வியாழன், 23 மார்ச், 2017

ஏறு தழுவுதல் எனும் மாடு தழுவல் : வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்.






அய்வெளி சூழ்ந்த இந்நிலப் பேரண்டத்தில் உயிரினங்களாகத் தோன்றியிருக்கும் நீர் மற்றும் நிலத்து வாழ் உயிரினங்களான பயிர்கள், பூச்சிகள்,பறவைகள்,விலங்குகள்,மனிதர் உள்ளிட்ட  எல்லா உயிரினங்களுக்கும் உடலியல் உணர்வாகவும் தேவையாகவும் அமைந்திருப்பது பசி தான்.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்
எனப் பசி வந்தால் பத்தும் போகும் என்று மனிதரின் பசி குறித்துப் பேசுகிறது நல்வழி நூல். இந்தப் பசி மனிதருக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்குமுள்ள இயற்கைத் தேவையும் கூட.

ஒவ்வோர் உயிரினமும் தத்தமது உடலியல் அமைப்புக்குத் தகுந்தாற் போலவும் தேவைக்குத் தகுந்தாற் போலவும் உணவைத் தேடியும் பெற்றும் உட்கொண்டும் பசித் தேவையை நிறைவு செய்து கொள்கின்றன. எல்லா உயிரினங்களின் உயிர் இருப்பானது பசியை நிறைவு செய்வதிலேயே அடங்கியிருக்கிறது.  இத்தகைய உயிரினங்களை நீர் உறிஞ்சிகள், பயிர் உண்ணிகள், ஊன் உண்ணிகள் என மூவகைப்படுத்துவர் உயிரியல் ஆய்வாளர்கள்.
 மேற்குறித்த மூவகைப்பட்ட உணவு முறைகளையும் ஒருங்கே உட்கொள்ளும் உண்ணியாகத்தான் மனித இனம் பரிணமித்திருக்கிறது. அதாவது, உயிரினப் பரிணாமச் சுழற்சியிலும் வளர்ச்சியிலும் முன்னேறிய வளர்ச்சி நிலைகளை அடைந்து முழுமை பெற்ற உயிரினமாகப் பரிணமித்திருப்பது மனித இனம் மட்டும் தான். இத்தகைய மனித இனத்திற்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள மிகக் குறிப்பிடும்படியான வளர்ச்சி என்பது, உணவு உற்பத்தி நிலைதான். மனித இனம் மட்டும் தான் தமது உணவுத் தேவையைத் தாமே தேடிக் கொள்வது மட்டுமல்ல, தாமே உற்பத்தி செய்யவும் தொடங்கியது.
 உணவைப் பெறுவதுதான் மனிதரது முதல் தேடலாக அமைந்திருக்கிறது.  இந்த உணவுத் தேடலுக்கும் உற்பத்திக்கும் பல முறைகளும் கருவிகளும் பயன்பட்டு வந்திருப்பதை வரலாற்றின் ஊடாக அறிய முடியும். மனிதரது உறுப்புகளும் மூளையும் இன்றைய மனிதரது உறுப்புகளும் மூளையையும் போலவே வளர்ச்சி அடைந்த காலம் சுமார் அறுபது ஆயிரம் ஆண்டுகளாக இருக்கலாம் என இரசிய அகழ்வாய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த வரலாற்றுக்குள் தான் மனிதரது உணவுத் தேடல் வரலாறும் உள்ளடங்கி இருக்கிறது.
நடப்பதற்குப் பயன்பட்ட முன்னங்கால்களைக் கொண்டு கைகளாக மாற்றி உணவுத் தேடலுக்கான உழைப்பில் ஈடுபட்டதுதான் மனிதப் பரிணாம வரலாற்றின் முதல் மலர்ச்சி எனக் குறிப்பார் எங்கெல்சு. அந்த வகையில், தொடக்க காலத்திய மனித இனம், இயற்கைச் சக்திகளோடு உறவாடியும் போராடியும் இணைந்தும் பினைந்தும் தமது உணவைக் கண்டடைந்திருக்கிறது.
 காய் கனிகளையும் தானியங்களையும் மட்டுமல்லாமல், விலங்குகளை வேட்டையாடியும் உணவுத் தேவையை நிறைவு செய்திருக்கின்றனர். இத்தகைய உணவுத் தேடல் அலைந்துழலும் நாடோடி வாழ்க்கையாகத்தான் அமைந்திருக்கிறது. மந்தை வாழ்க்கையாகத்தான் சுழன்றிருக்கிறது.
 இந்நிலையில், கடுமையான இயற்கைச் சூழ்நிலையை எதிர்த்துப் போராடிய கற்கால மக்கள் இலட்சக்கணக்கான ஆண்டுகளில் அந்நிலையினின்றும் மிக மெதுவாக முன்னேறினர். அதே வேளையில், தமது அனுபவத்தாலும் இயற்கையை எதிர்த்துப் போராடத் தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆற்றலாலும் தங்களுடைய உணவைப் பெறப் பல தடைகள் இருப்பதைக் கண்டனர். எனவே, தமது ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள எண்ணினர். பழங்கற்கால மனிதர்கள் இவ்வாசைகளை நிறைவு செய்து கொள்ளச் செயலில் ஈடுபட்டனர்.
அவர்களுடைய வலிமைக்குக் காரணமாய் இருந்தவை கற் கருவிகளும் குழுக் கூட்டமைப்பும் தான். தனியாக வேட்டைக்குச் செல்வதைப் பார்க்கிலும் பலர் கூட்டாகச் சென்று வேட்டையாடுவதில் அபாயம் குறைவு . விலங்குகளும் அதிகமாகக் கிடைக்கும். எனவேதான், குழுவை அவர்கள் ஆற்றலின் வடிவமாகக் கண்டார்கள் என விவரிக்கிறார் நா.வானமாமலை. அதாவது, உணவுத் தேடல்தான் மந்தை நிலையிலிருந்து குழுநிலைக்கு மனிதரை நகர்த்தியிருக்கிறது.
மனித மந்தைகள் மனிதக் குழுக்களாக இணைந்து நிலையாக ஒன்றுபட்டு உணவுத் தேடலில் ஈடுபட்டது. ஒன்றுபட்டு வேட்டையாடிற்று.  ஒன்றுபட்டுத்தான் மலை வேளாண்மையைச் செய்தது. இயற்கையைப் பற்றிய அறிதல்களும் உணவுத் தேவைகளும், கைவசமிருந்த கருவிகளும், மனிதக் குழுவின் பங்கேற்பும், கடந்து வந்த வாழ்க்கைப் பாடுகளும் உணவுத் தேடலுக்கான உற்பத்தி முறையைக் கண்டடைந்திருக்கின்றன.
அலைந்துழலும் நாடோடி வாழ்க்கை முறையிலிருந்து மெல்ல நகர்ந்து ஓரிடத்தில் நிலைத்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமானால், வேட்டைத் தொழிலிருந்து மெல்ல மெல்ல மாறியும் நகர்ந்தும் செல்லும் போதுதான்  மலை நிலத்தில் இயற்கையாய் விளைந்திருந்த பயிர்கள் சார்ந்தவற்றை உண்டும் பராமரித்தும், தாமே பயிர்களை விளைவித்தும்  மலை வேளாண்மையை உருவாக்கியுள்ளனர். மலையும் மலை சார்ந்த வேளாண் தொழில் முறையும் வாழ்க்கை முறையும்தான் குறிஞ்சித் திணையாய்த் தமிழ் மரபில் விவரிக்கப்படுகிறது.
வேட்டைச் சமூக அமைப்பிலிருந்த வேட்டையாடுதலில் கிடைத்த அதிகளவிலான விலங்குகள் உபரியாய் இருந்த சூழ்நிலையில், அவற்றைப் பழக்கியும் பராமரித்தும் பயன்படுத்துவதுமான கால்நடை வளர்ப்புத் தொழிலும் கைகூடியிருக்கிறது. மனித சமூக வளர்ச்சிக் கட்டத்தில் இத்தகைய கால்நடை வளர்ப்புதான் தனிச்சொத்தாக உருவெடுத்திருக்கிறது. கால்நடை வளர்ப்புச் சமூகம் குறித்த விவரிப்பை எங்கெல்சு தமது குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூலில் விரிவாகவே எடுத்துரைத்துள்ளார்.
இனக்குழுக்கள் குலங்களாகவும், சில ஆதிக்குலங்கள் சேய்க்குலங்களாகவும் பிரிந்திருந்த, ஆள்பவர் ஆளப்படுபவர் என்ற பிரிவினை தோன்றாத, ஆணுக்கும் பெண்ணுக்குமான உழைப்பின் அடிப்படையிலான பிரிவைத்தவிர வேறு வேலைப் பிரிவினை தோன்றியிராத பொதுவில் உற்பத்தி செய்து எல்லாவற்றையும் பொதுச் சொத்தாகப் பயன்படுத்திய காலமொன்று இருந்தது. ஆனால், மனிதர் எல்லா இடங்களிலும் இந்தக் கட்டத்தில் நின்று விடவில்லை.
ஆசியாவில் வீட்டுக்குக் கொண்டு வந்து பழக்கி, கொட்டிலில் இனவிருத்தி செய்யக்கூடிய விலங்குகளை மனிதர் கண்டார். காட்டெருமையை வேட்டையாட வேண்டி இருந்தது. வீட்டுப் பசு ஆண்டுதோறும் கன்று ஈன்றது, பாலும் கொடுத்தது. அநாகரீகர்களின் பொதுவான கூட்டத்திலிருந்து, கால்நடை வளர்க்கும் இனக்குழுக்கள் தனியே பிரிந்து சென்றன. இதுதான் சமுதாய ரீதியில் ஏற்பட்ட முதல் மாபெரும் வேலைப் பிரிவினை ஆகும்.
கால்நடை வளர்த்த இந்த இனக்குழுக்கள் மற்ற அநாகரீகர்களைவிட அதிகப்படியான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தது மட்டுமின்றி, பல்வேறு விதமான பொருட்களையும் அதிக அளவில் உற்பத்தி செய்தனர். அவர்களிடம் பால், பாலால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், இறைச்சி, தோல்கள், கம்பளி, ரோமம், ஆட்டு ரோமம் ஆகியவையும் இருந்தன. மூலப்பொருட்களின் அளவு அதிகரித்ததால் நூல்கள், துணிமணிகள் முன்னைவிட அதிகமான அளவில் பயன்படுத்தப்பட்டன. இது முதல் தடவையாக முறையான பண்டப் பரிவர்த்தனையைச் சாத்தியமாக்கியது.
கால்நடை மந்தைகள் தனியாகப் பிரிக்கப்பட்ட சொத்தாக மாற்றப்படுதல் ஆரம்பமான பொழுது, தனிநபர்களிடையே பரிவர்த்தனை நடைபெறுவது மென்மேலும் அதிகரித்தது. கடைசியில் அது ஒன்றே பரிவர்த்தனை வடிவமாகி விட்டது. கால்நடை என்ற பண்டமே மற்ற எல்லாப் பண்டங்களையும் மதிப்பிடுவதற்குரிய பண்டமாக ஆயிற்று. மற்ற பண்டங்களுக்கு மாற்றுப் பண்டமாக அது எங்கும் மறுப்பில்லாமல் பெற்றுக் கொள்ளப்பட்டது. சுருக்கமாகக் கூறினால், அது பணத்தின் செயற்பாட்டை மேற்கொண்டது. இந்தக் கட்டத்தில் அது பணத்தைப் போலவே செயல்பட்டு வந்தது எனக் கால்நடை வளர்ப்புச் சமூகம் பற்றிய குறிப்பைத் தருகிறார் எங்கெல்சு.
கால்நடை வளர்ப்புச் சமூகம் அவ்வளவு எளிதில் பண்பட்டு உருவாகி இருக்க முடியாது. அனைத்து வகையான பறவைகள், விலங்குகளையும் பிடிப்பதிலும் வளர்ப்பதிலும் வெற்றி தோல்விகள் ஏற்பட்டிருக்க வேண்டும். இறுதியாக, பழக்குதல், பழகுதல், பராமரிப்பு, பயன்பாடு போன்றவற்றின் அடிப்படையில்  ஆடுகளும் மாடுகளுமே கால்நடைச் செல்வங்களாக ஆக்கப்பட்டிருக்கின்றன. சிற்சில விலங்குகளும் பறவைகளும்கூட கால்நடைச் செல்வங்களாக வளர்க்கப்பட்டுள்ளன. இத்தகையக் கால்நடை வளர்ப்புச் சமூகம் மலை சார்ந்த பகுதிகளைக் காட்டிலும் காடும் காடு சார்ந்த நிலப்பகுதிகளிலேயே அதிகமான வளப்பத்தைப் பெற்றிருக்கிறது. இத்தகையக் காடும் காடு சார்ந்த வாழ்க்கை முறைகளையும் கால்நடை வளர்ப்புத் தொழில் முறைகளையும் கொண்ட சமூக அமைப்பை முல்லைத் திணை எனத் தமிழ் மரபு விவரித்திருக்கிறது.
மான்கள், யானைகள் போன்ற விலங்குகளையும் வளர்ப்பு விலங்குகளாக ஆக்குவதற்கான முயற்சிகள் முல்லை நிலத்தில் நடந்திருப்பதைச் சங்க காலத்து இலக்கியங்களான அகநானூறு (83,187,311,393), புறநானூறு (320) போன்றவை தெரிவிக்கின்றன. ஆயினும், மாடுகளே வளர்ப்புக்கும் வாஞ்சைக்குமான குணவியல்பைக் கொண்டிருந்திருக்கின்றன.
 மாடுகள் முல்லை நிலத்து வளர்ப்பு விலங்குகளாக இருந்தாலும், குறிஞ்சி நிலத்திலேயே அப்பழக்கு முறையும் பழகு முறையும் தொடங்கிற்று என்கிறார் பாவாணர். இதைக் குறித்து அவர் கூறும்போது, மா என்பது விலங்குப் பொதுப் பெயர். மாஅஅ என முக்காரமிடுவதால் மா>ஆ எனப்பட்டது. குறிஞ்சியிலேயே தமிழர்க்கு அல்லது தமிழரின் முன்னோர்க்கு ஆத் தொடர்பு இருந்திருத்தல் வேண்டும். ஏனெனில், ஆவானது முதன் முதல் குறிஞ்சி நிலத்திற்குரிய விலங்காம். குறிஞ்சியை அடுத்த முல்லை நிலத்திலிருந்த ஆயர், ஆட்டையும் மாட்டையும் பெருவாரியாய் வளர்த்து, அவற்றின் ஊனையும் பாலையும் உண்டு வாழ்ந்தனர். அவர் ஆட்டினும் மாட்டையே சிறப்பாய் வளர்த்தனர். ஆவை மேய்ப்பவர் ஆயர் எனப் பெயர் பெற்றமை கவனிக்கத்தக்கது என்பார்.
ஆக, மாடுகளை வைத்துத்தான் முல்லை நிலத்து மக்கள் பலவாறாக அழைக்கப்பட்டுள்ளனர். மாட்டைக் குறிக்கும் சொற்களே ஆ, கோ என்பவை. ஆக்களை மேய்ப்பவர் ஆயர், கோக்களை மேய்ப்பவர் கோனார் என அழைக்கப்பட்டனர். மேலும், கோட்டினத்து ஆயர், கோவினத்து ஆயர், புல்லினத்து ஆயர், புகர் இனத்து ஆயர், பெற்றத்தார் எனும் பெயர்களாலும் செய்கிறது.
குலங்களுக்கு அதிக உணவு கிடைத்து இனப் பெருக்கம் ஏற்படுவதாலும், அசமத்துவ வளர்ச்சியினால் சில இனக்குழுக்கள் பல இனக்குழுக்களை வென்று இணைத்துக் கொண்டதாலும் பெரிய குழு அமைப்புகள் ஏற்பட்டன. உணவு கிடைக்கவும், போர் செய்து வெல்லவும், சில இனக்குழுக்கள் தங்கள் தொழில் நுணுக்க வளர்ச்சியின் மூலம் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டன. முதன் முதலில் ஆடு மாடுகளைப் பழக்கத்தெரிந்த குழுக்கள், தின வேட்டையாட வேண்டிய நாடோடி வாழ்க்கையை ஒழித்து நிலையான வாழ்க்கை பெற்றன. இந்தக் காலத்தில்தான் உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், நீர்ப்பாசன வசதிகளைச் செய்து கொள்ளவும், நிலங்களைப் பயிரிடவும் இரும்புக் கருவிகள் பயன்பட்டன எனும்படியான சமூக வரலாற்றை மொழிகிறார் நா.வானமாமலை.
இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வந்த சமுதாய வரலாற்றின் திசைவழிகள்தான் வேளாண்மைத் தொழிலை அடையாளம் காட்டியிருக்கின்றன. இத்தகைய வயலும் வயல் சார்ந்த வேளாண் உழவுத் தொழில் முறைகளையும் வாழ்க்கை முறைகளையும்தான் தமிழ் மரபில் மருதத் திணை எனக் குறிக்கப்படுகிறது.
 இரும்பினால் ஆன உழு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, உழவை அடிப்படையாகக் கொண்ட வேளாண் தொழில் பக்குவப்படத் தொடங்கியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, மாடுகளைப் பழக்கப்படுத்தி வேளாண்மையில் ஈடுபடுத்திய போதுதான், மனித சமூகம் தம்மை நிலை நிறுத்திக் கொண்டது. கூடவே, பண்பட்ட ஒரு தொழிலாக வேளாண்மை அமைந்து போயிருக்கிறது. மேலும், மனித சமூகம் நாகரிக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு மாடுகளின் பங்கேற்பும் உழைப்பும்தான் பெரிதும் துணை நின்றுள்ளன.
உழவு என்றாலே உழுகின்ற மனிதரும் மாடுகளும் உழுங் கலப்பையும் உழுநிலமும் ஒட்டு மொத்தமாய்க் குறிப்படுத்தி நின்றன. இத்தகைய உழவுத் தொழில், முதலில் முல்லை நிலத்திலேயே தொடங்கிற்று என்பார் பாவாணர். மக்களுக்கு முல்லை நிலத்திலேயே உழவு தோன்றிற்று. அது மருத நிலத்தில் சிறப்படைந்தது. முன்னதில் புன்செய்ப் பயிரும், பின்னதில் நன்செய்ப் பயிரும் விளைவிக்கப்பட்டன.
மாடு இரு நிலத்தாருக்கும் ஊனும் பாலும் உதவியதுடன், இரு வகை வேளாண்மைக்கும் உழுது இறைத்து உதவியது. மாட்டின் ஊனும் பாலும் மட்டுமல்ல, தோல், கொம்பு, உரசனை, வால் மயிர், சாணம் முதலிய பிறவும் பயன்பட்டன. வீட்டைத் துப்புரவு செய்யவும், அடுப்பெரிக்கவும், பயிருக்கு உரமிடவும் சாணம் உதவுவது. சிறந்த உணவும் மருந்துமாகிய தயிரும் மோரும் வெண்ணெயும் நெய்யும் பாலிலிருந்து தொடுக்கப்படுவன. இங்கனம், உணவை விளைவிப்பதும், தானும் உணவளிப்பதும், வேறு பல வகையிலும் உதவுவதுமாகிய மாட்டினத்தைச் செல்வமாக மட்டுமின்றி மக்கள் போலும் கருதி வந்தனர் முன்னைத் தமிழர் என்கிறார்  பாவாணர்.
ஆக, குறிஞ்சி, முல்லை, மருதம் என்கிற மூன்று நிலங்களிலும் நடைபெற்ற உணவு உற்பத்தியில் மாடுகள் பங்கேற்றது மட்டுமல்லாமல் உடைமைப் பொருளாகவும் கையாளப்பட்டுள்ளன. குறிஞ்சியில் நடைபெற்ற புனம் உழவிலும், முல்லையில் நடைபெற்ற புஞ்சை உழவிலும், மருதத்தில் நடைபெற்ற நஞ்சை உழவிலுமான வேளாண்மைக்கு  மாடுகள் மற்றும் மனிதர்களின் உழைப்பும் ஒரு காரணிகள் என்றாலும், நிலம்தான் மிக முதன்மையான பங்கை வகித்திருக்கிறது. அதாவது, வேளாண்மைக்கு உகந்த வாகுவையும் இயல்பையும் வளத்தையும் நீர்த் தடங்களையும் கொண்டதாக அதனதன் இயல்புகளுக்கு ஏற்றபடி குறிஞ்சியும் முல்லையும் மருதமும்தான் அமைந்திருந்தன.
இம்மூவகைப்பட்ட நில அமைப்புகளோடு முற்றிலும் மாறுபட்ட நில அமைப்புதான் கடலும் கடல் சார்ந்த பகுதியுமான நெய்தல் நிலம். கடல்வாழ் மீன்பிடித் தொழிலும் வாழ்க்கை முறையும் கொண்ட அதனை நெய்தல் திணையாகத் தமிழ் மரபு விவரிக்கும்.
இவைகள் போக, வேறு எந்தவகை உற்பத்தியும் செய்ய முடியாத வறண்ட நிலப்பகுதியும் இருந்திருக்கிறது. அந்த வகையில்தான், முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்த பாலை நிலத்தையும் திணையையும் தமிழ் மரபு சுட்டிச் செல்கிறது.
ஓருணவும் விளைவிக்க முடியாத வறண்ட நிலமாகப் பாலை நிலம் இருந்திருக்கிறது. அந்நிலத்து மக்கள் தங்களது உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்ள வழிப்பறித்தல், கொள்ளையிடுதல் போன்ற களவுத் தொழிலை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, குறிஞ்சியிலும் முல்லையிலும் மருதத்திலும் செல்வமாகவும் உற்பத்திக் கருவியாகவும் உணவு தரும் விலங்காகவும் திகழ்ந்த  ஆடுகளையும் மாடுகளையும் களவாடிச் சென்றும் பண்டமாற்றுப் பொருட்களாக்கியும் தம் உணவுத் தேவையை நிறைவு செய்துள்ளனர்.
உணவு உற்பத்தி செய்வதற்கு உகந்த - வேளாண்மைக்கு ஏற்ற நிலமாகப் பாலை நிலம் அமைந்திருக்கவில்லை. ஆகையால், அந்நிலத்து மக்கள் தன்னுறு வேட்கையால் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வர்  எனப் புறத்திணைகளுள் ஒன்றான வெட்சித் திணை எடுத்துரைக்கிறது. வெட்சித் திணை இரு வகைப்பட்டது. முதலாவது, மன்னுறு தொழில் சார்ந்தது. இது குறிஞ்சி முல்லை மருத நிலம் சார்ந்த பகைக் குழுக்கள் மாறி மாறி ஆநிரைகளைக் கவர்ந்து கொள்வதாகும். இன்னொன்று, தன்னுறு தொழில் ஆகும்.
அறாஅ நிலைச் சாடி ஆடுறு தேறல்
மறாஅன் மழைத் தடங் கண்ணி –
பொறாஅன் கடுங்கண் மறவன் கழல் புனைந்தான்
காலை நெடுங்கடைய நேரார் நிரை
எனப் பாலைநிலக் கள்வர்களின் தன்னுறு தொழிலான ஆநிரை கவர்தலை விவரிக்கிறது புறப்பொருள் வெண்பா மாலை . இதனை
 வேற்றுப் புலக் களவின் ஆ தந்து ஓம்பல்
என்கிறது தொல்காப்பியமும்.

பாலை நிலத்துக் கள்வர்களின் ஆநிரை கவர்தல் எனும் களவு ஒரு தொழிலாகவும் வாழ்க்கையாகவும் மாறிப் போயிருக்க, அத்தகைய ஆநிரை கவர்தலை எதிர்த்தும் ஆநிரையை மீட்கவுமான முயற்சிகளைக் குறிஞ்சி முல்லை மருத நிலம் சார்ந்த மக்கள் குழுவினர் மேற்கொண்டதைக் கரந்தைத் திணை எடுத்துரைக்கிறது.

ஆநிரை கவர்தல் வெட்சியாகவும், ஆநிரை மீட்டல் கரந்தையாகவும் புறத்திணை இலக்கணம் கூறுகிறது. ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற பாலை நிலத்தவரின் ஊர் சென்று ஆநிரைகளை மீட்கச் சென்ற மருத நிலத்து மள்ளர்கள் பற்றிய குறிப்பைப் புறத்திரட்டுப் பாடல் எடுத்துரைக்கிறது.
கரந்தியல் காட்டுத் தீயப் போலப் பெரிதும்
பரந்து செல் மள்ளர் பதிந்தார் - அராந்தை 
விரிந்தவியும் மாறுபோல் விண் தோயத் தோன்றி
எரிந்து அவியும் போலும் இவ்வூர்
என்கிறது அப்பாடல். அதாவது, விரைந்து பரவி வளைத்துக் கொண்டு மூண்டெரியும் காட்டுத் தீ போல, பசுக் கூட்டத்தை மீட்கும் பொருட்டுப் பகைவர் ஊருக்குள் மள்ளர்கள் சென்றனர். அதனால், இந்த ஊர் துன்பம் பெருகி அழிவது போல் எரிந்து அழியும் என்கிறது அப்பாடல்.

பாலை நிலம் பற்றிய மேற்காட்டிய குறிப்புகளின் வழி ஒன்றை உணர்ந்து கொள்ள முடியும். அதாவது, பாலை நிலம் வேளாண்மைக்கு உகந்த நிலமாக இருக்கவில்லை; வேளாண் உற்பத்தி பெருமளவிலோ சொல்லிக் கொள்ளும்படியாகவோ நடைபெறவில்லை; பாலை நிலத்தவர் நேரிடையாக உணவு உற்பத்தியில் ஈடுபடவில்லை என்பதுதான். ஆயினும், குறிஞ்சி முல்லை மருதம் போலவே பாலையிலும் ஆநிரைத் தொடர்பு இருந்திருக்கிறது எனலாம். அதேவேளையில்,  குறிஞ்சி, முல்லை, மருத நிலப்பகுதிகள் மட்டுமே வேளாண்மை தொழிற்பட்ட - உணவு உற்பத்தி நடைபெற்ற நிலப்பகுதிகளாக அமைந்திருந்தன என்பதும், அத்தகைய வேளாண்மையிலும் உணவு உற்பத்தியிலும் மாடுகள் எனும் ஆநிரைகள் பங்கேற்றிருப்பதையும் வரலாறு புலப்படுத்துகிறது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய அய்ந்து நிலப்பகுதிகளில் மக்கள் குழுக்கள் பரவி வாழ்ந்தாலும், அந்நிலம் சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்டிருந்தாலும், வேட்டையாடுதல், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல் போன்ற தொழில்களை மேற்கொண்டிருந்தாலும், மருத நிலம் மட்டுமே செழிப்புக்கும் வளமைக்கும் உற்பத்திப் பெருக்கத்திற்கும் உகந்த இயல்பைப் பெற்றிருந்திருக்கிறது.

அய்வகை நிலத்து மக்களுக்குமான உணவு உற்பத்தி சார்ந்த வேளாண்மை, மருத நிலத்தில்தான் சிறப்படைந்திருக்கிறது. தொடக்கத்தில் அந்தந்த நிலப்பகுதி சார்ந்த மக்கள் குழுவினர் குழுவாகச் சேர்ந்து உணவு உற்பத்தியில் ஈடுபட்டபோது குழு வாழ்க்கை முறை இருந்திருக்கிறது. உற்பத்தி உறவுகளிலும் உற்பத்திக் கருவிகளிலும் உற்பத்தி முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட ஏற்பட, குழு நிலையிலிருந்து இனக் குழு வாழ்க்கை முறை என்கிற இன்னொரு வளர்ச்சிக் கட்டத்தை அடைந்திருக்கின்றனர்.

குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை என்கிற நால்வகை நிலங்களின் மக்கள் வாழ்நிலைகள், இனக்குழு வாழ்க்கை முறை அமைப்பில்தான் இருந்திருக்கின்றன. குறவர், குறத்தி, கானவர், கொடிச்சி , ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர், பரதவர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர், துறைவன், சேர்ப்பன், மீளி, விடலை, எயிற்றி,எருவை எயினர், எயிற்றியர் போன்ற மக்கள் பெயர்கள்  இனக்குழுக்களின் அடையாளங்களாக இருந்திருக்கின்றன.

மருத நிலத்தில்தான் வேளாண்மையும் உற்பத்தியும் வேறொரு வளர்ச்சிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. நீர் வரத்து, சமவெளி வயல்கள், உழு கருவிகள், மாடுகளின் பங்கேற்பு, மனித உழைப்பு, பண்பட்ட வேளாண்மை, அதிகளவு உற்பத்தி, செழிப்பான வாழ்க்கை முறை, அதிகப்படியான உபரிச் செல்வம், அதிகளவிலான மக்கள் திரள், பண்டமாற்று, வணிகம்,  உற்பத்தி உறவுகள் போன்றவை இனக் குழு வாழ்க்கை முறையிலிருந்து வளர்ச்சி அடைந்து முன்னேறிய இனம் என்கிற வளர்ச்சிக் கட்டத்தை மருத நிலம் அடைந்திருக்கிறது. அதனால் தான், மற்ற நால் நிலத்து மக்கள் பெயர்களும் வெளிப்படையாகவோ உள்ளீடாகவோ இனக்குழு வாழ்க்கை முறையின் அடையாளங்களைப் பெற்றிருக்க, மருத நிலத்து மக்கள் பெயர்கள் மட்டும் வேளாண் உற்பத்தித் தொழில் சார்ந்த பொதுப்பெயராய்   உழவர், உழத்தி என அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

 அதாவது, குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய மூன்று நிலங்களிலும் வேளாண் தொழில் சார்ந்த உணவு உற்பத்தியை மேற்கொண்டு வந்த குழுக்கள் மற்றும் இனக் குழுக்களே கால வளர்ச்சியில் இனமாகப் பரிணமித்திருக்கிறது. ஒரு குழுவோ அல்லது ஒரு இனக்குழு மட்டுமோ இனமாகப் பரிணமித்திருக்க முடியாது. மாறாக , பல குழுக்களின் - இனக் குழுக்களின் உறவுகளாலும் ஒத்திசைவுகளாலும் தேவைகளாலும்தான் இனம் என்கிற பரிணாமத்தை அடைந்திருக்க முடியும்.

வேறு வேறு குழுக்களாகவும் இனக் குழுக்களாகவும் இருந்தாலும்கூட, வட்டார வேறுபாடு, பேச்சு வழக்கு வேறுபாடு, வழக்காற்று வேறுபாடு, புழங்கு பொருள் வேறுபாடு, தொழில் முறை வேறுபாடு, அடையாள வேறுபாடு போன்றவை இருந்தாலும்கூட, பேசுகிற மொழி, வாழ்கிற நிலப்பரப்பு, பண்பாட்டு ஒத்திசைவு, பொருளியல் உற்பத்தி ஆகிய நான்கும் இனம் என்பதான வளர்ச்சிக்கு அடிப்படையாய் இருந்திருக்கின்றன. அதனால்தான், பன்மைச் சூழலைக் கொண்ட தமிழ் நிலப்பரப்பில் தமிழர் என்கிற இன அடையாளம் பன்மையின் உறைவிடமாகவே இருந்து வருகின்றது.

பல மனிதர்கள் ஒன்றிணைந்து குழுவாக அமைவதும், அவ்வாறமைந்த மனிதக் குழுக்கள் இனக்குழுவாக மாறுவதும், பல இனக்குழுக்களின் தொகுப்பமைவுகள் இனங்களாக மாறுவதும் காலப்போக்கில் நிகழ்ந்தே வந்திருக்கின்றன. இந்நிகழ்ச்சிப் போக்கில் பல்வேறு இனங்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும், அடையாளம் பெறுவதுமாகத் தொடர்கின்றன. இவ்வடையாளப்படுத்தலுக்கு மிக முதன்மைக் காரணியாக இருப்பது மொழி தான்.

அதாவது, ஒரு சமூக அமைப்பு என்பது, மொழியின் விளைபொருள் அல்லது சமூகம் என்பதே ஒரு குறியீட்டு அமைப்பால் கட்டப்பட்டுள்ள அல்லது பொதுவான பொருள் கொள்ளும் முறையைக் கொண்ட மக்கள் கூட்டத்தினைக் குறிக்கும் என்பார் சமாலன். ஆக, மொழிக் கூறுகளால் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அறிதல் முறைகளை வைத்தே அச்சமூகத்தில் உலவும் மனிதர்கள் புரிதல் தளத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். இந்தத் தளம்தான் மனிதர்களை மேலும் மேலும் ஒருங்கே கூடிவரச் செய்து, அதன் மூலம் ஓர் அடையாளப்படுத்தலை நிகழ்த்திக் காட்டுகிறது.

மொழியால் கூடி வரப் பெற்ற மனிதர்கள் ஒரு சமூகமாக மாறுகிற போது அச் சமூகத்தை அடையாளப்படுத்திக்கொள்ள மொழி பயன்படுகிறது. இந்நிலையில்தான், ஓர் இனத்தை, ஒரு சமூகத்தை வகைப்படுத்திக் காட்டும் குறியீடாக மொழி அமைகிறது. இவ்வாறாகத்தான் மொழி அடிப்படையில் உலகில் உள்ள தேசிய இனங்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டன. அந்த வகையில், ஓர் இனத்தின் - தேசிய இனத்தின் அக அடையாளமாக மொழியே முன் நின்றிருக்கிறது. இவ்வாறிருக்கையில், வடவேங்கடம் தென்குமரி ஆயிடை உலகத்து நிலப்பரப்பில் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனும் அய்நிலத்திலும் வாழ்ந்த -  வாழும் தமிழ்  மக்கள், தமிழ்த் தேசிய இனம் என்றே அடையாளப்பட்டு வந்திருக்கின்றனர். 

மனிதர்கள் தங்களுக்கான உணவு உற்பத்தியில் ஈடுபடும் போதுதான் மனிதர்களின் வாழ்வு உயிர்ப்படைகின்றது. அவ்வகையில், உருவாகி வந்திருக்கிற தமிழ்த் தேசிய இனமும்  தமக்கான உணவு உற்பத்தியில் ஈடுபடுத்திக் கொண்டதனால்தான் உயிர்ப்பாய் இருந்திருக்க முடிகிறது. இத்தகைய தமிழ்த் தேசிய இனத்தின் உற்பத்தி அரங்காய்த் திகழ்ந்ததும் திகழ்வதும் வேளாண்மை தான்.

வேளாண்மைதான் ஒரு தேசிய இனத்திற்கும் நாட்டிற்குமான வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்திருக்கிறது. இதன் காரணத்தால்தான்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
என்கிறார் வள்ளுவர். மேலும், உழவரது சிறப்பையும் உழவையும் குறித்து உழவு எனும் அதிகாரத்தில் விளக்கியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கிய நெடுமரபில் வேளாண்மையின் சிறப்புகளும் அதன் முதன்மைத்துவமும் வேளாண் குடிகளின் சிறப்புகளும் அதிகளவில் விவரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் நிலத்தில் வேளாண்மையும் அதனோடு தொடர்புடைய ஏனைய தொழில்களும் வணிகமும் நடைபெற்றே வந்திருக்கின்றன. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் போன்ற நிலங்களில் அதிகளவிலும், பாலையில் குறைந்தளவுமாக நடந்த வேளாண்மை உற்பத்தியும் அது சார்ந்த துணை உற்பத்தியும் தொழிலும் வணிகமும்தான் பல்வேறு தொழில் சார்ந்த மக்கள் பிரிவினரை உருவாக்கி இருக்கிறது. இவ்வாறு பல்வேறு தொழில் சார்ந்த மக்கள் திரள் கூட்டங்களே சாதிகளாய் வடிவம் கொண்டிருக்கின்றன.
குழுக்களாய், இனக்குழுக்களாய் இருந்த காலத்தில் அவரவர் தொழில் சார்ந்து அடையாளப்பட்டு வந்தவையும் வராதவையும் கூட, தேசிய இன உற்பத்தியில் தொழில் சார்ந்து திரண்டிருக்கிற போதும் சாதியாய் உருமாறிக் கொண்டன. ஆனாலும், தேசிய இனத்தின் அங்கமாகவே தம்மை இணைத்துக் கொண்டுள்ளன.

பல்வேறு சாதிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய இனம், வேளாண் தொழில் உற்பத்திச் சாதிகளையும், அதற்குத் துணையாகவும் இணையாகவும் உற்பத்தி மற்றும் வணிகச் சாதிகளையும் உள்ளடக்கி வைத்திருக்கிறது. அவ்வகையில்தான், வேளாண்மை மேற்கொண்ட முதன்மை மற்றும் துணைமைச் சாதிகள் இருந்துள்ளன.

வேளாண் தொழிலை முதன்மையாக மேற்கொண்டதால், உழவர் வேளாளர் என்றே அழைக்கப்பட்டனர். அவ்வேளாளரின் உழவுத் தொழிலுக்குத் துணை செய்யும் குடிகளாக வண்ணார், மயிர்வினைஞர், செம்மான், குயவர், கொத்தர், கொல்லர், கன்னார், தட்டார், தச்சர், கல்தச்சர், செக்கார், கூத்தர், கைக் கோளர், பூக்காரர், கிணைப்பறையர், பாணர், வள்ளுவர், மருத்துவர் ஆகிய பதினெண் குடிகளும் வேளாண் குடியோடு சேர்ந்து வேளாண் உற்பத்தி நடவடிக்கையை மேம்படுத்தியதாகப் பாவாணர் விளக்கப்படுத்துகிறார்.

 மருதம் தவிர, மற்ற நிலங்களின் உற்பத்திப் பொருட்களும் மருதம் உட்பட அனைத்து நிலத்திற்கும் தேவைப்பட்டிருக்கும் காரணத்தால், மற்ற நிலத்தாரும் அந்நிலங்கள் சார்ந்த உற்பத்தி நடவடிக்கைகளிலும் தொடர்ந்து உறவு மேற்கொண்டு வரவும் செய்துள்ளனர். எனினும், பெருவாரியான உணவு உற்பத்தி வேளாண் உற்பத்தியாகவே இருந்திருக்கிறது. அவ் உற்பத்தி குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூன்று நிலங்களிலேதான் சிறப்பாய் நடந்தேறியிருக்கிறது.

 மூன்று வகைப்பட்ட நிலங்களிலும் நடைபெற்ற வேளாண் உற்பத்தியிலும் உணவு தேடல் முயற்சியிலும் தொடர்ச்சியாய்ப் பங்கெடுத்தும் உழைத்தும் பயன்பட்டும் வருவன மாடுகளே. வேளாண்மைக்கு அடிப்படையாய் அமைந்த நிலம், நீர், வித்து இவற்றோடு மாடும் உள்ளடங்கும்.

வேளாண் விளைவிப்பவர் வேளாளர் என்றாலும்கூட, வேளாளரைக் காராளர், வெள்ளாளர் என இருவகையாகக் குறிக்கிறார் பாவாணர். உழுதுண்ணும் உழவுக் குடிகளே காராளர். உழுவித்து உண்ணும் நிலவுடைமைக் குடிகளே வெள்ளாளர் ஆவர் என்பார். பெரும்பான்மை நில உரிமை வெள்ளாளரிடமும், சிறுபான்மை நிலவுரிமை காராளரிடமும் இருந்திருக்கின்றன. ஆயினும், மாடுகள் மட்டும் உழுதுண்ணும் உழவுக்குடிகளான காராளரிடமே இருந்துள்ளன. உழுதுண்ணும் உழுகுடிகளான காராளர்களையே மள்ளர்கள் என இலக்கியங்கள் சுட்டுகின்றன.

மந்தையாய், குழுவாய், இனக்குழுவாய், இனமாய் மாறி வந்தபோதும், காலந்தோறும் குறிஞ்சி, முல்லை, மருதம் எனத் தொழிற்படும் நிலங்கள் மாறிய போதும், அரசுகள் மாறிய போதும், வித்துக்கள் மாறிய போதும், வேளாண்மையில் மாறிடாத உழைப்புக் கருவியாய், காலந்தோறும் நிலங்கள் தோறும் தொடர்ந்து வந்திருக்கிற விலங்காக மாடுகளே முதன்மைச் சிறப்பு பெறுகின்றன.

குறிஞ்சி முல்லை மருதம் என்கிற மூன்று நிலத்தின் மக்கள் வரலாற்றோடும் உற்பத்தியோடும் வாழ்க்கையோடும் மாடுகள் தவிர்க்க முடியாத ஓர் உறவைப் பெற்றிருக்கின்றன. ஆநிரை கவர்தல் எனும் தன்னுறு தொழில்சார் நடவடிக்கைகளால் பாலை நிலத்து மக்களோடும் மாடுகளின் உறவு பிணைந்தே கிடக்கிறது. ஆக, மனித சமூகத்தின் - குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மை வரலாற்று நெடுகிலும் மாடுகளே நிறைந்து கிடக்கின்றன எனலாம்.

 மனித சமூக வரலாற்றில் மனிதர்கள் கற்ற முதல் கல்வியே உழவு என்கிறார் பாவாணர். அந்த உழவுக் கல்விக்குத் துணையாய் நின்றவை மாடுகள் தான். எண்ணும் எழுத்துமாய் விரிந்து கிடக்கும் கல்விதான் மனித சமூகத்தை மேலும் மேலும் அறிவு நிரம்பிய சமூகமாய் உருவாக்கியிருக்கிறது. அத்தகைய கல்வியே மாட்டுக்கு நிகரானது எனும் பொருள்பட
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடுஅல்ல  மற்றை அவை
என்கிறார் வள்ளுவர். ஏனெனில், மாடுகள்தான் தமது உழைப்புப் பங்கேற்பால் மனித சமூகத்தையே நாகரிகப் பாதைக்கு அழைத்து வந்திருக்கின்றன.

உணவளித்தல், உரமளித்தல், உழுதல், ஏற்றம் இறைத்தல், வண்டி இழுத்தல், பொதி சுமத்தல் போன்ற உற்பத்தி நடவடிக்கை மட்டுமின்றி, ஆழமான ஆற்றைக் கடந்து போகவும் பயன்பட்டிருக்கிறது. மாடுகளின் வாலைப் பிடித்துக் கொண்டும் அக்காலத்திய மக்கள் ஆற்றைக் கடந்தது குறித்த பதிவுகள் காணப்படுகின்றன.

மாடுகளில், குறிப்பாகக் காளை மாடுகளே உழைப்பில் அதிகளவு பங்கெடுத்திருக்கின்றன. மனிதர்களின் உழைப்புப் பகராளியாகவும் நிகராளியாகவும் உற்பத்திக் கருவியாகவும் காளை மாடுகளே தொழிற் பட்டுள்ளன. இத்தகையக் காளை மாடுகளே எருது, ஏறு என்றும் அழைக்கப்படுகின்றன.

பசு மாடுகள் குறித்தும் எருதுகள் குறித்தும், அவை சார்ந்த வாழ்க்கை குறித்தும் தமிழ் இலக்கியங்கள் நிறைய எடுத்துரைத்துள்ளன. சங்க கால முல்லைக்கலிப் பாடல்கள் சுரி நெற்றிக் காரி, வெண் காற் காரி, திறன் சான்ற காரி, நுண் பொரி வெள்ளை, புள்ளி வெள்ளை, பழி தீர்த்த வெள்ளை, செம்மறு வெள்ளை,கோடு அணிசேய், வெருவந்த சேய், வெண் காற்சேய், முரண் மிகு குரல், ஏந்து இமில் குரால், புண் குரூக்கண், பல் பொறி கடுஞ்சினத்துப் புகர் போன்ற எருது வகைகளைப் பற்றி விரிவாகப் பதிவு செய்துள்ளன. அதேபோல, உழவுக்குடிகளைக் குறித்து அதிக எண்ணிக்கையில் தோன்றிய பள்ளு இலக்கியங்களும் காளை மாடுகளின் வகைகளைக் குறித்துப் பதிவு செய்துள்ளன.

நிலவகை, நெல் வகை, ஏர்க்கால் வகை போன்றவற்றோடு மாடுகளின் வகைகளையும் உழவுக் குடிகள் அறிந்து வைத்துள்ளனர்.  அந்தவகையில், குடைக் கொம்பன், செம்மறையன், குத்துக் குளம்பன், மேழை, குடைச் செவியன், குற்றாலன், கூடுகொம்பன், மடப்புல்லை, கரும் போரான், மயிலை, கழற்சிக் கண்ணன், மட்டைக் கொம்பன், கருப்பன்,மஞ்சள் வாலன், படைப்புப் புடுங்கி, கொட்டைப் பாக்கன், கருமறையன், பசுக் காத்தான், அணிற் காலன், படலைக் கொம்பன், விடத்தலைப் பூ நிறத்தான், வெள்ளைக்காளை எனப் பல வகை மாடுகளைப் பற்றிய பதிவை முக்கூடற் பள்ளு எடுத்துரைக்கின்றது. இதேபோல,
விரி மருப்புக் கரும் போரான் வெள்ளை மயிலை
வெண்டலையன் கட்டுக் கொம்பன் சுட்டிச் செம்போறான்
 எரிக்கழுத்தன் செம்மறையன் குத்துக் குளம்பன்
 எண்ணெய்ச்சி வலைகமலப் புல்லை மால் காளை  
வரி முருக்கும் கருங்கண்ணன் தளுவணை மோளை
மட்டைக் கொம்பன் ஏறுவாலன் கட்டை வால்க் கூளை
சரி பிடிப்புக்கோர் ஆயிரம் ஒன்றைப் பார்க்கொன்று
தண்டாத மாடு அனேகம் உண்டு
என, வேறு பல மாடுகளின் வகைகளைக் கூறுகிறது திருவேட்டை அய்யனார் பள்ளு. இந்த மாடுகள் யாவும் உழவுக்குப் பயன்படுகிற மாடுகள். உழவைத் தவிர்த்து மற்ற தொழில்களுக்கும் பயன்பாடுகளுக்கும் பயன்படுகிற மாடுகளைக் குறித்த பதிவுகள் மாடுகள் சார்ந்த மக்களின் வழக்காறுகளில் காணப்படவே செய்கின்றன.

மனித சமூக அமைப்பின் கட்டுமானத்தை அடிக்கட்டுமானம், மேல் கட்டுமானம் என இருவகையாக விளக்கப்படுத்துகிறார் காரல் மார்க்சு. பொருளாதார உற்பத்தித் தளமே ஒரு சமூகத்தின் அடிக்கட்டுமானம் ஆகும்.

இதைக் குறித்து இசுடாலின் கூறும்போது, சமுதாய வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நிலவுகிற பொருளாதார அமைப்பாகும் என்கிறார். மார்க்சியர் குறிப்பிடுகிற மேல்கட்டுமானம் என்பது, அடிக்கட்டுமானத்தைச் சார்ந்து இருப்பனவும் அதன் விளைவுகளாக இருப்பனவும் ஆகும். அதாவது, "மேல் அமைப்பு என்பது அரசியல், நீதி, மதம், கலை,தத்துவம் ஆகியவை பற்றிய சமூகத்தின் நோக்கங்களும், அவை தொடர்பான அரசியல், நீதி முதலிய நிறுவனங்களும் ஆகும்." இவற்றோடு குடும்பம், சாதி, பண்பாடு, நாகரிகம், கல்வி, சட்டம், நிர்வாக அமைப்புகளும் மேல் கட்டுமானத்தில் சேர்வனவாகும்.

அந்த வகையில், தமிழ்ச் சமூகத்தின் அடிக்கட்டுமானம் வேளாண்மை உற்பத்தியே ஆகும். இத்தகைய வேளாண் உற்பத்தியின் மேல் கட்டுமானங்களாகவேதான் தமிழ் மரபில் பன்மைத்துவம் நிரம்பிக் கிடக்கும் இலக்கியங்கள், இலக்கணங்கள், கலைகள், பண்பாடுகள், சடங்குகள், விழாக்கள் போன்றவை.

தமிழ்ச் சமூகத்தில் நிகழ்த்துச் சடங்காகப் புலப்படுத்துகின்ற பெரும்பாலான சடங்குகள் வேளாண் உற்பத்திச் செயல்பாடுகளைப் போலச் செய்து பார்க்கும் அல்லது போலச் செய்து காட்டும் சடங்குகளாகவே திகழ்கின்றன.

ஆக, ஒவ்வொரு நிகழ்த்துச் சடங்கிற்குப் பின்னாலும் உற்பத்தி சார்ந்த செயல்பாடுகளின் போலச் செய்தல் நோக்கமும் செயன்மையும் புதைந்து கிடக்கிறது எனலாம். வேளாண்மை சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளைப் போலச் செய்து புலப்படுத்தும் நிகழ்த்துச் சடங்குகள் பெரும்பாலும் உற்பத்தியோடு தொடர்புடைய விலங்குகளோடும் தொடர்பு உடையதாய்த்தான் அமைந்திருக்கின்றன .

உலகில் உள்ள மனித சமூகங்கள் பலவும் விலங்குகளோடு தொடர்புடைய சடங்குகளைக் கொண்டிருக்கின்றன. ஆத்திரேலிய ஆதிவாசிகள், புதர்களுள் ஒளிந்திருக்கும் விலங்குகளை வேட்டை ஆடுவது போலக் குழு நடனம் ஆடுவார்கள். புதர்களை விலக்கிச் செல்வது போல முதலில் சைகை செய்து ஆடுவார்கள். புதர்களில் இருந்து ஒலி வருவது போலத் தங்கள் குரலாலும் இசைக் கருவிகளாலும் ஒலி எழுப்புவார்கள். விலங்குகள் ஓடுவதுபோல ஆடுவார்கள். பின்னால் அவற்றை பூமராங் என்ற கருவியை எறிந்து கொள்வதுபோல ஆடுவார்கள். அடிபட்ட விலங்குகள் துடிப்பதுபோல ஆடுவார்கள்.

அதேபோல, ஆப்பிரிக்க இனக்குழு மக்கள், வலையில் மான்களை வீழ்த்துவதுபோல நடனமாடுகிறார்கள். பெண்கள் மான்களாகவும் ஆண்கள் வேட்டைக் குழுவினராகவும் பிரிந்து நின்று ஆடுவார்கள். ஆண்கள் தங்கள் உடலினுள் வெளியிலிருக்கும் ஒரு விலங்கின் சக்தி புகுவது போல நினைத்து வலை வீசுவது போல் ஆடுவார்கள். பெண்கள் வலையில் அகப்படுவதுபோல் ஆடுவார்கள்.

மெலனீசியாவில் மீன் பிடிக்கும் பருவம் ஆரம்பிக்கும்போது விருந்தும் குழு நடனமும் நடைபெறும். அதில் காற்றடிப்பது, கடல் அலையில் படகு மிதப்பது, வலை வீசுவது, மீன் வலையில் அகப்படுவது, படகு கரை சேருவது, மீன் அதிகம் பிடித்தவர்கள் மகிழ்ச்சியாக ஆடுவது போன்ற ஆட்டங்களை ஆடுவார்கள் என்கிற குறிப்புகளைத் தருகிறார் நா.வானமாமலை. மேற்குறித்த நிகழ்த்துக் கலைகளையும் சடங்குகளையும் போலச் செய்தல் சடங்குகள் எனக் குறிக்கின்றனர் மானுட ஆய்வாளர்கள்.  

உணவைத் தேடியும் உற்பத்தி செய்தும் வாழ்ந்து வந்திருக்கிற மனித சமூகத்தின் சடங்குகளில், விலங்குகளும் செடிகளும் கொடிகளும் மரங்களும் நிலமும் விதைகளும் முதன்மை பெறுவது தவிர்க்க முடியாது.

"வேட்டை வாழ்க்கையை முற்றிலும் கைவிட்டு உழவுத் தொழிலில் உணவு பெற்று வாழும் மக்கள் இனத்தவரிடையேகூட வேட்டைக்கால நம்பிக்கைகளின் எச்சங்கள் இருக்கின்றன" எனும்போது, உழவுத் தொழில் சார்ந்த செயன்மைகளில் பல்லாயிரம் ஆண்டு காலத் தொடர்பை இன்னும் உயிர்ப்போடு தங்களது வாழ்க்கையாய்க் கொண்டிருக்கும் மக்களது நிகழ்த்துச் சடங்குகளும் விலங்கோடு தொடர்புடையவையாகத்தான் அமைந்திருக்கும். அவ்வகையில், தமிழ்ச் சமூகத்தின் நிகழ்த்துச் சடங்குகள் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்ததாகவும், மாடுகள் சார்ந்ததாகவும் இருப்பதைக் காண முடியும்.

தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை உற்பத்திச் செயல்பாடுகளை மதிப்புடனும் மகிழ்வுடனும் கொண்டாடி வந்து கொண்டிருப்பதைப் பல பண்பாட்டுக் கூறுகளின் வழியே அறிய முடியும். இத்தகைய வேளாண் உற்பத்தியின் உயரிய பண்பாட்டுப் புலப்பாடுதான் பொங்கல் சார்ந்த சடங்குகளும் நிகழ்த்துக் கலைகளும்.

தமிழ்ச் சமூகத்தின் பெரும்பகுதி உழைப்பும் வாழ்நிலையும் வேளாண்மையோடு தொடர்புடையதாக இருந்ததால், வேளாண் உற்பத்தியின் அறுவடைக்காலமே, உணவுக்கும் செல்வத்திற்கும் மகிழ்வுக்கும் நிறைவுக்கும் கொண்டாட்டத்திற்கும் உரிய காலமாகும். அத்தகைய அறுவடையையும் அதற்குத் துணை நின்றவற்றையும் நன்றியோடும் மதிப்போடும் வாழ்த்தவும் வணங்கவும் செய்தனர் தமிழர். அதைத்தான் பொங்கல் விழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர். அவ்வகையில்தான், தையள் மாதம் என்கிற சுறவம் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வெவ்வேறு வகையில் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு சமூகத்தின் விழாக்கள், சடங்கு, சம்பிரதாயங்கள், இன்னும் பிற நிகழ்த்துதல்கள் அந்தச் சமூகத்தின் கூட்டு எடுத்துரைப்பாகும். காலங்காலமாக சமூக நினைவுகளைக் கூட்டாக வெளிப்படுத்தும். சமூகங்கள் அவை சேமித்து வைத்திருக்கும் கூட்டு நினைவுகளைச் சடங்குகள் விழாக்கள் மூலம் வெளிப்படுத்துவதோடு அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவதற்கு உதவுகின்றன. இவற்றிலிருந்தே சமூகத்தின் ஆதி வரலாற்றை அறியவும் மீட்டெடுக்கவும் முடியும் என்கிறார் பால்கன்னர்டன் எனும் இன வரைவியல் ஆய்வாளர்.

 அந்த வகையில், குழுவாகவும் இனக்குழுவாகவும் சாதியாகவும் பன்மை அடையாளங்களை உள்ளீடாகக் கொண்டு வளர்ச்சி அடைந்த தமிழ்த் தேசிய இனத்துள், தனி மரபாகவும் கலப்பு மரபாகவும் கூட்டு மரபாகவும் பொது மரபாகவும் முன்னெடுத்துக் கொண்டாடுகிற பண்பாட்டு அடையாளங்களுள் பொங்கல் பண்பாடும் ஒன்று. அதனால்தான் பொங்கல் பண்பாட்டைத் தமிழ்த் தேசிய இனத்தின் உற்பத்திப் பண்பாடாகக் கருதப்படுகிறது. இதுவே தமிழ் நிலத்தின் உயிர்ப் பண்பாடாகவும் காணப்படுகிறது. 

பொதுவாகவே, தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் உற்பத்தி சார்ந்தும் உயிரின வளமை சார்ந்தும் அறம் சார்ந்தும் வரலாற்றுப் பொருள் முதல்வாத இயங்கியலைக் கொண்டிருக்கும். இத்தகையத் தமிழ் மரபு, சமயச் சார்பற்றவை. அதனால்தான், வைதீகம் எனப்படுகிற பார்ப்பனிய மரபு, தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் அனைத்தையும் தமக்குரிய எதிர் அடையாளமாகவே கட்டமைத்தன.

தமிழ்ப் பண்பாட்டு மரபும் பார்ப்பனியத்தை எதிர்க்கும் - மறுக்கும் பண்பைத்தான் உள்ளும் புறமுமாகக் கொண்டிருக்கிறது. அதனால்தான், தமிழ் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாய் இருக்கும் வேளாண்மையை இழிவான - பாவப்பட்ட தொழில் என்கிறது பார்ப்பனியம்.

பிராமணனும் சத்திரியனும் வைசியன் தொழிலால் ஜீவித்த போதிலும், அதிக இம்சை உள்ளதாயும் பராதீநமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்க வேண்டியது.

சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியில் உண்டாலான பலப்பல ஜெந்துக்களையும் வெட்டுகிறது.
 என உழவுத் தொழிலை ஆபத்தருமம் என்பதாகக் கருதி இழிவுபடுத்துகிறது மநு சாத்திரம். ஏர் பூட்டி உழுவதே பாவம் எனக் கருதுகிற சமசுக்கிருத மரபில், ஏர் என்னும் சொல்லே காணப்படாமல் இருப்பதும் இதன் காரணமாகத்தான். 

பார்ப்பனர்கள்  நிலம் வைத்துக் கொள்ளலாம்; உணவு உட்கொள்ளலாம். ஆனால், வேளாண் தொழிலான உழவுத் தொழிலை மட்டும் அவர்கள் செய்யக் கூடாதாம். பார்ப்பனர்கள் பசு மாட்டைத்தான் தங்களது அடையாளமாகக் கருதுவர். ஆனால், தமிழர்களோ நிலத்தில் இறங்கி சேற்றில் உழைக்கும் வேளாண்மைத் தொழிலைத்தான் தங்களது உற்பத்தி அடையாளமாகக் காண்கின்றனர்.

 உழவுக்குப் பயன்படும் காளை மாடுகளைத்தான் தங்களது பண்பாட்டு அடையாளமாகக் காண்கின்றனர். அதனால்தான், ஏரையும் உழவையும் நிலத்தையும் மாடுகளையும் பயிர்களையும் அறுவடையையும் உழைப்பையும் இயற்கையையும் ஒருங்கே போற்றுகிற வகையில் பொங்கல் பண்பாட்டை வளப்படுத்தியிருக்கிறார்கள். இத்தகையப் பொங்கல் பண்பாட்டின் உயிர்த்தொடர்ச்சிதான் மாடுகள் சார்ந்த நிகழ்த்துச் சடங்குகள். அவைதான், மாட்டுப் பொங்கல் சார்ந்த நிகழ்வுகள்.

உழைப்பில் சரிநிகராய்ப் பங்கேற்ற மனையாள் உட்பட, மனையார் அனைவரின் உள்ளங்கள் அனைத்தும் மகிழ்வில் பொங்கவும், இயற்கையிடம் நன்றிப் பெருக்கைப் பொங்கி வழிந்து காட்டவும்தான் மனைப் பொங்கல். அதேவேளையில், தம்மோடு உழைப்பில் பகராளிகளாய் உழைத்திட்ட காளை மாடுகளுக்குக் கைமாறாய் நன்றியுணர்வையும் வணங்குதலையும் வாழ்த்துதலையும் உணர்வுகளால் பொங்கிக் காட்டியும், அத்தகைய மாடுகளுக்கும் மகிழ்வைப் பொங்கிவர வைக்கவும்தான் மாட்டுப் பொங்கல்.

அதாவது, அறுவடை கண்டு மகிழ்வு பொங்கும் உழவுக் குடிகள், அவ் அறுவடைக்குத் துணை நின்ற மாடுகளையும் மகிழ்வில் பொங்கச் செய்யும் பண்பாடே மாட்டுப் பொங்கல் ஆகும்.

புது மாதத்தில் புது நெல்லும், புது மஞ்சளும், புதுப் பானையும், புது வெல்லமும், புதுக் கரும்பும், புத்தாடையும், புதுக்கோலமும் கொண்டு புதுப் பொங்கல் வைத்து மகிழ்வர் உழவர். இந்த மகிழ்வை மாடுகளும் பெறவேண்டும் என்பதற்காகவே மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடி கயிறு அனைத்தும் புதியதாக அணிவித்து, கொம்புகளின் பிசிறு சீவி எண்ணெய் தடவி, கழுத்துமணி ஆரம் கட்டி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டி, செவ்வந்திப்பூ மாலை சூட்டி அலங்கரித்து பசுக்கள், கன்றுகள், காளைகள் என அனைத்து மாடுகளையும் மகிழ்வுபடுத்துவர். அதோடு, முதல் நாள் வைத்த மனைப் பொங்கல் போலவே அனைத்துப் படையல்களோடும் பொங்கலிட்டுத் தளுகை வைத்து வணங்குவர். அந்தத் தளுகைப் பொங்கல், முதலில் மாடுகளுக்குத்தான் ஊட்டப்படும்.

மனிதரும் மாடுகளும் இணைந்து உழுதிட்டதாலும் உழைத்ததினாலும் கிடைத்திட்ட உணவு உற்பத்தியின் முதல் அறுவடையை, மனிதரும் மாடும் நுகர்ந்திடுவதைத்தான் மாட்டுப் பொங்கல் சடங்கு உணர்த்துகின்றது. அதாவது, வேளாண் உணவு உற்பத்தியில் ஈடுபட்ட மனிதரும் மாடும் தங்களது அறுவடையை நுகர்ந்து கொள்வதின் போலச் செய்தல் சடங்காகத்தான் மாட்டுப் பொங்கல் அமைந்திருக்கிறது.

பொதுவாக, அறுவடைக் காலத்திலேயே மனைப் பொங்கலும் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்பட்டாலும், வேளாண்மை நடைபெறுகின்ற சிற்றூர்ப் புறங்களில் மனைப் பொங்கலைக் கட்டிலும் மாட்டுப் பொங்கலே பெருமளவில் கொண்டாடி வந்துள்ளனர். இன்றும்கூட அப்படித்தான். மாடுகளுக்குப் பொங்கல் படையிலிட்டு வணங்கிய பிறகு, கூடவே, வேளாண்மை உற்பத்தியிலும் உழைப்பிலும் ஈடுபட்ட மனிதர்களும் மாடுகளும் தழுவிக் கொள்ளும்படியான நிகழ்வு ஒன்று கூடி நடத்தப்பட்டிருக்கிறது.

உழைப்பில் பங்கேற்கிற இரு வேறு உயிரினங்களான மனிதரும் மாடுகளும் உறவாலும் அன்பாலும் மகிழ்வாலும் தழுவிக் கொண்டு உயிர்ப்பிக்கிற வகையில், காலங்காலமாக நேர்ந்து வருகிற ஒரு நிகழ்த்துச் சடங்கை ஊரார் கூடி  நேர்த்திக் கடனாக நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.

மாடுகளும் மனிதர்களும் தழுவிக் கொள்வதை வேளாண் உற்பத்தியின் நேர்த்திக் கடனாகவே பயிலப் பட்டிருக்கிறது. இந்த நேர்த்திக்கடன் வேளாண் உற்பத்தியின் வளமைச் சடங்காகவே பின்பற்றப்பட்டிருக்கிறது.

சினை பிடித்தல், ஈத்து, பால் சுரப்பு, பெருத்த திமில் இன்மை போன்ற காரணங்களால் பசு மாடுகளைத் தழுவிக் கொள்ளும் மரபு இருந்திருக்கவில்லை. உடல் வலு, உழுது இறுகிப் போன உடல் தோற்றம், நீள் முதுகு, சதை இறுகிய கால்கள், பெருத்த திமில், துள்ளல் போன்றவை காளை மாடுகளுக்கு உடலியல் கூறுகளாய் வாய்த்தவை. ஆதலால், மனிதர்கள் தழுவி விளையாடும் மாடாகக் காளை மாடுகளே உகந்ததாகவும் உரித்தானதாகவும் கருதியுள்ளனர்.

அலங்கரிக்கப்பட்டதோடு கால்களில் சலங்கை கட்டிய அக் காளை மாடுகளை ஊர்ப் பொதுவிடங்களில் அல்லது வயல்வெளிகளில் அவிழ்த்துவிட்டு, அவற்றின் திறத்தோடும் தினவோடும் உறவாடித் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். போலச் செய்தல் சடங்காகவும் பயில்முறைச் சடங்காகவும் இந்நிகழ்த்துச் சடங்கு அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, வேளாண்மையின் தொடக்கம்தான் கடுமையான உழைப்பை வாங்கும். உழவுக் காலத்தில் நஞ்சையிலும் புஞ்சையிலும் மாறி மாறி மாடுகள் உழுகின்றன. நஞ்சையில் புழுதி உழவு, தொளி உழவு , தொளிப் பிறட்டுதல், பரம்படித்தல், ஏற்றம் இறைத்தல், கமலை இழுத்தல் போன்ற உழவின் அத்தனையிலும் பங்கேற்கிற காளை மாடுகள், அறுவடைக்காலம் வரும் வரையிலும் பெரும்பாலும் ஓய்விலும், சிற்சில வேலைகளில் மட்டுமே பங்கெடுக்கும். ஆதலால், காளை மாடுகள் தமது ஓய்வுக் காலங்களில் தினவுடனே தான் இருக்கும். அவற்றின் தினவைத் தீர்க்கும் பொருட்டுத்தான் மாடு உரசு கல் சிற்றூர்ப் புறங்களில் நடப்பட்டுள்ளன. இதனை ஆ உரிஞ்சி, ஆ தீண்டு குற்றியென்று சொல்லப்பட்ட  தறிகள் என்பார் பாவாணர்.

அறுவடைக்காலம் வரையிலும் ஓய்வில் இருக்கும் காளைகள் தினவுடனும் துள்ளலுடனும் மிடுக்குடனும்தான் இருந்திருக்கும். முன்னங்கால்களால் பிராண்டுதல், கொம்புகளால் மண்ணைக் கிளறுதல், பாய்ந்தோடுதல், முட்ட வருதல், பின்னங் கால்களால் உதைத்தல், சீண்டுதல், எக்குப் போடுதல், இணை தேடுதல் போன்ற அனைத்தும் காளைகளின் தினவு வெளிப்பாடுகள்தான். காளைகளின் இத் தினவையும் துள்ளலையும் மனிதர்களின் தழுவல்களே நிறைவு செய்கின்றன.

இவை ஒருபுறமிருக்க, அறுவடைக்குப் பிறகு அடுத்த உழவு தொடங்க இருப்பதனால், காளைகளும் சோம்பல் முறித்து, தினவு தீர்ந்து உழவில் ஈடுபடுத்த வேண்டியிருந்ததால், அக் காளைகளைத் தழுவி அணைத்துக் கையாளும் பழகு முறையாகவும் மாடு தழுவல் சடங்கு நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நோக்கத்திலும் பின்புலத்திலும் தான் மாடு தழுவல் சடங்கானது வேளாண் உற்பத்தி சார்ந்து நிகழ்ந்திருக்க வேண்டும்.
 மனிதர்களும் மாடுகளும் மாறிமாறி உழைக்கிறார்கள். உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் உழைப்பினால் உடலும் உள்ளமும் தேய்ந்து போகின்றன; சோர்ந்து போகின்றன. இந்தத் தேய்வையும் சோர்வையும் போக்கிக்கொள்ள மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஓய்வுக் காலமும் தேவைப்பட்டிருக்கின்றன. அந்த ஓய்வு என்பது, உணவோ உறக்கமோ மட்டுமல்ல. உணவும் உறக்கமும் உடல் சோர்வையும் தேய்வையும் வேண்டுமானால் போக்கும். உள்ளத் தேய்வையும் சோர்வையும் போக்கவேண்டுமானால் உள்ளம் மகிழும்படியான பொழுதுபோக்கும் நடவடிக்கையும் வேண்டியிருந்திருக்கும். அதனாலேயே உள்ளக் கிளர்ச்சியும் எழுச்சியும் மகிழ்ச்சியும் தரும்படியான கலைகளையும் விளையாட்டுகளையும் நிகழ்த்தியும் பங்கேற்றும் வந்துள்ளனர் முன்னோர்.

காலங்காலமாகப் பயிலப்பட்டு வந்த இந்நிகழ்த்து முறைகளும் பண்பாடாய் வடிவமைந்து போகின்றன. அவ்வகையில், வாழ்வோடும் தொழிலோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மனிதர்களும் மாடுகளும் பொழுதுபோக்காய் விளையாடி மகிழும் விளையாட்டு மரபாய் உருக்கொண்டதாகத்தான் மாடு தழுவல் பண்பாடு வடிவமைந்திருக்க வேண்டும்.

வேளாண் சார்ந்த  உழவுக் குடிகள் ஒவ்வோர் ஆண்டும் இம் மாடு தழுவல் சடங்கைக் கண்டிப்பாக நிகழ்த்த வேண்டும். இது நடக்காவிட்டால் தீங்கு நேரும், மழை இன்றிப் போகும், பஞ்சம் வரும் என்பது உழவுக் குடிகளின் நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

இச் சடங்கு நிகழ்வு, வேளாண் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் அதேவேளையில், வேளாண் உற்பத்தி சார்ந்த சந்தைப்  பொருளியலையும் விரிவுபடுத்தியிருக்கிறது. ஒரு சடங்கு பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விழாக்களாகக் கொண்டாடப்படும் போதுதான் அதன் சந்தைப் பொருளாதாரம் விரிவடைந்திருக்க முடியும்.

தொழில் உறவுகள், வணிக உறவுகள், புழங்கு பொருள் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, பண்டமாற்று எனப் பொருளியல் சார்ந்த நடவடிக்கைகளும் இது போன்ற சடங்குகளுக்குள் மறைந்திருக்கின்றன. அதாவது, வேளாண்மை சார்ந்த தேசிய இனத்தின் தற்சார்புப் பொருளாதாரப் பின்புலம் இதற்குள் உண்டு. ஆதலால் தான், மாடு தழுவல் சடங்கானது பெருமகிழ்வுக்கான விழாவாக மாறிக்கொண்டது. 

மாடுகளுள், குறிப்பாகக் காளை மாடுகளே ஏரில் பூட்டி உழவு செய்திருப்பதால், ஏர் மாடுகள்,  எருதுகள், ஏறுகள் என்றழைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் மாடு தழுவுதல் என்பதுகூட எருது தழுவுதல், ஏறுகோள், ஏறு தழுவுதல் என இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய மாடு தழுவல் நிகழ்வு இன்னும் வேறு வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சு விரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு, எருதுக்கட்டு, காளை விரட்டு, ஏறு விடுதல், வடமாடு, சல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு என வட்டாரம் சார்ந்து அழைக்கப்படுகிறது. இச்சொற்கள் அனைத்துமே மாடுகளைத் தழுவிக்கொள்ளும் நிகழ்வைத்தான் குறிக்கின்றன.

மாடு தழுவல் என்னும் நிகழ்வானது சடங்காய் மட்டும் தேங்காமல், தமிழினத்தின் இன்னுமொரு பண்பாட்டு விழாவாகவும் பரிணமித்து வந்திருப்பதைக் காண முடியும். அவ்வகையில், மாடு தழுவலைக் குறித்தத் தொல்லியல், இலக்கணம், இலக்கியம், கலை சார்ந்த தடயங்களும் நிரம்ப உள்ளன.

சிந்து வெளி என்றழைக்கப்படுகிற மொகஞ்சதாரோ, அரப்பாவில் நடைபெற்ற அகழாய்வுகள் தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளன. சிந்து வெளியில் மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஏறு தழுவுதலைக் குறிக்கும் சின்னம் என்கிறார் அய்ராவதம் மகாதேவன்.

வளைந்த கொம்புகளுடைய ஒற்றை எருது மூர்க்கமான கோபத்துடன் முதுகுப் புறமாகக் கழுத்தைத் திருப்பிப் பார்த்து விட்டு, விரைந்து முன் நகர்ந்து மாடு அணையும் மனிதர்களை முட்டி வீச, அவர்களில் இருவர் காற்றில் மிதப்பது போலவும், ஒருவர் எருதைத் தாவி அணைவது போலவும், மற்ற இருவர் முன் பின்னாகத் தலை குப்பிறக் கீழே விழுவதுமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் சிலவும் ஏறு தழுவதலைக் குறித்துப் புலப்படுத்துகின்றன.

 நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூரில் கி.மு 2000 முதல் 1500 வரையிலான காலத்தைச் சார்ந்த பாறை ஓவியம் காந்தி ராசன் அவர்களால் கண்டறியப்பட்டது. கூரிய கொம்புகளும் சிலிர்த்த  திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்கிறார் அவர். மேலும், மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள கல்லூத்து மேட்டுப்பட்டியிலும் ஒரு பாறை ஓவியம் அவராலேயே கண்டறியப்பட்டுள்ளது.

திமிலுடன் கூடிய ஒரு காளையை மனிதர் ஒருவர் அடக்க விரட்டுவது போன்று அமைந்த அவ் ஓவியம் கி.மு 1500 ஆம் காலத்தைச் சார்ந்தது ஆகும். இதேபோல, தேனி மயிலாடும்பாறைக்கு அருகில் அருக வெளியில் உள்ள சித்திரக்கல் புடவில் திமிலுடன் கூடிய காளையின் ஓவியம் பாலமுருகன் அவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இவைகள் போக, தமிழ் நாட்டின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள நடுகற்கள் ஏறு தழுவலைக் குறித்த புடைப்புகளையும் குறிப்புகளையும் தருகின்றன. பல்வேறு கல்வெட்டுகளும்கூட ஏறு தழுவல் பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளன.

நடுகற்களுள் பல வகை உண்டு. புலியோடு போராடி மாண்டவருக்கு எடுக்கப்பட்ட கல், புலிக் குத்திக் கல் என்று சுட்டுவர். அதே போல, பன்றிக் குத்திக் கல், யானைக் குத்திக் கல் எனப் பல வகையும் உண்டு. அவற்றுள், எருது பொருதார் கல் ஒன்றையும் ஆய்வாளர் சுட்டியுள்ளனர். இதில், காளையின் கொம்புகளைத் தன் கைகளால் பிடித்துப் போரிடும் வீரனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இத்தகையச் சிற்பங்களைக் கொண்ட நடுகற்கள் தமிழகம் முழுவதும் பரவலாகக் கிடைத்துள்ளன எனக் கூறும் பெருமாள் முருகன், சேலம் மாவட்டத்தில் உள்ள எருது பொருதார் கல் ஒன்றில் காணப்படும் செய்தியைக் குறித்தும் விளக்கப்படுத்தியுள்ளார். கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடி பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்ட கல்லு என்கிறது அந் நடுகல் . கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடிப் பட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவன் மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் இது. இதில் எருது விளையாடி என்னும் தொடர் இடம் பெறுவது கவனத்திற்குரியது என்பார் அவர்.

குறிஞ்சி நிலத்து விலங்காகிய மாடுகள் முல்லை, மருதம், பாலை நிலத்து மக்களோடும் தொழிலோடும் வாழ்வோடும் பினைந்து கிடந்ததைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவாறாக விவரித்துள்ளன. அவற்றுள் ஏறு தழுவலைக் குறித்த பதிவுகளும் உண்டு.

சங்க கால முல்லைக்கலியில் ஏறு தழுவல் குறித்த பாடல்கள் பலவுண்டு. எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர் என ஏறு தழுவல் களம் காட்டப்படுகிறது.
மருப்பில் கொண்டும் மார்பு உறத் தழீஇயும்
எருத்திடை அடங்கியும் இமில் இறப் புல்லியும்
தோள் இடைப் புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும்
நிரைபு மேல் சென்றாரை நீள்மருப்பு உறச் சாடி
கொள இடம் கொளவிடா நிறுத்தன ஏறு –
என, ஏறு தழுவலின் களத்தை விவரிக்கிறது கலித்தொகை. அக் களத்தில் நிற்கும் ஏறுகள், தம்மை அடக்குவதற்காய் வருகின்றவர்களைக் கொம்பினால் குத்திக் கீறி தம் வீரத்தைக் காட்டி நின்றதைக் கூறும் கலித்தொகை ,
கழல உழக்கி, எதிர் சென்று சாடி
அழல்வாய் மருப்பினால் குத்தி
உழலை மரத்தைப் போல் தொட்டன ஏறு
தொட்டதம் புண்வார் குருதியால் கைபிசைந்து மெய் திமிறி
தங்கார் பொதுவர் கடலுள் பரதவர்
அம்பி ஊர்ந் தாங்கு ஊர்ந்தார் ஏறு.
ஏறு தம் கோலம்செய் மருப்பினால்
தோண்டிய வரிக்குடர் ஞாலம் கொண்டு
எழூஉம் பருந்தின் வாய்வழீஇ  
ஆலும் கடமும் அணி மார் விலங்கிட்ட
மலைபோல் சினை
என்றுரைக்கின்றது.

உழவில் பங்கேற்கும் ஏர் மாடுகளைத் தவிர, அதில் பங்கேற்காத காளை மாடுகளும் உண்டு. இவை பொலி காளைகள் எனப்பட்டன. இக்காளைகளே ஏறு தழுவல் நிகழ்வுகளில் பெரும்பாலும் பங்கேற்கக் கூடியவை. இதைக் குறித்துக் கலித்தொகை ஒரு காட்சிபோல் விவரிக்கிறது.

 திமில் பெருத்த  இக்காளைகள், பல நிலத்திலிருந்து நீரைக் கொண்டு வருபவை போல நிலத்தை முட்டித் தோண்டின. சில காளைகள் நிலத்தை நொறுக்கின. சில தம்முள் முரண்பட்டு ஒன்றோடொன்று எதிர்த்துச் சிலைத்துக் கொண்டன. சில மண்டியிட்டுப் பாய்ந்தன. இவ்வாறு இந்தக் காளைகள் வீரமுடன் போரிட்டுச் செல்வது, மிடுக்குடனும் வீரத்துடனும் போருக்குச் செல்லும் மருத நிலத்து மள்ளர்களை ஒத்ததாக இருக்கிறது என முல்லை நிலத்தையும் மருத நிலத்தையும் இணைவிக்கும் வகையில்,
நீறு எடுப்பவை நிலம் சாடுபவை
மாறு ஏற்றுச் சிலைப்பவை மண்டிப் பாய்பவையாய்
 துளங்கு இமில் நல் ஏற்றினம் பல –
களம் புகும் மள்ளர் வனப்பு ஒத்தன
எனப் புலப்படுத்தியுள்ளது கலித்தொகை.

ஏறு தழுவல்போல, எருதுக்கட்டு எனும் மாடு தழுவல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்திருக்கிறது.
நாச்சங்காளை வடம் வெட்டிக் கன
பாய்ச்சல் காட்டும் பரையெல்லாம்
சிம்பும் எருது வடம் தொட்டு இழுத்துக்
கொம்பு பிடித்து விளையாடி
என்றும்,
எருது கட்டினர் குடும்பரே
என்றும் அந்நூல் விவரிக்கிறது.

ஏறு தழுவல் என்பது இன்னொரு வகையில் ஒரு பாவனை விளையாட்டுத்தான். மாடும் மனிதரும் இரு வேறு உயிர்ப்பான உறவுகள். மாடுகளைக் குறித்து மனிதரும், மனிதரைக் குறித்து மாடுகளும் இணக்கத்தோடும் பரிவோடும் புரிந்தே வைத்துள்ளனர். அதனால்தான் இரு தரப்பும் தம் வீரத்தை விளையாட்டாகக் காட்டிக் கொள்கின்றன. வெல்வதும் தோற்பதுமான பாவனைகள் தழுவல்களோடு முடிந்து போகின்றன. அதைத்தான் ஏறு தழுவல் நிகழ்வுகள் போலச் செய்து காட்டுகின்றன. இதனை ஏறு கொள் வென்றி எனச் சுட்டுகின்றது புறப்பொருள் வெண்பா மாலை. இதுபோன்று விலங்குகளோடு தொடர்புடைய விளையாட்டுகளையும் அந்நூல் தெரிவிக்கின்றது.

 கோழி வென்றி , தகர் (கிடாய்) வென்றி , யானை வென்றி, சிவல்(கவுதாரி) வென்றி , கிளி வென்றி , குதிரை வென்றி எனப் பல வகை வென்றிகள் குறித்த விரிவுப் பதிவுகள் அந்நூலில் உண்டு. இவை யாவும் விலங்குகளை விலங்குகளோடு பொருதச்செய்யும் விளையாட்டுக்கள். ஆனால், விலங்கோடு மனிதர் தழுவும் விளையாட்டு மாடு தழுவல் மட்டும் தான்.

வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்காய்த் திகழும் ஏறு தழுவலானது, பயில்முறைத் தேவைக்கான தழுவலாகவும் அமைந்திருப்பதைப் பள்ளு நூல்கள் தெரிவிக்கின்றன .
பூட்டும் காளையை விட்டுப் பூட்டாக் காளையைப்
   பூட்டும் பொழுதிலொரு புல்லைக் காளை
மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி
  முடுக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட
மாட்டுக் குறும்படங்க மறிப்பன் எனவே
  வடிவழகக் குடும்பன் வந்து மறித்தான்.
கோட்டு முனையாலது குத்துமளவில் குடும்பன்
  சற்றே மயக்கம் கொண்டு விழுந்தான்
என உழும் களத்தில் மாடு முட்டுகிற நிகழ்வைக் காட்டுகிறது முக்கூடற் பள்ளு.

காளைகளோடு தழுவிப் பழகியிருந்தால் மட்டுமே - காளைகளைத் தம் வயப்படுத்தும் பயில்முறை தெரிந்திருந்தால் மட்டுமே காளைகளை உழவில் கையாள முடியும். அத்தகைய பயில் முறைகளையும் - பழகு முறைகளையும் நிகழ்த்திப் பார்க்கும் சடங்காகத்தான் மாடு தழுவல் எனும் ஏறு தழுவல் சடங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. இத்தகையத் தழுவல் சடங்கு உழவில் ஈடுபட்ட உழவர்களுக்குப் பெரிதும் பயன் பட்டிருப்பதையும் பள்ளு நூல்கள் சொல்கின்றன.

மாடு முட்டியதால் கீழே விழுந்து கிடந்த பள்ளர், மறுபடியும் காளைகளைத் தம் வயப்படுத்தி ஏரில் பூட்டி உழுததை
பள்ளன் எழுந்து நிலை தரித்தான்- நின்ற
பள்ளியர் முகம் பார்த்துச் சிரித்தான்.
மெள்ளப் புருவம் கோட்டி நெரித்தான் - மாட்டை
மீளவும் பூட்டி உழத் தரித்தான்
என்கிறது முக்கூடற் பள்ளு.  இவ்வாறாக, வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கான மாடு தழுவலைக் குறித்த பதிவுகள் அமைந்திருக்கின்றன.

ஏறு தழுவுதல் மனிதர்க்கும் மாடுக்கும் இடையே நிகழ்கிற ஒரு விளையாட்டு மட்டுமே. இன்னும் சொல்லப்போனால், இது மனிதர்களின் வீரத்தைக் காட்டும் நிகழ்வு அல்ல. இரு தரப்பு வீரத்தையும் தினவையும் தழுவலின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிற - உணர்வைக் கொடுத்துப் பெற்றுக் கொள்கிற பரிமாற்ற விளையாட்டு அவ்வளவே. மனிதர்களைக் காட்டிலும் மாடுகள்தான் வலிமை மிக்கவை; மூர்க்கம் கொண்டவை; துள்ளல் நிறைந்தவை; தினவு மூண்டவை. ஆதலால், காளைகளுக்கே வீரம் மிகுந்திருக்கும். அதனால்தான் மாடு தழுவுதலைக்கூட மஞ்சு விரட்டு என்கின்றனர். மைந்து என்றால் வீரம் என்று பொருள். மாடுகளின் மைந்து விரட்டலே மஞ்சு விரட்டு என்றாயிற்று என்பார் தொ.பரமசிவம்.

 முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும், மருத நிலத்து மக்களின் வேளாண் தொழில் உற்பத்தியோடும், பாலை நிலத்து மக்களின் தேவையின் பொருட்டு உருவான தன்னுறு தொழிலோடும் மாடுகள் பிணைந்து கிடக்கின்றன. இவ்வாறு, மூவகைப்பட்ட தொழில்சார் சமூகத்தினரும் மாடுகளைப் பயன்படுத்தி, மாடுகளோடு தொழிற்பட்டு, மாடுகளைச் செல்வமாகக் கொண்டு வாழ்ந்ததால் ஏறு தழுவுதலும் இயல்பாகத் தோன்றி வளர்ந்தது என்பார் இ.பேச்சிமுத்து .

ஆக, மாடு தழுவல் என்பதும் - அதன் நோக்கம் என்பதும்  மனித வீரத்தை நிலை நாட்டுவதற்கல்ல; மாறாக, வேளாண் உற்பத்தியின் ஒரு நிகழ்த்துச் சடங்கு  மட்டுமே என வரையறுக்கலாம். அச் சடங்கும் விளையாட்டும்தான் ஏறு தழுவல் எனும் மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாடாய் நீட்சி அடைந்து வந்திருக்கிறது.

கூடவே, இந்நிகழ்த்துச் சடங்கு, வேளாண்மையோடு நேரடி உழைப்பில் ஈடுபட்டு வந்திருக்கும் உழுதுண்ட உழவுக் குடிகளின் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளம் எனவும் வரையறுக்கலாம்.

குறிப்பாக, சிறு மற்றும் குறு அளவிலான நிலத்தோடு  உழைப்பில் உறவாடிக் கிடந்த உழவுக்குடிகள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஏனைத் தொழில் குடிகளின் பண்பாட்டுக் கண்ணியாகவும் அது அமைந்திருக்கிறது எனலாம்.

மாடுகளும் அவற்றின் பக்கத்துணையால் நடைபெற்ற வேளாண்மைத் தொழில் உற்பத்தியும்தான் மனித சமூகத்தின் ஒட்டு மொத்த உணவுத் தேவையையும் நிறைவு செய்தன. அதேவேளையில், வேளாண்மை உற்பத்திதான் உபரிச் செல்வத்தை அதிகளவில் தந்திருக்கிறது. இந்த உபரிச் செல்வம்தான் சொத்துடைமையை உருவாக்கியிருக்கிறது. சொத்துடைமை வளர்ச்சியே அரசுகளையும் அதிகாரங்களையும் உருவாக்கியிருக்கிறது.

வேளாண்மை உற்பத்தி நிலமே சொத்துடைமை உருவாக்கும் களம் என்பதாலேயே, நிலத்தின் மீது உரிமையும் அதிகாரமும் வெளிப்படுத்துகிற நிலவுடைமைப் போக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலவுடைமையை அடிப்படையாக வைத்துத்தான் அரச உருவாக்கமும் அதன் தொழிற்பாடுகளும் செயலாற்றி வந்துள்ளன.

உழைக்கும் வர்க்கம் ஒரு புறமும், உடைமை வர்க்கம் இன்னொரு புறமுமாக வலுவடைந்து உருவானதும் வேளாண்மை உற்பத்திக் களத்தில்தான். நிலத்தின் மீது உழைப்பைச் செலுத்திய பெருந்திரள் மக்கள் கூட்டத்தினர் பெரும்பாலும் உடைமை இழந்தும், உழைப்பே செலுத்தாத சிறு பிரிவினர் உடைமையைத் தமதாக்கியும் கொண்டு இரு வேறு வர்க்க வாழ்நிலை மற்றும் பொருளியல் நிலை உருவானதன் பின்புலம் குறித்து எங்கெல்சு விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான உழைக்கும் மக்கள் கூட்டமானது, அவர் தம் இன்றியமையாத உழைப்பில் முழுக்கவனம் செலுத்தி வருங்கால், அவர்களுக்கு உழைப்பின் தன்மை, அரசு விவகாரங்கள், சட்டப் பிரச்சினைகள், கலை, அறிவியல் போன்ற சமூகத்தின் பொதுவான விவகாரங்களைக் கவனிக்க நேரமில்லாமல் போகிறது. இத்தகைய நிலையில், ஒரு தனி வர்க்கம் தன்னை உழைப்பிலிருந்து முழுமையாக விடுவித்துக் கொண்டு மேற்கண்ட விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையைத் தனதாக்கிக் கொள்கிறது. அத்துடன், தன்னுடைய சொந்த நலனுக்காக உழைக்கும் கூட்டத்தின் மீது மேலும் மேலும் உழைப்புச் சுமையைத் திணிக்கிறது.

எங்கெல்சின் இக்கூற்றை நிலவுடைமைச் சமூக உருவாக்கப் பின்புலத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். இதன் அடிப்படையில்தான், நிலத்தின் மீது காலங்காலமாக உழைப்பைச் செலுத்தி வரும் உழவுக் குடிகள், வேளாண்மைத் தொழிலின் அத்துனை நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருந்தாலும், காலங்காலமாக உழைக்கும் உழுகுடிகளாகவே உழன்று வந்திருக்கின்றனர். அதனால்தான், வெயில் மழை பாராது வேளாண் தொழிலில் நேரடி உழைப்பில் ஈடுபட்டுக் கருத்துப் போன உழவுக்குடிகளைக் காராளர், கரையாளர், கருங்களமர், கருங்கை வினைஞர் என்றெல்லாம் கரிய நிறத்து மனிதர்களாக அடையாளப்படுத்துகின்றன தமிழ் இலக்கியங்கள்

அதே வேளையில், நிலத்திற்கும் உழைப்பிற்கும் துளியளவும் தொடர்பில்லாதவர்கள் உடைமையைக் காலந்தோறும் குவித்துக் கொண்டே வந்துள்ளனர்.வேளாண்மையை விளைவிக்கும் கரு நிறத்து உழவுக்குடிகளே மெய்யான வேளாளர்கள் ஆவார்கள் என்றும், இத்தகைய உழைப்பின் வலிமையும் ஏர்க்கள வலிமையும் மிகுந்த உழவுக் குடிகளே மள்ளர் என்றும் பாவாணர் அடையாளப்படுத்துகிறார்.

நிலவுடைமைச் சமூக உருவாக்கத்தில் வேளாண்மை உற்பத்தியே அதன் பொருளியல் அடித்தளமாக இருந்தது. சிறு மற்றும் குறு அளவிலான நிலங்களில் உழைப்பைச் செலுத்தி உழுது விளைவிக்கும் உணவு உற்பத்தியானது தாம் சார்ந்த குடும்பத்து மனிதர்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதோடு, தாம் வாழ்கிற இச் சமூகத்து மனிதர்களின் உணவுத் தேவையையும் நிறைவு செய்கிறது என்பதில் நிறைவடைந்து போயிருக்கிறார்கள் உழவுக் குடிகள்.

பசித் துயர் போக்கும் பண்பையே பண்பாடாய்க் கொண்டிருந்த உழவுக் குடிகள், நிலத்தின் மீதான குறைந்தளவு உரிமையைக்கூடத் தக்க வைப்பதில் தோல்வியே அடைந்திருக்கிறார்கள். அல்லும் பகலும் நிலத்திலே உழன்று கிடந்த உழவர்களின் நிலம், அதிகாரம் சார்ந்தவர்களுக்குக் கைமாறிய போதும் வெள்ளந்தியாய் உழைத்தே கிடந்திருக்கிறார்கள். தமிழ்ச் சமூக நெடிய வரலாற்றின் பக்கங்கள் இதைத்தான் சொல்கின்றன.

நிலவுடைமைக் காலத்தில் நிலத்தின் வருவாயே அரசுகளின் பொருளியல் கருவூலமாகக் கருதப்பட்டது. ஆகவே, நிலத்தின் உரிமையும் அரசுகளின் உரிமையாக ஆக்கப்பட்டன. நிலத்தின் மீது விளைவிக்கும் உற்பத்தியின் பெரும் பங்கை அரசுகளுக்குக் கட்டாயமாகக் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறைகள் அரச அதிகாரத்தின் விதிகளாகப் பின்பற்றப்பட்டுள்ளன. இத்தகையப் பொருளியல் குவிப்பு, அரசுகளை நோக்கி இருந்ததால் உருவான எதிர்ப்புகளைத் திசை மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டவைதான் பெருங்கோயில்கள் .

நிறுவனப்படுத்தப்பட்ட பெருங்கோயில்கள் வாயிலாகவே நிலத்தின் உரிமையும் வருவாயும் குவிக்கப்பட்டன. இறைவரி போன்ற பல்வேறு வரிகள் மூலமாகப் பொருளியல் வளம் குவிக்கப்பட்டுள்ளது. காணி வரி செலுத்தாத, செலுத்த இயலாத, செலுத்த மறுத்தவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுக் கோவில்களுக்கு உரிமையாக்கப்பட்டன. தேவதானம், பள்ளிச் சந்தம், இறையடிப் பாட்டம் போன்றவை எல்லாம் வேளாண் விளை நிலங்கள் கோவில்களுக்குச் சொந்தமானவை எனக் காட்டுகின்றன. ஆக, நிலவுடைமைப் பொருளியல் கோவில்கள் சார்ந்தும், கோவில்கள் மீதான அதிகாரம் அரசுகளைச் சார்ந்தும் இருப்பதான நிலைமைகளே நெடுங்காலமாய் இருந்து வந்துள்ளன.

இது போக, அரச அதிகாரச் சேவகர்களுக்கும்  நலம் விரும்பிகளுக்கும் பெருமளவிலான  வேளாண் நிலங்கள் தானம் எனும் பெயரில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலங்கள் யாவும், உழவுக் குடிகளிடமிருந்த கையூண்டு நிலங்களே ஆகும்.

 பார்ப்பனியத்தின் நுழைவாலும் சூழ்ச்சியாலும் தமிழ் நிலமும் வாழ்வும் மொழியும் பண்பாடும் பொருளியலும் சீர்குலைந்து சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டன. இதற்குத் தமிழ் நிலத்து அரசுகளும் துணை போயிருக்கின்றன. இதைக் குறித்துப் பேசும் பாவாணர், வரலாற்று அறிவும் அறிவியல் ஆராய்ச்சியும் உரிமை உணர்ச்சியும் விடுதலைக் கிளர்ச்சியும் இம்மியும் இல்லாத பண்டைக் காலத்தில், பழங்குடிப் பேதைமையும் மதவெறியும் கொடை மடமும் இயல்பாகக் கொண்ட மூவேந்தரும், வெண்ணிறத்தோடும் வெடிப்பொலி மிக்க வேத மொழியோடும் வடக்கிருந்து வந்து, தம்மை நிலத்தேவர் என்றும், தம் சிறு தெய்வ வழுத்து மொழியைத் தேவ மொழி என்றும், தமிழ்த் தெய்வங்களை ஆரியத் தெய்வங்கள் என்றும் ஏமாற்றிய ஆரியப் பூசாரியரை முற்றிலும் நம்பி அவருக்கு அடிமைப்பட்டுப் போனதினால், மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி எனும் பழமொழிக்கிணங்க, அவர் குடிகளான தமிழரும் அவரைப் பின்பற்றி, கடந்த மூவாயிரம் ஆண்டாக ஆரிய அடிமைத்தனத்தில் முற்றும் முழுகி விட்டனர் என்பார். 

நிலவுடைமை அரசதிகாரத்தின் பெரும் பொருளியல் பார்ப்பனிய வைதீகச் சடங்குகளுக்கும் பார்ப்பனர்களுக்குமே அதிகளவில் செலவிடப்பட்டிருக்கிறது. நான்கு வேதங்களில் கூறப்பட்டவாறு செய்யப்பட்ட யாகங்களுக்குப் பெருங்கொடை அளித்த காரணத்தாலேயே பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி என்பான், பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்றே அழைக்கப்பட்டிருக்கிறான்.
நற்பனுவல் நால்வேதத் தருஞ் சீர்த்திப்
பெருங்கண்ணுறை நெய்ம்மலி ஆவுதி பொங்கப்
பன்மாண் வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பலகொள்
என, புறநானூற்றில் நெட்டிமையார் அவனைக் குறித்துப் பாடியுள்ளார்.

முதுகுடுமிப் பெருவழுதியின் அரசதிகாரம் பார்ப்பனியத்திற்குப் பணிந்து கிடந்ததை
இறைஞ்சுக பெரும நின் சென்னி
சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கைஎதிரே
எனக் காரிக்கிழார் பாடல் புறநானூற்றில் காட்டுகின்றது.

ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், வார்த்திகன் எனும் ஆரியப் பார்ப்பனரின் சினம் தணிந்திட அப் பார்ப்பனரின் கால்களில் விழுந்து தங்காலூரையும் வயலூரையும் தானமாகக் கொடுத்திருக்கிறான். அவனது இழிசெயலை
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள்
தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே
எனச் சிலப்பதிகாரம் சுட்டியுள்ளது.

வேதங்களைத் தெரிந்து வைத்திருந்த வைதீகப் பார்ப்பனர்கள் செல்வாக்குடனும் செல்வத்துடனும் திகழ்ந்துள்ளனர். இதனைப் பல கல்வெட்டுச் செய்திகள் எடுத்துரைக்கின்றன. வேளாண்மை விளைவிக்கும் விளை நிலங்களே பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, செழிப்புமிக்க வேளாண் பகுதிகளை ஒட்டியே பார்ப்பனக் குடியேற்றங்களும் நடைபெற்றிருக்கின்றன.

 வேளாண்மை மிகுந்த வயல்வெளிகளைக் கொண்ட மருத நிலத்து ஊர்களைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களுள் ஒன்று அகரம் என்பதாகும். இத்தகைய அகரங்களில் பார்ப்பனர்கள் குடியேற்றப்படுவது அகரமேற்றுதல் எனப்பட்டிருக்கிறது. இத்தகைய அகரத்தையே அக்ரகாரம் என மாற்றியமைத்துக் கொண்டனர் பார்ப்பனர்கள்.

இப் பார்ப்பனக் குடியேற்றப் பகுதிகளையே அகப்பிரதேயம், ஏகபோகப்பிரமதேயம், பிரமதேயம், மங்களம், சதுர்வேதி மங்கலம், தேவதானப் பிரதேயம் எனப் பல பெயர்களில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.  மணலூரில் இருந்த குலசேகர பாண்டியன், அகரமேற்ற நினைந்து சாகேதபுரி என்ற இடத்திலிருந்து பிராமணர் ஈராயிரத்து எண்மரை மதுரை மாவட்டத்தைச் சார்ந்த வேம்பத்தூருக்கு வரவழைத்து, ஒவ்வொருவருக்கும் நிலமும் மனையும் வழங்கினதினால், அவ்வூர் குலசேகரச் சதுர்வேதி மங்கலம் எனப் பெயர் பெற்றது. இதை,
தனக்கொரு பத்தேழு கலிக்கொரு பத்தாறு
புனக்குடுமிக் கோமான் புதல்வன் - மனக்கினிய
தென்னிம்பை ஊரதனைச் சீர் மறையோருக்கு அளித்தான்
கன்னன் குல சேகரன்
என்னும் பழைய வெண்பா தெரிவிக்கிறது.

கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வரகுண பாண்டியன் பார்ப்பனர்களை அகரமேற்றியதை
பொன் திகழ்தரு விமானப் புரிசைசெய்து அகரமேற்றி
 நன்றி கொள் தேவதானம் நல்கியாங்கு
எனத் திருவிளையாடல் புராணம் கூறுகின்றது. முதலாம் இராசராசன் காலத்திலும் இராசராசச் சதுர்வேதி மங்கலம் எனும் அகரம் ஏற்றப்பட்டுள்ளது.

கி.பி 9ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதிகளில் ஆட்சி புரிந்திட்ட அனைத்து மன்னர்களும்  அனைத்து வகைப் பார்ப்பனர்களுக்கும் நிலம் உள்ளிட்ட பலவகைத் தானங்களைக் கொடுத்து வந்துள்ளனர்.  இதில் விதிவிலக்காய் எவரும் இருக்கவில்லை. 

 இவ்வாறாக, நிலத்தில் உழைப்பைச் செலுத்தி வந்த உழவுக் குடிகளின் வேளாண் விளை நிலங்கள் யாவும் பறிக்கப்பட்டுக் கோயில்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் சொந்தமாக்கப்பட்டன. அந்நிலங்கள் மீதான கண்காணிப்பு உரிமையும் நேரடி உரிமையும் உழைப்பில் ஈடுபடாத உயர்த்திக் கொண்ட சாதிகளுக்கும், பார்ப்பனிய மற்றும் அரச அதிகாரங்களுக்குத் தொண்டூழியம் புரிந்தவர்களுக்கே வழங்கப்பட்டன.

உற்பத்திப் பற்றாக்குறை, வறட்சி, வரி விதிப்பு, நிலவுரிமைப் பறிப்பு போன்றவற்றால் உழவுக் குடிகள் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.  இதனைக் கடுமையாக எதிர்க்கவும் செய்தனர்.
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயிலென்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கிலென்
பகரு ஞானி பகலூண் பலத்துக்கு
 நிகரிலை என்பது நிச்சயம் தானே.

ஆறிடும் வேள்வி அவிகொளும் நூலவர்
கூறிடும் விப்பிரர் கோடி பேர் உண்பதில்
நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே
என, மூவேந்தரும் அடிக்கடி அகரமேற்றியதைத் திருமந்திரத்தின் வாயிலாகக் கண்டிக்கிறார் திருமூலர்.

இது போன்ற எதிர்ப்பு உழவுக்குடிகளிடமிருந்தும் வெளிப்பட்டிருக்கிறது. நிலப்பறிப்புக்கு எதிராகவும் வாழ்வியல் நெருக்கடிகளுக்கு எதிராகவும் உழவுக் குடிகள் கிளர்ச்சி செய்து போராடியுள்ளனர். கி.பி 12ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் கி.பி 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் உழவுக் குடிகள் கலகம் செய்திட்ட குறிப்புகள் கல்வெட்டுகள் வாயிலாகக் கிடைத்துள்ளன. இதைக் குறித்து ஆ.துளசேந்திரன் கூறும்போது, உழுகுடிகளிடையே அதிருப்தி நிலை ஏற்படுகின்றது. நாங்கள் நிலங்களை உழமாட்டோம் என்கிறார்கள். நிலக்கிழார்கள் தாங்களே நிலத்தை உழுது பயிரிட முடியாது. ஆகையால், உழுகுடிகளுக்குப் பரிந்து வருகிறார்கள். பல இடங்களில் கூட்டங்கள் போடுகிறார்கள். பிராமண சபையார்கள் ஒருபுறம், வேளாண் நாட்டார் ஒரு புறம் பல இடங்களில் கூடிப் பேசுகிறார்கள். உழுகுடிகளை அழைத்து உங்களுக்கு வரி நீக்கு நன்மைகள் செய்து தருகிறோம். வரிகளைக் குறைக்கிறோம் என்று சமாதானம் பேசி வருகிறார்கள். பிரச்சினை தீரவில்லை. ஏனெனில், பல கல்வெட்டுகளில் இவை திரும்பத் திரும்ப வருகின்றன என்கிறார்.

 பொதுவாக, நிலவுடைமைச் சமூகத்தில் இரண்டு அடிப்படை முரண்பாடுகளைக் காணலாம் என்கிறார் கோ.கேசவன். ஒன்று, நிலவுடைமைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு. இரண்டாவது, நிலவுடைமையாளர்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடு. முதல் வகைப்பட்ட முரண்பாடுகள் பெரிதும் முற்றி, கலகங்களாக வெடித்த சம்பவங்களைப் பற்றி நமக்குச் சரியானதும் முழுமையானதுமான ஆவணங்கள் இல்லை. எனினும், பிற்காலச் சோழர் காலத்தில் நடந்த சில விவசாயக் கலகங்களின் மூலமாக இந்த வகை முரண்பாட்டை விளங்கிக் கொள்ளலாம் என்பார் அவர். அவ்வகையில், மே.து. இராசுகுமார் எழுதிய சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் எனும் நூல் இதைக்குறித்து மிக விரிவாகவே தரவுகளை முன் வைத்திருக்கிறது.

நிலங்கள் யாவும் கோவில் நிறுவனங்களுக்கு உரிமையாக்கப்பட்டு வந்த சூழலில், கோவிலுக்காக நிலமிழந்த உழவர்கள், வேறு வழியின்றி யாவற்றையும் ஏற்க வேண்டியதாயிற்று. அத்துடன், உழுகுடிகளாக அவர்கள் கோயிலுக்குத் தரவேண்டியிருந்த பங்களவான மேல்வாரம் மிகுதியாகவே இருந்தது. இந்த அளவு மேலும் மிகுதியாக்கப்பட்டது. அந்த நிலங்களில் உற்பத்திக்காக உழுகுடியினரின் இல்லத்தினர் பாடுபட்ட உழைப்பின் ஊதியத்தைக்கூட அவர்களால் பெறமுடியவில்லை. மேல்வாரத்தைத் தரமுடியாத நிலை ஏற்பட்டபோது, அவர்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு உழுகுடிகள் அமர்த்தப்பட்டார்கள். மேல்வாரம் கொடுக்க முடியாத உழுகுடியினர், நில உடைமையாளர்களுக்கு அஞ்சி ஊரைவிட்டே ஓடவேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆனால், இவற்றையெல்லாம் உடைமைப் பிரிவினர் பொருட்படுத்தவில்லை. கோவிலின் பெயரிலும், இறைவன் பெயரிலும் தங்கள் நெருக்குதல்களைத் தொடர்ந்தனர். கோயிலை முன் எடுத்துக்காட்டாகக் கொண்டு, நில உறவுகள் தொடர்பான பல முறைமைகளை உருவாக்கிக் கொண்டனர். 

வழிமுறையாகப் பயிரிட்டு வந்த நிலங்களிலிருந்து உழவர்கள் வெளியேற்றப்பட்டமையாலும், உழுகுடிகள் மேல்வாரமாக மிகு அளவில் நில உற்பத்தியைக் கொடுக்க வேண்டி இருந்ததாலும், பல்வேறு மிகு வரிகளைச் செலுத்த இயலாமல் கீழ்நிலைப் பிரிவினர் துயர் உற்றதாலும் ஏற்பட்ட போராட்ட உணர்வுகள் அவ்வப்போது வெடித்தன. இவை வரி கொடுக்க மறுத்தல், குத்தகையான மேல்வாரத்தைத் தர மறுத்தல், வரி எதிர்ப்புக் குரல் கொடுத்தல், மன்னனிடம் முறையிடல், முடியாத நிலையில்  ஊரைவிட்டு வெளியேறுதல் என்ற பல வடிவங்களில் இவை இருந்தாலும், இயக்கமாகத் திட்டமிட்டு இயங்க இயலாமையாலும், வல்லமை கொண்ட உடைமைப் பிரிவினரை எதிர்கொள்ள முடியாமையாலும் இவை யாவும் எதிர்ப்புக் குரல்களாக மட்டுமே முடங்கி விட்டன என அக்காலத்திய நிலவுடைமைச் சமூகச் சூழலை விவரித்துள்ளார் மே.து.இராசுகுமார்.

பெரும் அளவிலான நில உடைமையாளர்களுக்கும் சிறு குறு அளவிலான நிலம் வைத்திருந்த உழவுக்குடிகளுக்குமான முரண்பாடு பிற்காலத்திலும் தொடர்ந்து நிலவியிருக்கிறது. சேர சோழ பாண்டியர்கள் தமிழ் நிலத்தை ஆண்ட போதும் இதே நிலைதான். தமிழர் அல்லாத வேற்றினத்தவர் ஆண்ட போதும் இதே நிலைதான்.

கி.பி 14ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 18ஆம் நூற்றாண்டுவரை நிலையான வலுவான ஆட்சி அதிகாரம் இருக்கவில்லை. இச்சூழல் குறித்து க.இராசய்யன் கூறும்போது, 14ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இருந்தே, அராஜகமும் சீர்குலைவும் மிகக் கடுமளவில் நாட்டைக் கவ்விப் பிடித்தன. இதற்கு முன் அமைதியோடும் வளத்தோடும் நாட்டை ஆண்ட பாண்டிய சோழ அரசுகள்.. அரசியல் சக்திகள் எனும் வகையில் காலாவதியாகி விட்டன. அவைகளின் இடத்தில் அந்நிய சக்திகள் பலம் பெறலாயின. வேளாண்மை, பொருள் உற்பத்தி, வணிகம் இவை தேக்கமுற்றன. இவற்றோடு சேர்ந்து பொருளாதார வளம், பண்பாட்டு மேம்பாடு, அரசியல் அமைதி ஆகிய அனைத்தும் சீர்குலைந்தன என்பார். 

 இந்நிலையில், தொடர்ச்சியான படையெடுப்புகளும் அதிகார மாற்றங்களும் பண்பாட்டுத் திணிப்புகளும் மொழி மேலாதிக்கமும் மாறி மாறி நடை பெற்றுக் கொண்டிருந்த சமூகக் காலகட்டங்களில் வேளாண் உழைப்பு மற்றும் உழுகுடிகளின் நில உரிமைக்கான கலகம் தீவிரம் அடையாமல் போயிருக்க வேண்டும் அல்லது அக் கலகம் வேறு விதத்தில் ஒடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

கி.பி 16ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசின் அதிகாரம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட போதும், உழவுக்குடிகளிடமிருந்த நிலங்கள் பறிக்கப்படுவது தொடர்ந்திருக்கிறது. தெலுங்கின வேளாண் குடிகள் அதிகளவில் வரவழைக்கப்பட்டு, இங்கிருந்த தமிழ் உழவுக் குடிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேலும், தெலுங்கின அரசதிகாரத்தோடு ஒத்திசைந்தும் இணங்கியும் உடன்பட்டும் பங்காற்றிய இடைநிலைச் சாதிகளுக்கும் நிலங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. நிலத்தின் மீதான உரிமை உழவுக் குடிகளிடமிருந்து பறிக்கப்பட்ட செய்திகளைப் பல வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதைக் குறித்து மண்ணுரிமை நூலில் மிக விரிவாகவே விளக்கியிருக்கிறார் குணா.

தெலுங்கின அதிகாரக் காலகட்டத்தில் பெருமளவில் புனையப்பட்ட பள்ளு நூல்களும்கூட இத்தகைய நிலவுரிமைப் பறிப்புகள் குறித்துப் பூடகமாய் வெளிப்படுத்தி உள்ளன. இது பற்றி எடுத்துரைக்கும் சு.வேங்கடராமன், நிலங்கள் ஒரு காலம் வரையிலும் உழைப்பாளிகளாகவும், உழுதொழில் முதன்மையாளர்களாகவும், தொழில்நுட்பம் அனைத்தும் அறிந்தவர்களாகவும் உள்ள மள்ளர் மக்களிடம் இருந்தன. ஆட்சி மாற்றம் - வேற்றுப்புல - அயலார் படையெடுப்புக் காரணங்களால் நிலவுடைமை இழந்திருக்க வேண்டும் என்பார்.

மருதப்பர் கொழு நானூறும் மாணிக்க
  வாசகன் கிட்ட வாங்கியே கொண்டார்
விருதுக்கே காரைக் காட்டார் வழக்கிட்டு
  மேழி சேர முன் வேண்டிக் கொண்டார்கள்
என்கிறது முக்கூடற் பள்ளு. காரைக் காட்டார் எனப்படும் வெள்ளாளர்கள் வழக்கிட்டு, கொடியாக (விருதாக) மேழியைப் பெற்றுக் கொண்டனர் என்பது பாட்டின் பொருள். வென்றவர் தம் ஆதிக்க வெற்றியைப் பறைசாற்ற மேழியை - கலப்பையை உழவு செய்பவர்களிடமிருந்து பெற்று கொடியாக (விருது) ஆக்கினர். இதிலும் ஓர் இனத்தார் மற்றவர்களிடமிருந்து அடிப்படையான உழவுச் கருவிகளைப் பெற்ற - நிலங்களைப் பறித்த வரலாறு மறைந்து உள்ளது என விளக்கமளிக்கிறார் சு.வேங்கடராமன்.

நிலப்பறிப்பு - ஏர்க்கலப்பைப் பறிப்பு குறித்து வேறு பள்ளு நூல்களும் புலப்படுத்தி உள்ளன.
கலப்பை யாவும் வணிகர் கைக்கொண்டார்
காணுங்காலை நகைப்பையா வென்பார்
என்கிறது பொய்கைப் பள்ளு. கலப்பை யாவையும் வணிகர் பறித்துக் கொண்டனர். அவரைக் காணும் போது நகைத்துக் கொள்வர் என்பது அப்பாடலின் பொருள். நிலத்திற்கும் உழைப்பிற்கும் தொடர்பில்லாத வெள்ளாளர்களே நிலத்தைப் பறித்து வேளாளராகத் தகுதியேற்றம் செய்து கொண்டதை வெளிப்படையாகவே பேசுகிறது செங்கோட்டுப் பள்ளு. மேழியை விந்தையாகிய வேளாளர்
எங்கள் விருதென்றே கொண்டு போனார்
என்று கூறுகிறது. இதே கருத்தை
மேழியை இப்புவி நாட்டுக் கங்கைக் குலத்தார் கொண்டு போனார்
 எனத் தெரிவிக்கிறது திருவேட்டை அய்யனார் பள்ளு.

நிலவுடைமைச் சமூகத்தின் கொடுங்கோன்மை அளவுக்கதிகமாகத் தாண்டவமாடிய சமூகச் சூழலைக் குறித்த மூர்லாண்டு கருத்து இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

மக்களை இவ்வாறு கொடுமைப்படுத்திய செயலின் விளைவாக மக்கள் தம் குறைந்தபட்ச ஆதாரத் தேவைகள்கூட இன்றித் தவித்தனர். மக்களுக்குப் பயன் தரும் விதத்தில் ஆட்சி செய்யும் வலிமை மிக்க ஆட்சியாளர் இல்லாததன் காரணமாக மக்களுக்கு அமைதியான நல்வாழ்வு என்பதே இல்லாமல் போயிற்று. அரசன் பாளையக்காரன் நிலப்பிரபு ஆகியோரின் தேவையும் பேராசையும் விவசாயத்தை மிகவும் பாதித்தது. விவசாயிகளின் கலகங்களுக்கோ வெளியேறுதலுக்கோ அடிகோலின.

 கி.பி 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென்னிந்தியா முழுவதும் அன்றைய காலத்திய நிர்வாக அமைப்பின் காரணமாக மக்கள் வறுமை நிலையில் வாழ்வதற்கோ அல்லது கலகங்கள் புரிவதற்கோ தள்ளப்பட்டனர் என்கிற மூர்லாண்டின் கருத்தைத் தமிழ் நாட்டுத் தமிழ் உழவுக் குடிகளின் சமூக வாழ் நிலைமைகளோடும் பொருத்திக் காணலாம்.

வேளாண் தொழிலில் ஈடுபட்டு வந்த உழவுக்குடிகளின் ஒரு தரப்பினர், நிலத்திலிருந்து வெளியேறி வேறு புலம் தேடியும் தொழில் தேடியும் இடம் பெயர்ந்து போயுள்ளனர். இத்தகைய நெருக்கடிகளின் உச்சநிலையில்தான், உழவுக்குடிகளில் பல தரப்பினர் தங்களைத் தாங்களே அடிமைகளாக விற்கத்தொடங்கிய அவலங்களும் நடந்துள்ளன. தாங்களாகவே முன்வந்து ஆளோலை என்னும் அடிமை முறியை எழுதிக் கொடுத்துவிட்டுக் கொத்தடிமைகளாகவும் ஆகியுள்ளனர். இம்மாதிரியான நிகழ்வுகளைக் குறித்துத் தமிழகத்தில் அடிமை முறை எனும் நூலில் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார் ஆ.சிவசுப்பிரமணியன்.

இது ஒருபுறமிருந்தாலும், நிலத்தோடும் உழைப்போடும் இணைந்தும் பிணைந்தும் கிடந்த உழவுக் குடிகள் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாவதும், உழைப்பைச் செலுத்தாத மற்ற தரப்பினர் அல்லது சாதியினர் உடைமை கொண்டு உண்டு வாழ்வதுமான சமூக நிலைமைகளைக் கண்ட உழவுக் குடிகள் கிளர்ந்து எழுந்திருக்க வேண்டும்.

                       
நிலத்தின் மீதான தொழில் திறமை நிரம்பப் பெற்ற - எஞ்சியிருந்த சிறு மற்றும் குறு அளவிலான கையூண்டு நிலங்களை வைத்திருந்த உழவுக் குடிகள் அந்நிலத்தில் இருந்தபடியே கிளர்ச்சியும் கலகமும் செய்திருக்கின்றனர். இந்நிலையில்தான், உழவுக் குடிகளின் நிலவுரிமை சார்ந்த கலக உணர்வைப் பல வழிமுறைகளில் ஒடுக்கியுள்ளன நிலவுடைமை அதிகார நிறுவனங்கள்.

 ஆட்சியாளர்கள், உடைமையாளர்கள், உயர்த்திக் கொண்ட சாதியினர் போன்றோரின் கூட்டுறவாலே பெரும்பாலான அதிகார நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய அதிகார நிறுவனங்கள் வன்முறையைப் பயன்படுத்தியே உழைக்கும் வர்க்கத்தின் கலகத்தையும் கிளர்ச்சியையும் ஒடுக்கித் தமது அதிகார மேலாண்மையை நிலை நாட்டி வந்துள்ளன.

அரண்மனைகள், கோயில்கள், படைகள், நிருவாக அமைப்புகள், காவல் துறை, இராணுவம், வருவாய்த்துறை, நீதித்துறை, சட்ட மன்றங்கள், பாராளுமன்றம் போன்ற வடிவங்கள் யாவும் அதிகாரத்தின் வன்முறை முகங்களாகத்தான் இருந்திருக்கின்றன. இத்தகைய அதிகார அமைப்புகள் வாயிலாகவே உழைக்கும் குடிகள் ஒடுக்கப்பட்டு வந்துள்ளன. உழவுக் குடிகளின் கலகமும் கிளர்ச்சியும்கூட இவ்வாறே ஒடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

 ஆயினும், ஏதோ ஒரு வகையிலான வன்முறை வடிவிலான ஒடுக்குமுறைகள் நெடுங்காலத்திற்கு நீடித்திருக்கவில்லை. அப்படி நீடித்திருக்கவும் வாய்ப்பில்லை. அவ்வகையான ஒடுக்குமுறை தற்காலிகமாகவே இருந்திருக்கிறது. உழவுக்குடிகளின் கலகமும் கிளர்ச்சியும் அடுத்தடுத்துத் தொடங்கி வந்திருந்த காரணத்தால், வன்முறை மட்டுமல்லாது பண்பாட்டு வகையிலான ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்தி வந்துள்ளன அதிகார நிறுவனங்கள்.

உழவுக் குடிகளின் வாழ்நிலையிலிருந்து தோன்றிய கோப உணர்ச்சிகளான கலக எண்ணங்களையும் வெளியேறுதல் நடவடிக்கைகளையும் மெல்ல மெல்ல நீர்த்துப் போகச் செய்யும் பண்பாட்டு ஏமாற்றுதல் முறைகள் மிகத் தீவிரமாக உருவாக்கப்பட்டன. அந்தவகையில் புனையப்பட்ட இலக்கியங்கள்தான் பள்ளு நூல்கள்.

உழவுக் குடிகளையும் உழவுத் தொழிலையும் உயர்த்திப் போற்றுவது போல் பேசப்பட்டு அவர்களின் வாழ் நிலை , பண்பாட்டு அடையாளங்கள் போன்றவை இழிவு செய்யப்பட்டன. உழவுக் குடிகளின் வாழ்வையும் இருப்பையும் பண்பாட்டையும் மேலும் மேலும் தரவிறக்கம் செய்யும் நோக்கில்தான் பள்ளேசல்களாக அவை பாடப்பட்டும் ஊர் ஊராய் நிகழ்த்தப்பட்டும் வந்துள்ளன. வன்முறைக்கு மட்டுமல்ல, பண்பாட்டு ஏமாற்றுதலுக்கும் உழவுக் குடிகள் உள்ளானதைப் பள்ளு நூல்களுமே தெரிவித்துள்ளன.

ஒடுக்குமுறை என்பது மேற்கண்ட வழிமுறைகளில் மட்டும் நடைபெற்றிருக்க முடியாது. பண்பாட்டு மேலாதிக்கத்தின் வாயிலாகவும் இவ்வகைப்பட்ட ஒடுக்குமுறை நீளவும் செய்திருக்கிறது. இவ்வகைப்பட்ட ஒடுக்குமுறை குறித்து அந்தோணியா கிராம்சி கூறும்போது, மேட்டிமையாளர்களின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளும் சமூக ஒப்புதலை அடித்தள மக்களிடமிருந்து பெற்றுக் கொள்வதன் வாயிலாகவும் மேலாண்மை நிலைநாட்டப்படுகிறது. இச்சமூக ஒப்புதலைப் பெறும் முக்கிய வழிமுறையாகப் பண்பாட்டு மேலாண்மை அமைகிறது என விளக்கப்படுத்துவார்.

 பண்பாடு மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் போன்றவற்றால் நிலை நிறுத்தப்பட்ட சமூக ஒப்புதல் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது. உடைமை ஆளும் வர்க்கத்தினருக்கான சமூக மேலாண்மைக்கான சமூக ஒப்புதலைப் பண்பாட்டு மேலாண்மையின் வாயிலாகப் பெற்று விடுவதைப் பொருளியல் அல்லாத சுரண்டல் முறை எனக் காரல் மார்க்சு குறிப்பிடுகிறார்.

 இத்தகையப் பண்பாட்டு மேலாதிக்கமானது உழைக்கும் மக்களது பண்பாட்டு அடையாளங்களை மறுத்தும், உழைக்கும் மக்களது உயிர்ப்பான பண்பாட்டு அடையாளங்களை நீர்த்துப் போகச் செய்தும், இழிவான பண்பாட்டு அடையாளங்களை அவர்களுக்கு வழங்கியும், வழக்கிலிருக்கும் உழைக்கும் மக்களது பண்பாட்டு அடையாளங்கள் பலவற்றைத் தம் வயப்படுத்தியும், தமக்குரிய அதிகாரப் பண்பாட்டை உழைக்கும் மக்கள் மீது திணித்தும் நிலை நாட்டி வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை சார்ந்த உற்பத்தியில் காலங்காலமாக உழைத்து வந்திட்ட உழவுக்குடிகளின் பண்பாட்டு அடையாளங்களும் அதிகாரப் பண்பாட்டு மேலாண்மையின் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகியே வந்துள்ளன.

வேளாண் உற்பத்தி சார்ந்த உழவுக்குடிகளின் உயிர்ப்பான பண்பாட்டு அடையாளங்கள் யாவும் வேளாண்மை சார்ந்து அமைந்திருக்கக் கூடியவை. நிலமும் நீரும் விதையும் ஏரும் மாடுகளுமே உழவுக்குடிகளின் உயிர் ஆதாரங்கள். ஆகவே, உழவுக்குடிகளின் பண்பாட்டு அடையாளங்களாய் அவை அமைந்திருப்பதில் வியப்பில்லை. இத்தகையப் பண்பாட்டு அடையாளங்கள் அதிகார மற்றும் சாதிய வழிப்பட்ட பண்பாட்டு மேலாதிக்க ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்டு வந்துள்ளன. உழவுக் குடிகளின் அடையாளம் உழவுத் தொழில் தான். இவ் உழவுத் தொழிலே இழிவாகக் கருதப்பட்டிருக்கிறது.

பிராமண சத்திரியர்கள் வாணிபம் செய்து பிழைத்த போதும், உடல் முயற்சியும் பிறர் தயவை நாடத்தக்கதாயுமுள்ள விவசாயத் தொழிலை மேற்கொள்ளக் கூடாது என்கிறது மநு சாத்திரம்.

இதை வழிமொழிந்தே தஞ்சை மாவட்டம் ஆச்சாள்புரம் கிராமசபையார், பிராமணர் ஏர் பிடித்து உழக் கூடாது என்ற முடிவு செய்ததை பிராமணர் எருது கட்டி ஆண்டு உழக் கடவதல்லாததாகவும் என்று இரண்டாம் இராசராசனின் பதினான்காவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

இதன் தாக்கம் இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்துள்ளன. 1921ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்துக் கிராமம் ஒன்றில் உழவுத் தொழில் செய்தமைக்காக இரண்டு பிராமணர்கள் சாதி நீக்கம் செய்யப்பட்டனர். கும்பகோணம் சங்கராச்சாரியார் அப்பகுதிக்கு வந்தபோது மேற்கூறிய பிராமணர்கள் இருவரும் காணிக்கை கொடுக்கச் சென்றனர். அவரோ, பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர்களிடமிருந்து காணிக்கை ஏதும் தான் பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண்மை சார்ந்த உழவுக் குடிகளின் இன்னொரு பண்பாட்டு அடையாளம் மாடுகள் சார்ந்த நிகழ்த்துச் சடங்குகள். உழவுக்குடிகளின் உயிர்ப்பான நிகழ்த்துச் சடங்காய் இன்றளவிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல் நிகழ்வுகள், உழைக்கும் உழு குடிகளின் நிகழ்த்துச் சடங்கு என்றளவில் மட்டுமே பார்க்கப்பட்டிருக்கிறது.

நெடுங்காலமாய் நிகழ்ந்து வரும் மாடு தழுவல் சடங்கானது அதிகாரப் பண்பாட்டு அடையாளங்களால் கண்டு கொள்ளாமலும் இரட்டடிப்பு செய்து புறக்கணித்தும் ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. சங்க காலத்துத் திணைப் பாடல்கள் சில, சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை போன்றவற்றோடு மாடு தழுவல் பற்றிய பதிவுகள் நின்று விடுகின்றன. உழவுக்குடிகளைப் பற்றிப் பெருவாரியாகத் தோற்றுவிக்கப்பட்ட பள்ளு இலக்கியங்களில்கூட மாடு தழுவல் நிகழ்த்துச் சடங்குகளைப் பற்றிய பதிவுகள் இல்லை. கண்ணுடையம்மன் பள்ளு மட்டுமே போகிற போக்கில் ஒரு குறிப்பை மட்டும் தந்திருக்கிறது.

தமிழ் இலக்கியப் பெருமரபில் மாடு தழுவல் பற்றிய பதிவுகள் இல்லாமல் போனதற்கான காரணம் பண்பாட்டு அடையாள ஒதுக்கல்களே அன்றி வேறில்லை.

நிலப் பறிப்பும் பண்பாட்டு ஒதுக்கல்களும் காலங்காலமாய்த் தொடர்ந்து வந்தாலும், நிலத்தில் உழுவதும் உழைப்பதும் தங்களது உரிமை; மாடு தழுவல் போன்றவை தங்களது பண்பாட்டு உரிமை என்றே காலங்காலமாய் நிலத்தோடும் பண்பாட்டோடும் அடையாளப்படுத்தி வருகின்றன உழவுக் குடிகள்.

 அதிகாரப் பண்பாட்டின் இன்னொரு குணம், பெருவாரியாய்ப் போற்றப்படும் உழைக்கும் மக்களது பண்பாட்டைத் தம் வயப்படுத்துவது. தெலுங்கின அதிகாரப் பரவலாக்கத்தின் போது உழுகுடிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு, தெலுங்கின உழவுக் குடிகளுக்கும் இங்கிருந்த இடைநிலைச் சாதியினருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகையாலே, உழைக்கும் தமிழ் உழவுக்குடிகளின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றான மாடு தழுவல் சடங்கை உயர்த்திக் கொண்ட சாதியினரும் தம் வயப்படுத்திக் கொண்டும் வந்துள்ளனர்.

வேளாண் உற்பத்தியின் போலச் செய்தலாகவும் பயில் முறையாகவும் பழகு முறையாகவும் நிகழ்த்தப்பட்ட மாடு தழுவல் சடங்கை, உயர்த்திக் கொண்ட சாதியினரின் பகட்டையும் பகுமானத்தையும் ஆணவத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்திக் காட்டுகிற விழாக்களாக உருமாற்றமும் செய்யப் பெற்றுள்ளன.

 அதிகாரப் பண்பாடு தம் வயப்படுத்திய மாடு தழுவல் சடங்கையே உயர்த்திக் கொண்ட சாதியினரின் வீர விளையாட்டாகப் பொதுவெளியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய அடையாளத்தையே பிற்காலத்திய கலை இலக்கிய ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டின.

உற்பத்தியோடும் உழைப்போடும் நேரடித் தொடர்பில் இருந்த உழவுக் குடிகளிடம் இருந்து வந்த மாடு தழுவல் சடங்கு, சமூக மதிப்பைப் பெற முடியாமல் நீர்த்துப் போகும்படி ஆக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக, வேளாண் உற்பத்தி சார்ந்த பண்பாட்டு அடையாளங்கள் மீதான ஒடுக்குமுறை இன்றளவிலும் நீடித்து வருகின்றது.

இத்தகையப் பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பண்பாட்டு அடையாளப் போராட்டங்களும் தமிழ்ச் சமூகத்தில் நடந்தேறியுள்ளன. பண்பாட்டு ஒடுக்குமுறை நீடிக்கும் வரையிலும் இத்தகையப் பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் தொடர்ந்து நடை பெற்றே தீரும்.

இப்பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள், மறுக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களைப் போராடிப் பெறுதல், தம் மீது திணிக்கப்பட்ட இழிவான பண்பாட்டு அடையாளங்களைக் கைவிடுதல், இழிவுபடுத்தப்பட்ட அல்லது மாற்றி அமைக்கப்பட்ட தங்களது பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்தல், மேட்டிமையோரின் பண்பாட்டு அடையாளங்களைக் கேலிக்குரியதாக்கல் அல்லது கேள்விக்குறியாக்குதல் போன்ற நிலைகளில் நடைபெற வேண்டும் என்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன்.

உழைக்கும் உழவுக்குடிகளிடமிருந்த நிலவுரிமை, பண்பாட்டு அடையாள உரிமைகள் பறிக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதும் இன்றைய உலகமயச் சூழலிலும் தொடரத்தான் செய்கின்றன. பார்ப்பனிய மேலாதிக்கப் பண்பாட்டோடு உலகமய ஒற்றைப் பண்பாட்டு மேலாதிக்கமும் கைகோர்த்துக் கொண்டு இங்குள்ள பன்மைப் பண்பாட்டு அடையாளங்களை ஒடுக்கியும் சிதைத்தும் வருகின்றன.

நிலப்பறிப்பு , இயற்கை வளச் சுரண்டல் , நீர் ஆதாரச் சுரண்டல் , மலட்டு விதைகள் மற்றும் உயிர்கொல்லி பூச்சி மருந்துகள் உரங்கள் விற்பனை , உற்பத்திப் பறிப்பு, நுகர்வுவெறிப் பண்பாடு, நகர மயமாக்கல் , உழைப்புச் சுரண்டல் , மரபு முறைகளை அழித்தல் போன்ற உலகமயச் சுரண்டல் வடிவங்கள் யாவும் இங்குள்ள உழைக்கும் உழவுக்குடிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல. சிற்றூர் சார்ந்த அனைத்துச் சாதியிலிருக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது. நகர் சார்ந்த அனைத்துச் சாதியிலிருக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது. வேளாண்மை மட்டுமல்லாது அனைத்துத் தொழில் சார்ந்த உழைக்கும் சாதியினருக்கும் எதிரானது.

ஆகவே, பார்ப்பனிய மற்றும் உலகமய ஒற்றைப் பண்பாட்டை எதிர்க்க வேண்டுமானால், அதற்கு எதிராக முன் நிற்கும் தேசிய இனத்தின் பன்மைப் பண்பாட்டு அடையாளங்களை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில், பண்பாட்டு அடையாளப் போராட்டம் என்பது வெறும் பண்பாட்டுக்கான போராட்டம் என்பது மட்டுமல்ல. அது உற்பத்தி சார்ந்தது. நிலம் சார்ந்தது. நில உரிமை சார்ந்தது.

ஆகையால்தான், தமிழ்த் தேசிய இனத்தின் வேளாண் உற்பத்தி சார்ந்த - நிலம் சார்ந்த - வேளாண் உழைப்பு உழுகுடிகளின் பண்பாட்டு அடையாளங்களைச் சிதைக்கும் நோக்கில் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை மறுத்தும் ஒதுக்கியும் தடை செய்தும் வருகின்றன பார்ப்பனிய தரகு முதலாளிய வல்லாதிக்க நிறுவனங்கள்.

இத்தகைய கொடிய அதிகாரப் பண்பாட்டை எதிர்ப்பதற்கான ஒரே வழி, தேசிய இனப் பண்பாட்டு அடையாளங்களை முன்னெடுப்பது தான்.

மாடு தழுவல் பண்பாடும் தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாடாக இருக்கும் அதேவேளையில், நிலவுடைமை மற்றும் சாதிய அடையாளங்கள் இல்லாத, வட்டார மற்றும் ஆண் மய்ய நோக்கு வெளிப்படாத, சமத்துவம் நிரம்பி வழிகிற தமிழ்ப் பண்பாடாகவும் ஏறு தழுவல் எனும் மாடு தழுவல் பண்பாட்டை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகும்.    

மாடு தழுவல் எனும் ஏறு தழுவல் சடங்கும் விழாவும் தமிழ்த் தேசியத்தின் பண்பாட்டு அடையாளம். இது குறிப்பிட்ட சாதியினருக்கானது மட்டுமல்ல. உயர்த்திக் கொண்ட சாதியினருக்கானது மட்டுமல்ல. பகட்டுக்கும் ஆணவத்திற்கு மட்டுமல்ல. ஆகவே, உயர்த்திக்கொண்ட சாதித் திமிரின் சாயங்கள் படாத - உழைக்கும் அனைத்துச் சாதித் தமிழர்களுக்குமான பண்பாட்டு அடையாளமாகவும் முன்னெடுக்கப்படவும் வேண்டும்.


 இது, வேளாண் உற்பத்தியோடு தொடர்புடைய ஒரு நிகழ்த்துச் சடங்குப் பண்பாடு. ஆகவே, மாடு தழுவல் எனும் ஏறு தழுவலை முன்னெடுக்க வேண்டும். அதுவே நிலவுரிமைப் போராட்டத்தின் அடையாளமும்கூட.

சமூகத்தின் பொருள் உற்பத்தி சார்ந்த அடிக்கட்டுமானத்தின் வெளிப்பாடாகவே மேல்கட்டுமானக் கூறுகளான பண்பாடுகளும் அவற்றின் நிகழ்த்தல்களும் இருந்தாலும்கூட, சில சமயங்களில், மேல்கட்டுமானம் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளும் அடிக்கட்டுமானத்தைப் பாதிக்கும் தன்மைகளையும் கொண்டிருக்கும் என்கிறது மார்க்சியம்.

நிலவுகிற சமூக அமைப்பானது, உடைமை வர்க்க அதிகாரங்கள் நிரம்பப்பெற்ற சமூகமாகும். இந்நிலையில், உழைக்கும் உழுகுடிகளின் அதிகாரத்தையும், இதர உழைக்கும் தமிழர்களின் அதிகாரத்தையும் கொண்ட சமூகமாக உருவாக்கும் வேலைப்பாடுகள், மேல்கட்டுமானக் கூறுகள் எனப்படுகிற பண்பாட்டுத் தளங்களில் இருந்தே முதலில் தொடங்க வேண்டும்.

பண்பாட்டுக் கூறுகளின் தாக்கம் அடிக்கட்டுமானத்தையும் பாதிக்கும் என்பதைக் குறித்த எங்கெல்சின் கருத்து இவ்விடத்தில் குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.

இறுதியிலும் இறுதியாய், மூலத்துக்கு மூலமாய் வரலாற்றை நிர்ணயிக்கும் காரணி பௌதீக வாழ்க்கையின் பொருள் உற்பத்தியும், அதன் மறு உற்பத்தியும்தான். இதற்குமேல் நானும் மார்க்சும் எதுவும் கூறவில்லை. இதனைத் திரித்துக் கொச்சைப்படுத்திப் பொருளாதாரக் காரணி மட்டுமே வரலாற்றை நிர்ணயிக்கிறது என்று யாராகிலும் ஒருவர் சொன்னால், அவர் மார்க்சின் கூற்றைப் பொருளற்ற – அரூபமான – அபத்தமான சொற்றொடராக மாற்றி வி்டுகிறார் என்றுதான் கூறவேண்டும்.

பொருளாதார நிலை என்பது அடித்தளம். ஆனால், மேல் தளத்தைச் சார்ந்த பல்வேறு கூறுகள், வரலாற்றுப் போராட்டங்கள் எத்திசையிலே – எந்தப் போக்கிலே செல்ல வேண்டும் என்பதில் தமது செல்வாக்கைக் காட்டத்தான் செய்கின்றன. பல நேரங்களில் அப்போராட்டங்களின் வடிவத்தை முடிவு செய்வதில் அவையே முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மேல்தளத்துக் கூறுகள் எல்லாம் இணைந்து செயல்பட்டு வினையும் எதிர்வினையும் நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன. இந்த வினை எதிர்வினைச் சூழலில் பொருளாதார இயக்கமானது, ஓர் அவசியத் தேவை என்று தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது எனக் கூறும் எங்கெல்சு, அரசியல் – நீதிமுறை – தத்துவம் – சமயம் – இலக்கியம் – கலை ஆகியவற்றின் வளர்ச்சியானது பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால், இவை அனைத்தும் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று எதிர்வினை புரிவதுடன் பொருளாதார அடித்தளத்தின் மீதும் எதிர்வினை புரிகின்றன எனவும் விவரித்துள்ளார்.

பண்பாட்டின் முதன்மைத்துவம், உற்பத்தி அரங்கில் அதன் தொழிற்பாடு குறித்த எங்கெல்சின் கருத்தையே ஏறு தழுவல் எனும் மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாட்டோடும் பொருத்திப் பார்க்கலாம்.

ஏறு தழுவல் எனும் மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாடு, உடைமை மற்றும் அதிகாரவழிப்பட்ட சமூக அமைப்புகளில் தொடர்ந்து வந்திருந்தாலும்கூட, அப் பண்பாடானது உழைக்கும் உழுகுடிகளின் பண்பாடாகவே தொழிற்பட்டு வந்திருக்கிறது. பெரும்பான்மை உழைக்கும் உழுகுடிகளின் இப்பண்பாடும் தமிழ்த்தேசிய இனத்தின் – தமிழ்த்தேசத்தின் பண்பாடுகளுள் ஒன்றாகவும் முகம் காட்டியிருக்கிறது.

தமிழ்த்தேசிய இனத்தின் – தமிழ்த்தேசியத்தின் முதன்மையான பொருளியல் உற்பத்தி அரங்கம் வேளாண்மைதான். அதாவது, தமிழ் நிலத்தின் அடிக்கட்டுமானம் வேளாண்மைதான். இவ் அடிக்கட்டுமானத்தின் மேல்கட்டுமானமாகத் திகழும் மாடு தொடர்புடைய நிகழ்த்துப் பண்பாட்டுக் கூறுகள் தீவிரம் அடையும்போது அடிக்கட்டுமானம் சார்ந்த வேளாண்மைத் தொழில் தீவிரம் அடையும்.

 அதேவேளையில், அப் பண்பாட்டுக் கூறுகள் ஒடுக்குதலுக்கோ -  தடை செய்தலுக்கோ – புறக்கணிப்புக்கோ – இழிவுபடுத்தலுக்கோ உட்பட நேரும்போது வேளாண்மைத் தொழில் உற்பத்தியும், அவ்வுற்பத்தி சார்ந்த மக்களின் வாழ்வியலும் உயிர்ப்பில்லாமல் போகவும் வாய்ப்புண்டு. ஆகவே, தமிழ் நிலத்தின் வேளாண்மைத் தொழில் தீவிரம் பெற வேண்டுமானால், வேளாண்மை தொடர்பான பண்பாடுகளில் உள்ள முற்போக்குக் கூறுகளைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். வேளாண் தொழிலோடு உறவுடைய மாடு தழுவல் போன்ற நிகழ்த்துப் பண்பாட்டு மரபுகளையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். இத்தகைய பண்பாட்டு முன்னெடுப்புகளே வேளாண்மை சார்ந்த தொழிலையும் அம் மக்களின் வாழ்வியலையும் வாழ்விக்கச் செய்யும் காரணிகளாகவும் அமையும்.

தமிழ் நிலத்தின் பெரும்பாலான பண்பாட்டுக் கோலங்கள் சூழல் சார்ந்தும் உற்பத்தி சார்ந்தும் இருந்தாலும்கூட, அவற்றில் சில முற்போக்கான கூறுகளும் சில பிற்போக்கான கூறுகளும் இருக்கவே செய்துள்ளன. சமூக வளர்ச்சிப் போக்கில் சில பல பண்பாட்டுக் கூறுகள் மறைந்தும் மாறியும் வந்துள்ளன. சமூக வளர்ச்சிக்கும் உற்பத்திக்கும் வாழ்வியலுக்கும் எது தேவைப்படுகிறதோ அதுவே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும். பண்பாட்டு நடவடிக்கைகளும் அப்படித்தான். காலத்திற்குத் தகுந்த மாதிரியாகவும் – பொது ஏற்பாகவும் முற்போக்குக் கூறுகளைக் கொண்டு நவீனப்படுகிற பண்பாடே ஒட்டுமொத்த சமூகத்தின் ஏற்பைப் பெறும்.

தமிழ் நிலத்தின் ஏறு தழுவல் எனும் மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாடானது, உணவு உற்பத்தியோடு தொடர்புடைய வேளாண்மைத் தொழிலோடு உறவுடையது. வேளாண் தொழில் காலம் தோறும் தொடர்ந்து வந்திருக்கிறது. அதனால்தான், அந்நிகழ்த்துப் பண்பாடும் பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் நிலத்தின் மரபு சார்ந்த வேளாண் உற்பத்தி முறைகளோடு மாடுகளுக்கும் முதன்மையான பங்கு இருந்திருக்கிறது. அதனால், மாடுகள் தொடர்பான நிகழ்த்துப் பண்பாடுகள் பெருவாரியாகக் கொண்டாடப்பட்டுள்ளன. இத்தகைய மரபும் வேளாண் முறைகளும் பண்பாடும் பின்வந்த காலங்களிலும் நடவடிக்கைகளிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டன; ஒதுக்கப்பட்டன; ஒழிக்கப்பட்டன.

நவீனம் என்கிற பேரிலும், பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, மரபணு மாற்றப் புரட்சி போன்றவை மூலமும் வேளாண் உணவு உற்பத்தி முறைகள் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. இது ஒருபுறமிருக்க, வேளாண்மை தொடர்புடைய நீர் ஆதாரங்கள் சேதாரத்திற்கு உள்ளாக்கப்பட்டன. இதனால், அண்மைக் காலமாகவே வேளாண்மை உற்பத்தியும் அது சார்ந்த மக்களின் வாழ்வியலும் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்நெருக்கடிகளுக்கெல்லாம் புறக் காரணங்கள் நிறைய இருப்பினும், மரபுசார் வேளாண் முறைகளையும் அவை சார்ந்த பண்பாடுகளையும் முன்னெடுக்காமல் போனமையும் ஓர் அகக் காரணமும் தான்.

தமிழ் நிலத்தின் வேளாண் உற்பத்தியை மரபு முறைகளைக் கொண்டே மீட்டெடுக்க வேண்டிய தேவை இப்போது உருவாகியிருக்கிறது. அதோடு, காலம் காலமாய் ஒடுக்கப்பட்டும் – நிலம் இழந்தும் – செயற்கை முறைகளால் கொஞ்ச நஞ்ச நிலத்தையும் பாழ்படுத்தியும் உழன்று தவிக்கிற உழவுக்குடிகளின் நிலமும் தொழிலும் வாழ்வும் மீட்டெடுக்கப்பட வேண்டுமானால் நில உரிமைக்கான புரட்சியையும் முன்னெடுக்க வேண்டி இருக்கிறது. இந்நிலையில்தான், தமிழ் மரபில் காணலாகிற வேளாண் தொழில் முறைகளையும் நுணுக்கங்களையும் மீட்டுருவாக்கம் செய்து வேளாண் தொழிலையும் அது சார்ந்த வாழ்வியலையும் புனரமைக்க முடியும்.

மரபுசார்ந்த உற்பத்தி முறைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமானால், அவ் உற்பத்தி சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். அவ்வகையில், ஏறு தழுவல் எனும் மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாடும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய முற்போக்குக் கூறுகளையே கொண்டிருக்கிறது. ஆகவேதான், தமிழ் நிலத்தின் தேசியப் பண்பாட்டு அடையாளமாகவும் அது இன்னும் திகழ்கிறது.

ஏறு தழுவுதல் எனும் மாடு தழுவல் அனைத்துத் தமிழர்களின் பண்பாட்டு உரிமை. இது நிலம் சார்ந்தது. நில உரிமை சார்ந்தது. தமிழர் சார்ந்தது. தமிழர் பண்பாடு சார்ந்தது. தமிழர் உரிமை சார்ந்தது. இதற்குத் தடை விதிப்பதும் - தடையை ஆதரிப்பதும் - கொச்சைப்படுத்துவதும் ஆதிக்கத்தின் வடிவமன்றி வேறில்லை.

பார்வை நூல்கள் :
1.     மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம் - எங்கெல்ஸ்.
2.     மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும் - ஸ்டாலின் .
3.     குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் - எங்கெல்ஸ்.
4.     அசல் மனுதர்ம சாஸ்திரம் - கி.வீரமணி ஆய்வுரை .
5.     பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும் - பாவாணர்.
6.     பண்பாட்டுக் கட்டுரைகள் - பாவாணர்.
7.     தமிழியல் கட்டுரைகள் - பாவாணர்.
8.     மொழியும் நிலமும் - ஜமாலன்.
9.     தமிழர் பண்பாடும் தத்துவமும் - நா.வானமாமலை.
10.   ஒப்பியன் மொழி நூல் - தொகுதி 1- பாவாணர்.
11.   தமிழ் இலக்கிய வரலாறு - தொகுதி 1- பாவாணர்.
12.   பழந்தமிழாட்சி - பாவாணர்.
13.   மண்ணுரிமை - குணா.
14.   தமிழ் இலக்கியத்தில் சேர சோழ பாண்டிய மரபினர் - குருசாமி சித்தர்.
15.   பள்ளு இலக்கியத்தில் மள்ளர் மரபுகள் - சு.வேங்கடராமன்.
16.   மானுட வாசிப்பு: தொ.ப தெறிப்புகள் - தயாளன் : சண்முகானந்தம்.
17.   முக்கூடற் பள்ளு - ந.சேதுரகுநாதன் உரை.
18.   திருவேட்டை அய்யனார் பள்ளு - ப.வே.நாகராசன் (ப.ஆ). 
19.   பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் பார்வை- கோ.கேசவன்.
20.   பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் - ஆ.சிவசுப்பிரமணியன்.
21.   மொழி இயங்கியல் - மகாராசன்.
22.   புறப்பொருள் வெண்பாமாலை-பொ.வெ.சோமசுந்தரனார் உரை.
23.   இடைக்காலச் சோழ மண்டலத்தில் சமுதாயம் - ஆ.துளசேந்திரன்.
24.   ஏறு தழுவுதல் சல்லிக்கட்டு:
தொன்மை பண்பாடு அரசியல்-பாவெல் பாரதி (தொ.ஆ).
25.   தொல்காப்பியம் தெளிவுரை – ச.வே.சுப்பிரமணியன்.
26.   கலித்தொகை மூலமும் உரையும் – அ.விசுவநாதன்.
27.   புறநானூறு மூலமும் உரையும் – கு.வெ.பாலசுப்பிரமணியன்.
28.   சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில்
கோயில் பொருளியல் – மே.து.ராசு குமார்.

29.   தமிழகத்தில் அடிமை முறை – ஆ.சிவசுப்பிரமணியன்.

1 கருத்து:

  1. பெயரில்லா15/1/25, 7:18 PM

    முல்லை நிலத்தின் வீர விளையாட்டு ஏறு தழுவுதல்

    பதிலளிநீக்கு