திங்கள், 1 நவம்பர், 2021

நெல்லின் தொன்மையும் வேளாண் மரபும்: மகாராசன்.




வேளாண்மையின் உணவு உற்பத்தியில், நெல் பயிர்தான் உலகம் பரவிய உணவுத் தானியத்தை உருவாக்கும் பயிராகக் கருதப்பட்டிருக்கிறது. தமிழ் நிலத்தில்தான் நெல் பயிர் முதலாவதாகவும் அதிகளவும் வேளாண்மை செய்யப்பட்டிருக்கிறது. நெல் பயிரின் தொன்மை வரலாற்றைத் தொல்லியல் அகழாய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. 

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பல்வேறு வகையான தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள், ஒரு பானையின் மீது நெல்மணிகளுடன் கூடிய நெற்கதிர்கள், ஒரு பெண்ணுருவம், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள்  ஒட்டுருவமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில், அதன் இயக்குநர் சத்தியமூர்த்தி அவர்கள், பழங்காலத் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பைக் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டு உள்ளார். 100 வருடங்களுக்குப் பிறகு தற்பொழுதுதான் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும், இந்த எழுத்துப் பொறிப்பின் காலம், அறிவியல் ஆய்வின்படி கி.மு.1500 முதல் கி.மு.500 எனவும் கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் அவர். ஆகவே, இந்தத் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துப் பொறிப்பின் காலம் குறைந்த பட்சம் கி.மு.500க்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் என இயக்குநர் சத்தியமூர்த்தி அவர்கள் அறுதியிட்டுக் கூறுகிறார். ஆக, இந்தத் தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு.1500க்கும் கி.மு.500க்கும் இடைப்பட்டது என்பதால், இந்தத் தமிழி எழுத்துப் பொறிப்பின் காலத்தை கி.மு.800 எனக் கொள்ளலாம் (Source: The Hindu News paper Dated 17.2.2005, ‘Rudimentary Tamil-Brahmi Script’ unearthed at Adichanallur). 

இது ஒருபுறம் இருக்க, இங்கு கிடைத்த எலும்புக்கூடுகள், மண்டையோடுகளை ஆய்வு செய்த ஆய்வாளர்களின் கருத்தும், கரிமப் பொருள் ஆய்வு முடிவுகளும் 3700 ஆண்டுகளுக்கும் முந்தியவை  என்கின்றன. அதனால்தான், ஆதிச்சநல்லூர் நாகரிகத்தைச் சிந்துவெளி நாகரிகத்திற்கு இணையான நாகரிகம் என்கிறார் சொ.சாந்தலிங்கம். 

பொருந்தல் அகழாய்வில் கிடைத்த நெல் மாதிரி ஒன்று, அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில் (Accelerator Mass Spectrometry by the Beta Analytic Lab, USA) அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், அதன் காலம் கி.மு.450 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இன்னொரு நெல் மாதிரி ஒன்று அதே ஆய்வு நிலையத்தில் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டதில், அதன் காலம் கி.மு.490 எனக் கணித்தறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். (Source: The Hindu News paper Dated 15.10.2011, Porunthal Excavations prove existence of Indian scripts in 5th century BC : expert). 

இந்நிலையில், நெல்லின் தொன்மை குறித்து விவரிக்கும் டி.தருமராஜன், ஆதிச்சநல்லூர் தொட்டு தமிழகத்தில் எங்கெல்லாம் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டனவோ அங்கெல்லாம் நெற்பயிருக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் தோண்டி எடுக்கப்பட்ட தாழிகளுக்கு 3500லிருந்து 4000 வருட வயது இருக்கும் என்று சொல்கிறார்கள். அந்தத் தாழியைச் செய்வதற்காக மண்ணோடு வைக்கோல் செண்டை கலந்து இருக்கிறார்கள். மேலும், தாழிகளுக்குள் நெல் உமிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஈமச்சடங்கில் நெல்மணிகளைப் பயன்படுத்தும் வழக்கம் 4000 வருடம் பழமையானது. இதன்படி கி.மு 2000 தொட்டே நெல் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கருதமுடியும் என்கிறார். 

ஆக, பொருந்தல், ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் பொருட்களின் காலமே இவ்வளவு பழமை எனும்போது, நெற்கதிர் உருவம் பானையோட்டில்  பதிவதும், முதுமக்கள் தாழிகள் மற்றும் பானைகளில் நெல் மணிகளை இட்டுப் புதைப்பதுமான  பண்பாட்டு வழமையின் காலம் அதற்கும் முந்தையப் பழமையாகும் எனும்போது, நெல் பயிர் வேளாண்மையின் தோற்றக் காலமும் மேற்குறித்த எல்லாவற்றுக்கும் முந்தைய மிகமிகப் பழமை வாய்ந்ததாக இருந்திருக்கிறது எனலாம். 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக