செவ்வாய், 12 செப்டம்பர், 2023

அசத்தும் ஓர் அரசுப் பள்ளி - மகாராசன்



தமிழ்நாட்டுப் பள்ளிக் கூடங்களில், தொடக்கக் கல்வி நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் எண்ணும் எழுத்தும் எனும் கற்பித்தல் திட்டம் குறித்த ஆய்வுப் பணி நடந்து வருகிறது. பல தொடக்கப் பள்ளிகளுக்கும் சென்று, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நாள் முழுக்கப் மேற்பார்வையிடும் பணிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறேன். இதுவரை பல தொடக்கப் பள்ளிகளுக்கும் சென்றிருக்கிறேன். பல பள்ளிகள் தொடக்கநிலைக் கல்வியை மிக நன்றாகவே அளித்துக் கொண்டிருக்கின்றன. 


தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் குழந்தைகளோடு குழந்தையாக ஒன்றி இருந்தனர். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் பெரும்பாலான குழந்தைகள் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கின்றனர். பலரும் சொற்களை வாசிக்கத் தெரிந்துள்ளனர். எண்கள் அனைத்தும் தெரிந்திருப்பதோடு கூட்டல், கழித்தல் கணக்குகளையும் போடுவதற்குத் தெரிந்திருக்கின்றனர். 

தொடக்கக் கல்வியின் அடித்தளம் சரியாக அமைந்து விட்டால், மாணவர்களின் உயர்நிலைக் கல்விப் பயணம் சிறப்பாக அமைந்துவிடும். அதற்கான நம்பிக்கை வெளிச்சம் தொடக்கக் கல்வி நிலையில் தெரிகின்றது. இது பரவலாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இன்றைய நாளில், ஓர் அரசு தொடக்கப் பள்ளிக்குச் சென்றிருந்தோம். அரசுப் பள்ளிக்கான எந்தச் சாயலும் தென்படவில்லை. மிகக் குறுகிய இடத்தில் பள்ளி இருந்தது. ஆனாலும் மரங்களும் செடிகளும் பசுமை நிழலைத் தந்தபடி இருந்தன. பள்ளிச் சுவர்கள், வகுப்பறைச் சுவர்கள் அனைத்திலும் பல வண்ணங்களில் ஓவியங்களும் படங்களும் மிளிர்ந்தன. அரசுப் பள்ளிக்குள்தான் இருக்கிறோமா என வியக்கும் உணர்வு அவ்வப்போது வந்து கொண்டே இருந்தது.  

பள்ளிக்குள் நுழையும் ஒவ்வொரு குழந்தையும் ஆசிரியர்களைப் பார்த்தவுடன் இரு கைகளையும் கூப்பி காலை வணக்கம் சொல்லிக்கொள்கிறார்கள். வகுப்பறை வாசலில் நின்று உள்ளே வருவதற்கு கைநீட்டி அனுமதி கேட்கிறார்கள். ஆசிரியர்கள் வரச்சொன்ன பிறகே உள்ளே நுழைகிறார்கள். மிக அழகாக அவரவர் இடத்தில் அமர்கிறார்கள். எங்களில் யாரேனும் எந்த வகுப்பிற்குள் நுழைந்தாலும் எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார்கள். 

வளாகத்தின் ஓர் ஓரத்தில் நின்றிருந்தால்கூட சிறுநீர் கழிக்கவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ வெளியில் வரும் எந்தக் குழந்தையாக இருந்தாலும், கிட்டே வந்து கை கூப்பி வணக்கம் சார் என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள். மிக வாஞ்சையோடும் வெள்ளந்தியோடும் பேசுகிறார்கள். 

சீருடை மிக நேர்த்தியாக அணிந்திருக்கிறார்கள். அவர்களும் பள்ளிப் பெயர் பொறித்த கழுத்துப் பட்டை, இடைவார் அணிந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் அணிந்திருந்த சீருடையின் நிறத்தை வைத்துத்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் எனக் கணிக்க முடியும். அந்தளவுக்கு மிக நேர்த்தியான ஒழுங்குடனும் அழகுடனும் வரிசையாகப் போவதும் வருவதுமாய் இருந்தார்கள். 

எல்லாக் குழந்தைகளுக்கும் மிக நன்றாகவே எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கிறது. பலரது குறிப்பேடுகளையும் வாங்கிப் பார்த்தபோது அழகு அழகுக் கையெழுத்துகள். எந்தக் குழந்தையின் முகத்திலும் சோர்வோ பயமோ கூச்சமோ எதுவுமில்லை. மிகப் புத்துணர்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் பள்ளி வளாகத்திலும் வகுப்பறையிலும் இருந்தார்கள். ஆசிரியர்கள் அனைவருமே குழந்தைகளோடு மிக நெருக்கமாய் அன்பாய் இருப்பதை உணர முடிந்தது. 

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் திருமதி தமயந்தி அவர்களும், மற்ற ஆசிரியர்களும் இந்தப் பள்ளியை மிக அருமையாக வைத்திருக்கின்றனர். 

பல ஆண்டுகள் கழித்து எனக்கு மிகப் பிடித்தமான, மனதுக்கு மிக நெருக்கமான, முழு மன நிறைவைத் தந்திருக்கும் ஒரு பள்ளிச் சூழலை இன்றுதான் அனுபவித்திருக்கிறேன். குழந்தைகளின் ஒழுக்கம், படிப்பு, கற்றல் நடத்தை, பள்ளிச் சூழல், ஆசிரியர்கள் கற்பித்தல், தலைமை ஆசிரியர் நிர்வாகத் திறன் என அனைத்துமே சீர்மிகு பள்ளிக்கான முழுத்தகுதியோடுதான் இருந்தன. 

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் பேசிக்கொண்டிருந்த போதுதான், தமிழ்நாட்டிலேயே மிகச் சிறந்த பள்ளி என்பதற்கான விருது பெற்றிருப்பதையும், மிகச் சிறந்த ஆசிரியருக்கான விருதைத் தலைமை ஆசிரியர் அவர்கள் பெற்றிருப்பதையும் சொன்னார்கள். இன்னும் பல விருதுகளை அந்தப் பள்ளியும் மாணவர்களும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் பெறுவார்கள். அந்தளவுக்கு அசத்தல் மிகுந்த பள்ளியாக மிளிர்கிறது. 

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்குச் செல்லும் வழியில், ஆரோக்கியமாதா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிதான் அது. 

ஒன்று முதல் அய்ந்து வகுப்புகள் முடிய உள்ள பள்ளிதான் அது. 2007இல் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் கிட்டத்தட்ட 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள். 6 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆயினும், நான்கு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. ஏதேனும் ஒரு வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறை இல்லாமல், மரத்தடியிலும் வளாக நடைபாதையிலும்தான் வகுப்பு நடத்த வேண்டி இருக்கிறது. கூடுதலாக ஒரு வகுப்பறைக் கட்டடம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. 

இதுபோக, எல்லா வகுப்பறையிலும் மாணவர்கள் அமர்வதற்கான இருக்கைகள் மற்றும் மேசைகள் இருந்தால் மாணவர்களின் கற்றல் திறனுக்குப் பேருதவியாக இருக்கும். கல்வித் துறையும் தன்னார்வலர்களும் இந்தப் பள்ளிக்கு வேண்டியதைச் செய்தால் தகைசால் தொடக்கப் பள்ளியாக மாறுவதற்கு வாய்ப்புண்டாகும். இந்தப் பள்ளிக்குச் சென்று வந்த பிறகு ஓர் ஆசிரியராய் மிக மன நிறைவோடும் மிகுந்த நம்பிக்கையோடும் இருப்பதாய் உணர்கிறேன். மிக்க நன்றியும் வாழ்த்தும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

வாய்ப்புள்ளோர் சென்று வாருங்கள். இயன்றதையும் இன்மொழிச் சொற்களையும் பகிர்ந்திடுங்கள். 

வாழ்த்தையும் பாராட்டையும் தலைமை ஆசிரியர் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவோர், தலைமை ஆசிரியர் திருமதி தமயந்தி அவர்களது எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பேச : 9944787891

முனைவர் ஏர் மகாராசன்

12.09.2023

2 கருத்துகள்:

  1. பெயரில்லா13/9/23, 2:05 PM

    நான் அப்பள்ளிக்கு விரைந்து செல்கிறேன் அய்யா

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா16/9/23, 8:48 AM

    Immadiriyana Palligal ellaidathilum amayavendum

    பதிலளிநீக்கு