ஆரிய வைதீகத்தினருக்கும் உழவுத் தொழில் மரபின் வேளாளர்களுக்குமான உற்பத்தித் தொழில் சார்ந்த பண்பாட்டு முரண்களே பகை முரண்களாக ஆகியிருக்கின்றன. உழவுத் தொழில் மரபினரான வேளாளர்களுக்கும் ஆரியர்களுக்குமான முரண்களை மறைமலை அடிகளார் எடுத்துரைக்கும் பகுதிகள் கவனிக்கத்தக்கவை.
ஆடு மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டு, ஒவ்வொரு காலத்தில் ஒவ்வோர் இடத்தில் குடியேறி, கடைசியாக இப் பரத நாட்டில் புகுந்த ஆரியர், அஞ்ஞான்று வடக்கே வாழ்ந்த வேளாளரின் உழவுத்தொழில் சிறப்பும், அதனால் அவர் பெற்ற நாகரிக வாழ்க்கையும் கண்டு வியந்து அவ் வேளாளரை அண்டிப் பிழைக்கலாயினர். வேளாளரும் தமக்குள்ள செல்வப் பெருக்காலும், இரக்க நெஞ்சத்தாலும் தம்பால் வந்து தமது உதவியை அவாவிய ஆரியர்க்கு உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் தந்து பலவற்றாலும் அவர்களைப் பாதுகாத்து வந்தனர்..
வேளாளர் உழவுத் தொழிலை நடாத்தி நாகரிகத்தைப் பெருக்கச் செய்த பண்டை நாளில், ஆரியர் வேட்டுவ வாழ்க்கையிலும் ஆடு மாடு மேய்க்கும் இடையர் வாழ்க்கையிலுமே இருந்தனர். அதனாலேதான், ஆரியரும் அவர் வழிப்பட்டாரும் செய்த நூல்களில் உழவுத் தொழில் இழித்துரைக்கப்பட்டிருப்பதோடு, அதனைத் தம் இனத்தவர் எவரும் செய்தல் ஆகாது என்னும் கட்டுப்பாடும் காணப்படுகிறது..
பழைய நாளில் ஆரியப் பார்ப்பனர் ஆ எருது முதலியவற்றைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்று வந்தமையின், அவர் தமிழ்நாட்டுக் கோயில்களுள் நுழைதற்கும் இறைவன் திருவுருவத்தைத் தொடுதற்கும் தகுதியிலராக ஒதுக்கி வைக்கப்பட்டனர். கொலைத் தொழில் புலைத்தொழில்களைக் கைக்கொண்டு ஒழுகினமை பற்றி வேளாளரால் தாழ்த்தப்பட்ட ஆரியப் பார்ப்பனர், பையப் பைய அவ் இழிதொழில்களைக் கைவிட்டுத் தம்மைத் தாமே உயர்த்துப் பேசிக்கொண்டு, தம்மைத் தாழ்த்திய வேளாளர்களைத் தாமும் தாழ்த்துதல் பொருட்டு அவரைச் சூத்திரர் என்று வழங்கலாயினர் என விவரிக்கிறார் மறைமலை அடிகளார். அவ்வகையில், உழவுத் தொழில் மரபின் வேளாளர்களைத் தாழ்த்துவதற்கான சூழ்ச்சிகளையும் கருத்தியல்களையும் பன்னெடுங் காலமாகவே உருவாக்கி வந்திருக்கின்றனர் ஆரிய வைதீக மரபினர்.
தமிழர்களுக்கும் ஆரியர்களுக்குமான முதல் பகையும் முரணும் வேளாண்மைத் தொழில் விரிவாக்கத்திலிருந்தே தொடங்கி இருக்கின்றது. வேளாண்மைச் சமூகத்திற்கும் கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்குமான தொழில் பகையே இனப் பகைமையாகப் பரிணமித்திருக்கிறது. குறிப்பாக, வேளாண் மரபினருக்கும் ஆரியருக்குமான மோதலே தொழில் பகையாக - பண்பாட்டுப் பகையாக - இனப் பகையாக - சமயப் பகையாக நீடித்து வந்திருக்கிறது. இதைக் குறித்து டி.தருமராஜன் விவரிக்கும் பகுதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை வருமாறு:
மருதம் என்றொரு நிலவுடைமை வாழ்க்கைமுறை தோன்றும் பொழுது, அதற்கு முன்பு செல்வாக்குப் பெற்றிருந்த முல்லைநில வாழ்க்கையின் அதிகாரங்கள் பழைய அதிகாரங்களாக மாறுகின்றன அல்லது அவர்கள் தங்களைப் புதிய சமூக அமைப்பிற்குப் பழகிக் கொண்டு அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்கின்றன. கால்நடைச் சமூக அமைப்பு வீழ்ந்து, நிலவுடைமை அமைப்பு உச்சம் கொள்ளும் இடைவெளியில், கால்நடைச் சமூகங்கள் தங்களையும் விவசாயத் தொழிலோடு இணைத்துக் கொண்டதை மானிட வரலாறு தெரிவிக்கிறது.
அதுநாள் வரையில் பால், மாமிசம், தோல், மயிர் என்ற அளவிலேயே பயன்படுத்தப்பட்டு வந்த கால்நடைகள், நிலத்தை உழுகிற பணியிலும் உரமிடும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்ட மாற்றங்கள் நடைபெறத் துவங்கின. இதனால், காளைகளின் பயன்பாடு இனப்பெருக்கம் அல்லது போக்குவரத்து என்ற எல்லையைத் தாண்டி, நிலத்தைப் பண்படுத்தல் என்ற புதிய தளத்தை வந்தடைந்தது. விவசாய அறிவு என்பது நில அறிவையும், நீர் மேலாண்மையையும், பயிர் குறித்தத் தெளிவையும், கால்நடைகளின் பயன்பாட்டையும் இணைத்ததாக உருவாகத் தொடங்கியது இப்படித்தான்..
தேவேந்திர சமூகத்தவர்கள் காப்பாற்றி வரும் வரலாற்று ஞாபகங்களின்படி, தமிழகத்தில் நெல் விவசாயத்தில் கரை கண்டவர்களாய் அவர்களே திகழ்ந்தனர். மண்ணின் தன்மைகளைக் கொண்டு அவற்றை விதவிதமாய் அவர்களால் வகைப்படுத்த முடிந்தது. நீரைத் தடுத்து, தேக்கிவைத்துப் பயன்படுத்திக் கொள்ளும் புதிய உத்திகளை அவர்கள் கண்டடையத் துவங்கினார்கள்.
குளம், கம்மாய், ஏரி, கிணறு, கமலை, மடை, கலிங்கல், கால்வாய், வாய்க்கால், மறுகால், ஏந்தல் போன்ற புதிய தொழில் நுட்பங்கள் உருப்பெறத் துவங்கின. நெல்லின் புதிய புதிய வகைகள் கண்டறியப்பட்டு, அவற்றைப் பயிரிடுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. இதுபோன்ற தொழில் நுட்பங்களில் தேவேந்திரர்களின் ஈடுபாடும் திறமையும் ஏராளமான பள்ளு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன..
இந்தியா முழுமையும் நிலவிய இதுபோன்றவொரு விவசாய மலர்ச்சியினால் பெரிதும் திகைத்துப் போனது கால்நடை வளர்ப்புச் சமூகங்கள் மட்டுமே. பரந்த புல்வெளிகளில் கால்நடைகளை மேய்த்து வாழ்ந்து வந்த சமூகங்கள், தங்களது மேய்ச்சல் நிலங்கள் கழனிகளாக மாறி விட்டபடியால், அடிமடியில் கை வைத்தது போல் பதறிப் போயின. அதுநாள் வரையில், மாடு என்றால் செல்வம் என்று மட்டுமே நினைத்து வந்த சமூகம், நிலத்தைப் பொக்கிஷமாய்க் கருதத் துவங்கியதை அவர்களால் உடனடியாய் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. நிலவுடைமைச் சமூகத்தின் புதிய நடவடிக்கைகளுக்குப் பழகிக்கொண்டு தங்களை மாற்றிக்கொள்ள அவர்கள் பெருமளவில் சங்கடப்பட்டார்கள்.
நிலவுடைமைச் சமூக அமைப்பின் தோற்றத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள் என்றால் அது மிகையில்லை. கால்நடைகளை மேய்ப்பதையே தங்களது குலத் தொழிலாய்க் கொண்டிருந்த பிராமணர்கள், புதிய சமூக அமைப்பில் தங்களது இருப்பு கேள்விக்குறியாகிப் போனதைக் கண்டு கலங்கித்தான் போனார்கள். மேலும், சடங்குகளின்போது யாகம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கால்நடைகளை - குறிப்பாக மாடுகளைத் தீயிட்டுப் பொசுக்கும் வழக்கத்தையும், மாமிசத்தை உண்ணும் வழக்கத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர்.
விவசாயம் முதன்மைத் தொழிலாய் மாறிப்போன சூழலில், அவர்களால் தொடர்ந்து இது போன்ற ஆடம்பரங்களில் ஈடுபடுவது முடியாமல் போனது. பால், மாமிசம், தோல் என்ற நேரடிப் பயன்பாட்டையும் தாண்டி, மாடுகள் உழைப்பு என்ற காரணி மூலமும் அளக்கப்படத் துவங்கின. இதனால், மாடு குறித்த புதியதொரு பிம்பம் உருவாகத் துவங்கியது. மாடுகளின் சாணம் மிகச்சிறந்த உரமாகக் கருதப்பட்டது. அவை மனிதர்களோடு மனிதர்களாக விவசாயத் தொழிலில் ஈடுபடும் சக உழைப்பாளியாகப் பார்க்கப்படலாயின. இதனால், பிராமணர்கள் மாடுகளைக் கொன்று செய்யும் யாகங்களும், மாட்டு இறைச்சியை உண்பதும் கண்டிக்கத்தக்க செயல்களாக மாறிப்போயின. தேவேந்திரர்களுக்கும் பிராமணர்களுக்குமான முதல் பகை இப்படியே தோன்றியது.
தங்களது பழைய சமூக மரியாதையை (கால்நடை வளர்ப்புச் சமூக மரியாதையை) நிலைகுலையச் செய்தவர்கள் என்ற கோபம் பிராமணர்கள் மனதில் பெரும் துவேசமாகப் பரவியது. இதனால் வேளாண் தொழில் கேவலமானது என்றும், அதைச் செய்பவர்கள் இழிவானவர்கள் என்றும் பிராமணர்கள் பேசத் தலைப்பட்டனர். மேலும், தாங்கள் செய்கின்ற யாகங்களுக்குத் தேவையான மாடுகளைக் கிடைக்கவிடாமல் செய்தவர்கள் என்ற கோபமும் தேவேந்திரர்கள் மீது திரும்பியது. இதனால், தங்களது பாரம்பரிய உணவான மாட்டிறைச்சியை உண்பதில்கூட தடை ஏற்படுகிறது என்பதை, பிராமணர்களால் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
கால்நடைச் சமூக அழிவு, யாகங்களை நிகழ்த்த முடியாத சூழல், மாட்டு இறைச்சியை உண்பதால் ஏற்பட்ட இழிவு போன்ற காரணங்களினால் பிராமணர்கள் தங்களது இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படுவதை வெகுவாகவே உணர்ந்திருந்தார்கள். இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக அவர்கள் அடையாளப்படுத்தியது வேளாண்குடி மக்களை - அதாவது, தேவேந்திரர்களை. இதுவே, தேவேந்திரர்களுக்கும் பிராமணர்களுக்கும் ஏற்பட்ட முதல் மோதல்.
நன்செய் விவசாயத்தைத் தங்களது பண்பாட்டு அடையாளமாக மாற்றிக்கொண்ட தேவேந்திரர்கள், நிலவுடைமைச் சமூக அமைப்பின் முதுகெலும்பாக நின்று பெரும் போராட்டத்தையே நிகழ்த்த வேண்டி வந்தது. கால்நடைச் சமூகத்துப் பழமைவாதிகளான பிராமணர்களை எதிர்த்த அவர்களது போராட்டம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. தங்களது விவசாய வாழ்க்கைக்கு முக்கியமாகத் தேவைப்படும் கால்நடைகளை யாகம் என்ற பெயரில் வீணே கொன்று அழிப்பதிலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு பெரும் சமூகப் போராட்டத்தை அவர்கள் நிகழ்த்த வேண்டி வந்தது.
தேவேந்திரர்களின், பிராமணர்களுக்கு எதிரான போராட்டம், கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்கும் நிலவுடைமைச் சமூக அமைப்பிற்குமான மோதலாகவே கவனிக்கப்பட வேண்டும். கால்நடை வளர்ப்புச் சமூகப் பிரதிநிதிகளாக பிராமணர்கள் ஒருபக்கமும், நிலவுடைமைச் சமூக அமைப்புப் பிரதிநிதிகளாக தேவேந்திரர்கள் மறுபக்கமும் நின்று போராடினார்கள். அதாவது, பழமைக்கும் புதுமைக்கும் இடையே பெருத்த மோதல் உண்டானது. தேவேந்திரர்கள் புதுமையின் பக்கம் நின்று கொண்டிருந்தனர்.
நெல்லின் அறிமுகத்தாலும், விவசாயம் என்ற புதிய தொழில் முறையின் வளர்ச்சியாலும், சமூகத்தில் இத்தகைய மோதல் உருவான அதே காலகட்டத்தில்தான், பௌத்தம் என்ற சமயம் தனது வேர்களை அகலப் பரப்பி இந்த மண்ணில் தளைக்கத் துவங்கியது.
கருத்தியல் ரீதியாகப் பிராமணர்களோடு சரிக்குச் சரி போராடி வந்த பௌத்தம், நிலவுடைமைச் சமூக அமைப்பின் வளர்ச்சியால் பிராமணர்களின் கொள்கைகளும் மூடநம்பிக்கைகளும் வலுவிழந்து வருவதைக் கண்டதும், விவசாயக் குடிகளையெல்லாம் ஒன்றிணைக்கும் வேலையைச் செய்யத் துவங்கியது. தேவேந்திரர்களுக்கும் பெளத்தத்திற்குமான உறவு, வலுவான ஒன்றாக மாறத் தொடங்கியது இந்தக் காலகட்டத்தில்தான் என, வேளாண் தொழில் மரபினருக்கும் ஆரிய வைதீக மரபினருக்குமான அக முரண்பாட்டையும் புற முரண்பாட்டையும் விவரித்திருக்கிறார் டி.தருமராஜன்.
ஆரிய வைதீக மரபினரை எதிர்த்துப் போராடியதன் காரணமாகவும் - வேளாண்மை உற்பத்தியில் பெருவாரியாக ஈடுபட்டு வந்ததன் காரணமாகவும்தான், ஆசீவகச் சமயமும் பவுத்த சமயமும் வேளாண் தொழில் மரபினரிடம் பண்பாட்டு நெருக்கத்தைக் காட்டியிருக்கின்றன. வேளாண் தொழில் மரபினரின் தொழில்சார் பண்பாட்டு அடையாளமான இந்திர அடையாளத்தை ஆசீவகமும் பவுத்தமும் அடையாளப்படுத்தியிருப்பதன் பின்புலமும் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
வேளாண் மரபினரோடு பண்பாட்டு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட ஆசீவக, பவுத்த சமயங்களைப் போலவே, பிற்காலத்தியச் சைவ, வைணவச் சமயங்களும் வேளாண் மரபினரோடு பண்பாட்டு நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சைவ, வைணவத் தமிழ் இலக்கியங்கள் பலவும் வேளாண் மரபினரைப் பலவாறு புகழ்ந்து பாடியிருக்கின்றன. மேலும், தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களில் வேளாண் மரபினருக்குப் பரிவட்டம் கட்டுதல், முதல் மரியாதை அளித்தல், முதல் மண்டகப்படி வழங்கல், தேர் வடம் பிடித்தல், நாள் கதிர் வழங்கல், விதைக்கோட்டை வழங்கல் போன்ற வழிபாட்டுச் சடங்குகளில் முக்கியத்துவம் அளித்திருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
வேளாண் தொழில் மரபின் தமிழர் வழிபாட்டு அடையாளமாக இருந்துவந்த இந்திரருக்கு, கோயில்களும் வழிபாட்டு மரபுகளும் தனியாகவும் ஆசீவகத்திலும் பவுத்தத்திலும் நிறைய இருந்திருக்கின்றன. அதேவேளையில், அவற்றையெல்லாம் ஆரிய வைதீகச் சமய மரபுகள் பிற்காலத்தில் அழித்திருக்கின்றன; மறைத்திருக்கின்றன; தன்வயப்படுத்தி இருக்கின்றன. அதனால்தான், இந்திரருக்கெனத் தனிக் கோயில்கள் இல்லாமலும், வழிபாடுகள் ஏதுமற்றுப் பூட்டிக் கிடப்பதுமாக இருக்கின்றன.
ஆயினும், வேளாண் மரபிலும் - தமிழர் மரபிலும் இந்திர வழிபாடு தனித்துவ அடையாளமாக இருந்து வந்திருந்திருக்கிறது. இதன் காரணத்தால்தான், இந்திர அடையாளத்தைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக இந்திரன் பற்றிய பண்பாட்டுப் புனைவுகளைப் புராணங்கள்வழி உருவாக்கி இருக்கிறது ஆரிய வைதீகம். அதுமட்டுமல்லாமல், தொழில் மரபிலும் வழிபாட்டு மரபிலும் தமிழ் அடையாளமாக இருந்து வந்த இந்திர அடையாளத்தை, சிறுமைப்படுத்தவும் இழிவுபடுத்தவுமான நோக்கில், இந்திரன் பற்றிய இழி புராணங்களைக் கட்டமைத்திருக்கிறது ஆரிய வைதீகம்.
மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 220,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு :
9080514506
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக