ஞாயிறு, 5 டிசம்பர், 2021

உழவாண்மை இயங்கியலை மிகச் சிறப்பாகப் பேசும் நூல் : மா.ஜெயச்சந்திரன்


மானுட சமூகம் உணவுதேடும் நிலையிலிருந்துஉற்பத்தி நிலைக்கு மாறியது, தொல்காப்பியனார் கூறும் தீம்புனல் உலகமெனும் மருத நிலத்தில்தான். அந்த மருதநில மக்களின் உழைப்பு, உற்பத்தி என்பதெல்லாம் உழவு உற்பத்திதான்.
அந்த உற்பத்தியாளர்களான 'தேவேந்திரர்' எனும் மள்ளர்/பள்ளர்/'பள்ளி' மக்களின் வாழ்வியலை, வரலாற்றை,
அவ் உழுகுடி மக்களின் பண்பாட்டு விழுமியங்களைத் தமிழிய வேர்களின் தடம் (வடம்) பிடித்து "வேளாண் மரபின் தமிழ் அடையாளம்" எனும் நூலில், அதன் நூலாசிரியர் திரு ஏர் மகாராசன் சிந்தையில் பொதுமையுணர்வோடும்,
தக்க வரலாற்றுச் சான்றுகளோடும், இலக்கியத் தரவுகளோடும்
மிக நேர்த்தியாக  எழுதியுள்ளார்.

ஏர்க்களம் / போர்க்களமாய் வாழ்ந்த இத்தமிழ்த் தொல்குடிமக்களின் வாழ்வியலை மிக வலிமையாகவும் எளிமையாகவும் பேசுகிற இந்நூல், 
மருதநில வேளாண் குடிகளான மள்ளர் / பள்ளர் / பள்ளி எனும்
உழுகுடிகளின் வரலாற்று எழுத்தாவணம்  என்றால் அது மிகையல்ல.

'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' என்னும் இந்நூலில், பண்டையத் தமிழ்ச் சமூகத்தில் உழவர்கள் பெற்ற இடம், அவர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, பயிர்த் தொழிலில் உயர்வு, பண்பாட்டு மேன்மை, வேளாண் தொழில் நுட்பங்கள் பற்றியெல்லாம் மிக விரிவாகப் பேசும் ஏர் மகாராசன், பசியை ஒழிக்க  உழவர்கள், உழவுப் புரட்சியை  மேற்கொண்டதால்தான் மொழி வளம் பெற்றது; முத்தமிழ் சிறந்தது; பண்பாடு தோற்றம் பெற்றது; ஏற்றம் பெற்றது. உழவு என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது ஒரு பண்பாட்டின் தொடர்ச்சி, நாகரீக வளர்ச்சி என்கிறார்.

அப்படிப்பட்ட வேளாண் உற்பத்திக்கு அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது வித்து. ஒற்றை விதைக்குள் அரூபமாய் ஒளிந்திருக்கும்  பல விதைகளை வெளிக்கொணரும் வித்தையைக் கற்றவர்கள் உழவுத் தொழில் மரபை, வாழ்வியல் மரபாகக் கொண்டிருப்பவர்கள் 'பள்ளர்கள்'தான் என்றும், 12,000 சாதி நெல் வகைகளை இந்த மள்ளர் எனும்  பள்ளர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்றும், அவர்களை காராளர், கருங்களமர் என்றெல்லாம் பழனி செப்புப் பட்டயத்தின் வழியும் பள்ளு இலக்கியங்களின் வழியாகவும் சான்று பகர்கிறார்.

காராளர்களின் 'ஏர் பூட்டல்' தொழிலான 'ஏர் நடத்தல்' சிறப்பானால்  எல்லாம் தானே நடக்கும், பசிப்பிணி ஒன்று மட்டுமே நடக்க மாட்டாது! என்கிறார்.

ஆற்றுநீர், ஊற்று நீர், மறைநீர் (Virtual Water), மழைநீர், வெள்ளமெனப் பெருகி, மருதநிலத்தை வளமாக்கியது. மண்ணும் நீரும் சேர்ந்தே உணவாகியது. அதுவே உயிர்களுக்குப் பசிப்பிணியைப் போக்கும் மருந்தாகியது! 'உழவுதான்' உணவைப் படைத்தது! 'உபரிதான்' வணிகத்தைத் தோற்றுவித்தது!

வழிபாட்டுச் சடங்காகவும்,
வாழ்த்துச் சடங்காகவும் இருக்கும் வேளாண் வளமைச் சடங்குகள்தான் தமிழர் பண்பாட்டின் தோற்றுவாய் எனவும், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனப் பஞ்சபூதங்களின் சேர்க்கைதான் வேளாண்மை.
மண்ணும் நீரும் பிசைந்து உருவானதே  உணவு,
'உழவாண்மை' என்றெல்லாம், வான் -மண் - உழவு இயங்கியலை  மிகச்சிறப்பாக இந்நூலில் பேசியுள்ளார் திரு ஏர் மகாராசன் அவர்கள்.

"பழுதுண்டு வேறோர் தொழிலுக்கு,
பழுதில்லா ஒரே தொழில் உழவு தான்!உழவு என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது ஒரு வாழ்வியல்.

உழவுப் பண்பாட்டு மரபு என்பது, நிலத்தோடும், நெல்லோடும், உழவோடும், மாடுகளோடும் பிணைந்த பன்னெடுங்கால அறிவும், உறவும், உணர்வும், உழைப்பும்தான் என்று கூறுகிறார் ஏர் மகாராசன்!

உழவின் மேன்மையை, உழவர்களின் சிறப்பை, உழுகுடி மக்களின் வரலாற்றை, பண்பாட்டு விழுமியங்களை  இந்நூல் முழுவதிலும் மிகச்சிறப்பாகப் போற்றியுள்ளார்! வாழ்த்துக்கள்.

கட்டுரையாளர்:
மா.ஜெயச்சந்திரன்,
கவிஞர் - அரசியல் செயல்பாட்டாளர்,
நாம் தமிழர் கட்சி,
ஈரோடு.
*
நூல் தலைப்பு:
வேளாண் மரபின்
தமிழ் அடையாளம்:
உழவுப் பண்பாடும்
வேளாளர் சமூக வரைவியலும்.

நூல் ஆசிரியர்:
ஏர் மகாராசன்

வெளியீடு:
யாப்பு வெளியீடு, சென்னை.

பதிப்பு:
முதல் பதிப்பு, அக்டோபர் 2021.

பக்கங்கள்: 224
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ: 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

நூல் வேண்டுவோர்
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு
9080514506.

3 கருத்துகள்: