கவிதாசரண் என்னும் எழுத்துப் பயணி, தமது பயணத்தை முடித்துக்கொண்டார்.
*
துயர்மிகு வாழ்விலும், கவிதாசரண் என்னும் இதழை ஓர் எழுத்தியக்கமாகவே முன்னெடுத்து நடத்தி வந்தவர் அய்யா கவிதாசரண்.
நான் நடத்திக்கொண்டிருந்த ஏர் இதழ்களைப் பார்த்தபிறகு, கவிதாசரண் இதழுக்குக் கட்டுரைகளை எழுதுங்கள் என்று உரிமையோடும் அன்போடும் கேட்பார். அதன்படி எனது கட்டுரைகள் சிலவற்றையும் கவிதாசரண் இதழில் வெளியிட்டிருக்கிறார்.
பேராசிரியர்கள் அரச முருகுபாண்டியன், அரங்க மல்லிகா ஆகியோர் மூலமாக நேரிடையாகப் பழகும் வாய்ப்பும் சூழல்களும் அமைந்திருந்தன.
பெண்மொழி குறித்த எனது ஆய்வுநூலை முழுவதுமாகப் படித்துவிட்டு, பல நாட்களில் பல மணிநேரங்கள் தொலைபேசியிலேயே பேசிடுவார். அந்தப் புத்தகம் அவ்வளவு பிடித்துப் போயிருந்தது. அந்த நூலுக்கு மிக விரிவான அணிந்துரையும் எழுதி அனுப்பியிருந்தார்.
என் எழுத்துலகை உள்ளன்போடு நேசித்து ஊக்கப்படுத்திய மிகச் சிலருள், அய்யா கவிதாசரணும் மிக முக்கியமாக இருந்திருக்கிறார்.
சென்னையில் இருந்த தமது வீட்டை விற்றுவிட்டு, தென்பகுதிக்கு வந்து மீதி வாழ்வைக் கழிக்க வேண்டும் என்றே பெருவிருப்பம் கொண்டிருந்தார். அன்னாரது துணைவியார் நோய்வாய்ப்பட்டு இருந்த காலங்களில் அடிக்கடி எம்மோடு பேசுவார்; எம்மையும் அடிக்கடிப் பேசச் சொல்வார். நின்றுபோயிருந்த கவிதாசரண் இதழை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்றும், கவிதாசரண் பதிப்பகம் தொடங்கி பல்வேறு நூல்களைப் பதிப்பித்துக் கொண்டுவர வேண்டும் எனத் திட்டங்கள் பல குறித்தும் நிறையப் பேசியிருக்கிறோம்.
திருமதி கவிதாசரண் அம்மையார் அவர்களது மறைவும் இழப்பும்தான் அய்யா கவிதாசரண் அவர்களை மிக அதிகளவு பாதித்திருக்கிறது. ஏற்கெனவே, தமது மகனை இழந்து தவித்த உணர்வும், பிறகு துணைவியாரை இழந்து தவித்த உணர்வும் அய்யாவை வெகுவாகப் பாதித்திருக்கிறது.
தமது இறுதிக் கால வாழ்வில் மேற்கொண்ட ஒரு சில தனிப்பட்ட முடிவுகளால் சென்னையிலிருந்து வெளியேறி, திருச்சிக்குக் குடிபெயர்ந்து மீத வாழ்வை அமைத்துக்கொண்டார். திருச்சிக்கு வந்தபிறகு, அவருடைய கவிதாசரண் இதழ் வட்டத்தொடர்பிலும் எழுத்து வட்டத் தொடர்பிலும் இருந்தவர்களோடு உறவை நீட்டித்துக்கொள்ள விரும்பாமல், அனைத்து வட்டத் தொடர்புகளையும் தவிர்த்தேதான் வந்தார். பலரது உறவுகள் அவரோடு தொடர்புகொள்ள முடியாமல் தவித்தன. எனினும், எல்லாவற்றையும் அவர் தவிர்த்தேதான் வந்திருக்கிறார்.
எமது நிமிர்வகம் - செம்பச்சை நூலகத் திறப்பு விழாவிற்கு அவரை வரவழைக்க அழைத்துப் பேசியபோதுகூட, இப்போதெல்லாம் பொதுவெளியில் வருவதற்கு விருப்பமில்லை மகராசன் என்றே சொன்னார். திருச்சியில எங்க இருக்கீங்க? வந்து பார்க்கிறேன் என்று சொன்னபோதுகூட அதைத் தவிர்க்கவே செய்தார். ஏதோ ஒன்றுக்காகச் சங்கடப்பட்டுக்கொண்டுதான் எல்லோரையும் தவிர்க்கிறாரோ என்று பல முறை யோசித்ததுண்டு. எனினும், அவரது முடிவில் யாரும் தலையிட முடியாதுதானே.
அன்னார் வாழ்ந்த காலத்தில் ஓர் இதழை எழுத்தியக்கமாய்க் கொண்டு வருவதற்கான மிகச்சிறந்த முன் மாதிரியாய் இருந்துவிட்டுப் போயிருக்கிறார். நானெல்லாம், கவிதாசரண் இதழைப் பார்த்துத்தான் ஏர் இதழையும் அப்படிக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஏர் இதழின் உள்ளடக்கச் சாயல்கள் கவிதாசரண் இதழைப் போலத்தான் வெளிவந்தன.
இன்று, கவிதாசரண் என்னும் எழுத்துப் பயணி, தமது பயணத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். ஆயினும், அவரது இதழியல் பங்களிப்பும் எழுத்துப் பங்களிப்பும் தமிழில் நிலைத்திருக்கும்.
போய் வாருங்கள் அய்யா.
அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும்.
ஏர் மகாராசன்,
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
28.11.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக