வியாழன், 21 அக்டோபர், 2021

வேந்தன் - இந்திரன்: மழைப் பொருண்மையின் அடையாளங்கள் - மகாராசன்

வேந்தன் என்பதும், இந்திரன் என்பதும் மழைநீரைக் குறிக்கும் ஒரே பொருண்மை கொண்ட இருவேறு சொற்களாகும் எனும் பொருளில், ம.சோ.விக்டர் எடுத்துரைக்கும் பின்வரும் கருத்து ஒப்பு நோக்கத்தக்கது.

வேய் என்ற மூலச் சொல் விரிந்து, வேய்ந்தன் என்று சொல்லப்பட்டது. வேய் - வேய்தல்: விரிதல், பரந்திருத்தல், விரிந்த பரப்பளவைக் கொண்டிருத்தல். வேய் - வேய்ந்தன்: விரிந்த, பரந்த நிலப்பரப்பை ஆள்பவன். வேய்ந்தன் - வேந்தன் எனச் சுருக்கப்பட்டது. மருதநிலத்தின் வேளாண்மைக்கான வயல்களையும், வேளாண் மக்களையும் ஆள்பவன், வேந்தன் எனப்பட்டான். வேந்தன், வேளாண் குடியின் தலைவனாவான்.

சில் என்பது பொதுவாகக் கெட்டியான பொருளையும், சிந்துநீர்ப் பொருளையும் சுட்டும். சிறுசிறு துளிகளாக விழும் மழைநீரைச் சிந்து என்ற சொல் குறிக்கும். சில் + து = சிந்து என்றானது. அரன் - ஒறுப்பவன், ஒறுக்கின்ற மன்னன் அல்லது வேந்தன் என்பதே பொருளாகும். சிந்து + அரன் = சிந்திரன், மழை. சிந்து - இந்து எனத் திரியும் வாய்ப்புகள் உண்டு. சிந்திரன் - இந்திரன் எனப்பட்டது; மழைக்கான கடவுள் என்ற பொருளைத் தருவது என்கிறார் ம.சோ.விக்டர்.

சிந்து என்னும் பெயர் குறித்துப் பாவாணர் கூறியிருக்கும் கருத்தும் நோக்கத்தக்கது. ஆரியர் வருமுன்னர் தமிழரே வடநாட்டிற் குடியேறியிருந்தமையாலும், குமரிமலை முழுகி அரபிக்கடல் தோன்றியபின், சிந்துவெளி வழியாகவே தமிழர் அல்லது திராவிடர் மேலை ஆசியாவிற்கும் அதன்பின் ஐரோப்பாவிற்கும் சென்றிருப்பராதலாலும், சிந்து என்னும் ஆற்றுப்பெயர் தமிழர் இட்ட தமிழ்ப் பெயராகவே இருக்கலாம்.

சிந்துதல் = சிதறுதல். சிதறுதல் நீர்ப்பொருளையும் கட்டிப்பொருளையும் சிறுசிறு பகுதியாக வீழ்த்துதல். மழை துளித்துளியாகப் பெய்தலின், மழை பெய்தல் துளி சிதறுதல் என்று சொல்லப்படும்.

தாழிருள் துமிய மின்னித் தண்ணென வீழுறை யினிய சிதறி யூழிற் கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப் பெய்தினி வாழியோ பெருவான் (குறுந்.120) என்பது முகில் துளி சிதறுதலையும்,

அருவி யன்ன பருவுறை சிதறி யாறுநிறை பகரு நாடனை (குறுந்.121) என்பது, ஆறு துளி சிதறுதலையும் குறித்தன. முகில் துளி சிந்தியே மக்கட்குக் கீழ்நீரும் மேல்நீரும் ஆற்றுநீரும் கிடைத்தலால், சிந்து என்னுஞ் சொற்கு நீர் (பிங்.), ஆறு (பிங்.) என்னும் இருபொருளும் ஏற்பட்டன.

இனி, சிந்துதல் என்னும் வினைச்சொற்குத் தெளித்தல் என்பதனொடு ஒழுகுதல் என்னும் பொருளுமிருத்தலால், சிந்து என்னுஞ் சொல் ஓர் ஆற்றின் பெயராவதற்கு முற்றும் பொருத்தமானதே. வடமொழியில் இச்சொற்கு மூலமில்லை என விளக்கப்படுத்துகிறார் பாவாணர். பாவாணரின் இக்கருத்து, ம.சோ.விக்டரின் மேற்குறித்த கருத்தையும் இணைவித்துப் பார்க்க உதவுகிறது.

அதனால்தான், சங்க இலக்கியங்கள் இந்திரன் பற்றிய செய்திகளைத் தருகின்றன. திருவள்ளுவர் இந்திரன் என்ற சொல்லை, மன்னன் அல்லது வேந்தன் என்ற பொருளிலேயே பயன்படுத்தியிருக்கிறார். தமிழில், இந்திரன் மருதநிலக் கடவுளாகக் கருதப்படுகிறான். மருத நிலத்தின் வேளாண்மைக்கான நீரைத் தருவதால், இந்திரன் மருத நிலக் கடவுள் ஆனான் என்கிறார் ம.சோ.விக்டர்.

இந்திரன் என்னும் சொல்லுக்கு நீர்ப் பொருள் இருப்பதாகக் கூறும் கா.சு.பிள்ளையின் கருத்தும் இவ்விடத்தில் நோக்கத்தக்கது. அதாவது, இந்திரனை வேந்தன் என்பதற்குக் காரணம், அவன் மழைத் தெய்வமாதல் பற்றியும், வயலுக்கு நீர் இன்றியமையாமை பற்றியுமாகும். இன் திறன் என்ற சொற்றொடரே இந்திரன் என மருவிற்று என்பார் அவர்.

இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் காண்க..

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506

*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக