சனி, 23 செப்டம்பர், 2023

இந்தியக் கல்வியகங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிற சாதிய மதவாதப் பிற்போக்குத்தனங்களின் நிலைகளைச் சுட்டும் நூல்: கு.தமிழ்வேந்தன்


கல்வியாளர் முனைவர் மகாராசன் அவர்கள் எழுதிய "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" என்ற புத்தகம், கல்வி நிலையங்களில் நடந்துகொண்டிருக்கிற அவலங்களையும், வகுப்பறைக்குள் மாணவர்களும் பல்கலைக்கழகங்களில் போராசிரியர்களும் இறுகப் பற்றியுள்ள சாதிய அபிமானங்களையும், இன்றைய நவீன சமூக அகப் புறச் சூழலிருந்து அவற்றை எப்படி மழுங்கடிக்க வேண்டும் என்ற கருத்தாங்களையும் நிகழ்கால இரத்தக்கறை படிந்த சம்பவங்களோடு எடுத்துரைக்கிறார். 


லும்பர் கல்ச்சர் என்கிற உதிரியான மாணவர் கலாச்சார நிகழ்வுகள் தற்கால மாணவர்களிடையே அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இளைய சமுதாயம் எனப்படும் பள்ளி மாணவ மாணவிகள் கூலிப்(புகையிலை), கஞ்சா, மது என எல்லா தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி இருக்கின்றனர். நவீனத் தொழில் நுட்பங்களான முகநூல், சுட்டுரை, படவரி (Instagram) என ஏராளமான மின்னணுச் சாதனங்களில் வருங்கால இளைய தலைமுறை அதிலே மூழ்கிக் கிடப்பதற்கான பங்களிப்பை அதிகமாக வழங்கி வருகிறது.   

ஏற்கனவே உயர்கல்வி படித்து முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்று கிடைத்த வேலைகளுக்குச் செல்லும் சூழலுக்குப் பலர் தள்ளப்பட்டு இருக்கின்றனர். அதனோடு அதிக பாடச்சுமையால் மாணவர்கள் பள்ளியை விட்டு இடைநிற்றலுக்குப் பலர் ஆளாகின்றனர். மாறிக்கொண்டிருக்கிற தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்விகளும் மாற்றமாக வேண்டும் என்பது உண்மை. ஆனால், சமூகக் கட்டமைப்பில் நிலவக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைக் கருத்தில் கொண்டும், பொருளாதார விளிம்புநிலைக் குடும்பங்களையும் முதல் தலைமுறை மாணவர்களையும் கணக்கில் எடுத்தும் பாடங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய நிலைப்பாட்டைப் புரியாமல் அதிக பாடப்பொருண்மைகளைக் கல்வி வல்லுநர்கள் திணிக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல், படிக்கும் மாணவர்களோடு ஒப்பிட்டுப் பல மொழிகள், நடனம், பாட்டு, தற்காப்புக்கலைகள் என காலை, மாலை, இரவெனத் தொடர்ச்சியாக இயங்கும் இயந்திரம் போன்று இன்றைய மாணவர்களை இருக்க வைக்கப் பல பெற்றோர்களும் விரும்புகின்றனர்.

மாணவர்களின் வாசிப்புத் திறனும் கூர்த்த கவனிப்பும் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதிலும் புரிந்துகொள்வதிலும் வேறுபாடுகள் நிறைய இருக்கும். அத்தகைய வேறுபாடுகள் நிறைந்த மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டுமென்றும், அனைத்துச் சமூகப் பிரதிநிதிகளும் பாடத்திட்ட வல்லுநர் குழுவில் இடம் பெற வேண்டும் எனவும் வற்புறுத்துகிறார் நூலாசிரியர்.

சக மாணவனோடு நெருக்கமாகப் பழகிய ஒருவனை, சாதியக் கண்ணோட்டத்தோடு வீடு புகுந்து வெட்டும் கொடூர மனநிலைக்கு மடைமாற்றிய பொறுப்பும் தங்களை உயர்த்திக்கொண்ட சாதி மனக்கும்பலுக்கு உள்ளது எனவும் சுட்டிக் காட்டுகிறார். 

நாங்குநேரியில் நடந்தது சாதிவெறி மட்டுமில்லை. சமூக அடாவடித்தனமும் கட்டபஞ்சாயத்துகளும் அதிகமாக அங்கு கோலோச்சுகிறது. அதனால் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் பலர் தங்கள் குடியிருப்பை விட்டு வேறொரு ஊருக்கு இடம் பெயர்ந்தும் இருக்கின்றனர். 

மாணவர்கள் சாதிக் குழுக்களாக ஒன்று சேர்ந்து பிறர் சமூக மாணவனை சாதி சொல்லிச் திட்டுவது,தாக்குவது, பள்ளிச் சுவற்றில் பிற சமூகங்ளை இழிவாக எழுதி வைப்பது, கூடவே ஆசிரியர்களும் தன்சாதி ஆசிரியர்களோடு சேர்ந்து கொண்டு பிறரை ஒதுக்கி வைக்கும் சாதிய வன்மம் ஆசிரியர்களிடமும் இருக்கிறது என்கிறார்.

அம்பேத்கர் அவர்கள் படிக்கவே கூடாது என்கிற கல்வி மறுக்கப்பட்ட காலகட்டத்தில் சிலரின் உதவிகளால் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருந்தார். அவரே கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தியோடு அதனைச் சட்டமாக்கிக் கிடைக்க வழிவகையும் செய்தவர். ஆனால் இன்று அவரின் சிலைகள் உடைக்கப்படுவதும் சிலையின் வர்ணத்தை மாற்றுவதுமாக நடைபெறும் ஆபத்துப் போக்கு நிகழ்கிறது. அவரை குறுகிய சாதி வட்டத்துக்குள் அடைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைக்கும் குறுக்குப் புத்தியும் நடைபெற்று வருகிறது. 

வடமாவட்டங்களில் அம்பேத்கர் சிலைகள் அதிகமாக நிறுவப்பட்டிருக்கும். ஆனால் மேற்கு மாவட்டங்களில் அவரின் சிலை அரிதான ஒன்றாக இருக்கிறது. எந்த இயக்கங்களால் அவரின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதோ அவர்களே முற்றிலும் புறந்தள்ளும் சூழல் நிகழ்ந்தேறி வருகிறது. இதனையெல்லாம் அழகாகச் சுட்டிக்காட்டி உள்ளார். 

இணையத்தில் உலவும் காணொலி ஒன்றில் அம்பேத்கர் அவர்களை "டாக்டர் அம்பேத்கர்" என்று சொல்கிறீர்களே அவருக்கு ஊசி போடர் தெரியுமா? மக்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியுமா என்று கல்வியின் புரிதல் இல்லாமல் பேசும் சூழல் அரசியல் அதிகாரத்தினால் நஞ்சை விதைக்கும் போக்கு நன்றாக அரங்கேறி இருக்கிறது.

கடந்த காலங்களில் ஐஐடி (IIT) நிறுவனங்களில் நிலவிய சாதி வெறியாட்டம் தற்கொலைக்குத் தூண்டி மாணவர்கள் இறந்த சம்பவங்களும் உண்டு.

கயிறு அரசியல், கேளிக்கை சினிமா, இணையதள சாதிச் சண்டை, திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகளில் தென்படும் பிளக்ஸ், இரு சக்கர வாகனம், ஆட்டோக்களில் எழுதப்படும் ஆண்டசாதி உரையாடல் இவையெல்லாம் மூர்க்கத்தனமான நஞ்சை விதைத்து, பிறரிடம் சராசரியாகப் பேசக்கூட முடியாமல் செய்ய வைக்கிறது. அரசியல் அதிகாரத் துணையால் நடைபெறும் இத்தகைய அடாவடித்தனங்களை முற்றிலும் நீர்த்துப் போகச் செய்யும் வேலையைச் செய்வது அனைவரின் கடமையாகும்.

மிக மிகக் குறுகிய காலத்தில் எதிர்வினையாற்றி இந்நூலைக் கொண்டு வந்தற்கு வாழ்த்துகளும் பேரன்பும் தோழர்.


கட்டுரையாளர்:
கு.தமிழ்வேந்தன்
கவிஞர் மற்றும் திரைப்பட இயக்குநர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்,
பெரியகுளம்.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர் : மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள் : 72
விலை : உரூ 90/-
வெளியீடு : ஆதி பதிப்பகம்,    
தொடர்புக்கு : 99948 80005.


1 கருத்து: