சனி, 17 மார்ச், 2018

நிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசனின் கவிதைகள் :- ஜமாலன்.

இழந்த நிலத்தை தனது சொற்களில் பதியும் ஒரு கவிதை உத்தி பாலஸ்தீனியக் கவிஞர் மக்மூத் தார்வீஸிடம் வாசிக்க முடியும். 83-களில் வெளியாக தமிழீழக் கவிதைகளிலும், அவர்களது ஈழ நிலத்தை சொற்களால் தங்க்ள கவிதைகளில் பதியமிட்டார்கள். நிஜமான தனது மூதாதைக் குடிகள் வாழ்ந்த அதில் விளைந்த குருத்துக்களான நமது கண்முன், அந்நிலம் பறிக்கப்பட்டு, இல்லாமல் ஆக்கப்படும்போது, அந்நிலத்தை தனது படைப்புகள் வழியாக பிராதியாக்குதல் என்பது நிலத்தோடு பிணந்த ஒரு உடலின் கலகச் செயல்பாடு. அச்செயல்பாட்டை பாலஸ்தீனியக் கவிதைகளுக்குப்பின் தந்தவை ஈழக்கவிதைகள். தமிழில் அந்த தளத்தை, தனது நிலம் களவாடப்படுவதை, தான் துரத்தப்படுவதை, ஒரு அகதியாதல் மனநிலையில் பாடும் கவிதைகள் இல்லை என்றே சொல்லலாம்.

ஆய்வாளரும், ஆசிரியரும், கவிஞருமான நண்பர் ஏர். மகாராசன் அவர்களது
Related image
”சொல் நிலம்” கவிதை நூலை அனுப்பியிருந்தார். அந்த தலைப்பு எனக்கு ஏற்படுத்திய பிம்பம், மேற்கண்ட, பாலஸ்தீன, ஈழக்கவிதைகளின் நினைவைக் கொண்டுவந்தன. தார்வீஸ் பற்றிய எனது கட்டுரை ஒன்றில் இதை விரிவாக விவரித்துள்ளேன். மகாராசனின் இக்கவிதைகள், நிலம் குறித்த ஏக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றாலும், அகதியாதல் என்ற விரட்டப்பட்ட மனநிலையில் தனது நிலத்தின் கனவுகளை, ஏக்கங்களை பதியவைக்கவில்லை. ஆனாலும், அதற்கான முதன் முயற்சியாக தன் நிலம், வயல், உழவு, மக்கள்நிலை, திணை என கவிதையாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
சிறிய நூல் என்றாலும் எளிமையான மொழியில் இயற்கையைப் பாடும், நேசிக்கும், மனித நேயத்தையும், அதற்கான ஒடுக்கப்பட்ட அரசியல் குரலையும் முன்வைக்கும் கவிதைகள். கூடுதலான அரசியல் உணர்வால் எழுதப்பட்ட உணர்ச்சி சார்ந்த கவிதைகள் என்பதால் அழகியல் வாசிப்பில் ஏற்படும் உணர்ச்சியாக மாறி வெளிப்படுவதாக உள்ளது.
”எல்லா நாளும்
பொழுதுகள் விடிந்தாலும்
இல்லாதவர் வாழ்வையே
கவ்விக் கொள்கிறது
இருள்.”
”நிழல் வனம்” என்ற தலைப்பில் இயற்கை, காடுகள் பற்றி எழுதப்பட்ட கவிதையில்..
“மனித
நிழல் போர்த்திய
நாடுதான்
வெயிலில்
வெந்து சாகிறது.
எட்டிய
காட்டுக்குள்ளிருக்கும்
மரங்களும் பூக்களும்
இப்போது
சிரித்துக் கொண்டிருக்கின்றன.”
தற்போதைய குரங்கணி நிகழ்வோடு இதனை ஒப்பிட்டு பார்க்கிறது வாசிப்பு. காடு நம்மை பார்த்து சிரிக்கிறது போலிருக்கிறது ”மரங்களோடு எரிந்தார்கள் மனிதர்களும்” என்று.
இவரது கவிதைகளில் சிலவரிகள் இயற்கை என்ற புலத்தை, தமிழ் என்ற திணைக்குடி நிலத்தோடு இணைத்து ஏங்கும் ஒரு தவிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. இயற்கை அழிவால் கூடுகள் சிதைந்த பறவைகளின் ஒப்பாரிக் குரல் கேட்பாரற்று ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த ஒப்பாரி ஒலி காட்சியாக மனதில் பதிகிறது இவரது கவிதை வரிகளில். ”ஒப்பாரி மகரந்தம்” என்ற ஒரு சொல்லாட்சி சுணாமி எனப்படும் ஆழிப்பேரலை பற்றிய கவிதை ஒன்றில். சூழ்கொண்டு துக்கத்தை பிரசவிக்கும் ஒரு மகரந்தப்பொடியாக மாறிய துயரத்தின் ஓலக்குரலை வெளிப்படுத்துவதாக உள்ளது.
”உரிமை பறிக்கும்
சாதித் திமிராய்
உயிர்கள் பறித்தது
கடல் திமிர்.”
என்று ஆழிப்பேரலை என்ற இயற்கை பேரிடருடன், சமூகப் பேரிடராக உள்ள சாதியத்தை இணைப்படுத்தி வாசிக்கிறார். இயற்கையும், சமூகமும் இல்லாதவனுக்கு பெருந்துயராக மாற்றப்பட்டுவிட்ட அவலத்தின் குரலாக ஒலிக்கிறது இவரது கவிதைகள்.
”வெண்மணி வயலின்
செந்நெல் மனிதர்கள்”
உடல் நிலமாகவும், நிலம் உடலாகவும் மாறுவதிலும், மாற்றுவதிலும் அதிகாரத்தின் ஆதிக்க வெறி எப்படி செயல்படுகிறது என்பதை இவரது பெரும்பாலான கவிதைகள் உணர்த்துவதாக உள்ளது. ”கூதிர் காலம்” என்ற கவிதை ஒரு சங்ககப்பாடல் காட்சியின் அக ஏக்கத்தை சொல்கிறது. ஒருவித பழமை ஏக்கம் என்பதுடன் இணைந்து இயற்கை நோக்கி திரும்புதலும், இழந்த நிலத்தை மீட்கும் திணைக்குடி மனமும் கவிதைகள் நெடுகிலும் ஒழுகியோடுகின்றன.
”செல்லாக்காசுகளின் ஒப்பாரி” என்ற கவிதை. பணமதிப்பிழப்பு என்ற மோடியின் செல்லாக்காசுத்திட்டத்தின் விளைவை சொல்லும் கவிதை.
”செல்லாமல் போனது
இழந்துபோன வாழ்வைப்
போர்த்திக் கிடக்கும்
சீவன்களும்தான்.”
என்று மனிதனே செல்லாக்காசாக மாற்றப்பட்டுவிட்ட அரசியல் அவலம் பற்றிய பதிவாக உள்ளது.
ராம்குமார் படுகொலையை சாதிய ஆணவப் படுகொலையாகவும், அதில் பார்ப்பனர், காவிகள், காவல்துறை உள்ளிட்டவற்றின் கூட்டதிகாரம் சாதிய முகத்தில் எப்படி ஒரு சாமாநியனைக் கொன்றது என்ற கருத்தை கவிதையாக முயன்றிருக்கிறார். கவிதையைவிட கருத்து ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோல; ”அறத்தீ மனிதர்கள்” என்ற கவிதையும் முல்லிவாய்க்கால் படுகொலையினால் சிதறுண்ட மனதின் வெளிப்பாடாக அரசியல் மீது காறி உமிழும் சொற்கோவையாக வெளிப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள நீர்-அரசியல் குறித்து பேசும் ”நீரின்றி அமையாது தமிழகம்” என்ற கவிதையின் இறுதிவரிகள் இன்றைய தமிழின அரசியலின் புள்ளியை சுட்டிச் சொல்கிறது இப்படி,
பூநூலால் கோா்க்கப்பட்ட
இந்திய வரைபடச் சாயங்களை
அவ்வப்போது
ஆறுகள் தான் அழிக்கின்றன.”
புரட்சிகரக் கவிமரபான இன்குலாப் கவிதைகளின உணர்ச்சிமிக்க சில வரிகளைப்போன்ற வரிகள், சொல்முறை சில கவிதைகளில் வெளிப்பாடு கொண்டுள்ளது. பழந்தமிழ் அறிவுடன், தமிழ் மரபிலும், தமிழின் அணியிலக்கன மறைபொருள் விளக்க உத்திமுறைகளான உள்ளுரை, உவமம், உருவகம், இறைச்சி போன்றவற்றைப் பயன்படுத்தி, கவிதை மொழியை ஒரு இணைமொழியாக்க உத்தியாக வெளிப்படுத்துவதற்கான மொழிப்புலம் கொண்ட மகராசன், மென்மேலம் சிறந்த கவிதைகளை எழுதமுடியும் என்பதை, கவிதை குறித்த அவரது அறிதலாக வெளிப்படும் கீழ்கண்ட வரிகள் சொல்லிச் செல்கின்றன.
”கவிதைகளில் இளைப்பாறுகின்றன
சுமைத்தாங்கிச் சொற்கள்”
”கவித்தனம் காட்டவே
எழுதி எழுதித் தீர்கின்றன
சொற்கள்.”
”ஈரம் கோதிய சொற்கள் தான்
வாழ்வின் தாகத்தை
இப்போது தணிக்கின்றன”
உணர்வுகள் கவிதைகளில் சொற்களாக மட்டுமே மிஞ்சாமல், அழகியல் சார்ந்த காட்சிகளாக எடுத்துரைக்கப்படும்போது வாசிப்பில் நினைவற்ற நிலையில் மொழித்துகளாக சேர்ந்துவிடும். கவிதையில் சொற்கள் இசைத்தன்மையுடன் இருக்க எதகைமோனை போன்ற உத்திகளை உருவாக்கியதன் பின்னணி என்பது இத்தகைய அழகுணர்ச்சியை இசைத்தலாக கவிதை வெளிப்படுத்தவும், வாசப்பில் அது இசைாயக மனதில் படியவுமே. மகராசனின் இகக்விதைகளில் அழகியல் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால், செய்நேர்த்திமிக்க கவிதைகளாக அவை வெளிப்படும் என்ற நம்பிக்கையை தரும் கவிதை தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
- ஜமாலன் 15-03-2018
நூல் குறிப்பு: ”சொல் நிலம்” – ஆசிரியர்: கவிஞர். மகாராசன் – டிச. 2017- பக். 88- ஆதி பதிப்பகம் – திருவண்ணாமலை - விலை: ரூ 100

செவ்வாய், 13 மார்ச், 2018

சொல் நிலம் : நிலமும் சொற்களும் ஊடுபாவாய் நெய்து கொண்டிருக்கிறது. :- பீமராசா ஆனந்தி.


மஞ்சள் வெளியில் இலைகளோடு கிளையில் அமர்ந்திருந்த குருவியின் கண்கள், சிவப்பு எழுத்துகள் என்னை வாசியேன் என்று சொல்வதைப் போல இருந்தது. கட்டுரைகளோ என்று நினைத்து தான் வாங்கினேன். மெல்லப் பிரித்தேன். ஆகா, கவிதைகள் ! அப்படியொரு சந்தோசம்.

நிதானமாக வாசிக்க வாசிக்க, மிரண்டு போய் விட்டேன். ஒரு கவிதை வாசிப்பேன்; நூலை அப்படியே மூடி வைத்துவிட்டு ஒன்றுமே தோன்றாமல்  தலையைப் பிடித்துக் கொள்வேன். எதைச் சொல்வேன்? எதை விடுவேன் ? தவிக்கிறேன்.

"உழைப்புச் சொற்களால் நிலத்தை எழுதிப் போன அப்பனும் ஆத்தாவும்
நெடும்பனைக் காடு நினைத்தே தவித்துக் கிடப்பார்கள் மண்ணுக்குள் "
இந்தக் கவிதை போதும் சொல் நிலத்திற்கு.

நிலமும் சொற்களும்
ஊடுபாவாய் நெய்து
கொண்டிருக்கிறது மனசை !
ஈரம் கோதிய சொற்கள்
தணிக்கின்றன
வாழ்வின் தாகத்தை.
நிலத்தின் மீதுள்ள காதலால்
சொற்களின் மீதுள்ள
காதலால்
கவிதைகளை
ஆட்சி செய்கிறாய்.
கசிந்துருக கவிதைகள்
சொல்லிப் பகிர (பருக)
வார்த்தைகள்
இன்னும் வேண்டுகிறது மனசு.
காலத்தே மழை;
பருவத்தே விளைச்சல்.


முதலில் அப்பாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் பெயரில் விருது வழங்க உங்கள் நூல் தேர்வு செய்யப்பட்டு, நீங்கள் அறிமுகம் ஆனதால் தொடர்ந்து உங்கள் படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

செம்மாந்து நிற்க. மனிதம் வெல்க.
வாழ்க.

செம்பாதங்கள்.



இந்தப் பாதங்கள்
வெறும் பாதங்கள் அல்ல;
நிலத்தோடு தோய்ந்து கிடந்த
உழவுக் குடிகளின்
உழைப்புத் தடங்கள்.

இந்தப் பாதங்களின் கொப்புளங்கள்
நடந்த வலிகள் அல்ல;
நிலத்தின் ஆத்மாக்களின்
அழுகைத் துளிகள்.

கால்கள் நோகவும்
கொப்புளங்கள் பூக்கவும்
அரத்தம் கசியவும்
நடந்த பாதங்கள்
நிலத்தின்  ஒளிகள்.

உயிர்போகும் நிலத்தின் அழுகையை
நிலம் தோய நடந்து நடந்து
நைந்து போயிருக்கும்
உயிர்ச் சாமிகள்.

கன்னச் சுருக்கங்களும்
ஒட்டிக் கிடக்கும் வயிறும்
விரிப்போடிய நிலத்தின் சாட்சியங்களாய்
இந்தப் பாதக் கோடுகள்.

ஊருக்குச் சோறிடும்
இந்தப் பாதங்கள்,
ஏந்திய கொடியின்
நிறம் கசியக் கசிய
ஒரு பாதைக்கு வந்திருக்கின்றன.

இப்போது
இந்தப் பாதங்களை
வணங்க மறுத்தால்,
நிலத்தில் நாளை
இறங்க மறுக்கும்
இதே பாதங்கள்.

வனத்தாளின் கொலைத் தீ.


வனத்தாளின் கொடுந்தீயில்
கதறித் துடித்து
மாய்ந்தவர்களின் உயிரோசை,
கருகிச் சாம்பலாகி
வனத்தோடே கலந்திருக்கிறது.

பொசுங்கிய வாழ்வு நினைத்து
கால்கள் பொசுங்க நடந்தாள் கண்ணகி.
அவள் நடந்த பெருங்காடு
காலத் தடங்களின்
கங்குகளைச் சுமந்து கிடந்தாலும்,
கானுயிர்க்கெல்லாம் உயிர்த்தடமாய்த்தான் கிடந்தது.

கண்ணகியின் கோபத் தீயைக்
கண்களில் வழிந்த சுடு நீரும் அணைத்திருக்கவில்லை.

குன்றக் குரவர்களின்
குல தெய்வமாய்
வனத்தாள் மடி விரித்துக்
கிடந்த போதெல்லாம்
பெருந்தீ பற்றிடவில்லை.

நெடுமரங்கள் நின்ற போதும்
செடி கொடிகள் படர்ந்த போதும்
சருகு சுள்ளி மண்டியபோதும்
மூங்கில் கழைகள் உரசிய போதும்
தீ விளையாடிப் பார்க்கும் தான்;
தீயணைக்கும் வித்தைகளை
அது அதுவாய்க்
கற்றிருந்தன தான்.

வனத் தீ
கொலைத் தீயாய் மாறியதெல்லாம்,

வனத்தாளின்
மனிதப் பிள்ளைகளை
மெல்ல மெல்லக் கீழிறக்கி,
வனத்தையெல்லாம்
நிலத்திற்கும் இனத்திற்கும் சொந்தமில்லாதவர்க்குத்
தாரை வார்த்த பின்புதான்.

இயற்கையின்
எச்சம் நாமென்பதைத்
துச்சமாய்த் தூர வீசி,
நுகர்வெறியின்
உச்சம் தொடுகிற
மிச்சச் சமூகத்தைத்
தீயால் காரி உமிழ்ந்திருக்கிறாள் வனத்தாள்.

வனத்தாளின் கொலைத் தீ
படர்ந்திருக்க வேண்டியது
சுரண்டல் வர்க்கத்தின்
எச்சை அதிகாரத்தின் மீது தான்;
இந்தப் பிஞ்சுகளிடத்திலில்லை.

ஞாயிறு, 11 மார்ச், 2018

பெண் விடுதலை அரசியல் :- ஏர் மகாராசன் நேர்காணல்.

மார்ச் 8 - உலக உழைக்கும் பெண்கள் நாளை முன்னிட்டு நியூசு 7 தமிழ் சமூக வலைத்தளத்துக்கு நான் அளித்துள்ள நேர்காணல். நேர்காணலில் பங்கேற்ற தோழி சண்முகப் பிரியா அவர்களுக்கும், ஆற்றுப்படுத்திய தோழர் பிரின்சு அவர்களுக்கும், நியூசு 7 தமிழ் ஊடக நிர்வாகத்திற்கும் எனது நன்றி.


 சண்முகப்பிரியா : 
சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவதற்கான காரணம் என்ன? 
இது கொண்டாடப்பட வேண்டியநாள்தானா?

ஏர் மகாராசன்: 
மனித குலத்தினுடைய சரி பாதி அங்கமாகத் திகழக்கூடிய பெண்கள், ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் வேண்டும் எனப் போராடி, வெற்றி பெற்ற நாள் தான் மார்ச் 8-ஆம் நாள். இது, பெண்கள் செய்த புரட்சியின் குறியீட்டு நாளாகவே கருதப்படுகிறது. பிரெஞ்சு புரட்சியின் போது 1789-ஆம் ஆண்டு, ஜூன் 14-ஆம் நாள் பெண்களுக்கான சுதந்திரம், சமத்துவம், பெண் பிரதிநிதித்துவம், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கான வாக்குரிமை என அனைத்துவகைப் பெண்ணடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் பெண்கள் போர்க்கொடி உயர்த்திப் புரட்சியில் ஈடுபட்டனர். 
இந்தக் கிளர்ச்சி உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. போராட்டக் கிளர்ச்சி தீவிரமடைந்த சூழலில், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும் அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கு இடமளிக்கவும் முன் வருகிறார் பிரான்ஸ் நாட்டின் புருஸ்லியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க். அவ்வாறு அரசாங்க உத்தரவு 1848-ஆம் ஆண்டு, மார்ச் 8-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 1910 இல், பணிக்குச்செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்தான், பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோருவதற்கு உலகம் முழுவதும் ஒரு நாளை மகளிர் நாளாகக் கொண்டாடுவதன் அவசியத்தை, ஜெர்மனியின் சோசலிச ஜனநாயகக் கட்சியின் மகளிர் அணித் தலைவியான கிளாரா ஜெட்கின் என்பவர் முன்வைத்தார். பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8-ஆம் நாளையே, உலகப் பெண்கள் நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்கிற கருத்து பெரும்பாலான பெண்கள் இயக்கங்களின் விருப்பமாக இருந்தது. இதனால், 1921-ஆம் ஆண்டு முதல் மார்ச்  8-ஆம் நாள், உலகப் பெண்கள் நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்,இது கொண்டாடப்பட வேண்டிய நாள்தான்.


சண்முகப்பிரியா: 
பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான வரலாற்றுப் பின்னணி மற்றும் காரணிகள் என்ன?

ஏர் மகாராசன்: 
வரலாற்றின் முதல் வர்க்க ஒடுக்குமுறை என்பது, பெண் பாலை, ஆண் பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது என்கிறார் ஏங்கல்ஸ். மனித சமூகத்தின் இயங்குதலுக்கு அடிப்படையாக இருப்பது, பொருள் உற்பத்தியும், உயிரின மறு உற்பத்தியும்தான். உற்பத்தியிலும், மறு உற்பத்தியிலும் கட்டுப்பாடு இல்லாது, பெண்கள் ஈடுபட்டிருந்த நிலைமைகள் தாய்வழிச் சமூக அமைப்பில் இருந்திருக்கின்றன. இதற்குப்பின் தோற்றுவிக்கப்பட்ட ஆண்வழிச்சமூக முறைமையில்தான், பெண்களின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்திச் செயல்பாடுகள் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு, சமூகத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் வெளியேற்றப்பட்டதால், அவ்வுற்பத்தி நடவடிக்கையின் மூலம் கொணரப்பட்ட சொத்துக்கள், செல்வங்கள், பொருட்கள், உடைமைகளுக்கு ஆண்களே உரிமை கொண்டாடும் நிலை ஏற்பட்டது. இதனால், பெண்கள், ஆண்வழிச் சமூகத்தைச் சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது மட்டுமல்லாமல், இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆணின் உடலின்ப  வேட்கைக்குப் பலியான பெண்கள், கேவலம், குழந்தைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான கருவிகளாக மட்டும் ஆக்கப்பட்டனர். மேலும், பொருள் உற்பத்தித்தளம் ஆண்கள் வசம் இருந்ததால், ஆண்களின் சொத்துகளுக்கு வாரிசுரிமை கொண்டாடும் வகையில் சொத்துடைய ஆணின் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பணிக்குப் பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இக்குடும்ப அமைப்பில், ஒரு பெண், ஒரு ஆணுடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  ஆக, ஆணாதிக்கத்தின் பொருளியல் அடிப்படை என்பது, பெண்களின் உழைப்பு, சக்தி ஆகியவற்றின் மீது ஆண்கள் கொண்டுள்ள அதிகாரமே ஆகும். இதுதான், பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான வரலாற்றுப் பின்னணியாக நாம் கருதமுடியும்.

சண்முகப்பிரியா: 
பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் எது?

ஏர் மகாராசன்: 
தனிச்சொத்துடைமையும் உரிமையும்தான் ஆண்களுக்கான ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் வழங்கியிருக்கின்றன. இத்தகைய உடைமை வர்க்கச் சமூக அமைப்பை மாற்றக்கூடிய பாட்டாளி வர்க்க விடுதலைப் புரட்சியே பெண்களுக்கான முழு விடுதலையை அளிக்கக்கூடியது. அதாவது, உழைக்கும் வர்க்கத்துப் பெண்களின் விடுதலையில்தான் அனைத்து வகையான பெண்களின் முழு விடுதலையும் உள்ளடங்கியிருக்கிறது. 

சண்முகப்பிரியா: 
பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதா?

ஏர் மகாராசன்: 
ஒரு விடுதலைக் கோரிக்கையை, அதற்கான உரையாடலைக் கொண்டிருக்கும் எந்த ஒரு கோட்பாடும், ஆதிக்கத்துக்கும் அதிகாரத்திற்கும் எதிரானதாகத்தான் இருக்கும். பெண்ணியம் என்பதும், ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடக்கும் பெண்களுடய விடுதலைக் குரலாகவே கருதப்பட வேண்டும். குறிப்பாகச் சொல்லப்போனால், பெண்ணியம் என்பது, ஆண்களுக்கு எதிரானது அல்ல; ஆணாதிக்கத்திற்கும், ஆண் அதிகார முறைகளுக்கும்தான் எதிரானது. 

சண்முகப்பிரியா: 
எப்படி வேண்டுமானாலும் கட்டற்று இருந்து கொள்ளலாம் என்பதை இதுபோன்ற கருத்தியல்கள் கூறுகின்றனவா?

ஏர் மகாராசன் : 
எப்படி வேண்டுமானாலும் கட்டற்று இருந்து கொள்வதைத்தான் பெண்ணியம் உள்ளீடாகக் கொண்டிருப்பதாகப் பெண்ணியத்தைச் சுருக்கிப் பார்க்கக் கூடாது. எப்படி வேண்டுமானாலும் கட்டற்று இருந்துகொள்வதே பெண்ணியம் என்பதாக முதலாளித்துவச் சமூக அமைப்பால் ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடிய ஒரு கருத்துப் பரவல். இது, முதலாளித்துவ மேட்டிமைச் சமூகத்தின் பெண்களது கோரிக்கைகள் அவ்வளவுதான். இதுபோன்ற வாதங்கள், பெண்ணை நுகர்வுப் பண்டமாக ஆக்கிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ நுகர்வுப் பண்பாட்டு நடைமுறைகளுக்குத்தான் சார்பாக அமைந்திருக்கின்றன. முதலாளித்துவச் சந்தை உற்பத்தியில், பொருட்களை ருசித்துவிட்டு எறிந்துவிட்டுச் செல்வதுபோல, பெண்ணின் உடலையும் ருசிப்புக்கான நுகர்வுப் பண்டமாக ஆக்குவதில் முதலாளித்துவச் சந்தைக் கூறுகள் அனைத்தும் தீவிரம் காட்டுகின்றன. இந்தத் தீவிரத்தின் வெளிப்பாடுகள்தான் கட்டற்ற பாலியல் சுதந்திரம், வரையரையற்ற பாலியல் புணர்ச்சி, கூட்டுக்கலவி போன்றவை முற்போக்கானவை எனக்காட்டும் வாதங்களும் நடவடிக்கைகளும் ஆகும். இதுவே கலாச்சாரப் புரட்சியாக மதிப்பிடப்பட்டாலும், இது முதலாளித்துவ நுகர்வுவெறிக் கலாச்சாரத்தின் இன்னொரு பிரதிபலிப்பாகத்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

சண்முகப்பிரியா: 
பெண் சுதந்திரம், பெண்ணியத்திற்காகப் பாடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் யார் யார்?

ஏர் மகாராசன்: 
பெண்ணுரிமை, பெண்ணியம், பெண் எழுத்து தொடர்பான ஆய்வுகளையும் உரையாடல்களையும் மேற்கொண்டவர்களின் பட்டியல் நீளமானது. எனினும், அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக மேரி எல்மான், சிமோன் தி பொவாயர், எலைன் ஷோவால்டர், டோலிமர், ஆனிட் கோலோட்னி, மீரா ஜெலன், கேட் மில்லட், ராபின் லாக்கோப், ஜூலியா கிறிஸ்தவா, ஹெலன் சீக்சஸ், மேரி டாலி, வெர்ஜினியா ஊல்ப், கோரா கப்லான்,சுலாமித் பயர்ஸ்டோன் , அஸிஸா அல் ஹிப்ரி போன்றோரைக் குறிப்பிடலாம். மேலும், பெண் விடுதலைக்கான செயல்பாடுகளை அரசியல் இயக்கங்களாக வடிவமைத்து நடைமுறைப்படுத்தியவர்களுள் லெனின், கிளாரா ஜெட்கின், ஷீலா ரெளபாத்தம் போன்றோரைக் குறிப்பிடலாம். இந்தியச் சூழலில் பூலே, அம்பேத்கர் பெண்ணுரிமைச் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தியவர்களாவர். தமிழ்ச் சூழலில், பெண்ணுரிமைச் செயல்பாட்டை அரசியலாக முன்னெடுத்தவர் பெரியார்.பெண் விடுதலைச் செயல்பாட்டை மண் விடுதலையோடும் இன விடுதலையோடும் இணைவுபடுத்திப் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்து அவர்களைப் போராட்ட சக்தியாக ஈழத்தில் வார்த்தெடுத்தவர் தேசியத் தலைவர் திரு.பிரபாகரனார் அவர்கள் தான். ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

சண்முகப்பிரியா: 
1871-இல் தான் பெண்ணியம் என்ற விடுதலை கருத்தியல் உருப்பெறுகிறது எனில், அதற்கு முன்பாகப் பெண்கள் அவ்வளவு காத்திரமாகப் போராடவில்லையா?

ஏர் மகாராசன்: 
அப்படி இல்லை. பெண்களின் விடுதலைக்குரல் எல்லாக் காலத்திலும், எல்லா தேசத்திலும் ஒலித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறது. பெண்களுடைய விடுதலைக் குரலானது, எழுச்சியாகக் கிளம்பியதும், புரட்சியாக வெடித்ததும், இயக்கங்களாகப் பரவியதும் இந்தக் காலகட்டத்தில்தான். ஆகையால், இந்தக் காலகட்டத்திற்கு முன்பு, பெண்கள் குரல் எழுப்பவே இல்லையா என்றெல்லாம் பார்த்திட முடியாது. பெண்கள் குரல் எழுப்பியிருக்கிறார்கள். அதற்கான தடயங்களும் இருக்கின்றன. கண்ணகி, தன்னுடைய கணவனான கோவலன் கொல்லப்பட்டதை அடுத்து, பாண்டிய மன்னனை எதிர்த்துக் குரலிட்டு, மதுரையை எரித்துவிட்டுச் சென்றது பெண்ணினுடைய தனிநபர் நிகழ்ச்சியாக மட்டும் பார்த்துவிட முடியாது. ஒரு அதிகார அமைப்பை, பெண் எதிர்த்திருக்கிறாள். அவள், தன் உரிமைக்கான குரலை ஓங்கி ஒலித்திருக்கிறாள் என்பதையும் பார்க்க வேண்டும். அதேபோல, பெண்ணினுடைய தன்னிலை உரிமைக்குரல் தமிழ் மரபில் வெளிப்பட்டிருப்பதை நிறையப் பார்க்க முடியும். வெள்ளிவீதியார், ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், உத்திர நல்லூர் நங்கை, ஆவுடையக்காள் போன்றோருடைய கவிதைகளில், மிகப்பெரிய பெண் உரிமைக்கான குரல் பொதிந்திருப்பதைப்  பார்க்க முடியும். இதேபோல, எல்லாக் காலகட்டத்திலும் எல்லா நாடுகளிலும் பெண்கள் தம்முடைய உணர்வுகளையும், தங்களுக்கான உரிமைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வரலாற்றில் அதற்கான சான்றுகள் இருக்கின்றன. இது எப்பொழுது தீவிர அரசியலாக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். அந்தப் பெண்ணுரிமைக் குரல், ஓர் அரசியலாகவும் இயக்கமாகவும் மாறியது 1871 காலகட்டங்களில்தான்.

சண்முகப்பிரியா: 
பெண்ணியத்தில் எத்தனை வகைகள் உள்ளன?

ஏர் மகாராசன்: 
பெண்ணியத்தில் நிறைய வகைகள் உள்ளன.ஆனால்,  அதனை மூன்று அடிப்படையான வகைக்குள்ளேஅடையாளப்படுத்துவர்.
மிதவாதப்பெண்ணியம் – சீர்திருத்தங்கள் மற்றும் சலுகைகளைக் கோருவது.
தீவிரவாதப் பெண்ணியம் – பெண்கள் ஒடுகப்படுவது ஆண்களால்தான். அதனால், ஆண்களுக்கு எதிராகத் தீவிரத் தன்மையுடன் இருப்பது. 
சமத்துவப் பெண்ணியம் – பெண் விடுதலையைப் புரட்சியின் அங்கமாக முன் வைப்பது. 

சண்முகப்பிரியா: 
இத்தனை வகைகளில், எந்த வகை பெண்ணியம் சரியான விடுதலைக்கான பாதையை முன்வைப்பதாக கருதுகிறீர்கள்?

ஏர் மகாராசன்: 
சமத்துவப் பெண்ணியம் என்று சொல்லக்கூடிய மார்க்சியப் பெண்ணியமே தெளிவான நோக்கத்தையும் பெண் விடுதலைக்கான வழிமுறைகளையும் செயல் திட்டங்களையும் கொண்டிருக்கிறது. ஆண்வழிச் சமூக உடைமை முறைமைகளில் இருந்தும், ஆதிக்கவெறி ஆண்களிடம் இருந்தும், இன்னும் எல்லா விதமான சுரண்டல் ஒடுக்குமுறைகளில் இருந்தும் பெண்கள் விடுதலை பெறுவதற்கான திட்டங்களையும், அரசியல் வழிமுறைகளையும், அதற்கான போராட்டங்களையும் மார்க்சியப் பெண்ணியமே எடுத்துரைக்கிறது. ஆகவே, மார்க்சியத்தின் வழிப்பட்ட சோசலிசம் எனப்படுகிற சமத்துவப் பெண்ணியமே சரியானது என்று நான் கருதுகிறேன்.

சண்முகப்பிரியா: 
தமிழ்ச் சூழலில் பெண்ணியம் சார்ந்த எழுத்துகள் எப்படி உள்ளன?

ஏர் மகாராசன்: 
1990-களுக்குப் பிறகு, தமிழ்ச் சூழலில் பெண் சார்ந்த பதிவுகள் நிறைய வெளிவந்துகொண்டு இருக்கின்றன. ஆண்களின் எழுத்து முறைகளில் இருந்தும் அனுபவப்பாடுகளில் இருந்தும் வேறுபட்டதான ஒரு புதிய எழுத்து முயற்சிகள் பெண்களால் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கவிதை, கட்டுரை, நாடகம், புனைகதை, கலை உள்ளிட்ட தமிழ் மரபின் அனைத்துத் தளங்களிலும் பெண்களின் வாழ்க்கைப்பாடுகளும், அறிவுப் புலப்பாடுகளும் பதியப்பட்டு வருகின்றன. எழுதுவதில் பெண்களுக்கு இருந்த தயக்கம் முற்றாக மறையத்தொடங்கி உள்ளது. அதேபோல, பெண் எழுத்துகளுக்கு இருந்த ஆண்களின் எதிர்ப்புகளும் கைவிடப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துச்சூழலில், பெண்களுக்கான இடத்தை அவர்களே உருவாக்கிக்கொண்டு இருப்பதும், தமிழை வளப்படுத்தக்கூடிய ஒன்றாக மாறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சண்முகப்பிரியா: 
ஒரு எழுத்தாளராக இந்தப் புலத்தில் உங்கள் படைப்புகள் குறித்துக் கூறுங்கள்.

ஏர் மகாராசன்: 
தமிழ்  மரபில் பெண் எழுத்துகளில் காணப்படக்கூடிய இயங்கியலை அடையளப்படுத்தும் வகையில், நான் மேற்கொண்ட பெண் மொழி பற்றிய ஆய்வு மிக முக்கியமானது எனக் கருதுகிறேன். தமிழில் பெண் மொழி மரபு  குறித்த எனது ஆய்வு  “பெண் மொழி இயங்கியல்” என்ற பெரு நூலாக வெளிவந்திருக்கிறது. அதற்கடுத்து, பெண் விடுதலை குறித்த மார்க்சிய உரையாடல்களைத் தொகுத்து, “ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்” என்னும் நூலாக எனது தொகுப்பில் வெளிவந்திருக்கிறது. இரண்டு நூல்களையும் தோழமைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும், பெண் எழுத்துகள் குறித்து அவ்வப்போது கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனது எழுத்துகள் யாவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடக்கும் மக்களின் பக்கம்தான். அவ்வகையில், எனது எழுத்துகள் யாவும் பெண்ணின் பக்கம்தான்.

சண்முகப்பிரியா: 
தலித் பெண்ணியம் என்ற ஒன்று பொதுவாகப் புழக்கத்தில் இருக்கின்றது. சாதியம் சார்ந்த பெண்ணியத்தின் தேவைகள் என்ன?

ஏர் மகாராசன்: 
இந்தியச் சமூகத்தில், சாதியப் பாகுபாடுகளும் சாதிய ஒடுக்குமுறைகளும் வெகுகாலமாகவே நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நோய். சாதியத்தைப் பேசுபொருளாக்காமல், எவ்வகைப் புரட்சியும் இங்கு சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொள்வதற்கே வெகுகாலமாகிப் போயிருக்கிறது. இங்குள்ள உயர்த்திக் கொண்ட சாதிப் பெண்களின் வாழ்நிலையும் ஒடுக்குமுறைக்குள்ளான நிலைமைகளும் வேறு; ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் வாழ்நிலையும் ஒடுக்குமுறைக்குள்ளான நிலைமைகளும் வேறு. இருவேறு தரப்பினரின் நிலைமைகள் ஒரே மாதிரியாக அமைந்திருக்கவில்லை. இதில், அதிகமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடப்பது ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள்தான். ஆகவே, ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் குரலை ஆதரித்துதான் ஆகவேண்டும். அவ்வாறான குரலை வரவேற்பதில் தவறில்லை. 

சண்முகப்பிரியா: 
லிபரல் பெண்ணியத்திற்கும் சோசலிசப் பெண்ணியத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஏர் மகாராசன் : 
நிலவுடைமைச் சமூகத்தில் பெண்களுடைய உழைப்புச் சக்தி என்பது மறுக்கப்பட்டது. முதலாளித்துவச் சமூக அமைப்பிலே, பெண்களின் உழைப்புச் சக்தி பறிக்கப்படுகிறது. இதைத்தான் உழைப்புச் சுரண்டல் என்று கூறுகின்றனர். முதலாளித்துவச் சமூக அமைப்பு, நிலவுடைமைச் சமூக அமைப்பில் இருந்து முற்போக்கானதாக கொண்டு போனாலும்கூட, அதன் உள்ளீடான நோக்கம், சுரண்டல் தன்மையைத்தான் கொண்டுள்ளது. ஆகவே, முதலாளித்துவப் பெண்ணியமோ, குட்டி முதலாளித்துவத்தின் சீர்திருத்தவாதப் பெண்ணியமோ பெண்களுக்கான முழு விடுதலையையும் கொண்டிருப்பதில்லை. மார்க்சிய வழிப்பட்ட சோசலிசப் பெண்ணியமே உழைக்கும் பெண்களது விடுதலையை உள்ளடக்கிய ஒன்றாக இருக்கிறது. 

சண்முகப்பிரியா: 
லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் இடையிலான பெண்ணியம் சார்ந்த விவாதத்தின் முக்கிய சாரம் என்ன?

ஏர் மகாராசன்: 
லெனின், ரசியப் புரட்சியின் பிதாமகனாகக் கருதப்படுகிறவர். கிளாரா ஜெட்கின் ஜெர்மனியைச் சேர்ந்தவர். சோசலிச ஜனநாயகக் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்தவர். லெனினுடன் புரட்சியில் பங்கெடுத்துக்கொண்டவர். லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் 1920 காலகட்டங்களில் நிகழ்த்திய உரையாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பெண் உடல் அரசியல் பற்றி நிறைய உரையாடியுள்ளனர். கட்டற்று இருக்கக்கூடிய பாலியல் சுதந்திரம் குறித்துக் கூறுமிடத்தில், முதலாளித்துவச் சமுதாயத்தின் குப்பை மேட்டில் அத்தனைச் செழிப்புடன் எடுத்துரைக்கப்படும் பாலுறவுத் தத்துவங்களிடம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஓயாமல் தனது உந்தியை நினைத்துத் தியானம் புரியும் இந்திய ஆண்டியைப் போல எந்நேரமும் பாலுறவுப் பிரச்சினைகளிலேயே முழு நாட்டம் கொண்டிருக்கும் இவர்களை நான் நம்புவது இல்லை. பெரும்பாலும், வெறும் கருதுகோள்களேயான, அதுவும் பல சந்தர்ப்பங்களில் தாந்தோன்றித் தனமான ஊகங்களேயான இந்தப் பாலுறவுத் தத்துவங்கள் அபரிமிதமாகி உள்ளதற்குச் சொந்தத் தேவைகளே காரணம். முறைகேடான அல்லது மட்டு மீறிய தமது பாலுணர்ச்சிக்கு முதலாளித்துவ நெறியின் முன்னால் நியாயம் கற்பிக்க வேண்டும்; தாம் கண்டிக்கப்படல் ஆகாது என வாதாட வேண்டும் என்ற விருப்பமே இந்தத் தத்துவங்களுக்குரிய மூல ஊற்றாகும். இதனைக் கலகத் தன்மை கொண்டதாகவும், புரட்சிகரமானதாகவும் தோன்றச் செய்யும் பொருட்டு எவ்வளவுதான் முயன்ற போதிலும், முடிவில் எப்படியும் இது முற்றிலும் முதலாளித்துவத் தன்மையாகவே இருக்கிறது . இது உழைக்கும் பெண்களது கோரிக்கையல்ல. மாறாக, முதலாளித்துவச் சமூக அமைப்பில் இருக்ககூடிய மேட்டிமை வர்க்கத்துப் பெண்களுடைய கோரிக்கைதான் என்று அவ்வுரையாடலில் சொல்லி இருக்கின்றனர். ஒரு கடையில் ஒரு கோப்பையில் தேனீரை வாங்கி, தேனீரைக் குடித்து முடித்தவுடன், அந்தக் குவளையைத் தூக்கி எறிந்துவிட்டுப் போவது மாதிரியானது கட்டற்ற பாலியல் செயல்பாடு என்று கருதப்படுகிறது. ஆனால், பாலியல் என்பதும் காதல் என்பதும் முழுவதுமாக அன்பு மற்றும் உறவு வயப்பட்டது. காதலற்ற முத்தங்கள் ஒரு கோப்பைத் தண்ணீர் போன்றது என விவரிக்கும்  அந்த உரையாடல்  பகுதிகள் முக்கியமானது. இவ்வாறு, பெண் விடுதலை பற்றிய மார்க்சியப் பார்வைகள் குறித்துதான் எனது தொகுப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் எனும் நூல் உணர்த்துகிறது.

சண்முகப்பிரியா: 
தமிழ்நாட்டில், பெண்ணியம் எப்பொழுது முதல் தீவிரமாக பேசப்படுகிறது?  தமிழ்ச்சூழலில் முக்கியமான பெண்ணியவாதிகள் என யாரையெல்லாம் சொல்லலாம்? 

ஏர் மகாராசன் : 
தமிழ்ச் சூழலில் பெண் விடுதலைக்கான குரலை அரசியலாய் முன்னெடுத்தவர்கள் தந்தை பெரியாரும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும் தான். பெண் சார்ந்த உரையாடல்களைத் தமிழ்ச் சூழலில் வளப்படுத்தியும், வளப்படுத்திக் கொண்டும் இருப்பவர்களாக சிவகாமி, வ.கீதா, ஓவியா, அருள்மொழி, சரசுவதி, மாலதி மைத்ரி, அரங்க மல்லிகா, அம்பை, கனிமொழி, எம்.ஏ.சுசீலா, அ.மங்கை, ஜூவ சுந்தரி, பாலபாரதி, அஜிதா,  செல்வி, குட்டி ரேவதி, தேவதத்தா, வாசுகி,  நந்தினி, கவின்மலர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் நிறையச் செயல்பாட்டாளர்கள் பெண் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சண்முகப்பிரியா: 
பெரியாரின் பெண்ணியம் தீவிரமானதாகக் கருதப்படுகிறதே அது ஏன்?

ஏர் மகாராசன்: 
பெண்கள் ஆண்களிடம் அடிமைகளாக இருப்பதற்குக் குழந்தைப்பேறுக்குக் காரணமான அவர்களின் கர்ப்பப்பையே காரணம் என்கிறார் பெரியார். குழந்தையைப் பெற்றுப்போடக்கூடிய கர்ப்பப்பை இருப்பதனால்தான் பெண்களை ஆண்கள் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். ஆகவே, பெண்கள் தங்கள் கர்ப்பப் பையை அறுத்தெறியுங்கள் என்கிறார் பெரியார். அதனால்தான், பெரியாரின் இந்தக் குரல், தீவிரமானதாகப் பார்க்கப்படுகிறது.

சண்முகப்பிரியா: 
பெரியாரின் பெண்ணியத்திற்கும் சோசலிசப் பெண்ணியத்திற்குமான முக்கிய வித்தியாசம் என்ன?

ஏர் மகாராசன்: 
பெரியாருடைய பெண்ணுரிமைக் கருத்தியல்கள் தீவிரமானதாகக் கருதப்படுகிறது என்றாலும்கூட, உழைப்புச் சுரண்டலிற்கும், பாலியல் சுரண்டலிற்கும் உள்ளாகும் பெண்களின் சமூக அமைப்பை மாற்றுவது குறித்து அவை பேசவில்லை. நிலவுகிற சமூக அமைப்பில், பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, மறுமணம், சொத்துரிமை போன்ற சீர்திருத்த வடிவங்களையே வெளிப்படுத்தின. சோசலிசப் பெண்ணிய அரசியலானது, நிலவுகிற சமூக அமைப்பையே புரட்டிப்போடக்கூடிய புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ளது. எனினும், சீர்திருத்த நடவடிக்கை என்பது, புரட்சியின் முதல் கட்ட தொடக்கம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சோசலிச பெண்ணுரிமையின், ஒரு தொடக்கப் புள்ளியாகவே பெரியாரின் பெண்ணியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 

சண்முகப்பிரியா: 
நவீன பெண்ணியம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? பெண்ணியம் எனும் கருத்தியலில் எதிர்காலத்தேவை, வீச்சு எப்படிப்பட்டதாக இருக்கும்?

ஏர் மகாராசன் : 
கட்டற்று இருப்பதுதான் பெண்களின் சுதந்திரம் என்கிற கருத்து, இந்தச் சமூகத்தில் உருவாக்கப்படுகிறது. மேட்டிமைப் பெண்களின் முன்னெடுப்புகளே நவீனப் பெண்ணியமாக முன்மொழியப்படுகிறது. பெண்ணியம் என்பது பெண்களால் மட்டுமே நடத்தப்படும் ஒரு விடுதலைப் புரட்சி  கிடையாது. அதேபோல, ஒரு வர்க்க விடுதலை என்பது, பெண்களை நிராகரித்து விட்டு அல்லது தவிர்த்துவிட்டு நடக்கக்ககூடிய ஒரு புரட்சியும் கிடையாது. உழைக்கும் பெண்களும், உழைக்கும் ஆண்களும் அணிதிரள்வதுதான் இங்குள்ள எல்லாவிதமான ஒடுக்குமுறைக்கும் ஒரே தீர்வு. அந்தப் புரட்சிதான் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்று அழைக்கப்படும். அந்தப் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் அணி சேர்வதன் மூலமாகத்தான் பெண் விடுதலையும் சாத்தியப்படும் என்கிற ஒரு புரிதலை நவீன பெண்ணியம் உள்வாங்கியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

இன்றைய நவீனப் பெண்ணியவாதிகள், மார்சியத்தைப் புரிந்து கொள்வதிலும், மார்க்சியவாதிகள் பெண்ணியத்தைப் புரிந்து கொள்வதிலும் போதாமைகள் நிலவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மார்க்சியரும் பெண்ணியத்தை புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணியவாதியும் மார்க்சியத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  இதுவே நவீனப் பெண்ணியமாக உருக்கொள்ள வேண்டும். இதுவே இப்போதையத் தேவையும்கூட. 
 
சண்முகப்பிரியா: 
கம்யூனிசத்திற்கும் பெண் விடுதலைக்கும் அப்படி என்ன நெருக்கமான தொடர்பு இருக்கிறது?

ஏர் மகாராசன்: 
கம்யூனிசம் என்பது மனிதகுல விடுதலையை பற்றிப் பேசுகிறது. பெண்கள் மனித குலத்தின் சரிபாதி அங்கம். அதனால், கம்யூனிசம் பெண் விடுதலையை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது

திங்கள், 5 மார்ச், 2018

மீன் பேறு.


செங்குளத்துள்
நீந்தித் திரிந்து,
அலை வளையங்களோடு
கரை ஒதுங்கி,
செலவுகளில் பொதிந்த நண்டுகளின் வழித்தடம் தேடித் தனித்தலைந்து,
சுள்ளென்ற வெயில் பொழுதில் பளிச்சென்று துள்ளிக் குதித்து கரையின் மேலே
வந்து விழுந்தன மீன்கள்.

மூடித் திறந்த செவுள்களில்
நுழைந்த காற்று
உயிர் தரப் பார்த்துத்
தவித்துப் போனது.

நீரிலே நீந்தி நீந்தித் திரிந்து
ஈர வாழ்வைத் துடுப்பசைத்து
மிதந்த மீன்கள்,
கரை மணலில் புரண்டு புரண்டு
நிலத்தைப் பூசிக் கொண்டு
மீத வாழ்வின் பேறு பெற்று
வாய் திறந்து மாண்டு போயின.

உயிர்க்கொலைப் பழியிலிருந்து தப்பிப் பிழைத்த நினைப்பில் தக்கையில் தொங்கிக் கிடந்தது
மண்புழு கோர்த்த தூண்டில் முள்.

ஒளிப்படம் :
Palani Nithiyan

ஞாயிறு, 4 மார்ச், 2018

சொல்நிலம் : வஞ்சிக்கப்பட்ட, வாழ்வு தந்த நிலங்களின் அவலக் குரல்களாகச் சொற்கள் :- பிரபாகரன்

மிக சமீபத்தில் நண்பர் ஒருவரின் “அம்மா” தவறிவிட்டதால், அவரைக் காண மார்த்தாண்டம் வரை சென்றிருந்தோம். அவரது வீட்டுக்கு போன பின், அவரது குடும்பத்தார்களை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக தோன்றியது. அவர்கள் “அம்மா” இல்லாமல் அனைவரும் ஒரு கையை இழந்தது போல, மிகவும் ஒடிந்து போய் காணப்பட்டனர். அவர்களை பார்க்கும் போது இரண்டு நாட்கள் அழுது விட்டு மூன்றாம் நாள் இயல்பாக அவரவர் வேலைகளை பார்க்கப் போய் விடுவர் என்று தோன்றவில்லை. அவரது “அம்மா” விட்டு விட்டு போன நினைவுகள் அவ்வளவு வலிமையானது.
சரியாக அன்றுதான், சொல்நிலத்தின் முதல் கவிதையை வாசிக்கத் தொடங்கிருந்தேன். அவரது அம்மாவின் இறப்புச் செய்தியை கேட்டதும் நினைவில் வந்தது, “கருச்சொல்” கவிதைதான்.

தமிழ்ச்சமூகத்தில், எந்தவொரு நிகழ்வைத் தொடங்கினாலும் மங்களகரமாக, தெய்வங்களையோ இயற்கையையோ தொழுது ஆரம்பிக்கும் வழக்கம் நீண்ட காலமாக உண்டு. அது போலத்தான், “சொல்நிலம்” கவிதை தொகுப்பும். இங்கும் மகாராசன் அவர்கள் அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஒரு நிலத்தை குறித்து, அதன் வலிகளை குறித்து எழுதி விடுவதோ, அல்லது பாடிவிடுவதோ அவ்வளவு எளிதானது அல்ல. அது அந்த நிலத்தின் வலிகளை முழுதும் இயல்பாகவே உணர்ந்தாலொழிய, அவ்வளவு சுலபமாக செய்து விட முடியாது. நாம் விழுந்த இடமாகிய ஈழத்தில், நடந்த இன அழிப்பிற்கு மௌன சாட்சிகளாக இருந்த நம்மை நோக்கி கேள்விகேட்கும் “இனம் அழுத நிலம்”மும், இங்கிருந்து பறந்து போன குருவிகள் மீண்டு மீண்டும் வரும் என ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றை முன்வைக்கும் “ஈழப்பனையும் குருவிகளும்” ஆகிய கவிதைகள் புத்தன் பெயரால், அங்கு நடந்த படுகொலைகளின் பெரும்துயரை நினைவுபடுத்தி செல்கையில், நம்மை ஒரு நிமிடம் இருத்தி சிந்திக்க வைக்கிறது.

அதே போன்ற படுகொலைகள் நெய்தல் நிலத்திலும் நடந்தேறியது. ஆனால் இந்த முறை மனித மிருகங்களால் அல்லாமல், ஒப்பிட முடியாத இயற்கையின் கரங்களால். நம்மால் படைக்கப்பட்ட இவர்களே இப்படி ஒருவருக்கொருவரை அழித்தொழிக்கும் போது, நாமும் ஏன் அமைதியாக இருக்க வேண்டும், என்று இயற்கை நினைத்ததோ என்னவோ, ஆழியால், அது சூழ் உலகை அழித்து குதியாட்டம் போட்டது. “ஆழி முகம்” கவிதையும் “அலை நிலத்து அழுகை” கவிதையும் அதையே கூறிச் செல்கின்றன.

இப்போது மருத நிலத்து துயரம். இன்று கதிராமங்கலம், நெடுவாசல், தஞ்சை போன்ற நிலங்களில் அரசின் அராஜகத்தால் அழுது புலம்பும் மக்களின் வலியை “நிலப்படுகொலை” வழியும், நீங்கள் பசியால் அழுது கொண்டிருந்தாலும் என்னை உழுது கொண்டு இருங்கள் என நம் காலில் விழுந்து கெஞ்சும் நிலத்தின் அவலத்தை “துயர் படலம்” வழியும், ஆறுகளெல்லாம் வற்றிப்போய், குலங்களெல்லாம் சீமைகருவேலமரங்கள் முளைத்து, கலப்பையெல்லாம் கழுமரமாய், வயிரெல்லாம் பத்திக்கிட்டு எறுஞ்சாலும் மண்ணை வாரி தூத்தி போகவும் மனசில்லேயே என அவர்கள் கெஞ்சுவது நமது காதிலும் விழத்தான் செய்கிறது “கழு நிலம்” வழியாக.

தம் இனத்திற்காக சமீபத்தில் தீக்கிரையான விக்னேசு போன்றோர்களை, உசுப்பேற்றி, உணரவேற்றி செய்ய வைத்தார்கள் என எள்ளி நகையாடும் வாய்கள், களம் கண்டு குரல் கொடுத்திருந்தால் அவர்கள் தீக்கிரையாகாமல் இருந்திருப்பார்கள் என “அறத்தீ மனிதர்கள்” கூறும் அரசியல் நூற்றுக்கு நூறு உண்மையே.

சுவாதி கொலை வழக்கில் மறைந்திருக்கும் சாதி, அதிகார, பூநூல் அரசியலை பேசி…..
இறுதியாக இராம்குமாரை கொலை செய்ததும், ஆம், “இதுவும் ஒரு ஆணவப் படுகொலை” தான்.

மிகப்பெரிய கேலிக்கூத்தான, கருப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், எளியவர்கள் படும் பாட்டை அவர்களின் நிலத்தின் வழியாகவே சொல்லுகிறது, “செல்லாக் காசுகளின் ஒப்பாரி”.

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்தும் வலி நிறைந்த நிலத்தின் வலியை, அந்த நிலத்தில், பால்ய கால வாழ்வின் நினைவுகளை அசைபோட்டு, அந்த வாழ்வே வாழ்வு என, இப்போது நாம் வாழும் நகர வாழ்க்கையை கண்டு நம்மை எள்ளி நகையாடுவதாய் அமைந்துள்ளது.

“நனவிலும் கனவிலும்
பாடாய்ப் படுத்தும்
நினைவுகள்,
இப்படியான
கவிதைகளில் தானே
செழித்து நிற்கின்றன.” போன்ற வரிகளும்,

“கார்காலத்துச் சொற்கள்
இப்போதெல்லாம்
காய்ந்தே தான் கிடக்கின்றன.” போன்ற வரிகளுமே அதற்கு சான்று.

என்னய்யா இது? கவிதை நூல் என்று கூறிவிட்டு வெறும் வன்முறைகளையும் இழந்த காலங்களையும், கொலைகளையும் மட்டுமே சொல்லி இருக்கின்றீர்களே? உங்கள் கவிதையில் சிரிப்பே இல்லையா? மகிழ்ச்சியான நிலமே பாடப்படவில்லையா?

ஏன் இல்லை? இருக்கே. மகிழ்ச்சியான, பச்சை பசேலென இருக்கும், எப்போதும், சிரித்துக் கொண்டிருக்கும் நிலமும் இங்கு உண்டு. அந்த நிலம்தான் “மனிதனின் காலடி படாத நிலம்.” மேலும் இங்கு காதல் கவிதைகளும் உண்டு. அவையும் நிலத்தோடு தொடர்புடையவைகளாகவே இங்கு பாடப்பட்டுள்ளன.

வெறும் அழகியலை மட்டும் பாடுவதோ, எழுதுவதோ மிக எளிதாக, யார் வேண்டுமானாலும் செய்து விடலாம். அவை அழகானவை மட்டுமே. ஆனால் இது போன்ற, நிலத்தின் அரசியல் கலந்த கவிதைகள், படைப்புகள் மட்டும்தான் இப்போது மட்டுமல்ல எப்போதும் ஆரோகியமானவை.

இந்த நூல் இன்னும் சிறிது நாள் கழித்து வெளி வந்திருந்தால், அதில் கேரள படுகொலையும், விழுப்புரம் படுகொலையும், சிரிய படுகொலைகளும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஏனென்றால், தமிழர்களாகிய எங்கள் ஓலங்கள் மற்றவர்கள் காதில் விழுகிறதோ இல்லையோ, மற்றவர்களின் அவலக் குரல்கள் தமிழர்களாகிய எங்கள் காதுகளில்  விழுந்து கொண்டேதான் இருக்கும். நாங்கள் எப்போதும் அதற்காக செவி கொடுப்போம்…

#மகாராசன் அவர்களுக்கு வாழ்த்துகள்..

அன்புடன் பிரபாகரன்.

வெள்ளி, 2 மார்ச், 2018

பசிக் கண்கள்.


கையூண்டு பிடிமண்கூட
அவனுக்குச் சொந்தமில்லாமல்,
காடுகள் மேவிய நிலத்தையெல்லாம்
பறித்துக் கொண்டு காட்டுமிராண்டியென
விரட்டி அடித்தார்கள்.

திருடியதாய்க்
குற்றம் சுமத்தியும்
கட்டி வைத்தும்
அடித்து வதைத்தும்
தோலோடு தோலாய்
ஒட்டிக் கிடந்த உயிரை
மனித வெறியர்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்ச்
சாகடித்த போதும்,

அவனது கண்கள்
உயிர்ப் பிச்சை
ஏதும் கேட்கவில்லை.
அரண்டு மிரண்டு
அழவுமில்லை.
அவமானத்தால் வெட்கித்
தலை குனியவுமில்லை.

அவனது கண்களில்
நிரம்பி வழிந்ததெல்லாம்
பசி வலி தான்.

வலிக்க வலிக்கச்
சாவைத் தந்த போதும்,
பசி நிரப்பிய
அவனது கண்கள்
மனித வெறியின் மீது
அன்பொளியைத்தான் பாய்ச்சியது.

உயிர் இரக்கம் காணாது
தவித்தலைகின்றன
அவனது கண்கள்.

குற்றவுணர்வில் 
சாகடிக்கின்றன,
மனம் பூராவும் நெம்பியிருக்கும் மதுவின் கண்கள்.

மல்லன் மல்லியின்
பைத்தியக்காரப் பிள்ளையாய்
பசியோடும் பட்டினியோடும்
உலவித் திரிந்த மது,
நினைவில் வாழ்கிற
மனிதத்தின் உருவாய்
ஆகி நிற்கிறான்.

இனவெறிப்
பலி பீடத்தின் மீதமர்ந்து,
உயிர்போகும் எனத் தெரிந்தும் வெள்ளந்திப் பார்வை கொண்டிருந்த
பாலச்சந்திரக் கண்களும்,
நுகர்வெறி பீடித்த
சமூகப் பீடத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
மதுவின் கண்களும்தான்
பயமறியாது நிலைகுத்தி நிற்கின்றன.

அவனது கண்களில்
இனத்தின் வலியும்,
இவனது கண்களில்
பசியின் வலியும்
நிலமெல்லாம் விதைக்கப்பட்டிருக்கிறது.

பசித்த கண்கள்
பழி தீர்க்கும்.

ஒரு நாள்
பசி ஆறும்.

வியாழன், 1 மார்ச், 2018

சொல் நிலம் : சமரசமற்ற நேரடித் தாக்குதல் : - கதிர் மாயா கண்ணன்


சொல் நிலம்: சமரசமற்ற நேரடித் தாக்குதல்; தாக்கப்பட்டது நானும் தான். முனைவர் ஏர் மகாராசன் தனது 'சொல் நிலம்' கவிதை நூலை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். மஞ்சள் நிற முன் பக்க அட்டையில், சின்னப் பறவை ஓர் கிளையில் அமர்ந்திருக்கும் முகப்பு பக்கத்தை மேலோட்டமாய் பார்த்தபோது, நிலத்தைப் பற்றி சொல்லி இருக்கலாம் என்ற எண்ணத்தில் உட்புகுந்தேன். இந்த மண்ணில் என்ன நடந்தது? என்னவெல்லாம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது? என்பதை நியாயத்தின் பக்கம் நின்று அநியாயத்தை போட்டுத் தாக்கி உள்ளார்.
பத்திரப்படுத்த வேண்டிய கவிதைகளை, வரிகளை, வார்த்தைகளை கொடுத்துள்ளார். சொல்வதை துணிந்து சொல்வதோடு, சமரசமற்ற சொற்களை பயன்படுத்தி இருப்பது கவிதையின் வலி(மை)யை கூட்டுகிறது. சமூக அவலங்களை, அநீதிகளுக்கு எதிராய் சமரசமற்ற நேரடித் தாக்குதல் தொடுக்கின்றன கவிதைகள்.

''எப்போதோ
வீழ்ந்திருந்தாலும்
மேகத்தின்
உயிர்த் துளி குடித்து
மீண்டெழுகின்றன
புதைந்திருந்த விதைகள்''

-என ஆயுட்காலம் சொல்வதாகட்டும்

''நம்மின்
காலடி படாத
நிலமெங்கும்
பச்சைப் பசும் பசேல்.

மனித நிழல் போர்த்திய
நாடு தான்
வெயிலில்
வெந்து சாகிறது''

-என நிழல் வனம் பேசுவதாகட்டும்

''அழுது கொண்டிருந்தாலும்
உழுதுகொண்டே இருவென்று
காலில் விழுந்து கிடக்கிறது
நிலம்''

-என நிலத்தின் துயர்ப் படலம் பாடுவதாகட்டும், நிலத்தின் மீதான காதலும், மண் மீதான வன்முறைக்கு எதிரான சினமும் அப்பட்டமாய் வெளிப்படுகிறது.

சாதி, மத பேதமின்றி சுருட்டிச் சென்ற சுனாமி, சாதிய ஆதிக்கத்தால் வெண்மணியில் சாம்பலாகிப் போன செந்நெல் மனிதர்கள், பணம் மதிப்பிழப்பால் நேர்ந்த துயரங்கள், ஆணவப்படுகொலை, ஈழப் படுகொலை, போராளிகளை ஒடுக்க பயன்படுத்தப்படும் குண்டர் சட்டம் என சமரசமற்ற தாக்குதலை தொடுக்கிறார். ஒத்த கருத்து, ஒத்த சிந்தனையாளர்களிடையே இக்கவிதைகள் மனக் கிளர்ச்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
இராம்குமார் என்ற ஏழை இளைஞனை இந்த அரசு எப்படி படுகொலை செய்தது என்பதை, இதுவும் ஓர் ஆணவப் படுகொலையென உரைக்கிறது கவிதை. சுவாதி படுகொலை, இராம்குமார் மரணத்தை சிலம்பதிகாரத்தோடு ஒப்பிட்டு வரையப்பட்ட கவிதை அது.

''ஆணவப் படுகொலைகளுக்குக்
காரணங்கள் தேவையில்லை.
சாமானியராய் இருந்தாலே
போதுமானது.
...............
...............
இராம்குமார்கள் சாகடிக்கப்படும்
நாடுதானே இது!''

-என்று சொல்லும் போது நீதி யாருக்கு கிடைக்கும்? யாருக்கெல்லாம் மறுக்கப்படும்? என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.

''பல்லக்குத் தூக்கியும்
கூன் ஒடியப்
பணிந்து வணங்கியும்
பதவிகளும் பணங்காசும்
குவித்திருக்கலாம்''

-என அறத்தீ மனிதர்களில், அறமற்ற மங்குனிகளையும் வசைபாடியுள்ளார். "பூநூலால் கோர்க்கப்பட்ட இந்திய வரைபடச் சாயங்களை அவ்வப்போது ஆறுகள் தான் அழிக்கின்றன" என நுட்பமான அரசியலை ஆழமாய், அழுத்தமாய் பதிவு செய்கிறார்.
மண்ணையும், மக்களையும் நேசிக்காமல் வடிக்கும் கவிதைகள் இனிமையை கொடுக்கலாம். ஆனால், வஞ்சிக்கப்படும் மனிதர்களையும், இனத்தின் அடையாளங்களையும் பதிவிடும்போது இனிமையை தேட முடியாது. பூந்தோட்டத்தில் வேண்டும் என்றால், மனம் குளிரும் காட்சிகள் கிடைக்கும். போர்க்களத்தில் இரத்தமும், சதைப் பிண்டங்களுமாய் இருதயம் பிளக்கும் காட்சிகளே விழிஎட்டும் வரை விரிந்து கிடக்கும். இந்நூல் போர்க்களத்தைக் விவரிப்பது. மண்ணோடும், மனிதர்களோடும், சமூக அவலங்களோடும் நிகழும் போரைப் பற்றியது. நமக்கு எதிராய் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரைப் பற்றிய நூல்.
நூலை வாசித்து முடித்தபின்பு, மீண்டும் அட்டையைப் பார்க்கும் போது, பறவை முகத்தின் படிந்த சோக ரேகைகள் மட்டுமே நேரடியாய் புலப்படுகிறது. இந்த சோகம் நமக்கும் சொந்தமானது. நூலும் அப்படியே!

87 கவிதைகளை கொண்ட இந்த நூலின் முதல் கவிதையின் முதல் வரி, 'அன்பின் உயிர் முடிச்சை'. கடைசி வார்த்தை 'மண்ணுக்குள்'. அன்பில் தொடங்கி மண்ணுக்குள் விதைத்துள்ளார். விதைகள் விருட்சமாகும். மேகத்தின் உயிர்த்துளி குடிக்காத விதைகளும், நம் இன மக்களின் இரத்தத் துளிகளில் குளித்து மீண்டெழும். அதன் வேர்களுக்கு இதுபோன்ற கவிதை நூல்கள் இரத்தம் பாய்ச்சிக் கொண்டே இருக்கும்.

பேரன்புடன்
கதிர்மாயா கண்ணன்

01-03-2018

சனி, 24 பிப்ரவரி, 2018

சோடை போகாத சொல் நிலம் :- பாவலர் வையவன்.


அண்மையில் தனது ஆறாவது படைப்பான ‘சொல் நிலம்’ கவிதைத் தொகுப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார் தோழர் ‘ஏர்’ மகாராசன். நானும் எனது ஆறாவது தொகுப்பான ‘சொல் வெளி’ யை அனுப்பினேன். இருவருமே ‘சொல்’ குறித்து தலைப்பிட்டுருப்பதை ஒருகணம் எண்ணிப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இன்னும் கூட வேறு எவரேனும் வெளியிட்ட நூல்களின் தலைப்பில் ‘சொல்’ இருக்கக் கூடும். சொல் குறித்து சொல்லவேண்டியது நிறைய இருக்கிறது. நிலத்துக்காகப் போராடும் அதே வேலையில் நாம் நம் சொற்களுக்காகவும் போராடவேண்டிய தேவையிருக்கிறது என்பது என் கருத்து. எனது ‘சொல் வெளி’ சொல்லின் பரப்பைச் சொல்கிறது. மகாராசனின் ‘சொல் நிலம்’ சொல்லின் பொருண்மையைப் பேசுகிறது.

 பொதுவாக கதையோ கவிதையோ கொண்டு வெளிவரும் நூல்கள் அதன் உள் தலைப்புகளுள் ஏதேனும்  ஒன்றை நூலின் தலைப்பாகக் கொண்டு இலங்கும். இத்தொகுப்பில் ஐம்பத்தியிரண்டு தலைப்பில் கவிதைகள் உள்ளன. ஆனால், ‘சொல் நிலம்’ என்ற தலைப்பில் தனியாகக் கவிதை இல்லை. ஆனால் சொல்லைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் பல்வேறு கவிதைகள் மதுரையின் மண்மணத்தோடு பேசுகின்றன. அத்தனை கவிதைகளுமே தீவிர அரசியலை, பண்பாட்டைப் பேசுகின்றன.

 உலகச் சிக்கல்கள் எல்லவற்றையும் சுருக்கி ஒற்றைச்சொல்லில் சொல்ல வேண்டுமானால் “ஏற்றதாழ்வு”தான் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். எப்போதும் வடக்கு நோக்கியே நிற்கும் காந்த முள்ளைப் போலவே, எப்போதும் வசதியானவர்கள் பக்கமே நிற்கிறது ‘ஆட்சி முள்’. எனவே,
 “எல்லா நாளும்
 பொழுதுகள் விடிந்தாலும்
 இல்லாதவர் வாழ்வையே
 கவ்விக்கொள்கிறது
 இருள்”
எனப் பேசும் இவர்கவிதை, மரநிழல் போர்த்திய காட்டின் குளுமையையும் மனித நிழல் போர்த்திய நாட்டின் வெம்மையையும் ஒப்பிட்டுக் காட்டி மலடு தட்டிப்போன வாழ்க்கையை மல்லாக்காகப் புரட்டிக் காட்டுகிறது.
 “நெல்லை விதைத்தவர்கள்
 சொல்லை விதைத்தார்கள்
 கூடவே தன்மானம் சேர்த்து”
என்னும் ‘செந்நெல் மனிதர்கள்’ கவிதை வெண்மணியின் வேதனையை வலியோடு விவரிக்கிறது. நிலம், உழைப்பு, கூலி என்பன மார்க்சியத்தின் அடிப்படைக் கூறுகள். ஆனால் இவையெல்லாம் மக்களிடமிருந்து எவ்வெவ்வழிகளில் சூரையாடப்பட்டன... படுகின்றன என்பதைப் பேசத்தான் கவிதைகளும் மற்ற படைப்புகளும். அதைத் தொகுப்பு முழுக்க நிறைவாகவே செய்திருக்கிறார் மகாராசன். அப்படி எழுதாத சொற்களை
 “கவித்தனம் காட்டவே
 எழுதிஎழுதித் தீர்க்கின்றன
 சொற்கள்”
எனச் சாடுகிறார். அண்மையில் சமூகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளுள் ஒன்று ஆணவப் படுகொலை. அதில் இவரது பார்வை சற்று விரிகிறது.
 “அதிகாரத்தின் ஆணவத்தால்
 கொல்லப்பட்டான் கோவலன்
 கள்வன் அவனில்லை என
 வழக்குரைத்து
 அதிகாரத்தைச் சாகடித்தாள்
 கண்ணகி...

 “ஆணவப் படுகொலைகளுக்கு
 காரணங்கள் தேவையில்லை
 சாமானியராய் இருத்தலே
 போதுமானது”
மகாராசனின் இந்நூல் மிகவும் கனமானது; அடர்த்தியானது; வலியானது. இதில் எல்லா கவிதைகளையுமே கொண்டாடவேண்டியிருக்கிறது. அதற்கு இவ்விடம் போதுமானதாயில்லை. சோடை போகாத சொல் நிலம் இது. இருப்பினும் இழப்பின் தவிப்போடு முடிகிறது நூல்
 “உழைப்புச் சொற்களால்
 நிலத்தை எழுதிப்போன
 அப்பனும் ஆத்தாவும்
 நெடும்பனைக்காடு நினைத்தே
 தவித்துக் கிடப்பார்கள்
 மண்ணுக்குள்”

 ஒரு சிறந்த நூலை அறிமுகம் செய்துவைக்க என்னுடைய இந்த சொற்கள் போதாது. அப்படித்தான் நான் உணர்கிறேன். வாங்கிப் படிக்கும்போதுதான் இதன் வன்மையை உணர முடியும். சிறந்த படைப்பு கொடுத்த... அதை எனக்கும் படிக்கக் கொடுத்த “ஏர்” மகாராசனுக்கு வாழ்த்துகள்!

               நூல்பெற: ‘ஏர்’, மகாராசன், 28.காந்தி நகர், செயமங்கலம், பெரியகுளம், 625 603 .
பேச: 94436 76082

புதன், 21 பிப்ரவரி, 2018

பள்ளுப்பாட்டின் குறியீட்டு அரசியல் : கருத்துரையும் பதிலுரையும்.

 நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூலைக் குறித்துத் தோழர் பாவெல் பாரதி பள்ளு இலக்கியத்தின் குறியீட்டு அரசியல் கட்டுரையை எழுதி இருந்தார். அந்தக் கட்டுரை குறித்துத் தோழர் சிறீரசா அவர்கள் கருத்துரை பதிந்திருந்தார். இதற்கு தோழர் பாவெல் பாரதி பதிலுரை அளித்துள்ளார். அவை வருமாறு.

சிறீரசா கருத்துரை:

 பள்ளு இலக்கியம் தோன்றிய களம் பற்றிய ஆய்வாகவும், அதில் வரும் சித்தரிப்புகள் பற்றிய புறநிலைப் பார்வையுடனான ஆய்வாகவும் அதனை வளர்த்தெடுத்தலே நம் காலத்தின் ஆய்வாளர்கள் செய்ய வேண்டியது. மாறாக, அந்தப் பனுவலுக்குள்ளே மட்டும் நின்று மல்லடிக்கும் வகை ஆய்வுகள் மார்க்சிய ஆய்வு முறையியலை வளர்ப்பதில்லை. தமிழகத்தின் நில அமைப்பு, அவை உடைமை கொள்ளப்பட்ட முறைகள், உற்பத்தி முறைகள், உற்பத்தியை அபகரிக்கும் முறைகள், உற்பத்திப் பங்கீடு முறைகள் பற்றிய எந்தவகையான புறநிலை ஆய்வுகளுமே இதுகாறும் செய்யப்படவில்லை. மாறாக, பனுவல்கள் சார்ந்த ஆய்வுகளைப் பனுவல்களுக்குள்ளேயே மட்டும் நின்று நிகழ்த்துவனவாகவே உள்ளன. சைவம், வைணவம் என்பதே கூட குறியீட்டு வகை மதங்கள்தான். சைவத்துக்கும் வைணவத்துக்குமான முரண் என்பதும குறியீட்டுவகை முரண்தான். அடிப்படை முரண்பாடாக வரலாற்றில் முதன் முதலில் எழுந்த பால் முரண்பாட்டின் குறியியலில் இருந்து அவை தோற்றம் கொள்கின்றன. பள்ளு இலக்கியத்தில் சொல்லப்படும் சைவ வைணவக் கூறுகளின் புறநிலைகள் 4, 5 ஆம் நூற்றாண்டுகளில் பக்தி இயக்கத்தின் தோற்றம் கொள்கின்றன. நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளோடு, அவற்றில் பால் சார்ந்த ஆண், பெண் குறியீட்டு ஆதி முரண் சார்ந்த கண்ணோட்டங்களும் முரண்களை உருவாக்குகின்றன. வைணவம் பெண் சார்ந்த குறியீடு என்றால், சைவம் ஆண் சார்ந்த குறியீடாக உள்ளது. அது மாமன் மச்சான் உறவாகிற குறியீடும் அதிலிருந்தே தோற்றம் கொள்கிறது. இடைக்காலத்தில் சமுகத்தின் பெரும்பிளவு இரு மதங்கள் சார்ந்த நிலவுடைமைப் பிரிவுகளாகத் தோற்றம் கொள்கிறபோது, அரசு முறையின் ஆதிக்கத்தில் அடங்கிப்போன அத்தனை உப கூறுகளும், குல முறைகளும், சைவ வைணவச் சார்பெடுக்கும் வகையில் தகவமைக்கப்பட்டன, அல்லது தகவமைந்து கொண்டன. நாட்டார் தெய்வங்கள், குல முறைக் கடவுள்கள் இத்தகைய தகவமைப்புக்குள்ளாயின. அவை நாட்டார் மரபியலோடு, சைவ, வைணவ அடையாளங்களையும் தரித்துக் கொண்டன. ஏற்கெனவே இங்கிருந்த கருப்பு, கிருஷ்ணன், விஷ்ணுவோடு இணக்கம் கண்டார், அல்லது வேஷங்கட்டப்பட்டார். அதுபோலவே தாய்த் தெய்வங்கள், பிற தெய்வங்கள் சிவன், ஈஸ்வரி போன்ற கடவுள் முறைகளோடு கணக்கில் சேர்க்கப்பட்டனர். நாட்டார் தெய்வ வழிபாடுகள் முழுக்க இன்றைக்கு இத்தகைய கலப்பு இன வழிபாடாகவே உள்ளன. அவை விநோதக் கலவைகளாக உள்ளன. அதுபோலவே பள்ளு இலக்கியத்தின் மாந்தர்களை வெறும் உழைப்பாளர் என்று சொல்வது சரியானதல்ல, அவர்கள் விவசாய உழைப்பாளர்கள், உழைப்பாளர் என்றார் அது நவீனத் தொழில் முறை சார்ந்த உழைப்பாளர்களைப் பொதுவில் குறிப்பதாக உள்ளன. விவசாயத் தொழிலாளர்களா? அல்லது விவசாயக் கூலிகளா என்பது போன்ற பதங்களை இலக்கியத்தின் வருணனைகள் மூலம் தெளிவுபடுத்திப் பயன்படுத்துவதே சிறந்தது. அதுபோலவே பிரித்தாளுதல் என்கிறது நவீன உத்தியல்ல, அவை பழஞ்சமூகத்திலிருந்து நவீன சமூகம் தனதாக்கிக் கொண்டவை. பள்ளு இலக்கியங்கள் இடைக்காலத் தமிழகத்தின் நிலவுடமைச் சமுக அமைப்பின் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள், உற்பத்திப் பொருட்கள், உற்பத்திப் பங்கீடு, உற்பத்திப் பண்பாடு, பண்பாட்டு உற்பத்தி போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய இலக்கியப் பிரதி. அதிலிருந்து, வானமாமாலை விட்ட இடத்திலிருந்து, நொபுரு கரோஷிமா போன்றவர்கள் தொட்டுத் தடவிச் சென்ற இடத்திலிருந்து, தமிழச் சமூக அமைப்பு பற்றிய புறநிலை ஆய்வைத் தொடர வேண்டிய கடப்பாடு மார்க்சிய ஆய்வாளர்களுக்கு உண்டு. அவர்களோடு நின்றால் கிட்டத்தட்ட ஆய்வுலகம் 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதென்றே பொருள்...


பாவெல் பாரதி பதிலுரை:

மார்க்சிய ஆய்வு முறையியலை வளர்க்க வேண்டிய அல்லது தேக்கத்தைப் போக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிற அக்கறை மிக்க பின்னூட்டம்.

ஆய்வு வளர்ச்சிக்கேற்ப பள்ளு பற்றிய ஆய்வு வளர்த்தெடுக்கப்படவில்லை. தமிழ் ஆய்வுச் சூழலில் அது நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில்தான் இக்கட்டுரைகளை மகாராசன் கொண்டுவந்துள்ளார்.

இன்று 50 ஆண்டுகளுக்கு முந்திய நொபுரு கரோஷிமாவே கூட இன்னும் வந்து சேர்ந்தபாடில்லை.  தற்பொழுதுதான் தமிழ் வாசகர்களுக்கு வந்து சேர்ந்துகொண்டிருக்கிறார். இன்னொரு கரோஷிமாவும் வானமாமலையும் உருவாகவும் இல்லை. என்பதுதான் தமிழ் ஆய்வுச் சூழல்.

சைவ, வைணவக் குறியீட்டம்சம் குறித்த உங்கள்  கருத்து மிக முக்கியமானது.

இந்தக்கட்டுரை நா.வா.அவர்களின் ஏழு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை  அறிமுகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டதே!. கூடுதலாக பள்ளுப்பாட்டில் வரும் இரண்டு கூறுகளை மட்டும் எடுத்துக் கொண்டு  குறியீட்டுத் தன்மை எப்படி பள்ளுவில் இயக்கம் பெற்று அரசியலைப் பேசுகிறது என்று தொட்டுக்காட்டும் முயற்சிதான்.

பள்ளு இலக்கியம் என்ற வயல் சார் உற்பத்திபற்றிப் பேசும் பொழுது பயன்படுத்தப்படுகிற  உழைப்பாளர் என்ற பதம் பொருட்பிழையைக் கொடுத்து விடாது என்றே கருதுகிறேன். விரிவான கட்டுரையில் உழைப்பின் வகைமை குறித்தே தனித்து எழுதலாம்.

//திசை திருப்புவதுமாகச் செய்து கொண்டிருக்கிற நவீன நிர்வாகத் தந்திரத்தைத்தான் பள்ளு இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது.//

என்ற கருத்து பிரித்தாளுதல் நவீன உக்தியல்ல பழம் உக்தி என்ற உங்கள் பார்வையோடு  உடன் படுவதுதானே! தோழர்.

//தமிழகத்தின் நில அமைப்பு, அவை உடைமை கொள்ளப்பட்ட முறைகள், உற்பத்தி முறைகள், உற்பத்தியை அபகரிக்கும் முறைகள், உற்பத்திப் பங்கீடு முறைகள் பற்றிய எந்தவகையான புறநிலை ஆய்வுகளுமே இதுகாறும் செய்யப்படவில்லை.//

உண்மைதான். இதனை இடதுசாரி ஆய்வாளர்கள்தான் செய்யமுடியும்.

எனக்குத் தெரிந்து கிராமப்புறத்தில் நில உடைமை (Land holding) அதன் சமூகப் பின்னணி, கிராமப்புற உற்பத்தி உறவு நில உடைமை எப்படி அது கைமாறுகிறது  என்பது குறித்து 1977 ல் தமிழகத்தில் தேனி மாவட்டம் கோகிலாபுரம் என்ற ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து  ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாய்வைச் செய்தவர்கள் தற்போது கேரளாவின் திட்ட கமிசன் துணைத்தலைவராக உள்ள பொருளாதார வல்லுநர் தோழர் V.K.ராமச்சந்திரன், மதுரா சுவாமிநாதன்.(D/0 M.S.சுவாமிநாதன்- தற்போது V.K.ராமச்சந்திரன் மனைவி ) என்.ராம் உள்ளிட்ட அன்றைய மாணவர் குழு.

மீண்டும் 1999 ல்  IGDR மும்பை ,கொல்கத்தா ISI  நிறுவனம் ஆகிய ஆய்வு நிறுவனங்களில் அப்பொழுது முக்கியப் பொறுப்பில் இருந்த வி.கே.ராமச்சந்திரன். அவரது ஆய்வு மாணவர்களைக் கொண்டு Reasearch for Agrarian studies என்ற ஆய்வைச் செய்தார்.
அம்மாணவர்கள் பலர் .

நானும் என் சகோதரர் வழக்கறிஞர் பாலதண்டாயுதமும் அவர்களோடு 1999 ல் இரண்டுமாத காலம் அவ்வாய்வில் கலந்து கொண்டோம்.

எனது சகோதரர் ஜார்கண்ட், ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா, மேற்கு வங்காளத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளிலும் அவர்களோடு கலந்து கொண்டார். இந்திய அளவில் கிராமப் புறச் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் மாதிரித் தரவாக V.K.ராமச்சந்திரன் அவர்கள் அதனை வளர்த்தார்.

இப்படியான ஆய்வுகளின் அடிப்படையை வரலாறு, இலக்கியங்களோடும்  ஒப்பிட்டு விரிக்க வேண்டியுள்ளது.
மொத்த பள்ளு இலக்கியத்தையும் தற்கால பல்துறை  ஆய்வுத் தரவுகளையும்  உள்வாங்கிக் கொண்டு மார்க்சிய நோக்கில் மறு ஆய்வுக்கு உட்படுத்தும் பணியைச் செய்யவேண்டி உள்ளது.

ஆரோக்கியமான பின்னூட்டத்திற்கு
நன்றி தோழர்.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

நிலத்தை உடுத்தியிருக்கும் நெல்லின் மணம் தான் சொல் நிலம் :- கூடல் தாரிக்

சொல் நிலம் -  மகாராசனின் முதற்கவிதை நூல்.முனைவர் பட்டம் பெற்ற ஒர்  உழவனின் நூலில் நிலம் இழத்தலின் வலியைத்தவிர வேறு பெரிதான வலி எதுவும் இருந்துவிடப்போகின்றது என்று சொல்ல இயலாது .அதனை விடவும் பெரிதாக வேறு எந்த வலி இருந்து விடப்போகின்றது.
   வயல் குறித்தும், உழவு குறித்தும்,விவசாயம் குறித்தும் கொந்தளிப்பான தருணத்தில் கவிதை எழுதிவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பும் மனநிலைக்கு அப்பாற்பட்டது,ஏர்பிடித்து உழுதவனின் கரங்களில் இருந்து வெளியாகும் வார்த்தைகள்.
    நிலத்தோடு தனது வாழ்வியலைப்பிணைத்துக்கொண்ட மனிதனின் மனநிலையில் கவிதைகள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன.எந்த விதத்தாக்கமும் இல்லாமல் தனித்துவமான மொழிநடை கவிஞனின் தேர்ந்த ஆற்றலைப்புலப்படுத்துகின்றது.சுனாமியைக்குறித்தக்கவிதைக்கு அலை நிலம் என்று தலைப்பிட்டிருப்பது அனைத்தையும் நிலமாகவேப்பார்க்கும் மனநிலையைப்புலப்படுத்துகின்றது.நிலத்திலேயே தன் வாழ்வைத்தொலைத்தவனின் காதலும் தனிமையும் முளைப்பதுவும் பூப்பதுவுமான மானாவாரிக்காடு நீ /மழைக்கடுத்துச்செழிக்கும் எனதூர் மண்போல/ பாழ் நிலம் நினைத்துத்தவித்துக்கிடக்கும் கலப்பை போல் தனித்துப்போனது யாவும் / என்று நிலத்தோடு தொடர்புடையதாக வரிகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன.
     அன்றாட வாழ்வில் எளிமையாகப்பயன்படுத்தி விட்டு நகர்ந்து செல்லும் சொல்லுக்கும் அதனை வாழ்வியல் சூழலுக்குள் உட்புகுத்தி வெளிப்படுத்துபவனின் மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை சற்றும் வலி குறையாமல் பதித்துவிட்டுச்செல்கின்றன பல கவிதைகள்.விவசாயத்தைத்தவிர வேறெந்த தொழிலும் அறியாதவனிடம் அழுது கொண்டிருந்தாலும் /உழுது கொண்டே இருந்தாலும் இருவென்று /காலில் விழுந்து கிடக்கிறது நிலம்/.
     மண்ணை வாரி தூத்திப்போடவும் மனசில்லயே  மக்கா/ என்று கதறுபவனின் வார்த்தைகள் காற்றில் கலந்து கண்ணீரை சுவாசிக்க வைக்கின்றன.
     உடலில் மழை பூத்து /ஒழுக ஒழுக உழைப்பைக்கற்பதற்கும்/உழவு மழையில் நனைவதற்கும், உவர் நிலச்சிறுக்கியின்  செல்லச்சிணுங்கல்களை இரசிப்பதற்கும், களையெடுத்துக்காய்த்துப்போன கைகளால் கோதி விடும் கருப்பிகளின் வியர்வை நாற்றத்தை நுகர்வதற்கும் நடை பயிற்சிக்காக வரப்பில் நடப்பவனால் இயலாது நிலத்தவனால் தான் வாய்க்கப்பெறும். ஆனாலும் கவிஞனின் வரிகள் அதன் வலியை வாசிப்பவனுக்கும் உணர்த்து விடுகின்றன.
     நிலத்தை ஆத்தாளாகவே வர்ணிக்கும் கவிஞனும் நெடும் பனைக்காடு நினைத்தே மண்ணுக்குள் தவித்துக்கிடக்கும் அப்பனும் ஆத்தாளும்,மண்ணின் அருவி போல /முண்டியடுத்துப்பூத்து /சட்டென மேலே பறந்து இறக்கை உதிரக/்கீழே விழுந்து /அம்மணமாய் ஊர்ந்து திரியும் ஈசல்களும் செங்காட்டின் புழுதியை கண்களுக்குள் அப்பிவிடுகின்றார்கள்.
      விவசாய நிலத்தை இழந்து கொண்டிருப்பவனின் மனநிலையில் நிலமிழந்த அகதியின் மனநிலையையும், வெண்மணியின் வெப்பத்தையும் இணைத்திருப்பது நிலம் வாழ்க்கைத்தேவைக்கான குறியீடாக பதிவு செய்யப்பட்டுள்ளது தொகுப்பின் கூடுதல் பலம்.
   காற்றசைப்புகளில் /உதிர்ந்து விழுகிற/பன்னீர்ப்பூக்கள்/முகம் சிரித்துச்/செந்தரையில் கிடப்பதைப்போல/கூட்டமாய்ச் சலசலத்து/குரல் சிந்திய கூட்டிசை/காற்றில் கரைந்து/செவியில் நுழைந்து/செல்லத் துள்ளலாய்க்/கண்ணில் மணக்கின்றன/பூனைக் குருவிகள்/என்கின்றது தொகுப்பின் ஒரு கவிதை.எனக்கென்னவோ இத்தொகுப்பினை வாசித்து முடித்தவுடன் நிலத்தை உடுத்தியிருக்கும் நெல்லின் மணத்தைத்தான் நுகரமுடிகின்றது.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

பள்ளுப்பாட்டின் குறியீட்டு அரசியல்: நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூல் குறித்த திறனாய்வு :- பாவெல் பாரதி.






ஏர் மகாராசன் தொகுத்து வெளிவந்துள்ள "நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி" நூல் இரண்டு விதத்தில் கவனம் பெறுகிறது. ஒன்று இது நா.வா அவர்களின் நூற்றாண்டை நினைவு கூறுமுகமாக வெளிவந்திருப்பது. இரண்டு, அடிப்படைவாத ஆதிக்கச் சுரண்டல்  சக்திகள் விளிம்பு நிலைச் சமூகங்களை விழுங்க எத்தனிக்கும் இச்சூழலில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வியலை அவர்களின் இலக்கியப் பதிவுகளை விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரலாக மாற்ற வேண்டிய தேவையை உணர்ந்து வினையாற்றியதற்காக!

தோழர் நா.வா அவர்கள் தமிழ்ச்சூழலில்  மார்க்சியத்தை ஆய்வு முறையியலாக ஆக்கியவர். செவ்வியல் இலக்கியங்களைத் தொகுத்த தமிழ்தாத்தா  உ.வே.சா.போல  நாட்டுப்புற இலக்கியங்களின் தந்தை என்று அறிஞர்களால் அழைக்கப்பட்டவர். தமிழக வரலாற்றை மக்கள் வரலாறாக எழுதுதல் என்ற  மாற்று வரலாற்றெழுதியல் கண்ணோட்டத்தை உருவாக்கியவர். தமிழகத்தில் செறிவான ஆய்வுப் பரம்பரையை உருவாக்கியவர். அவரின் நினைவை இந்நூற்றாண்டில் விதைத்த தோழர் மகாராசனும் ஆதி பதிப்பகமும்  பாராட்டுக்குரியவர்கள்.

நா.வா அவர்களால் 1956-57 காலத்தில் சரசுவதி இதழில் எழுதப்பட்ட  பள்ளுப்பாட்டு குறித்த ஏழுகட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
*பள்ளுப்பாட்டின் உள்ளடக்கம்;  *பள்ளுப்பாட்டின்தோற்றம்; *பள்ளுப்பாட்டு வளர்ச்சி; *பள்ளுப்பாட்டு மாறுதல்கள்; *பள்ளுப்பாட்டின் கதைப்போக்கு;
*பள்ளேசல்,
* பள்ளும் இணைவிழைச்சும் என்ற வரிசையில் அமைந்த  ஆய்வுக்கட்டுரைகள் இவை. இதில் முதலிரண்டு மற்றும் கடைசி ஆகிய மூன்று கட்டுரைகள் பள்ளுப்பாட்டு பற்றிய நல்ல அறிமுகத்தையும் அதன் தோற்றப் பின்னணியையும், இருபால் கவர்ச்சி இன்பங்குறித்தும் பேசுகின்றன.
அழகர் பெயரிலான கோயில் நிலத்தின் உழவு திணைக்களமே கதை நிகழிடம். 

மலைத்தோட்டத் தொழிலின் கங்காணியை 
( கண்காணி ) ஒத்த மருத நிலத்து பண்ணைக் கங்காணியான பண்ணைக்காரன், உழவின் ஆதாரமான குடிகளான பள்ளன், அவரின் இரண்டு மனைவிகளான மூத்த பள்ளி,  இளைய பள்ளி,  ஆகியோரே மையமான பாத்திரங்கள் . 

பண்ணையாரின் கொடுமைகளையும் , சுரண்டலையும் உழவுக்குடிகளின் பாடுகளையும், மனைவிகளின் முரண்களையும், சக்காளத்தி சண்டைகளையும்,   இளசுகளின் காதலையும், காமத்தையும், பண்ணைக்காரனின் இச்சையையும், பள்ளியர்களின் கிண்டலையும் பெருசுகளின் சில்மிசங்களையும், சேட்டைகளையும், அவற்றினூடாக அவர்களின் உயிர் நிலத்தோடு ஒட்டிக் கொள்வதற்காக  அடைந்து கொள்கிற சிற்சில இன்பங்களையும், துன்பங்களையும்  ஊடுதலையும் கூடுதலையும்  கொண்ட எதிர்பார்ப்பற்ற எளிய வாழ்க்கையை ஆடலுக்கேற்ற  இசைப்பாடலாக எளிய மொழியில் பாடுகிற பாடல்தான் பள்ளுப்பாட்டு.

உணவு உற்பத்தி காலம் தொட்டு உருவாகியிருக்கச் சாத்தியமுள்ள உழவுப் பாட்டின் தொடர்ச்சியாக பள்ளுப் பாட்டு இத்தகைய வடிவில் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கிறது. பள்ளுப்பாட்டின் தோற்றம் குறித்துக் கூறும் நா.வா. அவர்கள் "மன்னர்கள் ஆதரவு தமிழ்ப் புலவர்களுக்கு கிட்டாது போன பிறமொழி ஆட்சிக்காலமான நாயக்க,  கன்னட , மராத்தி , நவாப்  காலத்தில் மக்களின் இப்பாடல் வடிவம் செய்யுள் வழக்குப் பெற்றிருக்கும் என்று கருதுகிறார் .

அன்றைய புலவர்கள் ஆட்சியாளர்களைக் காணச் செல்லும் பொழுது அவர்கள் கண்டும் காணாமல் வேறுவேலை செய்வதுபோல்  பாவனை செய்து புலவர்களை அலட்சியம் செய்தது குறித்து பின் இடைக்காலத்து புலவர் இராமச்சந்திர கவிராயர் பாடிய தனிப்பாடல் ஒன்றை நா.வா.வின் கருத்தோடு இணைத்துப் பார்க்கும் பொழுது பாடலுக்கு கூடுதல் புரிதல் கிடைக்கிறது.

*வணக்கம்வரும் சிலநேரம்
*குமர கண்ட
வலிப்புவரும் சிலநேரம்
*வலியச் செய்யக்
கணக்குவரும் சிலநேரம்
*வேட்டை நாய்போல்
கடிக்கவரும் சிலநேரம்
*கயவர்க்கெல்லாம் இணக்கம் வரும்படி தமிழைப் பாடிப்பாடி எத்தனை நாள் திரிந்து திரிந்து உழல்வேன் ஐயா!
என்று புலவர்களின் நிலையை நொந்து இறைவனிடம் முறையிடும் வகையில் ராமச்சந்திர கவிராயர் பாடியிருப்பது தெரிகிறது.  பள்ளு உருவாகிய இதே காலகட்டத்தில்தான் மக்கள் இலக்கியங்களான குறவஞ்சியும், நொண்டி நாடகமும் தலையெடுத்துள்ளன.

மக்கள் செல்வாக்கு மிக்க பண்பாட்டு கலாச்சார அம்சங்களை ஆளும் வர்க்கம் உட்செறித்து  தமக்கானதாக மாற்றி தமது ஆளும் வர்க்கப் பாண்டின் உப கூறாக்கி தம் அடுக்கு வரிசைக் கூம்பில் ஓர் இடத்தை வழங்கி மேலாண்மை செய்யும் தந்திரத்தைக் காலம் முழுவதும் செய்து கொண்டுதான் இருக்கிறது. நமது நாட்டார் கடவுளர்  பலர் நிறுவன வைதீக , அவைதீக மதங்களின் பரிவாரங்களாக மாற்றப்பட்டது போல் பல கலை இலக்கிய வடிவங்களும் அப்படி உள்ளிழுக்கப் பட்டவைதான்.

மூன்று முதல் ஆறு வரையிலான நான்கு கட்டுரைகளில் இத்தகைய    அவதானிப்பு மிகமுக்கியமானது. மக்கள் கலையான முக்கூடற் பள்ளுவின் தாக்கம் பெற்று  ஆளும் வர்க்கத்தின் கருத்தியலை பள்ளு வடிவத்திற்குள் எப்படி திணிக்கிறது என்பதையும் ஒப்பிட்டு வர்க்கப்பார்வையில் விளக்கியிருப்பது சிறப்பு.

பள்ளுப்பாட்டு வடிவம் நாடகவடிவம் பெற்று  அதன் தாக்கம் தமிழகம் தாண்டியும்  யாழ்ப்பாணம் வரை பரவியுள்ளதோடு ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளுப்பாடல்கள் தோன்றியுள்ளன . பள்ளுப் பாட்டு வடிவம் மக்களிடத்தில் பெற்ற செல்வாக்கால் பல்வேறு நாட்டார் கோவில்களிலும் விழாக்களிலும் நிகழ்த்தப்படுகிற வடிவமாகியது. திருநெல்வேலிப் பகுதி வைணவக் கோயில்களில் உற்சவங்களின் போது கோயில் கணிகையர்களால் பள்ளுப்பாட்டு நடனம் ஆடும் வழக்கம் உருவாகிற அளவிற்குச் செல்வாக்கு செலுத்தியுள்ளது.  அதுமட்டுமல்ல ஸ்ரீரங்கம் கோயில்களில் இன்றும் பள்ளு உற்சவம் நடைபெறுகிறது என்றும் ஆனால் பாடல் வரிகள் மௌனிக்கப்பட்டு வெறும் தாள இசைக்கேற்ப அரையர் ஒருவர் ஆடிவருகிற அளவில் உற்சவம் மாற்றப்பட்டிருக்கிறது என்கிறார் நா.வா.

முக்கூடற்பள்ளுவும் குருகூர்ப் பள்ளுவும் அடிப்படையில் மாறுபடுகிற விதம் குறித்து நா.வா. அவர்களின் ஒப்பீடு இங்கு கருதத்தக்கது.

பள்ளரின் உயிர்ப்பான உழவு வாழ்வை அனுதாபத்தோடு சித்தரித்த உழைக்கும் வர்க்கத்தை கதைப் பொருளாகக் கொண்டது முக்கூடற்பள்ளு. கதைப் பொருளை நீர்த்துப் போகச்செய்து வெறும் கவிதைச் சிறப்பையும் வருணனைச் சிறப்பையும் மட்டும் கொண்டுள்ளதாக மாற்றப்பட்ட அதிகாரவர்க்கத்தின் குரல்தான்  குருகூர்ப் பள்ளு.

முக்கூடற்பள்ளிலே தங்கள் உழைப்பைக்குறித்தும் மூத்த குடியில் பிறந்தது பற்றியும் பெருமிதம் கொள்ளும் இயல்பான மாந்தரைப் படைத்திருக்க குருகூர்ப் பள்ளோ சிற்றிடையும், சிலம்பும் அணிந்த தெய்வப் பெண்ணரசியாகவும்  தங்கள் உழவுப் பண்பாட்டையும் குலப் பெருமைகளையும் பேசாமல் பக்திப் பிரவாகத்தில் சூழ்ந்து பழைய புராணக்கதைகளைப் பாராயணம் செய்யும் ; திருமால் பெருமைகளைப் பேசும் பக்தி முத்திய பள்ளன் பள்ளியரைப் படைத்திருக்கிறது. குறிப்பாக
சிற்றிடையும், சிலம்பும் அணிந்த தெய்வப் பெண்ணரசியாகவும் பள்ளியரைக் காட்டுகிறது.

முக்கூடற்பள்ளுவில் தெய்வ வணக்கத்தில்  அவர்களின் தெய்வமான பூலாவுடையார், குமுக்காவுடையார், புலியூருடையார், வடக்குவாய்ச்செல்லி ஆகியோரையும் அழகரையும் ஒரு வரிசையில் நிறுத்தி அவர்களுக்கு தேங்காயும், கரும்பும், கிடாயும், சாராயமும், கள்ளும் படைத்து வணங்க ; குருகூர்ப் பள்ளுவோ,  பள்ளர்கள் வணங்கும் தெய்வத்தையும் நம்மாழ்வாரையும் ஒரே வரிசையில் வைக்க மனம் கூசி தெய்வ வணக்கத்தை இரண்டு அடியில் முடித்து விடுகிறார்.

முக்கூடற்பள்ளு , மழைபெய்தால் குதித்தோடி வேலைக்குச் செல்வதாக பள்ளர்களைப் படைக்க குருகூர்ப்பள்ளு பள்ளர்கள் சோம்பேறிகள் வேலைக்கு ஒளிப்பவர்கள், அடித்துத்தான் வேலை வாங்க வேண்டும் என்ற கருத்தை உருவாக்க முயல்கிறது.
அதேபோல முக்கூடற்பள்ளு பள்ளன் உழுதல், விதைத்தல் ,முளைத்தல், நீர்பாய்ச்சுதல் , நாற்று விளைத்தல், முளைத்த நாற்றின் முகங்கண்டு , குழந்தை முகம் கண்டு  பிள்ளைப் பேற்றின் வலி மறந்த தாயாய் மகிழ்ச்சி அடைந்தான் என்று உழவனின் மகிழ்ச்சியைப் படம் பிடிக்கிறது. குருகூர்ப் பள்ளு 'விதைத்த விதை வெள்ளி முளை போலரும்பி பசுமையாக மாறிற்று ' என்று ஒட்டாமல் கூறி கடந்து போகிறது. இதுதான் உழுதுண்பானுக்கும் உழுவித்துண்பானுக்கும் உள்ள ஈடுபாடு வேறுபடுமிடம்.

பள்ளேசல் என்ற பகுதி பள்ளுப்பாட்டின் முக்கியமான வடிவம். உழவு அறுவடை முடிந்து பள்ளியர்களுக்கு பங்கு கொடுக்கும் பொழுது இரண்டு பள்ளியர்களுக்கு இடையே சண்டை ஏற்படுவதும்   இறுதியில் சண்டை  சமாதானம் ஆவதும் பற்றியது. எப்படிச் சமாதானம் ஆகிறது என்பதுதான் நாம் இங்கே காணவேண்டியது. 

முக்கூடற்பள்ளுவில் இரண்டு  பள்ளியர்கள் தாமே சமாதானமடைகின்றனர். திருக்கோஷ்டியூர் திருப்பத்தூர் பள்ளுவில் கணவன் சமாதானம் செய்து வைக்கிறான். குருகூர் பள்ளிலோ பண்ணைக்காரன் சமாதானம் செய்து வைக்கிறான். முக்கூடற் பள்ளில் பள்ளியர் தாங்கள் பொறுப்புணர்ந்து குடும்ப வாழ்க்கையைக் கருதியும் கிளைஞரது நன்மையைக் கருதியும் ஒன்று  சேர்கிற சமாதானமும் சகிப்புத்தன்மையும் மிகுந்த பெண்ணாக படைக்கப்பட்டுள்ளாள்.
திருக்கோட்டியூர் திருப்பத்தூர் பள்ளில் தங்கள் அறிவின் திறத்தினால் சண்டையை நிறுத்தாமல் கணவன் சொல்லை மீறமுடியாமல் கணவன் சொல்லி சமாதானமடைகிற ஆணுக்கடங்கிய பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள். குருகூர்ப் பள்ளோ பள்ளியர் தாழ்ந்தவர்கள்; சண்டை போடுவது அவர்கள் இயற்கை; மாடுகள் சண்டை போட்டால் சொந்தக்காரன் பிரித்துவிடுவது போல பண்ணைக்காரன் பிரித்து வேலைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீதி வழங்கும்  பொருப்பை பண்ணைக்காரனுக்கு வழங்கி அடிமையாக பெண்ணாகப்  படைக்கப்பட்டுள்ளாள்.
இதிலிருந்து கலையைக் கையாள்கிறவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

இனி விவாதக்குறிப்பு:
----------------------------------------
முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் வரும் பள்ளியர்கள் பாத்திர அமைப்பு  வெறும் குடும்பச் சண்டை என்று  எளிதாகக் கடந்து செல்லக் கூடியதாகத் தெரியவில்லை. அது ஆழமான அரசியல் பேசுவதற்காகவே அமைக்கப்பட்ட பாத்திரங்களோ! என்று கருதவேண்டியுள்ளது. அவை பேசும் இரண்டு விசயங்களை இங்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம். ஒன்று இவர்களின் சமயம் தொடர்பான வர்ணிப்பு மற்றும் சண்டை,  இரண்டு உழைப்புக்காகப் பெறுகின்ற கூலி  தொடர்பான சண்டை.
இரண்டு பள்ளியர்களில் மூத்தவள் வைணவ சமயம் சார்ந்தவளாகவும், இளையவள் சைவ சமயம் சார்ந்தவளாகவும் இருக்கிறாள்.

மூத்த பள்ளி
" நெற்றியில் இடும் மஞ்சணப் பொட்டும் ; மற்றொரு திருநாமப் பொட்டும்  "அணிந்தவளாக இருக்கிறாள்.
இளைய பள்ளி
" மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க ;
சிறியநுதல் பிறை வெண்ணீற்றுக் குறியொளி வீச " வருகிறாள்.
இவர்களுக்குள் நடக்கிற சண்டை  தனி நபர் தாக்குதலையும் தாண்டி வணங்குகிற  கடவுளர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கத் துவங்குகிறார்கள்.

வைணவ சமயத்தினளான மூத்த பள்ளி
" நரி தான் பரியாகச் சாதித்தானும் சம்பு வல்லோடி ? " என்று இளைய பள்ளி வணங்கும் சிவபெருமான் நரியைக் குதிரையாக்கிய கதையை காட்டி ஜாலவித்தை சிவனுக்கும் அவனடியார்களுக்குமே கைப்பழக்கமானது. என்று இடித்துரைக்கிறாள்.

இளைய பள்ளி " கல்லைப் பெண்ணாகச் சாதித்தான் உங்கள் பொம்மானல் லோடி " என்று திருமாலைக் கிண்டல் செய்கிறாள்.
மீண்டும் மூத்த பள்ளி , " ஏற ஒரு வாகனமும் இல்லாமையினால் - மாட்டில் ஏறியே திரிந்தானுங்கள் ஈசனல்லோடி " எனறு கூற பதிலுக்கு இளைய பள்ளி " மாடு தானுமில்லாமல் - பட்சி மீதிலேறிக் கொண்டானுங்கள் கீதனல்லோடி. என்று கூறுகிறாள்.

அடுத்து மூத்த பள்ளி ," சுற்றிக்கட்ட நாலுமுழத் துண்டுமில்லாமல் - புலித் தோலையுடுத் தானுங்கள் சோதியல் லோடி ? " என்று கூற , இளைய பள்ளி  ," கற்றைச் சடைகடி மரவுரியுஞ் சேலைதான் - பண்டு கட்டிக் கொண்டான் உங்கள் சங்குக் கையனல்லோடி ? " என்று கூறுகிறாள். இவ்வாறு இருவரும் மாறி மாறி சிவனையும், திருமாலையும் புராணக் கதைகளைக் கூறி வம்புக்கிழுக்கிறார்கள்.

இங்கு பள்ளனின் மனைவியாகிய இருவரும் முறையே வைணவ , சைவ சமயச்சார்பானவர்களாக இருப்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது. சைவ வைணவச் சண்டையை எப்படிப் புரிந்து கொள்வது.

இரு குழுச் சமூகமுறைச் சாதி அல்லது பழங்குடிகளில் சில பிரிவினரின் இரு குழுக்கள் சைவ கடவுளின் பேரிலும் . மற்றொரு குழு   வைணவ கடவுளின் பேரிலும் இருக்கும். அப்படியானால் பள்ளர்கள் இரு குழுச்சமூக முறையினர் தானா? என்பதை காணவேண்டும்.

ஆதி உடைமைச் சமூகத்தில் காணப்பட்ட தொல்குடிகள் பலவற்றில் தொடக்கத்தில் ஒரு சமூகம் இரண்டு பெருங்குழுக்களாக மட்டுமே பிரிந்து அவ்விரு குழுக்களுக்கிடையில் பெண்களைத் திருமணத்தின் வழியாகப் பகிர்ந்து கொள்ளும் முறை இருந்தது என்பதை ஏங்கெல்ஸ் ஆய்வு செய்துள்ளார். இதனை இருகுழுச்சமூகமுறை என்பர்.
இரு குழுச்சமூக முறை கொண்ட சாதி மற்றும் பழங்குடிகளில்  குடி வழியைத் தொடர்புபடுத்துவதற்கும் மண உறவை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு குழுவை வைணவக் குழுவாகவும் மற்றொரு குழுவை சைவக்குழுவாகவும் கருதப்படுகிற மரபு இருப்பதை இனவரைவியல் தரவுகள் மூலம் அறியலாம்.

மலையாளிப் பழங்குடியினர் பெருமாள் கூட்டம் அண்ணாமலையார் கூட்டம் என இரு குழுக்களாக அழைக்கப்படுகின்றனர்.
மலை வெள்ளாளரிடம் உள்ள இரண்டு கூட்டங்களில் ஒரு குழு அரபுலீஸ்வரரையும் மற்றொரு குழு ரங்கநாதரையும் வழிபடுகின்ற குழுக்களாக உள்ளன. கோட்டைப் பிள்ளைமார் சாதியினர் திருநீர்க்காரர்கள், திருநாமக்காரர்கள் எனும் இரு பிரிவினராகக் கருதப்படுகின்றனர்.  அதேபோல் விழுப்புரம் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் கே.நல்லூரில் வசிக்கும் வன்னியர்களும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மஞ்சைக்கொல்லை கிராமத்தில் வசிக்கும் வன்னியர்களும் சைவ வைணவப்பிரிவை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்குள் மண உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அனுப்பர்களிடம் பெரிய ஓலை, சிறிய ஓலை என்னும் இரண்டு அகமணப்பெருங்கூட்டங்கள் உள்ளன. காப்பிலியர்களிடம் தர்மகட்டு, மூனுகட்டு ஆகிய இரண்டு அகமணப் பெருங்குழுவினராகப் பாகுபடுகின்றனர். இவர்களும் சைவ வைணவக் குழுவினராகப் பாகுபடுகின்றனர்.  ( இவர்களிடம் சைவம் வைணவம் எப்படிப் புகுந்தது என்பது தனித்து விவாதிக்கப்படவேண்டிய அரசியல்.)
சைவ வைணவப் பிரிவுகள் என்னும் நிலையில் அல்லாது இரு குழுச்சமூகமுறை காணிக்காரர், குறும்பர் போன்ற பழங்குடியினரிடமும் வேலமர், செட்டியார் சாதுசெட்டியார் சாதிகளிடமும் உள்ளது.
இப்படியான சமய அடிப்படையிலோ அல்லது சமூக  அடிப்படையிலோ இயங்குகிற இருகுழுச் சமூக முறைப் பழங்குடிகளையும் சாதிகளையும் காணலாம்.

ஆனால் பள்ளர் சாதியை சைவ வைணவ  இரு குழுச்சமூகமாக வகைப்படுத்தமுடியுமா? என்ற கேள்வி எழுகிறது. ஆதிப் பொதுவுடைமைச்சமூகம் தொடங்கி  வேளாண்மைச் சமூகமாக உருமாறிய நீண்டகாலப் படிமலர்ச்சியில் இரு குழுச்சமூகமுறையில் இருந்து பல்வேறு கால்வழிக்குழுக்கள் கொண்ட சமூகமுறை வரை தோன்றியுள்ளது.

"கள்ளர்களிடமும் பறையர்களிடமும் முறையே 370, 260 க்கும் மேற்பட்ட கால்வழிக் குழுக்கள் உள்ளன. பண்டைக்காலத்தில் இவ்விரு குடிகளும் வேளாண்குடிகளாக இருந்ததாலேயே இவர்களிடம் நூற்றுக்கணக்கான கால்வழிக்குழுக்கள் இருந்துள்ளன" என்கின்றனர் இன வரைவியலாளர்கள்.

"ஒரு சமூகம் சிறு சிறு வட்டாரங்களின் மீதும் அங்குள்ள நிலங்களின் மீதும் பெறுகின்ற உரிமையாலேயே கால்வழிக் குழுக்களின் பெருக்கம் ஏற்படுகிறது.  வேளாண்குடிகளிடமே நூற்றுக்கணக்கான கால்வழிக்குழுக்கள் இருந்துள்ளன. "
என்ற இனவரைவியல் உண்மை , உழவுக்குடிகளான பள்ளர்களுக்கும் சேர்த்துத்தான்.

"சிந்திய எள்ளை எண்ணினாலும் பள்ளர் வகையை எண்ண முடியாது." என்ற வழக்கும் பள்ளர்கள் இரு வழிச்சமூக முறையினர் அல்ல எண்ணற்ற கால்வழிக் குழுக்களை உடையவர்கள் என்பதை உணர்த்தும்.
அதேபோல பள்ளர்கள் வணங்கும் தெய்வங்களாக
"பூத்த தலைச் செஞ்சேவல் சாத்திரத்தாலே
      பூலியுடையார் கொள்ளப் பலிதானிடும்
வாய்த்த சாராய ம் பனையூற்றுக் கள்ளும்
       வடக்குவாய்ச் செல்லியுண்ணக் குடத்தில் வையும்
தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே ,
      தொழுது தொழுது வேண்டும் மழை பெய்யவே ,
ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே
      எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே!"
என்ற பாடலில் பூலாவுடையார், குமுக்காவுடையார் , புலி யுடையார், வடக்குவாய்ச்செல்லி ஆகிய புலால் உண்ணக்கூடிய , கள்ளும் சாராயமும் அருந்தக்கூடிய  குலதெய்வங்களோடு அழகரையும் வழிபடுகிறார்கள். இங்கு பள்ளரை சைவ வைணவக் குழுக்களாகக் கூறவில்லை.

ஆனால் இங்கே குலதெய்வ வழிபாட்டுக்காரனான பள்ளன் சைவ , வைணவ ஆகியவிரு சமயங்களைச் சார்ந்த பெண்களையும் மணம் புரிகிறான் . இதன்படி பார்த்தாள் இருவரும் சகோதரிகளாவர். ஆனால்  விசுணுவின் தங்கை பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்து கொடுக்கிற மாமன் மச்சான் உறவுதான் சைவ, வைணவ உறவு.

எனவே இனவரைவியல் அடிப்படையிலும் வழக்கிலும் கால்வழிக் குழுக்களாக உள்ள பள்ளியரை சைவ, வைணவ மதத்தினராகப் படைக்கவேண்டிய தேவை  என்ன என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது.
முக்கூடற்பள்ளு  அழகருக்குச் சொந்தமான நிலம் என்கிறது. அப்படியென்றால் அது வைணவக் கோவிலுக்குச் சொந்தமானது என்று பொருள். சைவ, வைணவ கோவில்களும், மடங்களும் வழிபாட்டு நிறுவனங்களாக மட்டும் அல்லாமல் மிகப் பெரும் நிலவுடைமையாளர்களாகவும் இருந்திருக்கின்றன என்பதை அறிவோம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் சொத்துக்களும்  உரிமையானவை என்றால் அக்கோவிலை நிருவகிக்கும் உயர்சாதியினரே சொத்துக்களையும் மேலாண்மை செய்யும் உரிமையுடையவர்களாகிறார்கள்.
நிலங்களை கோயிலுக்கும் மடங்களுக்கும் தானமாகக் கொடுத்ததில் சோழர்கள் முன்னணியிலும் அடுத்து விசயநகர அரசும் இருந்தது. உதாரணமாக சில கோய்வில் நிலவரங்களைப் பார்ப்போம்.  

திருவாருர் தியாகேசர் கோயிலுக்கு 6000 ஏக்கர் நிலங்களும் சீர்காழி வைத்யநாதசாமி கோவிலுக்கு 6000 ஏக்கர் நன்செய் நிலமும் 1176 ஏக்கர் புன்செய் நிலமும் வழங்கப்பட்டும் இவற்றின் பராமரிப்பு பிராமண வெள்ளாள நிலப்பிரபுத்திவத்தின் கீழும் இருந்தது. அதேபோல தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 18 சைவ மடங்கள் இருந்தன. சங்கரமடம் 4000 ஏக்கர் நிலமுடையதாகவும் திருவாவடுதுறை மடத்துக்கு தமிழகம் முழுவதும் 24000 ஏக்கர் நிலங்களும் , தர்மபுரம் மடத்துக்கு 2000 ஏக்கர் நிலங்களும் திருப்பனந்தாள் மடத்துக்கு 3000 ஏக்கர் நிலங்களும் சோழ, நாயக்க அரசுகளால் வழங்கப்பட்டன.
கோவில் நிலங்கள் வாரம்தாரிமுறை நிலப்பிரபுக்களின் கீழ் இருந்ததால் அவை நேரடியாகப் பயிர்த்தொழில் செய்பவர்களுக்கு விடாமல் அரசு அதிகாரிகளுக்கு விடப்படுகின்றன. அவற்றை அவர்கள் மற்றவர்கள் மூலம் பயிரிட்டு உற்பத்தியில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டு கோவில் கருவூலத்திற்குப் பெயரளவிற்குக் கொடுத்துவிட்டு பெருமளவில் அனுபவித்து வந்தனர் என்ற செய்தியைக் கரோஷிமா கல்வெட்டுச் சான்றுகள் மூலம் விளக்குகிறார். அதனால்தான் இன்று இந்து அறநிலைத்துறை வசமுள்ள கோயில்களைக் கைப்பற்ற ஒரு கூட்டம் அலைகிறது.

இப்படியான சொத்துடைத்த கோயிலுக்கு மட்டுமல்ல இவ்வுலகுக்கே அதிபதிகளான சிவனையும் , திருமாலையும் வம்புக்கு இழுத்தது. சமயமடாதிபதிகள் அல்ல சாதாரண கூலிக்காரர்கள் , அதுவும் பெண்கள்.  கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கூட நம்பிக்கையைப் புண்படுத்தக் கூடாதென்பதற்காக கடவுளின் தனிப்பட்ட முறையில் தாக்கத் துணியமாட்டார்கள்.   இவ்வுலகை ஆக்கவும், அழிக்கவும் திறம்பெற்ற இரு பெரும் கடவுளர்களை தெருச்சண்டை கோதாவில் நிறுத்தி பக்தர்களின் மனதைப் புண்படுத்திய, அதுவும் பண்ணை அடிமைப் பெண்களை வைத்து ஏச வைக்க  பள்ளு இலக்கிய ஆக்கத்தால் எப்படி முடிந்தது.

வைதீக சமயத்தின் பேரால் -  கடவுளின் பெயரால் சுரண்டிக் கொழுக்கிற உடைமையாளர்களை , சுரண்டலுக்கு வழி வகுக்கிற கடவுளை , அவற்றை நியாயப்படுத்த புணையப்பட்ட புராணங்களை , சமய நம்பிக்கை கொண்ட அவர்களை வைத்தே  கடவுள்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிற கட்டுடைப்பைச் செய்துள்ளது முக்கூடற் பள்ளு இலக்கியம். ஒரு வேளை சமய நம்பிக்கையாளர்களை வைத்து கேள்வி கேட்கச் செய்வது பாதுகாப்பானது  என்று கருதி பள்ளியர் பாத்திரம் சைவ, வைணவச் சார்பாளராகப் படைக்கப்பட்டதா?
இல்லை பள்ளியரின் சைவ வைணவச் சண்டை, சைவ உடைமையளர்களுக்கும் வைணவ உடைமையாளர்களுக்கும் உள்ள முரண்பாட்டை குறியீடு செய்து படைக்கப்பட்டதா?

காலம் முழுவதும் சமய முரண்பாடு என்பது உடைமைகளை உரிமையாக்கும் பொருளாதார முரண்பாடே என்பதும் நாமறிந்ததே!  மேலும் சமயச் சண்டை சமாதானம் ஆவது  தங்களுக்குள் கலகம் செய்து கொண்டாலும்  உடைமையாளர்கள் தமக்குள்  செய்து கொள்ளும் வர்க்கச்சேர்மானம் என்று கருதுவதா?

எனவே முக்கூடற்பள்ளு இலக்கியம் பள்ளியர்கள் வழியே பேசும் சைவ-வைணவ ஏசல் என்பது உழைக்கும் பெண்களுக்கான சமயச் சண்டையோ குடும்பச் சண்டையோ அல்ல. அதில் குறியீட்டு அரசியல் இருக்குமோ! என்று கருதத்தோன்றுகிறது.
மேலும் சமயச் சண்டை சமாதானம் ஆவது  உடைமையாளர்கள் தமது உடைமையைக் காத்துக் கொள்ள செய்து கொள்ளும் வர்க்கச்சேர்மானம் என்றும் கருதலாம்.

அடுத்து கூலிப்பங்கு தொடர்பானது. கோயில் காரியங்களுக்கும் சத்திரதானங்களுக்கும், பெரிய நம்பி திருமாளிகைக்கும்,  மடங்களுக்கும், கங்காணிக்கும் கொடுத்துவிட்டு விதை நெல்லுக்காக மிஞ்சியதை களஞ்சியத்தில் போட்டுவிட்டதாகக் கூறிகிறான். உடனே தனக்கு  கல்லும் மண்ணும் கலந்த நெல்லைக் கொடுத்துவிட்டு  இளைய பள்ளிக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டதாகச் சண்டையிடுகிறாள் பெரிய பள்ளி.
இங்கு
ஆடித்திருநாளுக்கென்று ஒதுக்கப்பட்ட  நெல் ஆறாயிரம் கோட்டை
பங்குனித் திருநாளுக்கு ஆறாயிரம் கோட்டை, அணைக்கட்டுமானச் செலவுக்கு என்று ஆயிரம் கோட்டை, மண்டகப்படிக்கு முறைக்கு ஆறாயிரம் கோட்டை , மறையோர்க்கு நாலாயிரம் கோட்டை, தினப் பூசைக்கு எண்ணாயிரம் கோட்டை நெல் என்று ஆயிரக்கணக்கான நெல்லை கொடுத்து விட்டு உழுதவனுக்கு
வாழ்க்கைக்குப் போதிய நெல் கூடக்கிடைக்கவில்லை என்று சுரண்டல் மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும் இங்கு இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும்.

அவ்வளவு நெல்லையும் அபகரித்த ஆள்பவர்களின் மேல் திரும்ப வேண்டிய கோபம் சிறிதளவு அதிகமாகக் கூலி வாங்கிய இளைய பள்ளியிடம் திருப்பிவிடப்பட்டுள்ளது.
காலங்காலமாக சுரண்டும் வர்க்கம் சுரண்டுகிறவர்களின் மீது உழைப்பவர்களின் கவனம் திரும்பிவிடாத அளவிற்கு அவர்களின் சிந்தனையை மடைமாற்றி அவர்களுக்குள்ளான உள்  முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி விடுகிறார்கள். பூசணிக்காய் ஒழித்த இடத்தைத் தேடாமல்  சிந்திய கடுகைத் தேடுவது போல மக்களைத் திசை திருப்பிவிடும் தன்மையைத்தான் மூத்தபள்ளி, இளைய பள்ளியின் கூலிப்பங்குச்  சண்டையில் படைக்கப்பட்டுள்ளது.

அடுத்து உழைப்பாளிகளின் கோபம் திரும்புகிற இன்னொரு இடம் கங்காணியாக இருக்கிற பண்ணைக்காரன்.கண்ணுக்குத் தெரியாத  நிலத்தின் உண்மையான உரிமையாளன் மீது திரும்ப வேண்டிய கோபம் அவனது கூலிக்கு வேலை செய்யும் பிரதிநிதியின் மேல் திரும்புகிறது.
இன்று  அம்பானிகளும், அதானிகளும், வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளும் நம் செல்வத்தைக்   கொள்ளையிடுவதிலிருந்து  நம் கவனத்தைத் திசை திருப்பி சக மனிதர்களைக் காட்டி பொறாமை கொள்ளச் செய்வதும் தூரத்திலிருக்கும் அதிகாரத்தை மறைத்து கண்ணுக்குத் தெரிகிற உடனடி நிர்வாகத்தின் மீது கோபத்தைத் திசை திருப்புவதுமாகச் செய்து கொண்டிருக்கிற நவீன நிர்வாகத் தந்திரத்தைத்தான் பள்ளு இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது.

ஆக முக்கூடற் பள்ளு என்பது கோயில் நில உடைமை உற்பத்தி உறவின் தன்மையையும், வைதீகக் கடவுள் கட்டுடைப்பும் உடைமையாளர்களின் அக முரண்பாடையும் உழுவித்துண்போரின் திறமையான சுரண்டலையும் நிலத்தில் உடலுழைப்பைக் கொடுத்தும் சகல பணிகளையும் செய்கிற உழுதுண்போர் சுரண்டப்படுவதை அறிந்தும் திசை திருப்பப் படுவதையும் உழு குடிகளான பள்ளர் பள்ளியரை மையமாக வைத்து மக்கள் மொழியில் நகைச்சுவை ததும்ப உழவுக்குடிகள் படும்பாட்டை குறியீட்டு வடிவில் இயற்றிய மாற்றுக் குரலாக இருக்கிறது.

இத்தொகுப்பு நூல் பள்ளு இலக்கியத்தை முழுவதுமாக வாசிக்கவும் மீளாய்வு செய்யவுமான தேவையை உருவாக்கியிருப்பதில் வெற்றியடைந்துள்ளது.
முன்னோடி ஆய்வுக்காக நா.வா..அவர்கள் தமிழ்ச்சமூகத்தால் நன்றி கூறப்படவேண்டியவர். 

எவரின் கடமையோ! என்றிறாமல் காலத்தே வினையாற்றிய  தோழர் மகாராசனும் அதனை  அச்சு வாகனமேற்றி அழகுபார்த்த ஆதி பதிப்பகமும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஒரு படைப்பு சொல்லியதையல்ல சொல்லாமல் கிசுகிசுப்பதையும் கேட்கும் பொழுதுதான் அல்லது சந்தேகிக்கும் பொழுதுதான்   மறைந்திருக்கும் எதிர்வினையை உணர்ந்து கொள்ள முடியும்.