எங்கோ மழை பெய்ததைக்
காற்றில் கரைத்துச் சொன்னது
மண் வாசம்.
எத்தனை நாள் தாகமோ
விழ விழக் குடித்தது
மானாவாரிக் காடு.
மழை ஓய்வெடுப்புக்குப் பின்
செந்நிலத் தாய்மையில்
தூங்கின புற்கள்.
மழையைத் தேக்கிய
அணைக்கட்டுகளாய்
இலைகளில் துளிகள்.
மழை பனி ஊடறுத்த
கிளைகளின் பேச்சில்
பூத்துப் பூத்து
நீண்டன பயணங்கள்.
மண் கவ்வி ஆட்டுவிக்க
மயிர்கள் விரித்து நின்றன
ஆலங்கள்.
கார்காலத்துச் சொற்கள்
இப்போதெல்லாம்
காய்ந்தே தான் கிடக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக