செவ்வாய், 14 டிசம்பர், 2021

கம்பரின் ஏர் எழுபது - உழவுத்தொழில் வரைவியலின் முதல் நூல் : மகாராசன்


வேளாண்மைத் தொழிலுக்கான உடல் வலிமை, உழைப்பு, உழவு மற்றும் உரத்திற்குத் தேவையான மாடுகள் வளர்ப்பு, உரத் தயாரிப்பு, வேளாண்மைத் தொழில் நுட்பங்கள், பல்வேறு  வித்து வகைகள் பற்றிய தெளிவு, பயிர்ப் பராமரிப்பு, காலநிலைக் கணிப்பு, நீர் மேலாண்மை, அறுவடை என வேளாண்மை சார்ந்த அனைத்து நுட்பங்களும் அறிவும் உழைப்பும் உழுதுண்ணும் உழவர்களான காராள வேளாளர்களிடமே இருந்திருக்கின்றன. 


நிலத்தில் உழவுத்தொழிலால் பாடுபடும் காராளர்களின் பாடுகளை முதன் முதலாகத் தனி இலக்கிய நூலாகத் தமிழில் பாடியவர் கம்பரே ஆவார். உழுதுண்ணும் வேளாளர்களான காராளர் எனும் உழவுக்குடிகளின் உழவுத்தொழில் நுட்பத்தையும், உழுதொழில் கருவிகளையும், உழுதொழில் பண்பாட்டு மரபையும் ஏர் எழுபது எனும் நூலில் மிக விரிவாகவே ஆவணப்படுத்தியும் புகழ்ந்தும் பாடியுள்ளார் கம்பர். 

உழவுநாள் குறித்தல், கொழுமுனை, மேழி, ஊன்றாணி, நுகத்தடி, நுகத்துத் துளை, நுகத்தாணி, பூட்டாங்கயிறு, ஏர்க்கால் நுகத்தடி பிணைக்கும் தொடைக்கயிறு, கொழு, கொழுவாணி, தாற்றுக்கோல், உழவு எருது, எருதின் கழுத்துக்கறை, ஏர் பூட்டல், ஏர் நடத்தல், உழவு, உழவுச் சால், மண்வெட்டி, வரப்பு வெட்டல், புழுதி, வரப்பு கட்டல், எரு, சேறு கலக்கல், பரம்படித்தல், விதை பாவுதல்,  நாற்றாங்கல் பராமரித்தல், நாற்றுப் பறித்தல்,  நாற்றுமுடி சுமத்தல், நாற்றுமுடி விளம்புதல், நடவுக் கைப்பாங்கு, நடவுமுனை, பயிர் விளைத்தல்.. 

நீர் ஏற்றம், துலைநீர் இறைத்தல், நீர் பாய்ச்சுதல், களையெடுத்தல், பயிர் கருப்பிடித்தல், பசுங்கதிர், நெல்குலை வளைதல், நாளறுப்பு குறிக்கப் பலருக்கும் சோறிடுதல், களம் அமைத்தல்,  கதிர் அரிவாள், கதிர் அறுப்போர், அறுப்பறுத்தல், நெற்கதிர் வேண்டி வரும் இரவலர்க்கு அரிகதிர் வழங்குதல்,  அரிகதிர் சூடடித்தல், நெல்தாள் படப்பு எனும் போர் அமைத்தல், நெல் குவிப்பு, நெல்பொலி, நெல்கூடை, பொலிதூற்றும் கூடை, பொலி அளத்தல், விதைக்கோட்டை செய்தல் போன்ற அனைத்தைக் குறித்தும் - உழுதுண்ணும் உழவுக்குடிகளின் வேளாண்மைச் செயல்பாடுகளைக் குறித்தும் ஏர் எழுபதில் மிக விரிவாகவே பதிவு செய்திருக்கிறார் கம்பர். அவ்வகையில், வேளாண்மை உழவுத்தொழில் பற்றிய முதல் வரைவியல் இலக்கியமாகக் கம்பரின் ஏர் எழுபது நூல்தான் தனித்துவம் வாய்ந்ததாகும்.  

உழுதுண்ணும் உழவுக்குடிகளான வேளாளர்களைக் காராளர், மேழித்தேவர், பெருக்காளர், உழவர், உழும் குலத்தார், வேளாளர், மள்ளர் எனும் பெயர்களால் ஏர் எழுபது பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

கார் நடக்கும்படி நடக்கும் காராளர், தம்முடைய

ஏர் நடக்கும்எனில், புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்;

சீர் நடக்கும்; திறன் நடக்கும்; திருவறத்தின் செயல் நடக்கும்;

பார் நடக்கும்; படை நடக்கும்; பசி நடக்க மாட்டாதே

என, ஏர் நடத்தல் பற்றிப் பாடும் கம்பர், ஏர் நடக்கும் எனில் பிறவெல்லாம் தாமாகவே நடக்கும்; பசிப்பிணி ஒன்று மட்டுமே நடக்க மாட்டாது. காராளர்களின் ஏர் பூட்டல் தொழிலால் - ஏர் நடத்தல் சிறப்பால் பசி எனும் பிணியானது நாட்டில் நிலவாது என்கிறார்.

பசிப்பிணி போக்கும் உணவைக் கொடுப்போரே உயிர் கொடுத்தோர் ஆவர். அவ்வகையில், உழவுத் தொழில் புரிந்து வேளாண்மை ஈட்டும் உழவர்களே பசிப்பிணி போக்கும் உணவைத் தருகிறார்கள். அதனால்தான், பசிப்பிணி போக்கும் உழவர்களை உலகமே தொழுகின்றது. இதுகுறித்து வள்ளுவர் கூறிய குறளையும் தமது கருத்தையும் ஏர் எழுபதில் எடுத்துரைக்கும் கம்பர்,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாரும்

தொழுதுண்டு பின்செல்வர் என்றே, இத்தொல் உலகில்

எழுதுண்ட மறை சொன்னால், இவரேவன் மள்ளர்க்கும்

பழுதுண்டோ? பார்வேந்தர் படை மன்னர் ஒப்பாரோ?

என்கிறார். உழுதுண்ணும் வேளாளர்களைக் காராளர் எனக் குறிக்கும் கம்பர், அக்காராளர்களையே மள்ளர் எனவும் சுட்டுகிறார். வயல் உழும் மள்ளர், போர்க்கள மள்ளரினும் சிறந்தவர் என்கிறார் கம்பர். ஏனெனில், போர்க்கள மள்ளர்களுக்கும் உணவளிப்பவர் ஏர்க்கள மள்ளரே ஆவர்.

வேளாண்மைத் தொழிலின் உழைப்பில் ஈடுபட்ட உடல் வலிமையே போருக்கும் தேவைப்பட்டிருக்கிறது. ஏர்க்களத்தில் மட்டுமல்லாமல், போர்க்களத்திலும் காராள வேளாளர் எனும் உழவர்கள் பங்கேற்பும் இருந்திருக்கின்றது. அதனால்தான், உழவர் உழவுத்தொழிலாலும், அரசருக்கு அவ்வப்போது நிகழ்த்திய போர்த்தொழிலாலும் வலிமையும் வீரமும் பெற்றிருந்தமையின் மள்ளர் என்றும் கூறப்பட்டார் என்கிறார் பாவாணர். 

உழுதுண்ணும் உழுகுடிக் காராளர்களான வேளாளர்களையே மள்ளர்கள் எனத் தமிழ் இலக்கியங்கள் பெருவாரியாகச் சுட்டுகின்றன. வளமைப் பண்பையும் வலிமைப் பண்பையும் குறிப்பதற்கு, மள்ளல் எனும் சொல்லானது இடத்திற்குத் தக்கவாறு பயின்று வந்துள்ளன. இதுகுறித்துக் கூறும் அ.அறிவுநம்பி, மள்ளர் என்ற சொல் வீரர், உழவர் என இரு பொருள் சுட்டும். இடத்திற்கு ஏற்ப அதன் நுண்பொருள் காணுதல் தேவை. 

ஏர்க்களம், போர்க்களம் இரண்டில் எவ்விடம் பேசப் பெறுகின்றதோ அதற்கேற்ப மள்ளர் முதலாமிடத்தில் உழவராகவும், இரண்டாமிடத்தில் வீரர்களாகவும் உலா வருவதை உணரலாம் என்கிறார். ஆகவே, நிலம், உழவுத்தொழில், வேளாண்மை போன்றவற்றைக் குறிக்குமிடங்களில் வருகின்ற மள்ளர் எனும் சொல்லாட்சிகள், உழவர்களை - காராளர்களை - உழுதுண்ணும் வேளாளர்களையே அடையாளப்படுத்துகின்றன எனலாம்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக