சனி, 13 நவம்பர், 2021

நீர் மேலாண்மைச் சமூகத்தின் வேர்த் தடங்கள்: மகாராசன்

இயற்கையாகவும் செயற்கையாகவும் உருவான - உருவாக்கப்பட்ட நீர் ஆதார அமைப்புகளைப் பயன்படுத்தவும் பராமரிக்கவுமான பணிகளை, நீர் மேலாண்மைச் சமூகத்தால் மட்டுமே செய்திருக்க முடியும். அவ்வகையில், வேளாண்மைத் தொழிலோடு பிணைந்திருந்த வேளாண் உழவுத்தொழில் மரபினரின் ஒரு பகுதியினரே நீர் மேலாண்மையை இணைத் தொழிலாகவும் செய்து வந்திருக்கின்றனர்.

அதாவது, வேளாண்மை உழவுத் தொழிலின் மிக முக்கியமான அங்கமாகவும் ஆதாரமாகவும்தான் நீர் மேலாண்மையும் இருந்திருக்கிறது. வேளாண்மையோடும் அதன் வாழ்வியலோடும் பின்னிப் பிணைந்த நீர்ச் சமூகமும் ஒன்று இருந்திருக்கிறது. இந்த நீர்ச் சமூகம்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்து வந்திருக்கிறது.

மழை பொழிந்து ஓடும் நீரை நீர் ஆதார அமைப்புகளுக்குக் கொண்டுவந்து சேர்த்து, அதைச் சேமித்து வைத்து, விளை நிலங்கள்வரை கொண்டு சேர்ப்பதுதான் நீர்ச் சமூகத்தின் பணியாக இருந்திருக்கிறது. இது, மிகச் சாதாரண பணியும் அல்ல. அதற்கு நிறைய நீரியல் தொழில் நுட்ப அறிவும் உழைப்பும் தேவை. அவையெல்லாம் அந்த நீர்ச் சமூகத்திடம்தான் நிரம்பிக் கிடந்திருக்கின்றன.

தமிழ் நாட்டின் நீர் மேலாண்மைச் சமூகம் குறித்து விவரிக்கும் க.நெடுஞ்செழியன், தமிழினம் உலகுக்கு வழங்கிய அறிவுக் கொடைகளுள் தலையாயது வேளாண்மையும் நீர் மேலாண்மையும். பெரிய ஆறுகள் தமிழகத்தில் இல்லாததால் வான்மழையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதில் பண்டைக்காலத் தமிழர்கள் பெரிதும் கவனம் செலுத்தினர். அதனால் பாசனத்தைப் பெருக்கும் வகையில் ஏரி, குளங்களை வெட்டினர். ஒவ்வொரு ஏரியின் உபரிநீர் மற்ற ஏரிகளுக்கு நீர் ஆதாரமானது. அதனால், பெய்யும் மழைநீர் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.

ஏரி நீரை ஒழுங்குபடுத்தி அதன் பாசனப் பரப்பின் அளவு, நீரின் தேவை, ஏரியில் உள்ள நீரின் அளவு இவற்றையெல்லாம் நன்கு அளந்து அறிந்து, நீர்ப் பகிர்மானத்தை முறைப்படுத்துபவர்கள் ‘நீர்க்கட்டிகள்’ என அழைக்கப்பட்டனர். ஏரி நீரும் வாய்க்கால்களும் ஏரி வாரியத்தால் கண்காணிக்கப்பட்டன. ஏரி வாரியம், ஊரவையின் ஆளுகைக்கு உட்பட்டதாகும். கரைகளில் மரங்கள் வளர்க்கப்பட்டன. ஏரியில் மீன்கள் வளர்க்கப்பட்டன. இவற்றிலிருந்து வரும் ஏலத்தொகை ஏரிப் பராமரிப்புக்கான வருவாய் ஆயிற்று என்பார்.

இத்தகைய நீர் மேலாண்மையைத் திறம்பட மேற்கொண்டிருந்த நீர்ச் சமூகம், பல பெயர்களால் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆற்று நீரை அடுத்ததடுத்த ஏரி எனும் நீர்நிலைகளுக்குக் கொண்டுவந்து சேர்த்து, பங்கிட்டுக்கொடுக்கும் பொறுப்பை ஆண்ட நீர் மேலாண்மைத் தொழில் பிரிவினர் ‘நீராணிக்கர்கள்’ என அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து சேர்த்து, அந்த நீரைக் கட்டிவைத்துக் காத்ததால் அவர்களுக்கு ‘நீர்க்கட்டியார்’ என்று பெயர். இவர்கள்தான் அந்த ஏரிக்கான முழுப்பொறுப்பும் கொண்டவர்கள். ஆற்றிலிருந்து கால்வாய்களை உருவாக்கியும் மேலாண்மையும் செய்து வந்தவர்கள் ‘ஆற்றுக் காலாடியார்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளனர். ஏரியில் மீன்பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள கோடைக் காலங்களில் ஏரி நிலத்தில் தற்காலிகமாகப் பயிர் செய்வது என, ஏரி நிலைக்குள் நடந்த எந்தவொரு நிகழ்வும் நீர்க்கட்டியார் அனுமதி இருந்தாக வேண்டும்.

ஏரி நீரின் பாதுகாப்பு அதன் கரையில்தான் இருக்கிறது. அந்தக் கரை உடைப்பு எடுத்தால் அது தானும் அழிந்து, ஏரிப் பாசனம் பெறும் வயல்வெளிகளையும் மக்கள் வாழிடங்களையும் அழித்துவிடும். ஆகையால்தான், ஏரியின் கரை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அத்தகைய ஏரியின் கரையை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும். நீர் ஆதார அமைப்புகளின் கரை வேலைகளைப் பார்த்ததால் ‘கரையார்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் ஏரிக்கரைக்கு முழுப்பொறுப்பும் ஆவர். கார் எனில், மழை எனும் பொருளையும் குறிக்கும். மழை நீரைத் தேக்கி நிர்வகிக்கும் ஆளுமை கொண்டதால், கார் + ஆளர் = காராளர் எனவும் குறிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சமூகத்தின் பொருளாதார வளம் வேளாண்மையோடு தொடர்புடையது. ஏரிகள் வேளாண் பாசனத்திற்காகவே உருவாக்கப்பட்டவை. எதிரிகளால் வேளாண் பொருளாதாரச் சீர்குலைவுகள் நடந்திருக்க வாய்ப்புண்டு. எதிரிகளிடமிருந்து ஏரிகளையும் இதர நீர்நிலைகளையும் காத்த காரணத்தால் ‘குளத்துக் காப்பாளர்கள்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளனர்.

நீர் நிலைகளுக்குள் தேவையின்றி வளர்ந்த செடிகொடிகள், பாசிகள் போன்றவற்றை அழித்துத் தூய்மைப்படுத்தி, வயல் பள்ளங்களில் வேளாண்மைக்கு நீர் திறந்துவிட்டதனால் ‘குளத்துப் பள்ளர்கள்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளனர்.

ஏரியில் இருந்து திறந்து விடும் நீரை வாய்க்கால் வெட்டிக் கொண்டு வந்தமையால் ‘நீர் வெட்டியார்’ எனவும், நீரை வயல்கள்வரை கொண்டு வந்து பாய்ச்சியதால் ‘நீர்ப் பாய்ச்சியார்’ எனவும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் வயல்களுக்கான நீரைக் கண்காணித்தவர்கள்.

நீர் ஆதார அமைப்புகளிலிருந்து நீரைத் திறந்து விடுவதற்காக அவற்றில் மதகு, மடை, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் இருக்கும். வேளாண் பாசனத்திற்காக இந்த மடைகளைத் திறந்து விடுவதால் ‘மடையர்கள்’ எனவும் ‘மடைக் குடும்பர்கள்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நீர்நிலைகளிலிருந்து நீரை வெளியேற்றுவதில் மதகுகளுக்கும் மடைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மதகுகள் வழியாக வேண்டிய அளவு நீரை வெளியேற்ற முடியும்; நீரைக் கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால், மடை என்பது அப்படியல்ல. மடையைத் திறந்து விட்டால் முழு அளவில் நீர் பீறிட்டுக்கொண்டு வெளியேறும். அதைக் கட்டுப்படுத்தவும் முடியாது. மடைகள் அமைக்கப்பட்ட நீர்நிலைகளில் மடைகளைக் கையாண்டதால்தான் ‘மடையர்கள்’ என்றழைக்கப்பட்டுள்ளனர்.

ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு வருகின்ற மழை நீர் வெறும் நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே வண்டல் மண்ணையும் சேறும் சகதிகளையும் சேர்த்தே கொண்டு வரும். இவை அதிகம் சேர்ந்தால் நீர்நிலைகள் தூர்ந்து போகும் வாய்ப்புண்டு. இதனால் மடைகளும் மதகுகளும் அடைத்துக் கொள்ளும். இந்த வண்டல் மண்ணையும் சேறையும் ஏரியில் இருந்து வெளியேற்ற ‘குமிழி’ எனும் ஒரு தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள். ஏரி நீரை வெளியேற்றும் ஓர் அமைப்புதான் அது.

குமிழியானது ஏரியின் தரைத் தளத்தில் மதகுகளில் இருந்து சற்றேறக் குறைய 300 அடி தொலைவில் ஏரியின் உட்புறமாக அமைக்கப்பட்டிருக்கும். ஏரியில் அதிகமான வண்டலும் சகதியும் சேரும்போதுதான் இந்தக் குமிழியைத் திறந்து விடுவர். அது வெளியேறி ஏரிக்கு வெளியே உள்ள பாசனக் கால்வாயில் சேர்ந்து விடும். இதனால் ஏரியின் தளத்தில் சேர்ந்த வண்டல் மண் வெளியேற்றப்படுவதால் அதன் பாசனப் பயிர்களுக்கும் நல்ல உரம் கிடைத்து விடுகிறது. நீர்நிலைகளில் பயன்படுத்திய தூர்வாரும் தொழிநுட்பம்தான் இது. நீர் நிலைகளில் குமிழிகள் அமைத்துத் தூர்வாரி, வயல் பள்ளங்களில் நீர் பகிர்ந்ததால் ‘குமிழிப் பள்ளர்கள்’ எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்.

குமிழிப் பள்ளர்களின் இன்னொரு நீர் மேலாண்மை நுட்பம் குறித்து பழ.கோமதிநாயகம் கூறும்போது, புதுக்கோட்டை மாவட்டம் நாஞ்சூர் ஏரியில் தண்ணீர்ப் பங்கீடு செய்வதற்கு ‘முறைப்பானை’ என்ற வழக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்ததாக அவ்வூரார் சொல்கின்றனர். இந்த வழக்கம் எப்போது தொடங்கியது என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது இல்லை.

10 முதல் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு செம்புப் பானையின் அடிப்பாகத்தில் ஒரு சிறிய துளை இடப்படும். இது போன்ற துளை இடுவதற்கான ஊசியின் அளவுகள் குறித்த கல்வெட்டுச் செய்திகள் உள்ளன. மூன்று கற்களைப் பரப்பி, அதன் மேல் இந்தச் செம்புப் பானையை வைப்பார்கள். பானையில் முழுவதும் நீர் நிரப்பப்படும். துளையிலிருந்து நீர் வடியும். செம்புத் தண்ணீர் முழுவதும் காலியானால், ஒரு ஏக்கர் நெற்பயிருக்குத் தண்ணீர் பாய்ந்து விடும். இதுவே ‘முறைப்பானை’ எனப்பட்டது.

இதனைக் கண்காணிக்கவும், நீர்ப் பாய்ச்சவும் ‘குமிழிப் பள்ளன்’ என்ற பணியாள் இருந்திருக்கிறார். காலை முதல் மாலை வரை இம்முறையில் நீர் பகிரும் காலம் கணக்கிடப்பட்டது. இதே போன்ற முறைகள் ஆப்பிரிக்காவில் ஆயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது என்கிறார்.

மேற்குறித்த நீர்ச் சமூகத்திடம் நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்யும் நுட்பமும் அறிவும் மட்டுமல்ல; அத்தகைய நீர் ஆதாரங்களைப் புதியதாக உருவாக்கும் அறிவும் நுட்பமும் உழைப்பும் கூடவே இருந்திருக்கிறது.

மண்ணின் வகை, நிலத்தின் அமைப்பு, இருப்பிடம், பாசனம் பெரும் விளைநிலங்களின் பரப்பளவு, மழைநீர் வரத்து போன்றவற்றைக் கணக்கில் கொண்டே நீர்நிலைகளின் கொள்ளளவை நிர்ணயித்திருக்கிறார்கள். விளைவிக்கப்பட்டிருக்கும் நிலங்களுக்கும், மக்களின் இதரத் தேவைகளுக்கும் நீர் திறந்துவிட வேண்டியதின் அளவு, அதற்கேற்ப மதகுகளையும் மடைகளையும் அமைத்தல், அவற்றிலிருந்து நீர் வெளிவருவது எவ்வளவு? எல்லா மடைகளையும் திறந்தால் எவ்வளவு நீரை வெளியேற்ற முடியும்? போன்ற எல்லா நுட்பங்களையும் திட்டமிட்டுத்தான் நீர் நிலைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படியாக, நீர் நிலைகளை உருவாக்கியதிலும், நீர் நிலைகளை மேலாண்மை செய்ததிலும் நீர்ச் சமூகத்தின் அறிவும் உழைப்பும் மட்டும் இருந்திருக்கவில்லை. கூடவே, நீர்ச் சமூகத்தின் தியாகமும் உள்ளடங்கி இருக்கின்றது.

மழைக்காலங்களில் மழைநீர் பெருக்கெடுத்து வரும்போதும், நீர்நிலைகளில் நீர் நிறைந்திருக்கும் போதும், கரைகள் உடையக்கூடிய அபாயங்கள் இருக்கும்போதும், நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டிய நிலை வரும்போதும், மதகுகள் - மடைகள் வழியாக நீரைத் திறந்துவிடும்போதும் உயிரைப் பணையம் வைத்து அவற்றைச் செய்திடவும் வேண்டும்.

நீர் நிரம்பி இருக்கும் நீர்நிலைக்குள் மூழ்கி அடி ஆழத்தில் இருக்கும் மடையைத் திறக்கும்போது உயிர்போகவும் கூடும். அந்தத் தியாகத்தையும் நீர்ச் சமூகமே செய்திருக்கின்றது. அவ்வாறு உயிர்நீத்த நீர்ச் சமூகத்தவரின் உயிர்த் தியாகத்தை நினைவுகூறும் வகையில் நீர்நிலைக் கரைகளில் நடுகல் நட்டு வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. உயிர்த் தியாகம் செய்த நீர்ச் சமூகத்தவரின் குடும்பங்களுக்கு நிலக்கொடைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


1 கருத்து: