புதன், 27 செப்டம்பர், 2023

சமத்துவ சமூகத்திற்கான பாதை நோக்கிச் சிந்திக்க வைக்கும் நூல்: தேனி சுந்தர்


ஏர் மகாராசன் எழுதிய "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" நூல் குறித்து..

நாங்குநேரி சம்பவம் தமிழ்ச் சமூகத்தை மிகவும் உலுக்கிய ஒன்று. காரணம், பாதிக்கப் பட்டவர்கள் குழந்தைகள். பாதிப்பை ஏற்படுத்தியவர்களும் குழந்தைகள் தான்..! ஆக, பாதிக்கப் பட்டவர்கள் இரு தரப்பினரும் தான். 


சின்னத் துரையும் சந்திரா செல்வியும் சக மாணவர்களால் பாதிக்கப் பட்டார்கள். எனில் சக நண்பனையே கொல்லத் துணிகிற அந்த சாதிய மனோவியாதிக்கு உள்ளான அவர்கள் யாரால் பாதிக்கப் பட்டவர்கள் என்பதையே இந்நூல் மிக விரிவாக பேசுகிறது.


ஒடுக்கப் பட்ட மக்கள் தங்கள் துயர வாழ்வில் இருந்து மீள்வதற்கு, உயர்வதற்கு ஒரே துடுப்பாக, துருப்பாக இருக்கும் கல்வி இன்று என்னவாக மாறி இருக்கிறது. அரசின் திட்டங்கள் யாவும் அனைவருக்கும் என்றில்லாமல், எவ்வாறு இலக்கு சார் திட்டங்களாக மாறி வருகின்றனவோ அதுபோல கல்வியும் இலக்கு சார் ஒன்றாக மாறி இருக்கிறது. அதன் இலக்கு "எலைட்" மட்டுமாக இருக்கிறது. சாமானிய வீடுகளில் இருந்து, பள்ளிக்குள் முதல் முறையாக நுழைந்து, கல்வியில் மெல்ல மலரும் குழந்தைகளாக இருப்போரை அது கவனத்தில் கொள்ள மறுக்கிறது. அவர்கள் அவர்களாகவே கல்வியில் இருந்து வெளியேற ஏதுவான சூழலை திட்டமிட்டு உருவாக்கும் ஒன்றாக செயல்படுத்தப் படுகிறது.


யாரும் விரும்பித் தங்களைத் தாங்களே தாழ்த்தி கொள்ளவில்லை. எனவே தாழ்ந்த சாதியினர் அல்ல, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதி. உலகம் உருவான போதே, ஆதி காலத்தில் இருந்து பிறக்கும் போதே உயர்ந்த சாதி அல்ல. பல்வேறு சமூகச் சூழல்களை பயன்படுத்தி தங்களைத் தாங்களே "உயர்த்திக் கொண்ட" சாதியினர் தான். எனில் உயர்சாதி, மேல்சாதி, ஆதிக்க சாதி என்றும் கீழ்சாதி, இழிசாதி, தாழ்ந்த சாதி என்றும் பயன்படுத்தப் படும் சொற்பிரயோகம் சரியா? அந்தந்த சாதியினர் சொல்லிக் கொள்வது தாண்டி, பொது சமூகமும் ஊடகமும் அப்படியே குறிப்பிடுவது நியாயமா? என்கிறார்.


200 ஏக்கர் நிலத்தை நீர் இருந்தும் பாசானம் இல்லாமல் தரிசாக போட்டு வைக்கும் சாதியை என்ன சொல்வது??


ஊரில், தெருவில், குடும்பத்தில், ஊர்த் திருவிழாக்களில், அரசியலில், பள்ளியில், கல்லூரியில் சாதி எங்கு இல்லாமல் இருக்கிறது?


பெற்றோர், ஆசிரியர், பேராசிரியர், அரசியல் அமைப்புக்கள், தலைவர்கள் என எல்லா மட்டத்திலும் ஊடுருவி இருக்கும் சாதியை, சாதிய உணர்வை எவ்வாறு களைவது??


கயிறு, பாசி, பொட்டு என சுயசாதி அடையாளங்கள், சுயசாதி பெருமிதங்கள் தான் சுயசாதி அணிதிரட்டலுக்கான அச்சாணி, இந்த அணி திரட்டல்கள் தான் பிற சாதியினர் மீதான அத்துமீறல்கள், சீண்டல்கள், பாலியல் துன்புறுத்தல், வன்முறை, கொலைவெறி தாக்குதல் என அவர்களை வழிநடத்துகிறது என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்??


சாதிய அடிப்படையிலான வாக்கு வங்கி அரசியல் செல்வாக்கு செலுத்தும் சூழலில் கொடூரமான சாதிய தாக்குதல்களை கூட உறுதியாக, தைரியமாக கண்டிக்க மறுக்கும் அரசியல் கட்சிகளை நாம் நிராகரிக்க வேண்டாமா??


வன்முறையில் ஈடுபட்டவர்கள் குழந்தைகள் என்றாலும் எது அவர்களுக்கு சரியான தண்டனையாக இருக்கும்..? எது மேலும் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும்??


பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வேண்டுமா? அது போதுமா? நீதி வேண்டுமா? எனில் எது அவர்களுக்கான நீதி??


பள்ளியில் என்ன செய்ய வேண்டும்? பாடத்திட்டத்தில் என்ன செய்ய வேண்டும்? பாடத் திட்டக் குழுவில் என்ன செய்ய வேண்டும்? இதுவரை யாரெல்லாம் இருக்கிறார்கள்? யாரெல்லாம் இருக்க வேண்டும்??


இவை அத்தனைக்கும் பிறப்பிடமாக இருக்கின்ற சமூகத்தில் என்ன செய்ய வேண்டும்??


இந்தப் பிரச்சினையின் ஊடாக, பல்வேறு கேள்விகளை எழுப்பி, எண்ணங்களைத்  தூண்டி, நம்மை ஒரு சமத்துவ சமூகத்திற்கான பாதை நோக்கி சிந்திக்க வைக்கிறது இந்நூல்..


அரசு நாங்குநேரி சம்பவம் தொடர்பாக நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு ஒன்றை அமைத்துள்ளது. அது போல எங்கள் ஊர் ஏர் மகாராசன் தனக்குத் தானே ஒரு நபர் குழுவை அமைத்துக் கொண்டு ஒட்டுமொத்த கோணங்களிலும் ஆராய்ந்து சமூகத்தின் முன் வைத்துள்ள "ஏர் மகாராசன் குழு அறிக்கை" தான் இது..!


எழுத்தாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..


கட்டுரையாளர்:

தேனி சுந்தர்,

எழுத்தாளர் மற்றும் கல்விச் செயல்பாட்டாளர்.

டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,

ஆசிரியர்: மகாராசன்,

முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,

பக்கங்கள்: 72

விலை: உரூ 90/-

வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.

தொடர்புக்கு: 

ஆதி பதிப்பகம்

99948 80005.


அஞ்சலில் நூலைப் பெற:

செந்தில் வரதவேல்

90805 14506.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக