மழைநீர் எனும் ஒரே பொருளைக் குறித்து, உலக வழக்கு எனும் மக்கள் வழக்கில் ஒருசில சொற்களாகவும், நாடக வழக்கு எனும் இலக்கியச் செய்யுள் வழக்கில் வேறு சில சொற்களாகவும் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவ்வகையில், மருத நிலத்தின் மழைத்தெய்வமாக வேந்தன் எனவும், இந்திரன் எனவுமே இருவேறு தமிழ் வழக்குச் சொற்களால் குறிக்கப்பட்டிருக்கிறது எனவும், மழையைக் குறித்து வந்த வேந்தன் வழிபாடே இந்திர வழிபாடாகப் பெருவழக்காய்க் குறிக்கப்பட்டு வந்திருக்கிறது எனவும் கருதலாம். இதனை, இலக்கண இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் பதிவாகியுள்ள குறிப்புகளின் வழியும் அறியலாம்.
இந்திர விழவின் பூவின் அன்ன புன் தலைப் பேடை வரிதிகல் அகவும் என, இந்திர வழிபாட்டைப் பற்றிய குறிப்பைப் பழந்தமிழ் நூலான ஐங்குறுநூறு பதிவு செய்திருக்கிறது.
உண்டால் அம்ம, இவ்வுலகம் - இந்திரர் அமிழ்தம் இயைவது
என, இந்திரன் பற்றிய சொல்லாடலைப் பதிந்திருக்கிறது புறநானூற்றுப் பாடல்.
மேலும், பாண்டிய மன்னன் கூடல்வாழ் மக்களுடன் வைகை ஆற்றில் நீராடிய காட்சியானது, இந்திரன் நிகழ்த்தும் நீராட்டம் போன்றது எனும் வகையில்,
…. அருமரபின் அந்தர வான்யாற்று ஆயிரம் கண்ணினான் இந்திரன் ஆடும் தகைத்து
என, ஆயிரம் கண்ணுடையான் இந்திரன் என்பதாகச் சுட்டுகிறது புறநானூறு.
மண்ணகம் அருள வானகம் வியப்ப விண்ணவர் தலைவனை விழுநீராட்டி
என, மழைத் தெய்வ வழிபாட்டைக் குறிக்கும் சிலப்பதிகாரம், இந்திர விழவு எனப் பதிகத்திலும், விண்ணவர் கோமான் விழவு என, இந்திர விழவூரெடுத்த காதையிலும் குறிப்பிடுகிறது. மழையைக் குறிக்கும் இந்திரரையே வேந்தர் எனும் பொருள் குறிக்கும் சொல்லாட்சியில் பதிவு செய்திருக்கிறது.
சிலப்பதிகாரத்தைப் போலவே மணிமேகலைக் காப்பியமும் இந்திர வழிபாட்டுச் சடங்கை ஆயிரம் கண்ணோன் விழா என்பதாக விழாவறை காதையில் பதிவு செய்திருக்கிறது. மேலும், மருத நிலத்தின் கருப்பொருட்களைப் பற்றிக் கூறும் நம்பி அகப்பொருள் இலக்கண நூலும் இந்திரன் எனும் தெய்வப் பெயரையே முதன்மைப்படுத்துகிறது.
இந்திரன் எனும் தெய்வத்தின் பெயர்த் தொகுதியைப் பற்றி விவரிக்கும் சூடாமணி நிகண்டு, மேகவாகணன், வேள்விக்கு வேந்தன், விண்முழுதுமாளி, பாகசாதணன், வச்சிரபாணி, கோபதி, நாகநகர்க்கு நாதன், நான் மருப்பின் யானை ஊர்தி, போகி, வாசவன், வேந்தன், புரந்தரன், புலவன், சக்கிரன், மருத நிலத்து வேந்தன்…
மருத்துவன், வானோர் கோமான், புருகூதன், சசிமணாளன், புரோகிதன், கௌசிகன், கரியவன், சுனாசீரன், ஆகண்டலன், வலாரி, அரி, சதக்கிரது, ஆயிரம் கண்ணன் என இந்திரனின் இதரப் பெயர்களையும் சுட்டுகிறது. மேற்சுட்டிய இந்திரனின் பெயர்கள் பெரும்பாலும் மழையோடு தொடர்புடைய பெயர்களாகவும், மழையை வேந்தராக உருவகிக்கும் பெயர்களாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 220,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு :
9080514506
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக