செவ்வாய், 26 அக்டோபர், 2021

வேளாண்மை - ஆரிய மரபின் ஒவ்வாமை : மகாராசன்




வேளாண்மை சார்ந்த இத்தகைய வளமைச் சடங்குகளில் இந்திரன் என்னும் அடையாளத்துடன்கூடிய தெய்வ வழிபாட்டுக் கூறுகள் வெவ்வேறு வடிவங்களில் புலப்படுத்தப்படுகின்றன. எனினும், இத்தகைய வளமைச் சடங்குகளுக்கும் வைதீகச் சடங்குகளுக்கும் யாதொரு தொடர்பும் உறவும் இருந்ததில்லை; இருக்கவுமில்லை. 

குறிப்பாக, ஆரிய வைதீக மரபில் சுட்டப்படும் இந்திரன் என்பதன் அடையாளத்தோடும் சாயலோடும் எவ்விதத்திலும் தொடர்பில்லை. ஏனெனில், ஆரிய வைதீக மரபில் வேளாண்மைத் தொழில் பாவமான தொழிலாகக் கருதப்படுகிறது. தமிழர் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாய் இருக்கும் வேளாண்மையை இழிவான - பாவப்பட்ட தொழில் என்கிறது ஆரியம். இதனை ஆரியப் பண்பாட்டுக் கருத்தியலாகவே பதிவு செய்யும் நோக்கில், 

பிராமணனும் சத்திரியனும் வைசியன் தொழிலால் ஜீவித்த போதிலும், அதிக இம்சை உள்ளதாயும் பராதீநமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்க வேண்டியது. 

சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியில் உண்டாலான பலப்பல ஜெந்துக்களையும் வெட்டுகிறது. 

என, உழவுத் தொழிலை ஆபத்தருமம் என்பதாகக் கருதி இழிவுபடுத்துகிறது மநு சாத்திரம். 

ஏர் பூட்டி உழுவதே பாவம் எனக் கருதுகிற ஆரிய வைதீக மரபின் சமக்கிருத மொழியில், ஏர் என்னும் சொல்லே காணப்படாமல் இருப்பதும் இதன் காரணமாகத்தான்.  அதேவேளையில், வேளாண்மைத் தொழிலே தலையாயத் தொழிலாகவும், மேன்மையான தொழிலாகவும் தமிழர் வாழ்விலும் மரபிலும் கருதப்பட்டிருக்கிறது. 

உழவு செய்து, பயிர் விளைவித்து வாழ்தலே உழவுத் தொழில் மரபினரான வேளாளர்க்கு அழகு எனும் பெருமித உணர்வே, தமிழர் மரபாகவும் பண்பாட்டுக் கருத்தியலாகவும் இருந்து வருகின்றது. உழைக்காமல் சூதால் வருகின்ற பொருளை வெறுத்தலும், பார்ப்பாருடன் பழகினாலும் நெருப்பைபோல் அவரிடமிருந்து விலகி நடத்தலும், உழவு செய்தலை மிக விரும்பி வாழ்தலும்தான் வேளாண்மைத் தொழில் மரபினர்க்கு அழகு எனும் வகையில், 

கழகத்தால் வந்த பொருள் காமுறாமை, 

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல ஒழுகல், 

உழவின்கண் காமுற்று வாழ்தல் - இம்மூன்றும் 

அழகென்ப வேளாண் குடிக்கு 

என்கிறது திரிகடுகம். அதாவது, உழவைப் பாவமாகக் கருதும் ஆரிய மரபிலிருந்து வேறுபட்டு, உழவை விரும்பிச் செய்யும் தொழிலாகக் கருதுவது தமிழர் மரபாகும். 

ஆரிய வைதீகத்தின் சடங்கியல் மரபுகள் நெருப்போடும் வானத்தோடும் தொடர்புடையவை. தமிழ்நாட்டின் நிலப்பரப்பு வெப்ப மண்டலப் பகுதியைச் சார்ந்தது என்பதால், தமிழர் பண்பாட்டு வெளியில் காணலாகும் சடங்கியல் மரபுகள் நீரோடும் நிலத்தோடும்தான் தொடர்புடையவையாய் அமைந்திருக்கின்றன. தமிழர்களின் புழங்குவெளியில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் நிலவுகிற அனைத்துச் சடங்குகளும் நீரில்லாமல் அமைவதில்லை. ஆகையால், தமிழர் பண்பாடு என்பது இயல்பாகவே நீர் சார்ந்தும் - நிலம் சார்ந்ததுமான பண்பாடாகவே அமைந்திருக்கிறது. 

தமிழரின் பண்பாட்டு நடத்தைகள் நீரோடு தொடர்புடையது என்றால், ஆரிய வைதீக மரபினரின் பண்பாட்டு நடத்தைகள் நீருக்கு நேரெதிரான நெருப்போடு தொடர்புடையதாக இருந்திருக்கிறது. இந்த வேறுபாட்டு நிலைகள் பற்றி தொ.பரமசிவன் விவரிக்கும்போது, ஆரியர்களின் சடங்குகள் நெருப்பின்றி அமையாது. அவர்கள் வசித்த பகுதி, நீண்ட குளிர் காலத்தைக் கொண்ட பகுதி. எனவே, குளிரைப் போக்கும் நெருப்பு அவர்கள் பண்பாட்டு அடையாளமாக இருக்கலாம். தீ மூட்டிச் செய்யும் வேள்விகளின் தொடக்கம், குளிருக்குத் தீ மூட்டியதில் இருந்தும் தொடங்கியிருக்கலாம். அவர்களுடைய கடவுள் படையல்களை வேள்வி நெருப்பின் வழியாகவே பெற்றுக் கொள்பவர். 

வெப்ப மண்டல உயிர்கள் நீராடுதலில் விருப்பம் கொண்டவை. வெப்பமண்டல மனிதர்களான தமிழருக்கும் அம்பா ஆடல், மார்கழி நீராடல் என நீராடுதல் சடங்காக அமைந்தன. தம்மைப் போலவே கடவுளையும் குளிப்பாட்டும் வழக்கம் கொண்டனர். நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்கையோடு இறப்பது இயல்பாகும். அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நீர்ப்பந்தல் அமைப்பது தமிழர் வழக்கமாயிற்று என்பார். 

ஆரிய வைதீக மரபில் சுட்டப்படும் இந்திரனுக்கும் வேளாண்மைத் தொழிலுக்கும் எவ்விதத் தொடர்பும் இருந்ததில்லை. இதுகுறித்து டி.டி.கோசாம்பி கூறும்போது, ரிக் வேதத்தில்  ஆறுகளை விடுவித்த வீரச் செயலுக்காக இந்திரன் மீண்டும் மீண்டும் போற்றப்படுகிறான். அரக்கனாகிய விரித்திரன் என்பவன், ஓடும் ஆற்றின் குறுக்கே செயற்கைத் தடுப்பு ஏற்படுத்தி நீரோட்டத்தைத் தடை செய்கிறான். விரித்திரன், ஒரு பெரிய பாம்பைப்போல மலைச் சரிவின் குறுக்கே படுத்துக் கிடந்தான். இந்திரன் அவனைச் கொன்றதும் வண்டிச் சக்கரங்களைப் போல கற்கள் உருண்டன. அசுரனின் மூச்சற்ற உடலின் மீது நீர் பிரவாகமாக ஓடியது என, உவமை நயத்துடன் வர்ணிக்கப்படும் இச்சொற்கள் யாவும், அணை ஒன்று உடைக்கப்பட்டதைத்தான் சொல்கின்றன என்கிறார். 

வேளாண்மை என்பதை விலக்கப்பட்ட தொழிலாக ஆரிய வைதீக மரபினர் கருதியதால்தான், வேளாண்மைக்கு அடிப்படையான நீர் ஆதாரங்கள் சீர்குலைப்பை வியந்தோதுவது மட்டுமல்லாமல், வேளாண்மைக்கு உகந்த வகையில் நீர் ஆதாரங்களைக் கட்டுவிப்பதும் பாவம் என்றே பதிவு செய்திருக்கின்றனர். 

ஆரிய வைதீக மரபில் இறந்தவர்களுக்குச் செய்யப்படும் படையல் சடங்கான சிரார்த்தச் சடங்கிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் என்று ஒரு பாவப் பட்டியலை முன்வைத்திருக்கிறது மநு சாத்திரம். ஓடுகிற நீரில் அணை கட்டுகிறவனும், நீரின் வேகத்தைத் தடுப்பவனும் சிரார்த்தத்தில் நீக்கத்தக்க வந்தணர்கள் எனக் குறித்திருக்கிறது மநு சாத்திரம். 

நீரை அடிப்படையாகக் கொண்டு நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மைத் தொழில் மரபில், நீரே முதன்மைத் தெய்வமாக  வணங்கப்பட்டிருக்கிறது. ஆரிய வைதீக வழிபாட்டு மரபில் அக்னி பகவான் - யாகம் என்பதான நெருப்பே முதன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வகையில், தமிழர் வழிபாட்டு மரபின் இந்திரன் வேறாகவும், ஆரிய வைதீகத்தின் இந்திரன் வேறாகவுமே இருந்திருக்கின்றன. 

தமிழரின் வேளாண்மைத் தொழில் மரபில், இந்திரனே வேளாண் தெய்வமாக - மழைத் தெய்வமாக - நீர்த் தெய்வமாக அடையாளப்படுத்தப்படுகிறது. வேளாண் மரபின் தமிழ் அடையாளம் இந்திரன் என்பதாகத்தான் தமிழர்கள் அடையாளப்படுத்தி வந்திருக்கின்றனர். ஆகையால், ஆரிய வைதீக மரபின் இந்திரன் வேறு; தமிழர் மரபின் இந்திரன் வேறு என்பதை உறுதியாகக் கூறலாம்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...


*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக