நெல் மணிகளின் தோல் நீக்கிய உணவுத் தானியமே அரிசியாகும். இத்தகைய அரிசியை உலகிற்கு அறிமுகம் செய்ததும் தமிழ் உழவர்களே ஆவர். உலகில் பேசப்படும் பல மொழிகளில் வழங்கிவரும் அரிசியைக் குறிக்கும் சொற்கள், தமிழில் உள்ள அரிசி எனும் வேர்ச்சொல்லில் இருந்தே தோன்றியிருப்பதாக மொழியியல் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.
ஆங்கிலத்தில் உள்ள ரைஸ் என்னும் சொல்லானது, கிரேக்க மொழியின் வாயிலாகப் பெறப்பட்ட பழைய தமிழ்ச் சொல்லாகிய அரிசி என்பதன் திரிபே எனக்கூறும் மு.வரதராசன், கி.மு அய்ந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே அரிசியும் மயிலும் சந்தனமும் தமிழ்நாட்டிலிருந்து பாபிலோனியாவுக்குச் சென்றன என்கிறார்.
உலகிற்கு அரிசியை அறிமுகம் செய்த பெருமை தமிழர்களைச் சாரும் எனச் சுட்டும் பாமயன், அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்புவரை, அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது. அலெக்சாண்டருடன் வந்த அரிஸ்டாட்டில், அன்றைய சிந்தாற்றின் (Indus Rivar) தென்புறமுள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் பெரியதொரு குழுவினருடன் வந்து திரட்டிச் சென்றுள்ளார். அதில் ஒன்றுதான் அரிசி.
மேலும், பல மேல்திசை, கீழ்த்திசை நாடுகளுக்கெல்லாம் அரிசி அரேபிய வணிகர்களால் கொண்டு செல்லப்பட்டிருகிறது. கி.மு 300களில் அரிசி, ஆப்பிரிக்கக் கடலோர நாடுகளுக்கு (எகிப்து, எத்தியோப்பியா, பாரசீகம் - இன்றைய ஈரான்) கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் தோன்றிய பேரரசனான ரோமப் பேரரசின் (இன்றைய இத்தாலி) கீழ் இருந்த சிசிலி வழியாக அரிசி ஸ்பெயின் சென்றது என்கிறார்.
நெல் தொன்றுதொட்டுத் தமிழகத்து விளைபொருள் என்பதும், அரிசி முதன்முதல் தமிழகத்தினின்றே மேனாடுகட்கு ஏற்றுமதியானதென்பது வெளிப்படை எனக்கூறும் பாவாணர், உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள அரிசி தொடர்பான சொற்கள், அரிசி என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்தே உருவானவை என்பதை எடுத்துக்காட்டும் பகுதிகள் நோக்கத்தக்கவை.
ஆங்கில மொழியில் ரைஸ், ரிஸ் (English - rice ; Middle English - rys), ஃபிரிசியன் மொழியில் ரிஸ் (Frisian - rys), டச்சு மொழியில் ரைஸ்ட் (Dutch - rijst), செர்மன் மொழியில் ரெய்ஸ், ரீஸ், ரிஸ் (German - reis; Middle Low German - riis, ris; Middle High German - ris), ஸ்வீடீஷ் மொழியில் ரிஸ், ரீஸ் (Swedish - ris; Middle Swedish - riis), டானிஷ் மொழியில் ரிஸ் (Danish - ris), பிரெஞ்ச் மொழியில் ரிஜ், ரிஸ் (French - riz; Old French - ris), இத்தாலிய மொழியில் ரைஸோ (Italian - riso)…
இலத்தீன் மொழியில் ஒரைஸா, ஒரைவா (Latin - oriza,orywa), கிரேக்க மொழியில் ஒருஸா, ஒருஸோன் (Greek - oruza, oruzon), ஸ்பானிஸ் மொழியில் அரோஸ் (Spanish - arroz), போர்ச்சுக்கல் மொழியில் அரோஸ் (Portuguese - arroz), அரபு மொழியில் அருஸ், உருஸ் (Arabic - aruz, uruz), அரிசியைக் குறிக்கும் தாவரவியல் இலத்தீன் பெயர் ஒரைஸா சாடிவா (oryza sativa) என, அரிசி என்னும் தமிழ்ச் சொல்லே பல்வேறு ஒலி மாற்றங்கள் பெற்று, அரிசியைக் குறிக்கும் பல்வேறு மொழிச் சொற்களாக வழங்கி வருவதை வேர்ச்சொல் ஆய்வில் எடுத்துக் காட்டும் பாவாணர், அரிசி தமிழ்ச் சொல்லென்று குறிக்கப்படாமல் ஆங்கில அகராதிகளில் இதை இலத்தீன் சொல் என்று போட்டுவிட்டு, கீழைத் தேசத்துத் தோற்றம் என்றும், தோற்றம் தெரியாதவாறும் குறித்துள்ளனர் என்கிறார்.
அரிசியைக் குறிக்கும் ஒரு சொல்லே உலக மொழிகள் பலவற்றில் பரவி இருக்கும்போது, நெல்லும் அரிசியும் உலகின் பல பகுதிகளில் பரவிய முதன்மையான உணவுத்தானிய வணிகப் பண்டமாகவே இருந்திருக்க வேண்டும். அதனால்தான், மருத நிலத்தில் நெல் வேளாண்மைக்கு அதிக முதன்மை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆக, மருத நிலத்தின் வேளாண்மை என்றாலே, அது நெல் வேளாண்மையாகவே நடந்தேறியிருக்கிறது எனலாம்.
மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 220,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு :
9080514506
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக