புதன், 29 மார்ச், 2017

கருப்பின் நுண் அரசியல்.


நாடக நிலமே வாழ்வெனக் கொண்டு, நாடகப் படைப்புகளின் ஊடாகவும் நவீன நிகழ்கலைப் படிமங்களையும் சமூக மாற்றத்திற்கான கருத்தாடல்களையும் புலப்படுத்தி வருகிற பேராசிரியர் மு.இராமசாமி அவர்களோடும், நிஜ நாடக இயக்கத்தோடும் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து பாரத தர்மம், இன்னும் சொல்வதெனில், தலித், கட்டுண்ட பிராமிதியசு, கலகக்காரர் தோழர் பெரியார், வலி அறுப்பு, தோழர்கள் போன்ற நாடகங்களில் பங்கேற்று நடித்திருக்கிறேன்.
தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறையில் அவரோடு மூன்று ஆண்டுகள் பணி செய்திருக்கிறேன். அவரோடு மிக நெருக்கமாய் இருந்த காலங்களில் எங்களது பேச்சுக்கள் அனைத்தும் நிகழ்கலைகளைப் பற்றியதாக இருக்கும் அல்லது பெரியார் அம்பேத்கர் மார்க்சியம் பற்றியதாக இருக்கும்.
கலைகளை மக்கள் விடுதலைக்கான பரப்புரை வடிவங்களாகக் கைக்கொண்டு, தாம் உருவாக்குகிற அத்தனை நாடகங்களுக்குள்ளும் பெரியாரையும் மார்க்சையும் அம்பேத்கரையும் ஏதாவது ஒரு வடிவத்துக்குள்ளும் உணர்வுக்குள்ளும் புலப்படுத்தி விடுவார். பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்க, பாலின, இனத்தின் குரலையே நாடகப் படைப்பின் குரலாய் வெளிப்படுத்துவார்.
அந்த வகையில், நிலவுகிற காவி பயங்கரவாத, உலகமயச் சீரழிவுவாதச் சூழலில், கருப்பு என்கிற அடையாளமும் அதன் அரசியலும் அதன் போராட்டமுமே காவி மய அதிகார நுண் அரசியலை வீழ்த்தக்கூடியது என்பதை விளக்கப்படுத்தும் வகையில் கருப்பின் நுண் அரசியலை நாடக அழகியலோடு அரசியலாய்ப் பேசியிருக்கிறது மு.இராமசாமியின் விடாது கருப்பு எனும் நாடகம்.
நிகழ்காலச் சமூகத்தின் அதிகார அமைப்புகளால் திணிக்கப்படுகிற மக்கள் விரோதச் செயல்பாடுகள் அனைத்தைக் குறித்துமான பகடியும் வசையும் நாடகத்துள் அதிகம் தெளிக்கப்பட்டிருக்கிறது.
கருப்பு என்பது நிறமல்ல;
அது ஒடுக்கப்பட்டோருக்கான அடையாளம்.
சிவப்பு என்பது நிறமல்ல;
அது ஒடுக்கப்பட்டோரின் கோபம்.
கருப்பும் சிவப்பும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைத் திரட்சி.
காவிக்கு எதிரானது சிவப்பும் கருப்பும்.
பூணூல் வெள்ளைக்கு எதிரானது கருப்பும் சிவப்பும் என்கிற நுண் அரசியலை நாடக அழகியலோடு வெளிப்படுத்தி இருக்கிறார் மு.ரா.
மதுரை யாதவர் கல்லூரி மாணவர்களைக் கொண்டு அரங்கேற்றப்பட்டிருக்கும் விடாது கருப்பு நாடகத்தை விடாது பற்றிக் கொள்ள வேண்டியது சமூக மாற்ற இயக்கங்களின் கடமை.
பேராசிரியர் செண்பகம் ராமசாமி அவர்களின் நினைவு நாளில், நாடக நினைவேந்தலாய் நிகழ்த்திய விடாது கருப்பு நாடகத்தை உயிர்த்தெழச் செய்திருக்கும் மு.இராமசாமி அய்யாவுக்கு வாழ்த்தும் அன்பும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக