புதன், 29 மார்ச், 2017

குறுணி மழை.


வெம்மையில்
வதங்கிப் போன
கோடை காலத்துச் சொற்களையெல்லாம் நனைத்திருக்கிறது
உழவு மழை.

விரிப்போடிய நிலத்திலிருந்து
சுரட்டைப் பாம்புகளும் பூரான்களும்
கிடு கிடுவென
ஊர்ந்து திரிந்தன.

ஈரம் குளித்த வெங்காத்து
பழுப்பேறிய இலைகளைக்
கிச்சுக் கிச்சுக் காட்டியது.

காலத்து மழை களம் சேர்க்கும்;
கோடை மழை குறுணி தான்.
நிலம் குளிரப் பெய்திடாத
குறுணி மழையால்
கரந்தையும் கொளுஞ்சியும் ஊமத்தையும் தான்
பூப்பெய்திச் சிரிக்கும்.

இதனுகளின் சிரிப்பு பார்த்து
நமட்டுச் சிரிப்பாய்ச்
சிரித்துக் கொள்ளும்
வெள்ளந்தி மனிதர்கள்,
காலத்து மழை நினைத்துத் தவித்தேதான் கிடக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக