எழுத்துகளின் தோற்றத்திற்கு முதல் அடிப்படையாக அமைந்திருப்பன ஓவியங்களே ஆகும் எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். தொல் பழங்காலத்தில் வேட்டையாடித் திரிந்த மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த சில பல கிறுக்கல்களைக் கீறி, நாளடைவில் ஓவியங்களாகவும் வரைந்துள்ளதைத் தொல்லியல் சான்றுகளின்வழி அறிய முடிகிறது.
இத்தகைய ஓவிய நிலை குறித்துக் கூறும்போது, தொல் பழங்கால வேட்டைச் சமூகத்தில் மொழி மற்றும் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னர் தகவல் பரிமாற்றத்தில் ஓவியங்களே காட்சி மொழியாக உலகெங்கும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. பின்னர் அது அலங்காரமாகவும் இருந்துள்ளது. இவ்வகை தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறைகளில் கண்டறியப்பட்டுள்ளன. பாறை ஓவியங்கள் வெறும் வெளிப்பாடு மட்டுமல்ல, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த சமூகத்தின் வியக்கத்தக்க வாழ்வியல் சூழலைப் பதிவு செய்துள்ள தொல் காட்சி ஆவணம் என்கிறார் காந்திராஜன்.
அதாவது, பாறை ஓவியங்கள்தான் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் மற்றும் அழகியல் வெளிப்பாடுகளைப் புலப்படுத்தக்கூடிய வடிவமாகத் திகழ்ந்திருக்கின்றன. ஓவியம் வரைதலையே சித்திரம் வரைதல் என்பர். சித்திரமும் கைப்பழக்கம் என்கிற சொல்வழக்கும் ஓவியம் வரைதலைத்தான் குறிக்கிறது.
சித்திரம் வரைதலே எழுத்துக்களின் தோற்றத்திற்கு அடிப்படையான காரணம் எனக் கூறும் இரா.நாகசாமி, குழந்தைகள் தாங்கள் கண்ணுறும் விலங்குகளையும் பறவைகளையும் படமாக வரைகின்றனர். அவற்றிற்கு உயிர் இருப்பதாகவே அவர்கள் கருதுவர். காடுகளிலும் மலைகளிலும் வேட்டையாடித் திரிந்த காலத்தில் இவ்வாறுதான் ஓவியங்களை வரைந்துள்ளனர். விலங்குகளின் உருவம் வரைந்து அவற்றை ஈட்டியால் குத்தியதுபோல் வரைந்தால் அது அவனுக்கு மாந்திரீக சக்தியைக் கொடுக்கும் என்றும், அதனால் ஏராளமான விலங்குகளை வேட்டையாட முடியும் என்றும் கருதி இருக்க வேண்டும் என்கிறார்.
மேலும், பல குடிமக்கள் சேர்ந்து ஓர் ஊரிலோ நகரிலோ வாழத் தலைப்பட்டபோது அவர்களுடைய பொருள்களைக் குறிக்கக் குறியீடுகள் இட்டுத் தெரிந்து கொண்டனர். ஊர்த் தெய்வத்திற்கு மக்கள் பல பொருள்களை வழிபாடாகக் கொடுப்பது வழக்கம். ஆதலின், ஊர்க் கோயில்களிலும் நகரக் கோயில்களிலும் ஏராளமாகப் பொருள்கள் சேர்ந்தன. இவற்றைக் கணக்கு வைத்துக் கொள்ள பல குறியீடுகள் தேவைப்பட்டன. உதாரணமாக, இவ்வளவு மாடுகள் எனக் குறிக்க மாட்டின் தலை போட்டு அருகில் வேண்டிய புள்ளிகள் இட்டு வைத்தால் அது அவ்வளவு மாடுகள் எனக் குறிக்கும். கலன்களையும் தானியங்களையும் போட்டு அருகில் இட்ட புள்ளி இவ்வளவு கலம் அல்லது தானியம் எனக் குறிக்கும். இவ்வாறு தனிப்பட்ட மனிதர்களிடத்தைக் காட்டிலும் கோயில்களில் கவனத்துடன் கணக்கு வைத்துக் கொள்ளும் தேவை இருந்தது. அதற்குக் குறியீடுகள் தோன்றின. இவற்றைச் சித்திர எழுத்துக்கள் என்பார் இரா. நாகசாமி.
எகிப்து தேசத்தில் காணப்படும் ஓர் ஓவியத்தில் முட்டை வடிவமான ஓர் அடி நிலத்தில் சில செடிகள் காணப்படுகின்றன. அந்த அடி நிலத்திலிருந்து கிளம்புவது போல் ஒரு மனிதன் தலை இருக்கிறது. அவனுடைய தலையை ஒரு கயிற்றினால் பருந்து ஒன்று பற்றிக் கொண்டிருக்கிறது. இத்திரண்ட ஓவியம் பாப்பைரஸ் எனும் கோரைப் புல்லுக்குப் பெயர் போன நைல் ஆற்றுப் பிரதேசத்தில் வாழ்ந்த புராதன மக்களை எவனோ ஒருவன் வென்று அரசனானான் என்னும் கதையைக் கூறுகிறது. இவ்விதம் படத்தில் உள்ள வடிவங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நிகழ்வைக் குறிக்கும். இது பாங்குஸ்கேண்டி நேவியா மக்களிடத்திலும் அமெரிக்க ஆதிக்குடிகளிடத்திலும் உண்டு என்கிற குறிப்பைத் தருகிறார் மணி.மாறன்.
மேலும், சிந்து, பாஞ்சால தேசங்களில் உள்ள ஹரப்பா,மொஹஞ்சதரோ என்ற ஊர்களிலே சமீபத்தில் கண்டறியப்பட்ட சுமேரியர் எழுத்துக்களாகக் கூறப்படுபவை, இச்சித்திர சங்கேதக் குறிகளாகும். 5000,6000 ஆண்டுகட்கு முற்பட்டவைகளாகவும் இவை உள்ளன என்பர். இதனால், அக்குறி எழுத்துக்கள் நம் தேசத்துக்கும் புறம்பானவை அல்ல என்பது தெளிவாகின்றது. அம்முறையில், மேலே கூறிய எழுத்து வகைகளை நோக்குமிடத்து அப்புராதன மக்களில் தமிழரும் விலக்கப்பட்டவர் அல்லர் என்று கொள்ளக்கூடியதாம் என்ற மு.இராகவையங்கார் கூற்றும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தொல் பழங்காலத்தியத் தமிழ் மக்கள் ஓவியங்கள் மூலமாகத் தம்முடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதைத் தமிழகப் பாறை ஓவியங்கள்வழி அறிய முடிகிறது. இதைக்குறித்து விவரிக்கும் காந்திராஜன், தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்களில் வரையப்பட்ட கருப்பொருள்கள் இந்தியாவில் பிற பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள் போல பல்வேறு காட்சிகளைப் பதிவு செய்துள்ளன. பெரும்பாலான ஓவியங்களில் விலங்குகளை வேட்டையாடுதல், மான்கள், மாடுகள், குதிரைகள், யானை, நாய், ஆடு, பன்றி, புலி, சிறுத்தை, நரி, கழுதை, பாம்பு, மீன், பறவைகள், சண்டைக்காட்சிகள், மரம், சடங்கு மற்றும் சமூக நிகழ்வுகள் அதிகம் காணப்படுகின்றன. அதுபோல கணிசமான அளவில் அடையாளங்களும் குறியீடுகளும் காணப்படுகின்றன. அதேபோல அடையாளம் கண்டுபிடிக்க முடியாத உருவங்களும் எண்ணற்ற அளவில் உள்ளன.
தமிழகத்தில் இதுவரை வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாறை ஓவியங்களில் அதிக எண்ணிக்கையில் குறியீடுகளும் சில அடையாளங்களும் காணப்படுகின்றன. மேலும் வடிவியல் சார்ந்த மற்றும் சாராத உருப் படிவங்கள் பெருமளவில் பெருங்கற்காலச் சின்னங்களில் கிடைக்கின்றன. குறிப்பாக கீழ்வாலை, செத்தவரை, மல்லசத்திரம், திருமலை, புறாக்கல் மற்றும் சென்னராயன்பள்ளி பாறை ஓவியங்களில் இவை தென்படுகின்றன. பாறை ஓவியங்களில் காணப்படும் சில குறியீடுகள் பெருங்கற்காலப் பானை ஓடுகளில் காணப்படும் கீறல்கள் போல உள்ளன. செத்தவரையில் காணப்படும் ஒரு ஓவியம், விலங்கு ஒன்றினைத் தீயில் வாட்டும் விதம் காட்டப்பட்டுள்ளது. இக்காட்சியின் மூலம் அக்காலத்தில் எவ்வாறு நம் முன்னோர்கள் உணவினைத் தயார் செய்தார்கள் எனத் தெரியவருகிறது. மீன் மற்றும் கடல் வாழ்வியலை கீழ்வாலை மற்றும் காமயகவுண்டன்பட்டி ஓவியங்கள் மூலம் அறிய முடியும் என்கிறார்.
தமிழகத்தின் கீழ்வாலை என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பண்டைய ஓவியத்தில் உருவ எழுத்துக்கள் காணப்படுகின்றன. இதில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. முதல் எழுத்து தென்னங்கீற்று போலவும், இரண்டாம் எழுத்து மத்தளம் போன்றும், மூன்றாம் எழுத்து சீப்பு போன்றும், நான்காம் எழுத்து மத்தளம் போன்றும், ஐந்தாம் எழுத்து நான்கு குறுக்குக் கால்களையுடைய சக்கரம் போன்றும் எழுதப்பட்டுள்ளதாகத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ் ஓவிய எழுத்துகள், சிந்துவெளி எழுத்து வகையைச் சார்ந்திருப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவ்வகையில், கீழ்வாலை ஓவிய எழுத்துகள் ‘நாவாய்த் தேவன்’ என ஓவிய எழுத்தில் குறிக்கப்பட்டிருப்பதாகச் சிந்துவெளி எழுத்துகளோடு தொடர்புபடுத்துகிறார் இரா.மதிவாணன். மேலும், தமிழகத்தின் பழங்காலத்தியப் பாறை ஓவியங்கள் பலவற்றிலும் சிந்துவெளி எழுத்தமைந்த சொற்களை அவர் எடுத்துக்காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
குகைகளின் சுவர்களில் ஓர் ஓவியத்தின் மீது மற்றொரு ஓவியம் வரையப்பட்டிருப்பது ஆய்விற்கு உரிய ஒன்றாகும். இது தொடர்ந்து இந்தக் குகைகளில் மனிதர்கள் புழங்கியதைக் காட்டுகிறது. மேலும், இந்தக் குகைப் பகுதிகளில் தேவையான விலங்குகள் அதிக அளவில் கிடைத்திருக்க வேண்டும். இந்தக் குகைகளில் வேட்டையாட விரும்பும் விலங்கின் உருவத்தை வரைந்து சென்றால் அந்த மிருகம் வேட்டையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவும் இங்கு ஒன்றின் மீது ஒன்றாக ஓவியங்களை வரைந்திருக்கலாம். இதுதவிர, இந்தக்குகை ஓவியங்கள் வரையும் பயிற்சித் தளமாகவும் இருந்திருக்கலாம் என்கிற ஆய்வாளர்களின் கருத்து, ஓவிய உருக்களின்வழி எழுத்துக் குறிக்கான பயில்களம் இருந்திருப்பதையும் சுட்டி நிற்கிறது.
மேற்காணும் சான்றுகளின்வழி, ஒவ்வோர் ஓவியமும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும் குறிகளாக, அக்குறிகளே அப்பொருட்களைக் குறிக்கும் சொற்களின் அறிகுறிகளாக வளர்ச்சி அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. அதாவது, ஒரு பொருளின் உருவத்தை வரைந்தெழுதி, அது அப்பொருள் என்பதன் அறிகுறி என்று கருதப்பட்டிருக்கிறது. இவ்வாறாக, ஒரு சொல்லுக்கு ஒரு ஓவியம் என்று எழுதப்பட்ட காலகட்டத்தில், கருத்துப் புலப்பாடுகளுக்கு ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய ஓவியக் கருத்துப் புலப்பாட்டு வடிவத்தையே ஓவிய எழுத்து (Pictography) என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். இவ் ஓவிய எழுத்தையே சித்திர எழுத்து, படவெழுத்து, உருவெழுத்து, வடிவெழுத்து எனப் பல பெயர்கள் குறிப்பதாகக் கருதலாம்.
ஓவியங்களையே எழுத்தாகக் கொள்ள முடியாது. வரைந்த உருவை மட்டும் ஓவியம் குறிக்குமே ஒழிய, வேறு எக்கருத்தையும் குறிக்காது. இவை வரையப்பட்ட பொருளையே குறிக்கும் எனக் கூறுகிறார் இரா.நாகசாமி. மேலும், சித்திர எழுத்துகளையும் உண்மையான எழுத்துகள் என்று கூறமுடியாது. அவை வளர்ச்சி பெற்று கருத்து எழுத்துக்களாக பரிணமித்தன. உதாரணமாக சூரியனின் உரு வரைகிறோம். இது சூரியனை மட்டும் குறிப்பது சித்திர எழுத்து நிலை. இதற்கு அடுத்த நிலை சூரியனுடன் தொடர்பு கொண்ட பகல், வெப்பம் என்ற பொருள்களையும் குறிப்பதாம். இப்போது உருவை மட்டுமின்றி ஒரு கருத்தையும் குறிப்பதால் இதைக் கருத்து எழுத்து என்பர். இதுமட்டுமின்றி முழு உருவும் போடாமல் இரு கொம்புகளும் தலை மட்டும் வரைந்தால் மாடு என்று அறியலாம். இதுவும் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது என அவர் விவரிக்கிறார்.
ஓவிய எழுத்துக்கள் நாளடைவில் கருத்தெழுத்தாக வளர்ச்சியுற்றன. சூரியனின் ஓவியத்தை எழுதி இது சூரியன் என்று சொல்லப்பட்டால் அது ஓவிய எழுத்து எனப்படும். அந்தச் சூரியனின் ஓவியம் சூரியனோடு தொடர்புடைய பகற்காலத்தையோ சூரிய வெப்பத்தையோ குறிக்கிறதாகக் கொள்ளப்பட்டால் அது கருத்து எழுத்து (Ideogram / Ideography) எனப்படும் என்பர். அதாவது, தமது மனக்கருத்தைப் புலப்படுத்தும் வண்ணம் வரைந்தெழுதியதே கருத்தெழுத்து எனலாம். இதுவே உணர்வெழுத்து எனவும் சுட்டலாம்.
கருத்தெழுத்து பற்றி எடுத்துரைக்கும் மணி.மாறன், எழுத்து வளர்ச்சியின் அடுத்த நிலையில் ஒவ்வொரு உருவமும் தனித் தனிப் பொருள்களை நேரிடையாகக் குறிக்க முற்பட்டது எனவும், எடுத்துக்காட்டாக, எகிப்து தேசத்தில் அமைந்த ஒருவகை எழுத்தில் கண்ணின் உருவம் கண்ணையும், வட்ட வடிவம் திங்களையும் குறிப்பதாகக் கொள்ளப்பட்டன. இவ்வடிவங்களைக் கண்டவுடன் பொருள் இன்னது என்று அறிந்து கொள்ள முடியும். ஆனால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பொருளின் நிலையை அல்லது செயலைக் காட்டக் கூடுமேயல்லாமல் எண்ணினையோ வேற்றுமையையோ காலத்தையோ காட்டாது. எனவே, பல்வேறு வகையான கருத்துகளைத் தெரிவித்தல் இவ்வகை எழுத்துகளால் இயலாது எனவும் கூறுகிறார்.
கருத்தெழுத்துகள் பல காலம் வழக்கில் இருந்ததால் வரைந்துள்ள பொருளைக் குறிக்காமல் சில இடங்களில் கருத்தை மட்டும் குறிக்கவும் உபயோகப்பட்டன. மேலும், சூரியனைக் குறிக்க அதன் உருவம் வரைகிறோம். அதை சூரியன் என்ற பெயரால் அழைக்கிறோம். பலநாள் வழக்கில் இருந்ததால் அவ்வுருவம் வரைந்தபோது சூரியனைக் குறிப்பதோடு அல்லாமல் சூ என்ற குறுகிய ஒலியையும் குறித்தது. இதேபோன்று முன்னர் பல பொருள்களைக் குறிக்க அவற்றின் உருவங்களை வரைந்தனர். அவை நாளடைவில் சொற்களின் முதல் ஒலியை மட்டும் குறிக்கவும் தலைப்பட்டன. இதுபோன்ற வளர்ச்சிகளால் ஒலி எழுத்துக்கள் தோன்றின.
சித்திர எழுத்துக்களிலும் கருத்து எழுத்துகளிலும் இட்டுள்ள குறிக்கும், அது குறிக்கும் பெயருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால், ஒலி எழுத்துகள் பொருளையோ கருத்தையோ குறிக்காமல் குறிப்பிட்ட ஒலியைக் குறித்தன. இந்நிலையில்தான் குறிக்கும் ஒலிக்கும் நேர்முகத் தொடர்பு ஏற்படுகிறது. இப்பொழுதுதான் மொழிவதைக் குறிக்க எழுத்து ஏற்பட்டது என்று கூறமுடியும். இம்முறையில் உருவத்துக்கும் ஒலிக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லாவிட்டாலும் அவ்வுரு அவ்ஒலியை மட்டும் குறிக்க நிலைத்துவிட்டது என, ஒலி எழுத்துகளின் தோற்றப் பின்புலம் குறித்து விவரிக்கும் இரா.நாகசாமி, ஓவிய எழுத்து, கருத்து எழுத்து போன்றவற்றில் இருந்து தோன்றிய புரட்சிகரமான மாற்றமே ஒலி எழுத்தாகப் பரிணமித்தது என்கிறார்.
ஒரு சொல்லுக்கு ஒரு அடையாளமாக எழுதிய ஓவியம், நாளடைவில் அச்சொல்லின் முதல் ஒலிக்கு உரிய அடையாளமாக ஏற்பட்டது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கருத்தினைக் குறித்து நிற்காமல், அந்தந்த வடிவத்திற்கேற்ப ஒலியைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அதாவது, முற்காலத்தில் மக்கள் ஓவியத்தின் வழியாகக் கதை சொல்லக் கற்றுப் பிறகு, ஒவ்வொரு வடிவத்தையும் ஒவ்வொரு தனித்தனிப் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தினர். நாளடைவில், அவ்வடிவானது பொருளைக் குறிக்காமல் ஒலியைக் குறிக்கத் தலைப்பட்டது. இத்தகைய எழுத்து நிலையினையே ஒலி எழுத்து (Acrophony / Phonography) என்கின்றனர் தொல்லியலார்.
அவ்வடிவு அல்லது அவ்வடிவின் திரிபு முழு ஒலியையும் குறிப்பிடாமல் முதல் அசை ஒலியை மட்டுமே குறிப்பிடுவதாகிப் பின்னர் முதல் எழுத்தளவிலேயே நின்று விட்டது. இக்காலத்தில் உள்ள எழுத்துகளெல்லாம் இம்முறைப்படி ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபு வேறுபாடுகளாகக் கருதப்படுகின்றன. இங்ஙனம், ஒரு ஒலிக்கு ஒரு அடையாளம் என்று ஏற்பட்ட நிலையே ஒலி எழுத்தாகும். இவ்வாறாக, ஓவிய மற்றும் கருத்து எழுத்திலிருந்து ஒலி எழுத்துத் தோன்றிய மாற்றம் என்பது மொழி வளர்ச்சியின் இன்னொரு பரிணாமக் கட்டமாகும்.