வியாழன், 7 செப்டம்பர், 2023

தமிழ் அடையாள அரசியல்: இனவாதம் வேறு; இனவெறிவாதம் வேறு - மகாராசன்


தமிழ்ச் சமூக அரசியல் சூழலில், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் எழுச்சியும், தமிழ்த் தேசியக் கருத்தாடல்களும் மேல் எழும்பும்போதெல்லாம், தமிழ் இனத்தின் அரசியல் வாதங்களைக் குறுக்கியும் சுருக்கியும் பொருள் கொள்ளும் அல்லது பொருளுரைக்கும் போக்கு, மற்ற அரசியல் முகாம்களைச் சார்ந்த அரசியல் சக்திகளால் முன்வைக்கப்படுகின்றன. 

ஒரு தேசிய இனத்தின் அல்லது ஓர் இனத்தின் உரிமைக்கான - விடுதலைக்கான கருத்தியல் வாதங்கள், அந்தத் தேசிய இனத்தின் - ஓர் இனத்தின் அடையாளங்களையும் பண்பாட்டு மரபின் வேர்களையும் உள்ளீடாகக் கொண்டிருப்பவை. அந்தவகையில், ஒரு தேசிய இனத்தின் வாதங்கள் 'தேசிய இன வாதம்' எனவும் - ஓர் இனத்தின் வாதங்கள் 'இனவாதம்' எனவும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், 'இனவாதம்' என்பதைப் பிற்போக்கானதாகவும், அபாயகரமானதாகவும், பாசிசத் தன்மை கொண்டதாகவும், அணுகுவதும், பேசுவதும், ஒதுக்குவதும், பொருள் கொள்வதும் அரசியல் பேசுபொருள் களத்தில் நிகழ்ந்து வருகிறது.

இங்கே, பெரும்பாலும் 'இனவெறிவாதம்' என்பதற்கு என்ன பொருண்மை இருக்கிறதோ, அதே பொருண்மையைத்தான் 'இனவாதம்' என்பதற்கும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். 'இனவாதம்' வேறு; 'இனவெறிவாதம்' வேறு என்பதறியாமல், இனவெறி வாதத்திற்கான பொருள்கோடலையே 'இனவாதம்' என்பதற்கும் கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.

'இனவாதம்' என்பது வேறு; 'இனவெறி வாதம்' என்பது வேறு எனும் நிலையில், 'இனவெறி' என்பதற்குப் புரிந்து வைத்திருக்கும் கருத்தாக்கத்தையே 'இனவாதம்' என்பதற்குப் பொருத்திக் காட்டுவது பெரும்பான்மை வழக்காக இருக்கிறது. 'இனவாதம்', 'இனவெறி வாதம்' இரண்டும் வேறு வேறான சொற்பதங்கள் மட்டுமல்ல; வேறு வேறான பொருளும் கூட. 

'தமிழ் இனவாதம்' என்பதை, 'தமிழ் இனவெறி வாதம்' என்னும் பொருளில் பலரும் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய அரசியல் புரிதல் ஏற்கத்தக்கதும் சரியானதும் நேர்மையானதும் அல்ல.

'வாதம்' எனில், வாதிடும் கருத்து என்பது பொருள். அதாவது, வாதமாக முன்வைக்கும் கருத்தாடல்கள் / விவாதங்கள் / எடுத்துரைப்புகள் என்பது பொருள். கருத்தை முதலாக வைத்திருப்பது தொடர்பான வாதங்கள் 'கருத்துமுதல் வாதம்' எனப்படுகிறது. அதேபோல, பொருளை முதலாகக் கொண்ட வாதங்கள் 'பொருள்முதல் வாதம்' எனப்படுகிறது. 

மார்க்சியத்தின் அடிப்படையில் விவாதிப்பதும் வாதிடுவதும் 'மார்க்சியவாதம்' எனப்படுகிறது. இதைப்போலத்தான், இனத்தின் அடிப்படையில் தார்மீக - சனநாயக வாதங்களை முன்வைப்பது 'இனவாதம்' ஆகும்.

ஓர் இனத்தின் பார்வையிலிருந்து அதன் நியாயமான கோரிக்கைகள் / விடுதலை வேட்கை / பண்பாட்டு அடையாளங்கள் / அடிப்படை உரிமைகள் போன்ற இன்னபிறவற்றையும் வாதங்களாக முன்வைப்பது 'இனவாதம்' ஆகும். 

அதாவது, ஓர் இனத்தினது வாதம் 'இனவாதம்'. 'வர்க்க வாதம்' என்பதில், 'வாதம்' என்பதற்கு என்ன பொருளோ அதே பொருண்மைதான், 'இனவாதம்' என்பதில் உள்ள 'வாதம்' என்பதும் பொருள் தருகிறது. 'இனவாதம்' என்னும் சொல்லுக்குள் ஆதிக்கமோ, சுரண்டலோ, ஒடுக்குமுறை எனும் பொருண்மைக் கூறுகளோ உள்ளடங்கி இருக்கவில்லை. 

'இனவெறிவாதம்' என்னும் சொல்லுக்குள்தான் ஆதிக்கம், சுரண்டல், ஒடுக்குமுறை, பிற இனத்தின் மீதான வெறி போன்ற பொருண்மைத் தொனிகள் வெளிப்படையாகவே தென்படுகின்றன. 

'இனவெறி வாதம்'தான் ஆபத்தானது; ஆதிக்கம் கொண்டது. அதனால், எதிர்க்கப்பட வேண்டியது 'இனவெறிவாதம்' தானே ஒழிய, இனவாதத்தை அல்ல. ஆகவே, 'இனவாதம்' வேறு; 'இனவெறிவாதம்' வேறு எனப் பிரித்துப் பொருளறியவும் அவற்றைக் கையாளவும் வேண்டும். 

கருப்பர்கள் மீதான வெள்ளையர்களின் ஒடுக்குமுறையும் சுரண்டலும் 'வெள்ளை நிறவெறிவாதம்' எனும் சொல்லால்தான் குறிக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில், 'இனவெறிவாதம்' என்பது பிற இனத்தை அல்லது பிற இனங்களை ஒடுக்குவதிலும் சுரண்டுவதிலும்தான் குறி கொண்டிருக்கிறது.

சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை இனவெறி வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதைச் சான்றாகக் கொள்ளலாம்.

இனவெறிவாதத்திற்கான பொருளாக்கத்தை 'இனவாதம்' என்பதற்குக் கையாள்வது, மொழியின் பொருள் நுட்பங்கள் அறியாத பிழையால் நேர்ந்திருப்பதாக மட்டும் கொள்ள முடியாது. ஓர் இனத்தின் அடிப்படையான உரிமைகளும், விடுதலை வேட்கையும், பண்பாட்டு அடையாளங்களும் வாதங்களாக எழும்புவதை மழுங்கடிக்கவும் கொச்சைப்படுத்தவுமான நுண் அரசியல் உள்ளீடும் அதற்குள் உள்ளடங்கி இருக்கிறது.

'இனவாத வெறி' என்பதற்கான விளக்கத்தையே 'இனவாதம்' என்னும் சொல்லுக்குப் பொருளாக்குவது பிழையானது மட்டுமல்ல; உள்நோக்கமும் கொண்டது. 

ஓர் இனத்தின் உரிமையைப் பற்றிப் பேசும் இனவாதத்தையே இனவெறிவாதமாகப் பார்க்க வைத்திருப்பதே ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிதான். 

ஓர் இனத்தின் உரிமைகளை உள்ளீடாகக் கொண்டிருக்கும் இனவாதம் தவறல்ல. பிற இனத்தை அல்லது இனங்களை ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளாக்கும் இனவெறி வாதமே தவறானது. இனவெறியில் பிற இனத்தை ஒடுக்குவதே பாசிசத் தன்மை கொண்டது.

ஓர் இனத்தின் நியாயவாதமும் இனவாதம் தான். இனத்தினது வாதம் 'இனவாதம்'. ஆனால், 'இன வெறி வாதம்' என்பது 'இனவாதம்' என்பதிலிருந்து வேறுபட்டது. இனவெறி வாதத்திற்குள்தான் ஆதிக்க வெறி புதைந்திருக்கிறது. முதலில் இனவாதம் என்பதையும் இனவெறி வாதம் என்பதையும் வேறுபடுத்திப் பொருண்மைப்படுத்த வேண்டியது அவசியம்.

ஓர் இனத்தின் உரிமைகளுக்கான, வரலாற்றுக்கான, அரசியலுக்கான மீட்புக்கான, போராட்டத்திற்கான வாதங்களை இனவாதம் என்கிற சொல் குறிக்கிறது. இனத்தினது வாதங்கள் சனநாயகத்தன்மை கொண்டது. ஆனால், இன வெறி வாதம் என்பது ஆதிக்கக் கருத்தியலைக் கொண்டிருப்பது. அதாவது, பாசிசத்தன்மை கொண்டது இனவெறி வாதம் தானே ஒழிய, இனவாதம் அல்ல.

ஓர் இனத்தினது உரிமைக்கான வாதம் இனவாதம். இனவாதம் ஓர் இனத்தினது சனநாயக வாதம். இனத்தினது ஆதிக்க வெறி வாதமே இனவெறி வாதம். இனவெறி வாதமே பாசிசவாதம். அவ்வகையில், இனவாதம் வேறு; இனவெறி வாதம் வேறு என்பதைத் தெளிதல் வேண்டும்.

அதாவது, சனநாயகப்பூர்வமான இனத்தின் வாதம்தான் இனவாதம். அதுவே இனத்தின் அறவாதம். அது பிற்போக்கானது கிடையாது. நாம் இப்போது கோருவது எல்லாம் இனத்தின் வாதமே அன்றி; இனவெறி வாதத்தை அல்ல. 

ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்.

07.09.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக