சைவம் மற்றும் வைணவ சமயங்களின் இணைவைக் கொண்ட பக்தி இயக்கம் வெகுமக்கள் செல்வாக்கைப் பெற்றதற்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, சிற்றின்பம் எனப்பெறும் பாலியல் துய்ப்புளை அங்கீகரித்த நிலையாகும். சமணம் மற்றும் பவுத்த சமயங்கள் பேரின்பத் துய்ப்பை அடைவதற்காகத் துறவை முன்னிறுத்தியதோடு அல்லாமல், காதல், காமம், களிப்பு போன்ற துய்ப்புகளை விலக்கி வைத்திருந்தன. ஆனால், சைவ - வைணவ சமயங்களோ அத்தகைய விலக்கல் முறைகளைப் பின்பற்றவில்லை. மாறாக, காதல்,காமம், களிப்பு, கலை இலக்கிய
ஈடுபாடுகள் போன்றவற்றைத் தமது பக்திநிலைப் பரப்புகளில் படியச் செய்வதற்கான வாய்ப்புகளுக்கு இடமளித்தன. அதனால்தான், சங்ககாலத் திணை இலக்கிய மரபுகளுள் ஒன்றான ‘அகப்பொருள் மரபு’ பக்திநிலை இலக்கியத்திலும் படிய நேர்ந்திருக்கிறது.
சங்க கால அகப்பொருள் இலக்கிய மரபு பெண்ணுக்கும் ஆணுக்குமான காதலை மய்யமிட்டிருப்பது.
‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’ என்ற மரபைப் பின்பற்றித்தான் அகத்திணைக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. தம்மைப் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ பாவித்துக்கொண்ட காதல் அனுபவ வெளிப்பாடுகள் மானுடம் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டியதில்லை. கடவுள் பற்றிய காதல் அனுபவ வெளிப்பாடுகளும் அகப்பொருள் மரபைச் சார்ந்ததுதான் எனும் வகையில்
காமப்பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்(தொல்.பொரு.81)
என்கிறது தொல்காப்பியம். இத்தகைய அகப்பொருள் மரபின் தொடர்ச்சியைப் பக்திநிலைக் கவிதைகளிலும் காணலாம்.
சமணத்திலும் பவுத்தத்திலும் பெண்களின் பங்கேற்பு இல்லாமல் போனதற்குக் காரணம், வீடு பேறு என்ற நிலையை அடைவதற்குப் பெண்களால் முடியாது என வாதிட்டதுதான். இன்னொரு பிறவியில் ஆணாகப் பிறந்து வீடுபேறு அடைய வழி சொன்னதோடு, பெண்ணோடு இணைந்திருக்கும் இல்லறம் சிறப்பல்ல எனச் சமணமும் பவுத்தமும் கருதியிருந்தன. இதனால், தமிழ் அக ஒழுக்க வாழ்க்கை முறை நிராகரிப்புக்கு உள்ளாகத் தொடங்கியது. இதே சூழலில் சைவமும் வைணவமும் தமிழ் அக ஒழுக்க வாழ்க்கை முறையைத் தமதாக்கிக் கொண்டன. பழைய அகப்பொருள் மரபை வைத்துக்கொண்டு இறைக் காதலையும் மனிதக் காதலையும் பாடும் வகையில் பக்திநிலைக் கவிதைகள் பாடப்பட்டன.
சைவத் திருமுறைகளிலும் வைணவப் பிரபந்தங்களிலும் காணலாகும் அகபொருள் மரபானது, அக்காலத்தியப் பக்திநிலைச் சூழலுக்கேற்றவாறு மாற்றங்களைப் பெற்றிருக்கிறது. அதாவது, கடவுளைக் காதலராகப் பாவனை செய்துகொண்டு பாடுதலை பக்திநிலைக் கவிதைகளில் காணலாம். இத்தகைய அகப்பொருள் சார்ந்த பக்திநிலை மரபு சைவ-வைணவ இலக்கியங்களில் பின்பற்றப்பட்டிருக்கின்றது. அவற்றுள் வைணவ சமயம் சார்ந்து பாடியவர்களான நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார் போன்றோர் நாயகி - நாயகன் பாவனையில் பெண் மனவுணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆயினும், அப்பாவனைகள் ஞானத்தில் தன்பேச்சையும், பிரேமத்தில் பெண் பேச்சையும் கொண்ட ஆணின் குரலாகவே அமைந்திருந்தன. ஆனால், ஆண்டாளோ ஞானத்திலும் பிரேமத்திலும் தனது இயல்பான பெண் பேச்சையே வெளிப்படுத்தியுள்ளார்.
வைணவ இலக்கியக் கர்த்தாக்களான ஆழ்வார்களுள் ஆண்டாள் ஒருவரே பெண். மற்றவர்கள் அனைவரும் ஆண்கள். ஓர் ஆண் என்னதான் மெனக்கெடுத்துக் கொண்டு பெண் போலப் பாடினாலும், அது ‘பெண் பாடியது போல’ என்றுதான் அமையுமே தவிர, பெண் பாடியதாக இருக்க முடியாது. ஆண்களாக இருந்து கொண்டு பெண்போல பாவித்துக் கொண்டு பாடுவது செயற்கைத் தனம் கொண்டது. பெண்ணாகவே இருந்து பெண்ணாகவே பாடுவதில்தான் உண்மையும் உயிர்ப்பும் இருக்க முடியும். அவ்வகையில், ஆண்டாளின் கவிதைகள் இயற்கை ஓட்டத்தைக் கொண்;டிருப்பன. இவ்வியற்கை ஓட்டத்தைத்தான் ‘பள்ளமடை’ என்கிறார் திருப்பாவை உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை. அவர் எழுதிய திருப்பாவை மூவாயிரப்படி அவதாரிகையில் “புருஷன் புருஷனைக் கண்டு ஸ்நேகிப்பதிலுங் காட்டில் ஸ்த்ரீ புருஷனைக் கண்டு ஸ்நேஹிக்கை பள்ளமடையாகையாலே”1 எனக் குறிப்பிடுகின்றார். இதன்மூலம் ஆண்டாளின் பக்திநிலை சார்ந்த கவிதைகளில் நாயகி நாயகர் காதல் வெளிப்பாடுகள் இயற்கைத்தன்மை கொண்டது என அறியலாம்.
ஆண்டாளின் இயற்கையான பெண்பேச்சு தமிழ் இலக்கிய மரபிலிருந்து விலகிய மாற்று மரபை முன்னிறுத்துகிறது. பெண்நிலை சார்ந்து ஆண்டாளின் கவிதைகளை நோக்கும்போது இவ்வுண்மை புலப்படுகின்றது. ஒரு பெண்ணின் நனவிலித் தளத்தில் உருவாகும் உணர்வுகளை வெளிக்காட்டுவதற்குப் பல்வேறு சமூகத் தடைகள் மரபுகளின் பேரில் உருவாக்கப்பட்டிருந்தன. பெண்ணின் இயற்கைக் குணாம்சத்தை, இயற்கைக் காதலை, இயற்கைக் காமத்தை, இயற்கை களிப்பையெல்லாம் எக்காரணம் கொண்டும் ஒரு பெண் வெளிப்படுத்தக் கூடாது என்கிற கட்டுப்பாடுகள் பெண்ணை இறுக்க நிலையிலே வைத்திருந்தன. இந்நிலையில்தான், பக்திநிலை என்ற வெளிப்பாட்டுத்தளம் மூலமாக மடைமாற்றம் செய்து கொள்ளுதலைப் பெண்கள் மேற்கொள்ளத் தொடங்கினர் எனலாம்.
“எந்த ஓர் உணர்வுத் தளத்தின் தீவிரத் தன்மையும் ‘பக்தி’ என்பதால் மடைமாற்றி விடலாம். தீராத காமமும், காமம் பற்றிய அச்சமும்; தீராத காதலும், காதல் மீதான அருவருப்பும்; பெரும் திளைப்பும், திளைப்பை மறுக்கும் துறப்பும் என எதிர் எதிர்த் தீவிரத் தன்மைகளைக் கையாளும் இடம் இந்த பக்தி.”2 அவ்வகையில் நோக்கும்போது ஆண்டாளின் காதல் துயரமும் காம வேட்கையும் பக்தியின் வழியாக மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது எனக் கருத இடமுண்டு.
ஆண்டாளின் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழிக் கவிதைகள் பக்திநிலை சார்ந்து வெளிப்பட்டிருப்பினும், அவற்றுள் பெண்நிலை சார்ந்த கூறுகளைக் கொண்ட இயல்பான பெண்மொழியைக் காணமுடியும். “மரபான ஆணாதிக்கச் சமூக அமைப்பில், ஆண்களை மேன்மைப்படுத்தவே உருவாக்கப்பட்ட இலக்கிய மரபுகளையும் மொழியமைப்பையும் உடைத்துக் கொண்டு மாற்று மரபாகத் தன்னுடைய காதல் உணர்வுகளை எந்தவிதப் பூச்சுமின்றி இயல்பான பெண்மொழியில் வெளிப்படுத்தியவர் ஆண்டாள்”3ஆவார்.
மரபுகளாலும் வரம்புகளாலும் தடுக்கப்பட்ட பெண்ணின் இயல்பான காதல் உணர்வுகள் இலக்கியத்தளத்தில் பதிகின்றபோது, இதுவரையிலான மரபார்ந்த பார்வையைக் கொண்டிராமல் மாற்று மரபைக் கொண்டிருக்கிறது புலனாகின்றது. நிலவுகிற மரபுகளின் மீது எதிர்வினையாற்றக் கூடிய தன்மையை மாற்று மரபுகள் பெற்றிருக்கும். எதிர்ப்பும் மறுப்பும் புதிதும் கொண்ட மரபாகவே ஆண்டாளின் மாற்று மரபு அமைந்திருக்கிறது. இத்தகைய மாற்று மரபு தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது எனலாம்.
ஆண்டாளின் கவிதைகள் திருமால் மீது கொண்ட காதலையும், திருமாலுடன் சேரத்துடிக்கின்ற வேட்கையையும் வெளிப்படுத்தியமைக்குக் காரணங்கள் இருக்கின்றன. ஆண்டாள் குறித்து வழங்கப்பெறும் கதைகள்வழி நோக்கும்போது அவர் பாடியதன் பின்னணியை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.
ஆண்டாள் பற்றிய திட்டவட்டமான வரலாறு கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும், அவர் குறித்த சில தரவுகளின் அடிப்படையில், ஆண்டாள் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாகக் கருதப்படுகிறார். பெரியாழ்வாரின் தோட்டத்துத் துளசிச் செடியருகே பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவர் ஆண்டாள் என்று புராணக் கதைகள் கூறும் நுhல்கள் குறிப்பிடுகின்றன. கடவுளால் அருளப்பெற்ற குழந்தையே ஆண்டாள் எனும் புனைவை விலக்கி வைத்துப் பார்க்கும் போது, ஆண்டாளைப் பெற்ற தாய் தந்தையர் இன்னாரென்று அறிய இயலவில்லை.அநாதரவான நிலையில் இருந்த ஆண்டாள், பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டமை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
ஆண்டாள் பருவம் எய்திய பின்னர், அவருக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடைபெற்றிருக்க வேண்டும். அப்போது, ஆண்டாளுக்குப் பிறப்புப் பின்னணி தெரியாத காரணத்திற்காகவே மணம் நடைபெறாமலேயே போயிருக்க வேண்டும். இதனால் மனம் வேதனையுற்ற ஆண்டாள் மானுட ஆண்களுடனான மணவாழ்க்கையையே வெறுத்திருக்கலாம்.
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே (நா.திரு.13:7)
என்ற குறிப்பின்வழி தமது கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஆண்டாள். பெற்ற தாய் வெறுத்து ஒதுக்கியதனால் அனாதையாகிப் போனதும், அனாதையான பிறப்பைக் கொண்டதால் மணவாழ்வு கிட்டாமல் மறுபடி அனாதையாக்கப்படுவதும் ஒரு பெண்ணின் வாழ்வில் நிகழும் கசப்பான அனுபவங்கள்.
மானுட உலகின் மனிதர்களால் ஏற்பட்டிருக்கும் அவமானங்கள், மானுட உலகின் ஆண்களால் நிராகரிக்கப்பட்ட மணவாழ்க்கை போன்றவையால் மானுட உலகின் ஆண்களையே நிராகரிக்கும் முடிவுக்கு ஆண்டாளைத் தள்ளியிருக்க வேண்டும். அதனால்தான்,
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்கில்லேன் (நா.திரு.1:5)
என்று மானுட உலக ஆணினத்தின் மீதான எதிர்ப்பை வெளிக்காட்டுகிறார். “மரபு வழியாக ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் அழகு, தோற்றப் பொலிவு, அவற்றுக்கெல்லாம் மேலாகக் கல்வி, அதனால் விளைந்த தனித்த ஆளுமையான கவித்திறன் ஆகிய அனைத்தும் தன்னிடம் கைகூடியிருந்தபோதும், பிறப்பின் மர்மத்தில் திருமணச் சந்தையில் தான் புறந்தள்ளப்பட்ட ஆழ்மன ஆவேசம், பக்திப் பின்னணியோடு ஒருங்கிணைந்து இயக்கியதன் விளைவே மனித ஆணுக்கு எதிரான எதிர்ப்புக் குரலாக அவர் பாடல்களில் எதிர் வினையாற்றியிருக்கிறது”4 எனலாம்.
ஆண்டாள் வாழ்ந்த காலத்தியச் சமூக அமைப்பு, பெண்களைக் குடும்ப அமைப்பிற்குள் இருத்தி வைப்பதற்காக மணவாழ்க்கைமுறை குறித்தான மிகை மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருந்தது. பெண் ஆண் உறவைக் கொண்ட மணவாழ்க்கை முறைக்கு முதன்மை அளிக்கப்பட்ட சமூக அமைப்பின் தாக்கம் ஆண்டாளுக்குள்ளும் இருந்திருக்க வேண்டும். பெற்றோர்களால் ஏற்படுத்தித் தரக்கூடிய மணவாழ்க்கை முறையே அன்றைய காலகட்டத்தில் உயர் மதிப்பைப் பெற்றிருந்தது. ஆண்டாளும் அத்தகைய மணவாழ்க்கை முறையைத்தான் விரும்பியிருக்கிறார்.
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்
தனிவழியே போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழிகாப்பு அரிது (நா.திரு.12:3)
என, உடன்போக்கின் மூலமாக அமையும் மணவாழ்க்கை முறையை ஆண்டாள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. ஆண்டாள் எதிர்பார்த்த மணவாழ்க்கை முறையைப் பெரியோர்களே ஏற்படுத்தித் தரவேண்டும் என விரும்பியிருக்கிறார். ஆனால், அத்தகைய மணவாழ்க்கை ஆண்டாளுக்கு வாய்க்கப்பெறவில்லை. அதனாலேயே மானுட மணவாழ்க்கை மீதான வெறுப்பையும், மானுட ஆண்கள் மீதான எதிர்ப்பையும் ஆண்டாள் வெளிப்படுத்துகிறார். இவ்வெதிர்ப்பை நேரிடையாக வெளிக்காட்ட முடியாத சூழலில்தான் அவ்வெதிர்ப்பைப் பக்திநிலை வடிவில் - திருமாலைக் காதலிப்பதாகவும் - அத்திருமாலையே மணமுடிக்க வேண்டுமென்று துடிப்பதாகவும் மடைமாற்ற முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார் எனக் கருதலாம்.
மானுட உலகின் ஆண்களின் மீதான எதிர்ப்பை, தன்னில் எழும் காதல் உணர்ச்சியும் - காம வேட்கையும் திருமாலுக்குரியது எனப் பாடுவதின் மூலம் காட்டுகிறார். மானுட உலகின் ஆண்கள் எதை நிராகரித்தார்களோ, எதை வெளியிடக்கூடாது என்றார்களோ அவற்றையே பாடுவதின் மூலமான எதிர்ப்பு மனநிலை ஆண்டாளிடம் காணப்படுகின்றது. ஆனால், “பெண்ணின் இயல்பான இந்த எழுச்சியை ஏற்க முடியாதவர்கள் அவளை இறைவியாக ஆக்கினர். இராமாநுசர் காலத்தில் நிறுவன சமயமாக வைணவம் உருப்பெற்றது. அவரது சீடர்களாலும்;, பின்வந்தவர்களாலும் உருவாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட திவ்ய ஆசரிதம் (ஆழ்வார்கள் வரலாறு கூறும் வடமொழியிலான நூல்) குருபரம்பறை (மணிபவள நடையில் அமைந்துள்ள ஆழ்வார்கள் ஆசாரியர்கள் வாழ்க்கை வரலாறு கூறும் நூல்), திருப்பாவை, நாச்சியார் திருமொழி உரைகள் அனைத்திலும் ஆண்டாள் பெரிய பிராட்டியாகவும், அவர் பாடிய பாடல்கள் வேதம், உபநிடதம் எனவும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டன.”5 அதாவது, பக்திநிலை மடைமாற்றத்தின் மூலமாக வெளிக்கொணரப்பட்ட எதிர்ப்புணர்வு தீவிரத்தன்மை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே ஆண்டாளை இறைவியாக்கியிருக்கிறார்கள்.
மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட அம்மை, மானுட வாழ்வை மறுத்ததும், மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட ஆண்டாள் மானுட மணவாழ்வை மறுத்ததும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. ஆயினும், காரைக்கால் அம்மையும் ஆண்டாளும் இறையடியாராக, இறைவியாக ஆக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்பது எதிர்ப்புகளைக் காயடிக்கும் ஆண்வழிச் சமூக முறைமைகள்தான் என்பது தெளிவான ஒன்றாகும்.
மானுட மணவாழ்வை ஆண்டாள் நிராகரித்ததற்கான காரணங்களுள் ஒன்றாக, அவருடைய வளர்ப்புச் சூழலையும் கருத இடமுண்டு. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், குழந்தைப் பருவத்திலிருந்தே பக்திச் சூழலோடு வளர்க்கப்படுகிறார். தாயற்ற ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரே தாயும் தந்தையுமாகக் காணப்படுகிறார்.
திருமாலுக்குப் பெரியாழ்வார் மேற்கொள்ளும் பக்திக் கடமைகளுக்கு ஆண்டாள் உதவியாய் இருப்பதோடு, பக்திநிலை உணர்வில் தானும் இரண்டறக் கலந்துவிடுகிறார். திருமால் குறித்தான அவதாராக் கதைகளும், நம்பிக்கை சார்ந்த புனைவுகளும் பெரியாழ்வாரால் உணர்வுப் பூர்வமாகச் சொல்லப்பட்டதை ஆண்டாளும் உள்வாங்கியிருக்க வேண்டும். உள்ளம் உருகச் சொல்லப்பட்ட பக்திநிலைக் கதைகள் ஆண்டாளின் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் “தந்தையால் வர்ணிக்கப்பட்ட கிருஷ்ணனின் பல பெண்களை நேசிக்கும் போக்கை, அவன் கோபியரோடு வைத்திருந்த உறவும், அவனை மணம் முடிக்க அவர்கள் விரும்பியதும், அவர்கள் ஒவ்வொருவரையும் தான் மணம் முடிப்பதாக அவன் வாக்களித்து விளையாடியதெல்லாம் ஆண்டாள் மனதிலும் வேரூன்றி தன்னையும் ஒரு கோபியராகப் பார்க்க வைத்தது.”6 அதனால்தான், திருமாலுக்காகக் கட்டப்பட்ட மாலையைத் தான் சூடிப்பார்க்கும் ஆசையை ஆண்டாளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
திருமாலுக்குச் சூட வேண்டிய மாலையைத் தான் அணிந்து பார்க்க வேண்டும் என்ற காதல் உணர்வு இயல்பாகவே ஆண்டாளின் உள்ளத்தில் தோன்றுகிறது.
ஏனெனில், மலர்களோடும் மாலைகளோடும்தான் சிறுவயதில் இருந்தே வளர்ந்து வருகிறார். இந்த மாலைகளும் மலர்களும் மணவாழ்வையும் மங்கலத்தையும் குறித்து நிற்கக் கூடியவை. ஆகவே, ஆண்டாள் கட்டிக் கொடுக்கின்ற மலர் மாலைகள் ஆண்டாளின் மணவாழ்க்கை விருப்பத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே திருமால் மீது கொண்ட விருப்பங்களும் ஒன்றுகூடி திருமால் மீதான காதலாக ஆண்டாளிடம் உருவெடுக்கின்றது.
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் (நா.திரு.1:4)
என ஆண்டாள் குறிப்பிடுவதின் மூலம், குழந்தைப்பருவம் முதலே திருமாலின் மீது ஈடுபாடும் காதலும் கொண்டு ஆண்டாள் வளர்ந்து வந்திருக்கிறார் என அறிய முடிகின்றது. இவ்வாறு மானுட ஆண்களின் மீதான எதிர்ப்புணர்வு ஆண்டாளிடம் தோன்றுவதற்கு, மானுட ஆண்களால் நிராகரிக்கப்பட்ட மணவாழ்வுத் தடைகள், வளர்ந்து வந்த பக்திச் சூழல் போன்றவை காரணமாக இருக்கலாம் எனக் கருதலாம்.
ஆண்டாள் பாடிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் திருமாலின் மீதான காதலையும் காம வேட்கையையும் வெளிப்படுத்தும் பாங்கில் அமைந்திருக்கின்றன. திருப்பாவை காதல் உணர்வையும், நாச்சியார்திருமொழி காமத்துயரத்தையும் வெளிப்படுத்துகின்றன. திருப்பாவை மார்கழி நோன்புச் சடங்கு குறித்துப் பாடப்பட்டிருந்தாலும், அதனுள் திருமாலின் மீதான காதல் உள்ளத்தை வெவ்வேறு நிலையில் அவர் புலப்படுத்தியிருப்பதைக் காணமுடியும். அதாவது, “ஒரு பெண் தனக்குப் பிடித்தவனிடம் திட்டமிட்டுப் போய்ச் சேர்வதுதான் திருப்பாவையின் பாடுபொருள்”7 ஆகும்;. பெண் ஆண் மனக்கலப்புகளின் குறிப்புகளை மிக நுட்பமாக விவரித்துச் சொல்வதாகத்தான் திருப்பாவை அமைந்திருக்கிறது.
திருப்பாவையின் முதல் கவிதை இப்படித் தொடங்குகிறது.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர்! போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! (திரு.1)
என்கிறார் ஆண்டாள். நீராடச் செல்லும் பெண்கள் குறித்துப் பேசும் ஆண்டாள்,திருப்பாவையின் ஓரிடத்தில்கூட ஆற்றங்கரை குறித்தோ, குளத்தங்கரை குறித்தோ அல்லது அவற்றை ஒட்டி நடந்ததாகவோ குறிப்பிடவில்லை. ஆனாலும், “நீராட்டம் ஒரு பூடகம். வேறு ஏதோ ஒன்றைத் தங்கள் குழுவினர் மட்டும் புரிந்துகொள்ளும்படி, அயலார் அறியாமலிருக்கும்படி குறியிட்டுச் சொல்கிறார்கள்.”8
பூடகமாக உணர்த்தப்படும் ‘நீராடல்’ என்பது ‘கலவி’யின் விருப்பத்தை உணர்த்துவது. சங்ககாலத் திணைக் கவிதைகளில் காணலாகும் நீராடல், புனலாடல் போன்றவை அந்தப் பொருளைத்தான் குறிக்கின்றன. ஆகவே,ஆண்டாளும் அவ்விருப்பத்தைப் பூடகமாகச் சொல்ல முற்பட்டிருக்கிறார். இவ்விருப்பம் திருமாலின் மீது கொண்ட காதல் உணர்வால் வந்த விருப்பம். அக்காதலைப் பல்வேறு நிலைகளில் உணர்த்துவதற்காகத்தான் திருப்பாவையின் தொடக்கத்திலேயே ‘நீராடல்’ பூடகமாகச்சொல்லப்பட்டிருக்கிறது.
திருமாலின் மீது கொண்ட காதலை
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான் (திரு.1)
என்பதில் வெளிப்படுத்துகிறார். பறை என்பது இங்கு குறியீட்டுப் பொருளைத் தருவது. திருமாலிடம் பறை வேண்டுவது காதலை வேண்டுவதாக வெளிப்படுகின்றது. ஆயினும், ஆண்டாள் தனது காதலை வெளிப்படுத்திவிட்டார். பறை வேண்டுவதின் மூலமாகத் திருமாலின் மீது கொண்ட காதல் நினைவுகளாலே ஒன்றிப்போன மனநிலையைப் பின்வரும் கவிதையிலே ஆண்டாள் வெளிப்படுத்துகிறார்.
நெய் உண்ணோம்!பால் உண்ணோம்! நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம்! மலரிட்டு நாம் முடியோம்!
செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்றோதோம்! (திரு.2)
என்பதில் ஆண்டாளின் நினைவுகளெல்லாம் திருமாலே ஆகிப்போன நிலையைக் காணலாம். தனக்குக் காதல் இருக்கிறது. திருமாலும் தன்னைக் காதலிக்க வேண்டும். இதைத்தவிர வேறெதுவும் வேண்டாம் என்ற காதல் துயரின் வெளிப்பாடுதான் அது.
திருமாலிடம் கொண்ட காதல் வேட்கையும் ஆவலும் முடிவில்லாத நிலையைக் கொண்டிருப்பினும், திருமாலை அடைவதில் மட்டும் உறுதியைக் கொண்டிருக்கிறார் ஆண்டாள். அதனால்தான்,
குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலெறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக்கிடந்த காட்சியை மலர்மார்பா (திரு.19)
என்ற கனவு நிலைக் காட்சியை வெளிப்படுத்துகிறார் ஆண்டாள்.
பெண்ணின் பருவ வயதில் ஏற்படும் பாலியல் துய்ப்புக்கான விருப்பங்கள் கனவு நிலையில் தோன்றுவதுண்டு. மேற்கண்ட கவிதையானது பாலியல் துய்ப்பு நிகழ்ந்து விட்டதைச் சொல்வதுபோலத் தோன்றும். நிறைவேறாத ஆசைகள் கனவுகளாகத் தோன்றும். எனினும், பாலுறவு அனுபவம் அல்லாதவர்களுக்குச் சேர்வது போன்ற கனவுகள் தோன்ற முடியாது. இருப்பினும், பாலியல் துய்ப்புக்கான விருப்பங்கள் வேறு வேறு வகைகளில் கனவில் தோன்றக் கூடியவை. இங்கு, ஆண்டாளும் திருமாலும் ஒன்று கலப்பதைப் போன்ற கனவு நிலையைத்தான் வெளிப்படுத்துகிறார். ஆனால், இருவரும் ஒன்று சேரவில்லை. அக்கவிதை பெண்ணின் கனவு நிலையைத்தான் வெளிப்படுத்துகிறது என்பதற்கான ஒரே குறிப்பு ‘குத்து விளக்கெரிய’ என்பதுதான்.மிக நுட்பமாகப் பெண்ணின் கனவு நிலையை இயல்பான பெண்மொழியாலே ஆண்டாள் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதற்கு அக்கவிதை மிகச்சிறந்த சான்றாகும். அதனால்தான் “தம் காதல் உணர்வை இயல்பான தன் மொழியில் மிகச் சாpயாக வெளிப்படுத்தியவர் ஆண்டாள். அவருக்கு முன்னும் அப்படி ஒரு பெண் கவிஞர் இல்லை. அவர் வெளிப்படுத்திய முறையில் பாடிய பெண்கவிஞர் அவருக்குப் பின்னும் இல்லை”9 என்கிறார் சு.வேங்கடராமன்.
ஆண்டாளின் இளமைப்பருவம் முழுவதும் திருமாலையே மய்யமிட்டு இருப்பதனால், அவரின் கனவு நிலையிலும் திருமாலே மய்யம் கொண்டிருப்பது அவர் கவிதையில் வெளிப்படுகின்றது. திருமாலையே காதலித்து, அக்காதல் நினைப்பிலே வாழ்ந்து, கனவு நிலையிலும் திருமாலையே கூடநினைக்கும் ஆண்டாள், திருமாலே தனக்கு எல்லாம் தரவேண்டும் என்பதை
.
.....கோவிந்தா! உன் தன்னைப்
பாடி பறைகொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே! தோள்வளையே! தோடே! செவிப்பூவே!
பாடகமே! என்றுஅனைய பல்கலனும் யாம்அணிவோம்!
ஆடை உடுப்போம்! அதன்பின்னே, பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து......(திரு.27)
எனப் பாடுகிறார். ஒரு பெண்ணின் காதல் உச்சத்தின் வெளிப்பாடாக இக்கவிதை அமைந்திருக்கிறது.
கைவளை, தோள்வளை, தோடு, புறங்காதில் சிறுதோடு, கால்கொலுசு, மற்றும் பல அணிகள், உடை போன்றவை காதல் விருப்பத்தின் பரிசுப் பொருட்களாகவும், மணவாழ்க்கை மகிழ்வின் வெளிப்பாடுகளாகவும் இருப்பவை. ‘நாடு புகழும் பரிசினால் நன்றாக’ என்பது காதல் கைகூடச் செய்யும் மணவாழ்க்கையை வேண்டுவதைக் குறிக்கின்றது. காதலரைக் கைபிடித்த மணவாழ்க்கைக்குப் பின்தான், காதலரோடு கூடியிருக்கும்போதுதான் நெய்யும் பால்சோறும் முழங்கை வரைக்கும் வழிந்தோடும்படி உண்ணமுடியும். மணவாழ்க்கை அமையப் பெற்றால்தான் இவையெல்லாம் நடைபெற முடியும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் ஆண்டாள்.
ஆண்டாளின் காதல் உணர்வுகள் பல்வேறு நிலைகளில் வளர்ந்து உச்சத்தைத் தொடுகிறது. காதல் வயப்பட்ட பெண்ணின் உளவியல் படிநிலைகளை மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறார் அவர். முதலில் காதல் விருப்பம், பின்பு காதல் நினைவுகளால் ஏற்படும் மறத்தல், கனவு நிலையில் வேண்டுவதான மணவாழ்க்கை விருப்பம்…… இவ்வாறு ஒவ்வொரு படிநிலைகளையும் கடந்து செல்லும் பெண்ணின் காதல் நிராகரிக்கப்படுகிறது. “எத்தனையோ விதத்தில் தன் காதலைச் சொல்லி, தான் வேறு ஒரு பிடிப்பில் வாழ்ந்துவிட முடியாதபடி தன் மனம் கண்ணனுடன் இணைந்து பின்னியிருப்பதைச் சொல்லி, திரும்பிப் போய்விட இயலாத தூரத்தில் வீடு வாசல் எல்லாம் விட்டு வந்த கோபிகையின் பாத்திரத்தை அநுகரித்து, மனசால் ஒரு கோபியாக கண்ணனைக் கிட்டி, படிப்படியாக அவனைப் பலவந்தம் செய்து அவனைக் கூடிய ஆண்டாள் இப்போது வெளியே நிறுத்தி வைக்கப்பட்டாள்”10 எனும்போதுகூட, ஆண்டாளுக்குள் இருந்த காதல் மறைந்தபாடில்லை. காதல் நிராகரிப்பால் உண்டான ஆற்றாமைத் துயரம் அவரின் காதலை மேலும் மேலும் வளர்த்தெடுக்கின்றது. தான் கொண்ட காதலில் உறுதியாய் இருக்கச் சொல்கிறது மனம். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காயினும் காதல் கைகூடும் என்ற நம்பிக்கை ஆண்டாளுக்குள் இருந்திருக்கிறது. அதனால்தான்
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றைநம் காமங்கள் மாற்றேல் (திரு.29)
என்ற உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்துகிறார்.
ஆண்டாளின் இளமைப் பருவத்தில் பாடப்பட்ட இக்கவிதைகள், திருமாலின் மீது பாடப்பட்ட பக்திநிலைப் புனைவுக் காதலை மட்டும் வெளிப்படுத்தவில்லை. ஓர் ஆண் மீது பெண் கொள்கிற காதல் எத்தகைய உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறதோ, அத்தகைய உணர்ச்சிக் குவியல்களையே ஆண்டாளின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. மானுடத்தின் காதல் உணர்ச்சியைத்தான் ஆண்டாளும் கவிதையாக்கியிருக்கிறார். “மானுடப் பெண்ணாகப் பிறந்து தன் காதல் உணர்வை - பிரிவின் ஏக்கத்தை உணர்ச்சி பொங்க, இலக்கிய மரபிற்கு மாற்று மரபாக, புதியன படைப்பதாக ஆண்டாள் பாடினார். மரபு மாற்றத்தில், பழமையான ஆண்களை முதன்மைப்படுத்தும் இலக்கிய மரபுகளையும், ஆண்களால் கட்டமைக்கப்பட்ட மொழியையும் உடைத்துத் தன் ஆசையை - உணர்வுப் போராட்டத்தை - தன்மொழியில் அவர் தமிழ் மரபில் முதல் பெண் கவிஞராகப் பாடினார்”11 என்பது குறிப்பிடத்தக்கது.
மானுடம் முழுமைக்கும் பொதுவாய் உள்ள காதல் அனுபவத்தை ஆண்களே பாடத்தக்கவர்கள்; பெண்கள் பாடுதல் கூடாது என்ற மரபுகள் வழக்கில் இருந்த காலகட்டத்தில், ஆண்டாள் தன் காதல் உணர்ச்சிகள் பொங்கப் பாடியிருப்பது மரபு மீறலைக் கொண்ட மாற்று மரபாகவே அமைந்திருக்கிறது. ஆண்டாள் குறித்த சமயப் புனைவுகளையும், திருமால் பற்றிய சமயப் பிம்பத்தையும் விலக்கிப் பார்க்கும்போது இம்மாற்று மரபு பெண்நிலை சார்ந்த ஒன்றாக அமைந்திருப்பதை அறிய முடியும்.
பெண்ணுடல் ஆணின் பாலியல் துய்ப்புக்கான பண்டமாகத்தான் ஆண்களால் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. பெண்ணுடல் தனித்து இயங்கக் கூடியதான ஆற்றலை இழந்து நிற்கக் கூடியது; ஆணுடலை மய்யமிட்டுத்தான் பெண்ணுடல் இயக்கம் கொள்கிறது என்பதான கற்பிதங்கள் ஆண்வழிச் சமூக முறைமையில் நிலவிக் கொண்டிருப்பவை. மேலும், பெண்ணுடலின் காமமும் உணர்ச்சியும் இச்சையும் பெண்களால் வெளிப்படுத்தக் கூடாதவை; அக்காமத்தையும், உணர்ச்சியையும், இச்சையையும், துய்ப்பையும் ஆண் தரப்பிலிருந்தே வெளிப்படுத்தக் கூடியவை என்கிற கருத்தாக்கங்கள் பெண்ணைப் பேசவிடாமலும், எழுதவிடாமலும் தடுத்து வைத்திருக்கின்றன. இம்மாதிரியான நியதிகளால் பெண்ணின் குரல் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுக் கிடந்த நிலையில்தான் ஆண்டாளின் பக்திக் குரல் பெண்நிலை சாh;ந்து ஒலிக்கத் தொடங்கியது. அதாவது, “நீண்ட நாட்களாக இலக்கியத்தில் ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தின் ஒட்டு மொத்தமான குரல்”12 ஆண்டாள் மூலமாக வெளிப்பட்டிருக்கிறது எனலாம்.
பெண்ணுடல் குறித்து ஆண்வழிச் சமூக முறைமைகள் கட்டியெழுப்பியிருந்த கலாச்சாரக் கூறுகளையெல்லாம் தகர்க்கும் போக்கை ஆண்டாளின் நாச்சியார் திருமொழிக் கவிதைகளில் காணமுடிகின்றது. பெண்ணின் உடல் இன்பம் குறித்தும், பெண்ணுடலின் காமவேட்கை குறித்தும் ஆண்டாள் முன்வைக்கும் உணர்ச்சி நிலைகள் பெண்ணின் இயற்கை சார்ந்த உயிரியல் கூறாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எவ்விதச் செயற்கைப் புனைவுகளும் அல்லாமல், இயல்பான பெண்ணுடல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இயல்பென்று கருதியேதான் ஆண்டாள் தன்னுடைய உணர்ச்சிகளைக் கவிதைகளாக்கியிருக்கிறார்.
பெண்ணின் காதல் அனுபவமும் உடல் வேட்கையும் இயல்பென்று கருதியதால் வெளிப்பட்ட ஆண்டாளின் படைப்பாளுமை ஒரு மீறலைச் சாதித்திருக்கின்றது. இத்தகைய மீறலை “பெண் பாலருக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான ஒழுக்க நடவடிக்கைகளுக்கும், சமூகத் தடைகளுக்கும் எதிராகப் பிரஞ்ஞை பூர்வமாகக் காட்டப்படும் மீறல் என்றும் சொல்லலாம்”13 என்கிறார் செல்வி திருச்சந்திரன். இங்கு, பெண்ணின் உடல் மூலமான அனுபவத்தை இயற்கை சார்ந்த அனுபவமாகக் கருதும் போக்கு ஆண்டாளிடம் காணப்பட்டதனால்தான் அம்மீறலை உணர்வுப் பூர்வமாகச் சாதிக்க முடிந்திருக்கிறது.
பெண்ணுடல் குறித்துப் பேசுவதில், குறிப்பாகப் பாலியல் நிலைகளில் பெண்ணுடல் அனுபவத்தைப் பேசுதல் பெண்ணுக்கு விலக்கப்பட்டதாக இருந்த சூழலில், பாலியல் குறித்து; பாலியல் உந்துதலைக் கொண்ட பெண்ணுடல் குறித்து; பெண்ணுடலுக்குள் நிகழும் பாலியல் கிளர்ச்சிகள் குறித்து; பாலியல் துய்ப்பு குறித்துப் பகிர்ந்து கொள்ளும் போக்கு பெண்களுக்குள்ளேயே நிகழ்ந்து கொண்டிருந்த சமயத்தில், பெண்ணுடல் அனுபவங்களைக் கவிதையாக்கி, அவற்றைப் பொதுவெளி பகிர்வுக்குக் கொண்டு வந்து மகிழ்ச்சி பொங்க -உணர்ச்சிகள் ததும்ப உலவவிட்டிருக்கும் புதுமரபை ஆண்டாள் முன்வைக்கிறார். இவ்வாறு பெண்ணுடலைப் பெண்ணுக்குச் சொந்தமாக்கியிருப்பதன் மூலம், ஆணுக்குச் சொந்தமானதல்ல பெண்ணுடல் என்ற மாற்றுக் குரலை அவர் முன்வைக்கிறார்.
அச்சமும் நாணும் மடனும் முந்துறந்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப (தொல்.பொரு.96) என்றும்,
நாணும் மடனும் பெண்மைய ஆகலின் (தொல்.பொரு.106)
என்றும் பெண்மையின் குணங்களாகச் சொல்லப்பட்டதற்கு மாற்றாக, தனக்கு வெட்கம் என்பது தேவையில்லை என்ற மாற்றுக்குரலை
நாணி இனியோர் கருமமில்லை
நால் அயலாரும் அறிந்தொழிந்தார் (நா.திரு.12:2)
என வெளிப்படுத்துகிறார்.
ஆண்டாளின் திருப்பாவைக் கவிதைகள் பேதைச் சிறுமி நிலையில் பாடப்பட்டவை அல்ல. பெண்ணின் இளம்பருவத்துக் காதல் உணர்வுகள்தான் திருப்பாவைக் கவிதைகளாக ஆகியுள்ளன. திருப்பாவையில் சொல்லப்பட்ட காதலின் நீட்சியாகத்தான் நாச்சியார் திருமொழிக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. திருப்பாவையில் பெண்ணின் காதல் நிலையினையும், நாச்சியார் திருமொழியில் காதல் முற்றிய பெண்ணின் காம வேட்கை நிலையினையும் காணமுடியும்.
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி (நா.திரு.1:2)
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரேழுதி (நா.திரு.1:3)
என, காதல் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காதலரின் பெயரை எழுதி எழுதிப் பார்க்கும் காதல் மனத்தின் செயல்பாடுகளை அவர் வெளிப்படுத்துகிறார். திருமாலையே தன் காதலராக நினைத்துக் கிடக்கும் ஆண்டாள், அக்காதல் நோயால் பெண்ணுடல் எதிர்கொள்ளும் மாறுபாடுகளையும், அமைதியின்றித் தவிக்கும் மனக் கோலங்களையும் இயல்பான பெண்ணுணர்ச்சியிலே வெளிப்படுத்துகிறார்.
மாசுடை உடம்பொடு தலையுலறி
வாய்ப்புறம் வெளுத்த ஒரு போது உண்டு (நா.திரு.1:8)
என்கிறார் ஆண்டாள். திருமாலை அடைய வேண்டுமென்று நீராடச் சென்ற ஆண்டாள், இப்போது நீராடாமல் இருப்பதும், பூக்களைச் சூடாமல் தலைவிரிக் கோலத்திலிருப்பதும், ஒரு வேளை மட்டுமே உண்பதும், வாய்கூட வெளுத்துப் போனதும் திருமாலை நினைத்துத்தான். மேலும்,
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானம் இலாமையும் வாய்வெளுப்பும்
உண்ணல் உறாமையும் உள்மெலிவும்-(நா.திரு.12:7)
தமக்கு ஏற்பட்டிருக்கிறது என்கிறார். காதல் முற்றிப்போனதின் அறிகுறிதான் இவ்வெளிப்பாடுகள். காதல் நோயால் அவதியுறும் ஆண்டாளின் மனத்துடிப்புகள் மற்றவருக்கு அறிய வாய்ப்பில்லை. அவரவரின் அவதி அவரவருக்குத்தானே தெரியும் என்பதை
ஆர்க்குமென் நோய் இது அறியலாகாது (நா.திரு12:5)
என வெளிப்படுத்துகிறார். காதலால் அவதியுறும் பெண்ணின் கனவிலும் வேறென்ன தோன்றப் போகிறது. நனவிலே கைகூடாதவை நனவிலியில் கைகூடுவதுபோலத் தோன்றும். அந்நனவிலி மனதின் வெளிப்பாட்டைத்தான்
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான் (நா.திரு.6:2)
என்கிறார். திருமாலைக் கூடநினைப்பதின் கனவு வெளிப்பாடு இது.இங்கு கமுகு என்பதும், பாளை என்பதும் குழைதள்ளக் கூடியவை. பெண் தன்மை கொண்டிருப்பவை. காளை என்பது ஆணுக்கு ஒப்பாகச் சொல்லக் கூடியது. பெண்ணுடல் மீது ஆணுடல் புகும் வேட்கை விருப்பம்தான் கனவில் குறியீட்டுப் பொருளாய்த் தோன்றுகின்றது. நனவிலியில் தோன்றும் குறியீடுகளைத்தான் கவிதைப் பொருளாக்கியிருக்கிறார் ஆண்டாள்.
காதல்வயப்பட்ட பெண்ணின் மனம் முதலில் நினைப்பையும்,கனவையும் வேட்கையையும், உடல்துயரத்தையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்தக் கூடியது. பெண்ணின் மனத்தை மட்டுமல்ல, உடலையும் காதலருக்கென்றே ஒப்படைத்துவிட்ட பெண்ணின் மனநிலையை ஆண்டாளின் கவிதையிலே காணமுடியும்.
........... ஆதரித்து எழுந்த என்தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் (நா.திரு.1:4)
என்கிறார். அது மட்டுமல்லாமல், தமது காதலருக்கென்றே தமது உடல் வளர;ந்திருப்பதாகக் கருதுகிறார். அதனால்தான்,
ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள் (நா.திரு.1:5)
என்று குறிப்பிடுகிறார். தனது உடல் உறுப்புகள் குறித்து மிக இயல்பாகச் சொல்லிக் கொண்டு போதலை இங்கு கவனிக்கலாம்.
காதல் முற்றி காமம் அதிகரிக்கத் தொடங்குகின்றது. பாலியல் துய்ப்புக்கான நாட்டமும் வேட்கையும் பெண்ணுடலுக்குள் மாற்றத்தை உண்டு பண்ணக் கூடியவை. காதலும் காமமும் பெண்ணின் உடல் - மனமெங்கும் பரவியதால் வேட்கை நிரம்பிய உடலை ஆணின் உடல் வந்து தணிக்க வேண்டும் என்ற பெண்ணின் உடல் கிளர்ச்சியை ஆண்டாள் வெளிப்படுத்துகிறார்.அதை,
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வதோர்
ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும் (நா.திரு.5:7)
என வெளிப்படுத்துகிறார். பாலியல் துய்ப்பின் விருப்பமும், அதனால் உண்டான உடல் கிளர்ச்சியும் இங்கு கவிதையாக ஆக்கப்பட்டிருக்கிறது. பாலியல் துய்ப்பின் விருப்பம் வேறொரு கவிதையிலும் வெளிப்பட்டிருக்கிறது.
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து (நா.திரு.8:7)
என, பெண் ஆண் உடல்கலப்பு நிகழ்வை வேண்டிநிற்கிறது கவிதை. பெண்ணின் பாலியல் நாட்டத்தைத் துளியளவும் இயற்கை மாறாமல் தந்திருக்கிறது ஆண்டாளின் கவிதைமொழி. நனவு நிலையில் பாலியல் துய்ப்பு கிடைக்கப் பெறாதபோது, நனவிலி நிலையில் துய்த்துக் கொள்ளும் பெண்ணின் மனநிலையை ஆண்டாள் பதிவு செய்துள்ளார்.
.....எம்மை
உடைமாடு கொண்டான் ..... (நா.திரு.10:7) எனவும்,
நாங்கள் எம்மில் இருந்து ஒட்டிய கச்சங்கம் நானும்
அவனும் அறிதும் (நா.திரு.5:8) என்றும்,
..... என்னானவன் ஒருவன்
தழுவி முழுசிப் புகுந்து என்னைச் சுற்றிச் சுழன்று
போகானால் (நா.திரு.13:5)
எனவும் வெளிப்படுத்துகிறார். கனவில் கூடியிருந்த நனவிலி நிலையைப் புலப்படுத்துகையில் ‘கச்சங்கம்’ என்கிறார். கச்சங்கம் என்ற சொல்லுக்கு ‘ஈரமாதல்’ என்ற பொருள் உள்ளதாகக் கூறுகிறார் சு.வேங்கடராமன். புணர்ச்சி வேண்டலை நினைத்துக் கிடக்கும் கனவு நிலையின் போது பெண்ணுக்கு ‘ஈரமாதல்’ என்ற பெண்ணுடலின் நிகழ்வைப் புதிய பதிவாகக் கொணர்ந்திருக்கிறார் ஆண்டாள்.
பெண்ணுடலை ஆண் சுவைத்துப் பார்த்த அனுபவங்களை ஆண் பகிர்ந்து கொண்டிருந்த நிலைக்கு மாற்றாக, பாலியல் துய்ப்பு நிலையில் ஆணுடலைப் பெண் சுவைத்துப் பார்க்க விரும்பியதன் வெளிப்பாட்டை ஆண்டாள் வெளிப்படுத்துகிறார். அதை
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய் தான் தித்திருக்குமோ
மருப்பு ஒசித்த மாதவன்தன்வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன்.... (நா.திரு.7:1)
என்கிறார்.
பாலொடு தேன்கலந் தற்றே,பனிமொழி
வாலெயிறு ஊறிய நீர் (குறள்1121)
என்ற ஆணின் வாய்ச்சுவை அனுபவத்திற்கு மாற்றாக, பெண்ணின் வாய்ச்சுவை அனுபவ விருப்பம் ஆண்டாள் கவிதையில் வெளிப்படுகின்றது.
பாலியல் துய்ப்புக்கான வேட்கை பெண்ணின் உடலெங்கும் பரவியதால் காமத்தீ சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்க, வேட்கையுற்ற உடல் அவதியைத் தமது கவிதையில் வெளிப்படுத்தும்போது
காமத்தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
அற்ற குற்றம் அவைதீர அணைய அமுக்கிக் கட்டீரே (நா.திரு.13:7)
என்பதின் மூலம் பெண்ணின் முலைகள் படும் துயரத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் பெண்ணின் காமத்துயர் உச்சத்தை அடையும்போதும், பாலியல் துய்ப்பு நிறைவேறாதபோதும்,
உள்ளே உருகி நைவேனை உளளோஇலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு அவன் மார்பிலெறிந்து என் அழலைத் தீர்வேனே
(நா.திரு.13:8)
என்று உரக்கச் சொல்கிறார். பாலியல் துய்ப்பு நிறைவேறாத ஆற்றாமையின் வெளிப் பாடாகவே அவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
பெண்ணின் காதல் உணர்ச்சியும் காம வேட்கையும் பெண்ணின் முலைகளில் மய்யம் கொண்டிருப்பன என்பதை ஆண்டாள் கவிதைகள்வழியும் அறிய முடிகின்றது. காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் மனத் தவிப்புகளும் - துயரங்களும் - வேட்கைகளும் - காமத் தவிப்புகளும் -ஆற்றாமை உணர்வுகளும் எவ்விதத் தடைகளுமற்று பெண்ணின் உணர்ச்சிகளாலே பெண்நிலை சார்ந்து வெளிப்படுத்தும் பெண் ஆளுமை ஆண்டாளிடம் காணப்படுகின்றது.
ஆண்டாளின் கவிதைகள் பக்திச் சாயலைக் கொண்டிருப்பினும், காதலை உரக்கப் பேசியிருப்பதும், பெண்ணுடல் அனுபவத்தைப் பரக்கப் பேசியிருப்பதும் பெண்நிலை சார்ந்த வெளிப்பாடுகளாகும். அவ்வகையில், ஆண்டாளின் கவிதைகள் ஒரு மீறலையும் - எதிர்ப்பையும் -மாற்றையும் கொண்ட படைப்பாளுமை நிறைந்தவை எனக் குறிப்பிடலாம்.
ஆண்டாளின் கவிதைகளில் காணலாகும் சுதந்திரத் தன்மையை வைத்துக்கொண்டு ஆண்டாளை ஒரு தேவதாசிப் பெண்ணாகப் பார்க்கும் போக்கு வெளிப்பட்டிருக்கிறது. ஆண்டாள் திருவரங்கக் கோயிலில் உள்ள திருமாலோடு போய்ச்சர்ந்தார் என்ற புனைவையும், திருவரங்கனோடு தன்னைச் சேர்த்து விடுங்கள் என்ற ஆண்டாளின் புலம்பலையும் வைத்துக் கொண்டு ஆண்டாளைத் தேவதாசிப் பெண்ணாகக் கருதும் நிலை ஆய்வாளர்கள் சிலரிடம் காணப்படுகின்றது.
“Andal was herself a devadasi who lived and died in the srirangam temple. There is atradition that Kulasekara Alvar's daughter Nila, was presented to srirangam temple as devadasi. She called cerakula Nachiyar and shrine dedicated to her us found in this temple.(p.47 malik Ed.); Indian movement: some aspects of dissent, protest and reform, 1978)”14 என ஆண்டாளைத் தேவதாசிப் பெண்ணாக மதிப்பிடும் போக்கு வெளிப்பட்டிருக்கிறது..
பாலியல் குறித்த வெளிப்பாட்டுச் சுதந்திரம் தேவதாசிப் பெண்ணுக்கு மட்டுமே உரியதல்ல. அச்சுதந்திரம் தேவதாசிப் பெண்களுக்கு மட்டுமே என வரையறுப்பதுகூட, மற்ற பெண்களின் படைப்புச் சுதந்திரத்தைக் கட்டம்கட்டி முடக்கிப்போடும் ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். ஆண்டாள் தேவதாசிப் பெண்ணாக இருந்திருந்தால் அவருடைய கவிதைகளிலே வெளிப்பட்டிருக்கக்கூடும். ஆனால், அதைப்பற்றிய குறிப்புகள் அகச்சான்றுகளாகவோ புறச்சான்றுகளாகவோ கிடைக்கப்பெறவில்லை. வெறும் அனுமானத்தின் அடிப்படையில் வரையறுப்பது ஆய்வுக்குப் பொருத்தமானதல்ல.
தேவதாசிப் பெண்கள் விரும்பாமலோ விரும்பியோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ பாலியல் துய்ப்பு உறவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். தேவதாசிப் பெண்களின் வெளிப்பாடுகளில் அத்தகைய அனுபவங்கள் வெளிப்படக்கூடும். ஆனால், ஆண்டாளின் கவிதைகளில் பாலியல் துய்ப்பு உறவு நிகழ்ந்ததற்கான எந்தக் குறிப்பும் இல்லை. பாலியல் துய்ப்பு விருப்பம் குறித்தும், நனவிலி மனதில் தோன்றிய நிறைவேறியதான பாலியல் துய்ப்பு குறித்தும்தான் ஆண்டாள் கவிதைகளில் காணமுடிகிறது.
ஆகவே, ஆண்டாள் தேவதாசி மரபைச் சார்ந்த பெண்ணல்ல என்பதைத் திட்டவட்டமாகக் கருதலாம்.
ஆண்டாள் தேவதாசிப் பெண்ணாக அல்லாமல், மானுடப் பெண்ணாகப் பிறந்து பக்திநிலையில் காதலையும் காமத்தையும் பாடுகிறார். அக்காலச் சமூக மரபுகளுக்கும் இலக்கிய மரபுகளுக்கும் மாற்றாக அவருடைய கவிதைகள் அமைந்திருக்கின்றன. இந்த மாற்று மரபின் தொடக்கம் பெண்ணாக இருத்தல் கூடாது என்பதற்காகவே, திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழிக் கவிதைகளைப் பெரியாழ்வார் என்னும் ஆணால் எழுதப்பட்டவை என்ற கருத்தை மரபுவழி ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அவ்வகையில் “ஆண்டாள் கற்பனைப் பாத்திரமே என்றும், ப்ம்மைெர்பியாழ்வாரே பெண்ணாக வரித்துக்கொண்டு பாடிய பாசுரங்களே திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் என்றும் இராஜாஜி, டி.கே.சி., உட்பட பலர் வாதித்தது உண்டு”.15 மேலும், “காதலின் படுவேகத்தைக் குறிக்கும் பெரியாழ்வார் திருமொழிப் பகுதியே நாச்சியார் திருமொழி என்று வழங்கப்பெற்று, நாளடைவில் கோதை நாச்சியார் ஓர் உண்மையான பெண்மணியாவும்,வேறொரு பக்த மணியாகவும் கருதப்பெற்றிருக்க வேண்டும்”16 என மரபுவழி ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
காலந்தோறும் பெண்ணைப் பேசவிடாமல் ஊமையாக்க விரும்பும் ஆணாதிக்கத்தின் உச்சவெளிப்பாடுதான் அக்கருத்தாக அமைந்திருக்கின்றது. அடங்கிக் கிடக்கும் பெண் பாடவே மாட்டார், பாடவும் கூடாது என்று கருதியதின் வெளிப்பாடாகவே அவர்களின் கருத்தாய் வெளிப்படுகின்றது எனலாம்.
பெண்ணுடல் குறித்து ஆண் பாடுவதற்கும், பெண்ணுடல் குறித்துப் பெண் பாடுவதற்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு. பெண்ணுடல் குறித்து ஆண்டாள் பாடிய கவிதைகள் அசல் பெண் தன்மை கொண்டவை. மேலும், பெண்ணின் நனவிலி மனதின் வெளிப்பாடுகளைப் பெண்ணால் மட்டுமே வெளிக்கொணர முடியும். அந்தவகையில் ஆண்டாள் கவிதைகள் சமயம் கடந்த அழகியலையும், உலகியல் இசைந்த காதலையும் கொண்ட பெண்ணின் அகவெளியைப் பெண்நிலை சார்ந்து வெளிப் படுத்தியுள்ளன எனலாம்.
குறிப்புகள்:
1.
பெரியவாச்சான் பிள்ளை, திருப்பாவை மூவாயிரப்படி அவதாரிகை,
கிருஷ்ண ஸ்வாமி அய்யங்கார் (ப.ஆ)., திருப்பாவை வ்யாக்யானங்கள், ப.10
2.
பிரேம் (க.ஆ)., பக்தி காதல் காமம் பெண்மை பற்றிய சில கருத்தாக்கங்கள்,
மாலதி மைத்ரி, க்ருஷாங்கினி(தொ.ஆ)., அணங்கு, ப.85
3.
வேங்கடராமன்.சு.,(க.ஆ), ஆண்டாள், சுப்பிரமணியன்.ச.வே., மெய்யப்பன்.ச.,(ப.ஆ)., தமிழ்ப் பெருங்கவிஞர்,தொகுதி ஒன்று, ப.134
4.
சுசீலா.எம்.ஏ., தமிழிலக்கிய வெளியில் பெண்மொழியும் பெண்ணும், பக்13,14
5.
வேங்கடராமன்.சு.,(க.ஆ), மு.கூ.நூ, ப.135
6.
செல்வி திருச்சந்திரன்; தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில்
ஒரு பெண்நிலை நோக்கு, ப.54
7.
சதாரா மாலதி, உயர்பாவை, ப.156
8.
மேலது, ப.10
9.
வேங்கடராமன்.சு.(க.ஆ)., மு.கூ.நூ., ப.135
10.
சதாரா மாலதி. மு.கூ.நூ., ப.156
11.
வேங்கடராமன்.சு.,(க.ஆ)., மு.கூ.நூ., ப.135
12.
மேலது, ப.138
13.
செல்வி திருச்சந்திரன், மு.கூ.நூ., ப.56
14.
மேற்கோள்: கண்ணன்.எஸ்., பெரியாழ்வார் ஆண்டாள் பாசுரங்கள்
சமூக சமயப் பண்பாட்டு ஆய்வு, ப.19
15.
மேலது, ப.17
16.
மேற்கோள்: பாலசுப்பிரமணியன்.சி., ஆண்டாள், ப.50