணர்வும் அய்யாவை வெகுவாகப் பாதித்திருக்கிறது. 

தமது இறுதிக் கால வாழ்வில் மேற்கொண்ட ஒரு சில தனிப்பட்ட முடிவுகளால் சென்னையிலிருந்து வெளியேறி, திருச்சிக்குக் குடிபெயர்ந்து மீத வாழ்வை அமைத்துக்கொண்டார். திருச்சிக்கு வந்தபிறகு, அவருடைய கவிதாசரண் இதழ் வட்டத்தொடர்பிலும் எழுத்து வட்டத் தொடர்பிலும் இருந்தவர்களோடு உறவை நீட்டித்துக்கொள்ள விரும்பாமல், அனைத்து வட்டத் தொடர்புகளையும் தவிர்த்தேதான் வந்தார். பலரது உறவுகள் அவரோடு தொடர்புகொள்ள முடியாமல் தவித்தன. எனினும், எல்லாவற்றையும் அவர் தவிர்த்தேதான் வந்திருக்கிறார்.

எமது நிமிர்வகம் - செம்பச்சை நூலகத் திறப்பு விழாவிற்கு அவரை வரவழைக்க அழைத்துப் பேசியபோதுகூட, இப்போதெல்லாம் பொதுவெளியில் வருவதற்கு விருப்பமில்லை மகராசன் என்றே சொன்னார். திருச்சியில எங்க இருக்கீங்க? வந்து பார்க்கிறேன் என்று சொன்னபோதுகூட அதைத் தவிர்க்கவே செய்தார். ஏதோ ஒன்றுக்காகச் சங்கடப்பட்டுக்கொண்டுதான் எல்லோரையும் தவிர்க்கிறாரோ என்று பல முறை யோசித்ததுண்டு. எனினும், அவரது முடிவில் யாரும் தலையிட முடியாதுதானே.

அன்னார் வாழ்ந்த காலத்தில் ஓர் இதழை எழுத்தியக்கமாய்க் கொண்டு வருவதற்கான மிகச்சிறந்த முன் மாதிரியாய் இருந்துவிட்டுப் போயிருக்கிறார். நானெல்லாம், கவிதாசரண் இதழைப் பார்த்துத்தான் ஏர் இதழையும் அப்படிக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஏர் இதழின் உள்ளடக்கச் சாயல்கள் கவிதாசரண் இதழைப் போலத்தான் வெளிவந்தன. 

இன்று, கவிதாசரண் என்னும் எழுத்துப் பயணி, தமது பயணத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். ஆயினும், அவரது இதழியல் பங்களிப்பும் எழுத்துப் பங்களிப்பும் தமிழில் நிலைத்திருக்கும்.

போய் வாருங்கள் அய்யா.

அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும்.


ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்,

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.

28.11.2021

வியாழன், 25 நவம்பர், 2021

வேளாண் குடிகளின் வரலாற்றுப் பச்சையம் : மகிழன்

பண்பாடு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் சார்ந்த மற்றும் பொருள் சாராத குழுக்கள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த  தலைமுறைக்கு மாற்றியமைக்கப்பட்ட சூழல் எனப்படுகிறது.

பண்பாட்டு முன்னேற்றம் என்பது வரலாற்றுச் செயல்முறை ஆகும். நமது முன்னோர்கள் பலவற்றை அவர்களின்  முன்னோர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர். பின்னர் நாளடைவில் சொந்த அனுபவத்தில்  இருந்து சிலவற்றைச் சேர்த்தும் விலக்கியும் கொண்டனர்.   

இவ்வாறாக, பண்பாடு இடம் மாறி ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுவதும், எடுத்துக்கொள்ளப்படுவதும் பண்பாட்டு மரபு எனப்படுகிறது. இந்தப் பண்பாட்டு மரபுத் தொடர்ச்சி ஓர் இனத்தின் வரலாறாகவும் பரிணமிக்கிறது.

பண்பாட்டு மரபோடு சேர்த்து இலக்கியங்கள், தொல்பொருட்கள், கல்வெட்டுக்கள், இன்ன பிறவும் ஓர் இனத்தின் வரலாறாக உருக்கொள்கிறது.

இவ்வகையில் தமிழ் நிலத்தின் ஆதிக்குடிகளில் ஒன்றான, உழவுப் பண்பாட்டைத் தங்களின் பண்பாட்டு மரபாக இன்றைய தலைமுறைவரை கைமாற்றிக் கொண்டுவந்திருக்கும் உழுகுடிகள், நெல்லின் மக்கள், இலக்கிய வழக்கில் மள்ளர் எனவும் பள்ளர் எனவும், உலக வழக்கில் தேவேந்திர குல வேளாளர் எனவும் அழைக்கப்பெறும் இம்மக்களைப் பற்றிய மேற்சொன்ன   வரலாற்றின் அனைத்து உறுப்புகளோடும் பொருந்த வெளிவந்திருக்கும் இன வரைவியல் ஆய்வு நூல்தான் மகாராசன் அவர்களின் வேளாண் மரபின் தமிழ் அடையாளம்: உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்.

இம்மக்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் பல வெளி வந்திருக்கின்றன. இவை அனைத்தும் தன்னளவில் தான் சொல்ல வந்ததை நிறைவாகச் சொல்லியிருக்கின்றன எனலாம். மகாராசனின்  இந்த நூலானது, எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நூலின் இறுதியில் தொகுக்கப்பட்டுள்ள பார்வை நூல்கள் பட்டியலைக் கொண்டு அறிய முடிகிறது.

ஐவகைத் திணை வாழ்வியல் முதல், நீர்த் தெய்வங்கள் ஈறாக வேளாண் மரபின் அத்தனைப் பண்பாடுகளையும் இம்மக்களின் நிகழ்காலச் சடங்குகளோடும் பழக்க வழக்கங்களோடும் தொடர்புபடுத்திக் கூறியிருப்பது இந்நூலுக்கு இன்னும் வலுச்சேர்க்கிறது.

ஐவகை நிலங்களிலும் தொழில் சார்ந்த குழுக்கள் எவ்வாறு உருவாகியது எனவும், இத்திணை  மக்களின் வேறு வேறு பெயர்களையும் சங்க இலக்கியங்களில் இருந்தும் எடுத்தாளப்பட்டுள்ளது.

உழவர், களமர், குடியானவர், கருங்களமர், வெண்களமர் போன்ற வேளாண் குடிகளின் பெயர்க்காரணங்களைப் பாவாணர் வழியில் சொல்லியிருப்பதோடு, வேளாண்மைத் தொழில் சார்ந்த உழைப்புதான் இருவேறு வேளாளர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது என்கிறார்.

வேளாண்மை செய்தோரில் ஒரு சிலர் வணிகர்களாக மாறினர். இச்சூழலில், உழுதுண்ணும் குடும்பர்கள், உழுவித்துண்ணும் கிழார்கள் எனப் பிரிந்து வேளாளர் சமூகம் பிரிந்து, பெரும் வணிகர்களாகக் கருதப்பட்டவர்கள் கிழார்களாகவே இருந்தனர் என்ற கருத்தும் நோக்குதற்குரியதாகும்.

உழவு நாள் குறித்தல் தொடங்கி, ஏர்பூட்டல், ஏர் நடத்தல் என விரிந்து, பொலி அளத்தல், விதைக்கோட்டை செய்தல் வரை, நெல் வேளாண்மையின் அத்தனை படிநிலைகளையும் ஏர் எழுபது நூலில் இருந்து எடுத்துக் கூறியிருக்கிறார் ஆசிரியர். இதன் மூலம் வேளாண் குடிகளின் வரலாற்றுச் சான்றாகக் கம்பரின் ஏர் எழுபது என்ற நூலைப் பற்றிய  ஆய்வின் தேவையையும் இந்த நூல் தொடங்கி வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்

மருத நிலத்தில்தான் அரசு தோன்றியது என்ற கருத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக ம.சோ விக்டர் அவர்களும் ஊர்க்குடும்பனே மன்னராட்சியின் தொடக்கமும் அடிப்படையுமாக இருந்தான் என்று கூறியுள்ளதன் மூலம் அறிய முடிகிறது.

ஆரிய இந்திரன் வேறு; மருதநில மழைக் கடவுள் இந்திரன் வேறு என்பதை பாவாணர், ந.சி.கந்தையா பிள்ளை போன்றவர்களின் வழி நின்றும், சங்க இலக்கியங்களின் ஆதாரங்களின் வழியும் நிறுவி, மருதநில வேந்தன் -  இந்திரன் மழைப் பொருண்மையின் அடையாளம் என்பதையும் கூறியிருக்கிறார்.

ஆரிய இந்திரன் போர்க் கடவுள் எனவும், வெற்றி வேண்டி வணங்கப்படுபவனாகவும்  இருக்கிறான். மருதநில இந்திரன் மழை வேண்டி மட்டுமே வணங்கப்படுபவன் எனவும் வேறுபடுத்திக் காட்டியிருப்பது பல   குழப்பங்களுக்குத் தீர்வாக அமைந்திருக்கிறது.

போலவே, இந்திர வழிபாடு  மருதநிலத்தைத் தவிர வேறு எந்தத் திணையிலும் நடைபெறவில்லை என்று கூறுவதன் மூலம், மருதநில மக்களாகிய தேவேந்திர குல வேளாளர்களுக்கும் இந்திரனுக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்பு நிச்சயப்படுகிறது.

இந்திரனின் வேறு பெயர் ஆயிரம் கண்ணுடையான் என்னும் புதிய வரலாற்றுச் செய்தியை அறியத் தருகிறார் ஆசிரியர்.

இந்திரனுக்கு ஆயிரம் கண்ணுடையான் எனும் பெயரும் வழங்கப்பப்பட்டிருக்கிறது. ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவத்தைத்தான் சோழர்கள் தமது கொடியில் வரைந்திருக்கிறார்கள். சோழர்களின் கொடியில் உள்ள புலிச் சின்னமானது, ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவம்தான் என்ற செய்தியை உறுதி செய்யும் விதமாக அவரே இதற்கான தரவுகளை இராசராச சோழன் உலாவில் இருந்து
“.......தாவி
வரப்பு மலாய் சூல்வர ஆயிரம் கண்
பரப்பும் ஒரு வேங்கை பாரீர்” எனவும்,
கலிங்கத்துப் பரணியில் இருந்து
“புலியெனக் கொடியில் இந்திரனை வைத்த அவனும்”
என எடுத்தாண்டிருப்பது தீவிர ஆய்வுக்கு உரியதாகும். இதன் மூலம் இந்திரனுக்கு விழா எடுத்தவர்கள் சோழர்கள்தான் என்ற வரலாற்றுச் செய்தியின் பின்புலமாக இதைக் கொள்ளலாம்.

வேந்தன் வழிபாடு, நாற்று நடவுத் திருவிழா, பொன்னர் பூட்டும் திருவிழா, நெல் வகைகள், பள்ளு வகைகள், அருவடைத் திருவிழா, நீர் மேலாண்மையில் வேளாளர்களின் இருப்பான மடைக்குடும்பன், நீராணிக்கன் போன்ற தகவல்கள் கூறியது கூறலாக இருப்பதையும் காண முடிகிறது. அதே நேரத்தில், இவற்றைச் சொல்லாமல் வேளாளர்களின் வாழ்வியலை முழுமைப்படுத்த முடியாது என்பதையும்  ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

பண்பாட்டுத் தடங்களை அழிப்பதன் மூலம் அல்லது மாற்றுவதன் மூலம், ஓர் இனத்தின் வரைவியலை எவ்வாறு வரலாற்றின் பக்கங்களில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என்பதைச் சொல்லியிருப்பதோடு, தமிழ் நாட்டு வரலாற்றில் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தொல்குடிகளின் பண்பாட்டு மீதான தாக்கங்கள் பற்றிய அறிதலில் நமது போதாமை குறித்தும் பேசியிருப்பதில் இந்நூல் முக்கிய இடம் பெறுகிறது.

இந்த நூலின் மற்றுமொரு சிறந்த விடயமாகப் பார்ப்பது, இதன் உள்ளடக்க அத்தியாயங்கள்.

வேளாண் மரபின் குலங்களும் கூட்டங்களும், வேளாண் உற்பத்தியும் போலச் செய்தல் சடங்குகளும், உற்பத்தி வடிவம் - தெய்வங்களும் சமூக மரபுகளும், வேந்தன் - இந்திரன் மழைப் பொருண்மையின் அடையாளங்கள், தமிழர் மரபில் இந்திர அடையாளம், இந்திரன் - தெய்வேந்திரன் வேளாண் தொன்மங்களும் வரலாறும், அறுவடைச் சடங்கு: வேளாண் உற்பத்தியின் நிறைபேறும் போலச் செய்தலும், வேளாண் மரபின் ஆசீவகத்  தடங்கள், வேளாண் மரபின் பண்பாட்டு அடையாளப் போராட்டம் போன்ற இந்நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் நீண்ட ஆய்வையும் வாசிப்பையும் கோருவதாக இருக்கிறது. மேலும், இந்த அத்தியாயங்களை இன்னும் விரிவாக தனித்தனி ஆய்வு நூலாக எழுதுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் தேவையையும் இந்த நூல் முடுக்கி விட்டிருக்கிறது என்று அறுதியாகச் சொல்லலாம்.

வேளாளர் குறித்த  கருத்து முரண்பாடுகள் உருவாகியிருக்கும் இன்றைய சூழலில், தொல்தமிழ்க் குடிகள் இந்நூலினைப் பாரபட்சமின்றி அணுகினால், தங்களின் நிலைப்பாட்டின் மீதான நியாயத்தை மறுபரிசீலனை செய்து கொள்ள இந்நூல் ஒரு நல்வாய்ப்பாக இருக்கும் என்று நம்பலாம்.

வரும் காலங்களில் வேளாண் மரபினரைப் பற்றிய ஆய்வை மேற்கொள்பவர்களுக்கு, மகாராசனின் வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும் என்ற இந்த நூலானது நிச்சயமாக ஒரு கைகாட்டி மரமாக நிற்கும்.


வேளாண் மரபின் தமிழ் அடையாளம்:
உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு 2021. பக்கம் 224, விலை ரூ 250/-

கட்டுரையாளர்:
மகிழன்,
பதியம் இணைய ஆசிரியர்.

நன்றி:
https://www.pathiyam.com/view.php?id=2



வேளாண் மரபை அழுத்தமான வரலாற்றுத் தரவுகளோடு விவரித்திருக்கும் முக்கியமான நூல். : செட்டி.வெ.அசோக் பண்ணாடி



வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனத் தொடங்கிய இந்நூலின் ஆசிரியர், தமிழினத்தின் மொத்த அடையாளமே வேளாளர் குடியின் வாழ்வியலும் வரலாறும்தான் எனத் தீர்க்கமான தரவுகளோடு தீர்ப்பளித்து  முடித்துள்ளார். இவைகளுக்கு ஆதாரமாகத் தொல்காப்பியர், கம்பர், வடமொழி வால்மீகி, ஔவையார் போன்ற தெய்வப் புலவர்களை இந்நூலில் பேச வைத்துள்ளார். 

சமகால அறிஞர் பெருமக்களான மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், சீர்மிகு சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் என, அமரர் பிரபஞ்சன், வாழும் வரலாறு ம.சோ.விக்டர் ஐயா, சாகித்ய அகாடமி விருதாளர் சோ. தர்மன் ஐயா போன்ற ஆளுமைகள் அனைவரும் சாட்சியம் அளித்துள்ளனர். 

ஆக, சங்ககாலத்தில் கோன் உயர அடிப்படை ஆதாரமாக இருந்த மண் விரும்பும் மழையின் மக்கள், சேற்றுக்கால் செல்வர்கள், நெல் வேளாண்குடிக்கு இருந்த பண்பாட்டு விழுமியங்கள், கால ஓட்டத்தில் மிச்சம் இல்லாமல் கரைந்து போக வேண்டுமெனத் திட்டமிட்டு ஆடிவந்த அரசியல் ஆடு களத்தில், குடத்திலிட்ட விளக்காய்  மங்கிக் கொண்டிருந்த வேளாண் குடியின் மாண்புகளைத் தக்க தருணத்தில் இந் நூலின் மூலம் ஆதவன் ஔி போல் குன்றில் ஏற்றி வெளிச்சப்படுத்தியுள்ளார். 

திணை சார்ந்த மக்களின் இயல்பு, குண நலன்கள் அமைதல் மற்றும் தெய்வ உருவ வடிவமைப்புகள் பற்றிய பதிவினூடே, பொதுவுடைமையை மானுடம் உணர்வதற்கு முன்பே ஈகம், இரக்கம், கூட்டுறவு, ஊர்க்குடும்பு என்ற குணங்களை இயல்பாகக் கருவிலேயே  பெற்றுப் பிறப்பெடுத்தவர்களே வேளாண்குடி மக்கள் என அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். 

ஐந்தவித்து மானுட நிலையிலிருந்து இறைநிலை பெற்ற இந்திரன் அருளால், இன்றைக்கு நம் கையில் இருக்கும் கவளச் சோற்றின் ஒரு பருக்கை, கடந்து வந்த பல ஆயிரம் ஆண்டு கால வரலாற்றின் வழித் தடத்தில் நம்மையும் பின்னோக்கிக் கூட்டிச் சென்றிருக்கிறார். 

இவ்வழியிலான பரிணாம ஓட்டத்தில் மானுடம் ஏற்றுக் கொண்டவைகளையும், விலக்கிக் கொண்டவைகளையும் தற்குறிப்பேற்றல் இல்லாமல் நம் சிந்தனைப் புலனில் காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார். 

எள்ளு நட்டேன் விற்கல, கொள்ளு நட்டேன் விற்கல, நெல்லு நட்டேன் விற்கல, கல்லு நட்டேன் வித்துடுச்சு.

இது புளி ஏப்பக்காரர்களுக்கு நகைச்சுவையாக இருந்தாலும், இன்றைய வேளாண் தொழிலின் மிகக் கசப்பான இருப்பு நிலை இதுதான் என்ற அக்கறையையும் பதிவு செய்திருக்கிறார். 

உலகமயமாதல் போக்கில் உணவு சார்ந்து எதிர்கொள்ள இருக்கும் ஆபத்தை உணராமல் வேகமாகக் கடந்து போய் கொண்டிருக்கும் இவ்வேளையில், சரியான காலத்தில் வேளாண்மை குறித்த நிதர்சனத்தை நிதானித்துச் சிந்திக்கத் தூண்டும் நூலாக இந்நூல்  கிடைக்கப்பெற்றிருக்கிறது. 

கோன் உயர அடிப்படை ஆதாரமாகப் போற்றி வளர்த்த வேளாண் தொழிலின் சிறப்புகள், சங்க காலத்திற்குப் பிறகு - நெடுங்கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அழுத்தமான வரலாற்றுத் தரவுகளோடு  இந்நூல் மூலம் நமக்குக் கிடைத்திருப்பதென்பது, வேளாண் தொழிலில் ஏற்பட்டிருக்கும்  காணாமையையும், சலிப்பையும், தொய்வையும் போக்கும் அருமருந்தாக இந்நூல் கிடைக்கப் பெற்று மிகப் பெரிய குறையைத் தீர்த்து வைத்துள்ளது என்று சொன்னாலும் மிகையாகா. 

ஆதிக்கும் அந்தத்திற்கும் இடையில் பல சமயங்கள் தோன்றி இருந்தாலும், இன்றைக்கு நிலவி வருகிற சமய பேதங்கள் இந்திர சமயத்திற்கும், ஆரிய சமயத்திற்குமான போரே அமுக்கமாக ஊடாடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை, வைதீகச் சமய வேள்வி வழிபாட்டையும், தமிழர்கள் வழிபாடான இயற்கை வழிபாட்டையும் நேரெதிராகப் பொருதி வகைப்படுத்தி ஆசிரியர் பதிவு செய்யத் தவறவில்லை. 

ஆக, சங்க காலந்தொட்டு சமகாலம் வரை மானுடம் பரிணமித்த அத்தனை பரிணாமக் கோணங்களும் வேளாண்மையும் அதன் உற்பத்தியும் உபரியுமே தீர்மானித்து வந்துள்ளது என்ற எதார்த்தத்தைத் தீர்க்கமாகப் பதிவு செய்துள்ளார். 

இந்திய அரசியலில் நடந்து முடிந்த அதிரடி மாற்ற நடவடிக்கையிலும், பெருந்தொற்றால் உலகமே தோற்றுக் கொண்டிருந்த காலத்தில், உணவும் வேளாண்மையுமே உயிரென்ற மதிப்பீட்டை உணர்த்தியுள்ளது. 

ஆக, இந்நூலில் தான் சொல்ல வந்ததை விளங்கச் சொல்லி இருப்பது என்பது மிக எளிதாக, ஏதுவாக, எளிமையான நடையில்  இருந்தாலும், வலிமையான தரவுகளோடு, பொருத்தமான சான்றாதரங்களோடு கருத்தியலைத் தெளிவாகச் சொல்லி, வேளாண் மக்களின் வேந்தனான இந்திரனை  அரியணை ஏற்றி ஆட்சி செய்ய இந்நூல் மூலம் மீண்டும் அழைத்திருக்கிறார் இந்நூலாசிரியர்.

இந்நூல் போல் சிறந்த படைப்புகள் பல படைத்து தமிழுக்கும், இனத்திற்கும், வரலாற்றிற்கும் பெருமை சேர்க்கும் ஆய்வாளர் மகாராசனின் எழுத்துப் பணி தொய்வின்றி வளர எம் மனமார்ந்த வாழ்த்துகள். 

*

கட்டுரையாளர்:
செட்டி.வெ.அசோக் பண்ணாடி,
சமூகச் செயல்பாட்டாளர்,
கோயம்புத்தூர்.

திங்கள், 15 நவம்பர், 2021

வேளாண் மரபினரின் வாழ்வியல் பண்பாட்டு வரலாற்றைப் பொதுச் சமூகம் உள்வாங்கிக்கொள்ளும் அறநோக்கில் வெளிவந்திருக்கும் முக்கியமான நூல்: அழகர்சாமி பாண்டியன்


வேளாண்மையை வாழ்வியலாக கொண்டவர்கள் திருட மாட்டார்கள். மானிடர்க்கும் மற்ற பிற உயிரினங்களுக்கும் இரையை ஈகை செய்பவர், பிறரின் உடமையைக் கவர்வது அரிது எனும் அறத் தத்துவ விளக்கத்தோடு  தொடங்குகின்றது மகாராசன் எழுதிய வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல். 

உயிரிகளுக்கு உணவு முக்கியம். உணவுக்கான தேடுதல், சேகரித்தல், பூர்த்தி செய்தல் போன்றவை எங்ஙனம் நடந்தேறுகிறது?

வெள்ளாமை அல்லது வேளாண்மை என்றால், பொதுவாக நெல் உற்பத்தியையே குறிக்கும். ஆதிமனிதன் அரிசியிலிருந்து அதிகாரத்தைப் பற்றிச் சிந்தித்தான். 

வேளாண் உற்பத்திக்கும் அரசு உருவாக்கத்திற்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்பு, விரிவாகச் சொல்வதென்றால், குடும்பத்தை நிர்வகித்ததால் குடும்பத் தலைவன் குடும்பன் என்றழைக்கப்பட்டன். பல குடும்பங்கள் கூடி வாழ்ந்த பகுதி ஊர் என்றும், குடிமக்களின் தலைவன் ஊர்க் குடும்பன் என்றும் அழைக்கப்பட்டான். கூடி வாழ்ந்த மக்களின் ஊர்க் குடும்பு முறையே அரசு உருவாக்கத்தின் முதலும் மூலமும் ஆகும். 

பன்னெடுங்காலமாக மனிதர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வரும் ஒப்பற்ற பெருங்குடியான வேளாண் மரபினரைக் குறித்தான விரிவான ஆய்வுகளோ, படைப்புகளோ, பக்கச்சார்பற்ற பொது உரையாடல்களோ திறந்த மனதோடு இதுநாள்வரை நடைபெறவில்லை என்கிற‌ குறைபாட்டினை அறச்சீற்றமாய் நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். 

வைகை எனும் பொய்யா குலக்கொடியாளின் கரையோரத்தில் வாழ்வையும் வசிப்பிடத்தையும்  கொண்ட நூலாசிரியர், மருதை மண்ணின் மைந்தன் என்பதால் மாந்த நாகரிகத்தின் தொட்டிலான ஆற்றங்கரையோர மனிதர்கள் உருவாக்கிய நாகரீகம், நகரியம், அம்மக்கள் ‌நீருக்கும் நிலத்திற்கும்  அளிக்கும் முக்கியத்துவம் குறித்து‌ எவ்விதமான இட்டுக் கட்டுகளின்றி இயல்பாக விளக்கியுள்ளார். 

வேளாண் குடிமக்களின் பண்பாடு, வரலாறு, வாழ்வியல் வலிகளை ஏனைய பிற சமூகங்கள் உள்வாங்கிக் கொள்வதிலும், உள்வாங்கிக் கொண்டதிலும் உள்ள போதாமைகளை விரிவாக அலசுவதோடு, ஒவ்வொரு சமூகமும் பிற சமூகங்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்வதில் கவனம் செலுத்தினாலே  போதும், சமூகங்களுக்கு இடையே ஏற்படும் சஞ்சலங்களுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வை எளிதாக எட்டிவிடலாம் என்கிறார். 

குறிஞ்சி நிலப்பரப்பில் இரையின் தேவையின் பொருட்டும், வாழ்க்கை நிமித்தமும் தம்மைத் தற்காக்க, எதிராளியைத் தாக்க வேட்டை வாழ்முறைக்குப் பழக்கப்பட்டிருந்தது மாந்தர் இனம். 

மலை மாந்தர்களின் ஒரு குழு மலையடிவாரப் பகுதிக்குத் தேடலின் நிமித்தம் வருகின்ற காலகட்டத்தில் சீரற்ற காடும் மேடுமான  அடிவார நிலப்பரப்பைக் கண்ட பின்பு, மலைவாழ்க்கையில் தாங்கள் பழக்கப்படுத்திய விலங்குகளான ஆடு மாடு முதலான சில விலங்குகளை மேய்ச்சலுக்குப் பழக்கியதோடு தம்முடைய உணவு மற்றும் உற்பத்தி சார்ந்த தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பழக்கப்படுத்தப்பட்ட  விலங்குகளை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்த வேண்டும் என்கின்ற நுட்பத்தைக் கண்டறிகிறார்கள். அதன் நீட்சியாக மாட்டோடு மனிதர்கள்  ஏற்படுத்திக்கொண்ட பிணைப்பும் இணைப்புமே மரபார்ந்த வேளாண்மை துவக்கத்திற்கான அச்சாரம்  என்பதை அறியலாம். 

ஆடு மாடுகளோடு அலைகுடி வாழ்க்கைக்கு ஆட்பட்டிருந்த  குழுவினரில் ஒரு சாரார், மெல்ல கீழ்நோக்கி நகர்ந்து ஆறுகளையும் ஆற்றங்கரையோரச் சமவெளி நிலங்களையும் அறிந்திடும் காலகட்டத்தில்தான் அலைகுடி நிலையிலிருந்து முன்னேறி, நிலைத்த குடி வாழ்க்கைக்கு மானுடம் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. 

நிலைத்த குடியிருப்பு வாழ்முறைக்கு மனிதர் மாறிய அக்காலகட்டத்தில்தான் உலோகங்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக, இரும்பைக் கண்டறிந்ததுதான் மாந்த நாகரிகத்தின் வளர்ச்சிக்கும், வாழ்வியல் மாற்றத்திற்கும் வழிகோலியது எனத் தீர்க்கமாகச் சொல்லலாம். இரும்பின் வருகையே உழவைச் செழுமைப்படுத்தியதோடு, சிறப்பான வாழ்வுக்கும் வழிவகுத்தது.

உழவு என்றால் உழுகின்ற மனிதன், மாடு, கலப்பை, நிலம்  யாவையையும் சேர்த்து பொதுவாய் உழவு என்பதாக அடையாளம் காட்டப்படுகிறது. இக்காலகட்டத்தில்‌ ஆற்றங்கரையோரச் சமவெளிகளைப் பண்படுத்தி வேளாண்மை செய்யும் பொருட்டு நிலங்கள் குழுக்களுக்குள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. 

பின்பு, உழைப்பின் அடிப்படையில் நிலம் தனி நபர்களின் சொத்தாக மாற்றம் பெறுகின்றது. புதிதாக உருவாகிய நிலவுடைமைச் சமூகம்‌ தோன்றுகிறது. காலவோட்டத்தில் நிலம் வேளாண் குடியினரின் கட்டுப்பாட்டிற்குள்ளும் வந்தது. இக்காலகட்டத்தில் பிற‌பகுதியிலிருந்து வந்த‌ பிராமணர்களின் இருப்பு கேள்விக்குறியாகிப் போனதைக் கண்டு அச்சமடைந்து ஆத்திரம் கொள்கின்றார்கள். 

காரணம், பிராமணர்கள் ஆடு மாடு மேய்ப்பதற்குப் பயன்படுத்திய தரிசு நிலங்களை தேவேந்திரர்கள் பண்படுத்தி கழனிகள் ஆக்கியதால், கால்நடைகளின் மேய்ச்சல் பாதிக்கப்பட்டதோடு, வேளாண்மையின் உற்பத்தி, உழைப்புப் பங்குதாரராக அறியப்பட்ட மாடுகளை, பிராமணர்கள் உணவுக்காகவும் யாகத்திற்க்காகவும்  கொல்வதை தேவேந்திரர் எதிர்த்தனர்.

இதனால், தேவேந்திரர்களுக்கும்  பிராமணர்களுக்குமான மோதல் என்பது கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்கும் நிலவுடமைச் சமூகத்திற்குமான மோதலாக மாற்றம் பெறுகின்றது. 

கால்நடை வளர்ப்புச் சமூகப் பிரதிநிதிகளாகப் பிராமணர்களும், நிலவுடமைச் சமூகப் பிரதிநிதிகளாகர் தேவேந்திரர்களும் நின்று போராடினார்கள். 

சுருங்கக்கூறின், பழமைக்கும் புதுமைக்கும் இடையே நடந்த பெருத்த மோதலில் தேவேந்திரர்கள் புதுமையின் பக்கம் நின்றார்கள் என்பதோடு, வென்றார்கள் என்பதே வரலாறு என அறிந்து கொள்ளலாம். 

வேளாண்மை முதன்மைத் தொழிலாய் மாறிப்போனதால் ஏற்பட்ட அச்சம் மற்றும் பகையுணர்வின் காரணமாகவே வேளாண்மை என்பது இழிதொழில்; நிலத்தை உழுவது பாவச்செயல் என்பதான பரப்புரையில் பிராமணர்கள் ஈடுபட்டதைச் சுட்டிக் காட்டுவதோடு, உழவை ஒரு தொழிலாக எண்ணாமல், பசிப்பிணி போக்குதல் பாரம்பரியமாய்ச் செய்து வரும் கடமையாகவும், பண்பாட்டு நீட்சியாகவும் மள்ளர் பள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்கள் செய்துவருவதைப் பள்ளு இலக்கிய நூல்களான முக்கூடற்பள்ளு, பொய்கைப் பள்ளு, பேரூர்ப்பள்ளு, நெல்விடு தூது, ஏரெழுபது, மகிபன் பள்ளு, திருவேட்டை நல்லூர் பள்ளு உள்ளிட்ட நூல்கள் வாயிலாகவும், 

வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோன் உயரும் எனும் அவ்வையாரின் வரிகளினூடகவும், உழவர்களின் பாரம்பரியம், பண்பாட்டு விழுமியங்கள் குறித்துத் தொல்காப்பியம், திவாகர சூடாமணி நிகண்டுகள், ஏரெழுபது, திருக்குறள், பதிற்றுப்பத்து, புறநானூறு, கம்பராமாயணம், பேரூர்ப் புராணம், ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, கலித்தொகை உள்ளிட்ட பல இலக்கியத் தரவுகளோடு, தரிசாய்க் கிடக்கும் நிலத்தை முச்சாலடித்து  நாற்று பாவுவதில் தொடங்கி, அறுப்பு முடிந்ததும் விதை நெல்லு சேகரம் செய்வதோடு, வேளாண்மைக்கு துணையாய் இருந்த 18 குடிமக்களுக்கும் களத்தில் படி அளத்தல் எனப் பாரம்பரிய நடைமுறைகளைச்  சுட்டிக் காட்டுவதோடு, வயலிலும் வரப்பிலும் காட்டிலும் கழனியிலும் வெள்ளந்தியாய் உலாவித்திரிகின்ற நெல்லின் மக்களினுடைய மகிழ்ச்சி கோபம், வலி, வறுமை, காதல், கொண்டாட்டம்  என சங்க இலக்கியம் கொண்டு வண்ணம் தீட்டியுள்ளதோடு, நாற்று நடும் குடும்பமார் குல மங்கையரின் குலவை ஒலி முதல் தினவெடுத்த காளைகளை அடக்கும் குடும்பர்களின் செருக்கு வரை பண்டையக்  காலத்தைய மனிதர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க நம்மைத் தூண்டுவதோடு, தற்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்ற வேளாண்மையையும் மக்களின் பாடுகளையும், வேளான் மரபினரைச் சாகடிக்க முயலும் - சாவுக்குத் தூண்டும்  பெருநிறுவனங்களின் கோர முகத்தை அடையாளம் காட்டுவதோடு, நம் பாட்டன் பூட்டன் காலம் தொட்டு பாரம்பரியமாய்ச் செய்துவரும் மரபுவழி வேளாண்மையை மீண்டும் தொடர வேண்டும் என்கின்ற எச்சரிக்கை மணியையும் அடித்து இருக்கிறார். 

வயல் வரப்பில் மண்வெட்டியோடு நிற்கும் குடும்பனிலிருந்து, வழிந்தோடும் வாய்க்கால் நீரில் சீறிப் பாயும் கெண்டை மீன்கள் வரை மருதநிலத்தின் பண்பாட்டு அடையாளங்களை மிகக் கச்சிதமாய் அடையாளப்படுத்தி இருப்பதோடு, சித்திரமேழி என்றால் அழகிய கலப்பையைக் குறிக்கும் சொல்லாகும். மேழியைச் சித்திர ஓவியமாய் வரைந்து, அதைத் தங்களுடைய அடையாளமாய்க் கொண்டிருப்பவர்களால் உருவாக்கப்பட்டதுதான் சித்திரை மேழி பெரிய நாட்டார் சபை என்பதை அறியத் தருகிறார். 

தந்தை தாய் குரு தெய்வமும் செந்தமிழ்ப்பூசுரர் இன்றி சதிராய்ப் பின்னுள்ளவர்களை மதியாதவன் ...இந்திரன் குலத் தோன்றியே வந்த நாள் முதலாகவே இலகும் ஏழூர் குடும்பன் நானே .... எனும் பாடல் மூலம்  தமிழ் மூவேந்தர்களைத் தவிர அரசு அதிகாரம் சார்ந்த வேறு எவரையும் வழிபடுவது, தொழுவது  உழவுக் குடியின் வழக்கத்தில் இருந்ததில்லை என்பதோடு, குடும்பத்திலோ, குடியிலோ வாழ்ந்து மடிந்தவர்கள் நினைவாக நடத்தப்பட்ட நீத்தார் வழிபாடு, நடுகல் வழிபாடு போன்றவை ஏதோ ஒரு வகையில் மக்களுக்காகப் பாடுபட்டு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் நினைவைப் போற்றும் ஒரு சடங்காகவும் மரபாகவும் நாம் பின்பற்றி வருகிறோம். 

அவ்வகையிலேயே மக்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தியவர்களைத் தொழுததும் வாழ்த்துவதும் மட்டுமல்லாது, அவர்கள் வழியில் தங்கள் வாழ்வியலை வரையறுத்துக் கொண்ட அவர்களுடைய சந்ததியினர் உயிர் நீத்த முன்னவர்களைத் தெய்வமென தொழுது வழிபடத் தொடங்கினர். 

தமிழ் மண்ணிலே தோன்றிய வேந்தன் வணக்கமானது, முதல் பாண்டிய வேந்தனையே குறிக்கும். அவனுடைய இறப்பிற்குப்பின் தெய்வ வேந்தனாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

வேந்தன் தெய்வ நிலை அடைந்த பிற்பாடு தெய்வ வேந்தன் ஆகிறான். தெய்வ வேந்தனே பிற்காலத்தில் மருவி தேவேந்திரன் என்று சொல் உருவாகின்றது. இந்திரன் என்கின்ற சொல்லிற்கு இனத்தின் தலைவன் அல்லது கூட்டத்தின் தலைவன் என்பதாகத்தான் பொருள் சொல்லப்பட்டிருக்கின்றது. 

ஆரியர்கள் வழிபடக்கூடிய ரிக் வேதம் சுட்டிக்காட்டும் இந்திரனுக்கும், தமிழர்கள் போற்றி வணங்கக்கூடிய இந்திரனுக்கும் உள்ள வேறுபாடுகளை பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுத் தகவல்களோடு சான்று பகர்ந்திருப்பதோடு, நீர் மேலாண்மை, வேளாண்மையைப் பாரம்பரியமாகச் செய்துவரும் வேளாண் மரபினரான தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் பண்பாடு, வரலாறு, வாழ்வியல் உள்ளிட்ட உள்ளார்ந்த விசயங்களைத் தயக்கம் தவிர்த்துப்  பரந்துபட்ட பார்வையோடு பொதுச் சமூகம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை, இந்நூல் காத்திரமான  தரவுகள் வாயிலாக அறத்தின் வழிநின்று திறம்பட நிறுவியிருக்கிறது. நூலாசிரியருக்கு வானமும் வசப்பட எனது‌ வாழ்த்துகள். 

மனமாச்சர்யங்களை விடுத்து வாருங்கள்  தமிழ்ச் சொந்தங்களே ..!கரம் கோர்ப்போம்; களம் காண்போம். வீழ்ந்து கிடக்கும் தமிழரின் பண்பாட்டு  அடையாளங்களோடு, அதிகாரத்தையும் மீட்டெடுப்போம் ..!

நன்றி.

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
வெளியீடு:
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச : 9080514506.
*
கட்டுரையாளர்:
அழகர்சாமி பாண்டியன்,
சமூகச் செயல்பாட்டாளர்.

ஞாயிறு, 14 நவம்பர், 2021

ஆரிய வைதீகத்திற்கு எதிரான மாற்றுப் பண்பாட்டைக் கட்டமைத்திருக்கிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : வருசக்கனி, நாட்டுப்புறவியல் ஆய்வாளர்


எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் வாழ்த்துரையுடன் தொடங்கும் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் இந்நூல், வேளாண்மை: உழவுப்பண்பாடும் வேளாளர் வரைவியலும், நீர் மேலாண்மை: வேளாண் மரபினரின் நீர் அறுவடைப் பண்பாடு எனும் இரு கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

சோ.தர்மன் அவர்களின் வாழ்த்துரைக் கூற்றுகள் மூலம், தமிழகத்தில் நீர்நிலைகள் பராமரிக்கப்பட்ட விதத்தையும் நீரைச் சார்ந்தே ஒழுக்கம் உருவாவது பற்றியும் அறியலாம்.

மகாராசன் அவர்கள், இந்நூலில் தமிழின் ஐவகைத் திணைகளையும் -  திணை சார்ந்த உற்பத்தி முறைகளையும் உழவுப் பண்பாட்டின் வழியாக விளக்குகிறார். இரும்பின் கண்டுபிடிப்பானது மேய்ச்சல் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், முல்லையில் வளர்ந்த வேளாண்மை மருதநிலத்தில் செம்மை பெற்று உபரி அதிகரித்த விதத்தையும், உபரியின் மூலம் மருத நிலத்தில் அரசு நிலைபெறத் தொடங்கியதையும் முதல் கட்டுரையில் விளக்குகிறார்.   உணவு உற்பத்தி எவ்வாறு  அதிகார உருவாக்கத்திற்கான காரணமாக அமைகிறது என்பதை மிக விரிவாகவே விளக்கியுள்ளார். மேலும், உணவு உற்பத்தியில் உபரியானது சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கிய விதம், மருத நிலத்தில் நிலங்களின் அளவைப் பொறுத்து உழுவித்துண்போர், உழுதுண்போர் என இரு பிரிவாக மாறியதையும் விளக்குகிறார்.
ஐவகைத் திணைகளால் பிரிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள், மொழியின் அடிப்படையில் ஒரு தேசிய இனமாக மாறிய விதம் முக்கியமானது எனக் கருதுகிறேன். சாதிய ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இன்றைய சூழலில், சாதிய ஏற்றத்தாழ்வுகள் அற்ற 'தமிழர்' என்ற பொது அடையாளத்தின்கீழ் அணிதிரட்டுவதற்கான உத்தியைத் தேடுவது அவசியமாகிறது.
மருத நில மக்களின் மழைத் தெய்வமான இந்திரனைப் பற்றியும், இந்திர விழா பற்றியுமான தகவல்களைச் சங்க இலக்கியங்களில் இருந்தும், சமகாலத்தில் பா. அரிபாபு, தே.ஞானசேகரன் போன்ற ஆய்வாளர்களின் நாட்டுப்புறச் சடங்குகள், வாய்மொழித்தரவுகள் மூலமாகவும், மறைமலையடிகள், மா.சோ. விக்டர், பாவாணர் போன்ற அறிஞர்களின் எழுத்துகளிலிருந்தும் தொகுத்துள்ளார்.
ஒரு மக்கள் கூட்டம் என்ன வகையான உற்பத்தி முறையைச் சார்ந்திருக்கிறதோ, அதைப்பொறுத்தே அத்தெய்வங்களின் வடிவங்களும் குணங்களும் அத்தெய்வத்தைப் பற்றிய கதைகளும் அமையும் எனக் கூறும் ஆய்வாளர் தொ.ப வின் கருத்துகளிலிருந்து மருத நில மக்களின் மழைத்தெய்வமான இந்திரனைப் புரிந்துகொள்ளலாம்.

ஆரியச் சடங்கியல் மரபுகள்  நெருப்போடும்  வானத்தோடுமே நெருங்கிய தொடர்புகொண்டுள்ளன. ஆரியப் பண்பாட்டில் நிலத்தை உழுது உழைப்பது பாவத்திற்குரிய செயல் என உழவுத்தொழிலை வைதீகம் விலக்கி வைக்கிறது.  ஆனால், தமிழ்ச் சடங்கியல் மரபுகள் நீரோடும் நிலத்தோடும் தொடர்புடையதாக இருக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டில் உழவுத்தொழில் உயர்வாகப் போற்றப்படுகிறது. இதன் வழியே தமிழ் உழவுக்குடிகளின் மழைத்தெய்வமான இந்திரன் எனும் வழிபாட்டு அடையாளமானது, ஆரியப் பண்பாட்டிற்கு எதிரான தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளையே பெற்றிருக்கிறது என்பதும், தமிழ் இந்திர வழிபாட்டிற்கும் ஆரிய வழிபாட்டிற்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதையும் நூலாசிரியர் நிறுவுகிறார்.

மேலும், இந்திரன் - வெள்ளை யானை - வெண்மை ஆகிய அடையாளங்கள் ஆசீவகத்தோடு தொடர்புடையவை. தமிழகத்தில் ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகள் சார்ந்த இடங்களில் ஐயனார் கோவில்கள் அமைக்கப்பட்டிருப்பதையும் ஆய்வு செய்து, இந்திர அடையாளம் என்பது  ஆசீவக அடையாளம்தான் என அறிஞர் க. நெடுஞ்செழியனின் ஆய்வுகள் கூறுகின்றன.
அயோத்திதாசர் இந்திரனை புத்தர் என நிறுவுகிறார். ஐம்புலன்களையும் அடக்கியதால் ஐந்திரன் என அழைக்கப்பட்ட புத்தர் ஐந்திரன் - இந்திரன் என அழைக்கப்பட்டார். இந்திரனைப் பின்பற்றியவர்கள் இந்திரர்கள் எனவும், அவர்கள் வாழ்ந்த நாடு இந்திர தேசம் எனவும் அழைக்கப்பட்டது என அயோத்திதாசர் தம் ஆய்வுகள் வழியே நிரூபிக்கிறார். அதற்கான ஆதாரங்களைத் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, வீரசோழியம், பிங்கல நிகண்டு போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்தாள்கிறார். மேலும், வேளாண்குடிகள் இன்றளவும் பின்பற்றி வரும் வளமைச்சடங்கான பொன்னேர் பூட்டுதல் நிகழ்வானது பௌத்தக் கூறுகளைக் கொண்டுள்ளதையும் விளக்குகிறார்.
இந்திர வழிபாடான இந்திர விழாவைச் சோழ மன்னன் நிறுத்தி வைத்ததால், மணிமேகலா தெய்வம் கோபம் கொண்டு நகரை அழித்தது என்ற மணிமேகலைக் காப்பியத்தின் துணைகொண்டு, இந்திரன் பௌத்த  கடவுள் என மயிலை சீனி வேங்கடசாமி பதிவு செய்துள்ளார்.
பேரா டி.தருமராஜன் அவர்களின் கட்டுரையில் கால்நடை மேய்ப்புச் சமூகமாக இருந்த பிராமணர்களுக்கும், உழவுத்தொழில் செய்யும் வேளாண் சமூக மக்களுக்கும் இடையேயான மோதலின் வழியாக ஒரு மாற்று வரலாறைப் பதிவு செய்கிறார். பிராமணர்களின் யாகங்களில் கால்நடைகளைப் பலியிடுதலை எதிர்த்த வேளாண்குடிகளுக்கும் பிராமணர்களுக்குமான மோதல், நிலங்களைப் பங்கிட்டுக் கொள்வது, நீர் ஆதாரங்களைப் பங்கிட்டுக் கொள்வது, பிற வளங்களைப் பங்கிடுதல் தொடங்கி, அதிகாரங்களைப் பங்கிட்டுகொள்வது வரை மோதல் நீடித்தது.

அரசர்கள் வளமான விவசாய நிலங்களைப் பிரமதேயங்களாகப் பிராமணர்களுக்குக் கொடுத்தபோது, அதை எதிர்த்து வேளாண்குடிகள் வணிகக் குழுக்களோடு இணைந்து அரசிற்கு வரி செலுத்த மறுத்துத் தங்களுக்கென தனிக்கொடி, தனி இலட்சினை ஆகியவற்றை 'சித்திர மேழி பெரிய நாட்டார் சபை' என்ற பெயரில் பிராமண ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண்மையில் ஈடுபடும் மக்களின் உழைப்பு, உற்பத்தி சார்ந்த அறிவு, உணவளிக்கும் ஈகைப் பண்பு போன்ற குணங்கள் பௌத்த மதத்தின் வித்தை, புத்தி, ஈகை  என்ற பௌத்த கூறுகளை ஒத்திருக்கின்றன. வேளாண்குடிகள் - பௌத்தம் இடையேயான ஊடாட்டத்தின் மூலமே இவை நிகழ்ந்திருக்க முடியும். ஏனெனில், உணவிடுதல் எனும் கருத்தைப் பற்றி மற்ற மதங்களை விட பௌத்தமே அதிகமாகப் பேசியிருக்கிறது.
இந்திரனைப் பற்றிய பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுகளைத் தொகுத்து, இந்திரன் ஆரிய அடையாளமில்லை; இந்திரன் தமிழ் அடையாளமே என்பதை நூலாசிரியர் உறுதிப்படுத்துகிறார். இவ்வாறு, வைதீகத்திற்கு எதிரான இந்திர அடையாளத்தை வைத்து மாற்றுப் பண்பாட்டு மரபுகளை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம், வைதீகத்திற்கு எதிரான பண்பாட்டுக் கூறுகளைக் கண்டறிந்து, அவற்றைப் பிராமணீயச் சிந்தனை  என்ற ஒற்றைத்தன்மைக்கு எதிரான சமண, பௌத்த, ஆசீவகம் போன்ற பன்மைத்துவப் பண்பாட்டு ஆய்வுகள் வழியே புரிந்து கொள்ள முயற்சி செய்ய இந்நூல் முன்னெடுப்பாக அமைந்திருக்கிறது.
சாதிய மேலாதிக்கமும் - அதன்வழிப்பட்ட பண்பாட்டு மேலாதிக்கமும் நிலவும் சூழலில், அதற்கு எதிரான ஆதிக்க எதிர்ப்புப் பண்பாடுகளும் இருந்துகொண்டேதான் உள்ளன. கெடுவாய்ப்பாக,  சாதிய மேலாதிக்க நடவடிக்கைகளையும், சாதிய மேலாதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்ளும் போக்கே தமிழ்ச் சூழலில் நிலவுகின்றது. இதன் விளைவாகத்தான், சாதிய மேலாதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளைக்கூட 'மேட்டிமை வாதம்' எனவும் 'சமஸ்கிருதமயமாக்கல்' எனவும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
வேளாண் மக்களின் தமிழ்ப் பண்பாட்டு கூறான இந்திர அடையாளம் சமண, பௌத்த, ஆசீவக சமயங்களில் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆரியப் பண்பாட்டில் வைதீக மதமானது தமிழ் அடையாளமான இந்திர அடையாளத்தை மிகுந்த வன்மத்தோடு இழிவுபடுத்தியும் -  இந்திர வழிபாட்டு அடையாளங்களை அழித்தும் சிறுமைப்படுத்தியும் புராணக்கதைகளைக் கட்டமைத்துள்ளது.
தற்போது, வேளாண்குடிகள்  'தேவேந்திரர்கள்' என்ற பழைய பெயராலேயே தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என வேட்கை கொண்டிருக்கின்றனர். இதனுள் வைதீக எதிர்ப்புத் தன்மை பொதிந்திருக்கும் பண்பாட்டு வரலாற்றை அறியவோ அடையாளப்படுத்தவோ பலரும் தவறிவிடுகின்றனர்.

ஆரியச் சிந்தனை மரபின் எச்சங்களைத் தமது சிந்தனையாக கொண்ட சில பல திராவிட இயக்க அறிவுஜீவிகள், இடதுசாரிகள் போன்றோரும் பௌத்த, சமண, ஆசீவகப் பண்பாட்டு அடையாளமான இந்திர அடையாளத்தை ஆரிய அடையாளமாகத்தான் கட்டமைக்கின்றனர். அதற்குச் சான்றாக, ஆரியப் பிராமணீயத்தால் கட்டமைக்கப்பட்ட இழிவான புராணப் புரட்டுகளைத்தான் காண்பிக்கின்றனர்.

பெயரில் திராவிட, இடதுசாரிக் கொள்கையையும், மூளையில் பிராமணீய மையச் சிந்தனையையே கொண்டிருக்கும் சில அறிவுஜீவிகள், தொடக்கம் முதலே வைதீகத்தை எதிர்த்துப் பெரும் கலகம் செய்து வந்த வேளாண்குடி மக்களின் 'தேவேந்திரர்' எனும் வைதீக எதிர்ப்புப் பெயரை  ஆரியப் பெயர் என்றுதான் இழிவுபடுத்தி எள்ளி நகையாடுகின்றனர். அதாவது, திராவிட இயக்க - இடதுசாரிச் சிந்தனைப் போக்குகளைக்கூட இன்றும் பிராமணீயமே தீர்மானிக்கிறது.

இந்நிலையில், தமிழர் பண்பாட்டுத் தளத்தில்  வைதீக மரபிற்கு  எதிரான தமிழ்ப் பண்பாட்டு கூறுகள் அடையாளம் காணப்பட்டு ஆராயப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் -  வேளாண் மக்களைப் பற்றிய ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியதன் சமூகத் தேவையை - வேளாண் மக்கள் குறித்த சமூக உரையாடல்களை மிக விரிவாக முன்வைத்திருக்கிறது மகாராசனின் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' நூல்.

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
வெளியீடு:
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச : 9080514506.
*
கட்டுரையாளர்:
வருசக்கனி,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
நாட்டுப்புறவியல் துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை.

சனி, 13 நவம்பர், 2021

நீர் மேலாண்மைச் சமூகத்தின் வேர்த் தடங்கள்: மகாராசன்

இயற்கையாகவும் செயற்கையாகவும் உருவான - உருவாக்கப்பட்ட நீர் ஆதார அமைப்புகளைப் பயன்படுத்தவும் பராமரிக்கவுமான பணிகளை, நீர் மேலாண்மைச் சமூகத்தால் மட்டுமே செய்திருக்க முடியும். அவ்வகையில், வேளாண்மைத் தொழிலோடு பிணைந்திருந்த வேளாண் உழவுத்தொழில் மரபினரின் ஒரு பகுதியினரே நீர் மேலாண்மையை இணைத் தொழிலாகவும் செய்து வந்திருக்கின்றனர்.

அதாவது, வேளாண்மை உழவுத் தொழிலின் மிக முக்கியமான அங்கமாகவும் ஆதாரமாகவும்தான் நீர் மேலாண்மையும் இருந்திருக்கிறது. வேளாண்மையோடும் அதன் வாழ்வியலோடும் பின்னிப் பிணைந்த நீர்ச் சமூகமும் ஒன்று இருந்திருக்கிறது. இந்த நீர்ச் சமூகம்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்து வந்திருக்கிறது.

மழை பொழிந்து ஓடும் நீரை நீர் ஆதார அமைப்புகளுக்குக் கொண்டுவந்து சேர்த்து, அதைச் சேமித்து வைத்து, விளை நிலங்கள்வரை கொண்டு சேர்ப்பதுதான் நீர்ச் சமூகத்தின் பணியாக இருந்திருக்கிறது. இது, மிகச் சாதாரண பணியும் அல்ல. அதற்கு நிறைய நீரியல் தொழில் நுட்ப அறிவும் உழைப்பும் தேவை. அவையெல்லாம் அந்த நீர்ச் சமூகத்திடம்தான் நிரம்பிக் கிடந்திருக்கின்றன.

தமிழ் நாட்டின் நீர் மேலாண்மைச் சமூகம் குறித்து விவரிக்கும் க.நெடுஞ்செழியன், தமிழினம் உலகுக்கு வழங்கிய அறிவுக் கொடைகளுள் தலையாயது வேளாண்மையும் நீர் மேலாண்மையும். பெரிய ஆறுகள் தமிழகத்தில் இல்லாததால் வான்மழையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதில் பண்டைக்காலத் தமிழர்கள் பெரிதும் கவனம் செலுத்தினர். அதனால் பாசனத்தைப் பெருக்கும் வகையில் ஏரி, குளங்களை வெட்டினர். ஒவ்வொரு ஏரியின் உபரிநீர் மற்ற ஏரிகளுக்கு நீர் ஆதாரமானது. அதனால், பெய்யும் மழைநீர் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.

ஏரி நீரை ஒழுங்குபடுத்தி அதன் பாசனப் பரப்பின் அளவு, நீரின் தேவை, ஏரியில் உள்ள நீரின் அளவு இவற்றையெல்லாம் நன்கு அளந்து அறிந்து, நீர்ப் பகிர்மானத்தை முறைப்படுத்துபவர்கள் ‘நீர்க்கட்டிகள்’ என அழைக்கப்பட்டனர். ஏரி நீரும் வாய்க்கால்களும் ஏரி வாரியத்தால் கண்காணிக்கப்பட்டன. ஏரி வாரியம், ஊரவையின் ஆளுகைக்கு உட்பட்டதாகும். கரைகளில் மரங்கள் வளர்க்கப்பட்டன. ஏரியில் மீன்கள் வளர்க்கப்பட்டன. இவற்றிலிருந்து வரும் ஏலத்தொகை ஏரிப் பராமரிப்புக்கான வருவாய் ஆயிற்று என்பார்.

இத்தகைய நீர் மேலாண்மையைத் திறம்பட மேற்கொண்டிருந்த நீர்ச் சமூகம், பல பெயர்களால் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆற்று நீரை அடுத்ததடுத்த ஏரி எனும் நீர்நிலைகளுக்குக் கொண்டுவந்து சேர்த்து, பங்கிட்டுக்கொடுக்கும் பொறுப்பை ஆண்ட நீர் மேலாண்மைத் தொழில் பிரிவினர் ‘நீராணிக்கர்கள்’ என அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து சேர்த்து, அந்த நீரைக் கட்டிவைத்துக் காத்ததால் அவர்களுக்கு ‘நீர்க்கட்டியார்’ என்று பெயர். இவர்கள்தான் அந்த ஏரிக்கான முழுப்பொறுப்பும் கொண்டவர்கள். ஆற்றிலிருந்து கால்வாய்களை உருவாக்கியும் மேலாண்மையும் செய்து வந்தவர்கள் ‘ஆற்றுக் காலாடியார்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளனர். ஏரியில் மீன்பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள கோடைக் காலங்களில் ஏரி நிலத்தில் தற்காலிகமாகப் பயிர் செய்வது என, ஏரி நிலைக்குள் நடந்த எந்தவொரு நிகழ்வும் நீர்க்கட்டியார் அனுமதி இருந்தாக வேண்டும்.

ஏரி நீரின் பாதுகாப்பு அதன் கரையில்தான் இருக்கிறது. அந்தக் கரை உடைப்பு எடுத்தால் அது தானும் அழிந்து, ஏரிப் பாசனம் பெறும் வயல்வெளிகளையும் மக்கள் வாழிடங்களையும் அழித்துவிடும். ஆகையால்தான், ஏரியின் கரை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அத்தகைய ஏரியின் கரையை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும். நீர் ஆதார அமைப்புகளின் கரை வேலைகளைப் பார்த்ததால் ‘கரையார்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் ஏரிக்கரைக்கு முழுப்பொறுப்பும் ஆவர். கார் எனில், மழை எனும் பொருளையும் குறிக்கும். மழை நீரைத் தேக்கி நிர்வகிக்கும் ஆளுமை கொண்டதால், கார் + ஆளர் = காராளர் எனவும் குறிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சமூகத்தின் பொருளாதார வளம் வேளாண்மையோடு தொடர்புடையது. ஏரிகள் வேளாண் பாசனத்திற்காகவே உருவாக்கப்பட்டவை. எதிரிகளால் வேளாண் பொருளாதாரச் சீர்குலைவுகள் நடந்திருக்க வாய்ப்புண்டு. எதிரிகளிடமிருந்து ஏரிகளையும் இதர நீர்நிலைகளையும் காத்த காரணத்தால் ‘குளத்துக் காப்பாளர்கள்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளனர்.

நீர் நிலைகளுக்குள் தேவையின்றி வளர்ந்த செடிகொடிகள், பாசிகள் போன்றவற்றை அழித்துத் தூய்மைப்படுத்தி, வயல் பள்ளங்களில் வேளாண்மைக்கு நீர் திறந்துவிட்டதனால் ‘குளத்துப் பள்ளர்கள்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளனர்.

ஏரியில் இருந்து திறந்து விடும் நீரை வாய்க்கால் வெட்டிக் கொண்டு வந்தமையால் ‘நீர் வெட்டியார்’ எனவும், நீரை வயல்கள்வரை கொண்டு வந்து பாய்ச்சியதால் ‘நீர்ப் பாய்ச்சியார்’ எனவும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் வயல்களுக்கான நீரைக் கண்காணித்தவர்கள்.

நீர் ஆதார அமைப்புகளிலிருந்து நீரைத் திறந்து விடுவதற்காக அவற்றில் மதகு, மடை, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் இருக்கும். வேளாண் பாசனத்திற்காக இந்த மடைகளைத் திறந்து விடுவதால் ‘மடையர்கள்’ எனவும் ‘மடைக் குடும்பர்கள்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நீர்நிலைகளிலிருந்து நீரை வெளியேற்றுவதில் மதகுகளுக்கும் மடைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மதகுகள் வழியாக வேண்டிய அளவு நீரை வெளியேற்ற முடியும்; நீரைக் கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால், மடை என்பது அப்படியல்ல. மடையைத் திறந்து விட்டால் முழு அளவில் நீர் பீறிட்டுக்கொண்டு வெளியேறும். அதைக் கட்டுப்படுத்தவும் முடியாது. மடைகள் அமைக்கப்பட்ட நீர்நிலைகளில் மடைகளைக் கையாண்டதால்தான் ‘மடையர்கள்’ என்றழைக்கப்பட்டுள்ளனர்.

ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு வருகின்ற மழை நீர் வெறும் நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே வண்டல் மண்ணையும் சேறும் சகதிகளையும் சேர்த்தே கொண்டு வரும். இவை அதிகம் சேர்ந்தால் நீர்நிலைகள் தூர்ந்து போகும் வாய்ப்புண்டு. இதனால் மடைகளும் மதகுகளும் அடைத்துக் கொள்ளும். இந்த வண்டல் மண்ணையும் சேறையும் ஏரியில் இருந்து வெளியேற்ற ‘குமிழி’ எனும் ஒரு தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள். ஏரி நீரை வெளியேற்றும் ஓர் அமைப்புதான் அது.

குமிழியானது ஏரியின் தரைத் தளத்தில் மதகுகளில் இருந்து சற்றேறக் குறைய 300 அடி தொலைவில் ஏரியின் உட்புறமாக அமைக்கப்பட்டிருக்கும். ஏரியில் அதிகமான வண்டலும் சகதியும் சேரும்போதுதான் இந்தக் குமிழியைத் திறந்து விடுவர். அது வெளியேறி ஏரிக்கு வெளியே உள்ள பாசனக் கால்வாயில் சேர்ந்து விடும். இதனால் ஏரியின் தளத்தில் சேர்ந்த வண்டல் மண் வெளியேற்றப்படுவதால் அதன் பாசனப் பயிர்களுக்கும் நல்ல உரம் கிடைத்து விடுகிறது. நீர்நிலைகளில் பயன்படுத்திய தூர்வாரும் தொழிநுட்பம்தான் இது. நீர் நிலைகளில் குமிழிகள் அமைத்துத் தூர்வாரி, வயல் பள்ளங்களில் நீர் பகிர்ந்ததால் ‘குமிழிப் பள்ளர்கள்’ எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்.

குமிழிப் பள்ளர்களின் இன்னொரு நீர் மேலாண்மை நுட்பம் குறித்து பழ.கோமதிநாயகம் கூறும்போது, புதுக்கோட்டை மாவட்டம் நாஞ்சூர் ஏரியில் தண்ணீர்ப் பங்கீடு செய்வதற்கு ‘முறைப்பானை’ என்ற வழக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்ததாக அவ்வூரார் சொல்கின்றனர். இந்த வழக்கம் எப்போது தொடங்கியது என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது இல்லை.

10 முதல் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு செம்புப் பானையின் அடிப்பாகத்தில் ஒரு சிறிய துளை இடப்படும். இது போன்ற துளை இடுவதற்கான ஊசியின் அளவுகள் குறித்த கல்வெட்டுச் செய்திகள் உள்ளன. மூன்று கற்களைப் பரப்பி, அதன் மேல் இந்தச் செம்புப் பானையை வைப்பார்கள். பானையில் முழுவதும் நீர் நிரப்பப்படும். துளையிலிருந்து நீர் வடியும். செம்புத் தண்ணீர் முழுவதும் காலியானால், ஒரு ஏக்கர் நெற்பயிருக்குத் தண்ணீர் பாய்ந்து விடும். இதுவே ‘முறைப்பானை’ எனப்பட்டது.

இதனைக் கண்காணிக்கவும், நீர்ப் பாய்ச்சவும் ‘குமிழிப் பள்ளன்’ என்ற பணியாள் இருந்திருக்கிறார். காலை முதல் மாலை வரை இம்முறையில் நீர் பகிரும் காலம் கணக்கிடப்பட்டது. இதே போன்ற முறைகள் ஆப்பிரிக்காவில் ஆயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது என்கிறார்.

மேற்குறித்த நீர்ச் சமூகத்திடம் நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்யும் நுட்பமும் அறிவும் மட்டுமல்ல; அத்தகைய நீர் ஆதாரங்களைப் புதியதாக உருவாக்கும் அறிவும் நுட்பமும் உழைப்பும் கூடவே இருந்திருக்கிறது.

மண்ணின் வகை, நிலத்தின் அமைப்பு, இருப்பிடம், பாசனம் பெரும் விளைநிலங்களின் பரப்பளவு, மழைநீர் வரத்து போன்றவற்றைக் கணக்கில் கொண்டே நீர்நிலைகளின் கொள்ளளவை நிர்ணயித்திருக்கிறார்கள். விளைவிக்கப்பட்டிருக்கும் நிலங்களுக்கும், மக்களின் இதரத் தேவைகளுக்கும் நீர் திறந்துவிட வேண்டியதின் அளவு, அதற்கேற்ப மதகுகளையும் மடைகளையும் அமைத்தல், அவற்றிலிருந்து நீர் வெளிவருவது எவ்வளவு? எல்லா மடைகளையும் திறந்தால் எவ்வளவு நீரை வெளியேற்ற முடியும்? போன்ற எல்லா நுட்பங்களையும் திட்டமிட்டுத்தான் நீர் நிலைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படியாக, நீர் நிலைகளை உருவாக்கியதிலும், நீர் நிலைகளை மேலாண்மை செய்ததிலும் நீர்ச் சமூகத்தின் அறிவும் உழைப்பும் மட்டும் இருந்திருக்கவில்லை. கூடவே, நீர்ச் சமூகத்தின் தியாகமும் உள்ளடங்கி இருக்கின்றது.

மழைக்காலங்களில் மழைநீர் பெருக்கெடுத்து வரும்போதும், நீர்நிலைகளில் நீர் நிறைந்திருக்கும் போதும், கரைகள் உடையக்கூடிய அபாயங்கள் இருக்கும்போதும், நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டிய நிலை வரும்போதும், மதகுகள் - மடைகள் வழியாக நீரைத் திறந்துவிடும்போதும் உயிரைப் பணையம் வைத்து அவற்றைச் செய்திடவும் வேண்டும்.

நீர் நிரம்பி இருக்கும் நீர்நிலைக்குள் மூழ்கி அடி ஆழத்தில் இருக்கும் மடையைத் திறக்கும்போது உயிர்போகவும் கூடும். அந்தத் தியாகத்தையும் நீர்ச் சமூகமே செய்திருக்கின்றது. அவ்வாறு உயிர்நீத்த நீர்ச் சமூகத்தவரின் உயிர்த் தியாகத்தை நினைவுகூறும் வகையில் நீர்நிலைக் கரைகளில் நடுகல் நட்டு வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. உயிர்த் தியாகம் செய்த நீர்ச் சமூகத்தவரின் குடும்பங்களுக்கு நிலக்கொடைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


வெள்ளி, 12 நவம்பர், 2021

நீர் மேலாண்மை : காலத்தின் ஓட்டத்தைச் சீர்செய்யும் சூழ் என்பதை வலியுறுத்தும் நூல் :- செ.தமிழ்நேயன்



கடந்த காலத் தவறுகளை சரி செய்வதற்கு இயற்கை வழங்கும் வாய்ப்பு தான் நிகழ்காலம்.
சென்னையில் பெருவெள்ளம் வழக்கத்திற்கு மாறாக உள்ளது என்பதை ஊடகங்கள் மற்றும் வானிலை ஆய்வு நிலையம் அறிவிக்கை செய்கின்றன.

உலக வெப்பமயமாதல் விளைவின் காரணமாக இது போன்ற இயற்கைச் சீற்றங்கள் எழுவது இயல்புதான் என்கிறது சூழலியல் அமைப்பு.
தனிமனிதத் தவறுகளோடு சமூகத்தின் தவறுகளாலும்தான் ஒரு பெரும் சூழலியல் மாற்றத்தை நிகழ்த்தும் காரணியாக உள்ளன.

பண்டையத் தமிழரின் நீர் மேலாண்மை நுட்பங்களை மறந்து, வளர்ச்சி என்ற பெயரில் சுருங்கிப் போனதால்தான் இந்த விளைவா?
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இது போன்ற நிகழ்வுகளை நேர் கொள்வது?

சமூகம் அடிப்படைக் காரணத்தைத் தேடமால் வழிப்போக்குகளை மட்டுமே கையாளுவதால் இது போன்ற சிக்கல்கள் தோன்றுகின்றன.
உணவு, பண்பாடு போன்றவற்றில் பழமையைப் போற்றும் சமூகம், ஏன் நீர் மேலாண்மை, நகரக் கட்டமைப்புகளில் கவனம் கொள்வதில்லை?

அண்மையில், கீழடி அகழாய்வுச் செய்தியில் பண்டையச் சமூகம் முறையான நகரக் கட்டமைப்பு செய்துள்ளதாக ஆவணப்படுத்தியுள்ளனர் தொல்லியல் துறை சார்ந்தவர்கள்.

நகரக் கட்டமைப்புப் பணிகளில் ஆள்வினைஞர்கள் சுணங்குகின்றனரா?

ஒவ்வொரு விளைவும் ஒன்றை மட்டும் நினைவுப்படுத்தவதில்லை. அந்த விளைவுகளில் மறைந்துள்ள செய்திகளை ஏன் யாரும் பேசுவதில்லை?

நகரக் கட்டமைப்பின் அடிப்படை நீர்மேலாண்மை கொண்டுதான் நிறுவ வேண்டும். நீர் மேலாண்மைச் சமூகங்கள் ஒடுங்கியதன் - ஒடுக்கியதன் விளைவுகளால்தான் பெருவெள்ளம் போன்ற நேரங்களில் கையுறு நிலையில் கேட்பாரற்று ஏதிலியாக மாறி உள்ளோம்.

தமிழகத்தின்  சிற்றூர்  நீர்த்தேக்க ஓரங்களில் காவல் தலைவர்களைத் குல தெய்வமாக வழிபடும் முறை உள்ளது. நீர் மேலாண்மை காரணமாக அந்த மரபு தோன்றி இருக்கலாம் என்ற வகையில் பார்வையும் எழுகிறது.

பெரு வெள்ளத்துயரம் தந்த பாடங்களை கொண்டு, நீர் மேலாண்மை என்ற பண்டைய முறைமைகளை மீட்டுருவாக்கம் செய்யப் புறப்படுவோம்.

நீர் மேலாண்மைதான் நிறைவான தீர்வு என்பதை, பொது சமூகம் உணரும் வேளையில்தான் இது போன்ற துயரங்களுக்கு முடிவுரை எழுத முடியும்.
நீர் மேலாண்மை காலத்தின் தேவை மட்டுமல்ல; காலத்தின் ஓட்டத்தைச் சீர்செய்யும் சூழ் என்பதைத்தான் மகாராசனின் வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல் உணர்த்துகிறது.

நீர் மேலாண்மை: வேளாண் மரபினரின் நீர் அறுவடைப் பண்பாடு எனும் அத்தியாயமானது, நீர் மேலாண்மைப் பண்பாட்டின் கடந்தகால வரலாற்றையும், நிகழ்கால இருப்பையும் அதன் வேர்த் தடங்களையும் மிக நுட்பமாகவும் விரிவாகவும் ஆவணப்படுத்தியிருக்கிறது. நீர் மேலாண்மை குறித்துப் பேசுவோரும் யோசிப்போரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இதுவாகும்.

செ. தமிழ்நேயன்

வேளாண் மரபையும், நீர் மேலாண்மைச் சமூகம் பற்றியும் விரிவாகப் பேசும் நூல் : ப.அ.ஈ.ஈ.அய்யனார், பொறியாளர்.




வேளாண் மரபின் தமிழ் அடையாளம்: உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும் எனும் இந்நூல், இருநூற்றிருபத்து நான்கு பக்கங்களைக் கொண்டது. நூலை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் மகாராசன். 

சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டியும், அய்வகை நிலங்களும் நிலஞ்சார்ந்த தொழில் பற்றியும் இந்நூலைத் தழுவியிருக்கிறார்.

வேளாண் தொழிலைப் பற்றியும், வேளாளர்களின் நீர் மேலாண்மை பற்றியும், நீர்வழித் தெய்வங்கள் வழிபாடு மற்றும் நீர் சுழற்சி,  வேளாண் தொழில் பற்றி தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் உண்டான பகையும் முரணும், உழவர்களின் கால்நடை வளர்ப்பு, அறுவடைத் திருநாள், நீர் அறுவடை பற்றியும் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார். 

தொழில்நுட்பம் உருவாகாத முந்தைய காலத்தில் வேளாளர்களின் நீர்ப் பாதுகாப்பும், அதன் மேலாண்மையும், தொன்மையும் பற்றி விவரித்திருக்கிறார். 

முக்கூடற்பள்ளு, பரிபாடல், நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு போன்ற பல சங்க இலக்கிய நூல்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதைத்தவிர, வேளாளர்களின் கும்மிப்பாடல்களும் வாழ்வியல் பாடல்களும் நூலுக்கு இசை ஊட்டுகிறது. 

இந்திரனை வழிபடும் ஆரியர்களுக்கும், வேளாண் மரபினர்களுக்குமான வழிபாடு பற்றிய வேறுபாட்டு நெறிமுறைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. 

"நெல்லின வகையும் பள்ளின வகையும்" தெளிவுபட விவரிக்கும் விதம் அமைந்துள்ளது இந்நூலில். 

ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள், மதகுகள், ஊரணிகள், கலிங்குகள், நீர்த்தேக்கங்கள் போன்று விளங்கும் நீராதாரத்தினை முறையாகப் பராமரித்தும் அதனைப் பங்கீட்டு கொண்டு வாழ்ந்தும், தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த மடையர்கள், நீர்ப்பாய்ச்சிகள், மடைக்குடும்பர்கள் இன்றும் தொன்று தொட்டு வருகின்றனர். 

குளங்களைக் குழந்தைகளாகப் பாவித்த சமூகம், இன்று வறுமையில் வாடிக்கொண்டும், தங்கள் குலத் தொழிலை விட்டுவிட்டு வேறுதொழிலுக்குச் சென்று விட்டனர் என்கிற வரலாறு உள்ளத்தை உலுக்குகிறது. 


ப.அ.ஈ.ஈ.அய்யனார், பி.டெக்.,

பொறியாளர்,

தானத்தவம்,

மாடக்குளம் அஞ்சல்,

மதுரை.

வியாழன், 11 நவம்பர், 2021

நீர் மேலாண்மையும் நீர்ச் சமூகமும் :வேர் அறுந்த வேதனை வரலாறு - மகாராசன்





நீர் நிலைகளின் சீரழிவுப் போக்கின் வரலாற்றை, ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு எனும் நூலில் டி.எல்.சஞ்சீவிக்குமார் விரிவுபடக் கூறியுள்ளார். அப்பகுதி வருமாறு: 

தொடக்கக் காலத்தில் குடும்பங்களுக்கு எனத் தனிச் சொத்து இல்லை. நீர், நிலம், வனம் எல்லாம் சமூகத்துக்குப் பொதுவானது. பிறகு இது மெல்ல மாறியது. ஊர்களை உள்ளடக்கிய நாடுகள் உருவாயின. வேளாண்மை மரபினரிடம் இருந்த ஊர் நிர்வாகம் போர் மரபினருக்குச் சென்றது. படைத் தலைவர்கள் வரி வசூலித்தார்கள். இவர்களுக்கு விவசாயம், பாசனம், நீர் நிலைப் பராமரிப்பு பற்றித் தெரியாவிட்டாலும் நீர் நிலைகளின் அருமைகளை அறிந்திருந்தனர். புதிய நீர் நிலைகள் தொடர்ந்து உருவாக்கினார்கள். இது தவறிய இடங்களில் மக்கள் மன்னனிடம் முறையிட்டு, முடிந்தவரை பாசன அமைப்புகளைப் பாதுகாத்தார்கள். 

பின்பு ஆங்கிலேயர் ஆட்சி வந்தது. நமது பாரம்பரியப் பராமரிப்பு முறைகளை ஒட்டு மொத்தமாக ஒழித்துக்கட்டியது அவர்கள்தான். தமிழகத்தில் ‘ரயத்துவாரி’ முறை அமல்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு நில உரிமை அளிக்கப்பட்டது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், வனங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசுச் சொத்துகளாக மாற்றப்பட்டன. மலைகளில் வனங்கள் அழிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களின் மலைவாச ஸ்தலங்களாகவும் தேயிலைத் தோட்டங்களாகவும் மாற்றப்பட்டன. மலைகளில் இருந்த நீர் வழித்தடங்கள் அழிந்துப்போயின. சமவெளிகளில் இருக்கும் நீர் நிலைகளுக்கான நீர்வரத்து குறைந்து போனது.

ஊருக்குள் நீர் நிலைகளைப் பராமரித்த மடையர்கள், பள்ளர்கள், நீராணிக்கர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். விவசாயிகள் விளை பொருளில் அவர்களுக்குப் பங்கு தரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. நீர் நிலைகளுக்கும் அவர்களுக்குமான உரிமை பறிக்கப்பட்டது. உயிரையே பறிகொடுத்ததுபோலத் துடித்தார்கள் அவர்கள். குளங்களையே குழந்தைகளாகப் பாவித்த சமூகம், பசியிலும் பஞ்சத்திலும் வாடியது. ஒருகட்டத்தில் வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாமல் கிடைத்த வேலையைச் செய்யப் பழகிக்கொண்டன அந்தச் சமூகங்கள். தமிழகத்தின் நீர் நிலைச் சமூகங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சமூகமாக மாற்றப்பட்ட வரலாற்றுப் பிழை அரங்கேறியது அப்போதுதான். 

வருவாய்த்துறை உருவாக்கப்பட்டு ஏரிகள், குளங்கள் அந்தத் துறையின் கட்டுப்பாட்டுக்குச் சென்றன. அவற்றைப் பராமரிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு நமது பாரம்பரியத் தொழில் நுட்பங்கள் புரியவில்லை. இதனால் ஏரிகளைப் பராமரிக்க ராணுவம் வந்தது. ராணுவப் பொறியாளர்களுக்கும் பிடிபடவில்லை நமது தொழில் நுட்பம். அவர்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏரிகள் வலுவிழந்தன. அடிக்கடி வெள்ளம் வந்தது. வறட்சி தலைதூக்கியது. 1850ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் லட்சக்கணக்கானோர் இறந்தார்கள். 

நிலைமையைச் சமாளிக்க 1878-80ல் ஆங்கிலேய அரசு ஓர் ஆணையம் அமைத்தது. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் அரசு செப்பனிட வேண்டும். 200 ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டு கொண்ட ஏரிகளை அரசு வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கும் குறைவான ஆயக்கட்டுகளைக் கொண்ட ஏரிகளை மக்களிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஏரிகளைப் பராமரிக்க ஏரி மராமத்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொதுப் பணித்துறை உருவான வரலாறு இதுதான். 

இதன் நீட்சியாகவே இன்று 100 ஏக்கருக்கு அதிகமான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலும், அதற்கும் குறைவான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் (மக்கள் பிரதிநிதிகள்) கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.

தொடர்ந்து 1858-ல் ‘சென்னை கட்டாய வேலையாட்கள் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதன்படி ஏரிகளைப் பராமரிப்பது உட்பட பாசனம் தொடர்பான அனைத்து வேலைகளுக்கும் நிலம் வைத்திருப்பவர்கள் வேலையாட்களைக் கட்டாயமாக அனுப்ப வேண்டும். தவறியவர்களுக்கு அவர்கள் கொடுக்க வேண்டிய வேலையாட்களுக்கான கூலியில் இருமடங்கு அபராதம் விதிக்கப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து 1901-ல் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. 

நாடு விடுதலை அடைந்தது. ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அதிலும் அணைகளைக் கட்டுவதற்கே முக்கியத்துவம் அளித்தார்கள். பாரம்பரிய ஏரிகள், குளங்கள் புறக்கணிக்கப்பட்டன. எரிபொருள் தேவைக்காகக் கருவேல முட்செடிகளை இறக்குமதி செய்தார்கள். அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவை ஏரிகள்தான். ஏனெனில் வற்றாத ஜீவ நதிகளைப் போன்று வற்றாத ஏரிகளும் உண்டு. 10 அடி ஆழத்துக்கும் அதிகம் கொண்ட ஏரிகளில் இயற்கையான ஊற்றுகள் இருந்தன. அவை கோடைக் காலங்களில் கொஞ்சமேனும் தண்ணீர் வைத்திருந்தன. அதுவும் வற்றினால் மக்கள் பள்ளம் பறித்துக் குடிநீர் எடுத்தார்கள். 

ஆனால், கருவேலம் முட்செடிகள் நிலத்தடி நீரை அதிவேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவை ரத்தத்தை உறிஞ்சுவதுபோல ஏரியின் நிலத்தடி நீரை எல்லாம் உறிஞ்சிவிட்டன. எதற்கும் பயனில்லாமல் போனது ஏரிகள். மக்களுக்கும் படிப்படியாக ஏரிகள் மீது பிடிப்பில்லாமல் போனது. ஒடுக்கப்பட்டது சமூகங்கள் மட்டுமில்லை; நீர் நிலைகளும்தான் என, நீர் மேலாண்மையும் - நீர் மேலாண்மைச் சமூகமும் வீழ்த்தப்பட்டதன் பின்புலத்தை விவரிக்கிறார் டி.எல்.சஞ்சீவிக் குமார். 

இந்நிலையில், நீர் மேலாண்மைச் சமூகத்திடமிருந்த நீரியல் அறிவு நுட்பத்தையும், நீரியல் - நிலம் சார்ந்த பல்லுயிர் வளங்களையும், நீரியல் - நிலம் சார்ந்த தொழில் மரபுகளையும், நீரியல் - நிலம்சார் பண்பாட்டு மரபுகளையும் வாழ்வியலையும் அதன் மனிதர்களையும், இணக்கமாக இருந்த சமூக உறவுகளையும், நீரியலால் செழித்திருந்த நிலத்தையும் மிக விரிவாகக் கதை வடிவில் ஆவணப்படுத்தியிருக்கும் கதையாசிரியர் சோ.தர்மன், கடந்த அய்ம்பதாண்டு காலங்களில் சிதைக்கப்பட்டும் சீரழிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் கிடக்கின்ற நீரியல் கட்டமைப்பின் வலிகளை - நிறைசூலியின் வலிகளாகச் ‘சூல்’ எனும் புதினத்தில் புலப்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

நீர் மேலாண்மையின் வீழ்ச்சியாலும் - நீர் மேலாண்மைச் சமூகத்தின் வீழ்ச்சியாலும்தான், வேளாண்மைத் தொழிலும் தற்போது வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வேளாண்மைத் தொழிலின் வீழ்ச்சியானது, வேளாண் மரபினரை மட்டுமல்ல; உணவு தேடும் யாவரையும் வீழ்த்தவே செய்யும் பேராபத்தைக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், வேளாண் மரபினர் உள்ளிட்ட யாவருக்குமான மீட்சிகளுள், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டும் - சுரண்டப்பட்டும் வருகின்ற நீர் நிலைகளை மீட்பதும் ஒன்றாகும். நீர் இன்று அமையாது உலகு என்கிறது குறள். இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் என்கிறது பிங்கல நிகண்டு. அவ்வகையில், நீர் மீட்பானது தமிழ் மீட்புமாகும்… 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 


*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 224,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


செவ்வாய், 2 நவம்பர், 2021

தமிழர் நெல்லும் சொல்லும்: உலகம் பரவிய தமிழின் வேர் - மகாராசன்.




நெல் மணிகளின் தோல் நீக்கிய உணவுத் தானியமே அரிசியாகும். இத்தகைய அரிசியை உலகிற்கு அறிமுகம் செய்ததும் தமிழ் உழவர்களே ஆவர். உலகில் பேசப்படும் பல மொழிகளில் வழங்கிவரும் அரிசியைக் குறிக்கும் சொற்கள், தமிழில் உள்ள அரிசி எனும் வேர்ச்சொல்லில் இருந்தே தோன்றியிருப்பதாக மொழியியல் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். 

ஆங்கிலத்தில் உள்ள ரைஸ் என்னும் சொல்லானது, கிரேக்க மொழியின் வாயிலாகப் பெறப்பட்ட பழைய தமிழ்ச் சொல்லாகிய அரிசி என்பதன் திரிபே எனக்கூறும் மு.வரதராசன், கி.மு அய்ந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே அரிசியும் மயிலும் சந்தனமும் தமிழ்நாட்டிலிருந்து பாபிலோனியாவுக்குச் சென்றன என்கிறார். 

உலகிற்கு அரிசியை அறிமுகம் செய்த பெருமை தமிழர்களைச் சாரும் எனச் சுட்டும் பாமயன், அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்புவரை, அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது. அலெக்சாண்டருடன் வந்த அரிஸ்டாட்டில், அன்றைய சிந்தாற்றின் (Indus Rivar) தென்புறமுள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் பெரியதொரு குழுவினருடன் வந்து திரட்டிச் சென்றுள்ளார். அதில் ஒன்றுதான் அரிசி. 

மேலும், பல மேல்திசை, கீழ்த்திசை நாடுகளுக்கெல்லாம் அரிசி அரேபிய வணிகர்களால் கொண்டு செல்லப்பட்டிருகிறது. கி.மு 300களில் அரிசி, ஆப்பிரிக்கக் கடலோர நாடுகளுக்கு (எகிப்து, எத்தியோப்பியா, பாரசீகம் - இன்றைய ஈரான்) கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் தோன்றிய பேரரசனான ரோமப் பேரரசின் (இன்றைய இத்தாலி) கீழ் இருந்த சிசிலி வழியாக அரிசி ஸ்பெயின் சென்றது என்கிறார். 

நெல் தொன்றுதொட்டுத் தமிழகத்து விளைபொருள் என்பதும், அரிசி முதன்முதல் தமிழகத்தினின்றே மேனாடுகட்கு ஏற்றுமதியானதென்பது வெளிப்படை எனக்கூறும் பாவாணர், உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள அரிசி தொடர்பான சொற்கள், அரிசி என்னும் தமிழ்ச்  சொல்லில் இருந்தே உருவானவை என்பதை எடுத்துக்காட்டும் பகுதிகள் நோக்கத்தக்கவை. 

ஆங்கில மொழியில் ரைஸ், ரிஸ் (English - rice ; Middle English - rys), ஃபிரிசியன் மொழியில் ரிஸ் (Frisian - rys), டச்சு மொழியில் ரைஸ்ட் (Dutch - rijst), செர்மன் மொழியில் ரெய்ஸ், ரீஸ், ரிஸ் (German - reis; Middle Low German - riis, ris;  Middle High German - ris), ஸ்வீடீஷ் மொழியில் ரிஸ், ரீஸ் (Swedish - ris; Middle Swedish - riis),  டானிஷ் மொழியில் ரிஸ் (Danish - ris), பிரெஞ்ச் மொழியில் ரிஜ், ரிஸ் (French - riz; Old French - ris), இத்தாலிய மொழியில் ரைஸோ (Italian - riso)… 

இலத்தீன் மொழியில் ஒரைஸா, ஒரைவா (Latin - oriza,orywa), கிரேக்க மொழியில் ஒருஸா, ஒருஸோன் (Greek - oruza, oruzon),  ஸ்பானிஸ் மொழியில் அரோஸ் (Spanish - arroz), போர்ச்சுக்கல் மொழியில் அரோஸ் (Portuguese - arroz), அரபு மொழியில் அருஸ், உருஸ் (Arabic - aruz, uruz), அரிசியைக் குறிக்கும் தாவரவியல் இலத்தீன் பெயர் ஒரைஸா சாடிவா (oryza sativa) என, அரிசி என்னும் தமிழ்ச் சொல்லே பல்வேறு  ஒலி மாற்றங்கள் பெற்று, அரிசியைக் குறிக்கும் பல்வேறு மொழிச் சொற்களாக வழங்கி வருவதை வேர்ச்சொல் ஆய்வில் எடுத்துக் காட்டும் பாவாணர், அரிசி தமிழ்ச் சொல்லென்று குறிக்கப்படாமல் ஆங்கில அகராதிகளில் இதை இலத்தீன் சொல் என்று போட்டுவிட்டு, கீழைத் தேசத்துத் தோற்றம் என்றும், தோற்றம் தெரியாதவாறும் குறித்துள்ளனர் என்கிறார். 

அரிசியைக் குறிக்கும் ஒரு சொல்லே உலக மொழிகள் பலவற்றில் பரவி இருக்கும்போது, நெல்லும் அரிசியும் உலகின் பல பகுதிகளில் பரவிய முதன்மையான உணவுத்தானிய வணிகப் பண்டமாகவே இருந்திருக்க வேண்டும். அதனால்தான், மருத நிலத்தில் நெல் வேளாண்மைக்கு அதிக முதன்மை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆக, மருத நிலத்தின் வேளாண்மை என்றாலே, அது நெல் வேளாண்மையாகவே நடந்தேறியிருக்கிறது எனலாம். 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506

திங்கள், 1 நவம்பர், 2021

நெல்லின் தொன்மையும் வேளாண் மரபும்: மகாராசன்.




வேளாண்மையின் உணவு உற்பத்தியில், நெல் பயிர்தான் உலகம் பரவிய உணவுத் தானியத்தை உருவாக்கும் பயிராகக் கருதப்பட்டிருக்கிறது. தமிழ் நிலத்தில்தான் நெல் பயிர் முதலாவதாகவும் அதிகளவும் வேளாண்மை செய்யப்பட்டிருக்கிறது. நெல் பயிரின் தொன்மை வரலாற்றைத் தொல்லியல் அகழாய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. 

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பல்வேறு வகையான தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள், ஒரு பானையின் மீது நெல்மணிகளுடன் கூடிய நெற்கதிர்கள், ஒரு பெண்ணுருவம், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள்  ஒட்டுருவமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில், அதன் இயக்குநர் சத்தியமூர்த்தி அவர்கள், பழங்காலத் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பைக் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டு உள்ளார். 100 வருடங்களுக்குப் பிறகு தற்பொழுதுதான் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும், இந்த எழுத்துப் பொறிப்பின் காலம், அறிவியல் ஆய்வின்படி கி.மு.1500 முதல் கி.மு.500 எனவும் கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் அவர். ஆகவே, இந்தத் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துப் பொறிப்பின் காலம் குறைந்த பட்சம் கி.மு.500க்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் என இயக்குநர் சத்தியமூர்த்தி அவர்கள் அறுதியிட்டுக் கூறுகிறார். ஆக, இந்தத் தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு.1500க்கும் கி.மு.500க்கும் இடைப்பட்டது என்பதால், இந்தத் தமிழி எழுத்துப் பொறிப்பின் காலத்தை கி.மு.800 எனக் கொள்ளலாம் (Source: The Hindu News paper Dated 17.2.2005, ‘Rudimentary Tamil-Brahmi Script’ unearthed at Adichanallur). 

இது ஒருபுறம் இருக்க, இங்கு கிடைத்த எலும்புக்கூடுகள், மண்டையோடுகளை ஆய்வு செய்த ஆய்வாளர்களின் கருத்தும், கரிமப் பொருள் ஆய்வு முடிவுகளும் 3700 ஆண்டுகளுக்கும் முந்தியவை  என்கின்றன. அதனால்தான், ஆதிச்சநல்லூர் நாகரிகத்தைச் சிந்துவெளி நாகரிகத்திற்கு இணையான நாகரிகம் என்கிறார் சொ.சாந்தலிங்கம். 

பொருந்தல் அகழாய்வில் கிடைத்த நெல் மாதிரி ஒன்று, அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில் (Accelerator Mass Spectrometry by the Beta Analytic Lab, USA) அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், அதன் காலம் கி.மு.450 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இன்னொரு நெல் மாதிரி ஒன்று அதே ஆய்வு நிலையத்தில் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டதில், அதன் காலம் கி.மு.490 எனக் கணித்தறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். (Source: The Hindu News paper Dated 15.10.2011, Porunthal Excavations prove existence of Indian scripts in 5th century BC : expert). 

இந்நிலையில், நெல்லின் தொன்மை குறித்து விவரிக்கும் டி.தருமராஜன், ஆதிச்சநல்லூர் தொட்டு தமிழகத்தில் எங்கெல்லாம் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டனவோ அங்கெல்லாம் நெற்பயிருக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் தோண்டி எடுக்கப்பட்ட தாழிகளுக்கு 3500லிருந்து 4000 வருட வயது இருக்கும் என்று சொல்கிறார்கள். அந்தத் தாழியைச் செய்வதற்காக மண்ணோடு வைக்கோல் செண்டை கலந்து இருக்கிறார்கள். மேலும், தாழிகளுக்குள் நெல் உமிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஈமச்சடங்கில் நெல்மணிகளைப் பயன்படுத்தும் வழக்கம் 4000 வருடம் பழமையானது. இதன்படி கி.மு 2000 தொட்டே நெல் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கருதமுடியும் என்கிறார். 

ஆக, பொருந்தல், ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் பொருட்களின் காலமே இவ்வளவு பழமை எனும்போது, நெற்கதிர் உருவம் பானையோட்டில்  பதிவதும், முதுமக்கள் தாழிகள் மற்றும் பானைகளில் நெல் மணிகளை இட்டுப் புதைப்பதுமான  பண்பாட்டு வழமையின் காலம் அதற்கும் முந்தையப் பழமையாகும் எனும்போது, நெல் பயிர் வேளாண்மையின் தோற்றக் காலமும் மேற்குறித்த எல்லாவற்றுக்கும் முந்தைய மிகமிகப் பழமை வாய்ந்ததாக இருந்திருக்கிறது எனலாம். 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506