வியாழன், 11 நவம்பர், 2021

நீர் மேலாண்மையும் நீர்ச் சமூகமும் :வேர் அறுந்த வேதனை வரலாறு - மகாராசன்





நீர் நிலைகளின் சீரழிவுப் போக்கின் வரலாற்றை, ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு எனும் நூலில் டி.எல்.சஞ்சீவிக்குமார் விரிவுபடக் கூறியுள்ளார். அப்பகுதி வருமாறு: 

தொடக்கக் காலத்தில் குடும்பங்களுக்கு எனத் தனிச் சொத்து இல்லை. நீர், நிலம், வனம் எல்லாம் சமூகத்துக்குப் பொதுவானது. பிறகு இது மெல்ல மாறியது. ஊர்களை உள்ளடக்கிய நாடுகள் உருவாயின. வேளாண்மை மரபினரிடம் இருந்த ஊர் நிர்வாகம் போர் மரபினருக்குச் சென்றது. படைத் தலைவர்கள் வரி வசூலித்தார்கள். இவர்களுக்கு விவசாயம், பாசனம், நீர் நிலைப் பராமரிப்பு பற்றித் தெரியாவிட்டாலும் நீர் நிலைகளின் அருமைகளை அறிந்திருந்தனர். புதிய நீர் நிலைகள் தொடர்ந்து உருவாக்கினார்கள். இது தவறிய இடங்களில் மக்கள் மன்னனிடம் முறையிட்டு, முடிந்தவரை பாசன அமைப்புகளைப் பாதுகாத்தார்கள். 

பின்பு ஆங்கிலேயர் ஆட்சி வந்தது. நமது பாரம்பரியப் பராமரிப்பு முறைகளை ஒட்டு மொத்தமாக ஒழித்துக்கட்டியது அவர்கள்தான். தமிழகத்தில் ‘ரயத்துவாரி’ முறை அமல்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு நில உரிமை அளிக்கப்பட்டது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், வனங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசுச் சொத்துகளாக மாற்றப்பட்டன. மலைகளில் வனங்கள் அழிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களின் மலைவாச ஸ்தலங்களாகவும் தேயிலைத் தோட்டங்களாகவும் மாற்றப்பட்டன. மலைகளில் இருந்த நீர் வழித்தடங்கள் அழிந்துப்போயின. சமவெளிகளில் இருக்கும் நீர் நிலைகளுக்கான நீர்வரத்து குறைந்து போனது.

ஊருக்குள் நீர் நிலைகளைப் பராமரித்த மடையர்கள், பள்ளர்கள், நீராணிக்கர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். விவசாயிகள் விளை பொருளில் அவர்களுக்குப் பங்கு தரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. நீர் நிலைகளுக்கும் அவர்களுக்குமான உரிமை பறிக்கப்பட்டது. உயிரையே பறிகொடுத்ததுபோலத் துடித்தார்கள் அவர்கள். குளங்களையே குழந்தைகளாகப் பாவித்த சமூகம், பசியிலும் பஞ்சத்திலும் வாடியது. ஒருகட்டத்தில் வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாமல் கிடைத்த வேலையைச் செய்யப் பழகிக்கொண்டன அந்தச் சமூகங்கள். தமிழகத்தின் நீர் நிலைச் சமூகங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சமூகமாக மாற்றப்பட்ட வரலாற்றுப் பிழை அரங்கேறியது அப்போதுதான். 

வருவாய்த்துறை உருவாக்கப்பட்டு ஏரிகள், குளங்கள் அந்தத் துறையின் கட்டுப்பாட்டுக்குச் சென்றன. அவற்றைப் பராமரிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு நமது பாரம்பரியத் தொழில் நுட்பங்கள் புரியவில்லை. இதனால் ஏரிகளைப் பராமரிக்க ராணுவம் வந்தது. ராணுவப் பொறியாளர்களுக்கும் பிடிபடவில்லை நமது தொழில் நுட்பம். அவர்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏரிகள் வலுவிழந்தன. அடிக்கடி வெள்ளம் வந்தது. வறட்சி தலைதூக்கியது. 1850ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் லட்சக்கணக்கானோர் இறந்தார்கள். 

நிலைமையைச் சமாளிக்க 1878-80ல் ஆங்கிலேய அரசு ஓர் ஆணையம் அமைத்தது. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் அரசு செப்பனிட வேண்டும். 200 ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டு கொண்ட ஏரிகளை அரசு வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கும் குறைவான ஆயக்கட்டுகளைக் கொண்ட ஏரிகளை மக்களிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஏரிகளைப் பராமரிக்க ஏரி மராமத்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொதுப் பணித்துறை உருவான வரலாறு இதுதான். 

இதன் நீட்சியாகவே இன்று 100 ஏக்கருக்கு அதிகமான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலும், அதற்கும் குறைவான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் (மக்கள் பிரதிநிதிகள்) கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.

தொடர்ந்து 1858-ல் ‘சென்னை கட்டாய வேலையாட்கள் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதன்படி ஏரிகளைப் பராமரிப்பது உட்பட பாசனம் தொடர்பான அனைத்து வேலைகளுக்கும் நிலம் வைத்திருப்பவர்கள் வேலையாட்களைக் கட்டாயமாக அனுப்ப வேண்டும். தவறியவர்களுக்கு அவர்கள் கொடுக்க வேண்டிய வேலையாட்களுக்கான கூலியில் இருமடங்கு அபராதம் விதிக்கப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து 1901-ல் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. 

நாடு விடுதலை அடைந்தது. ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அதிலும் அணைகளைக் கட்டுவதற்கே முக்கியத்துவம் அளித்தார்கள். பாரம்பரிய ஏரிகள், குளங்கள் புறக்கணிக்கப்பட்டன. எரிபொருள் தேவைக்காகக் கருவேல முட்செடிகளை இறக்குமதி செய்தார்கள். அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவை ஏரிகள்தான். ஏனெனில் வற்றாத ஜீவ நதிகளைப் போன்று வற்றாத ஏரிகளும் உண்டு. 10 அடி ஆழத்துக்கும் அதிகம் கொண்ட ஏரிகளில் இயற்கையான ஊற்றுகள் இருந்தன. அவை கோடைக் காலங்களில் கொஞ்சமேனும் தண்ணீர் வைத்திருந்தன. அதுவும் வற்றினால் மக்கள் பள்ளம் பறித்துக் குடிநீர் எடுத்தார்கள். 

ஆனால், கருவேலம் முட்செடிகள் நிலத்தடி நீரை அதிவேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவை ரத்தத்தை உறிஞ்சுவதுபோல ஏரியின் நிலத்தடி நீரை எல்லாம் உறிஞ்சிவிட்டன. எதற்கும் பயனில்லாமல் போனது ஏரிகள். மக்களுக்கும் படிப்படியாக ஏரிகள் மீது பிடிப்பில்லாமல் போனது. ஒடுக்கப்பட்டது சமூகங்கள் மட்டுமில்லை; நீர் நிலைகளும்தான் என, நீர் மேலாண்மையும் - நீர் மேலாண்மைச் சமூகமும் வீழ்த்தப்பட்டதன் பின்புலத்தை விவரிக்கிறார் டி.எல்.சஞ்சீவிக் குமார். 

இந்நிலையில், நீர் மேலாண்மைச் சமூகத்திடமிருந்த நீரியல் அறிவு நுட்பத்தையும், நீரியல் - நிலம் சார்ந்த பல்லுயிர் வளங்களையும், நீரியல் - நிலம் சார்ந்த தொழில் மரபுகளையும், நீரியல் - நிலம்சார் பண்பாட்டு மரபுகளையும் வாழ்வியலையும் அதன் மனிதர்களையும், இணக்கமாக இருந்த சமூக உறவுகளையும், நீரியலால் செழித்திருந்த நிலத்தையும் மிக விரிவாகக் கதை வடிவில் ஆவணப்படுத்தியிருக்கும் கதையாசிரியர் சோ.தர்மன், கடந்த அய்ம்பதாண்டு காலங்களில் சிதைக்கப்பட்டும் சீரழிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் கிடக்கின்ற நீரியல் கட்டமைப்பின் வலிகளை - நிறைசூலியின் வலிகளாகச் ‘சூல்’ எனும் புதினத்தில் புலப்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

நீர் மேலாண்மையின் வீழ்ச்சியாலும் - நீர் மேலாண்மைச் சமூகத்தின் வீழ்ச்சியாலும்தான், வேளாண்மைத் தொழிலும் தற்போது வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வேளாண்மைத் தொழிலின் வீழ்ச்சியானது, வேளாண் மரபினரை மட்டுமல்ல; உணவு தேடும் யாவரையும் வீழ்த்தவே செய்யும் பேராபத்தைக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், வேளாண் மரபினர் உள்ளிட்ட யாவருக்குமான மீட்சிகளுள், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டும் - சுரண்டப்பட்டும் வருகின்ற நீர் நிலைகளை மீட்பதும் ஒன்றாகும். நீர் இன்று அமையாது உலகு என்கிறது குறள். இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் என்கிறது பிங்கல நிகண்டு. அவ்வகையில், நீர் மீட்பானது தமிழ் மீட்புமாகும்… 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 


*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 224,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


2 கருத்துகள்:

  1. வேளாண் மரபின் தமிழ் அடையாளம் உளவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியல்
    மகாராசன்

    இருநூற்றிருபது பக்கங்களைக் கொண்ட இந்நூலை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் மகாராசன்.

    சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டியும் ,அய்வகை நிலங்களும் நிலஞ்சார்ந்த தொழில் பற்றியும் இந்நூலைத் தழுவியிருக்கிறார்.
    வேளாண் தொழிலைப் பற்றியும், வேளாளர்களின் நீர் மேலாண்மை பற்றியும்,
    நீர்வழி தெய்வங்கள் வழிபாடு மற்றும் நீர் சுழற்சி, வேளாண் தொழில் பற்றி தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் உண்டான பகையும்,முரணும், உழவர்களின் கால்நடை வளர்ப்பு, அறுவடைத் திருநாள், நீர் அறுவடை பற்றியும் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.
    தொழில்நுட்பம் உருவாகாத முந்தைய காலத்தில் வேளாளர்களின் நீர்பாதுகாப்பும், அதன் மேலாண்மையும், தொன்மையும் பற்றி விவரித்திருக்கிறார்.
    முக்கூடற்பள்ளு,பரிபாடல்,நற்றினை, குறுந்தொகை,கலித்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு போன்ற பல சங்க இலக்கிய நூல்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.இதைத்தவிர வேளாளர்களின் கும்மிப்பாடல்களும் வாழ்வியல் பாடல்களும் நூலுக்கு இசை ஊட்டுகிறது.
    இந்திரனை வழிபடும் ஆரியர்களும், வேளாண் மரபினர்களும் பற்றிய நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
    "நெல்லினவகையும் பள்ளிளவகையும்" தெளிவுபட விவரிக்கும் விதம் அமைந்துள்ளது இந்நூலில்.

    ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள்,மதகுகள்,ஊரணிகள்,கலிங்குகள், நீர்த்தேக்கங்கள் போன்று விளங்கும் நீராதாரத்தினை முறையாகப் பராமரித்தும் அதனைப் பங்கீட்டு கொண்டு வாழ்ந்தும், தங்கள் உயிர்களை தியாகம் செய்த மடையர்கள்,நீர்ப்பாயச்சிகள்,மடைக்குடும்பர்கள், இன்றும் தொன்று தொட்டு வருகின்றனர்.

    குளங்களை குழந்தைகளாக பாவித்த சமூகம் இன்று வறுமையில் வாடிக்கொண்டும், தங்கள் குலத் தொழிலை விட்டுவிட்டு வேறுதொழிலுக்கு சென்று விட்டனர் என்பது உள்ளத்தை உலுக்குகிறது

    ப.அ.ஈ.ஈ.அய்யனார்

    பதிலளிநீக்கு
  2. நூல் குறித்த மதிப்புரையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றியும் அன்பும்.

    பதிலளிநீக்கு