வேளாண் தொழில் மரபினரிடம் நிலவி வந்த - நிலவுகிற வளமைச் சடங்குகள், வேளாண்மை உழவுத் தொழில் மரபின் இந்திர அடையாளத்தைப் புலப்படுத்தும் அதேவேளையில், யானை - வெள்ளை யானை - ஐராவத யானை அடையாளத்தையும் உள்ளீடாகச் சொல்லிக் கொண்டே வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.
வேளாண் மரபில் நிகழ்த்தப்படும் வளமைச் சடங்குகளில் இந்திரனும், இந்திர அடையாளமான யானையும் இடம்பெறுவது, ஆசீவகச் சமய மரபின் பண்பாட்டுக் குறியீடுகளாகும். இதுகுறித்து க.நெடுஞ்செழியன் கூறும்போது, யானை ஆசீவகத்தின் குறியீடு. வெள்ளை யானை எனப் பொருள்படும் ஐராவதம்கூட ஆசீவகத்திற்கு உரியதாகும். அதிலும், வெள்ளை யானை ஆசீவகத்தின் நிறக் கோட்பாட்டின்படி மிக உயர்ந்த இடத்தை வகிப்பதாகும் என்கிறார்.
மேலும், மூவேந்தர் மரபைச் சார்ந்த புகழ்மிக்க மன்னர்கள் வெளியிட்ட காசுகளில் பொறிக்கப்பட்டுள்ள ஆசீவகச் சின்னங்கள், அச்சமயத்தின் பரவல் எத்தகையது என்பதை உய்த்துணர வைக்கின்றன. அம்மன்னர்கள் வெளியிட்ட காசுகளில் இடம் பெற்றுள்ள சின்னங்கள், அவை வெளியிடப்பட்ட காலம், இவை பற்றியும் அண்மைக்கால ஆய்வுகளில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனை, சங்ககாலச் சதுரக் காசுகள் சில அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. பூம்புகாரில் மத்திய அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை நிகழ்த்திய அகழாய்வின்போது வெளிப்படுத்தப்பட்ட படகுத்துறையின் மீது சங்ககாலக் காசு கண்டெடுக்கப்பட்டதாக டாக்டர் கே.வி.ராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை அழகன்குளத்தில் நிகழ்த்திய அகழாய்வின் போதும் சங்ககாலச் செப்புக்காசுகள் இரண்டைச் சேகரித்துள்ளது.
பூம்புகார்க் காசின் முன்பக்கம் யானையின் உருவமும், பின்பக்கம் புலி வலது காலைத் தூக்கிய நிலையில் உள்ள உருவமும் காணப்படுகிறது. அழகன்குளக் காசுகளில் பெரிதாக உள்ள காசில் முன் பக்கம் யானை மற்றும் எண் மங்கலச் சின்னங்களும், பின்பக்கம் மீன் உருவம் ஒன்றும் உள்ளன..
மேலும், பூம்புகார்க் காசு சோழராலும், அழகன்குளக் காசுகள் பாண்டியராலும் வெளியிடப்பட்டவையாதல் வேண்டும். அழகன்குளக் காசுகள் கி.மு நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த பாள நிலைகளில் கிடைத்துள்ளன என்பது சி14 என்னும் அறிவியல் முறையால் நிரூபிக்கப்பட்டுள்ளது என விவரிப்பார் நடன காசிநாதன். அக்காசுகளில் பொறிக்கப்பட்ட யானைச் சின்னம் ஆசீவகத்தின் குறியீடு என்பதில் ஐயமில்லை என விவரிக்கும் க.நெடுஞ்செழியன், யானை, ஆறுமுகமுள்ள குன்றம், ஆமை, வேலியிட்ட மரம் ஆகியன மூவேந்தர்களுக்கும் பொதுவானவையாய் உள்ளன. காளைச் சின்னம் பாண்டியர், சோழர் வெளியிட்ட நாணயங்களில் மட்டும் காணப்படுகின்றன...
எனவே, மூவேந்தர்களும் வெளியிட்ட காசுகளில் பொறிக்கப்பட்ட யானை, காளை, திருமரு முதலான சின்னங்கள், அம்மன்னர்களின் ஆசீவக ஈடுபாட்டினை விளக்கும் வரலாற்றுச் சான்றுகள் எனக் கொள்வதில் தவறில்லை என, சங்ககால சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் வெளியிட்ட காசுகளில் காணலாகும் சில பொதுத் தன்மைகளைக் கொண்டு விளக்குவதும் நோக்கத்தக்கது. அதனால்தான், தமிழகத்தில் யானை வடிவில் கட்டப்பட்டுள்ள யானைக் கோயில்கள் எல்லாம் ஆசீவகரோடு தொடர்புடையன என்கிறார் குணா.
வேளாண்மைக்கு உகந்த கண்மாய், குளம், ஏரி போன்ற பெரும்பாலான நீர் ஆதாரப் பகுதிகளில் வழிபடு தெய்வமாக ஐயனார் - அய்யனார் எனவும், சாத்தன் எனவும் குறிக்கப்படுகிறது. அத்தகைய ஐயனார் - அய்யனார் - சாத்தன் கோயில்கள் தோறும் யானைகள் நிறுவப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஐ, ஐயன் என்பதற்குத் தலைவன், அரச வேந்தன், மூத்தோன், உயர்ந்தோன், வானோன், தெய்வம் எனவும் அகராதிகள் பொருள் தருகின்றன.
நீர் நிலைகள் சார்ந்த பகுதிகளில் வழிபடு தெய்வமாகத் தொழப்பட்டிருப்பது மழை நீராகத்தான் இருந்திருக்க வேண்டும். வேளாண் தொழிலுக்கு உதவும் மழை நீர்தான் வழிபடு தெய்வமாக - வேந்தனாக - வானோனாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான், வானோன் எனும் மழையைக் குறிக்கும் ஐ, ஐயன் எனும் வேர்ச்சொற்களால் ஐயன் + ஆர் = ஐயனார் எனக் குறிக்கப்பட்டிருக்கிறது எனவும் கருதலாம். அவ்வகையில், வேளாண்மை சார்ந்த வளமைச் சடங்கில் புலப்படும் இந்திர - மழைத் தெய்வ வழிபாட்டு மரபுதான், பிற்காலத்தில் ஆசீவகத்தின் ஐயனார் - அய்யனார் வழிபாடாக - ஆசீவகச் சமய நீட்சியின் அடையாளமாகப் பரிணமித்திருக்கிறது எனக் கருதலாம்.
மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு :
9080514506
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக