புதன், 29 மார்ச், 2017

பெருங்காட்டுச் சுனை: பல்லுயிர் வனத்தையும் மனித மனத்தையும் மொழியில் காட்சிப்படுத்துகின்ற கவிதைகள்.


ஒரு கவிதைப் பனுவல்,படைப்பாளியின் மொழி வலைக்குள் சிக்கிச் கொள்ளும் பறவை போல் அல்லாமல், விரும்பிய திசையில் பயணிக்கும் சிறகுகளைத் தர வேண்டும். வாசகரைத் தம் போக்கில் பயணிக்கத் தோதான மன வெளியை விரித்திருக்கும் மொழியே கவிதைக்கு இசைவானது.
வாசகர் மனதோடு உறவாடும் ஒரு கவிதை அதனளவில் தன் வேர்பாய்ச்சலை உறுதி செய்து கொள்கிறது.அதிலும் பகட்டில்லாத கவிதைமொழியே கருப்பொருளோடும் உணர்வுகளோடும் பாடுகளோடும் நெருக்கமாய் உலாவித் திரிய உதவுகின்றது. அந்த வகையில், பகட்டில்லாத வாழ்வையும் கவிதை மொழியையும் வாஞ்சையோடு புலப்படுத்தும் மிகச் சில தமிழ்ப் படைப்பாளிகளுள் அண்ணன் கூடல் தாரிக்கும் ஒருவர்.
கல்லூரியில் பயில்கிற காலங்களில் எனக்கு முன்னவர் தான் என்றாலும், தம்பி என்றழைக்கும் வாஞ்சைக் குணம் கொண்டவர். மன இறுக்கத்தோடும் தனிமை வெளிகளோடும் தான் அவரைப் பார்த்த காலங்கள் நிழலாடுகின்றன. காலம் ஒரு மனிதரை எப்படியெல்லாம் பக்குவப்படுத்தி வளர்த்தெடுத்திருக்கிறது.
தாரிக் அவர்களுக்குள் கவிதைக்கான எந்தச் சாயலையும் நான் பார்த்தது இல்லை. ஆனால், இப்போது இரு கவிதை நூல்களை எழுதியிருக்கிற கவிப் படைப்பாளி. வாழும் உலகமும் வாழ்க்கையும் மனிதர்களுமான இந்த வெளியே அவரை எழுத வைத்திருக்கிறது.
கவிஞரென ஒளிவட்ட மகுடங்களைச் சுமந்து திரியும் படைப்பாளிகள் கவிதை மொழியை இருள் சூழ் குகையாய்ப் போர்த்துவார்கள். தாரிக்கின் கவிதை மொழியோ வெளிச்சங்களைச் சுமந்தபடியே தான் முகம் காட்டுகிறது.
தனக்குத் தெரிந்த கவிதை மொழி இது வெனத் தேர்ந்து கொண்ட கவிதைத் தொனி மிக எளிமையாய் அவரோடும் நம்மோடும் உறவாடுகிறது. பெருங்காட்டுச் சுனை எனும் தலைப்பிலான இக்கவிதை நூல், வனத்தில் நிகழும் பல்லுயிர் வாழ்வையும் மாற்றத்தையும் பல கவிதைகளின் வாயிலாக எடுத்துரைக்கின்றது.
கானகச் சூழலை அழகியல் சார்ந்தே புலப்படுத்தும் பெரும் போக்கு ஒரு புறம் இருந்தாலும், சூழலியல் அக்கறையோடு பல்லுயிர்ச் சூழலைக் கவிதைக்குள் கொண்டு வருகிற போது அழகியலோடு அரசியல் தன்மையையும் பெற்று விடுகின்றது. இதனைப் பெரும்பாலான கவிதைகள் புலப்படுத்துகின்றன.
அந்தி நேரத்தில் தோன்றிய செவ் வானத்தால்
மலை தன்
நிர்வாணம் மறைத்ததை அறிவித்துச் சென்றது வினோதமான புள்ளினமொன்று.
மாண்டு போன மலையின் மரணச் செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்கின்றன காய்ந்த சருகுகள்
என்பதாக முடியும் ஒரு கவிதை, வனத்தின் அழிவைப் பேசிச் செல்கிறது என்றாலும், நவீன வாழ்க்கையின் சுரண்டல் முகத்தை அம்பலப்படுத்தும் அரசியல் வேலையைச் செய்திருக்கிறது.
அதே போல,
பழமையான வீடொன்றில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள
மானின் கொம்புகளில் இன்னமும் படிந்திருக்கும் உயிர்ப் பயமும் அதிர்ச்சியும் தப்பியோட முயன்றதன் களைப்பும்
கானகம் பிரிந்த சோகமும் நீங்கள் குறிப்பிடும் தாத்தாவின் வீரமும்
என்கிற கவிதை, பல்லுயிர் வளத்தைப் படுகொலை செய்யும் மனிதர் வாழ்வைப் பகடி செய்கிறது. இங்கே மான் என்பது பல்லுயிர் வளத்தின் குறியீடாகவே புனைந்து கொள்கிறது.
தொட்டி மீனுக்கு ஆறுதல் சொன்னது குழம்பு மீன்.
பயப்படாதே
மனிதர்களுக்குப் பிணங்களைத் தான் பிடிக்கும் என மனித வாழ்வைக் குறித்து எள்ளி நகையாடுகிறது இன்னொரு கவிதை.
இயற்கை வளங்களின் மீதான அப்பட்டமான சுரண்டலை ஆறுகள் ஓடிய தடங்களே தடயங்களாய்க் கண் முன் வற்றிப் போய் செத்துக் கிடக்கின்றன. ஆறுகளைக் கொன்று போட்டதன் விளைவாய் நிகழப் போகும் மாற்றங்களை உரத்துப் பேசுகிறது நதியென்னும் கவிதை.
நதியின் மரணத்தால் பெரிதாக என்ன நிகழும்.
மகிழ்வாய் நீராட நினைக்கும் சிறார்களின் கனவுகள் வற்றிப் போகும்.
வரைபட உள்ளங்கையின் ரேகைகளில் ஒன்று அழியும். காலிக்குடங்களுக்குள்
காற்று குடியேறும்.
பச்சிளங் குழந்தை நாவறட்சியால் கதறியழும். பண முதலைகளின் நாவுகள் மணல் ருசிக்கும். பொருளாதாரத்தின் குறியீடாக பிஸ்லெரிகள் மாறிப் போகும். ஆற்றங்கரை நாகரிகமொன்று அடியோடு அற்றுப் போகும். உலகின் நிலையாமை மற்றுமொரு முறை உணர்த்தப்படும்
என ஆறுகளின் அரசியலைப் பேசுகிறது கவிதை.
வனமும் பல்லுயிர் வளமும் உலகத்தை மட்டுமல்ல, கவிதையையும் அழகுபடுத்தக் கூடியவை. பச்சையம் தோய்ந்த ஒரு கவிதை வனத்தின் அழகைக் கவிதை அழகியலாய்ப் புலப்படுத்திய கவிதையொன்று இப்படிப் போகிறது.
தேனெடுத்துக் கிழங்கெடுத்த முப்பாட்டன் கரம் புகும் காந்தள் மென் படுக்கை கண்டலறும் கானகத்துப் பைங்கிளி.
அகவல் கூந்தல் அருவிப் பூ நுகர்வு அதிர்ந்தாடும் தொண்டகம் பொன்னிறத்துச் சிறுகுடி.
யாழ் நரம்பில் ஊர்ந்தேறும் சிற்றெரும்பு இடையறாது உலவும் பிளிறல் சங்கீதம் . அலையென எழும்பும் மைனாக்கள் அகில் மணக்கும் ஆலாபனை .
தடாகம் தன்னில் தவறி விழும் முழு மதி முத்தமிடும்
உறுமீன் உதடு.
கூதிரும் யாமமும் போர்த்திய போர்வை கதகதப்பூட்டும் பெருங்காட்டுச் சுனை
என இயற்கையின் அத்தனை உணர்வுகளையும் ஈரம் கசியப் பேசுகிறது அக் கவிதை.
ஒரு கவிதை, மேலோட்ட நிலை வாசிப்பில் ஒரு பொருளையும், உள்ளீடான நிலையில் வேறொரு பொருளையும் தரக்கூடும். பெருங்காட்டுச் சுனை என்கிற இக்கவிதை நூலின் தலைப்பே இரு வேறு நிலையில் பொருள் கொள்ளும் படியாக அமைந்திருப்பதோடு, அவ்விரு நிலையிலான கவிதைகளையும் உள்ளடக்கி வைத்திருக்கிறது.
வனத்தையும் பல்லுயிர் வளத்தையும் பேசுகிற கவிதைகள் இத் தொகுப்பில் நிரம்ப உண்டு. அதே போல, மனித வாழ்வையும் நேயம் கசியச் செய்கிற மனத்தையும் பேசுகிற கவிதை களும் நிரம்ப உண்டு. அதாவது, வாழ்வென்னும் பெருங்காட்டில் சுனையென்னும் நேயம் கசிகிற மனதைப் புலப்படுத்துகிற வகையில் அமைந்த கவிதைகள் இத் தொகுப்பை இன்னும் வலுப்படுத்தியிருக்கின்றன.
குற்றவுணர்வு எதுவுமில்லாமல் பாலோடு சேர்ந்து பருகப்படும் பூனையொன்றின்
பசியும்
என்கிற கவிதை, குற்றவுணர்வை மனதுக்குள் ஏற்படுத்தி விடுகிறது.
சமூகக் குற்றங்களைக் கண்டும் காணாமலும் கடந்து செல்லும் மனிதர்களைப் போலப் பொழுதுகளும் பழகிவிட்டதாய்
முன் பனி இரவொன்றில் புணரப்பட்டுப் பிரேதமாகக் கிடந்தவளைக் கடந்து செல்லப் பழகி இருந்தது
பகல் .
இப்படிக் கடக்கும் மனிதர்கள் மனிதர் எனும் பெயர் தாங்கிகள் தான் என்பதை,
கேட்பாரற்றுக் கிடக்கும் அனாதைப் பிணத்தின் மீது வலிக்காமல் ஏறி இறங்கும் சிற்றெரும்பொன்று .
நீண்ட நேரம் நுகர்ந்து விட்டு மெதுவாய்க்குரைக்கும்
ஒற்றை நாய் .
மூடப்படாத முகம் மறைக்கும் எங்கிருந்தோ வரும் ஈக்கள். யாருமற்ற நேரத்தில் இடைவிடாமல் முத்தமிடத் துவங்கும் கழுகுகளின் கூட்டம். நாசி மூடி இலாவகமாய்
இடம் கடக்கிறார்கள்
மனிதப் பெயர் தாங்கிகள் எனக் கவிதை முடிகிறது.
இத் தொகுப்பின் கடைசிக் கவிதையான பைத்தியக்காரன் பற்றிய கவிதை, மனித முகத்தை இதுவென அம்பலப்படுத்திவிட்டுச் செல்கிறது.
கடனால் தூக்கிட்டு மாண்ட அப்பாவின் கால்களை இன்னமும் பற்றிக் கொண்டு அழுது கொண்டிருக்கலாம். பெயர் தெரியாத நோயினால் மரணித்த அம்மாவின் ஆன்மாவோடு பேசிக் கொண்டிருக்கலாம். காமுகர்களால் சிதைக்கப்பட்ட ஆசை மகளின் கதறலை இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கலாம். காவியமாய் உருமாறவிருந்த தனக்கான காதலை
கவுரவக் கொலைக்குப் பலியாக்கி இருக்கலாம். நீங்கள் அவனைப் பைத்தியம் என்று கடந்து போகின்றீர்கள். அவனது பார்வையில் நீங்கள் எதுவுமில்லை.
இப்படி, நிறையக் கவிதைகள் மனித மனத்தைக் கேள்விக்குட்படுத்தி நேயம் கசியச் செய்வதான உணர்வை ஏற்படுத்துகின்றன.
கூடல் தாரிக், சமூகப் பொறுப்புணர்வு மிக்க படைப்பாளி என்பதை அவருடைய கவிதைகளே பகர்கின்றன.
கவிஞர் கூடல் தாரிக் அவர்களுக்கும், நூலைச் சிறப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கும் ஓவியா பதிப்பகம் வதிலை பிரபா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக