ஞாயிறு, 14 நவம்பர், 2021

ஆரிய வைதீகத்திற்கு எதிரான மாற்றுப் பண்பாட்டைக் கட்டமைத்திருக்கிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : வருசக்கனி, நாட்டுப்புறவியல் ஆய்வாளர்


எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் வாழ்த்துரையுடன் தொடங்கும் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் இந்நூல், வேளாண்மை: உழவுப்பண்பாடும் வேளாளர் வரைவியலும், நீர் மேலாண்மை: வேளாண் மரபினரின் நீர் அறுவடைப் பண்பாடு எனும் இரு கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

சோ.தர்மன் அவர்களின் வாழ்த்துரைக் கூற்றுகள் மூலம், தமிழகத்தில் நீர்நிலைகள் பராமரிக்கப்பட்ட விதத்தையும் நீரைச் சார்ந்தே ஒழுக்கம் உருவாவது பற்றியும் அறியலாம்.

மகாராசன் அவர்கள், இந்நூலில் தமிழின் ஐவகைத் திணைகளையும் -  திணை சார்ந்த உற்பத்தி முறைகளையும் உழவுப் பண்பாட்டின் வழியாக விளக்குகிறார். இரும்பின் கண்டுபிடிப்பானது மேய்ச்சல் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், முல்லையில் வளர்ந்த வேளாண்மை மருதநிலத்தில் செம்மை பெற்று உபரி அதிகரித்த விதத்தையும், உபரியின் மூலம் மருத நிலத்தில் அரசு நிலைபெறத் தொடங்கியதையும் முதல் கட்டுரையில் விளக்குகிறார்.   உணவு உற்பத்தி எவ்வாறு  அதிகார உருவாக்கத்திற்கான காரணமாக அமைகிறது என்பதை மிக விரிவாகவே விளக்கியுள்ளார். மேலும், உணவு உற்பத்தியில் உபரியானது சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கிய விதம், மருத நிலத்தில் நிலங்களின் அளவைப் பொறுத்து உழுவித்துண்போர், உழுதுண்போர் என இரு பிரிவாக மாறியதையும் விளக்குகிறார்.
ஐவகைத் திணைகளால் பிரிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள், மொழியின் அடிப்படையில் ஒரு தேசிய இனமாக மாறிய விதம் முக்கியமானது எனக் கருதுகிறேன். சாதிய ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இன்றைய சூழலில், சாதிய ஏற்றத்தாழ்வுகள் அற்ற 'தமிழர்' என்ற பொது அடையாளத்தின்கீழ் அணிதிரட்டுவதற்கான உத்தியைத் தேடுவது அவசியமாகிறது.
மருத நில மக்களின் மழைத் தெய்வமான இந்திரனைப் பற்றியும், இந்திர விழா பற்றியுமான தகவல்களைச் சங்க இலக்கியங்களில் இருந்தும், சமகாலத்தில் பா. அரிபாபு, தே.ஞானசேகரன் போன்ற ஆய்வாளர்களின் நாட்டுப்புறச் சடங்குகள், வாய்மொழித்தரவுகள் மூலமாகவும், மறைமலையடிகள், மா.சோ. விக்டர், பாவாணர் போன்ற அறிஞர்களின் எழுத்துகளிலிருந்தும் தொகுத்துள்ளார்.
ஒரு மக்கள் கூட்டம் என்ன வகையான உற்பத்தி முறையைச் சார்ந்திருக்கிறதோ, அதைப்பொறுத்தே அத்தெய்வங்களின் வடிவங்களும் குணங்களும் அத்தெய்வத்தைப் பற்றிய கதைகளும் அமையும் எனக் கூறும் ஆய்வாளர் தொ.ப வின் கருத்துகளிலிருந்து மருத நில மக்களின் மழைத்தெய்வமான இந்திரனைப் புரிந்துகொள்ளலாம்.

ஆரியச் சடங்கியல் மரபுகள்  நெருப்போடும்  வானத்தோடுமே நெருங்கிய தொடர்புகொண்டுள்ளன. ஆரியப் பண்பாட்டில் நிலத்தை உழுது உழைப்பது பாவத்திற்குரிய செயல் என உழவுத்தொழிலை வைதீகம் விலக்கி வைக்கிறது.  ஆனால், தமிழ்ச் சடங்கியல் மரபுகள் நீரோடும் நிலத்தோடும் தொடர்புடையதாக இருக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டில் உழவுத்தொழில் உயர்வாகப் போற்றப்படுகிறது. இதன் வழியே தமிழ் உழவுக்குடிகளின் மழைத்தெய்வமான இந்திரன் எனும் வழிபாட்டு அடையாளமானது, ஆரியப் பண்பாட்டிற்கு எதிரான தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளையே பெற்றிருக்கிறது என்பதும், தமிழ் இந்திர வழிபாட்டிற்கும் ஆரிய வழிபாட்டிற்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதையும் நூலாசிரியர் நிறுவுகிறார்.

மேலும், இந்திரன் - வெள்ளை யானை - வெண்மை ஆகிய அடையாளங்கள் ஆசீவகத்தோடு தொடர்புடையவை. தமிழகத்தில் ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகள் சார்ந்த இடங்களில் ஐயனார் கோவில்கள் அமைக்கப்பட்டிருப்பதையும் ஆய்வு செய்து, இந்திர அடையாளம் என்பது  ஆசீவக அடையாளம்தான் என அறிஞர் க. நெடுஞ்செழியனின் ஆய்வுகள் கூறுகின்றன.
அயோத்திதாசர் இந்திரனை புத்தர் என நிறுவுகிறார். ஐம்புலன்களையும் அடக்கியதால் ஐந்திரன் என அழைக்கப்பட்ட புத்தர் ஐந்திரன் - இந்திரன் என அழைக்கப்பட்டார். இந்திரனைப் பின்பற்றியவர்கள் இந்திரர்கள் எனவும், அவர்கள் வாழ்ந்த நாடு இந்திர தேசம் எனவும் அழைக்கப்பட்டது என அயோத்திதாசர் தம் ஆய்வுகள் வழியே நிரூபிக்கிறார். அதற்கான ஆதாரங்களைத் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, வீரசோழியம், பிங்கல நிகண்டு போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்தாள்கிறார். மேலும், வேளாண்குடிகள் இன்றளவும் பின்பற்றி வரும் வளமைச்சடங்கான பொன்னேர் பூட்டுதல் நிகழ்வானது பௌத்தக் கூறுகளைக் கொண்டுள்ளதையும் விளக்குகிறார்.
இந்திர வழிபாடான இந்திர விழாவைச் சோழ மன்னன் நிறுத்தி வைத்ததால், மணிமேகலா தெய்வம் கோபம் கொண்டு நகரை அழித்தது என்ற மணிமேகலைக் காப்பியத்தின் துணைகொண்டு, இந்திரன் பௌத்த  கடவுள் என மயிலை சீனி வேங்கடசாமி பதிவு செய்துள்ளார்.
பேரா டி.தருமராஜன் அவர்களின் கட்டுரையில் கால்நடை மேய்ப்புச் சமூகமாக இருந்த பிராமணர்களுக்கும், உழவுத்தொழில் செய்யும் வேளாண் சமூக மக்களுக்கும் இடையேயான மோதலின் வழியாக ஒரு மாற்று வரலாறைப் பதிவு செய்கிறார். பிராமணர்களின் யாகங்களில் கால்நடைகளைப் பலியிடுதலை எதிர்த்த வேளாண்குடிகளுக்கும் பிராமணர்களுக்குமான மோதல், நிலங்களைப் பங்கிட்டுக் கொள்வது, நீர் ஆதாரங்களைப் பங்கிட்டுக் கொள்வது, பிற வளங்களைப் பங்கிடுதல் தொடங்கி, அதிகாரங்களைப் பங்கிட்டுகொள்வது வரை மோதல் நீடித்தது.

அரசர்கள் வளமான விவசாய நிலங்களைப் பிரமதேயங்களாகப் பிராமணர்களுக்குக் கொடுத்தபோது, அதை எதிர்த்து வேளாண்குடிகள் வணிகக் குழுக்களோடு இணைந்து அரசிற்கு வரி செலுத்த மறுத்துத் தங்களுக்கென தனிக்கொடி, தனி இலட்சினை ஆகியவற்றை 'சித்திர மேழி பெரிய நாட்டார் சபை' என்ற பெயரில் பிராமண ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண்மையில் ஈடுபடும் மக்களின் உழைப்பு, உற்பத்தி சார்ந்த அறிவு, உணவளிக்கும் ஈகைப் பண்பு போன்ற குணங்கள் பௌத்த மதத்தின் வித்தை, புத்தி, ஈகை  என்ற பௌத்த கூறுகளை ஒத்திருக்கின்றன. வேளாண்குடிகள் - பௌத்தம் இடையேயான ஊடாட்டத்தின் மூலமே இவை நிகழ்ந்திருக்க முடியும். ஏனெனில், உணவிடுதல் எனும் கருத்தைப் பற்றி மற்ற மதங்களை விட பௌத்தமே அதிகமாகப் பேசியிருக்கிறது.
இந்திரனைப் பற்றிய பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுகளைத் தொகுத்து, இந்திரன் ஆரிய அடையாளமில்லை; இந்திரன் தமிழ் அடையாளமே என்பதை நூலாசிரியர் உறுதிப்படுத்துகிறார். இவ்வாறு, வைதீகத்திற்கு எதிரான இந்திர அடையாளத்தை வைத்து மாற்றுப் பண்பாட்டு மரபுகளை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம், வைதீகத்திற்கு எதிரான பண்பாட்டுக் கூறுகளைக் கண்டறிந்து, அவற்றைப் பிராமணீயச் சிந்தனை  என்ற ஒற்றைத்தன்மைக்கு எதிரான சமண, பௌத்த, ஆசீவகம் போன்ற பன்மைத்துவப் பண்பாட்டு ஆய்வுகள் வழியே புரிந்து கொள்ள முயற்சி செய்ய இந்நூல் முன்னெடுப்பாக அமைந்திருக்கிறது.
சாதிய மேலாதிக்கமும் - அதன்வழிப்பட்ட பண்பாட்டு மேலாதிக்கமும் நிலவும் சூழலில், அதற்கு எதிரான ஆதிக்க எதிர்ப்புப் பண்பாடுகளும் இருந்துகொண்டேதான் உள்ளன. கெடுவாய்ப்பாக,  சாதிய மேலாதிக்க நடவடிக்கைகளையும், சாதிய மேலாதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்ளும் போக்கே தமிழ்ச் சூழலில் நிலவுகின்றது. இதன் விளைவாகத்தான், சாதிய மேலாதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளைக்கூட 'மேட்டிமை வாதம்' எனவும் 'சமஸ்கிருதமயமாக்கல்' எனவும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
வேளாண் மக்களின் தமிழ்ப் பண்பாட்டு கூறான இந்திர அடையாளம் சமண, பௌத்த, ஆசீவக சமயங்களில் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆரியப் பண்பாட்டில் வைதீக மதமானது தமிழ் அடையாளமான இந்திர அடையாளத்தை மிகுந்த வன்மத்தோடு இழிவுபடுத்தியும் -  இந்திர வழிபாட்டு அடையாளங்களை அழித்தும் சிறுமைப்படுத்தியும் புராணக்கதைகளைக் கட்டமைத்துள்ளது.
தற்போது, வேளாண்குடிகள்  'தேவேந்திரர்கள்' என்ற பழைய பெயராலேயே தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என வேட்கை கொண்டிருக்கின்றனர். இதனுள் வைதீக எதிர்ப்புத் தன்மை பொதிந்திருக்கும் பண்பாட்டு வரலாற்றை அறியவோ அடையாளப்படுத்தவோ பலரும் தவறிவிடுகின்றனர்.

ஆரியச் சிந்தனை மரபின் எச்சங்களைத் தமது சிந்தனையாக கொண்ட சில பல திராவிட இயக்க அறிவுஜீவிகள், இடதுசாரிகள் போன்றோரும் பௌத்த, சமண, ஆசீவகப் பண்பாட்டு அடையாளமான இந்திர அடையாளத்தை ஆரிய அடையாளமாகத்தான் கட்டமைக்கின்றனர். அதற்குச் சான்றாக, ஆரியப் பிராமணீயத்தால் கட்டமைக்கப்பட்ட இழிவான புராணப் புரட்டுகளைத்தான் காண்பிக்கின்றனர்.

பெயரில் திராவிட, இடதுசாரிக் கொள்கையையும், மூளையில் பிராமணீய மையச் சிந்தனையையே கொண்டிருக்கும் சில அறிவுஜீவிகள், தொடக்கம் முதலே வைதீகத்தை எதிர்த்துப் பெரும் கலகம் செய்து வந்த வேளாண்குடி மக்களின் 'தேவேந்திரர்' எனும் வைதீக எதிர்ப்புப் பெயரை  ஆரியப் பெயர் என்றுதான் இழிவுபடுத்தி எள்ளி நகையாடுகின்றனர். அதாவது, திராவிட இயக்க - இடதுசாரிச் சிந்தனைப் போக்குகளைக்கூட இன்றும் பிராமணீயமே தீர்மானிக்கிறது.

இந்நிலையில், தமிழர் பண்பாட்டுத் தளத்தில்  வைதீக மரபிற்கு  எதிரான தமிழ்ப் பண்பாட்டு கூறுகள் அடையாளம் காணப்பட்டு ஆராயப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் -  வேளாண் மக்களைப் பற்றிய ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியதன் சமூகத் தேவையை - வேளாண் மக்கள் குறித்த சமூக உரையாடல்களை மிக விரிவாக முன்வைத்திருக்கிறது மகாராசனின் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' நூல்.

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
வெளியீடு:
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச : 9080514506.
*
கட்டுரையாளர்:
வருசக்கனி,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
நாட்டுப்புறவியல் துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை.

1 கருத்து: