ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் நிகழ்கால வாழ்வியல் முறைகளை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் பல நூறு ஆண்டுகாலப் பண்பாட்டு வரலாற்று நீட்சியை வேண்டுமென்றே மறைத்துவிட்டு - மறந்துவிட்டுக் கடந்து செல்வது என்பது ஆய்வாளர்களின் அறிவு குறையே.
சிலர், வேளாண் குடிகளின் மீதான வன்மத்தின் காரணமாகவும், தங்களின் சுயநலத்திற்காகவும் வரலாற்றைப் போலியாகத் திரித்து எழுதி மன மகிழ்ச்சி அடைந்து வந்துள்ளனர். இந்தப் போக்கானது உழுகுடியின் வீழ்ச்சியிலிருந்து இன்று வரை தொடர்ந்து வருவது வேதனையின் உச்சம். இது வேளாண் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் தொடர் பண்பாட்டுத் தாக்குதல் ஆகும்.
இத்தகையப் பண்பாட்டுத் தாக்குதலுக்கான எதிர்வினையாக, எழுத்தாளர் மகாராசன் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலைப் பல்வேறு ஆவணங்களால் அறச்சீற்றம் கொண்டு உழுகுடியின் வரலாற்றை நேர் செய்திருக்கிறார்.
மானுட இனத்தின் தோற்றம் - வேட்டைச் சமூகம் - கால்நடை வளர்ப்பு - உற்பத்திப் பெருக்கம் - குடும்ப முறை - வேளாண் விரிவாக்கம் - ஆட்சி அமைப்பு - பண்பாட்டு எழுச்சி என நீள்கிறது தமிழ் நிலத்தின் வாசனை மலர்கள்.
பண்டையக் காலத்தில் மாடு என்பது செல்வமாகப் பார்க்கப்பட்ட வரலாற்றையும், அதனை ஐவகை நிலங்களிலும் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளையும் விளக்குகின்ற காட்சியானது, உழவர்களின் உறவுகளாகவே மாடுகள் இருந்த வரலாற்றை அறிய முடிகிறது.
மேலும், முல்லை நிலத்தில் மான்களையும் யானைகளையும் வளர்ப்பு விலங்குகளாக மாற்றுவதற்கான முயற்சிகள் நிகழ்ந்ததாகவும், பன்றிகள் வள்ளிக்கிழங்கை அகழ்ந்தெடுத்த நிலத்தில் பயிர்கள் விரைந்து வளர்ந்ததே உழுது பயிரிட வேண்டும் என்ற சிந்தனைக்கான காரணம் என்ற செய்தியையும் சங்க இலக்கியப் பாடல்களின் மூலம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதிலிருந்தே வேளாண்மைக்கான முதல் விதை விதைக்கப்பட்டிருக்கிறது என்பதைஅறிய முடிகிறது.
வேளாண்மையானது குறிஞ்சியில் (எள், கொள், மூங்கில் அரிசி) தோன்றி, முல்லையில் (கேழ்வரகு, சோளம்) விரிந்து, மருதத்தில் (நெல், கரும்பு) நிலைத்து, வேளாண் மரபின் பரவலானது தொடர்ந்து வந்திருக்கிறது.
வேள் என்பது நிலம், ஆள் என்பது ஆள்தல். வேள் + ஆள் - நிலத்தை உழவுத் தொழிலால் ஆள்தல் என்னும் பொருளில் வேளாள் ஆகி, வேளாள் + ஆர் விகுதி பெற்று, வேளாளர் ஆனது என வேளாளர் எனும் தொழிற்பெயர் குறித்து விவரிக்கும் நூலாசிரியர், பள்ளமான நீர்நிலைகளில் உழவுத் தொழில் செய்து வருபவர்களே வேளாளர் என்கின்ற வரையறையையும் தகுந்த ஆவணங்களால் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்த வேளாண் மக்கள் களமர், தொழுவர், மள்ளர், கம்பளர், வினைஞர், உழவர், கடைஞர், கிளைஞர், மேழியர், சிதலர், கடைசியர், உழத்தியர், பள்ளர் பாண்டியர், குடும்பர், காராளர், அகவர், ஏராளர், அரிஞர், அரிநர், அரிவணர், புனவர் என மருதநில மக்கள் நிலப் பெயராலும் தொழிற் பெயராலும் க பல்வேறு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
உழவு முறைகள் (உழுதல், விதைத்தல், நாற்று நடுதல், உரமிடுதல், களை எடுத்தல், நீர் பாய்ச்சல், அறுவடை போன்றவை), உழு கருவிகள் (மேழி, பூட்டாங் கயிறு, கொழு, கொழுவாணி, நுகத்தடி, நுகத்தாணி, தாற்றுக்கோல் போன்றவை) மற்றும் நீர்ப் பயன்பாட்டு நுட்பங்கள் ஆகியன வேளாண் மரபினரின் அறிவினை வியக்கவைக்கின்றன. அதுமட்டுமல்லாது, அறியப்படாத ஆறுகளின் வரலாற்றையும் (கடனாறு, அர்ச்சுணன் ஆறு, மலட்டாறு, வெட்டாறு, பரளியாறு), நச்சு உரங்களால் அழிந்துபோன மீன்களின் வகைகள் (சாளை ,பசலி, கசலி, மத்தி, கருங்கண்ணி, மணலி, தேளி மீன்), வரி, சொல், விரிகி, சாலி, யவம் என நெல்லுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களையும், சித்திரக் காலி, வாலான், நெடுமூக்கன், பூம்பாளை, காடைக்கழுத்தன் , புனுகுச்சாம்பா, வட்டக்கண்ணி, குளவாளை, செம்பாளை போன்ற நூற்றுக்கணக்கான நெல் வகைகளையும் இந்நூலின் வழியாக அறிய முடிகின்றது.
மாடுகளின் வகைகளாக குடைக் கொம்பன், செம்மறையன், மேழை, கருப்பன், அணிற்காலன், விடத்தலை, பூ நிறத்தான் போன்ற நூற்றுக்கணக்கான இனங்களை முக்கூடற்பள்ளு நூல்களின் வாயிலாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
மேற்கண்ட உழவு சார்ந்த வரலாற்றுத் தரவுகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. இதன் அழிவிற்கான காரணம் என்ன? அதனை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வழிவகைகள் என்ன? என்பதைத் தமிழ்ச் சமூகமும், அறிஞர்களும் ஆய்வு செய்ய முன்வர வேண்டும் எனும் அக்கறையை இந்நூல் வெளிப்படுத்தி இருக்கின்றது.
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் நெல்மணிகளுடன்கூடிய நெற்கதிர்கள் ஒட்டுருவமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொருந்தல் அகழாய்வில் கிடைத்த கிடைத்த நெல் மாதிரி கி.மு 450 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் மட்டுமல்ல, தமிழகத்தில் முதுமக்கள் தாழி எங்கெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் நெற்பயிருக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகக் கூறும் டி.தருமராஜன் கருத்தினையும் பதிவு செய்திருக்கிறார்.
ஈமச்சடங்கில் நெல்மணிகள் பயன்படுத்தப்படும் முறை கி.மு 2000 முதற்கொண்டே இருந்து வந்ததாகப் பல்வேறு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். இதிலிருந்து, நெல்லின் வரலாறே தமிழர்களின் வரலாறு என்பதை அறிய முடிகிறது.
"பாண்டியம் (உழவுத் தொழில்) செய்வான் பொருளினும் " -கலித்தொகை.
பள் - பண்டு - பண்டி - பாண்டி- பாண்டியன் என்று பள்ள நிலத்தில் உழவு செய்தவர்களே பாண்டிய மன்னர்களாக ஆட்சி செய்தார்கள் என்கிறார் பாவாணர். பள் செய் என்பது, நன்செய் நிலம்; பள்ளமான நிலத்தில் வேளாண்மை; பச்சை (பசேல்) எனப் பல்வேறு பொருள் தந்து உழவுத் தொழிலையே குறிப்பதாகவும், இவ் உழவுச் சமூகத்தில் இருந்து தோன்றியவர்களே பள்ளர்கள், வேளாளர்கள், பாண்டியர்கள், வேந்தர்கள் என்கிறார் மா.சோ.விக்டர்.
"புலியெனக் கொடியில் இந்திரனை வைத்த அவனும்" என்ற கலிங்கத்துப் பரணியின் வரிகளால் சோழர்கள் இந்திர விழாவினைக் கொண்டாடினார்கள் என்றும், சோழர்களின் கொடியில் உள்ள புலிச் சின்னமானது இந்திரனின் உருவம் (ஆயிரம் கண்ணுடையான்) என்றும் இலக்கியச் சான்றுகளால் உறுதிப்படுத்தியுள்ளார்.
குடும்பன் - கிழான் - வேளிர் - மன்னன் என்ற படிநிலைகளில் வேளாண் மக்கள் ஆளும் அதிகாரத்தைப் பெற்றதாகவும், ஊர்க் குடும்பனே மன்னராட்சியின் தொடக்கம் என்ற மா.சோ. விக்டர் அவர்களின் கூற்றினைப் பல்வேறு தரவுகளின் மூலமாக விளக்கப்படுத்தியுள்ளார்.
அதுபோக, வேளாண் மரபினர்களுக்குக் கோயில்களில் வழங்கப்படுகின்ற முதல் மரியாதை, பரிவட்டம் கட்டுதல், மண்டகப்படி ,தேர் வடம் பிடித்தல், நாள் கதிர் வழங்கல், விதைக்கோட்டை வழங்குதல் போன்ற வழிபாட்டுச் சடங்குகள் வேளாண் சமூகத்திற்கு மட்டுமே இன்றளவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதனை ஆய்வின் மூலமாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகுக்கு அச்சாணி போல இருந்து உணவு வழங்கும் உழவர்களே சேர சோழ பாண்டிய வேந்தர் மரபினர்கள் என்கிறது பிரபஞ்சனின் கூற்று.
உழவு மள்ளர் திரண்டு...உழுங் காளைகள் பிடித்து....நல்லூர்த் தருமன்.... குளப் புரவில் வயலில் செடியும் வெட்டி....மடை உயர்த்திப் புனல் நிறுத்தி.... கூடும் கடிகையில் நாளேரைப் பூட்டினரே...என்ற திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு நூலானது, குடும்பர்களே மள்ளர்கள் என்ற வரலாற்றையும், நல்ல நாள் பார்த்து, சித்திரை முதல் நாளில் பொன்னேர் பூட்டிய நிகழ்வினையும் சான்றாகப் பகர்கின்றது. இந்நிலையில், தமிழர்களின் சிறப்பு மிகுந்த பொன்னேர் பூட்டும் நிகழ்வினை ஆரிய வைதீகப் பண்பாட்டு நாளாக புனையப்பட்டதை எதிர்க்கிறார் நூலாசிரியர்.
ஆடிப் பெருக்கினை ( ஆடி 18 ) உழவர்களின் நீரியல் சடங்காகவும், மருத நிலத்தில் கிளைத்த பதினெண் குடிகளோடு சேர்ந்து நீரினை வரவேற்கும் நீரியல் சடங்கு எனவும் விவரிக்கிறார்.
பொங்கல் விழாவானது (அறுவடைச் சடங்கானது) வெறும் உணவு சமைத்தலை மட்டும் குறிக்கவில்லை. உணவுப் பொருள், செல்வம், வளமை, செழிப்பு, உற்பத்தி சார்ந்த வளமையின் குறியீடு என்று பலவாறு பொருள் கூறுகிறார். மேலும், உயர்தல் மேல் ஏறுதல், வளர்தல், விளம்புதல், செறுக்குறுதல், மகிழ்தல் என்று பண்பாட்டு ரீதியாகப் பல்வேறு பொருண்மைகளைப் பொங்கல் விழா குறிப்பதாகவும் கூறியுள்ளார்.
ஏறு தழுவுதல் என்பது மாடுகளும் மனிதர்களும் தழுவிக்கொள்ளும் வேளாண் உற்பத்தியின் வளமைச் சடங்கு என்று உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மாடு தழுவுதல் சடங்கு நிகழாவிட்டால் வானம் பொய்த்து, கடும் பஞ்சம் ஏற்படும் என்ற உழு குடியினரின் நம்பிக்கையை எடுத்துரைத்திருக்கிறார்.
இதன் மூலம் தமிழ் நிலத்தில் கொண்டாடும் விழாக்கள் எல்லாமே உழவோடும், உழவர்களோடும் பின்னிப் பிணைந்து இருப்பதனை அறிய முடிகிறது.
மேற்கண்டவாறு, மரபுவழி வேளாண் குடியினரின் இயற்கையோடு இயைந்த வாழ்வு, நிலத்தோடும் நீரோடும் வாழ்ந்த உழவியல் தொழில்நுட்பம், உழு கருவிகள் பயன்பாடு போன்றவை வியக்கும் வகையில் உள்ளன. நீர்ச்சடங்கு, உழவுச் சடங்கு, நடவுச் சடங்கு, அறுவடைக் சடங்கு போன்ற பண்பாட்டு நிகழ்வுகள் உழவர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டிருப்பதனை மறுக்க இயலாத வரலாற்று ஆவணங்கள் மூலம் வலுப்படுத்தியுள்ளார்.
இந்த நெல்லின் மக்கள் வழிபடக்கூடிய தெய்வமாகிய வேந்தன் (இந்திரன்) வழிபாட்டு மரபு பற்றி "வேந்தன் மேயத் தீம்புனல் உலகம் "என்று தொல்காப்பியர் அடையாளப்படுத்துகிறார்.
விண்ணுலக வேந்தன் மழைக்கு அதிகாரி. மண்ணுலக வேந்தர்கள் மக்களுக்கு அதிகாரி என்று வேந்தர் வழிபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேந்தன் என்பது மருத நிலத்தையும், வேளாண் மக்களையும் ஆள்பவனே வேய்ந்தன் (வேந்தன்) என்கிறார்.
சிந்து - சிந்திரன் என்பதே இந்திரனாகத் திரிந்து இருப்பதாகவும், சிந்துதல் என்பது மழைப் பொழிவின் சிதறலையும், தெளித்தல், ஒழுகுதல் என்ற பொருளைத் தருவதாலும்,
சிந்து என்ற சொல்லுக்கு நீர் என்று பிங்கல நிகண்டு பொருள் கூறுவதாலும், மருதநிலத்தின் வேளாண்மைக்கான நீரையே இந்திரன் என வேளாண் மக்கள் வழிபட்டிருப்பதாகவும், அவ்வகையில், மருதநிலத்தின் வழிபடு தெய்வமாக இந்திரனே இருந்திருக்கிறது எனவும், அத்தகைய இந்திர வழிபாடே வேந்தன் வழிபாடு எனவும் உறுதிப்பட நிறுவியிருக்கிறார் நூலாசிரியர்.
இந்திரனை வேந்தன் என்ற பொருளில் திருவள்ளுவரும், இந்திரன் மழைத் தெய்வமாதலாலே வேந்தன் ஆனதற்குக் காரணம் என்ற கா.சு.பிள்ளை அவர்களின் கூற்றுக்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
மருதநிலத் தெய்வமான வேந்தனும் இந்திரனும் ஒன்றுதான்; அது தமிழர் தெய்வமே என்கிறார் பி.டி. சீனிவாச ஐயங்கார்.
ஆரியர் வணங்கிய இந்திரன் இடி, மழை, மின்னல் தெய்வமாகும். இது, போர்க்கள வெற்றிக்கு உதவுவதாகவும், சோம பானத்தையும், விலங்கின் இறைச்சியையும் உண்பவராகவும் ஆரிய வழிபாட்டு மரபில் குறிக்கப்படுகிறது. ஆனால்,
தமிழர்கள் வணங்கிய இந்திரனோ மழையின் பொருட்டு மட்டுமே வணங்கப்பட்டவர் என்று வேறுபடுத்திக் காட்டுவதோடு, இந்திரன் வழிபாட்டு மரபே பிற்காலத்தில் ஆசீவகத்தின் அய்யனார் வழிபாடாகப் பரிணமித்திருக்கிறது எனவும் நூலாசிரியர் விவரித்திருக்கிறார்.
இருக்கு வேதத்தில், இந்திரனுக்கு அதிகமான பாடல்கள் புனையப்பட்டுள்ள நிலையில், தமிழ் இலக்கியங்களில் ஏன் பாடப் பெறவில்லை?
வடக்கே இந்திரனைத் தெய்வமாக வழிபடும் மரபு அனைவருக்கும் ஆனதாக இருக்கும்போது, தமிழகத்தில் மருத நில மக்கள் மட்டும் வழிபடுவதற்கான காரணம் என்ன?
ஆரிய வைதீக மரபில் வேளாண்மையைப் பாவமான தொழிலாகக் காட்சிப்படுத்துகின்ற போது, தமிழர்கள் மட்டும் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாகப் பார்ப்பது ஏன்?
தமிழரின் பண்பாட்டு நடத்தைகள் நீரோடு தொடர்புடையது. ஆரிய வைதீக மரபினரின் பண்பாட்டு நடத்தைகள் நீருக்கு எதிரான நெருப்போடு தொடர்புடையது ஏன்? என்பன போன்ற வினாக்கள் எழுப்பி, ஆரியர்களின் இந்திரத் தெய்வம் வேறு; தமிழர்களின் இந்திரத் தெய்வம் வேறு எனத் தெளிவுபடுத்திக் காட்டுகிறது இந்நூல்.
"மண்ணகம் அருள வானகம் வியப்ப... விண்ணவர் தலைவனை விழுநீராட்டி" என்று, மழைத் தெய்வ வழிபாட்டைக் குறிக்கும் சிலப்பதிகாரம், இந்திர விழவு எனப் பதிகத்திலும், விண்ணவர் கோமான் விழவு என இந்திர விழவூரெடுத்த காதையிலும், மழையைக் குறிக்கும் இந்திரனே வேந்தன் எனும் பொருளில் வருவதாகப் பதிவு செய்திருப்பதன் மூலம், இந்திரனும் வேந்தனும் வேறு வேறல்ல என்ற மெய்மையையும் நூலின் வழியே அறிய முடிகிறது.
வானவர் கோமான், கரியவன், வலாரி, மருத்துவன், அரி, ஆகண்டலன், ஆயிரங் கண்ணோன் போன்ற இந்திரனின் பல்வேறு பெயர்களும் மழையோடு தொடர்புடையதாகவே இருப்பது மேலும் சான்றாகிறது.
மேலும், இந்திரனைப் போகி என்ற பெயரில் அழைப்பது போலவே, வேளாண் உற்பத்தியைப் போகம் என்ற சொல்லால் அழைக்கும் மரபு உண்டு என்கிறார். வேளாண் விளைச்சல் தரும் தெய்வமான போகியை (இந்திரனை) அறுவடைக் காலத்திலும் மறவாது வழிபடும் சடங்கியல் மரபு என்பதாலேயே போகிக்குக் காப்பு கட்டி வருகின்றனர் உழவர்கள். இவ்வாறு, போகியன்று காப்புக்கட்டுதலில் பயன்படுத்தப்படும் கூழைப்பூ, கண்ணுப் பூளை - கண்+பூ+இலை (கண்ணுப் பூவிலை) என்ற பூவானது, ஆயிரம் கண்ணுடையான் என்னும் இந்திரனைக் குறிக்கும் அடையாளத்துடன் இருப்பதாலேயே போகி ( இந்திர விழா) அன்று காப்பு கட்டப்படும் சடங்கியல் மரபு நிகழ்கிறது என்கிறார்.
மேலும், மழைக்காலத்தில் மட்டுமே பூக்கக் கூடிய இந்தப் பூவானது, வெள்ளை நிறத்திலான மழைத்துளிகள் கோத்தது போலவும், நீர் வழிவது போலவுமான தோற்றத்திலான கூழைப் பூவினைக் காப்பு கட்டுவதற்கு உழவர்கள் தேர்வு செய்திருப்பது வியப்பினைத் தருவதாக உணர்ந்திருக்கிறார்.
வேளாண் மரபினர்களுக்கும் ஆரியர்களுக்குமான பகையும் முரணும் வேளாண் நிலத்தை மையமிட்டு நடந்த தொழிற்பகையே காரணம் என்று அறியலாம்.
ஆரியர்கள் வாழ்கின்ற பகுதி குளிர்ப் பகுதி என்பதால் தீ மூட்டுதல் (யாகம் வளர்த்தல்) நிகழ்வும், தமிழர்கள் வாழ்கின்ற பகுதி வெப்ப மண்டலப் பகுதி என்பதால் நீராடல் நிகழ்வும் நடைபெறுவதாகத் தொ. பரமசிவம் கூறுகிறார். மேலும், தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் பல்வேறு நிலைகளில் பண்பாட்டியல் ரீதியாகவே முற்றிலும் முரணாக இருக்கின்றது. இந்நிலையில், தமிழர் மரபில் இந்திரன் வேளாண் தெய்வமாகவும் - மழைத் தெய்வமாகவும் - நீர்த் தெய்வமாகவும் அடையாளப்படுத்தி வருகின்றனர். இதிலிருந்து தமிழ் இந்திரன் வேறு; ஆரிய இந்திரன் வேறு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
வேளாண் மாந்தர்களின் மழைப்பொழிவைக் கணிக்கும் திறன், நீர் சேமிப்பு, நீர்ச் சுழற்சி, நீரியல் சொற்கள் காட்டும் நீராதார அமைப்புகளின் பல்வேறு வடிவங்கள், நீர் மேலாண்மையில் உழவர்களின் பேரறிவு, முறைப்பானை முறையில் நீர்ப் பங்கீடு, குமிழித்தூம்பு மூலமாக நீர் நிலையைப் பாதுகாக்கும் மடைச் குடும்பர்களின் வரலாறு என, உழவர் சமூகத்தின் நீரியல் சார்ந்த நுட்பங்களும், வேளாண் சார்ந்த அனைத்துத் தரவுகளும் நூல் முழுவதும் நிரம்பி வழிகின்றன.
நீர் மேலாண்மைப் பராமரிப்பு என்பது நீராணிக்கன், குடும்பர்கள், ஊர்ப் பொதுமக்களின் பொறுப்பில் இருந்தவரை நீர்நிலைகள் பாதுகாப்பாக இருந்ததையும், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் சென்றபிறகே நீர்நிலைகள் முற்றிலுமாக அனாதையாக்கப்பட்ட நெடிய வரலாற்றை படிக்கின்ற போது, பூவுலகின் நலனுக்கு எதிரானவர்களாக மானுட சமூகம் நகர்ந்துகொண்டிருக்கும் வேதனையையும் நூல் விளக்குகிறது.
உழுகுடியின் வாழ்வும், தொழிலும், கொடைத் தன்மையும் நிலத்தோடும் நீரோடும் மட்டுமே பிணைக்கப்பட்டு இருப்பதனை வரலாற்று ஆவணங்கள் புலப்படுத்துகின்றன.
வேளாண் மரபினரின் பெயர் அடையாளம் என்பது உயர்வு தாழ்வு காட்டுவதற்கு இல்லை. உயர்சாதிப் பகட்டுக்கு உரியதும் இல்லை. இதில் வேளாண் சமுகத்தின் சுயமரியாதை, சமூக நீதிக்கான வேட்கை மட்டுமே நிரம்பியது என்ற எதார்த்தத்தை இந்நூல் முன்வைத்திருக்கிறது.
உழவர் குடியினரில் பள்ளர் என்பது பொது வழக்குச் சொல், மள்ளர் என்பது இலக்கிய வழக்குச் சொல், வேளாளர் என்பது தொழில் பெயர்ச்சொல், தேவேந்திரகுல வேளாளர் என்பது பண்பாட்டு அடையாள அரசியல் சொல் எனப் பலவாறும் விளக்கப்படுத்தி, அறத்தின் வழி நின்று வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார். மேலும், வேளாளர் என்பதற்கான அனைத்துத் தகுதிகளும் உரிமைகளும் வேளாண்மைத் தொழில் புரியும் உழவுக்குடிகள் யாவருக்கும் பொருந்தும் என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது இந்நூல்.
அதோடு, வேளாண்மை உற்பத்திச் செயல்பாடு என்பது, பதினெண் குடிகளின் ஒருங்கிணைந்த கூட்டுச் செயல்பாடுகளே என்கிறார். அந்த வகையில், இன்று வேளாண்மை செய்து கொண்டிருக்கின்ற பள்ளர் (மள்ளர்), வன்னியர், கவுண்டர், வெள்ளாளர், முத்தரையர், அகமுடையார், மறவர், கோனார், பறையர் உள்ளிட்ட பல்வேறு தமிழ்க் குடிகள் ஒருங்கிணைந்து வேளாண் வளத்தைப் பெருக்குவதற்கு ஒன்றுபட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறது நூல்.
தமிழ்த் தேசிய எழுத்தாளர் மகாராசன் அவர்கள், உழவர் சமூகத்தின் பண்பாட்டு வேர்களை நுட்பமாகவும், ஆழமாகவும், தெளிவாகவும், செறிவாகவும் அறவழியில் நின்று, வேளாண் மரபின் தமிழ் அடையாளம் என்ற நூலின் வழியே உழு குடியின் வரலாற்றை நேர் செய்திருக்கிறார்.
மானுடத்தின் முதல் இனமான தமிழர்கள் எல்லோருமே, குறிஞ்சியில் தோன்றிய குறவருக்கும், முல்லையில் கிளைத்த இடையருக்கும், மருதத்தில் பல்கிப் பெருகிய பள்ளருக்கும் மரபு வழியில் தோன்றியவர்களே என்ற கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கூற்றினை, நூலைப் படித்து முடிக்கின்றபோது உணர முடிகிறது.
அந்த வகையில், தமிழர்களின் வரலாற்றைத் தமிழ்க்குடியின் தோற்றத்திலிருந்தே தேட வேண்டும். அதைவிட்டு விட்டு, நிகழ்காலத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வியலை மட்டுமே மனதில் வைத்து வரலாற்றை நிருணயம் செய்வது என்பது, தமிழ்த் தேசிய இனத்தின் மீட்சிக்கு உதவாது என்ற கருத்தியலைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
இன்றைய சூழலில், தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வேர்களையும், வேர்களில் தழைத்த இலைகளையும், கிளைகளையும், பூக்களையும், காய்களையும், கனிகளையும் தேடித்தேடி அதன் வரலாற்றுப் பெருமிதங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். அதன் வழியாக மட்டுமே தமிழ்ப் பேரினத்தின் விடியலுக்கான வாசல் திறக்கப்படும். மேலும், இதுபோன்ற தொல் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டு மானிடவியல் நூல்கள் பல்கிப் பெருக வேண்டும். இவை தொடர்பான ஆய்வுகள் தமிழ்ச் சமூகத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே தமிழ்ச் சமூகத்தின் உட்சாதிப் பகை மறையும்; தமிழர் நலன் சார்ந்த வாழ்வியல் பெருகும்; நலம் பெறும்; வளம் பெறும்.!
இவ்வாறாக, பல்வேறு வரலாற்றுத் தகவல்களின் மூலமாக வேளாண் மரபினரின் பண்பாட்டு வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல், உழவுக் குடிகளின் வரலாற்றை நேர் செய்திருக்கும் ஆவணமாகவும் அறிவாயுதமாகவும் திகழ்கிறது.
நூலாசிரியர் மகாராசன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்; பாராட்டுகள்.
*
கட்டுரையாளர்:
செங்காந்தள் வீரராகவன்,
கல்விச் செயல்பாட்டாளர், தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதாளர்,
நாமக்கல்.
*
நூல் தலைப்பு:
வேளாண் மரபின்
தமிழ் அடையாளம்:
உழவுப் பண்பாடும்
வேளாளர் சமூக வரைவியலும்.
நூல் ஆசிரியர்:
ஏர் மகாராசன்
வெளியீடு:
யாப்பு வெளியீடு, சென்னை.
பதிப்பு:
முதல் பதிப்பு, அக்டோபர் 2021.
பக்கங்கள்: 224
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ: 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.
நூல் வேண்டுவோர்
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு
9080514506.
சிறப்பான மதிப்புரை
பதிலளிநீக்குசிறப்பான மதிப்புரை
பதிலளிநீக்குநன்று
பதிலளிநீக்குநல் மதிப்புரை
பதிலளிநீக்குமிக நல்ல ஆய்வு
பதிலளிநீக்கு