சனி, 16 செப்டம்பர், 2023

கல்விக் களத்தில் நிகழும் நுண் அரசியல் பின்புலத்தை விவரிக்கும் நூல்: தமிழ் நேயன் செ.



மாணவர் சமூகம் குறித்துப் பேசப்படாத பகுதியை மிகவும் எளிமையாகவும், சமூக அக்கறையோடும் பதிவு செய்துள்ளார் மகாராசன்.

மாறிவரும் உலகில் கல்விச்சூழல் எதை நோக்கிச் செல்கிறது? கல்வி, சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும், அதற்கான செயல்பாட்டுத் திட்டம் குறித்தும் அலசுகிறார். கல்விக் களத்தில் நிகழும் அரசியல் குறித்தும், பாடத்திட்டங்கள் வரையறைப் பின்னணியில் உள்ள அரசியல் குறித்தும் விரிவாக விவரிக்கின்றது 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' எனும் நூல்.

மாணவர்களின் கற்கைத் திறன் பின்னடைவு குறித்தும், மெல்லக் கற்கும் நிலையில் உள்ள மாணவர்கள் சமூக உதிரிகளாக மாறுவதற்கான காரணிகளையும் பட்டியல் செய்வதோடு, அவற்றை நேர் செய்ய வேண்டிய தேவை பற்றியும் பேசுகிறார். கூடவே, கல்வித்துறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நுண்அரசியல் பின்புலத்தையும் விவரிக்கிறார். 

மாணவர்கள், சமூக உதிரிகளாக மாறுவது பெரும்பாலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்தான் என்ற கசப்பான உண்மையைப் பதிவு செய்கிறார்.

மது, போதைப் பொருட்கள் மற்றும் நுகர்வுப் பண்பாடுகள் போன்றவை மாணவர் சமூகத்தைச் சீர்கெடுத்து உதிரிகளாக மாற்றுவதற்குத் துணை நிற்கின்றன. மது அருந்தி வரும் மாணவர்களைக் கண்டிக்க வழியில்லாமல் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதையும், கண்காணிப்புப் துறை அலுவலர்கள் அறிவுரை வழங்குவதோடு கடமை முடிந்ததெனக் கடந்து செல்லும் போக்குதான் இன்றுவரை தொடர்கின்றது என்பதையும் காட்டுகிறது இந்நூல்.

மாணவர் ஆசிரியர் இடையே உள்ள உறவு, முன்பு போல் இல்லாமல் செயற்கைத் தன்மையோடு இறுக்கத்தை தரும் வகையில் உள்ளது. ஆசிரியராகப் பணிக்கு வருபவர்கள் பாடத்திட்டங்களை மட்டுமே கற்பித்தல் பணியெனக் கருதி ஒதுங்கிக் கொள்ளும் போக்கும் உள்ளது. மாணவர் சமூகத்தில் பதின்பருவத் தடுமாற்றம் சமூகத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

தடம்மாறும் மாணவர்களைக் குறிவைத்தே சாதிய அமைப்புகள் செயல்படுகின்றன என்ற பார்வையும் எழுகிறது. சாதி என்ற சொல் வெற்றுச் சொல். ஒன்றுக்கும் உதவாது என்பதே உண்மை. சாதி பிறப்பின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது என்ற ஒவ்வாமைக் கருத்தியல் சமூகத்தில் நிலவுகிறது. பழக்க வழக்கங்கள், சடங்குகள், முறைப்பாடுகள் சாதி இறுக்கத்தைக் காக்கின்றன. 

ஒரே வகையான சூழ்நிலையில் வாழ்ந்தாலும், உளவியல் அடிப்படையிலான வேறுபாடுகள், எண்ணங்கள் சாதி இருப்பை வலுப்படுத்துகின்றன. குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதற்குச் சாதி அடையாளம் துணை நிற்கின்றன. சாதி அடிப்படையில் வழங்கப்படும் பங்கீடும் நிறைவான தீர்வாகாது.

மாறாக, சாதி இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. சாதியின் பெயரில் வழங்கப்படும் உதவிகளுக்கு மாற்றுச் சொல் காலத்தின் தேவை. சாதியற்ற சமூகத்தை உருவாக்க அரசு முயற்சி செய்யவில்லை. மாறாக, சாதியப் பதற்றத்தைக் கேடயமாகக் கொண்டு ஆட்சி நடைபெறுகின்றன என்பதைக் கழக ஆட்சி நிகழ்வுகள் நிறுவுகின்றன.

உதிரிகளாகும் மாணவர் சமூகத்தைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு ஆசிரியர், பெற்றோர், அரசு, பொதுசமூகம் என அனைவருக்குமானது.

சாதியற்ற சமநிலைச் சமூகத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

கட்டுரையாளர்:
செ.தமிழ்நேயன்,
மருந்தாளுநர், சென்னை.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக