தமிழில் தற்கால இலக்கியங்கள் எனும் வகையில் கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள் போன்றவை பெருமளவில் வந்து கொண்டிருப்பினும், அவை மிகக் குறைவான அளவில்தான் மக்களை எட்டுகின்றன. இலக்கியம் எனும் நீரோடைக்குள் நீந்தித் திரிகின்ற மீன்களைப் போல நிறைய இலக்கிய வகைககள் வந்து கொண்டு இருப்பினும், கவிதை என்கிற ஒன்று மட்டுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
பல்வகைச் சூழல்களின் பிரதிபலிப்பாகவும் விளைவுகளாகவும் வெளிவருகிற கவிதைப் பனுவல்கள் இளைய தலைமுறையினருக்குக் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை வாசிப்புக்கு உட்படுத்தி உள்வாங்கிக் கொள்ளும் போதிய புரிதல்நிலை அவர்கள் வசம் வாய்க்கப் பெறுவதில்லை. இதற்குக் காரணமாக, படைப்பாளியின் மனவெளியை உட்கிரகித்துக் கொள்ளுதலின் போதாமைகள், கவிதை என்றால் என்ன? என்கிற கேள்விகளுக்கான பதிலிருப்புகளின் வலைகளுமே முன் நிற்கின்றன.
வாழ்க்கையின் இயங்கு தளத்தினூடாகக் கடந்து செல்லும் போது, ஏதோ ஒன்றில் மனம் பதிந்து கொள்கிறது. அதைவிட்டு வெளியேற முடியாமல் அதுவாகவே கருத்தரித்து வெளிவந்து - மொழி அலகுகளால் இயங்கு தளத்தின் அனைத்துப் பரப்புகளையும் சுருக்குப்பை முடிச்சாகக் கட்டிக் கொண்டு, ஒரு விதையாக வேர்விட்டுக் கிளைத்துப் பரவக்கூடிய மனவெளியைக் கொண்டிருப்பது கவிதைத் தளம். இன்னும் கூடுதலாகச் சொல்வதானால், மனித அழகியலின் உள்ளுணர்வுகளைக் கிளர்த்துவது கவிதை.
தான் வாழ்கிற இச்சமூகத்தாலோ அல்லது சொந்த அனுபவங்களாலோ பெறப்படுகிற உணர்வுகள், உள்ளக் கிடங்கில் அமிழ்ந்து கிடந்து மொழியைத் துணை சேர்த்துக் கொண்டு புறத்தே வந்து விழுகிறபோது கவிதையாகப் பிறக்கிறது. இத்தகையக் கவிதைகள் தனக்கான ஒரு வடிவத்தை நிலையாக வைத்துக் கொண்டதில்லை.
தமிழின் சங்க காலத் திணை நிலைக் கவிதைகள்கூட ஒரே மாதிரியான வடிவத்தில் இருப்பது கிடையாது. சங்கம் மறுவிய காலத்தில் தோற்றம் கொண்ட அறநிலை பேசுகிற கவிதைகள் சுருக்கமான வடிவத்தைப் கையாண்டன. இப்படியாகத் தமிழ்க்கவிதையைக் குறிப்பிட்ட வடிவத்துக்குள் நிலை நிறுத்தம் செய்ய முடியவில்லை. அப்படி நிலைநிறுத்தம் செய்வதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. தமிழின் கவிதைப் போக்குகள் பல்வகை வடிவங்களைச் சோதித்துப் பார்த்திருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது ‘புதுக்கவிதை' தோற்றம். மரபுக்கவிதை வடிவத்திலிருந்து விலகிப் ‘புதுக்கவிதை வடிவத்தைக் கையாண்டபோது எதிர்ப்புகள் கிளம்பின. கவிதைத் தன்மையைச் சிதைவுக்கு உட்படுத்தக்கூடிய வடிவம் என்று புதுக்கவிதை வடிவத்தைச் சாடினார்கள். அம்மாதிரியான விமர்சனங்களுக்கிடையே புதுக்கவிதை தனக்கான இடத்தை நிரப்பிக் கொண்டது மட்டுமல்லாமல், மரபுக் கவிதைகளின் தன்மைகளைக் காட்டிலும் கூடுதலான செறிவைத் தர முடிந்திருக்கிறது. மரபுக் கவிதைகளில் காணலாகாத பல்வகைத் தன்மைகளை நிகழ் காலத்தியக் கவிதைகளில் பார்க்க முடிகிறது.
பழைய மரபுகளைக் கடந்து புதியன வருகிறபோது அது நவீனமாகிப் போகிறது. அந்தந்தக் காலகட்டத்தில் தோன்றக்கூடிய இலக்கியங்கள் அந்தந்தக் காலத்தின் நவீன இலக்கியமாகிக் கொள்கின்றன. இப்படி, ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியான கவிதைகள் அதற்கான மொழி அடையாளங்களோடு அமைந்திருக்கின்றன. ஆக, கவிதைக்கான மொழி என்பது பல்வேறு தன்மைகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. இன்றைய சூழலில் வெளிவருகிற கவிதைகள் புதுமாதிரியான மொழியைக் கொண்டிருக்கின்றன. இதுவரையிலும் காணலாகாத மொழியின் சொல்லாடல்கள் தற்காலக் கவிதைகளில் தென்படுகின்றன. இம்மாதிரியான கவிதைகளைத்தான் நவீனக் கவிதை என்கிறார்கள். தற்காலத்தியக் கவிதைகள் யாவும் புதுக்கவிதை என்கிற வடிவத்தோற்றத்தில் இருந்தாலும், அதனுள் பொதிந்திருக்கும் மொழிப் புழங்கல் நவீனமாக அமைந்திருக்கிறது. தமிழ்க் கவிதை மரபு சொல்லாமல் விட்டுப்போன - சொல்லாத பல வெளிகளை - உணர்வுகளை - அனுபவங்களைத் தற்காலக் கவிதைகள் பதிவு செய்கின்றன. இதைத்தான் எழுத வேண்டும் என்கிற எந்த வரையறுப்புகளும் இல்லாமல், எதைப் பற்றியும் எழுத்தில் வெளிக்கொணரும் சுதந்திரப் போக்கு நவீனக் கவிதைகளில் தென்படுகின்றன. ஆக, தற்காலத்திய வாழ்க்கை நவீனமயமாகிக்கொண்டிருக்கும் சூழலில், நவீன வாழ்வின் பிரதிபலிப்பாக இன்றைய கவிதைகள் இருப்பதனால் அதை நவீனக் கவிதைகள் எனச்சுட்டலாம்.
மண்ணில் தூவப்பட்ட ஒரு விதையைப் போல இன்றைய நவீனக் கவிதைகள் பல திசைவெளிகளில் வேர்களாய்க் கிளை பரப்பிக்கொண்டிருக்கிறது. மண்ணைக் கிளர்த்தி வேர்கள் பரவிக் கொண்டிருந்தாலும், அவ்வேர்களின் பயணிப்பில் மேலெழுந்த கிளைகளின் இடுக்கில் கூடுகள் சமைத்து, அக்கூடுகளின் துளைகள் வழியே உலகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வுகளை இன்றைய நவீனக் கவிதைகள் தந்து கொண்டிருக்கின்றன. படைப்பாளியின் இம்மாதிரியான உணர்வுகள் வாசகருக்குள்ளும் சென்று சேர்வதற்கு நவீனக் கவிதைகள் நிழல் எடுத்துப் போர்த்துகின்றன. அதுமட்டுமல்லாமல், புதிய உணர்வோட்டங்களையும் - நிகழ் காலத்தின் இயங்கு ஆற்றலையும் அவை தந்து கொண்டிருக்கின்றன. நவீன வாழ்க்கையின் நடப்பியல் பின் புலங்களைத் தோள் பிடித்துக் கொண்டு அகத்தில் ஏற்படுகிற உணர்வோட்டங்களைப் புனைவுகளாக்கித் தருகின்றன இன்றைய கவிதைகள்.
ஒரு படைப்பாளி சொல்ல வந்ததைத் தாண்டியும் அல்லது அதனில் இருந்து விலகிப் போவதற்கும் இன்றைய கவிதை பொறுப்பேற்றுக் கொள்கிறது. இத்தகைய தனித்த கவிதைப் பனுவல் எனும் வாசனையைத் தாண்டி ஒரு கவிதைப் பனுவனுக்குள் பல பனுவல்களை ஏற்றிக் கொள்வதற்குப் பல வாசல்களைத் திறந்து விட்டிருக்கிறது இன்றைய கவிதைமொழி. அது மட்டுமல்லாமல், படைப்பாளியின் மனவெளிக்குக் கவிதையின் ஊடாக வாசகனை அவ் வெளிக்கே அழைத்துச் செல்வதற்கும் தன் பயணத்தை நீட்டித்திருக்கிறது.
ஒரு பனுவலுக்குள் இயங்கும் பல்வேறு பனுவல்களின் வெளிகளுக்குள் அரசியல், ஆன்மீகம், பொருளியல், சமூகம், உற்பத்தி உறவு, பண்பாடு, மொழி என எல்லாமும் விரவிக் கிடக்கின்றன. இவற்றின் பக்கங்களில் எல்லாம் அலுப்படையாமல் மிக இலகுவாகக் கைகோர்த்துக் கொண்டு திரிவதற்கு இன்றைய நவீனக் கவிதைமொழி இடம் கொடுத்திருக்கிறது. சொற்களைக் கொண்டு கொலுவாக்கும் படிமங்களின் சலனங்கள் சொற்களற்ற மவுனங்களிலிருந்தும் எழும்பும்படிச் செய்து, ஒவ்வொரு கவிதையின் வெளியிலிருந்தும் சட்டெனத் தரையிறங்க முடியாத நிலையினையும், நெருங்க முடியாத தளத்தின் பக்கம் ஒட்டி நின்று பார்க்கும்படியாகவும் நவீனக் கவிதைகள் தளம் அமைத்துக் கொடுக்கின்றன.
வாழ்வின் சகலத்திலும் அரும்புகளாய்ப் பழக்கிக் கொண்டு அதை அதனதன் இயல்பென்று விட்டுவிடுகிற உயிரியல்ல மனிதர். மனித வாழ்வின் மாற்றத்திலிருக்கும் பல தளங்கள் அணுகமுடியாத புகைச் சுருள்களாக மாறுகின்றன. எல்லாத் தளங்களும் மனிதமயமாகிப் பேசிக் கொண்டிருக்கின்றன; மவுனத்தோடு உணர்வுகளை எழுப்பும் உறவுகளைத் துலக்கிக் கொண்டிருக்கின்றன. நம்மோடு தொடர்புகொள்ளப்பட்டவைகளோடுதான் நாம் நமக்கான பொருள் கோடலைக் கொண்டிருக்கிறோம் என்பதும், பல தளங்களை மறுத்துவிட்டு ஒரு தளத்தோடு நின்று போவதில் செழுமையான வாழ்வின் நாலாவிதத்திலும் பாய்ந்து விடக்கூடிய கற்றைகள் இல்லை என்பதுவுமாக அவிழ்கின்றன நவீனக் கவிதைப் புலப்பாடுகள்.'
ஒவ்வொரு மனிதரையும் குறைந்த அளவு இகழ்ச்சியோடும் அதே அளவு புகழ்ச்சியோடும் சந்திக்கவோ பழக நேரவோ தயாரிக்கப்பட்டுவிடும் மன அமைப்பில் மனதை அதன் தன்மையுடன் புரிந்துகொள்வதற்கு நவீனக் கவிதைகள் உதவக் கூடும். மனித வாழ்வின் இருத்தல் குறித்த கேள்விகளையும் பதில்களையும் தருவித்துப் பார்க்கிறபோது, தொலைந்துபோகும் அடையாளத்தைத் தொன்மம் வந்து தொட்டுத் துலக்குவதைப் போல உளறிக் கொட்டுகிறது நவீனக் கவிதைகளின் மொழி.
அறிவை மறந்துவிடக் கூடிய பாவனையில் உணர்வை ஆளக்கூடிய இன்றைய நவீனக் கவிதைகளைக் குறித்துச் சொல்லிக் கொள்வதற்கு நிறைய இருந்தாலும், நவீனக் கவிதை குறித்து மவுனங்களும் புறக்கணிப்புகளும் வந்து கொண்டே இருக்கின்றன. நவீனக் கவிதை குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாகத் தேவைப்படுகிற ஒன்றாகவும் ஆகிப்போயிருக்கிறது. நவீனக் கவிதைகள் குறித்த மவுனங்களுக்கான காரணம் என்ன? தனி உலகின் கண்களாக நிற்கக் கூடிய படைப்பாளியின் மனவெளியை வாசக மனதின் அறிவின் வழியாகவும் உணர்வின் வழியாகவும் அறிந்து கொள்ள முயல்கிற சூசகம் எல்லோருக்கும் ஒரே கனப் பொழுதில் வெவ்வேறு மனித மனங்களுக்குள் வேறுவேறான சிந்தனை ஓட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒரே மாதிரியான அனுபவங்களோ உணர்வுகளோ எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எல்லோருமே வேறுவேறான மனநிலைகளைக் கொண்டிருக்கும் ஒரு கவிதைப் பனுவல் சட்டென எல்லோருக்கும் ஒரே மாதிரியான அனுபவத்தைத் தருவதில்லைதான். இருப்பினும், கவிதையைப் பற்றிக்கொள்வதற்கான தும்புக் கயிற்றையாவது பிடித்துக் கொண்டால் கவிதையின் பின்னே செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு கவிதையைச் சட்டெனப் படித்துவிட்டு விலகிப்போக நினைக்கிற போதுதான் பிரச்சினைகளே ஏற்படுகின்றன. கவிதைக்குள் பயணிக்கும் போதுதான் கவிதையை உணர்ந்துகொள்ள முடியுமே தவிர, கவிதைக்கென உரைகளை வழங்க முடியாது. இங்கே, படைப்பாளியை உச்சானிக் கொம்பில் வைத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. படைப்பாளியைத் தோற்கடிக்க வேண்டும் என்றோ, அல்லது வாசகர் தோற்றுப் போக வேண்டும் என்றோ கங்கனம் கட்டிக் கொள்ளாமல், தோற்பது போன்றும் மீறுவது போன்றும் காட்டக்கூடிய பாவனை மனம் வாய்க்கப் பெறும் போதுதான் கவிதையோடு நெருங்க முடியும்.
படைப்பாளியிடம் அறிவெல்லையில் தோற்கக் கூடியதான பாவனை வாசகரிடம் வினையாற்றும்போதுதான், படைப்பாளியைத் தாண்டி படைப்பாளர் வரையறுக்காத பல வெளிகளில் வாசகரால் அனுபவங்களைப் பெற்று கேள்விகளையும் கேட்க முடியும். இங்கே, வாசகரிடம் கவிதைப் பனுவல் பெண்ணும் ஆணுமான ஓர் உடல் உயிரியாய் மாறிப்போகிறது. இதனால்தான் கவிஞரின் மனவெளியை வாசகர் தன்வயப்படுத்தும் முயற்சியில் தோற்றுப்போகிறார். இதன் விளைவாக, தன் பாதையிலான தன்வயப்படுத்துதலில் புதிய திசைகளில் பயணிக்க முடிகிறது. இச்சூழலில் வாசகர் இன்னொரு படைப்பாளியாய் ஆகிக்கொள்கிறார். கவிஞர் படைத்திருக்கக்கூடிய வெளியில் வாசகர் தனக்கான உலகத்தை அனுபவிக்கிறார். இங்கே, கவிஞர் வாசகர் என்ற உறவுநிலையில் உலகங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இம்மாதிரியான நிகழ்வுகளை எல்லாம் கவிதைகளே சாத்தியப்படுத்துகின்றன.
சூனியத்திலிருந்து எதுவும் தோன்ற முடியாது. அதுபோல, ஒரு கவிதை என்பதும் அந்தரத்திலிருந்து விழுவதல்ல. சமூக நிகழ்வுகளின் கற்றைகளில் இருந்துதான் தனக்கான பச்சையங்களைத் தயாரித்துக் கொள்கிறது கவிதை. எப்போதுமே கவிதை ஒரு குறிப்பிட்ட சுவையைக் கொண்டிருப்பதில்லை; கொண்டிருக்கவும் முடியாது. சட்டகப்படுத்தப்படுகிற மலட்டுக் கனிகளை இன்றைய கவிதை தர முடியாது; தரப்போவதுமில்லை. இதைத்தான் பயன்படுத்தவேண்டும் என்கிற அதிகாரத் தொனிக்கு இன்றைய கவிதை பணியப் போவதுமில்லை.
கவிதை எந்தப் புள்ளியிலிருந்தும், எங்கு வேண்டுமானாலும் தோன்ற முடியும். ஆக, உயிரை - உணர்வை - உடலைக் கொண்டிருக்கக்கூடிய வாழ்க்கைத் தளத்தில் தான் பிணமாவதைத் தவிர்த்துக்கொள்ள பரிமாணம் அடைந்து கொண்டிருக்கிறது கவிதை. ஏனெனில், கவிதை என்பது மனிதரால் உருவாக்கப்படுவது; கவிதை என்பது மனிதமொழி. மனிதரால் மொழியப்படும் இம்மாதிரியான கவிதைகள் சமூகத்திற்குத் தேவையான வகையிலோ அல்லது சமூகத்திற்குப் புறம்பான வகையிலோ கருத்தியல்களைத் திட்டமிட்டோ திட்டமிடாமலோ விதைத்துச் செல்கின்றன. இத்தகைய நவீனக் கவிதைகளினால் சாதகமான அம்சங்களும் பாதகமான அம்சங்களும் நிரம்ப இருக்கின்றன. இருப்பினும், நவீனக் கவிதைத் தளம் கண்டுகொள்ளப்படாத / புறக்கணிக்கப்பட்ட / ஒதுக்கப்பட்ட புள்ளிகளையும் கவனப்படுத்திச் செல்கின்றது. இத்தகைய நவீனக் கவிதைகள் குறித்துப் பேசியவர்கள் -பேசிக்கொண்டிருப்பவர்கள் பல்வேறு புள்ளிகளைத் தொட்டுக் காண்பித்திருக்கிறார்கள். ஆனாலும், ஒவ்வொருவரின் கருத்தாடல்களும் வேறுவேறு திசைகளில் பயணிக்கக் கூடியவை என்றாலும், நவீனக் கவிதைகள் குறித்துப் புரிதலுக்கு வழிவகுக்கக் கூடியவை.
நவீனக் கவிதைத் தளத்தில் பலர் இயங்கிக் கொண்டிருந்தாலும், கவிஞர் அபி மிக முக்கியமானவர். அவரின் உரையாடல் நவீனக் கவிதைமொழி குறித்து மேலும் சில புரிதல்களுக்குப் பாதை அமைக்கும்.
"நான் கவிஞனாக ஆனதற்குக் காரணம் என் வளர்ப்புச் சூழல். எனக்குச் சகோதரிகள் மட்டுமே இருந்த காரணத்தால், எனது சிறுபருவ விளையாட்டு உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்காக வெளியில் நண்பர்களைத் தேடிச் செல்ல வேண்டியதாயிற்று. நான் பழகிய நண்பர்கள் மிகவும் முரட்டுக் குணம் வாய்ந்தவர்களாக இருந்தபடியால், தொடர்ந்து அவர்களிடம் பழகிட என் பெற்றோர்கள் என்னை அனுமதிக்கவில்லை. இதனால், எனக்குள்ளேயே ஒரு நண்பனை உருவாக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. வயதில் முதிர்ச்சி அடைந்த பிறகும் எனக்குள் முதிர்ச்சி ஆகாமல் இருந்த சிறுவனின் அனுபவம்தான் என்னுடைய கவிதை.
எனது சொந்த ஊரான போடி நாயக்கனூரில் அமைந்திருந்த இயற்கைக் காட்சிகளானது என்னை அவைகளோடு பேசத் தூண்டிவிட்டன. தனிமையின் மூலமாக இயற்கையோடு கொண்டிருந்த உறவும் உரையாடலும்தான் என்னுடைய கவிதையாக இருக்கின்றது.
எனது கவிப்படைப்பின் துவக்கத்திற்கு யாரும் பெரிய அளவில் உதவி செய்யவில்லை என்றே கூறலாம். எனினும், ஒரு ஆறு ஏழு வயதுச் சிறுவன் பெரும் உதவியாக இருந்ததை நான் மறுத்துவிட முடியாது. அவன் யாரெனில், அவன் என் ஊரைச் சார்ந்தவன் - என் வீட்டைச் சார்ந்தவன் - சரியாகச் சொல்லப் போனால் அவன் நானேதான். என் கவிதைகளில் கையாளப்பெறும் மொழி நடையானது பெரிய அளவில் புரிதல்களுக்கு வழி செய்வதில்லை என்றதொரு குற்றச்சாட்டு தொடர்ந்து என்னிடம் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
நம் வாழ்வின் அன்றாடப் புழக்கத்தில் உள்ள மொழி நமது உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் உள்ளவாறே புலப்படுத்துவதற்கு இயலாத வகையில் அமைந்திருக்கிறது. மொழியானது ஏற்கனவே இருப்பதுதானே தவிர, புதிதாகக் கண்டுபிடிக்கப்படுவது இல்லை. இருக்கின்ற மொழியைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள நாம் முயலுவதில்லை. தற்காலத்தில் நடப்பில் இருக்கின்ற மொழிப் பயன்பாடானது நவீனப் பிரஞ்ஞையைப் பிரதிபலிக்கவோ, சொல்லவந்த விசயத்தை நேரடியாக மனதினுள் பாய்ச்சவோ போதுமானதாக இல்லை. பரவலாகக் கையாளப்பெறும் மொழியானது வார்த்தைகளின் வீச்சை முழுவதுமாக வெளிப்படுத்தும் தன்மை குறைந்தனவாக இருப்பதால்தான், மொழியை வளைத்து அர்த்தச் செறிவு மிக்க நவீன மொழியை நான் தேடித் தருகிறேன்.
என்னிடம் எழுப்பப்படும் மற்றொரு வகைக் கேள்வி, என் கவிதைகள் இருண்மைத் தன்மையாக இருக்கிறதே என்பது.
கவிதைகளைப் புரிந்துகொள்ள முதலில் முயற்சிக்க வேண்டும்; அத்துடன் அதற்கான உழைப்பும் வேண்டும். முயற்சி இன்றிக் கிடைக்கும் பொருட்களுக்குச் சமூகத்தில் மதிப்பு குறைவுதானே. இவ்விடத்தில் ஒன்றை நினைவுபடுத்தலாம். அமெரிக்கப் படைப்பாளியான வுர்ஜினியா வுல்ப் என்பவரிடம் ஒரு வாசகர், "உங்கள் படைப்புகளை மூன்றுமுறை வாசித்தும் புரியவில்லையே' என்றாராம். அதற்கு வூல்ப், நான்காவது முறை வாசியுங்கள் என்றாராம்.
புரிந்து கொள்ள முடியாதது என் கவிதைகள் மட்டும்தானா? இருண்மை என்பது கவிதையில் மட்டுமல்லாமல், இன்றைய வாழ்க்கையிலும் இருக்கக்கூடிய ஓர் அம்சம்தான். நாம் அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சிறுசிறு நிகழ்வுகளின் அர்த்தங்களைக்கூட நம்மால் எட்ட முடிவதில்லையே? நாம் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோமோ, அதைப் போலவே ஒரு கவிதையையும் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
வாசகனுக்குப் பரிச்சயமில்லாத அனுபவங்கள், ஒரு பொருள் குறித்த படைப்பாளியின் முற்றிலும் வேறுபட்ட நோக்குநிலை, அதனை அவன் வெளிப்படுத்தும் விதங்கள் போன்றவை படைப்பை அணுகுபவனுக்குத் தடைகளாக அமைவதுண்டு. எனவே, புரிதல்களுக்கான முயற்சியும் முறையான பயிற்சியும் இங்கு அவசியமான ஒன்றாக அமைகின்றது.
என் கவிதைகள் சொற்பமான அளவுள்ள, கல்வி அறிவு மிக்க அறிவு ஜீவிகளை மட்டுமே சென்றடைகிறது என்ற விமர்சனமும் உண்டு. இவ்விடத்தில், கலை கலைக்காகவா? மக்களுக்காகவா? என்றதொரு கேள்வியைப் பலரும் எழுப்பிக்கொண்டிருக்கும் சூழலில், கலை மக்களுக்கானதே என்று நான் கூறுவேன். ஆனால், அது பெரும்பான்மையான அல்லது எல்லா மக்களுக்குமானது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
தத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற அறிவுத் துறைகள் பல மக்கள் வளர்ச்சிக்கு உரியவை என்றாலும், அவை எல்லா மக்களுக்கும் சென்று சேர்வதில் சாத்தியம் குறைவு. அதைப்போலவே எல்லாக் கவிதைகளும் எல்லா மக்களுக்கும் சென்று சேர்வதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.
நல்ல கவிதை எதுவெனில், பன்முக வாசிப்புக்கு உட்படுவதாக - காலம் கடந்து நிற்பதாக - பலவித அர்த்த நுட்பங்களைத் தம்முள் அடக்கியதாக கால ஓட்டத்தில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மை உடையதாக இருக்கும் கவிதை எதுவோ, அதுவே நல்ல கவிதை எனலாம்."
கவிஞர் அபியின் இந்த உரையாடலில், இருண்மை - புரியாத மொழிநடை குறித்த விளக்கங்கள் நவீனக் கவிதை மொழி குறித்தானவை.
கவிதையில் புதைந்திருக்கும் இருன்மைத் தன்மை - புரியாத நடை என்பவை கவிஞர் அபியின் கவிதைகளில் மட்டுமல்ல. தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கிற நவீனக் கவிதைகள் பெரும்பாலானவை இப்படியான இருன்மைத் தன்மையோடும், புரித்துகொள்ள முடியாத மொழிநடையுடனும்தான் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் பலராலும் முன்வைக்கப்படுகின்றன.
ஒரு படைப்பாளி பிறருக்குப் புரியக்கூடாது என்பதற்காகத்தான் எழுதுகிறாரா? நிச்சயமாக அப்படி இருக்க முடியாது எனில், பிறகு ஏன் நவீனக் கவிதைகள் புரிவதில்லை? இப்படியான கேள்விகள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளை இது. சங்ககாலத் திணை நிலைக் கவிதைகளில் காணலாகும் 'அகக் கவிதைகள்' முழுவதுமான அகவெளியைக் கொண்டு பின்னப்பட்டவை. ஒவ்வொரு அகக் கவிதையும் படைப்பாளியின் அகவெளியைக் கொண்டிருக்கின்றன. அக்கவிதைகள் வெளிவந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகியும்கூட, அக்கவிதையின் அகவெளிக்குள் போக முடியாத நிலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆக, புரியக்கூடாது என்று யாரும் எழுதுவதில்லை. நவீன வாழ்க்கையின் எந்திர ஓட்டங்களோடு பழகிப் போனதன் விளைவாக, ஒரு கவிதை எப்போதுமே நேரிடையான பொருளைத்தான் தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். யாருமே கவிதையைப் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்யாமல் கவிதையையும் படைப்பாளியையும் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஒரு கவிதையைப் புரிந்து கொள்ள ஏன் முயற்சி செய்ய வேண்டும்? ஒரு கவிதைக்குள் இருப்பது சொற்கள் மட்டுமல்ல; சொற்கள் விவரித்துச் செல்லும் அனுபவங்களும் உள்ளே புதையுண்டு கிடக்கின்றன. ஒருவருக்கு வாய்க்காத அனுபவம் கவிதையின் வழியாகவும் பெற்றுக்கொள்ளக் கூடும்.
ஒருவருக்கு வாய்க்கிற தனிமைச் சூழல் அதனுள் முளைத்திருக்கும் மவுனத்தின் கனங்கள் - அதிலிருந்து வெளிக் கிளம்பும் ஆழமான பார்வை போன்றன எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இந்த வாய்ப்புகளைக் கவிதை வாசிப்பு தருவதற்கு முயற்சி செய்யும். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான - வேறுபட்ட அனுபவங்கள் புதையுண்டு கிடக்கின்றன. கவிஞர் தனக்குள் புதைந்திருக்கும் அனுபவத்தைக் கவிதையாக்கி விடுகிறார். அக்கவிதையினுள் நுழைந்து வெளியேறும் திறனுள்ளவர்கள் கவிதையை இரசிக்கிறார்கள்; திறன் குன்றியவர்கள் அதனை மறுதலிக்கிறார்கள் - இருளுக்குள் நுழைந்ததாக உணர்கிறார்கள். உணராத அனுபவத்தை உணர முடியாத அனுபவத்தை எவ்வித முயற்சியும் இன்றிப் படிக்கிற போது புரியாத மொழியாகிப் போகிறது.
ஒரு கவிதை புரிந்தேதான் ஆக வேண்டும், அல்லது புரியும்படிதான் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்க முடியாது. ஏனெனில், கவிதைப் படைப்பு என்பது படைப்பாளியின் சுதந்திரத் தன்மையோடு தொடர்புடையது. ஒரு கவிதை எப்பொழுது புரிதலை ஏற்படுத்துமோ அப்போது அதைப் புரிந்து கொள்ளலாம். அதற்காகப் புரியாத கவிதைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இங்கே, இன்னொன்றைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். நவீனக் கவிதை என்பது எல்லா நுண் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. நவீனக் கவிதைமொழியைப் பொறுத்தவரையில் எப்படி எழுதுவது என்பது குறித்துப் பிரச்சினை இல்லை. எதை எழுதுவது? எதற்காக எழுதுவது? என்ன விளைவுகளை உண்டாக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில்கள் வருகிற போதுதான், நவீனக் கவிதைகளின் சமூகப் பயன்பாடு குறித்துப் பேசமுடியும்.
நவீனக் கவிதைமொழியின் சமூகத் தேவையைச் சமூகமே தீர்மானித்துக் கொள்ளும். எது சமூகத்திற்குப் பயன்படுமோ அதுவே சமூகத்தின் மதிப்பைப் பெறமுடியும். நவீனக் கவிதைகளைப் பொறுத்தவரையிலும் அவற்றின் பயன்பாடு என்பது காலத்தால் தீர்மானிக்கப்படுவதுதான். ஏனெனில் எதுவொன்றும் நிலையானதாக இருக்க முடியாது. எல்லாமே மாற்றத்திற்குட்பட்டதுதான். இது நவீனக் கவிதைகளுக்கும் பொருந்தும்.
உலகம் இயக்கத்தால் ஆனது, உலகில் உள்ள யாவையும் இயங்குகின்றன. இயற்கைக்குள் செயற்கையுமாக மனிதரின் மனமும் உடலும் இயங்கி இயங்கி வரலாற்றின் மிகச்சிறு நுகர்வுப் புள்ளிகளை உண்டாக்குகின்றன. வரலாற்றின் சந்ததிகள் அதே இயக்கத்தில் மாற்றத்தைக் கோரும்போது இயக்கம் சூடு பிடிக்கிறது. இயக்கத்திற்கு அவசியம் மாற்றம்; இயக்கத்தை விழிப்படையச் செய்வது மாற்றம் இத்தகைய மாற்றத்தைக் காலம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இம்மாற்றத்தை உடனடியாகவும் சமூகம் ஏற்றுக் கொண்டதில்லை. புதியனவற்றின் வருகை பழையவற்றின் மீது கேள்விகளைக் கேட்கிறபோது, புதியவற்றைப் பிழையென்றே மரபுகள் முடிந்தளவு ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. நவீனக் கவிதைகளுக்கும் ஏறக்குறைய இதே நிலைதான். இருப்பினும், நவீனக் கவிதைகளின் வருகையினையும், அவற்றின் நன்மைகளையும் முடக்கிப் போட முடியாது.
நவீனக் கவிதை மொழியை குறித்துப் பேசிக்கொண்டே போகலாம். இதுதான் - இப்படித்தான் நவீனக் கவிதைமொழி இருக்க வேண்டும் என்ற வரையறுப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
நவீனக் கவிதை மொழி குறித்துச் சுருக்கமாகச் சொல்வதெனில், ஒரு படைப்பாளி தம் அனுபவத்தைப் படைப்பாக ஆக்கித் தரும்போது, அதைப் படிக்கிற வாசகர் படைப்பாளியின் அனுபவத் தளத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. அக்கவிதைப் பனுவலைத் தனக்கானதாக எடுத்துக்கொண்டு அப்பனுவல் வாசிப்பில் தானும் படைப்பாளியாய் ஆகிக் கொள்கிறார். தனிப்பட்ட அனுபவம் என்று தனித்து இல்லாமல் தன் அனுபவத்துடன் பனுவலை வாசிக்கும் வாசகரும் படைப்பாளியாய் உருமாற்றம் கொள்கிறார். இம்மாற்ற நிகழ்வைக் கவிதைகளே சாத்தியப்படுத்தும். சுருங்கச் சொன்னால், எல்லாத் திசை வெளிகளின் வலிகளையும், மகிழ்ச்சிகளையும், கனவுகளையும், : மறுக்கப்பட்டவை / ஒடுக்கப்பட்டவைகளின் உணர்வுகள் - அனுபவங்கள் - அழியாக் காலத்தின் உறவுகளும் நவீனக் கவிதைமொழியாய் வடிவம் கொண்டு தமிழைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது எனலாம்.
*
(குறிப்பு: கட்டுரையில் இடம்பெறும் கவிஞர் அபியின் உரையாடல் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புல இலக்கியத் திறனாய்வுத் துறையில் கலந்துரையாடியபோது பதிவு செய்யப்பட்டது. 2002 இல் முதுகலை பயில்கிற போது எடுக்கப்பட்ட குறிப்புகள்.
*
இக்கட்டுரை, கீழிருந்து எழுகின்ற வரலாறு எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.
கீழிருந்து எழுகின்ற வரலாறு, மகாராசன், முதல் பதிப்பு, 2006, பரிசல் வெளியீடு, சென்னை.)
அருமை
பதிலளிநீக்குசிறப்பு
பதிலளிநீக்குநல்மொழி
பதிலளிநீக்கு