வேளாண்மையை வாழ்வியலாக கொண்டவர்கள் திருட மாட்டார்கள். மானிடர்க்கும் மற்ற பிற உயிரினங்களுக்கும் இரையை ஈகை செய்பவர், பிறரின் உடமையைக் கவர்வது அரிது எனும் அறத் தத்துவ விளக்கத்தோடு தொடங்குகின்றது மகாராசன் எழுதிய வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல்.
உயிரிகளுக்கு உணவு முக்கியம். உணவுக்கான தேடுதல், சேகரித்தல், பூர்த்தி செய்தல் போன்றவை எங்ஙனம் நடந்தேறுகிறது?
வெள்ளாமை அல்லது வேளாண்மை என்றால், பொதுவாக நெல் உற்பத்தியையே குறிக்கும். ஆதிமனிதன் அரிசியிலிருந்து அதிகாரத்தைப் பற்றிச் சிந்தித்தான்.
வேளாண் உற்பத்திக்கும் அரசு உருவாக்கத்திற்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்பு, விரிவாகச் சொல்வதென்றால், குடும்பத்தை நிர்வகித்ததால் குடும்பத் தலைவன் குடும்பன் என்றழைக்கப்பட்டன். பல குடும்பங்கள் கூடி வாழ்ந்த பகுதி ஊர் என்றும், குடிமக்களின் தலைவன் ஊர்க் குடும்பன் என்றும் அழைக்கப்பட்டான். கூடி வாழ்ந்த மக்களின் ஊர்க் குடும்பு முறையே அரசு உருவாக்கத்தின் முதலும் மூலமும் ஆகும்.
பன்னெடுங்காலமாக மனிதர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வரும் ஒப்பற்ற பெருங்குடியான வேளாண் மரபினரைக் குறித்தான விரிவான ஆய்வுகளோ, படைப்புகளோ, பக்கச்சார்பற்ற பொது உரையாடல்களோ திறந்த மனதோடு இதுநாள்வரை நடைபெறவில்லை என்கிற குறைபாட்டினை அறச்சீற்றமாய் நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
வைகை எனும் பொய்யா குலக்கொடியாளின் கரையோரத்தில் வாழ்வையும் வசிப்பிடத்தையும் கொண்ட நூலாசிரியர், மருதை மண்ணின் மைந்தன் என்பதால் மாந்த நாகரிகத்தின் தொட்டிலான ஆற்றங்கரையோர மனிதர்கள் உருவாக்கிய நாகரீகம், நகரியம், அம்மக்கள் நீருக்கும் நிலத்திற்கும் அளிக்கும் முக்கியத்துவம் குறித்து எவ்விதமான இட்டுக் கட்டுகளின்றி இயல்பாக விளக்கியுள்ளார்.
வேளாண் குடிமக்களின் பண்பாடு, வரலாறு, வாழ்வியல் வலிகளை ஏனைய பிற சமூகங்கள் உள்வாங்கிக் கொள்வதிலும், உள்வாங்கிக் கொண்டதிலும் உள்ள போதாமைகளை விரிவாக அலசுவதோடு, ஒவ்வொரு சமூகமும் பிற சமூகங்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்வதில் கவனம் செலுத்தினாலே போதும், சமூகங்களுக்கு இடையே ஏற்படும் சஞ்சலங்களுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வை எளிதாக எட்டிவிடலாம் என்கிறார்.
குறிஞ்சி நிலப்பரப்பில் இரையின் தேவையின் பொருட்டும், வாழ்க்கை நிமித்தமும் தம்மைத் தற்காக்க, எதிராளியைத் தாக்க வேட்டை வாழ்முறைக்குப் பழக்கப்பட்டிருந்தது மாந்தர் இனம்.
மலை மாந்தர்களின் ஒரு குழு மலையடிவாரப் பகுதிக்குத் தேடலின் நிமித்தம் வருகின்ற காலகட்டத்தில் சீரற்ற காடும் மேடுமான அடிவார நிலப்பரப்பைக் கண்ட பின்பு, மலைவாழ்க்கையில் தாங்கள் பழக்கப்படுத்திய விலங்குகளான ஆடு மாடு முதலான சில விலங்குகளை மேய்ச்சலுக்குப் பழக்கியதோடு தம்முடைய உணவு மற்றும் உற்பத்தி சார்ந்த தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்த வேண்டும் என்கின்ற நுட்பத்தைக் கண்டறிகிறார்கள். அதன் நீட்சியாக மாட்டோடு மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்ட பிணைப்பும் இணைப்புமே மரபார்ந்த வேளாண்மை துவக்கத்திற்கான அச்சாரம் என்பதை அறியலாம்.
ஆடு மாடுகளோடு அலைகுடி வாழ்க்கைக்கு ஆட்பட்டிருந்த குழுவினரில் ஒரு சாரார், மெல்ல கீழ்நோக்கி நகர்ந்து ஆறுகளையும் ஆற்றங்கரையோரச் சமவெளி நிலங்களையும் அறிந்திடும் காலகட்டத்தில்தான் அலைகுடி நிலையிலிருந்து முன்னேறி, நிலைத்த குடி வாழ்க்கைக்கு மானுடம் தன்னை தகவமைத்துக் கொள்கிறது.
நிலைத்த குடியிருப்பு வாழ்முறைக்கு மனிதர் மாறிய அக்காலகட்டத்தில்தான் உலோகங்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக, இரும்பைக் கண்டறிந்ததுதான் மாந்த நாகரிகத்தின் வளர்ச்சிக்கும், வாழ்வியல் மாற்றத்திற்கும் வழிகோலியது எனத் தீர்க்கமாகச் சொல்லலாம். இரும்பின் வருகையே உழவைச் செழுமைப்படுத்தியதோடு, சிறப்பான வாழ்வுக்கும் வழிவகுத்தது.
உழவு என்றால் உழுகின்ற மனிதன், மாடு, கலப்பை, நிலம் யாவையையும் சேர்த்து பொதுவாய் உழவு என்பதாக அடையாளம் காட்டப்படுகிறது. இக்காலகட்டத்தில் ஆற்றங்கரையோரச் சமவெளிகளைப் பண்படுத்தி வேளாண்மை செய்யும் பொருட்டு நிலங்கள் குழுக்களுக்குள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
பின்பு, உழைப்பின் அடிப்படையில் நிலம் தனி நபர்களின் சொத்தாக மாற்றம் பெறுகின்றது. புதிதாக உருவாகிய நிலவுடைமைச் சமூகம் தோன்றுகிறது. காலவோட்டத்தில் நிலம் வேளாண் குடியினரின் கட்டுப்பாட்டிற்குள்ளும் வந்தது. இக்காலகட்டத்தில் பிறபகுதியிலிருந்து வந்த பிராமணர்களின் இருப்பு கேள்விக்குறியாகிப் போனதைக் கண்டு அச்சமடைந்து ஆத்திரம் கொள்கின்றார்கள்.
காரணம், பிராமணர்கள் ஆடு மாடு மேய்ப்பதற்குப் பயன்படுத்திய தரிசு நிலங்களை தேவேந்திரர்கள் பண்படுத்தி கழனிகள் ஆக்கியதால், கால்நடைகளின் மேய்ச்சல் பாதிக்கப்பட்டதோடு, வேளாண்மையின் உற்பத்தி, உழைப்புப் பங்குதாரராக அறியப்பட்ட மாடுகளை, பிராமணர்கள் உணவுக்காகவும் யாகத்திற்க்காகவும் கொல்வதை தேவேந்திரர் எதிர்த்தனர்.
இதனால், தேவேந்திரர்களுக்கும் பிராமணர்களுக்குமான மோதல் என்பது கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்கும் நிலவுடமைச் சமூகத்திற்குமான மோதலாக மாற்றம் பெறுகின்றது.
கால்நடை வளர்ப்புச் சமூகப் பிரதிநிதிகளாகப் பிராமணர்களும், நிலவுடமைச் சமூகப் பிரதிநிதிகளாகர் தேவேந்திரர்களும் நின்று போராடினார்கள்.
சுருங்கக்கூறின், பழமைக்கும் புதுமைக்கும் இடையே நடந்த பெருத்த மோதலில் தேவேந்திரர்கள் புதுமையின் பக்கம் நின்றார்கள் என்பதோடு, வென்றார்கள் என்பதே வரலாறு என அறிந்து கொள்ளலாம்.
வேளாண்மை முதன்மைத் தொழிலாய் மாறிப்போனதால் ஏற்பட்ட அச்சம் மற்றும் பகையுணர்வின் காரணமாகவே வேளாண்மை என்பது இழிதொழில்; நிலத்தை உழுவது பாவச்செயல் என்பதான பரப்புரையில் பிராமணர்கள் ஈடுபட்டதைச் சுட்டிக் காட்டுவதோடு, உழவை ஒரு தொழிலாக எண்ணாமல், பசிப்பிணி போக்குதல் பாரம்பரியமாய்ச் செய்து வரும் கடமையாகவும், பண்பாட்டு நீட்சியாகவும் மள்ளர் பள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்கள் செய்துவருவதைப் பள்ளு இலக்கிய நூல்களான முக்கூடற்பள்ளு, பொய்கைப் பள்ளு, பேரூர்ப்பள்ளு, நெல்விடு தூது, ஏரெழுபது, மகிபன் பள்ளு, திருவேட்டை நல்லூர் பள்ளு உள்ளிட்ட நூல்கள் வாயிலாகவும்,
வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோன் உயரும் எனும் அவ்வையாரின் வரிகளினூடகவும், உழவர்களின் பாரம்பரியம், பண்பாட்டு விழுமியங்கள் குறித்துத் தொல்காப்பியம், திவாகர சூடாமணி நிகண்டுகள், ஏரெழுபது, திருக்குறள், பதிற்றுப்பத்து, புறநானூறு, கம்பராமாயணம், பேரூர்ப் புராணம், ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, கலித்தொகை உள்ளிட்ட பல இலக்கியத் தரவுகளோடு, தரிசாய்க் கிடக்கும் நிலத்தை முச்சாலடித்து நாற்று பாவுவதில் தொடங்கி, அறுப்பு முடிந்ததும் விதை நெல்லு சேகரம் செய்வதோடு, வேளாண்மைக்கு துணையாய் இருந்த 18 குடிமக்களுக்கும் களத்தில் படி அளத்தல் எனப் பாரம்பரிய நடைமுறைகளைச் சுட்டிக் காட்டுவதோடு, வயலிலும் வரப்பிலும் காட்டிலும் கழனியிலும் வெள்ளந்தியாய் உலாவித்திரிகின்ற நெல்லின் மக்களினுடைய மகிழ்ச்சி கோபம், வலி, வறுமை, காதல், கொண்டாட்டம் என சங்க இலக்கியம் கொண்டு வண்ணம் தீட்டியுள்ளதோடு, நாற்று நடும் குடும்பமார் குல மங்கையரின் குலவை ஒலி முதல் தினவெடுத்த காளைகளை அடக்கும் குடும்பர்களின் செருக்கு வரை பண்டையக் காலத்தைய மனிதர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க நம்மைத் தூண்டுவதோடு, தற்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்ற வேளாண்மையையும் மக்களின் பாடுகளையும், வேளான் மரபினரைச் சாகடிக்க முயலும் - சாவுக்குத் தூண்டும் பெருநிறுவனங்களின் கோர முகத்தை அடையாளம் காட்டுவதோடு, நம் பாட்டன் பூட்டன் காலம் தொட்டு பாரம்பரியமாய்ச் செய்துவரும் மரபுவழி வேளாண்மையை மீண்டும் தொடர வேண்டும் என்கின்ற எச்சரிக்கை மணியையும் அடித்து இருக்கிறார்.
வயல் வரப்பில் மண்வெட்டியோடு நிற்கும் குடும்பனிலிருந்து, வழிந்தோடும் வாய்க்கால் நீரில் சீறிப் பாயும் கெண்டை மீன்கள் வரை மருதநிலத்தின் பண்பாட்டு அடையாளங்களை மிகக் கச்சிதமாய் அடையாளப்படுத்தி இருப்பதோடு, சித்திரமேழி என்றால் அழகிய கலப்பையைக் குறிக்கும் சொல்லாகும். மேழியைச் சித்திர ஓவியமாய் வரைந்து, அதைத் தங்களுடைய அடையாளமாய்க் கொண்டிருப்பவர்களால் உருவாக்கப்பட்டதுதான் சித்திரை மேழி பெரிய நாட்டார் சபை என்பதை அறியத் தருகிறார்.
தந்தை தாய் குரு தெய்வமும் செந்தமிழ்ப்பூசுரர் இன்றி சதிராய்ப் பின்னுள்ளவர்களை மதியாதவன் ...இந்திரன் குலத் தோன்றியே வந்த நாள் முதலாகவே இலகும் ஏழூர் குடும்பன் நானே .... எனும் பாடல் மூலம் தமிழ் மூவேந்தர்களைத் தவிர அரசு அதிகாரம் சார்ந்த வேறு எவரையும் வழிபடுவது, தொழுவது உழவுக் குடியின் வழக்கத்தில் இருந்ததில்லை என்பதோடு, குடும்பத்திலோ, குடியிலோ வாழ்ந்து மடிந்தவர்கள் நினைவாக நடத்தப்பட்ட நீத்தார் வழிபாடு, நடுகல் வழிபாடு போன்றவை ஏதோ ஒரு வகையில் மக்களுக்காகப் பாடுபட்டு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் நினைவைப் போற்றும் ஒரு சடங்காகவும் மரபாகவும் நாம் பின்பற்றி வருகிறோம்.
அவ்வகையிலேயே மக்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தியவர்களைத் தொழுததும் வாழ்த்துவதும் மட்டுமல்லாது, அவர்கள் வழியில் தங்கள் வாழ்வியலை வரையறுத்துக் கொண்ட அவர்களுடைய சந்ததியினர் உயிர் நீத்த முன்னவர்களைத் தெய்வமென தொழுது வழிபடத் தொடங்கினர்.
தமிழ் மண்ணிலே தோன்றிய வேந்தன் வணக்கமானது, முதல் பாண்டிய வேந்தனையே குறிக்கும். அவனுடைய இறப்பிற்குப்பின் தெய்வ வேந்தனாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
வேந்தன் தெய்வ நிலை அடைந்த பிற்பாடு தெய்வ வேந்தன் ஆகிறான். தெய்வ வேந்தனே பிற்காலத்தில் மருவி தேவேந்திரன் என்று சொல் உருவாகின்றது. இந்திரன் என்கின்ற சொல்லிற்கு இனத்தின் தலைவன் அல்லது கூட்டத்தின் தலைவன் என்பதாகத்தான் பொருள் சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆரியர்கள் வழிபடக்கூடிய ரிக் வேதம் சுட்டிக்காட்டும் இந்திரனுக்கும், தமிழர்கள் போற்றி வணங்கக்கூடிய இந்திரனுக்கும் உள்ள வேறுபாடுகளை பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுத் தகவல்களோடு சான்று பகர்ந்திருப்பதோடு, நீர் மேலாண்மை, வேளாண்மையைப் பாரம்பரியமாகச் செய்துவரும் வேளாண் மரபினரான தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் பண்பாடு, வரலாறு, வாழ்வியல் உள்ளிட்ட உள்ளார்ந்த விசயங்களைத் தயக்கம் தவிர்த்துப் பரந்துபட்ட பார்வையோடு பொதுச் சமூகம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை, இந்நூல் காத்திரமான தரவுகள் வாயிலாக அறத்தின் வழிநின்று திறம்பட நிறுவியிருக்கிறது. நூலாசிரியருக்கு வானமும் வசப்பட எனது வாழ்த்துகள்.
மனமாச்சர்யங்களை விடுத்து வாருங்கள் தமிழ்ச் சொந்தங்களே ..!கரம் கோர்ப்போம்; களம் காண்போம். வீழ்ந்து கிடக்கும் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களோடு, அதிகாரத்தையும் மீட்டெடுப்போம் ..!
நன்றி.
*
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
வெளியீடு:
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச : 9080514506.
*
கட்டுரையாளர்:
அழகர்சாமி பாண்டியன்,
சமூகச் செயல்பாட்டாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக