மருத நிலத்தின் தெய்வமாக வேந்தன் எனக்குறிக்கும் வகையில்,
வேந்தன் மேயத் தீம்புனல் உலகம்
எனச் சுட்டுகிறது தொல்காப்பியம். மண்ணுலகில் வாழும் மக்களைக் காக்கும் அதிகாரியாகக் கருதப்பட்டவரே வேந்தர் ஆவர். வேளாண்மையே முதன்மைத் தொழிலாய் நடைபெற்றுவந்த மருத நிலச் சமூகக் கட்டமைப்பில், மக்களைக் காக்கும் கடமையும் அதிகாரமும் புரிந்தோர் பல்வேறு பெயர்களில் குறிக்கப்பட்டுள்ளனர்.
இதைக் குறித்து ம.சோ.விக்டர் கூறும்போது, குடும்பன் - கிழான் - வேளிர் - மன்னன் என்ற படிநிலைகளில், வேளாண் மக்களில் சிலர் ஆளும் அதிகாரத்தைப் பெற்றனர். இவர்கள் அனைவரும் வேளாண் குடியினரே என்பதை மறந்துவிடக் கூடாது. தகுதியுள்ள எவரும் மேற்கண்ட பொறுப்புகளில் வரத் தடையிருந்ததில்லை.
வேளாண் தொழிலை விடுத்து ஆளும் துறையில் இவர்கள் பட்டறிவைப் பெற்றிருந்ததால், பிற்காலத்தில் குடும்பன் முறையிலிருந்து மன்னன் வரை, மரபு வழியில் அமர்வதற்கான சூழ்நிலை உருவாயிற்று. இவர்களில் நாடெங்கும் குடும்பர்களின் எண்ணிக்கை மிகுந்து, உயர் பொறுப்புகள் ஏற ஏற, எண்ணிக்கை குறைந்து, மன்னன் என்ற ஆளுமை தனியொருவனாக அமைந்தது. ஊர்க்குடும்பனே மன்னராட்சியின் தொடக்கமும் அடிப்படையுமாக இருந்தான் என்கிறார்.
வேந்தர் எனும் அரசுருவாக்க ஆளுமையர்கள் குறித்துப் பிரபஞ்சன் கூறும் கருத்தும் இவ்விடத்தில் நோக்கத்தக்கது. அதாவது, ஆற்றுப் பாசனத்தின் உதவியுடன் நெல் விவசாயத்தை மருத நிலத்துக்குக் குடிபெயர்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். மனித குல முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கியது மூன்று கண்டுபிடிப்புகள். முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம், மூன்றாவது விவசாயம். நிலத்தை உழுது நெல்விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றனர். அந்த உழவர்கள், உலகுக்கு அச்சாணிபோல இருந்து உணவு வழங்கும் இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள்.
வேந்தன் என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள். மற்றவர்கள் வேளிர், மன்னன், கோ என்ற பெயரிலும், அரசன் என்ற பெயரால் மட்டுமே அறியப்படுகிறார்கள். வேந்தர் என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள் என, உலகுக்கு அச்சாணியாய் இருந்து, உலகுக்குச் சோறிடும் பண்பாலும் வளத்தாலும் திறத்தாலும் உழவுத் தொழில் மரபினரே வேந்தராகி இருந்ததாக விளக்கப்படுத்துகிறார் பிரபஞ்சன்.
மண்ணுலகின் வேந்தரைத் தொழுது வழிபடும் பண்பாட்டு வழக்கம் உழவுத் தொழில் மரபினரிடம் பல காலகட்டத்திலும் நீடித்து வந்திருக்கிறது. தாய், தந்தை, குரு, தெய்வம் போன்றவற்றுக்கு நிகராகவே வேந்தரும் வழிபடு அடையாளமாகக் கருதப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, பாண்டிய, சோழ, சேர வேந்தர்கள் மட்டுமே தெய்வ நிலைக்கு நிகரான வழிபடு அடையாளமாகக் கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழ் மூவேந்தர்களைத் தவிர, அரசதிகாரம் சார்ந்த வேறு எவரையும் வழிபடுவதோ தொழுவதோ வேளாண்மை உழவுத் தொழில் மரபினரின் வழக்கத்தில் இருந்ததில்லை. சதி செய்து ஆட்சிக்கு வந்த பிறரை - பின்னுள்ளோர்களை அவர்கள் மதிப்பதுமில்லை; மதித்ததுமில்லை என்பதைக் கட்டி மகிபன் பள்ளுப் பாடல் பதிவு செய்திருக்கிறது. அதாவது,
தந்தை தாய் குரு தெய்வமும் செந்தமிழ்ப் பூசுரர் இன்றி
சதிராய்ப் பின்னுள்ளோர்களை மதியாதவன்…
இந்திரன் குலத் தோன்றியே வந்தநாள் முதலாகவே
இலகும் ஏழூர்க் குடும்பன் நானே
என்கிறது அப்பாடல்.
வேளாண்மை உழவுத் தொழிலின் உற்பத்திச் செயல்பாட்டில் வேந்தர்களின் வழிநடத்தலும் நிரம்ப இருந்திருக்கிறது. வேளாண்மை உழவு மரபிலிருந்தே வேந்தர்கள் உருவாகி வந்த நிலையில், வேளாண்மை உழவுத் தொழிலுக்குத் தேவையான வழிவகை வாய்ப்புகளை அரசுக் கட்டமைப்பின் துணையோடும் பலத்தோடும் வேந்தர்கள் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.
ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், அணைகள், கால்வாய்கள் என நீர் ஆதாரங்களை ஏற்படுத்துவதும் புனரமைப்பதுமான பணிகளையும், வேளாண்மை உற்பத்திப் பெருக்கத்திற்கான அரசின் இதரத் திட்டங்களும், வேளாண் விளைபொருட்களுக்கான சந்தைப்படுத்தல் உள்ளிட்ட வேளாண்மைத் தொழில் அனைத்துக்குமான அறப்பணிகள், வேந்தர்கள் முன்னெடுப்பில் நடந்திருக்கின்றன. அதனால்தான், மருத நில வேளாண்மை உற்பத்திச் சமூக அமைப்பில் வேந்தர்கள் மதிக்கப்பட்டிருக்கிறார்கள்; வழிபடப்பட்டிருக்கிறார்கள்.
வேளாண்மை உற்பத்திச் சமூக அமைப்பில் வேந்தர்களின் பங்களிப்பைக் குறித்துக் கூறும் ந.சி.கந்தையாவின் பின்வரும் கருத்தும் ஒப்புநோக்கத்தக்கது. அதாவது, பயிர் செய்கைக்குரிய நாடுகளிலிருந்த மக்கள் ஆதிகாலத்தில் பயிர்ச் செய்கைக்கேற்ற குளங்கள் அமைத்தும், கால்வாய்கள் வெட்டியும் நாட்டை வளப்படுத்திய மன்னரைத் தெய்வமாக வணங்கினார்கள். எகிப்தியர்கள் தம் முதல் அரசனைத் தெய்வமாக வழிபட்டனர். அவனும் அவன் வழி வந்தோரும் பயிர்ச் செய்கைக்குரிய காலத்தில் முதல் முதல் ஏர் பிடித்து உழுதல் மரபாயிருந்தது.
இவ்வழக்கு இலங்கை அரசரிடத்தும் இருந்தது. இலங்கையிலும் இவ்வாறே பெரிய குளங்கள் வெட்டிப் பயிர்ச் செய்கையை வளப்படுத்திய மன்னர் வழிபடப்பட்டனர். சுமேரிய அரசனும் வழிபடப்பட்டான். இவ்வாறே தமிழ் நாட்டிலும் வேந்தன் வணக்கம் வயலும் வயல் சூழ்ந்தனவுமாகிய நிலங்களில் வாழ்ந்த மக்களிடையே இருந்ததெனத் தொல்காப்பியம் கூறுகின்றது என விவரிக்கிறார் ந.சி.கந்தையா.
இத்தகைய வேந்தர் வழிபாடு வேளாண்மை உழவுத் தொழில் மரபினரிடம் இருந்திருப்பதை,
சேமமே மிகு சந்நிதியின் சேர சோழ பாண்டியர்க்குத்
தேவை பால் பழமும் பொங்கல் அவல் யாவையும்
கோமகன் முதலாயுள்ளோ நேமியோர் பதமும் வேண்டிக்
கூறிடுந் தெய்வங்களையே நேருடன் போற்றி
என, சேர சோழ பாண்டிய வேந்தர்களைக் குல தெய்வமாக வழிபட்டு, பொங்கல் படையலிட்டுப் பூசைகள் செய்த உழவுத் தொழில் மரபினரின் வேந்தர் வழிபாட்டைப் பதிவுறுத்துகிறது திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு.
திருவேட்டை நல்லூர் அய்யனார் கோயிலில் சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களின் சிலைகளைக் கொண்ட வழிபாட்டு மண்டபத்தில் பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்த வழிபாட்டு மரபு, இன்னும் வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உழவுத் தொழில் மரபினரிடம் நிலவிய இத்தகைய வேந்தர் வழிபாடு, தனித்த பண்பாட்டு அடையாளத்துடன் இருந்த வழிபாட்டு மரபுகளுள் ஒன்றாகவும் இருந்திருக்கிறது. அதனால்தான், தொல்காப்பியர் காலத்தில், மருத நிலத்தின் வழிபடு தெய்வமாக வேந்தன் குறிக்கப்பட்டிருக்கிறது.
மக்கள் கூட்டத்திற்குத் தலைமை ஏற்று வழிநடத்தியவர்களை - முறையாக மக்களைக் காத்தவர்களைத் தொழுவதும் வாழ்த்துவதும் மட்டுமல்லாமல், அவர்கள் வழியில் வாழ்வின் பாடுகளை அமைத்துக்கொண்ட மக்கள் பிரிவினர், அவர்கள் உயிர் நீத்த பிறகு தெய்வமெனத் தொழுது வழிபடவும் செய்துள்ளனர்.
குடும்பத்திலோ - குழுவிலோ - ஊரிலோ வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைவுகூறும் வகையிலும், மக்களுக்காகப் போரிட்டு மடிந்தவர்கள் நினைவாகவும் வழிபாடு நடந்திருக்கிறது. நீத்தார் வழிபாடு, நடுகல் வழிபாடு போன்ற வழிபாடுகள், ஏதோ ஒருவகையில் மக்களுக்காக வாழ்ந்து மடிந்தவர்களைத் தெய்வமெனக் கருதும் சடங்கியல் கூறுகளைக் கொண்டிருப்பவைதான்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்;
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தான் ஓம்பல் தலை;
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்
போன்ற குறட்பாக்கள், தமிழரிடம் நிலவி இருந்த தலைமை வழிபாடுகளைப் புலப்படுத்தக் கூடியவைதான். இந்நிலையில், மானுட நிலையிலிருந்து தெய்வ நிலையை அடைய முடியும் எனத் தமிழர் நம்பியதன் வெளிப்பாடுதான் இத்தகைய தலைமை வழிபாடு எனும் க.ப.அறவாணர் கருத்தும் பொருத்தமுடையதாகும்.
வேளாண் வாழ்க்கையும், வேளாண் உற்பத்தியும், வேளாண்குடிகளின் பண்பொழுக்கமுமே வேந்தன் வழிபாட்டுக்குத் தோற்றுவாயாக அமைந்திருக்க வேண்டும். வேளாளரே வேந்தராகி இருந்த சமூக அமைப்பில், வேளாளரே வேந்தன் வழிபாட்டின் அடிப்படை ஆவர். இந்நோக்கில், பாவாணர் கூறும் பின்வரும் கருத்துகளும் குறிப்பிடத்தக்கவையாகும்.
நல்வினைகள் சிறந்த விருந்தோம்பலுக்கு ஏராளமாக உணவுப் பொருள் வேண்டும். ஆதலால், அதை விளைவிக்கக்கூடிய உழவருக்கு அவ்வினை சிறப்பாக உரியது என்றும் கருதப்பட்டது. விருந்தோம்பி வேளாண்மை செய்து வந்ததனால் அவன் வேளாளன் எனப்பட்டான். விருந்தோம்பல் பண்பு வழிவழி வளர்ந்து வந்ததனால், வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்னும் கொள்கை நிலைத்துவிட்டது. இம்மையில் இல்லத்திலிருந்து அறம் செய்து வாழ்பவன் மறுமையில் தேவனாய்ப் பிறப்பது திண்ணம் என்பதை உணர்த்தவே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்;
தெய்வத்துள் வைக்கப் படும்
என்றார் திருவள்ளுவர்.
இல்லறத்தைச் சிறப்பாக நடத்தும் பொது மக்களான வேளாளர், மறுமையில் தேவருலகில் தேவராகத் தோன்றுவார் எனின், இம்மையில் வேந்தனாக இருந்து அறவாழ்க்கை நடத்தியவன் மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்னும் கொள்கையும் எழுந்தது. அதனால், தேவர் கோனைத் தேவர் வேந்தன் என்றனர். அப்பெயர் பின்னர் வேந்தன் என்றே குறுகி வழங்கிற்று. வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. வேந்தன் வணக்கம் குமரி நாட்டிலேயே தோன்றி விட்டதனால், முதல் பாண்டியனே வேந்தனாகக் கொள்ளப்பட்டு இருத்தல் வேண்டும்.
உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மழை விண்ணிலிருந்து பெய்வதால், விண்ணுலக வேந்தன் மழைக்கு அதிகாரியானான். ஆண்டுதோறும் வேந்தன் விழா மூவேந்தர் நாட்டிலும் கொண்டாடப்பட்டது. அதை வேந்தரே நடத்தி வந்தனர். சிவ மதமும் திருமால் மதமும் தோன்றியபின் வேந்தன் விழா படிப்படியாகக் கைவிடப்பட்டது. இறுதியாக அதை நடத்தி வந்தவர் புகார்ச் சோழரே. ஆரியர் - பிராமணர் தென்னாடு வந்த பின் வேந்தன் விழா வடநாட்டில் போன்றே இந்திரவிழா எனப்பட்டது.
நல்வினை செய்தவரின் உயிர்கள் இறந்தபின் மேல் உலகத்திற்குச் செல்லும் என்றும், உலகில் (மருத நிலத்தில்) அரசனாக இருந்தவன் மறுமையில் மேல் உலகத்திலும் அரசன் ஆவான் என்றும், மருதநில மாந்தர் கருதி, முதன்முதல் இறந்த அரசனையே வேந்தன் என்று பெயரிட்டு வணங்கினார்கள். மழை மேலிருந்து பெய்வதால், வேந்தனாகிய தங்கள் தெய்வத்திடம் இருந்து வருவதாகக் கருதி, மழை வளத்திற்காகவும் அவனை வழிபட்டார்கள்.
நல்வினையாவன வேளாண்மையும் தொழிலும். போர்த் தொழிலில் ஒருவன் பிறர் நன்மைக்கென்று தன் உயிரைக் கொடுத்தலால், அது தலைசிறந்த வேளாண்மை ஆகும். சிறந்த இல்லறத்தார்க்கும் போரில் பட்ட மறவர்க்கும் மறுமையில் வானுலகம் என்பது, அவர் வேளாண்மையில் சிறந்தவர் என்னும் கருத்து பற்றியே,
செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
என்றார் திருவள்ளுவர். 26ஆம் புறப்பாட்டும் இக்கருத்து பற்றியதே. நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்க என்பதனால், போரில் இறந்தவர் வானுலகம் புகுவர் என்ற கொள்கையால் அறியப்படும்.
உழவுத்தொழில் செய்யும் பள்ளரும் போர்த்தொழிலுக்குரிய மறவரும் இன்றும் தங்களை இந்திர குலத்தார் என்றும், தங்கள் குல முதல்வன் இந்திரன் என்றும் கூறிக் கொள்கின்றனர் எனவும், இந்திரன் என்பது வேந்தன் என்னும் சொல்லுக்கு நேரான வடநாட்டுச் சொல். வேந்தன் மருதநிலத் தமிழ்த் தெய்வம் எனவும் வேந்தன் வழிபாடு குறித்து விவரிக்கிறார் பாவாணர்.
அதேபோல், மருதநிலத்தில் இந்திரனை வணங்கி வேளாண் தொழில் மேற்கொண்ட உழவர்களைப் பற்றி ந.சி.கந்தையா கூறும்போது, ஆற்றோரங்களில் வாழ்ந்து தானியங்களை விளைவித்தோர் வேளாளர் எனப்பட்டனர். அவர்கள் ஆற்று நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தனர். ஆற்றுக்குச் சேய்மையில் வாழ்ந்தோர் மழை நீரை ஏரிகளிலும் குளங்களிலும் தேக்கிவைத்து ஏற்றம், கபிலை, பிழா, இடா முதலியவைகளால் இறைத்துச் சாமை, அவரை, துவரை முதலிய தானிய வகைகளையும் விளைவித்தனர்.
இந்நிலத்துக்குரிய குலதெய்வம் வேந்தன். அக்கால மக்கள் நல்ல அரசனின் ஆளுகையில் எல்லா நன்மைகளும் உண்டாகின்றன என்று நம்பினார்கள். ஆகவே அவர்கள் எல்லா நற்குணங்களும் அமைந்த அரசனைத் தெய்வமாக வணங்கினார்கள். பிற்காலத்தில் வேந்தன் இந்திரன் எனப்பட்டான் என்கிறார்.
மேலும், மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதனால் தமிழகத்தில் மருதநிலத்தில் அரசன் இருந்தான் என்று அறியலாம். பயிர்களைச் சேதமில்லாமல் காக்கத் தோன்றிய வேளாண் விஞ்ஞானி வீரர் பரம்பரையினரே பிற்காலத்தில் அரசராயினர், வேந்தராயினர் என்று கூறுவார் சாமி சிதம்பரனார்.
அவ்வகையில், அறமும் மறமும் கொண்டு மண்ணுலகில் வாழ்ந்த வேளாளரே விண்ணுலகிலும் தெய்வமாய்த் தோன்றுவர் எனவும், மண்ணுலகில் அறத்தோடும் மறத்தோடும் ஆட்சி புரிந்த வேந்தரே விண்ணுலகின் தெய்வங்களுக்கும் வேந்தராவர் எனவும் கருதப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், வேளாண்மைக்கான மழை நீரானது, விண்ணுலகில் இருந்து வருவதனால், மழை நீரும் விண்ணுலகின் வேந்தராகவே கருதப்பட்டிருக்கிறது. மழை நீரும் விண்ணுலகின் தேவர் வேந்தராகவே கருதப்பட்டிருக்கிறது.
தேவர் வேந்தர் என்பது குறுகி, மழை நீர்த் தெய்வமும் வேந்தர் என்றே அழைக்கும் மரபு பெருவழக்காய் இருந்திருக்கிறது என்பதை மேற்காணும் எடுத்துரைப்புகளிலிருந்து அறியமுடிகிறது. அதேவேளையில், மழைத் தெய்வமாகக் கருதப்பட்ட வேந்தன் வழிபாடு என்பது தமிழர் அடையாளமாகவும், இந்திர வழிபாடு என்பது ஆரிய அடையாளமாகவும் ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர்.
எனினும், மழைநீர்த் தெய்வமாக வேந்தன் எனவும், இந்திரன் எனவும் மக்கள் வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் தமிழர் வழிபாட்டு மரபாகவும் அடையாளமாகவும் குறிக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பதற்கான சான்றுகளும் விவரிப்புகளும் நிறையவே கிடைத்திருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கவை.
அதாவது, தமிழர் வழிபாட்டு மரபில் குறிக்கப்படும் இந்திரன் எனும் அடையாளம், ஆரிய மரபில் சுட்டப்படும் இந்திரன் எனும் அடையாளத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைந்திருக்கிறது. ஆனாலும், ஆரிய மரபில் இந்திரன் எனும் அடையாளம் இருப்பதாலேயே, தமிழர் மரபில் நிலவும் இந்திரன் அடையாளத்தை ஆரிய அடையாளமாகவே கருதுகின்றனர். எனினும், தமிழர் வழிபாட்டு மரபில் இந்திரன் எனும் அடையாளம் ஆரிய அடையாளத்திலிருந்து வேறுபட்டது ஆகும்.
மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 220,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு :
9080514506
அருமையான தகவல். நூல் முழுவதும் படிக்க ஆவல்...!
பதிலளிநீக்குமிக்க நன்றி. நூலை முழுவதுமாகப் படித்துவிட்டு கருத்தைப் பகிர்க .
பதிலளிநீக்குஇன்றைய தமிழர்கள் தெளிவு பெற வேண்டிய பதிவுகள் உள்ளது.வட்டார வழக்கு மொழியை எந்தவொரு சிதைப்பு இல்லாமல் உள்ளவாறே பதிவு செய்துள்ளது நல்ல முயற்சி.மழை விழா பற்றிய குறிப்புகள் மள்ளர் அல்லாத பொதுச்சமூகத்திற்கு வேளாண் குடிகளின் பொதுமை பார்வை அறிந்து கொள்ள முடிகிறது.சில பக்கங்களில் பேச்சு வழக்கில் உள்ள விவசாயம் என்ற சொல் பதிவு செய்துள்ளதால் தமிழ் அடையாளத்தை மீட்கமால் வேறு ஒரு அடையாளத்தை தருகிறதா?.உழவன் என்று பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்கு