புதன், 29 மார்ச், 2017

அணில் கூட்டம் : குழந்தைகள் மீதான உழைப்புச் சுரண்டல் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிரான கலகக் குறும்படம்.



வெள்ளந்தியாய் வாழ்ந்து திரியும் மனிதர்களைப் பிள்ளைமைக் குணம் மாறாத மனிதர்களாகத்தான் இந்தச் சமூகம் புரிந்து வைத்திருக்கிறது.
விலங்கினங்களிலும் வெள்ளந்திகள் நிரம்ப உண்டு. அவற்றுள், கீச் கீச்செனத் துள்ளித் திரியும் அணிலும் உண்டு. அதன் வெள்ளந்திக் குணத்தினால் தான் அதனை அணில் பிள்ளை என்றழைப்பது மரபாய்ப் பயிலப்பட்டு வந்திருக்கிறது.
மனித வெளியில் அணில் பிள்ளைகளைப் போலத் துள்ளி விளையாடும் குழந்தைகளைக் குறித்தான கலை இலக்கியப் படைப்புகள் மற்ற சமூகங்களில் நிரம்ப வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு சமூகத்தின் கட்டாயமான பேசுபொருளாகக் குழந்தைகள் எல்லாக் காலகட்டத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். இவர்களைக் குறித்துப் பேசுகிற சமூகம் தம்மை இன்னொரு வகையில் வளப்படுத்திக் கொண்டே அடுத்த கட்டத்திற்கு நகரும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறது.
அதே சமயத்தில், எதிர்காலச் சமூகத்தின் தவிர்க்க இயலாத சக்திகளாக மாறப் போகிற குழந்தைகளைக் குறித்து நிகழ்காலத்திலும் கூடக் கவலைப்படாது கண்டு கொள்ளாமல் நகர்ந்து போகும் சமூகங்களும் இருக்கவே செய்கின்றன. அவற்றுள் தமிழ்ச் சமூகமும் உள்ளடங்கும்.
இந்திய ஒன்றியம் முழுமைக்கும் பரவியிருக்கிற மனிதவளம் மிகப் பெரியது என்றாலும் கூட, ஒரே வகைப்பட்ட அல்லது ஒரு தரப்பட்ட மனித வளத்தைக் காண்பது அரிது. மொழி, இன வகைப்பட்ட வேறுபாடுகளோடு சாதிய, சமய, பொருளிய, பாலின வேறுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் அதிகமுண்டு. குறிப்பாக, சாதிய வேறுபாடும் பாலின வேறுபாடும் வெகுகாலமாய் அதிகாரமாகவே தொழிற்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.
ஒடுக்கும் சமூகங்களும் ஒடுக்கப்படுகிற சமூகங்களும் இந்தச் சமூகத்தில் இரு வேறு முரண்நிலையில் இருந்து கொண்டிருக்கும் நிலையில், அத்தகைய இரு வேறு சமூக நிலைமைகளிலும் அடுக்குகளிலும் ஒடுக்கப்படுகிற, சுரண்டப்படுகிற, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிற ஒரு மனிதக் கூட்டம் தான் குழந்தைகள்.
மனித சமூகத்தின் குடும்ப வெளிகளிலும் பொதுவெளிகளிலும் குழந்தைகளுக்கான ஒரு வெளியை இந்தச் சமூகம் உருவாக்கித் தருவதில்லை. சாதியத் தீண்டாமை, ஏழ்மை, ஆதரவற்ற நிலைமை, குடும்பச் சீரழிவுச் சூழ்நிலை, இடப்பெயர்வு போன்ற பல காரணிகள் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகளைப் பறித்துக் கொள்கின்றன. உதிரி மனிதர்களின் உருவாக்கம் குழந்தைப் பருவங்களிலேயே உருவாகும் சூழலை இச் சமூகம் உருவாக்கி விடுகிறது.
குழந்தைகள் எனும் இந்த உதிரி மனிதர்களிடம் உள்ள வெள்ளந்திக் குணத்தைப் பயன்படுத்தி உழைப்புச் சுரண்டல் அதிகளவு நடைபெற்று வருகின்றது. குழந்தைத் தொழிலாளர்கள் இன்னும் இருந்து கொண்டிருப்பது அதைத்தான் காட்டுகிறது.
அதே நிலையில், பெண் குழந்தைகளோ உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாவதோடு, பாலியல் வன்முறைக்கும் பலியாகிக் கிடக்கும் அவலமும் இந்தச் சமூகத்தில் தான் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக, சாதியமும் ஆணாதிக்கமும் அதிகாரத்தின் அத்தனை வன்முறைக் குணாம்சங்களையும் உள்ளடக்கி வைத்திருக்கும் கோர முகமும் கூட.
அண்மையில்,
சாதியத்தாலும் ஆணாதிக்கத்தாலும்
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்ட நந்தினி, காசினி போன்றோரின் கொலைகள் இதனையே உணர்த்துகின்றன.
இந்நிலையில் தான், குழந்தைகள் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராகவும் காட்சி மொழியாய்க் களம் செதுக்கியிருக்கும் குறும்படமாய் வடிவமைந்திருக்கிறது வினோத் மிசுராவின் உருவாக்கத்தில் வந்திருக்கிற அணில் கூட்டம் எனும் படம்.
வினோத் மிசுராவின் எலைட் எனும் ஆவணப்படமானது ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மற்றும் இரட்டை வாக்குரிமை பற்றிய உரையாடலை மய்யப்படுத்தியது.
இன்னொரு படமான குறியீடு குறும் படமே என்றாலும் கூட, சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான திருப்பிச் செய்யும் படமாகவே அமைந்திருந்தது.
இந்த வரிசையில்,
அணில் கூட்டம் எனும் இக் குறும் படமும் குழந்தைகள் மீதான உழைப்புச் சுரண்டலையும் பாலியல் வன்முறைகளையும் அம்பலப்படுத்திக் காட்டும் விழிப்புணர்வுப் படமாக உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
சுரண்டல்களாலும் ஒடுக்குமுறைகளாலும் வன்முறைகளாலும் சூழப்பட்டிருக்கும் குழந்தைகளைக் காக்கும் பொறுப்பையும், அதன் பயணத்தையும் கவனப்படுத்தியிருக்கும் அணில் கூட்டம் படமானது பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.
வினோத் மிசுராவுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இவை போன்ற சமூக அக்கறையுள்ள படங்கள் அவரிடமிருந்து நிறைய வரட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக