சனி, 23 அக்டோபர், 2021

தமிழரின் இந்திரன் வேறு; ஆரியரின் இந்திரன் வேறு : மகாராசன்

வேந்தன் வழிபாடு எனும் பேரிலும், இந்திர வழிபாடு எனும் பேரிலும் மருத நிலத்தில் நடைபெற்று வந்த வழிபாடானது, மழைநீரைத் தெய்வமாகக் கருதிய மழை வழிபாட்டுச் சடங்குதான் என்பதையும், வேந்தன் எனும் இந்திர வழிபாடு என்பது, ஆரிய மரபில் சுட்டப்படும் இந்திர அடையாளத்தோடு தொடர்புடையதல்ல என்பதையும் மறைமலை அடிகளார் மிக விரிவாகவே விளக்கப்படுத்தி இருக்கிறார். அவை வருமாறு:

ஆரியர் வணங்கிய இந்திரனும் தமிழர் வணங்கிய இந்திரனும் ஒருவர் அல்லர். ஆரியர்க்குரிய இந்திரன் இடி மழை மின்னல் முதலியவற்றிற்குரிய தெய்வமாதலோடு, அவர்தம் பகைவரோடு போராடுங்கால் அவர்க்கு உதவியும் துணையுமாய் நின்று அவர்க்கு வெற்றியைத் தருபவனாகவும், அவர் தரும் சோமச் சாற்றையும் விலங்கின் இறைச்சியையும் நிறைய உட்கொண்டு, அவர் வேண்டிய நலங்களையெல்லாம் அவர்க்கு விளைவிப்பவனாகவும் சொல்லப்படுகின்றான். 

தமிழர் வணங்கிய இந்திரனோ வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் உள்ள உழவர்களால் மழையின் பொருட்டு மட்டும் வேண்டி வணங்கப்பட்ட மழைக் கடவுள் ஆவான். மழையின் பொருட்டாகவன்றி, வேறு எந்த நன்மைப் பேற்றின் பொருட்டாகவேனும் தமிழர்களால் அவன் வணங்கப்பட்டவன் அல்லன். இருக்கு வேதத்தில் உள்ள பாட்டுகளில் மூன்றில் ஒருகூறு இந்திரன் மேல் செய்யப்பட்டு இருத்தல் போல, தமிழ் நூல்களில் எங்கும் ஒரு பாட்டேனும் இந்திரன் மேல் செய்யப்படவில்லை. 

தொல்காப்பியம் முதலான மிகப் பழைய தமிழ் நூல்களில் இந்திரன் என்னும் சொல்லே காணப்படவில்லை. மருத நிலத்து மக்களால் கொண்டாடப்படும் தெய்வம் வேந்தன் என்று சொல்லப்படுகின்றது. வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதல் காண்க. தமிழர் மழையை வேண்டி வணங்கிய வேந்தனும், ஆரியர் மழையின் பொருட்டாகவும் வணங்கிய இந்திரனும் மழைக் கடவுளாதல் பற்றிப் பிற்காலத்தவரால் அவ்விருவரும் ஒருவராகக் கொள்ளப்படுவார் ஆயினர்.

அவ்வாறு கொள்ளப்படினும், தமிழர்க்குரிய வேந்தனுக்கும் இருக்கு வேத ஆரியர்க்குரிய இந்திரனுக்கும் ஏதோர் இயைபும் இல்லை என்பது, அவ்விருவர்தம் பழைய நூல்களையும் நன்கு ஆராய்ந்து பார்க்கும் நடுநிலையாளர்க்கும் நன்கு விளங்கும். பிற்காலத்துப் புராண நூல்களில் சொல்லப்படும் இந்திரனுக்கும் இருக்கு வேதத்தில் சொல்லப்படும் இந்திரனுக்கும்கூட சிற்சில வகைகளில் தவிர, மற்ற பல வகைகளில் ஏதோர் ஒற்றுமையும் இல்லை. 

உற்று ஆராயுங்கால், தமிழர்க்குரிய வேந்தன் என்போன், தமிழர்க்குள் முதன்முதல் தலைவனாய்த் தோன்றி, மழைபெய்யும் காலமும், அம் மழையின் உதவியால் பயிர் செய்வதற்கேற்ற அளவிய நிலமும், அந்நிலத்தைத் திருத்தி செவ்வனே பயிர் முளைக்கும் வகைகளும் நன்குணர்ந்து, உழவுத்தொழிலைக் கற்பித்துத் தமிழ் மக்களை மேல்நிலைக்குக் கொணர்ந்தவன் ஆதல் வேண்டும் என்பது புலப்படும். 

நன்றி செய்த முன்னோரை நினைந்து அவர்களைப் பரவுதல் தமிழர்க்கு இயற்கை ஆதலால், அவர் கால்வழியில் வந்த மருதநிலத்து உழவர் முதல் வேந்தனான அவனது ஆவியை வேண்டி வணங்குவார் ஆனார் என்க என விவரிக்கிறார் மறைமலை அடிகள். 

தமிழர் மரபிலிருக்கும் இந்திரனையும், ஆரிய மரபில் சுட்டப்படும் இந்திரனையும் வேறுபடுத்திக் காட்டும் மறைமலை அடிகளாரின் எடுத்துரைப்பைப் போலவே, ந.சி.கந்தையா கூறும் கருத்தும் பொருத்தமுடையதாகும். அதாவது, வேந்தன் வணக்கம் இந்திரன் வணக்கமாக இலக்கியங்களில் கூறப்படுகிறது. இவ் இந்திரனும் ஆரியர் கடவுளாகிய இந்திரனும் ஒருவராவரோ என்பது ஆராயத்தக்கது. வடநாட்டார் இந்திரனை வேள்விகள் வாயிலாக வழிபடுவர். தென்னாட்டிலோ விழாக் கொண்டாடி வழிபடுவர். வடநாட்டாரது இந்திரன் தெய்வ உலகத்திற்கு அரசன் எனப் புராணங்கள் கூறுதலின், தென்னாட்டார் தம் வேந்தனுக்குத் தேவர் உலக அரசன் என்னும் பொருளில் இந்திரன் எனப் பெயரிட்டுத் தம் மரபுப்படியே பழைய வழிபாட்டை நடத்தி வந்திருத்தல் கூடும்.. ஆராயுமிடத்து, வேந்தன் வழிபாடே இந்திரன் வழிபாடல்லது வேறன்று என்பார் ந.சி.கந்தையா.

மருத நிலத்தின் தெய்வமாகக் குறிக்கப்படும் வேந்தனும் இந்திரனும் ஒன்றேதான்; அதுவும் தமிழர்தம் தெய்வமேதான். அதிலும் குறிப்பாக, மருத நிலத்தின் மக்கள் மட்டுமே வழிபடப்பட்ட தெய்வம்தான் என்பதை பி.டி.சீநிவாச ஐயங்கார் பல காரணங்கள் தந்து விளக்கியுள்ளார்.

அதாவது, தென்னிந்திய மக்கள் பழங்கற்காலத்தின் இறுதி நாட்களிலேயே நிலத்தினை உழுது பயிரிடக் கற்றனர் என அறிகிறோம். உழவுத் தொழிலினை மேற்கொண்ட மக்கள் தமிழகத்தில் மருத நிலத்திலேயே வாழ்ந்து வந்தனர். அவர்கள் வளிமண்டலத் தெய்வம் ஒன்றினைத் தொன்றுதொட்டு வழிபட்டு வந்திருக்க வேண்டும். உணவுப் பொருட்களைப் பயிரிடுவதில் ஈடுபட்ட வேளாண் மக்கள், உழவுத் தொழிலுக்குப் பெரிதும் இன்றியமையாத மழையினைத் தரும் தெய்வம் ஒன்று உண்டெனக் கருதியது இயற்கையே ஆகும்.

வேந்தன் ஆரியர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்ட இந்திரனாக இருந்தால், தமிழகத்தில் மருத நிலத்தில் வாழும் மக்கள் மட்டும் வழிபடும் தெய்வமாக அவன் விளங்குவதும், விந்தியத்திற்கு வடக்கே எல்லா மக்களும் வணங்கும் தெய்வமாகக் காணப்படுவதற்கும் உரிய காரணம் யாது?

ஆரியர்கள் தென்னிந்தியாவில் குடியேறியபோது, அவர்களுடைய சமயக் கருத்துகள் தென்னாட்டில் பரவின. அந்நிலையில், ஆரியரின் இந்திரனுக்குரிய பண்புகளை ஒட்டி, மருத நிலத் தெய்வமான வேந்தன் தேவர்களுக்கு எல்லாம் அரசனான இந்திரனாகக் கருதப்பட்டான். இக்கருத்து, பண்டைத் தமிழர்க்கும் ஆரியருக்கும் இடையே உண்டான கலப்பு முழு நிறைவடைந்த காலத்தில் தோன்றியதாகும்.

மேலும், இந்திர வழிபாட்டினை ஆரியர்கள் செய்த முறைக்கும், மருத நிலத் தமிழர்கள் செய்த முறைக்கும் மிக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே, வட நாட்டு இந்திரனைத்தான் தமிழகத்தில் வாழ்ந்த மருத நில மக்கள் வழிபட்டனர் என்று கூறுவது பொருத்தமற்றதாகும் என்பார் பி.டி.சீநிவாச ஐயங்கார்.

மேற்காணும் குறிப்புகளின் வழியாக, தமிழ் நாட்டின் நிலப்பரப்பில் உழவுத் தொழில் மரபினரைத் தவிர, மற்ற தொழில் மரபினர் எவரிடத்தும் இந்திரன் அல்லது வேந்தன் தெய்வ வழிபாட்டு வழக்கம் இல்லை என்பதும், தமிழ் நிலப்பரப்பில் குறிக்கப்படும் இந்திரன் அல்லது வேந்தன் எனும் அடையாளம், தமிழ் வேளாண் தொழில் மரபினரின் மழைத் தெய்வமே ஆகும் எனக் கருதலாம்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக